வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்

மே 1974இல் தலைஞாயிறு இலக்கிய அமைப்பு பதிப்பித்த, 32 கவிஞர்களின் 42 கவிதைகளை உள்ளடக்கிய ‘நாற்றங்கால்’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த வண்ணதாசனின் (கல்யாண்ஜி) இரண்டு கவிதைகளில், ‘குரங்கின் குரங்குகளால் குரங்குகளுக்காக‘ என்கிற தலைப்பில் வெளியான கவிதை இது.  

பயத்துடன் விடியும் காலை
குரங்குகள் வருமோ என்று
மதில் சுவர் ஓரம் ஒன்று
தொழுவத்து ஓட்டில் ஒன்று
முருங்கையில் ஊஞ்சலாடி
ஒடிந்ததும் ஓடும் ஒன்று
வயிற்றினில் பிள்ளையேந்தி
சூலுற்ற குரங்கின் பின்னால்
கவனமாய்க் காவல் போகும்
கிழடான ஆண் குரங்கு
பப்பாளிப் பழம் கடிக்கும்
காக்கைகள் சத்தம் போட
கண்ணாடி கண்மை டப்பி
சிணுக்கோரி ஜன்னலோரச்
சாந்தெல்லாம் ஒளிந்து கொள்ள
தங்கரளிப் பூக்கள் மட்டும்
எதிர்பார்க்கும் தேன் குடிக்க.

ஓர் நிராதரவான மனநிலையில், 1985இன் இறுதியில் வாசிக்கத் தொடங்கிய தருணத்தில், என்னுடைய முதல் வாசிப்பாக இருந்த இக்கவிதையே பின்னாட்களில் அவரது படைப்புகளின் தொடர் வாசகனாக முன்னிறுத்திக் கொள்ள வைத்தது. முற்காலத்தில் அவரது கவிதைகளின் வாசகனாக நானிருந்தாலும், பின் தொடர்ந்த காலங்களில் அவரது சிறுகதைகளின் மீதான லயிப்பிலேயே உறையத் தொடங்கியிருந்தேன். அவரது பெரும்பாலான கதைகளில் வருகின்ற உரைநடைத் தொனிகள், என் உள்ளத்தில் மெல்லிய உரையாடல்களாக ஒலிக்கத் தொடங்கிவிடுவதுண்டு. காட்சிகள் புனையப்படாமல், அதன் போக்கிற்கேற்ப, யதார்த்தமான, கவித்துவமான சொல்லாடல்களாக சற்றே நீண்டிருக்கின்ற அவரது கதைகள், பெருவாழ்வின் பிணக்குகளில் என்னை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. ஆறேழு பக்க அளவுள்ள சிறுகதையை, அதன் ஆரம்பத்திலோ, இடையிலோ அல்லது இறுதியிலோ வருகின்ற பத்து, பதினைந்து சொற்களை கொண்ட சில வரிகள் மொத்தக் கதையையும் சுமந்து கொண்டு என் மனத்தில் ஓர் அழியாச் சித்திரத்தை வரைந்து விட்டிருக்கின்றன.

மார்ச் 1972, ‘தீப’த்தில் வெளியான அவரது ‘பாம்பின் கால்கள்‘ சிறுகதையின் ஆரம்ப வரியான ‘பொழுது சரசரவென்று போய்விட்டது’ என்பதனை வாசிக்கின்ற போது என்னுள் ஒர் சர்ப்பம் ஊரத் தொடங்கியிருந்தது.  அதே போல, ‘ஞாபகம்’    (தீபம், டிசம்பர் 1975) சிறுகதையில், ‘பித்தளை டிரம் குழாயிலிருந்து டம்ளரில் பிடிக்கும் தண்ணீரைக்கூட திரித்திரியாகக் களகளக்கிற தண்ணீர்’ என்று எழுதியிருப்பார். இப்படியாக நிறைய வரிகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ‘சிநேகிதத்துக்கு எப்போதும் ஒரே பல்வரிசை தானே’ (சிநேகிதியும், சிநேகிதர்களும் – உதயம் 29-08-1990), ‘குடத்தை இறக்கியதும் கையைக் கழுவிவிட்டு இரண்டு வாய்த் தண்ணீர் குடிக்க வேண்டும் போல அவளுக்குத் தொண்டையெல்லாம் எரிந்தது’ (சில நிமிர்வுகள், சில குனிவுகள் – அஃக், ஜுலை 1972), ‘உங்க வீட்டு மச்சுல ஒரு நிலைக்கண்ணாடி இருந்துச்சே, அது இன்னமும் இருக்காக்கா’ (ஒரு நிலைக்கண்ணாடி, சில இடவல மாற்றங்கள் – ஆனந்த விகடன் 1999), ‘ மீசையில் பதுங்கியிருந்த நரைமுடிகள் எல்லாம் பளிச்சென்று முன்னால் வந்து முகத்தின் சாயலையே வேறுவிதமாகக் காட்டுவது போல் இருந்தது’ (மாறுதல் – தாமரை பொங்கல் மலர் – ஜனவரி – பிப்ரவரி 1997), ‘வாசல் தூண்கள் கார்த்திகை தினத்து இருட்டுக்கென்று வருடம் பூராவும் ஒரு அழகை ஒளித்து வைத்திருக்குமோ என்னமோ’ (ஆறாவது விரல் – தமிழன் எக்ஸ்பிரஸ் பொங்கல் மலர் – 1997) ஆகிய வரிகள் வாசிப்பதற்கு எளியனவாக இருந்தாலும், அவைகள் தந்த பாதிப்பு தனித்துவமானவை.

ஆனந்த விகடன் பவளவிழா ஆண்டில் வெளியான முத்திரைக் கவிதையொன்றிற்கு அவர் வைத்திருந்த ‘இருந்தவை … தொலைந்தவை..’ என்கிற தலைப்பான அந்த இரு கவிச்சொற்களின் மீது எனக்கு அத்தனை லயிப்புண்டு .  ஒரு கட்டத்தில் இந்த கவிச்சொற்களை நான் என் அன்றாட வாழ்வில் கடந்து செல்கின்ற விஷயங்களோடு சம்பந்தப்படுத்திக் கொண்டுவிட்டேன். திருநெல்வேலி  ஈரடுக்கு மேம்பாலத்தில்  போகிற போதும், திரும்பி வருகிற போதும் கண்ணில் படுகின்ற  ‘பாலஸ் டி வேல்ஸ்’ தியேட்டர்  இடிக்கப்பட்டு வெட்டவெளியாகிப் போன அந்த வெற்றிடத்தைப் பார்க்கும்  போதெல்லாம் ‘இருந்தவை.. தொலைந்தவை..’  எனும் கவிச்சொற்கள் என்னுள் அனிச்சையாக ஒலிக்கத் தொடங்கிவிடும்.  அதுபோல,  2000இல் தூத்துக்குடியில் பணியாற்றிய சமயத்தில், அவரது ‘ஆறாவது விரல்‘ (தமிழன் எக்ஸ்பிரஸ் பொங்கல் மலர் – 1997) சிறுகதை ஏற்படுத்திய பாதிப்பனுபவத்தில், அக்கதையில் வருகின்ற மணல் தெருவிற்கு அடிக்கடி செல்வதுண்டு. எத்தனை முறை சென்ற போதிலும், அத்தனை முறையும் என்னுள் படிமமாக உறைந்து போயிருந்த அக்கதையின் காட்சிகள் அங்கு உயிர் பெற்ற அனுபவம் அலாதியாக இருந்தது.

வண்ணதாசனின் முதல் கதையான ‘ஏழையின் கண்ணீர்‘, கே.டி.கோசல்ராமின்  ‘புதுமை’யில் ஏப்ரல் 1962இல் வெளிவந்தது. அவரது முதல் சிறுகதை தொகுப்பான ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்‘ 1976 பிப்ரவரியில் வெளிவந்தது. இத்தொகுதியினை வடிவமைத்து, ‘பிருந்தாவனம் பிரிண்டர்ஸ்’ மூலமாக அச்சிட்டு வெளியிட்டவர் சேலம் ‘அஃக்’ பரந்தாமன். சிறந்த அச்சுக்காகவும், வெளியீட்டுக்காகவும் இந்நூலுக்கு இரண்டு விருதுகள் ‘அஃக்’க்கு கிடைத்தன. இந்நூலினை ‘பெற்ற வல்லிக்கண்ணனுக்கும், வளர்க்கிற நா.பார்த்தசாரதிக்கும்’ என்கிற அடைமொழியோடு அவர் சமர்ப்பித்திருந்தார். இந்நூலின் இறுதியில் வெளியாகியுள்ள பரந்தாமனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதமும், வண்ணதாசனுக்கு பரந்தாமன் எழுதிய கடிதமும், இத்தொகுப்பு பெற்றிருக்கின்ற முக்கியத்துவத்திற்கு இணையானது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 15 கதைகளில், 7 கதைகள் ‘தீப’த்தில் வெளியானவை. இச்சிறுகதை தொகுப்பு குறித்து ‘தீபம்’ பிப்ரவரி 1977 இதழில் ‘எனது குறிப்பேடு’ பகுதியில் நா.பா. இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

‘எப்போது வரப் போகிறது, எப்போது வரப் போகிறது என்று இலக்கியத் தரமான தமிழ் வாசகர்களால் ஆவலோடு கேட்கப்பட்ட வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ சிறுகதைத் தொகுதி வெளிவந்துவிட்டது. மணிமணியான ஒரு டஜன் கதைகளுக்கு மேல் இருக்கும் இத்தொகுதியில் பல கதைகள் ‘தீபம்’ வாசகர்கள் ஏற்கனவே படித்தவைதான். புத்தாண்டில் இலக்கிய தரமான ஓர் அரிய சிறுகதைத் தொகுதியைத் தமிழ் வாசகர்கள் பெறுகிறார்கள். இலக்கியச் சிந்தனை பரிசுபெற்ற எழுத்தாளர் எழுதிய சிறுகதைகளின் தொகுதியான ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ – நிலைக்கக்கூடிய தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகளின் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டிய ஒன்றாகும்..’

ஓர் வாசகனாக நானறிந்த வரையில், 1962 முதல் அவரது முதல் தொகுதி வெளியான 1976 வரையில், அவரெழுதியுள்ள கதைகள் முப்பதைத் தாண்டும். முதற்தொகுதியில் இடம்பெற்ற 15 கதைகள் தவிர்த்து, இதர கதைகளான

  • ஏழையின் கண்ணீர் (புதுமை – ஏப்ரல் 1962),
  • கண்ணீரும் கதை சொல்லும் (புதுமை -மார்ச் 1963),
  • மகனே பொய் சொல்லாதே (புதுமை-1964),
  • ஞானம் (தீபம் – ஜனவரி 1966),
  • அது (தீபம் – ஜனவரி 1967),
  • இறகுகள் எரியவோ (தீபம் – ஏப்ரல் 1967),
  • முடிவே இல்லை (தீபம், ஜுன் 1967),
  • கங்கா (கண்ணதாசன் – செப்டம்பர் 1969),
  • ஒரு ஃப்ரேம், ஒரு போஸ், ஒரு க்ளிக் (பொருநை – அக்டோபர் 1969),
  • ஒரு மழை நேரத்தின் எண்ண ஓட்டம் (சிவாஜி தீபாவளி மலர் 1971)
  • தீப்பிடித்த நோட்டுக்கள் (மாலை முரசு – 28-10-1972),
  • மூட்டை தூக்கி (கண்ணகி – 1974),
  • சுழற்சியை சொல்லும் ஆரக்கால்கள் (சுதேசமித்திரன் தீபாவளி மலர் – 1974),
  • துக்கம் (பிரக்ஞை – நவம்பர் 1975),
  • மறுபடியும் கிளிகள் (குங்குமம் – 1976)

ஆகிய கதைகள் அவரது கதைத் தொகுதிகள் வாயிலாக இந்நாள் வரையில் நூல் வடிவம் பெறவில்லை என்ற போதிலும், ‘கங்கா’ கதைக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு.  அவர் எழுதத் தொடங்கி ஏழு வருடங்களுக்குப் பிறகு, அவரது 22வது வயதில் ‘கண்ணதாசன் – செப்டம்பர் 1969’ இதழில் வெளியான இக்கதையினை ‘கங்கா’வைப் படிக்கும் முன்’ என்கிற 20-06-1969 தேதியிட்ட கடித வடிவிலான ஒரு சிறுமுன்னுரையோடே அவர் தொடங்குகிறார்.

“இதை எழுதுகிற எனக்கு என்ன வயதிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இருபத்தி இரண்டும் சில்லரையும்தான். ஒரு இருளான பெண்ணின் நாக்குப் பரப்பில் ஒரு கதையை எழுதிவிட வேண்டுமென்று அனுபவமுள்ள சாமர்த்தியன் போல், ஆசைப்படுகிற கன்னி இருபத்தி இரண்டும், சில கிழிந்து போன ‘மந்த்லி காலண்டர் ஷீட்’களும்தான். குறைந்த பட்ச முன் அனுபவங்கள் இல்லாவிட்டாலும் அப்படிக் கேட்கிற வேலைகளுக்கு மனுப் போடுகிற, ஆங்கிலத்தாள்களின் இரண்டாம் பக்கத்தை மேய்கிற இளைஞனின் குறும்போடுதான் இதை எழுதுகிறேன்.

‘கங்கா’ என்ற இந்தக் கதை என்னுடைய சென்ற வருட விருதுநகர் வாழ்க்கையில் எழுந்த கதை. மொழிக்கான போராட்டங்கள் முடிந்து எவ்வளவோ காலமான பின்னும் – விருதை ரயில்நிலைய மாடியில் – ஒரு தூணில் மிகவும் மலிவான கொச்சையில் ‘இந்திராகாந்தி’யைப் பெண்டாளக் கூப்பிட்டிருந்த ஒரு மனத்தின் கறுப்பை அழிக்காமல் விட்டிருந்ததைக் கண்டு எழுந்த பொறுமல் இது.  ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்ற தலைப்பில் அங்கே பேசிய ஜெயகாந்தன் கூட இதே குமுறலை வெளிக்காட்டினார் தமது பேச்சில். அந்தக் கனலில் மூட்டிய வேள்வித் தீ இது. வேள்வித் தீயென்ன வேள்வித் தீ? அவிரும் ஆகுதியும் ஏன் இங்கே? இது தீயாக எழுந்து, அப்படி எழுதினவன் கையை – எழுதினதை அழிக்காமல் விட்டு வைத்திருந்த கைகளை – ஒரு தடவை அருவமாய்ச் சுடுமென்றால் அது தீயாக இருப்பதே எனக்குச் சம்மதம்..”

ஒரு மலினமான வேசியைச் சுற்றிப் பின்னப்பட்ட இக்கதை, ஒரு நியாயமான போராட்டத்தின் குழப்பலான முனைப்பில், நரம்பு புடைக்கிற கோஷத்தில் வெளிவராமல், கரிக்கோடுகளாய் நெளிந்திருந்த ஏதோ ஓர் மனதின் வக்கரிப்பினுடைய அறுக்கிற மெளனம், சகிக்க முடியாத ஒரு நீண்டகாலத்திற்கு அப்புறப்படுத்தப்படாமல் மல்லாந்து நெளிந்து கிடக்கிற கிழட்டுமாட்டின் செருகிய நீலக்கண்களில் எழுதியிருக்கிற சாவின் அருவறுப்பைப்போல, ரயில் நிலையத்தின் இயல்பான சந்தடிக்குமேல், சோம்புப்பட்டை பெருஞ்சீரகத்தின் மாமிச வாடைக்கு நடுவில் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த எழுத்துக்களின் ஆபாசம், அதை அழிக்காமல் விட்டுவைத்திருக்கிற பொறுப்புள்ள பார்வைகளின் அலட்சியத்தை, ஒரு இளைஞனாக தட்டிக் கேட்க எண்ணி, அந்த எண்ணம் அவரது குரலின் அதிர்வுக்கு அப்பாற்பட்ட கனமாய்ப்பட்டதால் அதையே கேட்பதற்காகப் பிறப்பித்திருக்கிற, கொஞ்சம் பிரசங்கபாவம் காட்டுகிற, ஒரு மாறுபட்ட யதார்த்தமுள்ள இருட்டில் வாழ்கிற பெண் என இரண்டு கல்லுக்கு ஒருமாங்காயாக இக்கதையை அவர் படைத்திருக்கிறார். 

எவனையோ கூப்பிட்டாள்..’ என கதையின் நாயகியை போலீஸ்காரர்கள் இருவர் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள். தபால் தந்தி அலுவலகம் தன் புத்தம் புதிய கட்டிடங்களை, தார்பூசிய சிவப்பு எழுத்து போர்டுகளோடு நிமிர்ந்து நிற்கிறது. அவளுக்குள் ஏதோ மகுடி அடிக்க, ஆட்சேபத்திற்குரிய அந்த வார்த்தைகளை முதல் முறையாகப் படிக்கிறாள். உதடுகள் சேர்வதற்குள் ‘டக் டக்’கென்று தரையில் மோதிப் போகிற பூட்ஸ் கால்களைக் கூப்பிட்டு நிறுத்துகிறாள். “அந்தப் போஸ்ட் ஆபீஸ் சுவரில் என்ன எழுதியிருக்குது தெரியுதா?” என்று அவள் கேட்கிறாள். அவளுடைய இந்தக் கேள்வியைத் தொடர்ந்து, போலீஸ்காரார்களின் பார்வை, தூரத்து டீக்கடைகாரரின் இரண்டு கண்ணாடித் தம்ளருக்கும் இடையே விழுதாய் பாலம் போடுகிற டீயிலிருந்து கிளம்பி, சுவையற்ற தபாலாபீஸின் மூன்றாவது ஜன்னலருகே நழுவி நிலைத்து ‘இந்திராகாந்தியை..’ என மெளனமாய் முணுமுணுத்து, வெற்றிலைக் காவியேறிய கோரைப்பல் வரை தெரிகிற ஒரு நியமமற்ற பொழிசல் சிரிப்பாய் மரத்துப் போய் முடிகிறது. 

‘சிரிப்பா..? கர்மமே! இதைப் படிக்கும் போது தொப்பியைக் கழட்டி வச்சுட்டு வீட்டைப் பார்க்கப் போகணும்னு தோணலியா..? ஆயிரமாயிரம் பேர் வந்து போகிற இந்த இடத்தில் தேசத்தோட மானமே போறாப் போல எழுதி வெச்சிருக்கு. பார்ப்பாரில்லை. அழிப்பாரில்லை…’ எனக் கேட்டுவிட்டு அவள் மேலும் தொடர்கிறாள்.

‘எவனையோ கூப்பிட்டேன்னு என்னை இழுத்துட்டு வர்றீங்களே, தோ பாரு, நோட்டீஸ் விட்டமாதிரி ‘இந்திராகாந்தியை……..ன்னு எழுதிக் கூப்பிட்டிருக்கான் எந்த முண்டமோ? என்ன கழிசடையாய் கேவலமாய் எழுதியிருக்கான்.  அதுவும் எப்போ? ஒரு பாஷைக்காக நடக்கிற போராட்டத்திலேயா? இதுதான் நீ பாஷையை உபயோகிக்கிற லட்சணம்ன்னா இந்தப் பாஷைக்காக ஒரு போராட்டமாக்கும்..? அதைக் கழுவி அழிக்கிறதுக்கு இந்த ஆறேழு மாசமா ஒங்க போலீஸ் ஸ்டேஷனில் ஆளில்லையா.? இல்லே, இதையெல்லாம் அழிக்கிறதுக்கு ஒரு போலீஸ்காரன்தான் வரணுமா? ஒரு மனுஷன்… சூடு சொரணையுள்ள ஒரு மனுஷன் பத்தாது..? மனுஷனுக்குமா பஞ்சம் வந்துபோச்சு இந்த மகராஜன் தேசத்துல..’ என்கிறாள்.

கதையின் முடிவில் அவளது பார்வை உலகத்தின் அழுக்குகளை தன் முதுகில் சுமந்து செல்கிற சாக்கடையில் நிலைத்து நிற்கிறது. ‘அந்தக் கண்றாவியை அழிக்கிற வரை என்னை அழைத்துப் போறதுக்கு யாருக்கும் யோக்கியதை இல்லை. உங்களால முடியாதுன்னா ஒதுங்கிக்குங்க.. அதை அழிக்கிறதுக்கு இதோ ஓடிக்கிட்டிருக்கிற சாக்கடைத் தண்ணியும் ரெண்டு கையும் போதும். எல்லாத்தையும்விட இது சுத்தம் தான்..’ என்கிற அவளது கேள்வியோடு கதை முடிகிறது.              

‘கங்கா’ கதைக்கான முன்னுரையில் அவர் குறிப்பிட்டிருப்பதைப் போல, அக்காலக்கிரமத்தில் (1969இல்) இந்தக் கதையினை ‘கண்ணதாசன்’ இதழ் வெளியிட்டிருப்பது முற்றிலுமாக ஒரு இலக்கியக் கடமை தான்.  

கங்காவைப் போலவே, மற்றொரு  பூரணத்துவமான கதைகளில் ஒன்று, ‘பிரக்ஞை – நவம்பர் 1975’ இதழில் வெளிவந்த ‘துக்கம்‘ சிறுகதை. ஒரு சிறுகதையின் பரிபூரணம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணம் இச்சிறுகதை. நண்பனின் பார்வை வழி இக்கதை விரிகிறது. கப்பென்று மனதில் துக்கம் கண்டு கண்டாக அடைக்க, அப்பாவின் மறைவிற்கு வெளியூரிலிருந்து பயணித்து வந்தவனின் மனநிலையை கதை இப்படி பிரதிபலிக்கிறது. 

“நேற்றிலிருந்து அவன் வரவேண்டும் என்று காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் கரைந்து ஒரு மெளனத்திற்கு வந்திருந்த சோகம் அவன் வந்த போது மறுபடி வெடித்திருக்கும். தந்தி கிடைத்து, கிடைத்த நேரத்திலிருந்து பஸ்கள் மாறி, ஒரு பஸ்ஸிலிருந்து இன்னொரு பஸ்ஸிற்குக் காத்திருக்கிற கணங்கள் சகிக்க முடியாததாகி, இறந்து போன அப்பாவின் முகம் மனதுக்குள் புரள அவன் வந்த இருட்டு எவ்வளவு கனமாக இருந்திருக்கும்.

அவன் நிமிராமலே இருந்தான். ஆற்று மணலில் விரலால் கிண்டுவது போல் வெறும் தரையில் கீறிக் கொண்டிருந்தான். திடீரென்று அவன் என்ன எழுதியிருப்பான் என்று தோன்றியது. எல்லாக் கவிதைகளிலும் அவன் இடையறாது உச்சரிக்கிற அவளுடைய பெயரைத் தான் அப்போதும் எழுதியிருப்பான் என்று தோன்றியது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவனுக்கு அந்தப் பெயர் எழுதத் தோன்றுமா ? அல்லது வந்திருக்கிற என் பெயரை, கிட்டுவை, கணபதியை, ராஜுவை எழுதிப் பார்ப்பானா? இல்லை இறந்துவிட்ட அப்பா பெயரையா ? கொஞ்சம் கொஞ்சமாக மனம் விலகி விலகி ஒரு நிசப்தத்தில் நின்று கொண்டிருந்தது.”

துக்க வீட்டின் வெறுமையை பிரதிபலிக்கின்றன  கதையின்  இடையில் வருகிற மேல் துண்டு போட்டு மனிதர் மற்றும் மனம் பிசகிய சிறுவன் குறித்த விவரணைகள், ரணங்களின் பூச்செண்டுகளாக இருக்கின்றன. 2012இல் அவரது நண்பர் பரமன் காலமான சமயத்தில் இக்கதையினை அவருக்கு நான் அனுப்பித்தர,   அதனை கீழ்க்கண்ட முன்னூட்டத்தோடு அவரது சமவெளி வலைப்பக்கத்தில் அப்போது பதிவேற்றியிருந்தார்.

“பிரக்ஞை அல்லது கசடதபற இதழ்கள் ஒன்றில் எப்போதோ வெளிவந்த கதை இது.  எழுபதுகளின் மத்தி அல்லது கடைசியில் அச்சான இக்கதையை, பிரபஞ்சன் எதிர்மறையாக விமர்சித்து, அடுத்த இதழில் எழுதியிருந்தார். போகப் போக நேர்மறை எதிர்மறை எல்லாம் பழகிப் போயிற்று. எழுதுகிறவனுக்கு அந்தக் கணக்கெல்லாம் அவசியமில்லை என்பதுதான் நிஜம். இதை திருநெல்வேலி வானொலியில் வாசித்திருக்கிறேன் என ஞாபகம். ஒலி காற்றில் பரவும் ஒன்றுதானே.  விதையும் காற்றில் பரவும். இந்த முற்றிய வெயிலில், எருக்கல விதை போல மினுங்கி இந்த ‘துக்கம்’ கதை பரவிக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.  இந்த அணுவைப் பிளந்த நொடியில், உங்களில் யாரேனும் ஒரு இறகு, ஒரு சருகு அல்லது எருக்கலவிதை அந்தரத்தில் பறந்து நகர்ந்துகொண்டு இருப்பதைப் பார்ப்பீர் எனில், ஒருவேளை அப்படி நீங்கள் பார்ப்பது இந்தக் கதையாகவும் இருக்கக் கூடும்…”

படைப்புகளின் வழியாகவும், அவரது மகன் திருமண வரவேற்பின் (12-07-2009) போதும், ஒன்றிரண்டு இலக்கிய நிகழ்வின் போதும் அவரோடு அறிமுகமாகி இருந்தாலும், நான் அவரைத் தேடிச் சென்று முதன்முதலில் சந்தித்தது செப்டம்பர் – 2010இன் தொடக்கத்தில்தான். அவர் வசிக்கின்ற அக்குறுநகரின் சிறு வீதிகள் இணைகின்ற பிரதான சாலையில்  பலமுறை பயணித்திருந்த போதிலும் அச்சிறுவீதியொன்றில் நுழைந்தது அன்று அதுவே முதல்முறை. அவ்வீதியின் ஆரம்பத்தில் நின்றிருந்தவரிடம் விசாரித்த போது  எளிதாக தெருமுனை வீட்டை அடையாளம் காட்டினார். சற்றே நீண்ட இரும்பு கேட்டின் கால்முனை மடக்கி உள்நுழைந்து அழைத்த போது என் குரல் கேட்டு அவர் முற்றத்திற்கு வந்துவிட்டிருந்தார்.  பரஸ்பர சம்பாஷணைகளுக்குப் பிறகு ஹாலில் போடப்பட்டிருந்த  இரண்டு பேர் அமரக்கூடிய  பிரம்பு நாற்காலியின் இடது பக்கத்தில் நானமர்ந்து கொள்ள ஒருவர் மட்டுமே அமரக்கூடிய இன்னொரு பிரம்பு நாற்காலியில் அவரமர்ந்து கொண்டார். மர்ஃபிலாவின் காதலைப் போல வெகு இயல்பாகவே தொடங்கிற்று எங்களுக்கிடையேயான உரையாடல். ஒரு கணத்தில் நிஜத்தின் பரபரப்பு மனதினுள் பிரகாசமாய் விரிய  ஆரம்பிக்க  நாற்காலி மீதிருந்த டி.வி. ரிமோட்டை முதலில் கையிலெடுத்துக் கொண்டேன். பின் கடந்த தருணங்களில் வாரப் பத்திரிகையொன்றை  புரட்டிக்கொண்டேன். முன்னொரு நாளொன்றில் அவரெழுதி அவருக்கு பிடித்தமானதாக இருந்த கதையொன்றைப் பற்றி  ஒருமுறை நான் அலைபேசியில் அவரோடு உரையாடியதைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும் போது மட்டும் அவரது பார்வை ஹாலின்  நடுமையத்தில் நிலைகுத்தியிருந்தது. அதே நிலைதான் எனக்கும். என்னை நெகிழ்ந்துருக வைத்திருந்த அவரது நான்கைந்து கதைகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசும் போது அவருக்கு பின்புறமிருந்த சுவரின் மேல்பகுதியில் மாட்டப்பட்டிருந்த அவரது மகனின் திருமண போட்டோவில் என் பார்வை பதிந்திருந்தது. அவரைச் சந்திக்க வருவதற்கு முன்பு  பேச நினைத்த விஷயங்களில்  ஏதாவதொன்றை மறந்து விட்டோமா என  உரையாடலின் சில கணநொடி  மெளன இடைவெளியின் இடையில் சிக்க முனைந்த போது தொலைக்காட்சிப் பெட்டியின் மேலிருந்த வெண்ணிற புத்தர் சிலை கண்ணில்பட்டது. முன்னொரு சமயத்தில் அவரெழுதியிருந்த புத்தரைப் பற்றிய கவிதை, அந்தப் புத்தர் சிலை அவர் வீட்டிற்கு வந்த பிறகுதான் எழுதப்பட்டதா என கேட்க நினைத்த போது அவர் மடிக்கணிணியில் மின்னஞ்சலை  தேடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டைப் பற்றிய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்த தொலைக்காட்சி பெட்டிக்கு மேல்புறம் வெற்றிடமாக காட்சியளித்த அந்த இடத்தை  அவருடைய ஓவியம் நிரப்பப் போகிறதோ என மற்றொரு ஆவலான கேள்வி எனக்குள் எழ புத்தர் கவிதைப் பற்றிய எண்ணத்தை கொஞ்சம் புறந்தள்ளி வைத்து விட்டு அந்தக் கேள்வியை கேட்டும் விட்டேன். ‘அநேகமா நான் வரையப் போற தைல ஓவியமாகத்தான் இருக்கும்…’ என ஒருவிதமான புன்முறுவலுடனே சொன்னார்.

பரபரப்பின் பிசுபிசுக்கில் முக்கால் மணி நேரம் என்ன பேசினேன், ஏது பேசினேன் என்பதே சரியாக ஒட்டவில்லை. ‘உறவினர்கள் வரலைன்னா இன்னும் கொஞ்ச நேரம் உங்க கூட பேசிக்கிட்டிருப்பேன்..’ என விடைபெறும் தருணத்தில் அவர் சொன்ன வாக்கியத்தின் பின்னால் வைக்கப்பட்ட மூன்று புள்ளிகள் அன்றைய தின முற்றுப் பெறாத உரையாடலின் நீட்சியாக பின்தொடர்ந்த காலங்களில் நிகழ்ந்த எங்களது சில சந்திப்பின் போதான உரையாடல்களின் தொடக்கப் புள்ளிகளாக இருந்தது.

 அவ்வருடத்தில் (2010இல்) அவர் எழுதி வெளிவந்த ‘துரு’, ‘மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களை’ ஆகிய கதைகளை அவை ‘உயிர் எழுத்து’ மற்றும் ‘ஆனந்த விகடனி’ல் முறையே வெளிவருவதற்கு முன்பாக மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியிருந்தார். அவ்வகையில் அக்கதைகளின் முதல் வாசகனாக நான் இருந்தேன் என்பதில் எனக்கொரு மகிழ்ச்சி உண்டு. கதைகள் மட்டுமல்ல, அதன் பிறகு எத்தனையோ கடிதங்களை எனக்கு எழுதியிருக்கிறார். அப்போதெல்லாம் அவரது கதைகள் இதழ்களில் வெளியானவுடன் அதனை படித்துவிட்டு உடனே அவருக்கு கடிதம் எழுதிவிடுவேன். “என்னுடைய கதையை நீங்கள் படித்ததே போதுமானது. உடனுக்குடன், பரீட்சை ஹாலில் கொஸ்டின் பேப்பரை வாங்கினவுடன் பதில் எழுத ஆரம்பிக்கிற மாதிரி, அதைப் பற்றி எனக்கு மறுநாட் காலையில் சொல்வதை விட, ஒரு போதும் தேயாத பென்சிலைப் படிக்கும்போது, ஆறாவது விரலைப் பற்றிச் சொன்னது மாதிரி எப்போதாவது சொன்னால் போதும்..“ என்று அவரிடமிருந்து பதில் வந்தது. 

ஒருவர் இன்னொருவர்’ கதை குறித்து நானெழுதிய கடிதத்திற்கு அவரெழுதிய பதில் கடிதம் அத்தனை கவித்துவமானது. என்னுடைய சேகரிப்பிலிருக்கிற அந்தி வெளிச்சப் பின்னணியில் எடுத்துக் கொண்ட பொக்கிஷப் புகைப்படங்களுக்கு இணையானவை அவரது கடிதங்கள். தற்போது அவைகளை எடுத்து வாசிக்கும் போலெல்லாம், வாசகன் ஒருவனுக்கு படைப்பாளி அளித்த கௌரவமாகத் தோன்றும். இதற்கெல்லாம் மேலாக, 03-10-2010 அன்று அவரது இலக்கியப் பணியைப் பாராட்டி நெல்லையில் நடைபெற்ற “வண்ணதாசன் படைப்புலகம்” குறித்த கருத்தரங்கில் அவரது ‘அகம் புறம்’ நூல் குறித்து பேசுவதற்கான வாய்ப்பினை அவர் எனக்குப் பெற்றுத் தந்தார்.  தி.க.சி, நாஞ்சில் நாடன், ‘மேலும்’ சிவசு, தமிழவன், சாம்ராஜ் உள்ளிட்டோர் இவ்விழாவைச் சிறப்பித்தனர். விழாவில் அவர் நிகழ்த்திய ஏற்புரை அத்தனை உணர்வுபூர்வமானதாக இருந்தது. ஒரு நிலையில் பேச முடியாதவராக அவர் நின்றுவிடுவாரோ என்று எனக்குத் தோன்றியதை நிகழ்வின் நிறைவில் அவரிடம் சொன்ன போது, “ஏற்புரை என்பது சம்பிரதாயம். நீங்கள் கற்பூரத் தட்டை நீட்டினால் நான் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.  அவ்வளவுதான்” என்றார்.   

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, கடிதங்கள் எனப் பரந்துபட்ட இலக்கியப் பரப்பில் பங்களித்து வருகிற அவர், தன்னுடைய ஆரம்பகாலமான 1962இல் ‘கல்கண்டு’வில் ஒவியங்கள் வரைந்திருக்கிறார். 1963களில் ‘தினத்தந்தி’யில் ஜோக்குகள் எழுதி பரிசு பெற்றிருக்கிறார். 1969இல் ஜானகி சீனிவாசகம், செல்வகுமார், உ.நா.ராமச்சந்திரன் (வண்ணநிலவன்) ஆகிய நண்பர்களோடு இணைந்து ‘பொருநை’ என்கிற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியிருக்கிறார். சில வருடகால இடைவெளிக்குப் பிறகு, சமீபத்திய வருடங்களில் மீண்டும் ஓவியங்கள் வரையத் தொடங்கியிருக்கிறார். கடந்த 2021இல்  அவரது ‘அகம் புறம்’ கட்டுரைத்  தொகுப்பின் மறுபதிப்பானது  அவர் வரைந்த ஓவியங்களுடன்  வெளிவந்து பெருவாரியான வாசகர்களின் கவனப்பரப்பை  எட்டியுள்ளது. இந்நூலில் வெளியான ஓவியங்களின் நீட்சியாகத்தான்  மீண்டும் ஓவியங்களை வரையத் தொடங்கியிருப்பதைப் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“1984இல் எங்களின் நிலக்கோட்டைப் பருவத்தில் சில்க் ஸ்மிதாவை வரைந்ததே என் கடைசி நினைவாக இருந்தது. எனக்கு உருவப்படம் வராது. அது சில்க் ஸ்மிதா சாயலில் இல்லை. அவரின் ஏதோ ஒரு உயிர்ப்பைத் தக்க வைத்திருந்தது. முன்பு புரோத்திமா பேடியை வரைந்த போதும் அது புரோத்திமா பேடி போல இல்லை. ஆனால் அவரின் வன உயிரிப் பாய்ச்சல் கிடைத்திருந்தது. இன்னொரு உபரி விளைவு ‘சமவெளி’ எனும் கதை. உபரி விளைவு உண்டாக்காதே கலையே இல்லை. 35 வருடங்களுக்குப் பிறகு நான் வரைந்து பார்த்திருக்கும் கோடுகள் என்னிடம் ஒன்றைச் சொல்லின. ‘உன் விரல்கள் பத்திரமாக இருக்கின்றன’. எவ்வளவோ பத்திரக் குறைவாகப் போய்க் கொண்டிருக்கும் இன்றைய என் வாழ்வில், என் விரல்கள் பத்திரமாக இருக்கின்றன என்ற அசரீரியே எனக்குப் போதும்..”

அவர் குறிப்பிட்டுள்ளது போல், சமீபத்திய இந்த இரண்டு வருடக் காலங்களில் அவரது முகநூல் பக்கத்தில் நாள்தோறும் அவர் வரைந்து பதிவேற்றி வருகின்ற ஓவியங்கள், அவரது கதைகள், கவிதைகளுக்கு இணையான ரசிப்புத்தன்மையை  வாசகர்களிடையே பெருக்கியுள்ளதை, அவை சார்ந்து வெளியாகின்ற பின்னூட்டங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. 

கவிதைகள் எழுதத் தொடங்கிய காலத்திலேயேதான் அவர் ஓவியம் வரையவும் தொடங்கியிருக்க  வேண்டும். ‘ஒரு தேர்ந்த ஓவியனாக வண்ணதாசன் வருவானென்று நான் அப்போது நினைத்திருந்தேன். ஆனால் அவன் பரிணமித்தது எழுத்துத்துறையில் தான்..’ என்று அவரது தந்தை தி.க.சி பேட்டியொன்றில் (உயிர் எழுத்து – பிப்ரவரி 2011) குறிப்பிட்டிருந்ததை  இவ்விடத்திலே நினைவுகூர வேண்டியுள்ளது. 1962இல்  கல்கண்டு  இதழில் அவரது ஓவியங்கள் சில வெளியாகி இருந்த போதிலும், நான் பார்த்து ரசித்த அவரது ஓவியம் ‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’ என்கிற கவிதைக்கு வரைந்திருந்த ஓவியம்தான். ‘கல்யாணி வரைஞ்சது..’ என என்னிடம் அதைக் காண்பித்ததும் தி.க.சி.தான். பின்னாட்களில் அக்கவிதை அவரது புனைப்பெயர்களில் ஒன்றான ‘கலி-லியோ’ என்கிற  பெயரில் ‘சதங்கை – 1972′ இதழில் வெளியானது. குறிப்பிடத்தக்க இந்தக் கவிதைக்கு அவர் வரைந்திருந்த ஓவியம் அச்சடித்த  பிரதியைப் போன்று இன்னமும் நன்றாக என் நினைவில் உள்ளது. ‘Educated-Unemployed, Employment, No Vacancy, Situations Vacant, Wanted’ என்ற சொற்தொடர்கள் பின்னணியில் எழுதப்பட்டு அதன் முன்பாக இளைஞனொருவன் கன்னத்தில் கைவைத்திருப்பதைப்  போன்று வரையப்பட்ட ஓவியம் அது. குறைந்தபட்ச முன்னனுபவங்கள் இல்லாவிட்டாலும் அப்படிக் கேட்கிற வேலைகளுக்கு மனு போடுகிற  ஆங்கிலத்தாள்களின்  இரண்டாம் பக்கத்தை மேய்கிற  ஒரு இளைஞனின் முகத்தில் வெளிப்படுகிற குறும்புத்தனத்தை அப்படியே பிரதிபலித்ததுதான் அவ்வோவியத்தின் சிறப்பம்சம்.

இதன் தொடர்ச்சியாகத்தான், பிந்தைய நாட்களில் கலாப்ரியாவின் ‘தீர்த்த யாத்திரை’, ‘வெள்ளம்’, கதைப்பித்தனின்  ‘தவிப்பு’, காசியபனின் ‘அசடு’, பூமணியின் ‘பிறகு’, இராகுலதாசனின்  ‘அக்கரைப் பூக்கள்’, உள்ளிட்ட நூல்களுக்கான முகப்போவியங்களை அவர் வரைந்து தந்திருக்க வேண்டும்.

அப்போதைய  1962இல் தொடங்கி தற்போது வரையிலான அவரது பெரும்பாலான ஓவியங்கள் இயல்பான மனிதர்களின் அந்நியமற்ற முகங்களையும், அவர்களின் அகவெளிப்பாட்டினையுமே முன்னிறுத்துகிறது.  ஆழ்மனதின் கனவில் வருகின்ற  முகங்களை ஓவியங்களாக படைக்கும் கலையின் வளர்ச்சிநிலை  இது என்று எனக்குத் தோன்றுகிறது.  தனது  ஓவியங்கள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றில் திருத்தங்கள் செய்வதை  தவிர்த்து விடுவதாக சொல்லிவருகிற அவர், ஒரு தனித்த பாணியில் அவரைப்  பாதித்த மனிதர்களின் முகங்களை தொடர்ந்து வரைந்து வருகிறார். அவ்வோவியங்களில்  சம்பந்தப்பட்டவர்களின் சாயல்கள் இல்லாது  போனாலும் கூட, அவர்களின் ஏதோவொரு தனித்த அடையாளங்கள் அவைகளில் அப்படியே தங்கியிருக்கின்றன.  அவரது ஓவியங்கள் வெறும் கருப்பு வெள்ளை ஓவியங்களாக  இல்லாமல் பல இடங்களில் கருப்புக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட  ஓர் எளிய நிழல் வண்ணத்தைக்  கொண்டிருக்கின்றன.  சின்னஞ் சிறிய எளிய தீற்றல்களின் வழியே  உருப்பெறுகிற அவரது ஓவியங்களில் முற்றிலுமாக வெளிப்படுவது  நுண்ணிய உணர்வுகள்தான் என்றாலும், அவைகளுக்கு அடிநாதமாக இருப்பது  சக மனிதர்களின் மீதான அவருக்கிருக்கின்ற அன்பும், கரிசனமும்தான்.

மேலோங்கிய வாசகபர்வத் தொனியில் அவரது ஓவியங்களைப் பார்த்து ரசிக்கும் போதெல்லாம், அடுக்குச் சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த இளைஞனொருவன் அவருக்குள் சதா உலவிக் கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. ‘தேடித் தேடி முகங்களை அடைய முயன்று கொண்டே  இருக்கும் அதே கல்யாணிதான்..’ என்று தன்னுடைய ஓவியங்கள் குறித்த பதிவொன்றில்  அவர் குறிப்பிட்டிருப்பதைப் போல, கவிதையோ, கதையோ, கட்டுரையோ, கடிதமோ, ஓவியமோ என எந்தத் தளத்தில் இயங்கினாலும் அவர் அவராகத்தானிருக்கிறார்.

2 Replies to “வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள்”

  1. கல்யாண்ஜியை யாரென்று தெரிந்து கொள்ளாத போது அவர் பெயரில் கணையாழியில் (எண்பத்தி சொச்சம்) வாசித்த ஒரு கவிதை இப்படிப் போகும்.

    “……பழையபடி
    சரியான திருகாணிகளை
    சரியான விகிதத்தில்
    பொருத்தி விட்ட
    உற்சாகத்தில் இருக்கும்
    நீங்கள்
    நான் விலகின திசை நோக்கிப்
    புன்னகைக்கவும் கூடும்.
    இயல்புதான் அதுவும்.

    எனினும்
    இன்னொரு திரையுயர்கையில்
    எனக்கும்
    ஒரு இடம் இருக்கட்டும்.
    வந்துவிடுவேன்
    தாமதமாகவேனும்
    ஆனால்
    நிச்சயமாக ”

    இதை நான் தொண்ணூறுகளில் அவரோடு அனுதினம் தொடர்ந்து பிரயாணம் செய்யும் பாக்கியம் கிட்டியபோது, கிடைத்திருந்த உரிமையில் அவரிடம் தெரிவித்த போது, இந்த மாதிரி ஒரு கவிதையைத் தான் எழுதியதாக ஞாபகம் இல்லை என்று சொன்னார்.

    நானும் தீவிரமாக வண்ணதாசன் ஒலிக்கும் எல்லா நிகழ்வுகளிலும், ஏன், குவிகத்திற்காக நானே வழங்கிய “வண்ணதாசனும் கல்யாண்ஜியும்” நிகழ்வு உட்பட, தருமபுத்ரன் ராஜசூயத்தில் விழுந்து புரண்ட அபூர்வ கீரிப்பிள்ளை போல விழுந்து புரண்டு முழுக் கவிதையையும் கண்டு பிடிக்க முனைந்து கொண்டே இருக்கிறேன்.
    இதுவரை கிடைக்கவில்லை.

    ஞாபகத்தில் பிசகு ஏற்படுகிறதில் நல்ல விஷயங்கள் பறிபோவது தான் எவ்வளவு வேதனையாக இருக்கிறது?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.