லாவண்டர்

மேரி மக்தலீன் இரவுணவுக்கான மேசையிலமர்ந்திருந்த ஏசுவின் பாதங்களை லாவண்டர் களிம்பை கொண்டு தேய்த்து தனது தலைமுடியால் கழுவி தூய்மை செய்தாள். பின்னர் அந்த அறையே லாவண்டர் நறுமணத்தால் நிறைந்தது (Gospel of John, 12:3)

விவிலியம் கூறும் இந்த பாதம் கழுவுதலுக்கு பின்னரே  “to wash” என்பதற்கான லத்தீன சொல்லான “lavare,” விலிருந்து உருவானது லாவண்டர் எனும் ஆங்கிலச்சொல் என்று  பரவலாக நம்பப்படுகிறது . ஆனால் இந்த கழுவும் கதைகள் எல்லாம் ஆதாரமற்றவை. உண்மையில் லாவண்டர் என்னும் பெயர் லத்தீன மொழியில் நீலம் என்பதை குறிக்கும் livere என்பதிலிருந்தே வந்தது.

இக் கழுவுதல் கதைகள் வெகுவாகப்பரவி, பண்டைய ஐரோப்பாவில் துவைத்த துணிகளை லாவண்டர் புதர்களில் காய வைத்த சலவைதொழிளாளர்களும் ‘துவைத்து கழுவுவபர்கள்’ என்னும் பொருளில்   “lavenders”  என அழைக்கப்பட்டார்கள். அதிலிருந்தே ஆங்கிலச்சொல்லான laundry  உருவானது.

பேரினப்பெயரான லாவண்டுலா என்பது 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேய தாவரவியலாளர் பிலிப் மில்லரால் (Philip Miller) உருவாக்கப்பட்டது 

லாவண்டர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்ததை விவிலியத்தில் லாவண்டர் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கொண்டு அறியலாம். விவிலியத்தில் லாவண்டர் ’’Spikenard’’  அல்லது “nard”என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அசிரியன் நகரமான நார்டாவில் தோன்றிய செடியாதலால் பண்டைய கிரேக்கர்கள் லாவண்டரை நார்ட்- “Nard” என்று அழைத்தனர். அதன் கூம்பு வடிவ மஞ்சரிகளால் அவை விவிலியத்தில் ’’Spikenard’’ என குறிப்பிடப் பட்டிருக்கிறது.  (naardus என்பது லாவண்டரின் கிரேக்கப் பெயர்)

ஏதேன் தோட்டத்திலிருந்து  ஆதாமும் ஏவாளும் லாவண்டர் செடிகளை பூமிக்கு கொண்டு வந்தனர் என்றும், வாசனை ஏதுமில்லாமல் இருந்த லாவண்டர் புதர்களின் மீது கன்னி மேரி குழந்தை ஏசுவின் துணிகளை  உலர்த்திய பின்னரே லாவண்டர் செடிகளுக்கு நறுமணம் உண்டானது என்றும் கிறிஸ்தவம் சொல்கிறது.  

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உடலை புதைக்கும் முன்பு லாவண்டர் எண்ணெய் தேய்க்க பட்டது  என்கிறது விவிலியம்

லாவண்டர் என்று நினைத்தவுடன் மனதில் தோன்றுவது நாம அடிக்கடி விளம்பரங்களிலும் லாவண்டர் அழகுசாதன பொருட்களிலும் பார்க்கும் அழகிய ஊதா நிற மலர்க்கொத்துக்களுடன் இருக்கும் இங்கிலிஷ் லாவண்டர் தான். 

ஆனால் லாவண்டரில் 45க்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன பிரென்ச் லாவண்டர், போர்ச்சுகீஸ் லாவண்டர் என பல வகைகளில் பல வண்ணங்களில். ஆம் லாவண்டர் ஊதா நிறத்தில் மட்டுமல்லாது பல வண்ணங்களிலும் உள்ளது.”மெலிசா” லாவண்டர் வெள்ளை நிற மலர்களுடன் இருக்கும்.மஞ்சளிலும் இளஞ்சிவப்பில் கூட லாவண்டர் மலர்கள் உள்ளன.  நிறம் எதுவானாலும் அதன் நறுமணத்தில் எந்த மாற்றமுமில்லை.

லாவண்டர்கள் தூய்மை,அர்ப்பணிப்பு பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான குறியீட்டு மலர்களாக  உலகெங்கிலும் கருதப்படுகின்றன.

தோற்றம்/வரலாறு

லாவண்டர் மத்திய தரைக்கடல் பகுதியில் தோன்றிய தாவரம். வடகிழக்கு ஆப்பிரிக்கா  மற்றும் தென்மேற்கு ஆசியாவில் சுமார் 2500 வருடங்களாக பயிராகிக் கொண்டிருக்கிறது. பண்டைய எகிப்தியர்களின் இறப்புச்சடங்குகளில்  லாவண்டர் இடம்பெற்றிருந்தது. மம்மியாக்குதலின் போது லாவண்டர் மலர்கள்/ எண்ணெய் பயன்படுத்தப்படுவது அங்கு வழக்கமாக இருந்திருக்கிறது.

பண்டைய எகிப்தின் சுவரோவியங்களிலும் கல்லறை ஓவியங்களிலும் லாவண்டர் செடிகளின் சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன.  டுடன் காமன் கல்லறையில் பெரிய பெரிய சீசாக்களில் அப்போதும் நறுமணத்தை மிச்சம் வைத்திருந்த லாவண்டர் களிம்புகள் இருந்தன.  செல்வச்செழிப்புள்ள எகிப்திய ஆண்கள் தலைப்பாகைக்குள் லாவண்டர் மலர்கொத்துக்களை செருகி வைத்துக்கொண்டார்கள். பாலையின் வெயிலில் மலர்கொத்துக்களின் எண்ணெய் உருகி அவர்கள் உடலில் பரவி நல்ல நறுமணம் வீசியது.

அரேபியர்கள் லாவண்டரை அதிகம் சாகுபடி செய்தனர் பல்வேறு சிகிச்சைகளுக்கென அதை பயன்படுத்தவும் செய்தனர் அரேபியர்களே லாவண்டர் மலர்களிலிருந்து காய்ச்சி வடிகட்டுதல்  மூலம் நறுமண திரவியங்களை வணிகரீதியாக  முதன்முதலில் தயாரித்தனர்

 பண்டைய கிரேக்கர்கள் லாவண்டரின் நறுமண உபயோகங்களை எகிப்தியர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.  கிரேக்கர்களிடமிருந்து லாவண்டரின் உபயோகங்களை அறிந்து கொண்ட ரோமானியர்கள் அதனை பெருமளவில் குளியல் நீரிலும், வீடுகளிலும் நறுமணம் அளிக்க பயன்படுத்தினார்கள். ரோமானியர்களிடமிருந்தே லாவண்டரின் மருத்துவ உபயோகங்கள் உலகின் பிறபகுதிகளுக்கு அறிமுகமானது.

மற்ற நாகரீகங்களை காட்டிலும் கிரேக்கத்தில் லாவண்டரின் அழகுக்கான உபயோகத்துடன், தலைவலி நிவாரணம் உள்ளிட்ட அதன்  பல்வேறு மருத்துவ குணங்கள் விரைவாக கண்டறியப்பட்டது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் லாவண்டரை மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை சிகிச்சைகளில் வெகுவாக பயன்படுத்தினர். ஐரோப்பா முழுவதும் லாவண்டரை அறிமுகம் செய்தவர்கள் இவர்களே.

கிளியோபாட்ரா லாவண்டர் நறுமணத்தை தனது ரகசிய ஆயுதங்களிலொன்றாக வைத்திருந்தார், சீசரும் ஆண்டனியும் வீழ்ந்ததில் லாவண்டரின் பங்கும் நிச்சயமுண்டு

கிமு 8ம் நூற்றாண்டில் திபெத்திய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட நான்கு தந்திரங்கள் என்னும் பொருள் கொண்ட சந்திரானந்தாவின் Gyu-zhi  மருத்துவ நூலில் லாவண்டர் மனச்சிக்கல்களுக்கு தீர்வாக சொல்லப்பட்டிருக்கிறது.

லாவண்டரின் நுண்ணுயிரெதிர்க்கும் இயல்புகுறித்தான அறிதல் இல்லாத பழங்காலத்திலேயே பல நுண்ணுயிர் நோய்களுக்கெதிராக லாவண்டர் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. 9ம் நூற்றாண்டின் கல்லறை கொள்ளையர்கள் லாவண்டர் கலந்த நீரில் தங்கள் திருட்டு வேலைகள் முடிந்தபின்னர் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

12ம் நூற்றாண்டில் பெண்துறவியான ஹில்டகாட்  (Hildegard) வோட்காவில் கலந்த லாவண்டர் சாற்றை ஒற்றறைத்தலைவலிக்கான நிவாரணமாக  பலருக்கு  சிகிச்சை அளித்தார் 

ஸ்பெயினில் புனித ஜான் நன்னாளன்று தேவாலயங்களின் முன்பாக லாவண்டரின் உலர்செடிகளில் தீமூட்டி தீய ஆவிகளை விலக்கும் சடங்குகள் நடைபெறும்.

16ம் நூற்றாண்டின்  பிளேக் பெருந்தொற்று காலத்தில்    நோய் எதிர்ப்பு க்காக வீடுகளிலும் தெருக்களிலும் லாவண்டர் மலர்கள் கொத்துகொத்தாக செருகி வைக்கப்பட்டன. பிணங்களை அப்புறப்படுத்த  லாவண்டர் எண்ணெய் தேய்க்கப்பட்ட கையுறைகள்  தயாரிக்கப்பட்டன.  பிணவாடை அகல உலர்ந்த லாவண்டர் செடிகளும் மலர்க்கொத்துக்களும் தெருக்களில் விற்கப்பட்டன. தொற்றுக்கெதிரான பாதுகாப்பாக பயன்படுத்தப்பட்ட Four Thieves Vinegar என்னும் பிரபல தயாரிப்பிலும் லாவண்டர் சேர்க்கபட்ட பின்னர் அதன் மருத்துவ உபயோகங்கள் உலகெங்கிலும் அதிகமானது

பிரசவ வலியில் இருக்கும் பெண்களுக்கு கைகளில் லாவண்டர் கொத்துக்களை இறுக பற்றிக்கொள்ள கொடுக்கும் வழக்கமும் அப்போது இருந்தது 

முதன் முதலில் அச்சில் நார்டஸ் என்று லாவண்டர் குறிப்பிடப்பட்டது கிரேக்க மருத்துவரான டயாஸ்கொரிடஸ் (50 AD) மற்றும் பிளைனி (70 AD) ஆகியோரின் படைப்புக்களில்.

பிளைனி 1 பவுண்ட் லாவண்டரின் விலை 100 ரோமானிய தினாரிலாக இருந்ததை குறிப்பிட்டிருக்கிறார், டயாஸ்கொரிடஸ் தனது மருத்துவ குறிப்பேடுகளில் லாவண்டர் தயாரிப்புக்களை தொண்டைப்புண் ஜீரணக்கோளாறுகள் தலைவலி ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தியதை தெரிவித்திருக்கிறார்

பண்டைய பெர்சிய மற்றும் ரோமில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் அறைகளில் லாவண்டர் மலர் செண்டுகள் வைக்கப்பட்டன.17ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெர்சிய மருத்துவ நூலான  Makhzan-El-Adwiya,ல் லாவண்டர் மூளையின் கசடுகளை துடைத்து சுத்தமாக்கும் மூலிகை என்னும் பொருளில் ’broom of the brain’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய மருத்துவங்களில் லாவண்டர் தேநீர், குளியல், தலையணை ஆகியவை நல்ல உறக்கம் வரவழைப்பதன் பொருட்டு பரிந்துரைக்கப்பட்டது.

ஐரோப்பிய நாட்டு மருத்துவமுறைகளில் லாவண்டர் சிறுநீர் பெருக்கவும் பசியை தூண்டவும் அளிக்கப்பட்டது. பெரும்பாலான ஐரோப்பிய  மதுவகைகளிலும் உணவுகளிலும் லாவண்டர் வாசனை சேர்க்கப்பட்டது.

இங்கிலாந்தில் 15- 17ம் நூற்றாண்டுகளில் இளம்பெண்கள் லாவண்டர் சாற்றை அருந்திவிட்டு உறங்கச் சென்றால் அவர்களின் வருங்கால காதலர் கனவில் வருவார் என்று நம்பினார்கள்

16ம் நூற்றாண்டில் மருத்துவரான ஜான் பார்கின்சன் லாவண்டர் சாறு துயரங்களிலிருந்தும் வலியில் இருந்தும் நம்மை பாதுகாக்கும் என்றார். நல்ல உறக்கத்திற்கு அவர் லாவண்டர் அடைக்கப்பட்ட தலையணைகளை பரிந்துரைத்தார். இன்றும் அந்த வழக்கம் பலவீடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.

புதுமண தம்பதிகள் படுக்கை  தவறாமல் லாவண்டர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பாலுணர்வு ஊக்கியாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட லாவண்டர் மலர்கொத்துக்கள் அக்காலத்திலிருந்து இப்போதுவரை காதல்சின்னமாகவும் காதல்பரிசாகவும்  இருக்கிறது. 

இங்கிலாந்தின் தேவாலயங்களில் தெய்வீக மூலிகையாக லாவண்டர் பயன்பாட்டில் இருந்தது.  சிலுவையைபோல அமைக்கப்பட்ட லாவண்டர் செடியின் தண்டுகள் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் என்னும் நம்பிக்கை பல பண்டைய நாகரிகங்களில் இருந்தது. வட ஆப்பிரிக்காவில் கொடுமைக்கார கணவர்களின் சித்திரவதைகளிலிருந்து  தப்பிக்கவும் லாவண்டரை வீட்டுவாசலில் பெண்கள் தொங்கவிட்டார்கள்   

ஃபிரான்ஸின் இளவரசர் ஆறாம் சார்லஸ்  நன்கு உறங்கும் பொருட்டு தனது தலையணைகள் எப்போதும் லாவண்டர் உலர்மலர்களால் நிரப்ப படவேண்டுமென்பதில் கவனமாக இருந்தார்  

இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத் தனது மேஜையில் புத்தம் புதிய லாவண்டர் மலர்க்கொத்துக்கள் வருடம் முழுவதும் இருக்க வேண்டும் என ஆணையிட்டிருந்தார்

சாதாரண மக்களும் லாவண்டரை அதிகம் பயன்படுத்தினார்கள். லாவண்டர் மலர்களை படுக்கை விரிப்புகளில் உடைகள் வைத்திருக்கும் பெட்டிகளிலும் சிறு பொதிகளில் அடைத்து பூச்சி தாக்காமல் இருக்கவும் நறுமணத்துக்கெனவும் பலரும் பயன்படுத்தினார்கள். இன்று வரை லாவண்டர் பொதிகளின் அப்பயன்பாடு தொடர்கின்றது. 

காதலனை காணச்செல்லும் இளம்பெண்கள் மார்புகளுக்கிடையில் லாவண்டர் பொதிகளை வைத்துக்கொண்டனர். நோயாளிகள், பச்சிளம் குழந்தைகள் இருந்த வீடுகளின் நுழைவாயிலில் தீய சக்திகள் அண்டாதிருக்க லாவண்டர் மலர்கொத்துக்கள் கட்டித்தொங்கவிடப்பட்டன 

பிரென்ச் வேதியியலாளர், தாவரவியலாளர், இதழியலாளர் மற்றும் தொழிலதிபரான ழான் (Jean Gattefossé) அரோமாதெரபி எனப்படும் நறுமணங்களின் மூலம் சிகிச்சையளிக்கும் துறையை தோற்றுவித்தபின்னர் லாவண்டரின் மருத்துவப்பயன்பாடு மிக அதிகமானது, முதல் உலகப்போரின் போது தீக்காயங்களை குணமாக்க பெருமளவில் லாவண்டர் எண்ணெய் பயன்பட்டது.  

விக்டோரியா, சாரா மற்றும் லாவண்டர்

விக்டோரிய மகாராணியின் ஆட்சியின் போது லாவண்டர் அவருக்கு மிக பிரியமான மலர் மணமாக இருந்தது. அரண்மனையின் அடிப்பக்கத்தில் கல் சுரங்கங்கள் உண்டாக்கப்பட்டு அங்கு வெப்பமூட்டபட்ட லாவண்டர் செடிகளின் நறுமணம் எப்போதும் நுண்ணிய புகைபோக்கிகளின் வழியே அரசியின் அரண்மனையெங்கும் வீசும்படி செய்யப்பட்டிருந்து. 

 விக்டோரியா மகாரணிக்கு புத்தம் புதிய லாவண்டர் மலர்கொத்துக்களை அளிக்கவென்றே இங்கிலாந்தை சேர்ந்த  சாரா பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருந்தார் (Sarah Sprules).

1890ல் தனது தந்தையின் மறைவுக்கு பிறகு  நறுமண திரவியங்கள் தயாரிக்கும் குடும்பத் தொழிலை சாரா தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். லாவண்டர் உள்ளிட்ட பல நறுமண தாவரங்களை வளர்த்து அவற்றிலிருந்து வாசனை பொருட்கள் தயாரித்த அவரது தொழிற்சாலை பலருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்தது 

சாராவின் லாவண்டர் நறுமணம் புகழ்பெற்றிருந்த சமயத்தில், 1886 ல் ஒருமுறை அவர் விக்டோரிய மகாராணியையும் இளவரசர் லூயியையும் சந்தித்து மரியாதை நிமித்தம் லாவண்டர் வாசனை திரவிய புட்டி ஒன்றை பரிசளித்தார். அந்த நறுமணத்தில் மனம் மயங்கிய மகாராணி சாராவை தனது பிரத்யேக நறுமணப்பொருட்களின் மேற்பார்வையாளராக நியமித்து  சாராவின் லாவண்டர் தயாரிப்புகளுக்கு அரசு அங்கீகாரமும் அளித்தார். அதன்பின் சாராவிற்கும் அவரது லாவண்டர் தயாரிப்புகளுக்கும் உலகப்புகழ் கிடைத்தது. பல நாட்டு அரசிகள், இளவரசிகளுக்கு பரிசளிக்கவென்றே சாரா ஏராளமாக லாவண்டர் நறுமண புட்டிகளை  தயாரித்தார். 

விக்டோரிய மகாராணியை போலி செய்யும் வழக்கம் கொண்டிருந்த பிரபுக்களின்  குடும்ப பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு லாவண்டர் தயாரிப்புகளை வாங்கி குவித்தனர். லாவண்டரின் பயன்பாடும் புகழும் தீயாக பரவி லாவண்டர் சாகுபடியும் அதிகரித்தது தெருக்களில் கட்டுக்கட்டாக லாவண்டர் மலர்கொத்துக்கள் விற்கப்பட்டன. பெரும்பாலான வீடுகளிலும் லாவண்டர் செடிகள் வளர்க்கப்பட்டன. லாவண்டரின் வணிகரீதியான சாகுபடிக்கு சாரா நேரடியாக காரணமானார்

தாவர வகைகள்

 லாவண்டரின் 300க்கு மேற்பட்ட வகைகளில் பிரபலமானது Lavendula angustifolia  என்னும் இங்லிஷ் லாவண்டர். இதற்கு அடுத்த்தாக உபயோகத்தில் இருப்பது ஸ்பானிஷ் லாவண்டரனான  Lavandula stoechas 

20 நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட L. angustifolia மற்றும் L. latifoliaவின் கலப்பினமான Lavandula x intermedia லாவண்டர் எண்ணெய்க்கான பிரத்யேக வகை. இது லாவண்டின் அல்லது டச்சு லாவண்டர் என அழைக்கப்படுகிறது. 

லாவண்டுலா பேரினத்தின் துணைப்பேரினங்கள் மூன்று:

Subgenus Lavandula இவை கடினமான தண்டுகளை கொண்டிருக்கும் புதர்ச்செடிகள்.  எண்ணெய் மிக அதிக அளவில் கொண்டிருப்பவையும் கூட.

Subgenus Fabricia – இதில் புதர்களும் சிறுசெடிகளும் இருக்கும். அட்லாண்டிக் பகுதியில் இருந்து இந்தியா வரை இவை அதிகம் பரவியிருக்கின்றன. இவை பெரும்பாலும் அலங்கார செடிகள்

Subgenus Sabaudia -இதில் இரண்டு சிற்றினங்கள் மட்டும் உள்ளன

உலகெங்கிலும் மிக அதிகம் சாகுபடியாகும் வகை  Lavandula angustifolia (பழைய பெயர் L. officinalis). இதற்கு அடுத்த இடங்களில் L. stoechas, L. dentata, மற்றும் எகிப்திய வகையான L. multifida ஆகியவை இருக்கின்றன.

லாவண்டர் செடிகள் விதைகள் அல்லது தண்டுகள் மூலம்  பயிராக்கப்படுகின்றது. இவை 40-80 செ மீ உயரம் வரை வளரும்.

லாவண்டுலா பேரினத்தில் ஒருவருட மற்றும் பலவருட பயிர்கள் உள்ளன. அதைப்போலவே லாவண்டர் செடிகளின் இலைகளும் பற்கள் கொண்ட, பற்களற்ற விளிம்பு கொண்டவைகள் என இருவகையில் காணப்படும். மிக மென்மையான வளரிகளால் மூடப்பட்டிருக்கும் இலைகளில் அதிக எண்ணெய் இருக்கும்.

மலர்கள் கூம்பு மஞ்சரிகளில்  வட்ட அடுக்குகளில் அமைந்திருக்கும். மலர் மஞ்சரிகள் இலைகளைக் காட்டிலும் உயரத்தில் தோன்றும். மலர்கள் ஊதா, அடர் ஊதா, நீலம், மஞ்சள், இளம் ஊதா, வெள்ளை என பல நிறங்களில் இருக்கும்.

துளசியின் குடும்பமான லேமியேசியை  (Lamiaceae) சேர்ந்த லாவண்டுலா பேரினத்தின் 47 சிற்றினங்கள் உள்ளன. தற்போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் லாவண்டர் அதிகளவில் சாகுபடியாகிறது 

லாவண்டரை தொடர்ந்து ஒரே நிலத்தில் 20 ஆண்டுகளுக்கு கூட மாற்றுப்பயிர் சாகுபடியின்றி பயிராக்கலாம். இங்கிலாந்து மற்றும் பிரான்சில் இப்படி தொடர்ந்து பல வருடங்களுக்கு லாவண்டர் பயிராகிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பிற நாடுகளும் அவர்களின் நிலங்களில் இப்படி நெடுங்காலத்துக்கு லாவண்டர் பயிரிடும் வழிகளை தற்போது ஆய்வு செய்துவருகிறார்கள்

வேதிப்பொருட்கள்

லாவண்டரின் நறுமணம் மற்றும் மருத்துவப் பண்புகளுக்கு காரணமாக நூற்றுக்கணக்கான வேதிப்பொருட்கள் உள்ளன. அவற்றில் மிக குறிப்பிடத்தக்கவை: 

லினலைல் அசிடேட், லினலூல், கேரியோபில்லீன்  ஆகியவை. இவற்றுடன் குறைந்த அளவில் செஸ்க்யூ டெர்பினாய்டுகள்,பெரிலில் ஆல்கஹால், எஸ்டெர்கள்,சி னியோல் மற்றும் பீட்டா ஆசிமோன் ஆகியவையுமுள்ளன

ஒரு கிலோ உலர்ந்த லாவண்டர் மலர்களில்   13 ml லாவண்டர் எண்ணெய் இருக்கிறது.

பயன்கள் , மருத்துவ உபயோகங்கள்

உலகெங்குமே திருமண அலங்காரங்களில் மிக அதிக இடம்பிடிப்பவையும் லாவண்டர் மலர்கள்தான்

லாவண்டர் தற்போது  குளியல் சோப்புகளில் ஷாம்பூக்களில், வீடுகளை சுத்தம் செய்ய பயன்படும் பொருட்களில் நறுமண திரவியங்களில் வாசனை எண்ணெய்களில் மெழுகுவர்த்திகளில்,என பல்வேறு அழகுசாதன பொருட்கள் மற்றும் தூய்மை பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

லாவண்டர் தீக்காயங்களை ஆற்றும், நல்ல உறக்கம் வரவழைக்கும் படபடப்பு மற்றும் மன அழுத்தத்தை குறைத்து நல்ல அமைதியை அளிக்கும். தசை பிடிப்பு மூட்டுவலி ஆகியவற்றிற்கும் லாவண்டர் எண்ணெய் நல்ல நிவாரணம் அளிக்கும். லாவண்டர் உண்ணத்தக்கதும் கூட. லாவண்டரின் நறுமணத்தை இப்போது ஐஸ்கிரீம்கள் கேக்குகள் பழச்சாறுகள் பிஸ்கட்டுகளிலும் ருசிக்கலாம்

லாவண்டர் அரும்புகளும் இலைகளும் மலரிதழ்களும் தேநீர் தயாரிக்கப் பயன்படுகின்றன. லாவண்டரிலிருந்து எடுக்கப்படும் ஒரு மலர்த்தேன் (Unifloral honey) மிக சுவையானது மருத்துவப் பயன்கள் கொண்டது.

உற்பத்தி

உலகின் முன்னணி லாவண்டர் உற்பத்தி செய்யும் பிரதேசமாக பிரான்சின் புரோவென்ஸ் பகுதி இருக்கிறது இங்கு பயிராகும் . இந்த பிரதேசத்தில் மட்டுமே வலரும் Lavandula intermedia  என்னும் லாவண்டர் கலப்பினம் உலகின் மிகப்பெரிய லாவண்டர் உற்பத்தியாளராக பிரான்ஸை நெடுங்காலமாக  வைத்திருக்கிறது

லாவண்டர் பயிராகும் பிற முக்கிய இடங்கள் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பல்கேரியா, ஜெர்மனி,  ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து

சந்தை

லாவண்டருக்கான தேவைகள்  உலகெங்கிலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2020ல்  676 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த லாவண்டர் சந்தை மதிப்பு 2028 ல் 6-7% அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. சூழலுக்கு இணக்கமான முறையில் சாகுபடி செய்யப்படும் லாவண்டர்களுக்கு மேலும் தேவை அதிகரித்திருக்கிறது

இந்தியாவில் ஊதாப்புரட்சி

2016ல் ஊதா புரட்சி என்று பெயரிடப்பட்டு லாவண்டர் சாகுபடி ஜம்மு காஷ்மீரில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தினால்  (CSIR) இந்தியாவில் அறிமுகமானது.   2007லிருந்து இதற்கான திட்டங்கள் முன்வைக்கப் பட்டிருந்தன. உள்ளூர் விவசாயிகளுக்கு லாவண்டர் பயிரை குறித்த அறிமுகமும் சாகுபடி தொழில் நுட்பங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டு 4 லட்சம் லாவண்டர் நாற்றுக்கள்  2018 லிருந்து இமாச்சலபிரதேசம் உத்தரபிரதேசம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பயிராகிறது.  

இயற்கையின் எளிய ஆனால் சக்தி வாய்ந்த பரிசுகளில்  முக்கியமான ஒன்றான லாவண்டர் சாகுபடியினால் .சுமார் 75 ஆயிரம் இந்திய விவசாயிகள்  நேரடியாக பலன் பெறுகிறார்கள்  ஊதா புரட்சியின் நறுமணம் இந்தியாவெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.