சிவிங்கி – அத்தியாயம் மூன்று

This entry is part 3 of 4 in the series சிவிங்கி
சித்திரம்: அருண்

ஆனந்தன் என்போன் அறியாத உல்லுலூ என்ற புதுக் கடவுள்  வந்து நிற்கிற அத்தியாயம்

ஆனந்தன் நல்ல மனிதன். முழுநிலவு நாட்களில் மட்டும் மனம் தரிகெட்டு ஓட அவன் ஒரு பக்கமும் இடுப்பு முண்டு இன்னொரு பக்கமுமாக நடுராத்திரிக்கு ஊருணிக்கரையில் அமர்ந்திருப்பது தவிர்த்தால். 

அது குடிப்பதற்கான நல்ல தண்ணி ஊருணி. அங்கே இவன் குளிப்பான் பௌர்ணமி ராத்திரியில். அவனைத் தவிர ஊரணியை அடுத்த பிரசவ ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளின் பீத்துணியை அலசிப் போவதும் நடக்கிற காரியம்தான். 

 ஒரு பௌர்ணமியன்று நடு ராத்திரிக்கு ஊருணிக்குள் இறங்கி முழுக்குப் போடும்போது நல்ல சிவப்பு நிறத்தில் நிலா வெளிச்சத்தில் நீர் கிடந்ததைக் கண்டான் ஆனந்தன். ஆரஞ்சுப் பழச்சாறு வண்ணத்தில் நல்ல இனிப்பாக ஊறிவரும் ஊருணி நீர் இப்படிக் குருதி போல நிறமடித்துக் கிடப்பதேன்?

ஆனந்தன் மற்றும் ஆவியர் சந்திப்பு 

அவன் யோசித்த பொழுது பின்னால் படித்துறையில் நின்று யாரோ கையைத் தட்டுகிறது காதில் விழுந்தது. திரும்பிப் பார்க்க புகை உருவமும், அதில் உள்வாங்கிய கண்ணும், நீண்டு நகம் உள்வளைந்திருக்கும் கரங்களும்  முழங்காலுக்குக் கீழ் உருவம் சிதிலமடைந்திருப்பதுமாக நின்றவர் ஆவியுலகப் பிரமுகராகத்தான் அவன் கண்ணுக்குத் தெரிந்தார். 

நல்ல தண்ணி ஊருணியிலே கால் கழுவறது மகா பாவம் தம்பி அஞ்சு நிமிஷம் கழிச்சு உனக்கே தாகம் தவிக்கும். அப்போ குடிக்க நல்ல தண்ணிக்கு எங்கே போவே? உன் குண்டி கழுவி நீயே எடுத்துக் குடிக்கறது சரிப்பட்டு வருமா சொல்லு. 

மிதந்து கொண்டே பேசிய அந்த ஆவி ரூபம் தொண்டையில் கரகரப்பு தோன்ற நாலுமுறை இருமியது. 

சொல்லு தம்பி. மறுபடி கேட்டது அது.

 பெரியவரே நான் அவசர ஆத்திரத்துக்கு ஒரே ஒரு முழுக்கு போடறது உண்டுதான். மன்னிச்சுக்குங்க. அதுக்கு முந்தி வீட்டுலே நடு ராத்திரிக்கு எழுந்து குளிச்சுட்டு தான் வெளிக் கிளம்புவேன். எங்க அம்மா கிட்டே கேட்டுப் பாருங்க. கோட்டிக்காரப் பிள்ளைன்னு அது நான் ராத்திரி குளியல் போடும்போதெல்லாம் அழுவாங்க. இன்னிக்கு இன்னும் அழுதுட்டு இருக்காங்க. 

அவன் நிறுத்தாமல் பேச ஆவி ரூபம் சொன்னது – நான் உடையப்பா. உடையன். உடையார் எல்லாம் என் பெயர் தான். இன்னிக்கு முன்னூறு வருஷம் முந்தி இந்த ஊருணியை வெட்டி வச்சேன். அதுவரை சனம் முச்சூடும் பக்கத்திலே காஞ்சிரம்பட்டியிலே பாசி மிதக்கற கிணற்றுத் தண்ணியை மொண்டுக்கிட்டு வந்து குடிச்சுட்டு நோக்காடோடு கிடக்கும். கிணறு வத்தினால்  ஊரோட கஷ்டம். அதெல்லாம் ஓய்ச்சு வைக்க ஊருணி தோண்டினா நீ முன்னூறு வருசம் கடந்த அக்குறும்பா, அதுக்குள்ளேயே இறங்கி அப்படித்தான் குளிப்பேன்னு அடம் பிடிக்கறியே, நல்லா இருக்கா. 

ஆனந்தன் அவசரமாகப் போகுமிடம் 

பெரியவரே நான் தலைபோகிற அவசரத்திலே இருக்கேன். ஒரு இலக்குக்கு போக வேண்டி வருது. போய்ட்டு வந்து உம்மோட மீதிக்கதை கேட்கிறேன். குளிக்காம அங்கே போக முடியாது.

ஆனந்தன் ஈரங்காயாத தலைமுடியை கையாலே ஒதுக்கிக்கிட்டு பெரியவரோட புகை ரூபத்தைக் கடந்து அந்தப் பக்கம் போகப் பார்க்கிறான். இரும்புக் கதவு நடுவிலே வந்து அடைச்ச மாதிரி அவன் முகத்தில் அந்தத் தடை அறையுது. 

சொல்லச் சொல்ல கேட்காம போறியே இந்த உடையப்பனை அப்படி எல்லாம் எடுத்தெறிஞ்சுட்டு போக முடியாது தெரியுதா?.

அவர் குரல் உயர்த்த, ஆனந்தன் அடிபணிகிறான். அய்யா அவசரமுங்க நான் போகலேன்னா கந்தர்கோளமாயிடும். நான் போய் மத்தியஸ்தம் செய்யணும். குளிக்காம தீர்ப்பும் மத்தியஸ்தமும் செஞ்சா என் தலை வெடிச்சுடும்.

அப்படி என்னப்பா தலை வெடிக்க நடுராத்திரி பஞ்சாயத்து பண்ண அவசரம்?

 உடையப்பரின் ஆவி விசாரித்தது. 

வாதினி சாதினி  யுத்தம்

வாதினிப் பேய்மகளுக்கும் சாதினிப் பேய்மகளுக்கும் யுத்தம் நடக்குது. நடுவனாக நான் போனால்தான் ஆச்சு. 

வேட்டி நுனியை மூக்கில் விட்டுத் தும்மிக்கொண்டு சொன்னான் ஆனந்தன்.

உடையப்பா நிறுத்தி நிதானமாகச் சிரித்தார். வாதினியும் சாதினியும் யட்சிங்க இல்லியோ என்று விசாரித்தார் அவர் தொடர்ந்து. 

அது தெரியாது. கொஞ்சம் ரெட்டை நாடியா, சுமார் உசரமா, பார்க்க லட்சணமான பொண்ணு ரெண்டு பேரும். ஆனந்தன் சொன்னான்.

சந்திவரை கருப்பு தலைமுடி சுருண்டு கெடக்குமே ரெண்டு அழகிகளுக்கும்? ஆமான்னு தலையாட்டறியா இல்லேன்னு ஆட்டறியா? ஆனந்தன் சிரித்தான்.

நான் ஊருணி குழிக்கும்போது நடு ராத்திரி ஊருணி நடுவிலே வந்து மருதுக் கொத்தனாரை மயக்கி போகம் பண்ணிட்டுப் போச்சு ரெண்டும். ஆவி போகம்.  அவரு அதுக்கப்புறம் ஒரு மாசம் சரீரம் நெட்டக்குத்தி திரிஞ்சிட்டிருந்தார். ஊருணியிலே முழுக்கு போடச் சொன்னாளுங்க ரெண்டு பொம்மனாட்டிங்களும். நாத்தம் பிடிச்ச பொம்பளை ரெண்டும். எட்டூருக்கு அடிக்கும் யோனி வாடை, கூடவே குத வாடை, வாய் நாத்தம், மூக்கு நாத்தம், கட்கத்துலே கத்தாழை வாடை, கண்ணு பீளைவாடை, காதிலே சீழ் நாத்தம், என்னாண்டை ரெண்டும் வந்து என் குறியை இறுக்கப் பிடிச்சுத் திருகிச்சுங்க. பக்கத்துலே பார்க்க என்ன அழகு என்ன அழகு. மருதுக் கொத்தனாருக்கு குண்டிகழுவி விடச் சொல்லிச்சுன்னாக் கூட செஞ்சிருப்பேன். யோவ் ஊருணியிலே முழுக்கு போடுமய்யான்னு அனுப்பினேன், மருதுக் கொத்தனாருக்கு அப்புறம் இப்படி நல்ல தண்ணி ஊருணியிலே முழுக்குப் போட்டது நீ தான்.

உடையப்பன் சமாதானமாகி ஆனந்தன் கையைப் பற்றிக் கொண்டார். கை ஏன் இப்படி சொரசொரன்னு இருக்கு?கொத்து வேலை செய்யறியா பகல்லே?

ஆமா அதே தான், சொல்லியபடி ஊருணிப் படித்துறை ஏறி ஓடினான் ஆனந்தன். உடையப்பரின் ஆவியும் ஒரு கீற்று நடுராத்திரிக் குளிரில் ஆடி அனங்கிக் கலைந்து போனது.  அமைதி சூடிய புளி மரங்களின் ஒழுங்கற்ற வரிசையை ஊடுருவி சிறு காற்றாகத் துளைத்து உடையப்பர் போனதும் அரச மரத்தின் மேற்கிளையிலிருந்து ’அவர் போய்ட்டார்’ என்று இறகடித்து   ஆந்தை ஒன்று பறந்து போனது. அவர் வருவார் என்றபடி கூகை ஒன்று அடுத்துப் பறந்தது.

ஊருணிக் கிணற்றில் ஆனந்தன்

நனைந்த வேட்டி ராக்காற்றில் பறக்க ஆனந்தன் ஊருணிக்கு உள்ளே கால் வைத்து மையம் நோக்கி அவசரமாக நகர்ந்தான். 

ஏழு கிணறுகள் வரிசையாகக் குழித்து வற்றாத ஊற்றுக்களாக குடிநீர் பொங்க வைத்துக்கொண்டிருந்த ஊருணியின் மையத்திலிருந்து குரல்கள் கேட்க ஆரம்பித்தன. எல்லாம் பெண் குரல்கள். 

எங்கள் கிணறுகள் பக்கம் நீ ஏனடி உன் அழுக்குச் சிறகுகளை அடித்துத் தாழப் பறந்தாய்? குடிநீரில் உன் பிருஷ்டம் நனைத்து அசுத்தமாக்கி இறகு உதிர்க்க வேறு நீர்நிலை ஏதும் கிடைக்கவில்லையா அடி என்று சொல்லி அதன் இறுதிச் சொல்லாக மானுடர் தேவதைகளுக்கும் தேவர்களுக்கும் கற்பித்த உடல்களில் பிரத்யேகமாக்கிய உறுப்புகளை மறைத்தபோது எழுந்த புழுத்த வசவுகள் ஊருணிக் கிணறுகளைச் சுற்றிச் சுழன்றன. 

வாதினிப் பெண் பேய்கள் தூவெண் சிறகும் சாதினிப் பேய்கள் சாம்பல் நிற இறகுமாக  தட்டுப்பட்டார்கள். வெட்டிய மின்னலில் தேவதைகளாகத் தெரிந்தார்கள் அவர்கள் அனைவரும்.

அழுக்கான ஈரச் சிறகுகளை உடம்போடு உயர்த்தி மடித்துச் செருகிச் வழுவழுப்பான கால்கள் வெளித்தெரிய இரண்டு  தேவதைகள் கிணறுகளைச் சுற்றித் தாழப் பறந்து கொண்டிருந்தன. ஈரவாடையோடு அங்கங்கே நகம் உதிர்ப்பது போல் சிறு சிறகு உதிர்த்துக் களைந்தபடி கண்ணில் மையிட்ட அத்தேவதைகள் வாய்ச் சண்டையிட்டுக் கிணறுகளை சுற்றிப் பறந்தபடி ஆனந்தன் வருவதைப் பார்த்து ஓரொற்றைக் குரலில் ஓஓ ஓஓ என்று கூச்சலிட்டு அவன் முகத்தில் தொடைகள் தடவி வாடை பரத்தி அவனுக்கு மிகுந்த பரவசம் ஏற்படுத்தினர். 

ஆனந்தன் கூற்று

 நீங்களிருவரும் புழுத்த சொல் பாவித்து உம் இரு குழுச் சிந்தையிலும் அசங்கியமான சொல்லாட்சி ஆழமாக இறங்க வசவு உதிர்த்தும் வார்த்தை யுத்தம் புரிவதை உடையார் குழித்த ஊருணிக்குள் நடத்துவது எதனாலோ. 

வாதினியின் சிறகு  நீவி ஆனந்தன் கேட்டான். பதில் வராதிருக்கத் தொடர்ந்தான்.

திண்ணென்று   நீண்டு வானம் நோக்கும் காட்டு மூங்கில் பரப்பிலும், உலர்ந்த காற்றில் வறுபட்ட பாலைவன மணல் பரப்பிலும், உப்பு வாடை தீர்க்கமாக நிலைக்கும் நீர் தேங்கிய உப்பளங்களினுள்ளும் சுயாதீனம் நிறுவப் போர் நடத்தலாம் தானே. குடிநீரை விட்டு வையுங்கள்

 என்றும் இன்னமும் சொல்லி, முகத்தை ஒட்டிப் பறந்த கால்களை   வருடிக் கிணற்றுப் பாறை வட்டம் கடந்து கலந்து பிரவகிக்கும் சுனைக்குள் பிரவேசித்தான் ஆனந்தன். 

ஆனந்தன் உயிர் நீங்கி மீண்டும் உயிர்பெறுதல் 

  நீரோடு வெளியேகி உப்பு வாடை அடித்த உயிர் அவனுக்கு வெளியே கும்மாளம் போட்டபடி ஆனந்தனின் உடலைச் சுற்றிச்சுற்றி மிதந்தும் பறந்தும் விளையாடியது. கூடவே ஒலிகள் பிணைந்து மங்கலாக ஒற்றைத் தொனியாகி அலையடிக்கும் ஆனந்தன் உயிருக்குப் பாதுகாப்பாக நகர்ந்த வண்ணம் இருந்தது.

ஊருணிக் கிணறுகளின் சிறப்பு

 கிணறுகள் உள்ளிருந்து மஞ்சளும், சிவப்பும் கலந்த ஆரஞ்சு நிறத்தில் பொங்கி வந்த சுனை நீர் இனிப்புச் சுவைப் பானமாக நல்வாடையும், குறைவான தித்திப்பும், நுரைத்து மேலெழும் கரியமிலவாயுத் தாரையுமாகப் பொங்கி வழிந்தது. 

இரு தரப்பும் வாதம் உரைத்தல்

வந்தது தான் வந்தாய். அந்த அழுக்குச் சிறகுப் பெண்ணுக்கும் அவளது அடிவருடிகளுக்கும் நியாயத்தைச் சொல்லிப் போயேன்  

 சாம்பல் நிற முடை நாற்றச் சிறகடித்து ஊருணிக் கிணறுகளைச் சுற்றியபடி நிலைத்த மின்னல்வெட்டில் ஒருவருக்கொருவர் பேன் பார்த்து மிதக்கும்  ஒரு பிரிவு   தேவதைகள் ஆனந்தனின் கை பிடித்து இழுத்துக் கூறின.   

அவன் தோள் பற்றி இரு வகைச் சிறகிகளும் அவனது கவனத்தை ஈர்த்து அவரவர்கள் தரப்பு நியாயத்தைச் சொல்ல முயன்றன. 

அப்போது சுனையின் நடுவாந்திரமாக நீந்தி வந்த, ஆனந்தனுக்குப் பெயர் தெரியாத பிரம்மாண்டமான ஏதோ உயிரினம், ஹூம்ம்ம் என்று கனைத்தபடி நீர்ப் பரப்புக்கு மேலே மிதப்பது போல் போக்குக் காட்டி  சுனை உள்ளே நுழைந்தது. 

உல்லுலூ வருகை

உல்லுலூ வந்திருக்கு. உல்லுலூ நீர்நிலைகளின் சிறு தெய்வம். ஆனந்தா, மரியாதை செய் உல்லுலூவுக்கு.

 தேவதைகள் சிறகு நீவிச் சீராக்கியபடி ஆனந்தனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டன. உல்லுலூ என்று ஒரு தெய்வமா, கேட்டதே இல்லையே என்று ஆச்சரியப்பட்டான் ஆனந்தன். 

நீ பார்க்கிறாயே, உல்லுலூ உண்டுதான். ஆல்ட் சி பிரபஞ்சம் நூறாண்டு முந்திப் புதியதாக உருவாக்கிய செயற்கைக் கடவுள். சூப்பர் மார்க்கெட்  கடைகளில் பொருள் வாங்குவோர்க்கான காவல் தெய்வமாக உருவான உல்லுலூ குடிதண்ணீர் தெய்வமானது தற்செயலாகத்தான் நிகழ்ந்தது. உல்லுலூ உருவமைப்பும், ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் செயற்கை அறிவும் இந்த ஆண்டு கடைசியில் இறுதிக்கட்ட சோதனைகள் முடிவுக்கு வரும்போது பரவலாகப் பேசப்படும் என்றாள் வாதினி ஆனந்தனிடம். 

யட்சி யுத்தம் ஓய்ந்தது

அரை மணி நேரத்துக்கு மேல் போர் தொடங்காவிட்டதால், அது நிகழாது போனதாகக் கருதப்படும் என்று சட்டப் புத்தகம் புரட்டிக் கருத்துச் சொன்னது சிவிங்கி. அந்தச் சட்டப் புத்தகத்தை இரவல் வாங்கி ஏதோ பக்கத்தைப் புரட்டிப் படித்துவிட்டு அறிவித்தான்  ஆனந்தன் – போர் ஓய்ந்தது. 

உடனே, யட்சி யுத்தம் முடிவடைந்ததாக இரண்டு தரப்பும் வெள்ளைச் சிறகும் சாம்பல் இறகும் உதிர்த்து கைமாற்றிக் கொண்டன. 

 வாதினியும் சாதினியும் ஒருவரை ஒருவர் அணைத்து முத்தமிட்டுக் கொண்டனர். உல்லுலூ தெய்வம் சுனைக்கு மேலே எழும்பி ஆனந்தனை நோக்கி வாய் திறந்தபடி திமிங்கிலம் போல் மிதந்தது. அதன் பற்கள் கூர்மையாக  நான்கு அடுக்கில் முதலைக்கு வாய்த்தது போல் பயம் கொள்ள வைத்தன. 

எல்லா ஜீவராசிகளும் அத்தியாவசியமானதாகப் பருகும் குடிநீர்க் கடவுளை ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாத, நெருப்புக் குழம்பு குடிக்கும் தெய்வமையாக கட்டமைப்பு செய்யாதது ஏன் என்பதற்கு ஆல்ட் சி பிரபஞ்ச அறிவியலாரான கோவேறு கழுதையும் மஞ்சள் தோல் மானுடரும் காரணம் எதுவும் காட்டவில்லை.

ஒட்டகச் சிவிங்கி,  வாதினி – சாதினி போர் பற்றி அன்பர்களிடம் விவரித்து வந்தபோது கூடுதல் தகவல் சொன்னது. அது வாதினி அளித்தபடி வருமாறு. 

கடவுளர் அமைப்பும் புதிய சிறுகடவுள் உல்லுலூவும் 

உல்லுலூவை கடவுள் அடுக்கில் Divine Pantheon தகுந்த இடம் கொடுத்து அமர்த்த மூன்று மாதம் போனது. உல்லுலூவுக்கான lore தொன்மச் சரடு, பாடிப் பரவ கீதங்கள், மற்ற கடவுளரோடு தந்தை, சகோதரன், சகோதரி, மாமன், மருமகள் என்று உறவு வலுவாக ஏற்படுத்துவதும் நிறைய நேரம் நீண்டது. ஒவ்வொரு புதுக் கடவுளும் பிரபஞ்சங்களினூடாகக் கட்டமைத்த அனைத்துக் கடவுளமைப்பில் இடம் பெற வைப்பதே இந்த உழைப்பின் நோக்கம். இந்த உறவுகளை நியமனமாக அமைத்த  பின் அவற்றை மாற்ற முடியாது. Canonial considerations at work and play .. 

இத்தனை தகவலும் உல்லுலூ குடிநீர்த் தெய்வம் பற்றி சிவிங்கிக்குக் கோடி காட்ட வாதினி ஒரு நிமிடம்  எடுத்துக் கொண்டாள். அதுவும் சாதினியோடு சேட்டைகள் இல்லாமல் பத்து விநாடியில் சொல்லி முடித்திருக்கலாம் தான். 

 மறுபடி வாதினியோடு இதழ் கலந்து நின்றாள் சாதினி. போதும் இதைப் பார்க்க அலுப்பாகிப் போனது பெண்களே நீங்கள் யுத்தமிடும்போது நடுவண் நோக்கராக இருந்து தீர்ப்புத் தரவன்றோ என்னை அழைத்தீர்கள், யாண்டு நடப்பதென்ன என்று ஆனந்தன் ஒவ்வாத ஆச்சரியத்தோடு குறிப்பிட்டான்.

ஆனந்தா, நீதானே யுத்தம் ஓய்ந்ததாக அறிவித்தாய். அப்படியே ஆகட்டும். நாங்கள் யுத்தத்தை முன்னெடுக்கும்போது, சண்டையிடும்போது ஜன்ம விரோதிகள். பிற நேரம் ஒருவரை ஒருவர் வெறியோடு காமுறும் சிநேகிதிகள். சிருங்காரமாக முணுமுணுத்த சாதினிக்குப் பின்னால் நின்று அவள் கொங்கை வருடி, வாதினி மெய்மறந்தாள். உல்லுலூ தெய்வம் நீரில் எச்சில் உமிழ்ந்தது.  

 உல்லுலூ தெய்வம் ஆனந்தனைப் பார்த்து நீ எப்படி கடவுள்களோடு இடையாடிக் கொண்டிருக்கிறாய்  அற்ப மானுடனே என்று அதிகாரத்தோடு கேட்டது. வாதினி தலையை அப்படி இல்லை என்று மறுக்கும் படிக்கு அசைத்தாள். 

ஆனந்தன் தர்க்கப் பிழை மூலம் காஸ்மோஸ் பிரபஞ்சத்தில் மானுடனாகப் பிறந்தான். அவனும் உன்னைப் போல் சிறு தெய்வமாக ஆல்ட் சி பிரபஞ்சத்தில் பிறந்து கடவுளமைப்பில் ஏறியிருக்க வேண்டியவன் என்று சாதினி சொல்ல, அதைப் பாதி கூட கேட்காமல் உல்லுலூ வலுவில்லாத வெண்சிறகுகள் அடித்து மேலே உயர்ந்தது. சட்டென்று விழவும் செய்தது. அனுபவம் இல்லாத, அறிவுச் சுவடற்ற தெய்வமாக இருந்தது உல்லுலூ.

Series Navigation<< சிவிங்கி – அத்தியாயம் இரண்டுசிவிங்கி – அத்தியாயம் நான்கு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.