புத்தகக் கண்காட்சியில் பை நிறைய கதைகள்

1. மழைக்கண்

2022 சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் செந்தில் ஜெகன்நாதனை முதன்முதலில் சந்தித்தேன். போகனுடன் அன்று சந்தையில் உலாவிக் கொண்டிருக்கையில், அவர் இலக்கிய வட்டாரங்களில் ஒரு மைனர் ஸ்டார் என்பதால் அனைவரும் அவரை இடைமறித்து, அவருக்குப் புத்தகங்களையும் சாக்லெட்டுகளையும் பரிசாக அளித்துக் கொண்டிருந்தார்கள். இப்படியானதொரு போகன் விசிறியின், “வாங்க காப்பி குடிச்சுக்கிட்டே பேசுவோம்” அன்புத் தொல்லையில் ஏதேச்சையாக நானும் செந்திலும் போகனின் பரிவாரமாக உடனழைக்கப்பட்டோம். காப்பி அருந்திக் கொண்டிருக்கையில் (போகன் வழக்கம்போல தோழியொருவருக்கு இலக்கியப் பாலபாடம் நடத்திக்கொண்டிருந்தார்); செந்தில் அவர் பூர்வீகத்தின் (தஞ்சை) நிலம்சார் வாழ்வைப் பற்றியும் அதன் மூர்க்கமான நிதர்சனங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். நினைவேக்கத்தைக் காட்டிலும் வேதனையும் கரிசனமுமே அவர் பேச்சில் மிதமிஞ்சின. அதன்பின் எழுத்தாளனாக எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ளாதவர் திரைப்படத் துறையில் எவ்வாறு சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பது பற்றியும் சிறிது பேசினார். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கதைத்துவிட்டு விடைபெற்றுக் கொண்டோம். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் புத்தகச் சந்தையில் அவரைக் காண நேரிட்ட போது ‘மழைக்கண்’ கதை அபாரமாக இருந்தது என்று அவரிடம் கூறினேன். நெஞ்சைத் தொட்டுக்கொண்டு நன்றி கூறினார். ‘சொல்வனத்திற்கு எழுதுமாறு கேட்டுக்கொண்டு விடைபெற்றுக் கொண்டேன். 

விவாசாயத்தை அண்டி வாழும் குடும்பங்கள், நிலத்துடனும் ஒருவருக்கொருவருடனும் அக்குடும்பத்தார் கொண்டிருக்கும் உறவுகள், அவ்விவசாயச் சூழலிலிருந்து நகரத்த்திற்குப் (திரைப்படம் போன்ற துறைகளுக்கு) புலம்பெயரும் தலைமுறையினரின் அன்றாட நிதர்சனம் இவையே மழைக்கண் சிறுகதைத் தொகுப்பில் அடுத்தடுத்து வருகின்றன. “நடவு எந்திரம் வந்துவிட்டாலும்கூடக் கைநடவு போல ஆகாது” (நெடுநல் உளலொருத்தி) என்று நம்புவோர் அந்த எந்திரம் தவிர்க்கவியலாத வகையில் நிலைநாட்டும் மூர்க்கத்திற்குள் இருத்தப்படுகையில் பொருண்மையாகவும் மனோரீதியாகவும் ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது. வலியையும், மனக்கிலேசத்தையும் உடனழைத்து வருகிறது. ஆனால், இம்மாற்றத்தைப் புனைவாக்குகையில் ஒரு அபாயமும் இருக்கிறது, மூர்க்கமான நிகழின் வெளிச்சத்தில் முந்தைய வேளாண்மை உலகை ஆதர்சப்படுத்தும் அபாயம். மழைக்கண் தொகுப்பு இதை தவிர்த்திருப்பது எனக்குப் பிடித்திருந்தது. மாறாக அம்மாதிரியான பின்னணியிலிருந்து வரும் குடும்பங்களில் நிலவும் உறவுகள் மீது அதன் புனைவு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. தந்தை- மகன் (அன்பின் நிழல், எவ்வம்), அண்ணன்-தங்கை (நெருநல் உளளொருத்தி) அம்மா-மகன் (மழைக்கண்) இப்படி பல கோணங்களில் அவ்வுறவுகள் மிகவும் நெகிழ்வூட்டும் விதத்தில் ஆராயப் படுகின்றன. அச்சித்திரிப்பில் மெலோடிராமா இருந்தாலும் அது நெருடாது இயல்பாகவே அமைந்திருப்பதே இப்படைப்பின் வெற்றி என்று படுகிறது. 

மழைக்கண் கதையே தொகுப்பின் உச்சம். ‘அம்மா சென்டிமெண்ட்’ என்று திரைப்படத்தின் மிகைப்படுத்தல்களால் மலினப்பட்டிருக்கும் ஒன்றை இவ்வளவு தத்ரூபமாகவும் கலைத்திறனுடனும் கைப்பற்றியிருக்கும் சமீபத்திய படைப்புகளில் இது முதன்மையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. “நெலத்தோட ரேகை எல்லாமே அத்துப்படியாகிவிட்ட” ஒரு தாயே கதையின் பிரதான பாத்திரம். வேளாண்மையை நம்பியிருக்கும் குடும்பம். “ராக்கண்ணு, பகல்கண்ணுன்னு முழிச்சு” எந்த லௌகீகப் பயனையுமே ஈட்டியிராத ஒரு குடும்பம். பிழைப்பு வேளாண்மையிலிருந்து பணப்பயிருக்கு மாறும் விதமாக அவள் கணவன் ஒரு நாள் “இந்த தடவ வயல உழுவாம முச்சூடும் பருத்தி போட்டுருவோம்” என்றொரு நாள் அறிவிக்கிறார். அவரென்னவோ சாதாரணப் பருத்தியைத் (Gossypium) தான் கூறுகிறார். கதையைப் படித்தபின் “Devil’s Cotton” (Gossypium Demonis, பேய்ப் பருத்தி) என்றொரு செடி இருப்பது நினைவிற்கு வந்தது. ஏனெனில் வதந்தியைப் போல் (Gossip) உள்ளே நுழைந்து சாத்தானைப் போல் (Demon) அக்குடும்பத்தை அப்பயிர் சிதைத்துவிடுகிறது. முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கணவனின் முடிவிற்கு இறுதியில் உடன்பட்டு அனைத்து வேலைகளையும் அவளே இழுத்துப் போட்டுக்கொண்டு அதன் அறுவடையை மேற்பார்வையிடுகிறாள். “பால்குடிப் புள்ளைபோல” ஆகிவிடும் அப்பருத்தி, “தொண்டையில் எச்சில் திரண்டால்கூட அந்த ஈரத்தையும் பருத்தி வேரில்தான்” துப்புமளவிற்கும் அவளுக்கு அந்யோன்யமாகிவிடுகிறது. “பேய்ப் பருத்தி” என்று கூறினேன் இல்லையா, அதற்கு உண்மையில் நம் ஆயுர்வேதத்தில் பல மருத்துவப் பயன்பாடுகள் உண்டு. பருத்தியே, கிரைண்டர், டிவி, கேஸ் அடுப்பு போன்ற வசதிகளுக்கான சாத்தியங்களை அக்குடும்பத்திற்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஆனால், அதன் பரம எதிரியான இளஞ்சிவப்பு பூச்சிகளையும் அதன் உடனழைத்துவருகிறது. அவள் உடல்நலத்திற்கு அவை கேடு விளைவிப்பதே கதையின் உந்துவிசை. 

அண்மையில் நிகழ்ந்த மொழிபெயர்ப்புப் போட்டியில் மழைக்கண் கதையின் மொழிபெயர்ப்பு பரிசு பெற்றது மகிழ்வூட்டியது. ஆனால், அதன் தலைப்பு (Cotton Fever) அழகாகவே இருந்தாலும், தமிழில் பிரதியூடுறுவால் நிகழும் அபாரமான சுட்டுதல்தன்மையை இழந்திருப்பதாகவே எனக்குப் பட்டது. அசோகவனத்தில் அல்லலுற்றிருக்கும் சீதையின் துயரத்தைக் கூர்மையாக உணர்த்த கம்பன் அவ்விடுகுறிப் பெயரை ஒரு காரணப்பெயராக உருமாற்றுகிறான். 

தழைத்தபொன் முலைத் தடம் கடந்து, அருவி போய்த் தாழப்

புழைத்த போல, நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால்,

இழைக்கும் நுண்ணிய மருங்குலாள், இணை நெடுங் கண்கள்,

மழைக்கண்என்பது காரணக் குறி என வகுத்தாள்.

அதாவது அணைக் கட்டில் பெரிய துளை ஏற்பட்டால் எப்படி தண்ணீர் பாய்ந்து வந்துகொண்டே இருக்குமோ, அது போல் அவள் கண்களில் கண்ணீர் வந்துகொண்டே இருப்பதால், “மழைக்கண்” என்ற அடைமொழிக்குச் சீதையின் துயரமே காரணம் என்ற அர்த்தத்தில். ஆனால், செந்தில் ஜெகன்நாதன் இதைப் புரட்டிப் போடுகிறார். சீதை போன்ற காப்பிய நாயகிகள் அல்ல, நிலத்தைக் கட்டி மல்லாடும் இக்கதையில் வரும் தாய்மார்களின் அன்றாடத் துயரங்களே அவ்வடைமொழிக்கு உற்ற உதாரணங்கள், அவர்களே அதைக் காரணக் குறியாக வகுக்கிறார்கள் என்றொரு சுட்டுதலும் கதையில் பொதிந்திருக்கிறது. 

ஜெயமோகன் இத்தொகுப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அவரது முதல் நாவலான ரப்பரில் மொன்னுமணி பெருவட்டர் என்ற தாஸ்தாயெவ்ஸ்கிய தந்தை வடிவம் நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதில்தான் அந்த நாவல் தொடங்கும், இத்தொகுப்பின் முதல் கதையான அன்பின் நிழலில் பெருவட்டரைப் போல் ஒரு சுயம்புவான தந்தை பாத்திரம் மருத்துவமனையில் கட்டுபோட்டு வைக்கப் பட்டிருக்கிறது. முன்னவர் “கருங்கல் கோபுரம்” என்றால், பின்னவர் ஒரு “தானே வளர்ந்த வன விருட்சம்.” இம்மாதிரியான தாஸ்தாயெவ்ஸ்கிய தந்தை ஆளுமைகள் அவர்கள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் உளவியல் ரீதியான தாக்கம் மூர்க்கமானது. அவர் தும்மலைக் கேட்டாலே கால்சட்டையில் சிறுநீர் போகிறவன் தான் இப்போது அவரைக் கட்டிப்போடும் நிலைக்கு வந்திருக்கிறான் எனும்போது அவ்வுளவியல் சிடுக்கில் ஒரு புதிய முடிச்சு சேர்க்கப்படுகிறது. இம்முடிச்சுகள் எங்கு அவிழ்க்கப்படுகின்றன என்பது கதையைப் பொருத்தது. அன்பின் நிழல் கதையின் அம்முடிச்சு அவிழ்க்கப்படும் புள்ளியிலிருந்து முற்றிலும் மாறாக, அதற்கு எதிர்துருவத்திலிருக்கும் ஒரு புள்ளியில்தான் எவ்வம் கதை தன் முடிச்சை அவிழ்த்துக் கொள்கிறது. அதன் “வை ராஜா வை” சூதாட்டச் சம்பவங்கள் கதையில் அழகாக வந்திருக்கின்றன. 

நித்தியமானவன், ஆடிஷன் கதைகள் திரைப்படத் துறையின் செயற்கைத்தனங்களிலும் நிதர்சனத்திலும் காலூன்றி நிற்கின்றன. நிலம்சார் வாழ்வையும் குடும்பத்தையும் பிரிந்து சினிமாக் கனவுகளுடன் சென்னைக்குப் பெயர்கிறவர்களின் நெருக்கடிகள் அவர்கள் துறந்த உலகத்தின் நெருக்கடிகளைக் காட்டிலும் மோசமாகவே இருக்கின்றன. மேலும், இங்கு அழுவதற்கும் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கும் ஏதான தோள்களும் இல்லை. அப்படியும் அந்தக் கனவு தன்னை நித்தியம் புதுப்பித்துக் கொள்ளும் இடத்திற்கே நித்தியமானவன் இறுதியில் வந்து நிற்கிறது. ஆடிஷன் கதையின் குழந்தை நட்சத்திரங்களைத் தேர்வு செய்யும் சூழல் சுவாரஸ்யமானது என்றாலும் (கதையைப் படிக்கையில் ராய் ஆர்பிசனின் Handle me with care பாடல் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.) கதை கட்டமைக்கப்பட்டிருக்கும் விதமும் அதன் தேய்வழக்கான முடிவும் சற்றே எரிச்சலூட்டின. 

காகளம் ஒரு முதலாளிக்கும் அவரிடம் சிறுவயதிலிருந்தே வேலையாளாகப் பணியாற்றும் ஒருவனுக்குமிடையே ஏற்படும் பந்தத்தையும், அவ்வுறவின் ஏற்றத்தாழ்வுகளையும் சொல்லிச் செல்கிறது. முதலாளியின் இசையார்வம் கதைக்கு மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது. “வலது கை கட்டை விரலின் பிடிமானத்தில் இருந்த கிளாரினெட்டின் மீது கூட்டமாகச் சிட்டுக்குருவிகள் தானியம் கொத்துவதைப் போல மற்ற விரல்கள் மீட்டிக்கொண்டிருக்க, சுண்டு விரல்கள் அதன் வாலைப் போலத் துள்ளிக்கொண்டிருந்தன.” என்ற அபாரமான வரியை மீண்டும் வாசிக்கையில் அவர் சமீபத்தில் எழுதிய மற்றொரு கதையின் வரியும் ஞாபகத்திற்கு வந்தது. இசையைக் களமாகக் கொண்டிருக்கும் ஆனாகத நாதம் என்ற கதையில் வரும் “மேலே வைக்கப்பட்டிருந்த நாதஸ்வர உறையைப் பார்க்கும்போது இழுத்திப் போர்த்திக்கொண்டு தூங்குவது மாதிரி நடிக்கும் குழந்தையைப் போலிருந்தது.” என்ற வரி. விரல்களும் குழந்தையும் இயல்பாகவே நெடுநல் உளனொருத்தி கதையில் வரும் “இரவுப் பனியில் நனைந்து இளம்பச்சை நிறத்தில் முளைவிட்டிருந்த உளுந்தும் பயிறும் மூடியிருக்கும் துணியிலிருந்து வெளியே தெரியும் குழந்தையின் கால் விரல்களைப் போல மண்ணைப் பொத்துக்கொண்டு எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.” வரிக்கு அழைத்துச் சென்றது வாசிப்பனுபவத்தின் அலாதியான சுகங்களில் ஒன்று. 

அந்தக்கதையில் அண்ணன் தங்கை உறவும், நாத்தனாருக்கு தன் மூன்றாவது குழந்தையைத் தத்துக் கொடுக்கும் அண்ணியின் பரிதவிப்பும் கதையின் இறுதிப் பக்கங்களின் மெலோடிராமாவிலிருந்து அதைச் சற்றே மீட்கின்றன. 

நாயைக் கண்டால் இன்னமும் பயப்படும் எனக்கு நேசன் கதை “a bit too close to home” ஆக இருந்ததால் அதைப் படிக்கையில் பதற்றமாக இருந்தது. நாய்பயம் கொண்ட அதன் நாயகன் கதையின் இறுதியில் அதைத் தொட்டுத் தூக்குகிறான். “அய்யோ தெய்வமே… இதுகிட்டயா நான் இவ்வளவு நாள் பகையோட இருந்தேன்” என்று கேட்கையில் என் நெஞ்சில் ஒரு சிறு நம்பிக்கை துளிர்ந்தது. பார்ப்போம்! என் போன்ற வயதான நாயின் வாலை நிமிர்த்தி அதற்குப் புது வித்தைகளையும் கற்றுக் கொடுக்க முடியும் போல! 

மேலே பேசிய கதைகள் அனைத்துமே மனித உறவுகளுக்கிடையே நிலவும் சிடுக்குகளையும், மூர்க்கத்தையும் அவற்றை மீறித் துளிர்க்கும் அன்பையும் ஆராயும் புனைவுகளாக நாம் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இவற்றோடு முற்றிலும் வேறுபட்டு ஒரு சோதனை முயற்சியைப் போல், கிட்டத்தட்ட ஒரு பிற்சேர்க்கையைப் போலிருக்கும் ஒரு கதையும் இத்தொகுப்பில் இருக்கிறது. முத்தத்துக்கு கதையில், நடுவயதாகியும் முத்தத்தைச் சுவைத்திராதவன் அந்த முதல் முத்தத்தை அசை போடுவதே கதை. சாக்லேட், மாம்பழம், பூரிமசால் என்று விரியும் அம்முத்தம் இறுதியில் பவுடர் வாசனையாக அவன் நினைவில் எஞ்சிவிடுவதே கதையின் சுவாரசியம். 

இக்கதைகளைத் தொடர்ச்சியாக வாசிக்கையில் இத்தொகுப்பிற்குப் பவதுக்கம் என்றும் பெயர் வைத்திருக்கலாமோ என்று தோன்றியது. (இந்த வருடம் அப்பெயரில் ஒரு நாவலும் படிக்கக் கிடைத்தது). ஏனெனில், அவ்வளவு துயரம் இக்கதைகளில் மண்டிக் கிடக்கிறது. துயரம் ஒழிந்துவிட்டால் கலையும் ஒழிந்துவிடும் போல. அவ்வளவு துயரத்திலும் கரிசனத்திலேயே முதல் கதையும் இறுதிக்கதையும் முடிகின்றன என்பது சற்று நம்பிக்கை அளிக்கிறது. செந்தில் இனிமேலாவது சந்தோஷமான கதைகளையே எழுதட்டும் என்று வாழ்த்துகிறேன். 

* * *

மழைக்கண்ணோடு நிறுத்திக் கொள்ளலாம் என்றுதான் முதலில் திட்டமிட்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் வாசித்த தமிழ்ப் புனைவுகளில் பெரும்பாலானவை 2000-த்திற்குப் பின் முதல் புத்தகத்தைப் பதிப்பித்த ஆசிரியர்கள் எழுதியது என்பதால் அவற்றுள் சிலதையேனும் இங்கு பேசலாம் என்று தோன்றியது. எனவே…

                      * * *

2. கத்திக்காரன்

யாவரும் ஸ்டாலில் கத்திக்காரன் புத்தகம் எதேச்சையாகத் தென்பட்டது. பதாகை, சொல்வனம் இதழ்களுடன் பல வருடங்களாக தொடர்பில் இருப்பதால் அவற்றில் அவ்வப்போது வெளியாகிய ஶ்ரீதர் நாராயணின் கதைகளை நான் ஏற்கனவே படித்திருந்தேன். நண்பர். நாவல் எழுதப்போவதாக பல வருடங்களாக பயமுறுத்திக் கொண்டிருப்பவர். சோம்பேறி. மொழிவளம் மிக்கவர். ஓடைநீரைப் போல் தெள்ளிய நடை. ஒழுக்கில் எதிர்கொள்ளும் பாறைகளைப் பெயர்க்க முயலாது நளினமாக நனைத்துவிட்டு ஓடிச் செல்லும் நடை. அவரது கத்திக்காரன் தொகுப்பைக் கையிலெடுக்கையில் இந்நினைவுகளே மேலெழும்பி வந்தன. 

புத்தகத்தில் அதே கதைகளைக் கோவையாகப் படித்தது முற்றிலும் வேறு அனுபவமாக இருந்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பென்சில்வேனியாவின் கிழக்கு முனையிலிருக்கும் குவேக்கர்டவுன் நகரத்திற்கு அருகே ஜேஸ்டன்வில் என்ற ஒரு அழகான நடுத்தர நகரம், முற்றிலும் அவரால் கற்பனை செய்யப்பட்ட ஒரு நகரம், இக்கதைகளிலிருந்து திரண்டெழுந்ததே இவ்வாசிப்பில் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அமெரிக்க இலக்கியத்தில் பரவலாகப் பிரவேசிக்கும் சப்-அர்பன் நகரம் (ஜான் சீவர், அப்டைக், ஃப்ரான்சன், ரிச்சர்ட் யேட்ஸ், ரிச்சர்ச் ஃபோர்ட்… இவர்களின் sub-urbia-வை நினைத்துக் கொள்கிறேன்) ஒரு தமிழ்ப் புனைவில் ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாகவும் இயல்பாகவும் கைப்பற்றப்பட்டிருப்பதே என் ஆச்சரியத்திற்கான காரணம் என்று புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் உணர்ந்து கொண்டேன். ஆனால், இந்த அமெரிக்க இலக்கியப் புறநகர்களைப் பற்றி யோசிக்கையில் அவற்றின் தனிமையும் வெறுமையுமே முதலில் நினைவிற்கு வருகின்றன. சீவரின் பிரசித்தி பெற்ற மேற்கோள் வார்த்தைகளில் கூறுவதானால்:

My God, the suburbs! They encircled the city’s boundaries like enemy territory and we thought of them as a loss of privacy, a cesspool of conformity and a life of indescribable dreariness in some split-level village where the place name appeared in the New York Times only when some bored housewife blew off her head with a shotgun. 

ஆனால், ஶ்ரீதரின் ஜேஸ்டன்வில் அப்படியெல்லாம் நம்மைப் பதற்றப்படுத்துவதில்லை, அதில் துப்பாக்கிச் சுடுதலால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் தலைப்பட்டாலும். அம்மாதிரியான சந்தர்ப்பத்திலும் அதில் மனிதத்தின் பிரிதொரு அணுக்கமான புள்ளியில்தான் அவரது கதைகள் தங்களைப் பிணைத்துக் கொள்ள விழைகின்றன. அவையே அவற்றின் பலமும் பலவீனமும் எனலாம். 

தொகுப்பின் தலைப்பைக் கொண்டிருக்கும் கதையின் நகர்ப்புறத்திற்கு ஒரு சர்க்கஸ் வருகிறது. அப்பா தன் நான்கு வயது மகளை அழைத்துச் செல்கிறார். சர்க்கஸிற்கே உரிய ஆரவாரமும் சுவாரசியமும் கதையில் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. சர்க்கஸ் வித்தைகளில் அச்சாரமாக விளங்கும் கத்தி எறியும் வித்தைக்குக் கதை வருகையில் அதன் முடிச்சுக்கான அஸ்திவாரங்கள் நுட்பமாகவும் வெகு இயல்பாகவும் கதையில் புகுத்தப்படுகின்றன. மகளைக் காட்டிலும் தந்தையே, அது ஒரு போதையூட்டும் ஆர்வமாக மாறும் வரையிலும், அதனால் ஈர்க்கப்படுகிறார். திகிரியில் இருத்தப்படும் பெண்ணை நோக்கி எறியப்படும் கத்தி அவளை ஒவ்வொரு முறையும் மயிரிழையில் தப்பும் கலைநேர்த்தி அவரை மிகவுமே கவர்கிறது. இங்கிருந்து தொடங்கி கலைத்திறனுக்காகக் கொடுக்கப்பட வேண்டிய விலை என்ன என்று புள்ளிக்கு நகர்வதில் அம்முடிச்சு அவிழ்கிறது. 

இந்தியாவில் வளர்கையில் அப்பா பள்ளிக்கூடத்திற்கு வந்த நினைவே எனக்கில்லை. அம்மாவாவது ஓரிரு முறை ஸ்போர்ட்ஸ் டே அன்றோ நான் பரிசு வாங்கிய ஆண்டு தினத்தன்றோ பள்ளிக்கூடத்திற்கு வந்திருக்கிறாள். அப்பாவிற்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை. அமெரிக்காவில் மகன் வளர்கையில் நானும் என் மனைவியும் எவ்வளவு முறை அவன் பள்ளிக்கோ அவன் விளையாட்டு பயிற்சிகளுக்க்கோ சென்றிருப்போம் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. அதையும் அவன் நடுநிலைப் பள்ளிக்குச் செல்கையில் அவன் கையில் ஐ-ஃபோன் வந்துவிட்ட பின் அதனால் எங்களுக்கு ஏற்பட்ட பதற்றத்தையும் வானவில் என்ற கதை மீட்டெடுத்தது. தொழில்நுட்பம் நமக்கு நன்றாகப் பழகிவிட்ட போதிலும் பெற்றோர்களாக அதை எதிர்கொள்வதில் நமக்கின்னமும் இருக்கும் தயக்கத்தை இக்கதை நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது, நம் குழந்தைகள் வெகு இயல்பாகவே அதன் பாதகங்களைக் கடந்துவிடுகிறார்கள் என்பதையும். 

பிள்ளைகளுக்கான விளையாட்டுப் பயிற்சிகளைப் பற்றிக் கூறினேன் இல்லையா, அப்படிப்பட்ட, சிறுவர்களுக்கான கால்பந்தாட்டப் பயிற்சி மைதானம் ஒன்று, ஜேஸ்டன்வில்லிலும் இருப்பதை நாம் மைதானத்தின் மத்தியில் ஒரு கொலை என்ற கதை வழியே அறிந்துகொள்கிறோம். திறமை இருக்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் வாரம்தோறும் நிகழும் இப்பயிற்சிகளில் தன்னார்வலக் பயிற்சியாளார்களாக முன்வந்து நம்மையும் குழந்தைகளையும் படுத்துவார்கள். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் அந்த நகரத்தின் விளையாட்டு வரலாற்றுத் தகவல்களைப் புகுத்தி கதை சுவாரசியமாக அமானுஷ்யத்தில் தன்னை முடித்துக் கொள்கிறது. 

ஸாக்கர் மட்டுமல்ல செஸ் மேட்ச் ஒன்றை மையமாக்கும் கதையும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. Insufficient material, underpromotion, najdorf, Ruy Lopez opening என்று செஸ் நுணுக்கங்களை லாகவமாகப் பயன்படுத்தியபடியே கை நழுவிய இராணி கதையை முன்னெடுத்தும் செல்லும் விதம் அலாதியானது. “கருப்பு ராணியை C8ல் கொண்டு வைத்தேன்…. B7லிருந்த வெள்ளை சிப்பாயை முன்னே B8க்கு நகர்த்தி புரமோட் செய்தான்” என்றெல்லாம் ஒரு தமிழ்க் கதையில் கதையுடன் ஒன்றும் விதத்தில் கொண்டுவருவது அவ்வளவு சுலபமல்ல. வெல் டன் ஶ்ரீதர். ராணிக்குப் பதிலாக இராணி என்றெல்லாம் தூய தமிழ் சேட்டை செய்திருந்ததுதான் சற்று நாராசமாக இருந்தது. 

ஓ ஹென்றி கதைகள் என்று இலக்கிய விமர்சனத்தில் முடிவில் திருப்பத்தைப் பொதித்து வைத்திருக்கும் கதைகளை வகைமைப் படுத்துவார்கள். அம்மாதிரியான முடிவை நோக்கிக் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதைகளும் இத்தொகுப்பிலுண்டு. யோகம், தொகுப்பை முடித்து வைக்கும் சிகப்பு நிறப்பை போன்ற கதைகளும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது அதற்கு ஒரு பன்முகத்தன்மையை அளிக்கிறது. அதே போல், ஐன்ஸ்டீன் (ஐன்ஸ்டீனின் வீடு), பாரதி (பாரதி என்னும் பற்றுக் கோடு), காந்தி (பியாரி பாபு) என்று வரலாற்றுப் பிரசித்தி பெற்றோரின் உபரிச் சரிதைத் தகவல்களை அவர்கள் அபிமானிகளின் கதைகளைக் கொண்டு நமக்களிப்பது தொகுப்பிற்கு மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது. 

இப்படிப் பலதரப்பட்ட சுவாரஸ்யான கதைகள் இருப்பினும் அவை எதுவுமே “யானை பிழைத்த வேல்களாக” இல்லை என்று ஆர்வக்கோளாறுமிக்க ஒரு இளம் விமரிசகர் குற்றம்சாட்டக்கூடும். அப்படிப்பட்ட விபரீத ஆசையெல்லாம் ஶ்ரீதருக்குக் கிடையாது என்பதே அதற்குச் சரியான பதில். மாறாக முயல் காதுகளும் (முயல் காதுகள்) எலிக் குஞ்சுகளுமே (ஹிப்போலிடா) அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. இன்று வரையிலும் என் மகனுக்கும் எனக்கும் காலணிகளின் லேஸ்களைச் சரியாகக் கட்டிக்கொள்ளத் தெரியாது. சனியன் எப்போதுமே ஆகாத நேரத்தில் அவிழ்ந்து காலை வாரிவிடும். ஷூலேஸ்களைப் பிணைப்பது போன்ற சின்னச் சின்ன அன்றாடங்களிலும் அழகியல் துளிர்க்கலாம். “அரவிந்தாட்ச மேனன் பேனாவுக்கு மை ஊற்றுவதைப் பார்த்திருக்கிறேன். சவரம் செய்துகொள்வதை, நகம் வெட்டிக் கொள்வதை, வேட்டியைச் சரிவரக் கட்டிக் கொள்வதைக் கவனித்திருக்கிறேன். தாளத்திற்கும் லயத்திற்கும் உள்ள இசைவையே அவரிடம் பார்த்திருக்கிறேன். இவரை ஒத்தவர்களே உண்மையான கலைஞர்கள்” என்ற ஜே.ஜே: சில குறிப்புகளின் பிரபலமான வரி நினைவிற்கு வந்தது. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையில்தான் ஶ்ரீதர் தன் கத்திகளை வீசிப் பார்க்கிறார். அவை பெரும்பாலும் வாசக நெஞ்சங்களில் மயிரிழை பிசகாமல் பாய்ந்துவிடுகின்றன என்பதே அவரது கலையின் வெற்றி. கத்திக்காரர் ஶ்ரீதரே, அந்த நாவலை எழுதி முடியுமய்யா! 

                                     * * *

3. மாபெரும் தாய்

புத்தகக் கண்காட்சியில் யாவரும் ஸ்டாலில் டேரா பொட்டுக் கொண்டிருந்தபோது ஜீவ கரிகாலன் அகரமுதல்வனின் மாபெரும் தாய் சிறுகதைத் தொகுப்பை ரொம்பவுமே சிலாகித்தார். சரி இவ்வளவு புகழ்கிறாரே என்று நானும் அதை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டேன். அண்மையில் அதை வாசித்து முடித்தவுடன்தான் கவனித்தேன் அது யாவரும் பதிப்பக்கத்தில் வந்த புத்தகமல்ல என்று. பதிப்பித்தது ஜீவா பதிப்பகம் என்பதை கண்ணுற்றபோது உடன்நிகழ்வை எண்ணிச் சிரித்துக் கொண்டேன். 

போரையும் இனப்படுகொலையையும் பின்னணியாகக் கொண்டிருக்கும் புத்தகங்களை விமர்சிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. குருதி தோய்ந்த அதன் பக்கங்களை எப்போதுமே சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், என்ன அழகியல் நுணுக்கங்களைக் கொண்டு நொட்டுவது என்ற தார்மிகச் சிக்கல். இந்தத் தயக்கத்தையும் மீறி சில படைப்புகள் அவற்றின் கழிவிரக்கத்தைத் தவிர்த்து கொடூரங்கள் விரவியிருக்கும் சூழலையும் அதில் சிக்குண்டிருக்கும் சாமான்யர்களின் அவலத்தையும், நிரந்தரத் துக்கத்தையும், தோல்வி நிச்சயமென்றாலும் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தையும், அக்கட்டாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அறச் சிக்கல்களையும் உடனடித் தன்மையுடன் கவித்துவத்துமாகக் கைப்பற்றும் விதத்தால் அவற்றின் அழகியலைப் பற்றியும் சிந்திக்க வைக்கின்றன. மாபெரும் தாய் படைப்பு அம்மாதிரிப் படைப்புகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. 

வன்னியில் லண்டனிலிருந்து ஒளி பரப்பாகும் பிபிசி தமிழோசை நிகழ்ச்சியை நித்தியம் கேட்கும் பிபிசி என்ற பட்டப்பெயரிடப்பட்டவன் கேட்ட செய்திகளில் சிலவற்றை ஒரு மரக்கிளையில் அமர்ந்தபடி ஒப்பித்துப் பார்த்துவிட்டு, மூன்றிலுப்பை கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவற்றின் சுருக்கத்தை மீளுரைக்கிறான் என்று சுவாரசியமாகத் தொடங்கும் என்னை மன்னித்துக்கொள் தாவீது என்ற கதையுடன் இத்தொகுப்பு ஆரம்பிப்பது பொருத்தமாகவே இருக்கிறது. ஒரு விதத்தில் பொது ஊடகங்கள் கட்டமைக்கும் ஈழத்தைக் குறித்த கதையாடல்களில் விடுபட்டிருப்பதைக் கண்டெடுக்கத்தானே மாபெரும் தாய் போன்ற தொகுப்புகள் அக்கதையாடல்களில் வரும் சம்பவங்களைக் கலையில் மீளுரைத்துப் பார்க்கின்றன? இத்தொகுப்பில் தொன்மத்தின் உறைவிடமாக விளங்கும் ஆச்சியும் இம்முதல் கதையிலேயே ‘வம்சம் கருகுது காளி” என்று ஒரு கணத்திற்கு ஒப்பாரி வைத்துவிட்டு மறைந்துவிடுகிறாள். மரக்கிளையில் பிபிசி செய்திகளைக் கேட்பதில் தொடங்கி அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பிபிசி அதே தமிழோசை செய்திகளில் கேட்கும் செய்தியால் பதற்றமடைந்து தன்னையே சூலத்தில் குத்தி மாய்த்துக் கொள்ளுகையில் அம்மரக்கிளையுடன் அந்த மாமரமே வேரோடு புயலில் சாய்ந்து வீழ்கிறது என்று விவரிக்கையில் கதை ஒரு முழு வட்டம் வந்துவிடுகிறது. அவ்வட்டத்திற்குள் வன்னியின் ஷேக்ஸ்பியர், தெருக்கூத்து, மேடையில் மரித்துக் கிடக்கும் சமாதானம், இயக்கத்தின் பயிற்சி முகாம்கள், மன்னார் களமுனையின் வீரச்சாவுகள், தாயின் சாமபல்நிறச் சீலையுடனுடனும் ரேடியோவுடன் போர்க்களம் செல்லும் போராளி, நண்பன் கால்கள் இரண்டையும் இழந்திருப்பதைக் கண்ணுற்று காளி கோவிலுக்குச் சென்று குங்குமத்தை பூசிக் கொண்டு அலறும் நண்பன், இப்படி வரலாற்றின் நிதர்சனத்தையும் அதில் சிக்குண்டிருக்கும் தனிமனிதக் கதைகளயும் அகரமுதல்வன் அவ்வட்டத்திற்குள் கொண்டுவந்துவிடுகிறார். புத்தகத்தை ஒரேமூச்சில் என்னைப் படிக்கத் தூண்டிய அபாரமான கதை. 

மாடர்ன் லவ் சென்னை என்ற வெப்சீரீஸில் ஒரு காட்சிவரும். தனக்கு உற்ற ஆதர்சத் துணையைத் தேடும் ஒரு பெண் ஒரு வழியாக எல்லா விதத்திலும் பொருந்திப் போகும் ஒரு ஆடவனைக் கண்டெடுத்த திருப்தியில் திளைத்திருக்கையில் அவன் “நீங்க என்ன ஆளுங்க” என்று அவள் திடுக்கிடும் வகையில் சர்வசாதாரணமாகக் கேட்கிறான். அவளைக் கொன்றவர்கள் கதையில் முன்னொருகாலத்தில் ஈழத்தில் போராளியாக இருந்து தற்போது திருச்சியில் பலகீனமான இதயத்துடன் துணையில்லாமல் பூனைகளுடன் வசித்துவரும் நளாயனிக்கு அவள் நண்பன் துணை தேடித்தர உதவுகிறான். பிரபல தரகர் ஒருவருடன் தொடர்பு கொள்கையில் அவர் “பெம்பிள்ளை என்ன ஆட்கள், “வெ”னாவோ வேறையோ என்று கேட்கிறார். அதற்கவன் “அவா போராளி. கடைசி நாள் மட்டும் சண்டை பிடிச்ச ஆள், நீங்கள் இதைமட்டும் சொல்லுங்கோ” என்று பதிலளிக்கிறான். போரின் அவலம் அனைவரையும் சமன்படுத்திவிட்ட நிலையிலும் சாதி மனிதர்களுக்கு முக்கியமாக இருப்பதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் புலம்பெயர்ந்தவர்களை “நீங்கள் நூற்றாண்டுக்கும் நூற்றாணடு அகதியாகவே அலைவீர்” என்று சபிக்கிறான். கதையில் ஒரு இணைத் திரியாக பூனைகள், அவற்றைக் குறித்த எகிப்தியத் தொன்மங்கள் என்று வந்துகொண்டே இருக்கின்றன. பாரதியின் “வெள்ளை நிறத்தொரு பூனை” வரிகளை நினைத்துக் கொண்டேன். 

“யானை பிழைத்த வேல்” என்று முன்பு கூறினேனில்லயா. அதற்கான பரந்த களம் ஒரு கதையில் அமையுமேயானால் அந்த வேலின் துரிதப் பாயச்சல் வாசகர்க்கு மிக அலாதியான அனுபவமாக அமைந்துவிடும் தருணங்களும் உண்டு. பாலன் கதையில் (என் அனுமானத்தில்) பாலச்சந்திரன் பிரபாகரன் என்ற வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூன்றாவது மகனான பாலச்சந்திரன் பிரபாகரன் தன் பன்னிரெண்டாவது வயதில் இலங்கை ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் (படுகொலை செய்யப்பட்டார்?) என்ற வரலாற்றுத் தகவல் தொன்மமாக்கப்படுகிறது. வரலாற்றில் பாலச்சந்திரன் 2009-ஆம் ஆண்டு கொல்லப்படுகிறான். தொன்மத்தில் அவன் இரண்டு ஆண்டுகள் கழித்து “கிருஸ்துவுக்குப் பிறகான 2011-ம் ஆண்டில்” ஊரில் இரண்டு வயது பாலகனாக, இயேசுபிரான் வடிவத்தில் கதைசொல்லியின் ஊருக்குள் நுழைகிறான். கதைசொல்லியின் தாய் தானே உருவாக்கிய விவிலியத்தை ஒத்திருக்கும் தோத்திரத்தைப் பாலனை நோக்கி ஜெபிக்கிறாள். அதில் தோய்ந்திருக்கும் வலியினூடே மிளிரும் ஹாஸ்யம் அலாதியானது. “கர்த்தாவே திக்கற்ற எங்களின் நிலங்களை அபகரித்துக்கொள்ளும் பொல்லாதவர்களையும் அவர்களின் இராணுவ சேனைகளையும் நாங்கள் கற்கள் கொண்டு வீழ்த்தும் நாட்களில் நீரும் ஜாக்கிரதையாக இரும். ஆண்டவரே அநியாயத்தை உமது அமைதியும் தான் செய்கிறது.” அதேபோல் கதையின் இறுதியில் வரும் இந்த தொத்திரமும்:

“பெத்தலகேமின் பாலகனே உம்மைப் பார்க்கையில் அலறவேண்டுமாற் போலிருக்கிறது.இந்த நாட்டின் குடிகளை உனது எந்தவார்த்தைகளும் சுகப்படுத்தாது என்று நீரே முடிவுபண்ணாதையும்.அந்நிய பாஷையிலேனும் நீர் உரையாடும். ஆமென்!”

கிறித்துவத் தொன்மம் மட்டுமல்ல இலங்கையின் நாட்டாரியல் தொன்மமும், உமையாள் கலிங்கன் வடிவத்தில், கதையில் புகுத்தப்படுகிறது. வரலாறு தொன்மத்தை வீழ்த்துகிறது, புத்துயிர்ப்பிக்கப்பட்ட பாலன்/இயேசு பிரானும் ராணுவத்தால் கொல்லப்படுகிறார், ஆனால், இறுதி வாக்கியத்தில் கதையை முடித்து வைக்கும் இறுதிச் சொல்லாக அன்னை மரியாள் அமைந்திருப்பது அத்தொன்மத்தை மீண்டும் புதுப்பிக்கிறது. 

நெடுநிலத்துள், மாபெரும் தாய் போன்ற கதைகள் இத்தொன்மச் சாத்தியங்களை இன்னமும் விரிவாக வார்த்தெடுக்கின்றன. நெடுநிலத்துள் கதையில் பேரன் பிறந்து வளர்ந்த கதையை பாட்டி அவனிடம் கூறுகையில் அதில் வரும் ஒரு அன்றாடத் தரவாகத் தொடங்கி- (வளவில் ஒரு கிணறு வெட்ட குத்திகன் என்றோருவன் வருகிறான்)- நாகர் வம்சம் என்ற பழங்குடித் தொன்மத்திற்குக் கதை நீள்கிறது- (கிணறு தோண்டப்படுகையில் நாக என்ற அசரீரிக் குரலொலிக்க நந்தி விக்கிரங்கள் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன, இறுதியில் நீர் சுரக்கிறது.) அப்பழங்குடித் தொன்மத்திலிருந்து, கதை வரலாற்றினூடே (குத்திகனின் படைகளுக்கும் புத்தபிட்சுக்களின் படைகளுக்குமிடையே நிகழும் போர், குத்திகனின் படைகள் அழிக்கப்பட நந்திகள் இருந்த இடத்தில் வல்லரசு மரங்கள் தழைக்கத் தொடங்குகின்றன… இத்யாதி) நிகழுக்கு, குத்திகன் வீழ்கையில் அவன் உச்சரிக்கும் உத்திரன் என்ற பெயரைத் தனது பெயராகக் கொண்டிருக்கும் ஒருவன் அப்போரை இலங்கை ராணுவத்துடன் தொடர்வான் என்று நீள்கிறது. வரலாற்றைச் சிறுகதையில் அணுகுவதற்கு இம்மாதிரியான டெலஸ்கோப்பிங் உத்திகள் பொருத்தமாகவே இருக்கின்றன. உக்கிரத்தைக் கூட்டிச் சென்றபடியே “மழையின் கிளைகளின் மீது சுகத்தின் தோகைகள் விரிந்திருந்தன…” என்றும் நந்திக்கடல் நீண்டு பெருத்து பெருமூச்சை எய்தது என்று முடிகையில் நம்முள் ஏற்படும் பெரும் தளர்வே கதையின் வெற்றி. 

முதல் கதையில் நமக்கு கோட்டோவியத்தில் தீற்றப்பட்டது போல் ஒரு கணம் மட்டுமே மின்னி மறையும் ஆச்சி என்ற இத்தொகுப்பின் அடிநாதமாக விளங்கும் ஆகிருதி “பிலாக்கணம் பூக்கும் தாழி” என்ற கதையில் தலை நிறையப் பேனோடு சுருட்டு படித்துக் கொண்டு, பிலை இலைக் கம்பி கொண்டு முற்றத்தைக் கொத்தி கூர்தடம் பதிக்கும் பிலா இலை ஆச்சியாக மாறுவது இத்தொகுப்பின் உச்சங்களில் ஒன்று. அதற்குப்பின் “வானிலை அற்புதமாக இருந்தது” என்று ஆரம்பிக்கும் மாபெரும் தாய் கதையில் ஆச்சியின் ஆகிருதி மேலும் உக்கிரப்படுத்தப் படுகிறது. காலமற்ற தொல்கிழவி அவள் (ஆச்சிக்கு வயசில்ல மூப்பில்ல, பிறக்கும் போதே இபப்டித்தான் பிறந்தவா), மொழிக்கு அப்பால் இருக்கும் அவளது மந்திரங்களும் மர்மங்களும் அவளது விலா எலும்புகளால் அவள் கிராமத்தின் குருதியிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. போரின் நிதர்சனம் கிராமத்தோரைப் பெயர நிர்ப்பந்திக்கையில் ஆச்சி அவர்களுடன் செல்ல மறுக்கிறாள். ஒதிய மரம், அதன் கிளைகளில் அமர்ந்திருக்கும் வால் நீண்ட நாய்கள், மந்திரக்கத்தியைக் கையிலேந்தியபடி அதன் பொந்திற்குள் கால்களை அகற்றி நிர்வாணமாக அமரும் கிழவி என்று படிமங்களால் படிப்படியாக கட்டமைக்கப்படும் ஆச்சியின் ஆகிருதி இறுதியில் மண்ணுக்குள் இருந்தே கண்டெடுத்த மாபெரும் தாயாக உருமாறுகிறது. 

மாபெரும் தாய் புத்தகத்தின் பலமே அது போர்ச்சூழலின்  அனைத்து தார்மிகத் தரப்புகளையும் கரிசனத்தோடு ஏற்றுக்கொள்கிறது என்பதுதான். போர் என்பது வாழ்க்கையிலிருந்து தனிப்பட்டு வரலாற்றுப் பக்கக்களில் மட்டுமே நிகழும் ஒன்றல்ல. வீரம், பற்று, கொடூரம் போன்றவை அது ஆட்டிப்படைக்கும் சூழலில் இயல்பாகவே நிகழ்கையில் துரோகம், காமம், கரிசனம், அன்பு போன்றவையும் அச்சூழலிலும் இயல்பாக, ஏன் சற்று உக்கிர     மாகவே நிகழ்கின்றன. நூலால் தைக்கப்பட்ட யோனிகள் (வீழ்ந்தவர்களின் புரவி) அதன் ஒரு அம்சம் என்றால் பிபிசியும், வான்மலரும், பூனைச்சுமதியும் அதன் மற்றொரு அம்சம் (என்னை மன்னித்துக்கொள் தாவீது, பிரிவுக்குறிப்பு, மன்னிப்பின் ஊடுருவல்.) இவற்றுடன் காதல்… அது மிளிரும் இடங்கள். அச்சூழலின் நிலையாமை என்ற பாறையைப் பிளக்கும் சாக்ஸிஃப்ராஜ் மலராக அது பூக்கிறது. அது பூக்கும் இடங்களில் மொழியும் கவித்துவமாக தன்னை நெகிழ்த்திக் கொள்கிறது. (முத்தத்தின் சுவர்களில் தும்பைப் பூக்கள் மலர்ந்தன. வான்மலரின் கிழங்குநிற உதட்டில் முத்தத்தின் நீரலைகள் கசிந்தன. இருவருக்குள்ளும் வேர்கொண்டிறங்கியது நதி. போதத்தின் தாழி நிறைந்தது…)

எவ்லின் வாவின் பிரசித்திபெற்ற Brideshead Revisited நாவலில் Et in Arcadia ego என்று தலைப்பிடப்பட்ட முதல் அத்தியாயத்தில் சார்ல்ஸ் இருபது ஆண்டுகள் முன்னதாக நண்பன் செபாஸ்டியனுடன் கழித்த ஒரு மதியத்தை நினைவுகூர்கிறான். (cloistral hush என்ற அற்புதமான சொலவடை மட்டும் நினைவிலிருக்கிறது). பிரிவுக் குறிப்பின் தொடக்கத்தை வாசிக்கையில் இது நினைவுக்கு வந்தததால் அலமாரியிலிருந்த அதன் எவ்ரிமேன்ஸ் லைப்ரரி பதிப்பை எடுத்துப் புரட்டினேன், குறிப்பாக இவ்வரிகளை தேடியபடி:

On a sheep-cropped knoll under a clump of elms we ate the strawberries and drank the wine–as Sebastian promised, they were delicious together–and we lit fat, Turkish cigarettes and lay on our backs, Sebastian’s eyes on the leaves above him, mine on his profile, while the blue-grey smoke rose, untroubled by any wind, to the blue-green shadows of foliage, and the sweet scent of the tobacco merged with the sweet summer scents around us and the fumes of the sweet, golden wine seemed to lift us a finger’s breadth above the turf and hold us suspended.

பிரிவுக் குறிப்பின் ஆரம்பம்:

“… ஒரு மதிய நேரத்தில் நானும் உருத்திரனும் மழையில் நனைந்துக்ண்டு புல்வெளியில் படுத்துக்கிடந்தோம்… புற்களிலிருந்து சிதறி எழுகிற பூமியின் வாசத்தை மழை எழுப்பிக்கொண்டே இருந்தது. நாம் படுத்திருக்கும் புல்வெளிக்கு அருகே ஒடிக்கொண்டிருக்கும் வாய்க்காலில்… திரவம் போல நீர் சபத்தத்தோடு ஓடிக்கொண்டிருந்தது…உருத்திரன் மழையைப் போர்வையாக்கி, ஓடும் நீரைப் படுக்கையாக்கி இடியையும் மின்னலையும் சொப்பனமாக்கி நீண்ட நேரமாயிருந்தது என்னுடைய சிந்தனையின் துவாரங்களில் வீசிநுழையும் விரல் போன்ற குளிர்காற்றில் வந்தமர்ந்தாள் வான்மலர்…

இனி ஒருக்காலும் திரும்பவியலாத, நினைவில் மட்டுமே பொற்கணமாக எப்போதுமே மிளிரும் ரொமாண்டிசிஸம் தோய்ந்திருக்கும் காட்சி. ஆனால், அதனிடையில் நமக்காக ஒரு தகவலை அகரமுதல்வன் பொதித்து வைத்திருக்கிறார்.

எம்மிருவரின் துவக்குகளும் பெரியமரமொன்றின் பொந்திற்குள் சாத்திவைக்கப்பட்டிருந்தன.”

ஆதர்ச கணத்திலும் போர் தன்னை இருத்திக் கொள்கிறது. இந்த நுணுக்கம்தான் கதையைக் கலையாக்குகிறது. Ecce Scriptor – இதோ எழுத்தாளன்!

* * *

4. அநாமதேயக் கதைகள்

இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் பெருந்தேவி, போகன் ஆகியோருடன் உலாவிக் கொண்டிருக்கையில் ஒரு “இளம்” எழுத்தாளர் கூட்டம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது. அதில் மயிலனும் இருந்தார் என்று நினைவு. அப்போது நான் அவர் எழுத்துக்களைப் படித்திருக்கவில்லை. அண்மையில் ஏதோ விருது வாங்கியிருக்கிறார் என்று அவர்கள் சம்பாஷணைகளிலிருந்து அறிந்துகொண்டேன். அநாமதேயக் கதைகள் சிறுகதைத் தொகுப்பை அன்று வாங்கி புத்தகப்பையில் போட்டுக் கொண்டேன். சென்ற மாதம்தான் படிக்க வாய்த்தது.

இளைஞர்கள் தங்கள் துறைசார்ந்த அனுபவங்களை எழுதுவது தமிழ்ப் புனைவின் களத்தைச் சுவாரசியமளிக்கும் விதத்தில் விருத்தி செய்திருக்கிறது என்பதற்கு மயிலன் சிறந்த உதாரணம். துறை சார்ந்த அனுபவங்களைப் புனைவாக்குவதில் ஒரு அபாயமும் இருக்கிறது. அறிபுனைவாக இல்லாத பட்சத்தில் (அதற்குமே கூட இது பொருந்தும் என்பது என் கருத்து) துறை சார்ந்த நுட்பங்கள் பேச்சு மொழியில் கதையோடு இசைந்திருக்கும் வகையில் நிறுவப்படவேண்டும். பேச்சு மொழிக்கிடையே ஒட்டவைத்தது போல் இருக்கும் வறண்ட விளக்கங்கள் கதையோட்டத்தைத் தடுத்துவிடும். அவற்றை முற்றிலும் தவிர்க்கவும் முடியாது, கதையின் நம்பகத்தன்மைக்குப் பாதகம் விளைவிக்கும் என்பதால். துறைத் தகவல்களை கதையின் தேவைக்கு மட்டுமே சரியான அளவிற்கு பேச்சு மொழியில் கையாண்டிருப்பதில் இருக்கும் நேர்த்தியே இத்தொகுப்பின் சிறப்பு எனலாம். ஆகுதி, அந்நோன் கதைகள் இதற்குச் சிறந்த உதாரணங்கள். இரண்டுமே மருத்தவமனையைக் களமாகக் கொண்டிருப்பவை. 

பிஜி படிப்பின் ஒரு பகுதியாக ஆஸ்பத்திரியில் கட்டாய டியூட்டி பார்ததாகவேண்டிய நிர்ப்பந்தம் மோஹனாவிற்கு. ஆனால், அளிக்கப் பட்டிருப்பதோ பெரும்பாலும் நோயறிக்கைகளை நிரப்பும் டெஸ்க் வேலை. இப்படி ஜல்லியடித்தபடியே சலித்திருக்கும் அவள் பர்ண்ஸ் வார்ட்டில் பிணவறைக்கும் சிகிச்சையறைக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் ‘ஹன்ரட் பர்சண்ட்’ கேசான காவ்யாவிற்கு ஒரு “கட் டவுன்” போடும் வாய்ப்பே கதையைச் சுவாரசியமாகத் தொடங்கி வைக்கிறது. சின்னச் சின்ன உரையாடற் கீற்றுகளால் பல நுட்பமான அவதானிப்புகள் இயல்பாகவே கடத்தப்படுகின்றன. புத்தக அறிவை மட்டுமே கொண்டிருக்கும் அனுபவமில்லா மாணவிக்கும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற மிதப்பிலிருக்கும் பேராசிரியருக்குமிடையே நிகழும் சம்பாஷணைகள் மிக இயல்பாகவே சூழல் நுணுக்கங்களை நமக்கு அளித்துவிடுகின்றன:

ஃபர்ஸ்ட் டே பேர்ன்ஸ் வார்ட் போஸ்டிங்கா டாக்டர்? ஃபைனல் இயர்ல இங்கெல்லாம் எட்டியே பாத்துருக்கமாட்டீங்களே

சர், சிபிஆர் ஸ்டார்ட் பண்ணவா?’ மோகனா புது பொறுப்பிற்கான ஆர்வத்துடன் முன்வந்தாள்.

ஸீ.. எய்ட்டி பர்சண்ட்டுக்கு மேல இருந்துச்சுன்னா தேவையில்லாம எந்த ஹீரோயிஸமும் பண்ணாதீங்க.. யூஸ் இல்ல’ –

ஆனால், இம்மாதிரி கேளிக்கையான மட்டம்தட்டுதலுடன் முக்கியமான ஹேண்ட்ஸ்-ஆன் மருத்துவக் கற்பித்தலும் நிகழ்கிறது என்பது கதையின் யதார்த்தத்தை பலப்படுத்துகிறது. 

மருத்துவத்துறை இழையுடன் மோஹனா-ராஜூ காதல் இழையும் பிணைக்கப்பட்டிருப்பது கதைக்கு மேலும் சில பரிமாணங்களை அளிக்கிறது. இத்தொகுப்பு நவீன ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை மிக லாகவமாகக் கையாள்கிறது. ஆகுதி கதையும் அதற்கு விதிவிலக்கல்ல. வீட்டிற்கு விருந்திற்காக வந்த உறவுகாரப் பையன் கணினித்துறை சார்ந்த பணியிடத்தில் பெண்களுக்குப் பதவியுயர்வு விஷயத்தில் சலுகைகள் அளிக்கப்படுவதை நொந்துகொண்டதை என்னிடம் தங்கை ஒருமுறை நொந்து கொண்டதை இக்கதையின் ராஜூ 

.. நானும் பொண்ணா இருந்து, கோட் பட்டன் போடாம, நல்லா ரிவீலிங்கா டைட் டாப்ஸ் போட்டு போயி நின்னா எனக்கும் சான்ஸ் கொடுப்பான்..’ 

என்று மோஹனாவிடம் இங்கிதமின்றிக் குறைப்பட்டுக் கொள்வது நினைவுறுத்தியது. பெண்ணைக் குறித்த மனோபாவங்களில் நாம் இன்னமும் வெகுதூரம் செல்லவேண்டியிருப்பதை நினைத்தால் அலுப்பாக இருக்கிறது. 

ராஜூ பேசிய ஒவ்வொரு வார்த்தையும் காதுக்குள் கேட்டது. எத்தனை சந்தோஷமான நாளையும் அவனால் ஒரே நொடியில் ஒன்றுமில்லாமல் செய்துவிட முடிகிறது. அந்த அறிக்கையை அப்படியே விட்டுவிட்டு, எழுந்து, காவ்யாவின் படுக்கைக்குப் போனாள். சலைன் தடையின்றி இறங்கிக் கொண்டிருந்தது. அற்பமேயாயினும் அந்தக் கணத்திற்கான ஆகச்சிறந்த நிவாரணம் அது மட்டும்தான்.

போன்ற இடங்களில் அவ்விரு இழைகள் அபாரமாக இணைகின்றன. ஆனால், ராஜூ பாத்திரத்தை தேய்வழக்காக ஆணாதிக்க மனோபாவம் கொண்டவனாக மட்டுமே சித்தரிக்காது அவனைப் பெண்கள் மீது அவ்வப்போது அக்கறை கொள்பவனாகவும் காட்டுவது உவப்பாக இருந்தது. (பெர்வர்ட்ஸ் சிலர் ஹாஸ்பிடல் சன்னலிலிருந்து அரை நிர்வாணமாகக் கிடத்தப்பட்டிருக்கும் பெண் பேஷண்டுகளைப் படம்பிடிப்பதை அவன் பலமாகக் கண்டிக்கிறான்). மரபும், நம் அன்றாட வாழ்வுகளில் நாம் (பெண்களும் இதில் சேர்த்தி) பெண்களுக்கு வெளிப்படையாகவும் சில சமயம் தன்னுணர்வில்லாமலும் இழைக்கும் சின்னதும் பெரியதுமான அவமானங்களே எக்காலத்திலும் கொழுந்துவிட்டு எரியும், பெண்ணைக் காவுவாங்கும், வேள்வித்தீக்கு ஆகுதியாக அமைகின்றன. நாம் ஒவ்வொருவரும் அவற்றை ஆகுதியென உணரும் தருணங்களில் அத்தீயின் வீர்யம் சற்றே குறைகிறது. அதை முற்றிலும் அணைக்க நமக்கு மேலும் ஒரு நூற்றாண்டு தேவைப்படும் போல.

ஆகுதியில் நாம் எதிர்கொள்ளும் சரடுகள் பிற கதைகளில் வெவ்வேறு களங்களில் ஆராயப்படுகின்றன. முதல் கதையான ஓர் அயல் சமரங்கம் துறைசார்ந்த மாநாடுகளில் வெவ்வேறு நாட்டவர்கள் சந்திக்த்துக்கொள்கையில் தங்கள் அடையாளங்களை அப்பன்னாட்டு வெளியில் நிறுவிக்கொள்வதில் இருக்கும் சிக்கல்களையும், அச்சுயம் மற்றமையை எதிர்கொள்கையில் ஏற்படும் பதற்றத்தையும முதலில் காட்சிப்படுத்திவிட்டு, அப்பதற்றத்தை மறைக்க அது இயல்பாகவே அணிந்துகொள்ளும் தற்காப்புக் கவசத்தையும் அக்கவசம் உந்துவிக்கும் பாவனைகளயும் மீறி நட்பு துளிவதற்கான சாத்தியத்தில் தன்னை முடித்துக் கொள்கிறது. 

அன்நோன் (ஆங்கில unknown) கதையில் (இதுவும் மருத்துவமனையில் நிகழ்கிறது) அநாமதேயர் ஒருவர் மழைபெய்து கொண்டிருக்கும் பின்னிரவொன்றில் அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுவரப்படுறார். சிகிச்சையும் வர்க்கத்தை சார்ந்தே இருக்கிறது என்பதை ஒரு சிறு உரையாடற் கீற்றே நமக்கு தெளிவுபடுத்திவிடுகிறது:

பனியிலிருந்த நர்ஸ், ஸ்ட்ரெச்சரை கடந்தபடி அந்த 108 பணியாளரிடம் கேட்டார், ‘அன்நோனா?”

ஆமா சிஸ்டர்.”

இந்த மழைல எங்கிருந்துதாம்பா இதெல்லாம் புடிக்கிறீங்க

அநாமதேயர் பிழைப்பதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அதற்கான துறைசார்ந்த ப்ரொசீஜரல் கட்டுப்பாடுகளின் அபத்தங்களைக் கதை அபாரமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அனைத்து தடங்கல்களையும் மீறி கிஷோர் என்ற முதுகலை மாணவனொருவன் அவசர சிகிச்சை அளித்தாலும் போஸ்ட் ஆப்பரேடிவ் கேரிலும் வர்க்கம் பல்லை இளித்துக் கொண்டு நிற்கிறது. கிஷோரும் ஆகுதி கதையின் மோஹனாவைப் போல் ஒரு அபத்தமான முட்டுச் சந்தில் வந்து நிற்கிறான். ஆனால், அவனை அங்கு கதை இட்டுவரும் விதமே அதன் வெற்றி. 

பில் ஒரு பெண் தன் இனப்பெருக்க உரிமைகளை பயன்படுத்திக் கொள்வதிலிருக்கும் நடைமுறைச் சிக்கல்களைப் புனைவாக்குகையில் அவளது காதலுனுடன் அவள் கொண்டிருக்கும் உறவையே கேள்விக்கு உட்படுத்துகிறது. உடல் / உடலுறவு சார்ந்த பிற்போக்கான கருத்துகள் இன்னமும் ஸ்திரமாக நம் சமூகத்தில் வேரூன்றிருப்பதை மிக நுட்மாக இக்கதைக் கைப்பற்றுகிறது (“எக்ஸ்ட்ரா லார்ஜ் என்று சொன்னபோது சிரித்த நீலச்சட்டை கிழவனின் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது“; “கல்லாப்பெட்டி முதியவர் அவளது கழுத்தை அளப்பது போல பார்த்தது நினைவில் வந்ததுதாலியைத் தேடுகிறார் என்பது அப்போதே அவளுக்கு கூசியதுபோன்ற இடங்கள்.) நடைமுறைப் பழக்கவழக்கங்கள் அவள்மீது சுமத்தும் சங்கோஜம் கதையின் இறுதிவரையிலும் நீடிக்கிறது.

கடவுள் ஆதாமின் விலா எலும்பிலிருந்து பெண்ணைப் படைத்தார் என்ற ஆகாமத்தின் கூற்றை ஏவாளின் ஆதாம் புரட்டிப் போடுகிறது. இக்கதையில் பெண்ணே ஆணின் சிந்தனையோட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்துகிறாள். அவனும் இதை உணர்ந்திருக்கிறான். இருப்பினும் அவளே கதையின் ஓட்டத்தை தீர்மானிக்கிறாள். “சரி நீ கெளம்பு” என்று அவள் வார்த்தைகளில் கதை முடிவதும் பொருத்தமே. 

ஒளபத்யம் கதையில் கணவன் மனைவியின் மனதிலிருக்கும் தனது பிம்பத்தைக் கட்டுப்படுத்த முயல்கிறான். இதில் ஒரு சொப்பனத்தில் வருவது போல் விவரிக்கப்படும் காட்சிகளில் ஏன் கதையின் மொழி பேச்சு மொழியிலிருந்து விலகி தட்டையாக ஒலிக்க வேண்டும் என்பது இந்த வாசகனுக்குப் பிடிபடவில்லை. ஆனால், இக்கதையில் வரும் “நீ ஒரு போதும் ஒரு பெண்ணைப் புரிந்துகொள்ள துளியளவும் முயற்சிக்கப்போவதில்லை சந்தோஷ்,” என்பதே நம் எல்லோரையும் நோக்கி இத்தொகுப்பு விடுக்கும் அதன் இலக்கு வாசகமாகவும் இருக்கலாம்.

காயலுக்கும் கழிமுகத்திற்கும் நம்மை இட்டுச் செல்லும் ஊடுவெளியில் பெண்ணை வேசியாகத் துய்ப்பதில் எந்தத் தயக்கமும் இல்லாத ஒருவனுக்கு அவள் தன் நண்பனின் மனைவியாக இருப்பது ஏதோ ஒரு விதத்தில் நெருடுகிறது.

ஒற்றைமனை, எக்கழுத்தம் கதைகள் ஜாதியை முடிச்சாகக் கொண்டிருக்கின்றன. ஒற்றைமனையின் ரியல் எஸ்டேட் களமும் அதன் புறநகர் விவரிப்பும், இறுதியில் அதன் ஜாதி முடிச்சிற்குத் திரும்பும் விதமும் அதை இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்றாக ஆக்குகிறது. இங்கு நுட்பமாகச் சுட்டப்படும் ஜாதிப் பிளவு எக்கழுத்தத்தில் அப்பட்டமாகவே பேசப்படுகிறது:

எல்லாவனுக்கும் அடுத்தவன் என்ன சாதின்னு தெரிஞ்சுக்கிறத விட…. இன்னயின்ன சாதி இல்லன்னு முடிவுக்கு வர்றதுதான் முக்கியம்…. மகேந்திரன்லாம் மூக்க வெச்சே சொல்லிருவேன்னு சொல்லுவான்பொண்ணெடுத்த ஊரு, தாத்தா பேரு, கொல தெய்வம்அவ்வளோ ஏன்நீ டப்பாவ தெறக் குறப்ப வர்ற மசாலா வாசன போதும்எதாச்சும் ஒன்னுல புடிபட்ரும்…”

நடையின் சரளமே இத்தொகுப்பின் பலமெனலாம். தொன்மம் தரிசனம் என்றெல்லாம் பெரிதினும் பெரிதைக் கேட்க முயலாது முற்றிலும் நவீன உலகில் கால்பதிந்திருப்பது அதன் மற்றொரு பலம். மருத்துவத் துறை சார்ந்த சம்பவங்களும் பின்னணியும் தமிழ்ப் புனைவில் அரிதானவை. அவை இவ்வளவு தெளிவான நடையில் பதிவாகியிருப்பது இந்த வாசகனை மிகவும் கவர்ந்தது. மயிலனைப் போன்ற துறைசார்ந்தோர் தங்கள் துறையைக் கதைக்களமாக்கி மேலும் மேலும் புனைவெழுத வேண்டும் என்பதும் அவன் ஆசையும்கூட. 

                                * * * 

5. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், திகிரி

போகனிடம் அவர் கவிதைகள் மூலமாகத்தான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். முகநூலில் தும்மினால் கவிதை எழுதுபவர் என்றாலும் தமிழினியில் வெளியாகிய சில கவிதைகளைத்தான் Modern Literature இதழிற்காக மொழிபெயர்த்து அவரிடம் எப்படி இருக்கிறது என்று கேட்டு அனுப்பிவைத்தேன். நன்றாக இருக்கிறது, தொனியின் சாரம் அதிக சேதாரமின்றிக் கடத்தப்பட்டிருக்கிறது என்று குறுஞ்செய்தி அனுப்பினார். அதன்பின் என் பாண்டியாட்டம் புத்தகத்தையும் அவருக்கு அனுப்பினேன். மொழியை இன்னம் இலகுவாக்கிக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இப்படி அவ்வப்போது வாட்ஸாப்பில் தொடர்பில் இருந்தோம். பின்பு இரண்டு வருடங்கள் முன்பு சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் நுழைகையில் அதற்கு வெளியே இருந்த ஒரு மேடையில் ஏதோ கூட்டத்திலிருந்து விலகி வனவாசத்தில் இருப்பது போல் தனியாக அமர்ந்திருந்தார். நான் அருகே சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அன்று முழுவதும் சந்தையில் அவருடன்தான் சுற்றிக் கொண்டிருந்தேன். சென்ற வருடப் புத்தக் கண்காட்சியிலும் இருவரும் சேர்ந்தே உலாவினோம். எவரோ ஒருவர் (பெயர் நினவில்லை) எழுதிய புத்தகத்திற்கு போகனும், “பெரிய” இலக்கியவாதி ஒருவரும் அப்புத்தகத்தைப் படிக்காமலேயே உரையாற்றினார்கள் (அதை வெளிப்படையாகவே அவர்கள் ஒத்துக்கொண்டார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்)

என்னை அவரிடம் முதலில் கவர்ந்தது அவரது அலாதியான நகைச்சுவை உணர்வு. கலையின் மகோன்னதம் குறித்து அவருக்கே கொஞ்சம் சந்தேகமிருக்குமோ, அதை hedge செய்வதற்கே இந்த நகைச்சுவை முகமூடியை அணிகிறாரோ என்று எனக்கு ஒரு சந்தேகமிருந்தது. இந்த மழுப்பு முகமூடியின் பெயர்தான் பாருக்குட்டி. அவளே அவரது மிகப் பிரபலமான புனைவாகவும் இருக்கலாம். மாபெரும் இலக்கிய படைப்பை எழுதி முடித்தபின் இன்னமும் வானம் பிளந்து தேவர்கள் எல்லோரும் பூக்கள் தூவி வாழ்த்தவில்லையே, படைப்பின் போதாமையோ என்று அவரே அச்சந்தேகத்தை நக்கலாக என்னிடம் கூறியது எனது ஊகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. ஆனால், நகைச்சுவையுடன் இயல்பாகவே ஒரு கதை சொல்லும் தொனியும் அவர் பேச்சிலிருந்ததை நான் அடையாளம் கண்டுகொண்டேன். நண்பர்கள் சிலர் அவரது “கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்” சிறுகதைத் தொகுப்பைச் சிலாகித்ததால் அதையும் அதற்குப் பிறகு வெளியாகிய “திகிரி” தொகுப்பையும் வாங்கிப் பையில் போட்டுக் கொண்டேன். 

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் புத்தகத்தை ஆரம்பித்துவைக்கும் கதையான பூ முதலில் ஜெயமோகன் தளத்தில்தான் வந்தது. ஜெயமோகனின் பாதிப்பு வெளிப்படையாகவே புலப்படும் கதை. அப்பாணியில் இப்போது பல இளைஞர்கள் எழுத முற்படுகிறார்கள் என்றாலும் அவர்கள் யாருமே அவரது சிறந்த கதைகளின் பூரணத்துவத்தை இன்னம் எட்டியதாகத் தெரியவில்லை. பூ என்ற போகனின் ஆரம்பகாலக் கதை இதை இவ்வளவு லாகவமாக எட்டியிருப்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. பூ ஒரு பெர்ஃபெக்ட் கதை. அதில் மொழியும், இடமும், நடையும், கதையும் அனைத்துமே அபாரமாக உணர்வோடு கூடி வருகிறது. சீராக எழுதப்பட்டு செவ்வியல்தன்மையை அடையும் கதை என்றும் அதை அடையாளப்படுத்தலாம். கதையின் முடிவில் “தீ பாய்ஞ்ச அம்மன்” என்று பூசாரி விவரிக்கையில், ஒரு ஜிக்சா பசிலின் கடைசி துண்டு எஞ்சியிருக்கும் வெற்று இடத்தில் சரியாகப் பொருந்துகையில் ஏற்படும் பூரணத் திருப்தியை வாசகனால் மறக்க முடியாது. 

ஒரு தாயைப் பற்றிய கதை (கதையும் “அம்மா” என்று வார்த்தையுடன்தான் முடிகிறது) என்பதைக் காட்டிலும் ஒரு மகனின் பார்வையில், ஏன் மற்றவர்களின் பார்வையில் அவள் ஒரு பெண்ணாக எப்படி உருவகிக்கப்பட்டு, இறுதியில் உன்னதமாக்கப்படுகிறாள் என்றும் இக்கதையை வாசித்துப் பார்க்கலாம். சொல்லப்போனால் இந்த “மற்றவர்கள் பார்வையில் பெண்” சரடு போகனின் புனைவுகளில் எப்போதும் ஒடிக்கொண்டே இருக்கிறதோ என்று எனக்கு இவ்விரு தொகுப்புகளைப் படித்துக் கொண்டிருக்கையில் தோன்றியது.(சிறுத்தை நடை என்ற திகரி தொகுப்பில் வரும் ஒரு கதையின் இறுதியில் இரண்டு சிகப்பு ஜோடி கண்கள் கதையின் நாயகியான ஸ்கார்லட்டை அசையாது பார்த்திருக்கின்றன.) அவரது அம்மை பாம்புகளை ஈர்க்கும் நாகலிங்கப் பூவின் வாசமாகவும், மிருகங்கள் கட்டுப்படும் கண்களாகவும், குளிர்ச்சி அளிப்பவளாகவும், கொச்சிப் பிள்ளைகளைப் போல் கையைக் கவட்டைக்குள் விட்டுக்கொண்டு தூங்க வைக்கும் கருவறை அமைதியாகவும், பெரிய புஷ்பமாகவும், தேவ ஸ்த்ரீயாகவும், மனுஷன் காணக்கூடாத சௌந்தர்யமாகவும், தன்னையே எரித்துக் கொள்ளும் கண்ணகியாகவும், தீப்பாஞ்ச அம்மனாகவும் மற்றவர்களின் பார்வைகளில் உருக்கொள்கிறாள். ஒரு விதத்தில் அவள் செந்தில் ஜகன்நாதனின் மழைக்கண் தாயும், அகரமுதல்வனின் மாபெரும் தாயாகிவிட்ட ஆச்சியும், மயிலனின் கருகிய காவ்யாவும்கூட. போர்வையிலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் குழந்தையின் விரல்கள் உவமையும் பர்ன்ஸ் வார்டில் கருத்திருக்கும் உடலையும் அக்கதைகளில் எதிர்கொண்டோம்; இங்கோ 

“அவள் தீக்குளித்த அன்று தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் ஓலைப்பாயில் மீன்பொதி போல சுருட்டி வைக்கப்பட்டிருந்த அவள் உடம்பில் மெட்டி அணிந்த கால்கள் மட்டும் வெளியே நீண்டு கிடந்தது நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.”

கதை முடிகையில் அவள் நாகலிங்கப் பூவாகவும் கோயில் சிற்பமாகவும் கிருஷ்ணனுக்குப் பிரசன்னமாகுகையில் கதையில் வந்த அவளது அத்தனை உருவங்களையும், கரலி ஆற்றின் கரையில் இருக்கும் நாகலிங்க மரத்தின் பின்னணியில், அதன் பச்சை வாசத்துடன், ஒரு உடன்நிகழ்வாக, எப்போதுமே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கனவாக நாம் உணர்கிறோம். 

திகிரி தொகுப்பில் முகம் கதையில் பல்வேறு பெண்களின் முகங்கள் ஒரே ஒருவனின் ‘பார்வையில்” நமக்கு அளிக்கப் படுகிறது. “சப்பாத்துப் பாலத்தின் மீது அமர்ந்துகொண்டு மெதுவாய் ஓடும் தாமிரபரணியில் கால்களை அளைந்துகொண்டு நேராகப் பார்க்கையில் ஓரங்கள் கசிந்து தெரிந்தவள் பக்கப் பார்வையில் மிகப் பிரகாசமாய் துலங்கும்” நூறு வருடங்களுக்கு முன் நிறைகர்ப்பத்தில் செத்துப்போன ஒரு பெண்ணின் முகம், பின் கதைசொல்லியுடன் வேலைபார்க்கும் இலக்கிய ஆர்வமுள்ள அமிலியின் முகமாகவும், அவனது காமுகியான கோமதியின் முகமாகவும், ஒரு கேலிச்சித்திரம் போலிருக்கும் ஒரு க்யூபிஸ்ட் பெண்ணின் முகமாகவும், அவன் தாயின் முகமாகவும், வீனஸாகவும், இறுதியில் அவனது நாக்சல் தோழி தமிழ்செல்வியின் முகமாகவும் கதையில் உருமாறியபடியே செல்கிறது. காட்சிப்படுத்துகையில் மொழி கவிதையை நோக்கிச் செல்லும் இடங்கள் அபாரம். உதாரணமாக:

மகாதேவரின் கோபுரம் நீண்டு மவுனமாய் நதியின் மீது தலைகீழாய்க் கிடந்தது. ஒட்டி நின்ற ஆலமரம் நீரோட்டத்தில் விரல்களை அளைந்துகொண்டிருந்தது. அதன் முனைகளிலிருந்து பனித்துளிகள் ஒரு தேம்பும் சப்தத்துடன் நதிக்குள் சொட்டின. தமிழ்ச்செல்வி தனது சட்டையைக் கழற்றி விட்டு ஜீன்ஸ் பேண்டுடன் ஆற்றுக்குள் இறங்கினாள். நான் நீரோட்டத்தில் அவள் மார்புகள் நதி பறித்துச் சென்றுவிட முயலும் இரண்டு நெய்தல் மலர்கள் போல அசைவதைப் பார்த்தேன்.

இரவின் நிச்சலனத்தில் ஒடும் நீரின் தாள கதி மொழியை வழிநடத்துகிறது. இவ்வனைத்து முகங்களையும் அடுத்தடுத்து எதிர்கொண்டுவிட்டு, வீட்டிற்குச் செல்கையில் கதையின் முடிச்சு தன்னை அவிழ்த்துக் கொள்கிறது சமீபத்தில் பிறந்த அவன் பெண் குழந்தையின் ரூபத்தில். பூ கதையில் வந்தது போல் கண்ணகி, எரிந்துகொண்டிருக்கும் பெண்ணுருவம், தாயின் பிம்பம் என்று இக்கதையிலும் வருகின்றன. பெண்ணை யட்சியாகவும் இசக்கியாகவும் உருவகித்துக்கொள்ளும் ஆணின் மனோபாவம். இறுதியில் வரும் குருவிகளாலான அந்த கலெய்டாஸ்கோப் படிமம் கதையின் மெடா-படிமமாகவும் அமைகிறது. 

இதே பார்வைகள் கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்-ளிலும் தொடர்கிறது. கிருஷ்ணன் கோலம் போடும் உம்மணிச் சேச்சியின் “பரலோகராஜ்யம் முழுவதையும்” மறைக்கும் பின்பாகத்தைக் கடக்கையில் “பைபிளை இன்னமும் இறுக்கமாய்” பற்றிக்கொள்ளும் போதகர் பால்ராஜ் மற்றும் கிருஷ்ணனை நோக்கிப் பாயும் அவள் பொங்கும் ஸ்தனங்களை வர்ணிக்கும் பத்பநாபப் பணிக்கரின் பார்வைகள் என்று இப்பார்வைப் பட்டியல் நீள்கிறது. அவள் பூதகியாகவும் கோபிகையாகவும் அப்பார்வைகளில் உருவகிக்கப்படுகிறாள். ஆனால், அவள் இறுதியில் சடலமாக மீன்களரித்த கண்களோடும், மீன் குஞ்சுகள் வெளிவந்தபடியே இருக்கும் யோனியோடும் வெள்ளத்தில் திரும்புகையில் பணிக்கர் கூறும் வார்த்தைகள் இவ்வனைத்து கதைகளுக்குமே ஒரு கோடாவாகப் பொருந்தும்:

அவளும் சராசரிப் பெண்தான். நாம்தான் அவளைக் காவியப்படுத்திவிட்டோம்

நாகப் படம் கதையில் இந்த “பார்வை” ஒரு சமனப்படுத்தும் அல்லது சாந்தப்படுத்தும் சிகிச்சையாக முன்வைக்கப்படுகிறது. விவிலியம், கிரேக்கம் என்று வெகு திரிதமாக சுற்றிவிட்டு, கடவுள் மனிதனை மட்டுமே அவரது சாயலில் படைத்தார் என்றும் அதை ஓவியர்களும் சிற்பிகளுமே அறிந்திருக்கிறார்கள் என்ற கருத்திற்கும் தாவுகிறது. அதாவது கலை என்பதே பார்வையை மனித உடல்களில் இறைமையை இனங்கண்டுகொள்ளப் பழக்கிக்கொள்வது போல. 

“கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ தொகுப்பில் குதிரைவட்டம் என்று ஒரு கதை. கதை என்பதைக் காட்டிலும் மனநிலையின் தொனியை ஒரு மூடை (mood) காட்சிப்படுத்தும் முயற்சி எனலாம், மழையால் தீட்டப்பட்ட ஓர் ஓவியத்தைப் போல் கதை விரிகிறது. சிங்கமாசத்து மழைக் குளிர், போய் போய் வரும் மின்சாரம், ஆன்மாவில் தனிமையாக இருக்கும் ஒருவனின் “பார்வையில்” இந்த மூட் வாசகனுக்குக் காட்சிப்படுத்தப்படுகிறது. முகம் கதையில் நம்மைப் பரவசித்த அதே தாமிரபரணியின் மடிக்கரை, யாருமற்ற படித்துறை, மகாதேவர் அம்பலத்தின் தேவ மௌனம்…இறங்கிக் குளிக்கையில் படித்துறையில் “மாரோடு ஒட்டிய பாவடையைப் பிடித்தவாறு  ” ஒரு பெண் நடுங்கியவாறே குளிக்க வருகிறாள். இருவரும் குளிக்கிறார்கள். கொட்டிக் குமுறும் வானத்தில் நிறம் மாறும் மின்னல் அவர்களுக்கான பிரத்தியேகமான தரிசனம் ஒன்றைக் காட்டிவிட்டு மறைகிறது, மொழியின் அழகில் இறைமை பிரசன்னமாவதே கதை. எஸ்ரா பவுண்டின் Religio படைப்பின் சில வரிகள் என்னுள் மின்னி மறைந்தன:

...In what manner do gods appear?
Formed and formlessly.
To what do they appear when formed?
To the sense of vision.
And when formless?
To the sense of knowledge.
May they when formed appear to anything save the sense of vision?
We may gain a sense of their presence as if they were standing behind us.

கதையின் முடிவில் கதைசொல்லி அம்மன் கோவிலைக் கடக்கையில் ஒரு நிழல் அவனைக் கடந்து செல்வதோடு கதை முடிகிறது. 

ரொபெர்ட்டோ கலாஸ்ஸோவின் ஒரு புத்தகம் இப்படி தொடங்குகிறது:

The gods are fugitive guests of literature. They cross it with the trail of their names and are soon gone. Every time the writer sets down a word, he must fight to win them back.

போகனும் இதைத்தான் இத்தொகுப்புகளில் செய்து பார்த்திருக்கிறார் போல! கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பு “காலை நடை செல்லும் முன்பு…” என்று குறிப்புடன் தொடங்குகிறது. நான் அந்தக் காலை நடையைச் சற்று யோசித்துப் பார்க்கிறேன். அதில் அவரைக் கடக்கும் இறைமையின் நிழலையும். ஜெயமோகனின் காதலி கதையில் வரும் இவ்வார்த்தைகளாலான பாருக்குட்டியின் ஃபோன் அழைப்பையும்:

பராக்கு பார்த்துட்டு எங்கியாவது வயக்காட்டுக்கு நடுவில நின்னுகிட்டு, பாப்பா… எனக்கு வழி தெரியலைன்னு போனடிச்சா நான் வரமாட்டேன்.

———————

நம்பி கிருஷ்ணன், ஜூலை 2023

மூலநூல்கள் / மேலும் படிக்க: 

  • ஜெகன்நாதன், செந்தில்,  மழைக்கண் , வம்சி, 2002
  • நாராயணன், ஶ்ரீதர்,  கத்திக்காரன், பதாகை / யாவரும், 2019
  • அகரமுதல்வன்,  மாபெரும் தாய்ஜீவா படைப்பகம்,  2022
  • சின்னப்பன், மயிலன் ஜி,  அநாமதேயக் கதைகள், தமிழினி,  2021
  • சங்கர், போகன், கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், கிழக்கு, 2017
  • சங்கர், போகன், திகிரி, தமிழினி,  2018

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.