கப்பை – கதையை முன்வைத்து…

இக்கால முதிரா பேஸ்புக் இன்ஸ்டா இளவல்களின் மனப்போக்கை மிக துல்லியமாக பதிவு செய்திருந்ததுதான் சார்பினோ டாலி எழுதிய இந்த ‘கப்பை’ எனும் கதையில் என்னை முதலில் கவர்ந்தது.

மார்த்தாண்டம் போன்ற ஓர் சிறு ஊரில் வசிக்கும் இளைஞன் சமூக ஊடகங்களுக்குள் வலம் வரும்போது எடுக்கும் உருமாற்றம் அவனது நிஜ உலகத்துக்கு முற்றிலும் அந்நியமானது. நம் எல்லாருக்குமே இது பொருந்தும் என்றாலும், இன்றைய ஜென் எக்ஸ் வகையினர் அறிந்த ஒரே நிஜ உலகமாக சமூக ஊடக உலகம்  அமைந்திருப்பதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சரியாகச் சொல்லபோனால், அவர்களது ஒரே களி உலகமாக சமூக ஊடகம் அமைந்துள்ளது. நீ வாழ்வது ஒரு மேட்ரிக்ஸ் உலகம் என நியோவிடம் மார்பியஸ் சொல்லும் காட்சியை நாம் இங்கு சேர்த்து வைத்துப் பார்க்கலாம். மார்த்தாண்டத்துக்காரி தன்னுடைய இன்ஸடா பக்கத்துக்கு ஸ்டைலிஷ் சோல் எனப் பெயரிட்டு  ஒரு மாய உலகை அமைத்துக்கொள்ள முடியும். அங்கு ஹார்டினும், லைக்கும், கிஸ்ஸும் அளிப்பவர்கள் அவளது / அவனது உசிரு. அதற்கு வெளியே இருக்கும் உலகம் அவர்களை பொறுத்தவரை பொய்யான ஓர் உலகம் மட்டுமல்ல, அது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஒரு மாய உலகம். அங்கு தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும், உதாசீனங்களுக்கும் மாற்று இல்லை என நினைக்கிறார்கள். சைபர் உலகில் அவர்களது பொய்யான அடையாளங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கின்றது. அந்த அங்கீகாரம் அவர்களது நிஜ உலகின் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகிறது. பலருக்கு அது எதிர்மறையாக நடப்பதும் உண்டு.

கப்பை கதையின் கதைச்சொல்லி பல பெண்களுக்கு ஹார்டின் விட்டு, சூப்பர் தோழி கமெண்டுகளை மட்டும் போடும் இளைஞர் இல்லை. மெய் நிகர் உலகின் தோல்விகளுக்கான பரிகாரத்தை அங்கேயே தேடுபவர். முஸ்லிம் பெண் நண்பர் தன்னை மணக்கவில்லை என்பதால் பல முஸ்லீம் பதிவுகளுக்குச் சென்று பாகிஸ்தானுக்குப் போ என கமெண்டு போடும் புரட்சிக்காரரும் கூட.  அவர் வாழும் வீடும், அவரது சுற்றுச் சூழலும் அவரது மெய் நிகர் உலகத்துக்கு எதிர் மாறாக மிக யதார்த்தமாக அமைந்திருக்கிறது. புது வண்டியைத் திருட்டுக்கொடுக்க பயந்து முன் சக்கரத்தை கழற்றி வைத்திருப்பதும், எதோ ஒரு புரியாத சண்டையினால் மாதக்கணக்கில் வீட்டில் குடித்துக் கிடக்கும் அப்பா, மகனின் எதிர்காலம் சரியாக அமையாமல் போய்விடுமோ எனும் பயத்தில் சதா எரிந்து விழும் அம்மா என மிக மிக சராசரியான சிக்கல்கள் அவரைச் சுற்றி அமைந்திருக்கின்றன.

அடையாளங்கள் மிகவும் தற்காலிகமானவை; பொய்யாகினும் மெய்யாகினும். அப்படி ஒரு அடையாளத்தைப் போட்டுக்கொண்டு இருந்தாலும் கதை சொல்லியிடம் ஒரு நிதானம் இருக்கிறது. பிபிஓ அலுவலகத்தில் கிடைத்த ஆங்கிலப் பெயர்கள் மற்றோரு அடையாளத்தை அவனுக்கு வழங்குகிறது. அங்கு அவன் எடி. நண்பர்கள் மேனேஜர்கள் என ஜெயன் எனும் ஜெர்ரி, அரவிந்த் எனும் ஆடெம் அவனை சந்திக்க வரும் இடத்தில் அவர்களுக்கு சாப்பிடக் கொடுக்கக் கூட ஏதும் இல்லை எனும் அலைக்கழிப்பும் அம்மாவை கடிந்து கொள்வதிலும் தெரியும் தவிப்பும் கதையில் மிக நன்றாக வெளிப்பட்டிருக்கின்றன. விபத்தினால் அலுவலகம் வர இயலாமல் வீட்டில் இருக்கும் எடி தன் நிலைமைக்கு அவனது வேலை தொடர்பான ஒரு சாபமே காரணம் என நினைக்கிறான். ஏனென்றால் அந்த பிபிஓ தங்கள் வாடிகையாளர்களை ஏமாற்றி பணத்தைக் கறந்து கொண்டிருப்பவர்கள். கணினி பற்றி அதிகம் சரியாக வயதான வெளிநாட்டவர்கள்தான் அவர்களது வாடிக்கையாளர்கள். நம் நாட்டிலிருந்து கொள்ளை அடித்தவர்கள்தானே எனும் சால்ஜாப்பும் இவர்களுக்கு தரப்படுகிறது. பிபிஓ வேலைக்கு முன்னர் காப்பீடு விற்பவனையாளராக அலைந்து திரிந்த வேலை சரிப்படவில்லை. இந்த ரெண்டு நிகழ்வுகளையும் கதைசொல்லி மிக சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். அப்பா சொல்லி செல்லும் வேலை என்பது ஒரு புறம் இருந்தாலும், எந்த வேலையிலும் ஒரு சலிப்பு வருவதை அவன் உணர்கிறான். புறச்சூழல் தரும் அழுத்தம் ஒரு புறம். அதே சமயம் வேலையில் இருக்கும் பிடிப்பின்மை. 

கதையின் முடிவு மிக யதார்த்தமாக இருப்பதோடு மட்டுமல்லாது கவித்துவமாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு வேலையிலும் வீட்டிலும் ஏதேனும் குழப்பம் எதிர்காலம் பற்றிய குழப்பத்தை அதிகரிக்கிறது. ஆனால் பசி இப்படி ஒரு தரித்திர சூழலில் இருந்து காப்பாற்றுவதாக அவன் உணர்கிறான். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏதேனும் ஒரு வேலை வேண்டும் அது பசியைப் போக்கும் எனும் யதார்த்தமான ஒரு இடத்துக்கு மிக இயல்பாக கதை நகர்கிறது. இப்படி ஒரு முடிவை சொல்லிவிட்டதால் அவன் தனது மெய் நிகர் உலகை புறக்கணிக்கிறான் எனச் சொல்வதற்கு இல்லை. வாழ்வில் அதுவும் ஒரு பகுதிதான். முதலிலிருந்து கடைசி வரை சுவாரஸ்யத்தைத் தக்க வைத்த கதை உச்ச கட்டத்தை முடிவின் நிதானத்தில் அடைந்துவிடுகிறது. சமீபத்தில் படித்த நல்லதொரு கதை.

One Reply to “கப்பை – கதையை முன்வைத்து…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.