நீயும், நானுமா?

ஒவ்வொரு மணித்துளியிலும் தொழில்நுட்பம் மேம்பட்டு வருகிறது. பல நாடுகளில், மக்கள் இலக்கங்களில் அறியப்படுகிறார்கள். உங்கள் உணவு, உடை, பழக்க வழக்கம், குருதிப் பிரிவு எல்லாம் தகவல் சுரங்கங்களில் கொட்டிக் கிடக்கிறது. அதை அகழ்ந்து எடுப்பது ஒரு துறையாகப் பரிமளித்திருக்கிறது. அனைத்தும் தகவல் மயம். இரு தகவல் அமைப்புகள் காப்புரிமையை மையமாக வைத்து வழக்குத் தொடுத்தால்…. சட்டம் என்ன செய்யும், எவ்வாறு தீர்ப்பளிக்கும்?

சில நாட்களுக்கு முன், முக நூலில் திரு. லலிதாராம் ராமசந்திரன் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பதிவிட்டிருந்தார். புதுக்கோட்டை மான்பூன்டியாவைப் பற்றி அவர் எழுதியிருந்ததை, சில வார்த்தைகளை மாற்றி திரு. ரேகா அறிவழகன் என்பவர் தன் படைப்பாக வெளியிட்டார்.  பின்னர் திரு ரேகா அறிவழகன் சொன்னார்: ‘இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன, மேலும் பாரதியாரின் பாடல்களை அனைவரும் தான் பயன்படுத்துகிறோம், அதனால், உங்கள் எழுத்தை நான் எடுத்தாண்டுள்ளது உரிமை மீறலாகாது’. மூலக்கட்டுரை ஆசிரியரின் அனுமதியும் இல்லை, அவருக்கான நன்றியைத் தெரிவிக்கவில்லை. 

அமெரிக்க நீதிமன்றத்தில் ந்யூயார்க் டைம்ஸ்  (Newyork Times) இதழ், ஓபன் ஏஐ, (Open AI) சேட்ஜிபிடி, (ChatGPT) மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எதிராக காப்புரிமை மீறல் வழக்குத் தொடுத்திருக்கிறது. 

வழக்கின் முதன்மையான கேள்வி, தங்கள் இதழில் வெளியாகும் கட்டுரைகளையும், செய்திகளையும், தனது செயற்கை நுண்ணறிவின் ‘உரையாடலுக்காக’, அதன் கட்டமைப்பான, பெரும் மொழி மாதிரிகளுக்கான (Large Language Models) பயிற்சிக்காக எடுத்தாளும் ஓபன் ஏஐ, உரிமை மீறல் செய்துள்ளது; எங்கிருந்து பெறப்பட்டது என்ற செய்தியையும் அது வெளியிடுவதில்லை. நாங்கள் இதழியலிற்கான அமைப்புகள் செய்து, தேனீக்கள் போல் செய்திகள் சேகரித்து, அதைத் தரம் பார்த்து, இன்னும் பல செலவுகள் செய்து வெளியிட்டால், இந்த ஓபன் ஏஐ, தனது பெரும் மொழியின் மூலம், இயந்திரங்கள் படிப்பதற்காக (Machine Learning) எங்களின் கட்டுரை இத்யாதிகளை அலுங்காமல், குலுங்காமல் எடுத்துக் கொண்டு பயிற்சி கொடுப்பது நியாயமா? (அவர்கள் எப்படி நோகாமல் நோன்பு கொண்டாடலாம்?)

டைம்ஸ் மேலும் சொல்கிறது, இவர்கள் பல இடங்களிலிருந்து தகவல்களை எடுத்து தங்களுடைய ஏஐ உருவாக்கினாலும், எங்கள் இதழில் இடம் பெறுபவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்றுவிக்கிறார்கள். விளைவு? எங்களுடைய சந்தாதாரர்கள் குறைகிறார்கள்; அதனால், விளம்பர வருமானமும் குறைகிறது. எங்களுடையதை எடுத்தாள்கிறார்கள் என்பதற்கு, அச்சுப் பிசகாமல், எங்கள் வாக்கியங்களை பிங் சேட்,(Bing Chat) சேட் ஜிபிடியில் காணலாம் என்று அதன் விவரங்களையும் டைம்ஸ் கொடுத்துள்ளது.

டைம்ஸ் தொடுத்துள்ள வழக்குகளுக்கு முன்னோடிகள் உண்டு. வலைத்தளத்திலிருந்து, பெரும் அளவில் தங்கள் படைப்புக்களை உரசித் தேய்த்து, பணமே கொடுக்காமல் தப்பிக்கும் ஏஐ நிறுவனங்களின் மீது, ஜார்ஜ் மார்டின், ஜொனாதன் ஃப்ராஞ்சென், ஜான் க்ரிஷாம் போன்ற பல எழுத்தாளர்கள் வழக்கு தொடுத்தார்கள். கோபைலட் (Copilot) பயிற்றுவிப்பில், தங்களது குறியீடுகளை (Code) அனுமதியில்லாமல் பயன்படுத்துவதாக சில தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்றும் ஓவியர்கள் ஓபன் ஏஐ, மைக்ரோசாஃப்ட், ஸ்டெபிலிடி ஏஐ, மிட்ஜர்னி, போன்றவைகளுக்கு எதிராக காப்புரிமை வழக்குத் தொடுத்தனர். இருந்தபோதிலும், மாபெரும் இதழ் ஒன்றும், மாபெரும் நிறுவனம் ஒன்றும் முறையே காப்புரிமை மற்றும் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடுப்பதும், இது உரிமை மீறலில்லை, மனித சமூகத்திற்கான மாபெரும் வரம் என்று பதிலளிப்பதும் உலகெங்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளன.

சில அமெரிக்க காப்புரிமை சட்ட விதிகளைப் பார்க்கலாமா? ‘நியாயமான பயன்பாடு’ (Fair Use) அந்த நாட்டின் காப்புரிமை சட்ட எண் 107ல் பேசப்படுகிறது. அதற்கான நான்கு காரணிகளை அச்சட்டம் சொல்கிறது. நியாயமான பயன்பாடு என்பது 

  1. எதற்காக குறிப்பிட்ட தகவல் பயன்படுத்தப்பட்டுள்ளது?
  2. பயன்படுத்தப்பட்ட தகவல் மிகுந்த படைப்பூக்கம் இருக்கும் ஒன்றா?
  3. எத்தனை சதவீதம் மூலத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது?
  4. மூலத்தின் சந்தை மதிப்பில் இதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றனவா?

இந்த நாற்காலி, காப்புரிமை மீறல் அல்லது அவ்வாறு இல்லை எனபதைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தது.

ஓபன் ஏஐ என்ன பதில் சொல்லும்? 

தகவல்களை உருமாற்றத்திற்காகப் (Transformation) பயன்படுத்துகிறோமே தவிர, மூலத்தை மாற்றுவதற்காக (Replace) இல்லை. 

எடுத்துக்காட்டாக, கூகுள் புத்தகங்கள், தகவல் உரித்தெடுத்தல், (scraping) போன்ற ஆதாரங்களை ஓபன் ஏஐ காட்டக்கூடும்.

ஆனால், வார்த்தை மாறாமல் மூலத்தை ஓபன் ஏஐ பயன்படுத்தியுள்ளயதை, டைம்ஸ்சால் நிரூபிக்க முடியும். அப்போது உருமாற்றம் என்ற வாதம் எடுபடாது. மேலும் ஓபன் ஏஐயின் கட்டுரைகளின் சுட்டி, டைம்ஸ் இதழின் கட்டுரையின் பகுதியைச் சுட்டும் என்றால், அது மூலத்தை பயன்படுத்துதல்   ஆகாதா என்பதும் கேள்வி. அப்படியானால், பத்திரிகை சந்தாவைப் பற்றிய கவலையும், கேள்வியும் எழுமே?

ஆனால், ஒரு ஏஐயைப் பயிற்றுவிக்க, காப்புரிமை உள்ள ஒரு கட்டுரையோ, தகவலோ பயன்படும் என்றால், அது நியாயமான பயன்பாட்டிற்குள் அடங்கி விடுமல்லவா? அப்போது அது எப்படி உரிமை மீறலாகும் என்ற கேள்வியும் வருகிறதே?

1841 வருட வழக்கு. ஜார்ஜ் வாஷிங்டனின்  பேப்பர்சுக்கு (George Washington Papers) ஒரு சரிதையாளர் காப்புரிமை  பெற்றிருந்தார். மற்றொரு மனிதர் அதிலிருந்து 353 பக்கங்களை படியெடுத்து பிரசுரித்துவிட்டார்!

சோனியின் வழக்கும் சுவையானது. அவர்கள் பீடாமேக்ஸ் வீடியோ ரெகார்டிங் (BetaMax Video Recording Technology) தொழில் நுட்ப அமைப்பு வைத்திருந்தார்கள். யுனிவர்சல் ஸ்டூடியோஸ் அதைப் பயன்படுத்திய போது பிரச்சனை வந்தது. அமெரிக்க உச்ச நீதி மன்றம், இதில் காப்புரிமை மீறல் இல்லை, ஏனெனில், இது பதிவுசெய்யப்பட்ட பின்னர் தான் காட்சியாக வெளி வருகிறது என்று தீர்ப்பளித்தது.

ஏஐ உண்டாக்கும் தகவல்கள், காப்புரிமையின் கீழ் வராது என்று அமெரிக்க காப்புரிமை அலுவலகம் சொல்லியிருக்கிறது. அதாவது, மனிதன் இதைச் செய்தால் கிடைக்கும் காப்புரிமை ஏஐ மூலம் வரும் பொருளுக்குக் கிடையாது. இந்த முடிவைக் கொண்டு வந்த ஒரு சுவையான வழக்கையும் பார்ப்போம். இயற்கையைப் படமெடுக்கும் ஒருவர் இந்தோனேஷியக் காட்டில், மரங்களில் வைத்திருந்த புகைப்படக் கருவியில் ஒரு குரங்கு தன்னை விதவிதமாக சுயமி எடுத்துக் கொண்டது. காப்புரிமை யாருக்கு? அந்தப் புகைப்படக்காரருக்கா அல்லது அந்தக் குரங்கிற்கா? இருவருக்குமில்லை என்று தீர்ப்பு வந்தது.

இசைத் துறை இந்த வழக்கிற்கு சில நுண்மையான ஆதாரங்களைத் தரலாம். நேப்ஸ்டர் (Napster) தளம்  காப்புரிமை பெற்ற இசைக் கோப்புகளைப் பகிர மறைமுகமாக உதவியது. பதிவு செய்யும் குழுமங்கள் இச்செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. தீர்ப்பு நேப்ஸ்டருக்கு சாதகமாக இல்லை; விளைவு- அது சந்தையிலிருந்து விலக நேர்ந்தது. பின்னர் ஐ ட்யூன்சும், (iTunes) அதன் மூலம் ஸ்பாடிபை, அமேசான் ம்யூசிக் எல்லாம் வருகின்றன. சந்தைப் படுத்துவதன் மூலம் பணம் ஈட்டும் இணைய தளங்கள், காப்புரிமை உள்ள கலைப் பொருட்களுக்கு உரிய விலையைத் தர வேண்டும் என்ற அந்தத் தீர்ப்பு காப்புரிமை வழக்குகளில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.

ஒரு படைப்பாளி/கலைஞர் தனது ஊக்கத்திற்கான மதிப்பைப் பெற வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன. அவர்களது படைப்பைக் கையாண்டு, நமக்கேற்றவாறு, நம் கோணத்தில், நாம் உருவாக்கும் ஒன்றின் மூலப்பொருள் அவர்களது படைப்பு என்பதால், அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படியிருந்தாலும், பட்டனைத் தட்டி பெறும் தகவல்கள் ஒரு புறம், உழைப்பைச் சிந்தி அந்தத் தகவல்களைக் கொண்டு வரும் மனிதர் மறுபுறம் என்று இந்தக் கயிறிழுக்கும் போட்டி நடை பெறுகிறது. ஜெனரேடிவ் ஏஐ வென்றால், மனிதர்கள் மூலம் பெறப்படும் அடிப்படைத் தகவல்கள் கிட்டுவதில் சிரமம் ஏற்படும். இதழியலாளர் வென்றாலோ, தொழில் நுட்பக் குழுமங்கள் அவர்களுக்கான உரிமைத் தொகையைக் கொடுக்க நேரிடும்; அது அவர்களின் செலவுத் தொகையை அதிகரிக்கும். ஆனால், உலகின் பல ஆட்சியாளர்களின் விருப்பம் நிறைவேறும்- அதாவது ஏஐ என்ற பூதத்தை குடுவைக்குள் அடக்க முடியாவிட்டாலும், கூண்டில் வைக்கலாம்!

இந்தியாவில் ‘நியாயமான பயன்பாடு’ என்ற சொற்றொடர் காப்புரிமைச் சட்டத்தில் இல்லை. அதற்குப் பதிலாக ‘நியாயமானக் கையாளுதல்’ (Fair Dealing) என்ற சொற்றொடரும், அதற்கான விளக்கங்களும், எவையெவைகளுக்கு விதிவிலக்கு உண்டென்ற நீள்பட்டியலும் உள்ளது.

26, ஜனவரி தொடங்கி 31ம் தேதி வரை தியாகராஜ ஆராதனை திருவையாறில் நடைபெறுகிறது. (30ம் தேதி ஆராதனை) வால்மீகி, வியாசர், இளங்கோவடிகள், கம்பர், தியாகையர், முத்துத் தாண்டவர், பெயரே தெரியாத சிற்பிகள், சித்திரக்காரர்கள் இவர்கள் காப்புரிமை கேட்டால். கலையும், இலக்கியமும் இன்றுள்ள வளர்ச்சியை அடைந்திருக்குமா என்றும் சிந்திப்போம்.

உத்ரா

உசாவி: செய்தி ஊடகங்கள், ஆங்கில இந்து நாளிதழ்கள் 19/01/24, (Discussion between Cecilia Ziniti and Arul George Scaria; 20/01/24 (Atanu Biswas)


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.