தொட்டால் பூ மலரும்

விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையமைத்த வாலியின் இனிய திரைப்படப் பாடல் ‘தொட்டால் பூ மலரும், தொடாமல் நான் மலர்ந்தேன்’ என்று தொடங்கும்.

இந்த உலகை கண்டு, கேட்டு, முகர்ந்து, சுவைத்து, தொடுதல் மூலம் மனிதன் அறிந்து கொள்கிறான் என்ற கருத்தில் திருவள்ளுவரின் குறள் இது:

‘சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு’

ஸ்பரிசம் என்று அழைக்கப்படும் ‘தொடுதல்’ அன்பை, ஆசையை, சினத்தை, ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. நம் விரல் நுனிகளில் இருக்கும் உணரிகள் நம் வாழ்வை இனிமையாக்குகின்றன. 

இன்று நம் வாழ்வில் பெரிதும் பயன்படும் ரோபோக்களுக்கு தொடு உணர்ச்சி இருந்தால்..? ஆம், அவைகளுக்கான தோலை(Robo Skin) அறிவியலாளர்கள் கொண்டு வந்துள்ளனர்.

ரோபோக்கள் மனிதருடன் பழகும் விதத்திற்கு ஏற்றாற் போல் அவற்றிற்கு மென்மையும், தொடு திறனும், நல் உடல் வாகும் தேவைப்படுகின்றன. மருத்துவ மனையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு, தன்னைத் தொட்டுப் பேசி, தனக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுத்து, கண்களுக்கும் இதமாக இருக்கும் ஒரு ரோபோ பல நன்மைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் செய்ய முடியும். இதை விடவும் செயற்கை உறுப்பாகக் கரங்கள் பொருத்தப்பட்டுள்ள ஒருவருக்கு தொட்டு உணரும் திறனை இத்தகைய ரோபோக்கள் எளிதில் வழங்க முடியும்.

ரோபோடிக்ஸ் மற்றும் ப்ரோஸ்தெடிக்ஸ் (Robotics and Prosthetics) துறைக்கு உதவும் வகையில், புதிய, மென்மையான, புத்தியுள்ள, மிகு உணர்திறன் கொண்ட, நெகிழ்ந்து நீட்டப்படக் கூடிய உணரியை  (Sensor) ஹோன்டாவும்,(Honda) யுபிசியும் (UBC) இணைந்து வடிவமைத்துள்ளனர்.

ப்ரோஸ்தெடிக் கரங்கள் அல்லது ரோபோடிக் கரங்களின் பரப்பில் இந்த உணரிகள் இடம் பெறும்போது, அவை இலாகவமான, தொட்டுணரும் தன்மையைக் கொடுக்கின்றன. இந்த உணரிகள் இடம் பெறும் தோலினால் அமையும் ரோபோக்கள், முட்டையை உடைத்தல், சிறு பழத் துண்டுகளை எடுத்துச் சுவைத்தல் போன்ற சின்னஞ்சிறு செயல்களுக்கும் உதவும். மனிதத் தோலைப் போலவே இந்த உணரியும் மிருதுவாக இருப்பதால், மனிதர்களுடன் செயல்படும்போது ஆபத்து விளைவிக்காமலும், மென்மையாகவும் மனித வாழ்க்கைக்கு ஒத்துப் போகிறது. 

யுபிசியில் மின்னியல் மற்றும் கணினிப் பொறியியலில் (Electrical and Computer Engineering) முனைவர் பட்ட ஆய்வாக, மிர்ஸா சாகிப் சர்வார்  (Mirza Saquib Saewar) என்ற அறிவியலாளர் இந்த உணரியை வடிவமைத்தார். ‘தொட்டுணரும் இதன் திறன் நுணுக்கமானதும், நேர்த்தியானதுமாகும். கண்ணாடிக் குவளையில் சிந்தாமல் நீரெடுத்து வந்து அதைக் கைகளில் வைத்திருக்கும் திறன் உள்ளது’ என்று சொல்கிறார் அவர். 

“My robot is a softie”: Physical texture influences judgments of robot personality

மேலே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் அமைதியான, உணர்வு பூர்வமான உரையாடலைக் கொண்டு, முதல் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்கானத் தேவைகள் என்னென்ன என்று வகைப்படுத்துகிறது. இது உணரியின் வடிவமைப்பில் என்னென்ன செய்ய முடியும், என்னென்ன செய்ய வேண்டும் என்பதன் அடிப்படைக் கையேடு எனக் கொள்ளலாம்.

திரைப்படங்களில் விசேடமாகக் தோலைக் (தீ விபத்தில் கருகிய தோல் -ஒரு எடுத்துக்காட்டு) காட்டப் பயனாகும் சிலிகான் ரப்பர் தான் உணரியிலும் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், இந்தக் குழுவினர் அமைத்துள்ள தனித்துவமான வடிவம், மனிதத் தோல் எப்படிச் செயல்படுமோ, அவ்வாறே இயங்கும் என்பது இதன் சிறப்பு.

தொலைவில் உள்ள தொடுதிரையை வலுவற்ற மின்களம் (Electric Fields) எப்படி இயக்குகிறதோ, அந்தத் தத்துவம் தான் இதிலும் செயல்படுகிறது. ஆனால், இந்த உணரி மென்மையாகவும், பரப்பிற்குள்ளும், அதன் உள்ளேயும், வலுவற்ற மின் களத்தை அறியும் ஆற்றல் மிக்கது. இந்த சிறப்புத் தன்மையால், மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ரோபோக்கள், திறமையாகச் செயலாற்ற முடிகிறது என்று ‘மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறை பொறியியல் ஆய்வகத்தில் (Advanced Materials and Process Engg Lab) மின்னியல், கணினி அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணி செய்யும்  ஜான் மேடன் (John Madden) தெரிவித்துள்ளார்.

UBC engineers develop breakthrough 'robot skin' in collaboration with Honda researchers

ஃப்ரான்டியர் ரோபோடிக்ஸ் (Frontier Robotics) என்ற ஹோன்டாவின் ஆய்வு அமைப்பும், யு பி சியும் இணைந்து இதற்கான தொழில் நுட்பத்தை அமைத்துள்ளனர். ஹோன்டா நிறுவனம் 1980லிருந்தே மனித ரோபோக்கள் துறையில் ஆர்வம் காட்டி, ஆய்வுகள் செய்து வருகிறது. புகழ் பெற்ற ‘அசிமோ’ (Asimo) அதன் படைப்புதான். நடக்க உதவும் செயற்கைக் கருவிகளை உருவாக்கும் அந்த நிறுவனம், ஹோன்டா அவதார் ரோபோவை (Honda Avatar Robot) அமைப்பதில் ஈடுபட்டுள்ளது.

மேடனின் ஆய்வகம், வளைந்து கொடுக்கும் உணரிகள் அமைப்பில் சிறந்த திறன் பெற்றுள்ளதால், ரோபோக்களில் அவற்றைப் பயன்படுத்தி மனிதனுக்கு உதவ நாங்கள் அவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம் என்று ஃப்ரான்டியர் ரோபோடிக்சில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றும் Ishizaki Ryusuke சொல்கிறார்.

இந்தப் புதிய உணரியை எளிதாக உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பெரும் பரப்பிலும் செயல்படுமாறும், அதிக எண்ணிக்கையிலும் உற்பத்தி செய்யலாம் என்பதும் ஒரு இனிய செய்தி.

மேடன் சொல்கிறார்: உணரிகளும், செயற்கை நுண்ணறிவும் மனிதர்களுக்கு அவர்கள் விளையாடவும், செயல்புரியவும் உற்ற துணையாக வளர்ந்து வருகின்றன. மனிதனின் இயற்கைத் தோல் கொண்டுள்ள உணரிகள் அபரிமிதமானவை, எந்த ஒரு தொழில் நுட்பத்தைக் காட்டிலும் மேலானவை. தோலைப் போன்ற தன்மைகளைக் கொண்டுள்ள உணரிகள், தட்ப வெப்பத்தையும் அறியும் ஆற்றல் பெற்று வருகின்றன. எனவே, எத்தகைய உணரிகளில் கவனம் செலுத்த வேண்டும், என்பது முக்கியம். செயற்கை நுண்ணறிவும், இத்தகைய உணரிகளும் மனித வாழ்வினை மேம்படுத்தும்.

அங்கக் குறைபாடுகள் வாழ்க்கையை இரசமற்றதாக்கிவிடும்; இத்தகைய தொழில் நுட்பங்கள் வாழ்வை வளப்படுத்தும்.

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம் புலன்களைக் காப்போம்; தேவையெனில் தோல் உணரிகளையும், செயற்கை அறிவையும் பயன் படுத்துவோம்.

உசாவி:

https://techxplore.com/news/2023-10-breakthrough-robot-skin.html Engineers develop breakthrough ‘robot skin’ 

by Lou Corpuz-Bosshart, University of British Columbia

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.