பெயோட்டி

அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. சுமார் 30 பங்கேற்பாளர்கள் அந்த பெரும்பாலையில் சிறு சிறு குழுக்களாக நடந்து கொண்டிருந்தனர். அவர்களின் வழிகாட்டி அந்த பாலை நிலத்தில் மண்டியிட்டு பிரார்த்தித்து, அங்கே சிறு சிறு பொத்தான்களை போல வளர்ந்திருந்த  கள்ளிகளை பறித்து அவற்றின் மேற்புறத்தில் இருந்த சிறிய வளரிகளை துடைத்து நீக்கிவிட்டு எப்படி உண்ணவேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.  பங்கேற்பாளர்கள் யாரும் அந்த கள்ளிகளை ஒருபோதும் திரும்பும் பயணத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டனர்.சில மணி நேரம் கழித்து அனைவரும் சேகரித்த கள்ளிகளுடன் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்தார்கள்.

இரவுதான் அந்த நிகழ்வு நடைபெறும் என்பதால்  அந்த வெட்டவெளியில் வானின் கீழ், நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக தோன்றுவதை பார்த்தபடி தங்களுக்கான இடங்களை தேர்ந்தெடுத்து கம்பளிகளை விரித்து அமர்ந்தனர்.  மெழுகுவர்த்தி, கொஞ்சம் கொக்கோ கனிகள், பீன்ஸ், வெண்ணிற மலர்கள் ஆகியவற்றுடன் அவர்களுக்கு  நம்பிக்கை இருக்கும் கடவுள் மற்றும் குடும்பத்தினர் புகைப்படங்களையும் முன்னால் இருந்த சிறு மரப்பலகையில் ஒவ்வொருவரும் அமைத்தார்கள்.

ஒரு பழங்குடியின ஆண் அனைவருக்கும் விறகு கூட்டிய அடுப்பில் தேநீர் தயாரிக்க தொடங்கினார், இரு பெண்கள் இரண்டு தொல் இசைக்கருவிகளை முடுக்கி தயாராக்கினர்.

அதுவரை வீசிக்கொண்டிருந்த இளங்காற்று குளிராக மாறத்தொடங்கியது.நிலவு எழுகையில் அனைவர் முன்பும் நெருப்பு வளர்க்கப்பட்டது.

நள்ளிரவானதும் அனைவருக்கும் சிறு கரண்டியில் பசைபோல மிக மிக கசப்பான கள்ளிப்பசையும், அதை விழுங்கிய பின்னர் ஒரு கள்ளித்தேநீரும் அளிக்கப்பட்டது அந்த தேநீர் வயிற்றுக்குள் இறங்காமல் தொண்டையிலேயே நின்றிருந்த பசையை உள்ளே இறக்கியது. அந்த தாளக்கருவிகள் வட்டமாக அமர்ந்திருந்த பங்கேற்பாளர்களிடம் தரப்பட்டது.  வாங்கிக்கொண்ட ஒவ்வொருவரும் அதை அவர்களுக்கு தெரிந்தாற்போல் இசைத்து ஒருசில பாடல்வரிகளை அவரவர் மொழிகளில் பாடினர்

பழங்குடியின தலைவர் அவர்களது தொல்மொழியில் அங்கு அனைவரும் கூடியிருக்கும்படி அனுமதித்த இயற்கைக்கு நன்றி தெரிவித்தார். பின்னணியில் பழங்குடியினர் சிலர் இணைந்து பாடினர்.

‘’நான் மிக லகுவாக இருக்கிறேன்
இதோ இப்போது பறக்கவிருக்கிறேன்
என் துயர்களிலிருந்து விடுபட்டு
மேலே மேலே பறக்க விருக்கிறேன்
இனி அனைவரும் ஒன்றே, நாமனைவரும் ஒன்றே
நாமே மருந்து, நாமனைவரும் மருந்து
வாருங்கள், ஒருவருக்கொருவர்
சிகிச்சையளித்து கொள்ளுவோம்
இதோ, விண்மீன்களுக்கு அடியில்
பாலையின் காற்றில், தூரத்தே
ஏதோ முழக்கமொன்றை கேட்டபடிக்கு
நாம் ஒருவருக்கொருவர் இணைந்து கொள்வோம்
ஒருவரை ஒருவர் சிகிச்சை அளித்து மீட்போம்’’

என்னும் பொருளில் கைநீட்டினால் தொட்டுவிடலாம் போல நட்சத்திரங்கள் அருகில் அமைந்திருந்த அந்த நள்ளிரவில் அப்பாடல் மிக இனிமையாக ஒலிக்கிறது.

ஆச்சரியப்படும் விதமாக அங்கு அவர்களின் குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  இதுபோன்ற நிகழ்வுகளில் எதற்கு குழந்தைகள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு, அவர்களின் கலாச்சாரத்தில் இதுபோன்ற முக்கியமான சடங்குகளில் குழந்தைகள் பங்கு கொள்ளாமல் இருந்தால் தான் ஆச்சரியம் என்றும், தொல்மரபின் நீட்சியான அச்சடங்கு, கட்டாயம் குழந்தைகளின் முன்னிலையிலேயே வழக்கமாக நடத்தப்படும் ஏனென்றால் அவர்களும் அம்மரபின் நீட்சிதான் என்று பதிலளிக்கப்பட்டது.

ஒருமணி நேரத்தில் குமட்டலும் வாந்தியும் அனைவருக்கும் உண்டாகின. சிறிது நேரத்தில் சிலர் விசும்பி அழுது கொண்டிருந்தனர். பலர் காலடியில் வேர்கள் வளர்வதை உணர்வதாக கூறினர். அனைவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். அதிகாலையில் அனைவரும் அங்கேயே படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர்.

தனித்தனியே அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நிகழ்வு முடியும்போது ஒரே குடும்பமாகி இருந்தனர். நிகழ்வை பாரம்பரிய முறைப்படி பழங்குடியின தலைவர் முடித்து வைத்ததும் அனைவரும்  அங்கிருந்த நெருப்புக்கும் நீருக்கும் இசைக்கருவிகளுக்கும் வணக்கமும் நன்றியும் சொல்லி விடைபெற்றார்கள். அத்தனை பேரும் புத்தம் புதிதாக பிறந்தவர்கள் போல் இருந்தார்கள்.

அந்த கள்ளிப்பசை உள்ளிருந்து நமது ஆணவத்தை வெளிக்கொண்டு வந்துவிடுகிறது என்கிறார்கள் பழங்குடியினர். அக்கள்ளி  உண்மையில் நாம் யாரோ அதை நமக்கு காட்டி கொடுக்கிறது என்கிறார் ஒரு பங்கேற்பாளர் பரவசமாக

இந்த அனுபவங்கள் எல்லாம் மெக்ஸிகோவில் நடைபெறும் பெயோட்டி  சுற்றுலாவில் ஒரு சிறு கள்ளியை உண்ணும் ஒரு சடங்கு மற்றும் பிரார்த்தனை நிகழ்வில் கிடைப்பதுதான். அந்த சிறு பொத்தான்களை போலிருந்த கள்ளியின் பெயர் ’’பெயோட்டி’’

பெயோட்டி

பெயோட்டி (Peyote cactus) கள்ளியின் அறிவியல் பெயர் Lophophora williamsii. 

 பெயோட்டி என்னும்  மெக்ஸிகன் பொது வழங்கு பெயர்  நாவாட்(டு)ல் மொழி   (Nahuatl) வேர்கள் கொண்ட  ’’கம்பளிப்புழு கூடு’’ என்னும் பொருள் கொண்டிருக்கும் ஸ்பானிஷ் சொல்.  

அமெரிக்க பழங்குடியினர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இக்கள்ளியின், சிகிசையளிக்கும், மன அமைதி உண்டாக்கும், புலன்களைக் கூராக்கும் அரிய பண்புகளை  அறிந்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் பழங்குடியின கலாச்சாரத்தில் பெயோட்டிக்கு ஒரு பிரத்யேக புனிதமான இடமுண்டு. வட அமெரிக்கா, மேற்கு கனடா பகுதிகளின் சுமார் 40 பழங்குடியினத்தவர்களின் சடங்குகளில் பெயோட்டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

 சில இனத்தவர்கள் இதை ஆன்மீக அனுபவத்தின் பொருட்டு உண்ணுகையில், தியானம் மற்றும் மந்திரங்களை உச்சரிப்பது போன்றவற்றை செய்கிறார்கள். மேலும் சிலரோ முழுக்க முழுக்க நோய் தீர்க்கும் சடங்காக மட்டுமே இதை உண்ணும் நிகழ்வை நடத்துகிறார்கள். ஒவ்வொரு பழங்குடிக்கும் பெயோட்டியை பயன்படுத்துவதில் அவர்களுக்கே உரித்தான தனித்த வழிமுறைகள் உள்ளன.

சில பழங்குடி இனத்தில் பெயோட்டி பாம்புக் கடிக்கு முறி மருந்தாகவும் அளிக்கப்படுகிறது, இன்னும் சிலர் இதை இரத்த சர்க்கரை மற்றும் சருமவியாதிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகின்றனர்

 ’வேட்டை’ என குறிப்பிடப்படும் பெயோட்டியை கண்டுபிடித்து சேகரித்து கொண்டுவரும் நிகழ்வும் சடங்கின் ஒரு பகுதியாக நடக்கும்.  

பலர் நினைப்பதுபோல பெயோட்டி கள்ளி  உண்ணுதல், போதை உண்டாக்கும்  நிகழ்வல்ல, அது ஆன்மீக வேர்களை கொண்டிருக்கும் ஒரு அனுபவம்

மெக்ஸிகோ பழங்குடியினர் இதை ஒரு குணமாக்கும் சிகிச்சை அனுபவமென்றே குறிப்பிடுகின்றனர். உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்தையும் ஆன்மாவையும் குணமாக்கும் சிகிச்சை இது.

ஹிக்குரி (Hikuri) என்றும் அழைக்கப்படும் பெயோட்டி கள்ளி ஒரு அரிய தாவரம் எனவேதான் அப்பிரதேசத்தின் பழங்குடியினர் அதை பாதுகாப்பதில் மிக கவனமாக இருக்கின்றனர்.

முது தந்தை எனப்பொருள்படும்  ‘Abuelo’,  என்னும்  இதன் பிறிதொரு பெயர் அக்கள்ளியின் ஆண்மை நிறைந்த ஆற்றலையும் குலமூத்தோரின் அறிவையும் உணர்த்துகிறது. பல இனங்களில் பெயோட்டி சொர்க்கத்தின் கதவுகளை திறக்கும் சாவி என கருதப்படுகிறது  

20ம் நூற்றாண்டில் இது அறிவியல் ரீதியாக வகைப்படுத்தப்பட்ட பின்பு உலகெங்கிலும் பெயோட்டி பிரபலமாகி இருக்கிறது.

 அமெரிக்காவின்  போதைப்பொருள் அமலாக்கத்துறை (Drug Enforcement Administration – DEA)  பெயோட்டியை , Schdule 1 drug என பட்டியலிட்டிருந்தும் பல அமைப்புகள் இந்த நெறியினை பின்பற்றுவதில்லை. உதாரணமாக அமெரிக்க  பூர்வகுடி அமைப்புக்கள் பலவற்றின் சடங்குகளில்  பரவலாக இக்கள்ளி  உபயோகிக்கபடுகிறது. 

பெயோட்டியில் இருக்கும் ஆல்கலாய்டான மெஸ்கலைன் அதன் விளைவுகளுக்கு காரணமாக இருக்கிறது (mescaline). மெஸ்கலைன் நேரடியாக மூளையில் செயல்புரிகிறது. LSD மற்றும் சைலோசைபின் காளான்களும் இப்படித்தான் நேராக மூளையில் விளைவுகளை உண்டாக்கும். மெஸ்கலைன் செயற்கையாக தயாரிக்கப்பட்டு போதைப் பொருளாகவும் பயன்பாட்டில் இருக்கிறது

பெயோட்டியின் உலர்ந்த உச்சிப்பகுதியை உண்ணுவது, பெயோட்டியை கொதிக்கும் நீரில் வேகவைத்து உண்ணுவது, பெயொட்டியிலிருந்து தேநீர் தயாரித்து அருந்துவது அல்லது பெயோட்டி தூள் அடைக்கப்பட்டிருக்கும் கேப்ஸ்யூல்களை விழுங்குவது என்று பலவிதங்களில் இது எடுத்துக் கொள்ளப்படுகிறது. சில குழுக்கள் உலர்த்தி பொடியாக்கிய பெயோட்டிகளை சிகரெட்டை போல புகைப்பதுமுண்டு 

 பெயோட்டியை உண்டதும் உடனே அதன் விளைவுகள் உடலில் உண்டாகும், அவ்விளைவுகள் சுமார் 12 மணி நேரம் உடலில் இருக்கும். இதன் விளைவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். புலன்களை கூர்மை கொள்ள வைப்பது மெஸ்கலைனின் இயல்பு என்பதால் பலர் ஒலியை பார்த்ததாகவும்  சிலர் பலவித நிறங்களை வடிவங்களை உணர்ந்ததாகவும் சொல்கின்றனர்.  காட்சிகள் (visions) எனப்படும் இல்பொருள் தோற்றங்கள் மெஸ்கலைனின் விளைவுகளில் முதன்மையானது, பலருக்கு சில மிகப் பழைய நினைவுகள் மின்னல் போலமனதில் வந்து போவது மிக சாதாரணமாக நிகழும்

இதன் விளைவுகள் எத்தனை உச்சம் சென்றாலும் அவை தற்காலிகமானவையே மெஸ்கலைனின் வீரியம் குறையும் போது அவையும் குறைந்துவிடும்

அதிக பெயோட்டி உண்டதால் ஏதும் ஆபத்துக்கள் உண்டானதில்லை. அரிதாகவே ஒருசிலருக்கு மெஸ்கலைன் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் 

புகையிலை மற்றும் பிற போதை பொருட்களை போல அல்லாது மெஸ்கலைன் அடிமையாதல் என்பதும் அரிதினும் அரிதாகவே நிகழ்கிறது. எனினும் சிலர் இதை போதைப்பொருளாகவும் உபயோகப்படுத்தி கொண்டிருக்கின்றனர்

தாவரவியல் இயல்புகள்

பெயோட்டி டெக்சாஸ் மற்றும் தெற்கு மெக்ஸிகோவை தாயகமாக கொண்டது. வடக்கு மெக்சிகோவின் சிகுவாஹுவான் பாலையில் மிக அதிக எண்ணிக்கையில் இவை காணப்படும். 

தட்டையான மேற்பரப்பை கொண்டிருக்கும் சாம்பல் பச்சை அல்லது நீலப்பச்சை  நிறத்தில், முட்கள் இல்லாத அழகிய சிறுதட்டையான உருண்டைவடிவ  இக்கள்ளிகள் தரையோடு தரையாக  வளர்பவை, 

பெயோட்டிகள்  entheogen எனப்படும் சமயச்சடங்குகளில் பயன்படும்  மனம் மயக்கும் தாவர வகையை சேர்ந்தவை. கூட்டங்களாக வளரும் இயல்புடைய இக்கள்ளிகள் 2-7 செ மீ உயரமும் 10-12 செ மீ சுற்றளவும் கொண்டிருப்பவை. மேலிருந்து கீழாக அமைந்திருக்கும் புடைத்த வரிகள் கள்ளியின் மேற்புறத்தை சுளைகள் போல பிரித்திருக்கும். முட்களற்ற இக்கள்ளிகளில் இளமஞ்சள் கம்பளி நூல் போன்ற மென்வளரிகள் கொத்தாக வளர்ந்திருக்கும். இவற்றில் மார்ச்சிலிருந்து மே வரை  சிறிய இளஞ்சிவப்பு மலர்கள் உருவாகும்.

இவற்றின் மகரந்த தாள்கள் தொடுதல் மூலம் தூண்டப்பட்டு மகரந்தங்களை விடுவிக்கும் வகையை சேர்ந்தவை. thigmotactic anthers  எனப்படும்  இவ்வகை கள்ளிகளின் மகரந்தங்களை குறித்து முதன் முதலில் சார்லஸ் டார்வின் கண்டறிந்தார்

கரிய விதைகளை கொண்டிருக்கும்  சிறு இளஞ்சிவப்பு வெடியாக்கனிகள் உருவாகும் .

சுண்ணாம்பு மண்ணில் இவை செழித்து வளரும். இயற்கையான வாழிடங்களில் இவை மிக மிக மெதுவாக, சுமார் 16 வருடங்கள் முதிர்வதற்கு எடுத்துக்கொண்டு வளரக்கூடியவை. அறுவடைகளுக்கு இடையில் 8 வருடங்களாவது காத்திருந்தாலே மீண்டும் வேர்கிழங்குகளிலிருந்து கள்ளிகள் முளைத்து  வரும். எனினும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இவை 3 வருடங்களில் முதிர்ந்து மலர துவங்குகிறது

பழங்குடி இனத்தவர்களின் கலாச்சாரத்தில் பல்லாயிரமாண்டுகளாக முக்கிய இடம்பெற்றிருக்கும் இந்த கள்ளி இப்போது மிக அதிக, முறையற்ற அறுவடையாலும் பெயோட்டி சுற்றுலாக்களின் பிரபலத்தாலும் அருகிவரும் இனத்தின் தாவரமாக பட்டியிலிடப்பட்டிருக்கிறது

வரலாறு

வட அமெரிக்காவின் பழங்குடியின வரலாற்றுடன் இணைந்திருக்கிறது இந்த பெயோட்டியின் வரலாறும். பல பழங்குடி இனங்களில் புனிதமான தாவரமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெயோட்டி இருக்கிறது. வட அமெரிக்காவின் தொல்குடிகளான Huichol, Tarahumara, Cora ஆகியோர் இக்கள்ளியுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவர்கள்..

 19 ம் ஆண்டில் நிறுவப்பட்ட  அமெரிக்க பூர்வீக தேவாலயம் (Native American Church-NAC ) மற்றும்  Huichol  பழங்குடியினர் இக்கள்ளிகளுடன் மிக நெருங்கிய தொடர்பிலிருப்பவர்கள். இந்த தேவாலயம் கிறுஸ்துவத்தை பழங்குடியின சடங்குகளுடன் கலந்து இக்கள்ளிகளின் பயன்பாட்டுடன் இணைந்த பெயோட்டி மதத்தை உருவாக்கி இருக்கிறது. ஹூசோல் (Huichol) பழங்குடியினரின் நான்கு முதன்மை தெய்வங்கள்  நீல மான், பெயோட்டி கள்ளி,மக்காச்சோளம் மற்றும் கழுகு ஆகியவை.

2005ல் டெக்சாஸில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த இரு பெயோட்டி காளன்களின் உலர்ந்த துண்டுகளில் நடந்த ரேடியோ கார்பன் ஆய்வுகள் அவை  பொது யுகத்துக்கு சுமார் 3660 வருடங்களுக்கு முற்பட்டவை என உறுதி செய்தன அத்தனை வருட பழமையான அவற்றிலிருந்து 2.5மிகி மெஸ்காலைன் ஆல்கலாய்டும் எடுக்கப்பட்டது ஏறக்குறைய அதே சமயத்தில் மெக்ஸிகோவின் பழங்கால கல்லறை குழிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெயோட்டிகள் பொ யு 810-107 வை சேர்ந்தவை என கணக்கிடப்பட்டன.   எனவே அமெரிக்க பழங்குடியினர் 5500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெயோட்டி கள்ளிகளை பயனபடுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

19 ம் நூற்றாண்டை சேர்ந்தவரான ஜான் (john Raleigh Briggs ) என்பவரே பெயோட்டி கள்ளிகளை குறித்த அறிவியல் கவனத்தை முதன் முதலில் ஈர்த்தவர்.  லூயி (Louis Lewin) என்னும் அறிவியலாளர் 1888ல் Anhalonium lewinii என்னும் பெயோட்டி வகையை  தாவரவியல் ரீதியாக விவரித்தார். இனப்பெருக்கவியலாளரான  ஹேவ்லாக் (Havelock Ellis)  சுயமாக பெயோட்டியை உண்டு அதன் விளைவுகளை  1898ல் அறிக்கையாக வெளியிட்டார்.  அவரைப்போலவே  பெயோட்டியிலிருந்து மெஸ்கலைனை பிரித்தெடுத்த  Arthur Heffter  சுயமாக பெயோட்டி உண்டு அதன் விளைவுகளை 1897ல் கட்டுரயாக வெளியிட்டார்.

நார்வீஜியாவை சேர்ந்த இனவரைவியலாளரான கார்ல் (Carl Sofus Lumholtz)  மெக்ஸிகோவின் இந்தியர்கள் பெயோட்டியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை முதன்முதலில் கட்டுரையாக எழுதி வெளியிட்டார். மேலும் அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது வேறு நச்சுப்பொருட்கள் கிடைக்காததால் எதிர்தரப்பினர் ஒரு படைப்பிரிவினரின் குடிநீர் தொட்டியில் ஊறவைத்த பெயோட்டியை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டதையும் அக்கட்டுரையில் அவர்  குறிப்பிட்டிருந்தார்.

1845ல் பிரெஞ்ச் தாவரவியலாளர்  சார்லஸ் ஆண்டனியினால் ( Charles Antoine Lemaire)  Echinocactus williamsii என பெயரிடப்பட இக்கள்ளிகள் 1894ல்  Lophophora என்னும் பேரினத்தில் அமெரிக்க தாவரவியலாளர் ஜான் மெரில் என்பவரால் சேர்க்கப்பட்டது.( John Merle Coulter)

 மெஸ்கலைன்

மெஸ்கலைன்  முதன்மையாக புலன் கூர்மை கொள்ளுதல்,   ஒலிகளை காணுதல், கண்முன்னே இல்லாத  நிறங்களை வடிவங்களை காணுதல் (synesthesia) என்னும் விளைவுகளை அளிக்கிறது.

20 கிராம் உலர்ந்த பெயோட்டி சுமார் 200லிருந்து 400 மி கி மெஸ்கலைன் கொண்டிருக்கும்.இதனுடன்  hordenine  என்னும் ஆல்கலாய்டும் உள்ளது.

பட்டியலிடப்பட்ட போதைப்பொருளாக பெயோட்டி இருப்பினும் 1994  அமலுக்கு வந்த American Indian Religious Freedom Act,ன்  படி பழங்குடியினர் மதம்சார்ந்த சடங்குகளில் இதை பயன்படுத்த அரசு அனுமதித்திருக்கிறது

அருகிவரும் பெயோட்டி

2023 ஜனவரியில்   அமெரிக்க பூர்வகுடி தேவாலயத்தின் (Native American Church of North America  – Nacna)  உறுப்பினர்கள் வாஷிங்டனுக்கு சென்று சட்ட வல்லுநர்களை சந்தித்து பெயோட்டியின் பாதுகாப்பை குறித்தும் அது தொடர்பான பல்லாயிரக்கணக்கான பழங்குடியினரின் நம்பிக்கையை குறித்தும் பேசினர். தொடர்ந்து பல அதிகார மட்டங்களிலிருக்கும் ஆளுமைகளை சந்தித்த அவர்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் பெயோட்டியின் வாழ்விட அழிப்பை காட்டும் புகைப்படங்களையும் அவர்களுடன் பகிர்ந்து   உரையாடினார்கள்.

டெக்சாஸை சுற்றி இருக்கும் பல ஏக்கர் நிலப்பரப்பில் root plowing எனப்படும் பெயோட்டியை வேருடன் பிடுங்கி அறுவடை செய்யும் பல புகைப்படங்கள் அவை அழிவின் விளிம்பில் இருப்பதை உணர்த்தியது.  தலைப்பகுதியை மட்டும் வெட்டி எடுக்கையில் வேர்க்கிழங்குகள் காய்ந்து போகாமல் மீண்டும் மீண்டும் அவற்றிலிருந்து கள்ளிகள் உருவாகும். ஆனால் வேருடன் பிடுங்கி எடுக்கும் இந்த முறை அமெரிக்க தொல்குடிகளின் 6000 ஆண்டு தொன்மையான  மரபொன்றின் வேர்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது.  

டெக்சாஸ்-மெக்சிகோ எல்லையின் இருபுறங்களிலும் இருக்கும் பெயோட்டி வயல்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிதறி வளர்ந்திருக்கும் பெயோட்டிகளை காணலாம். இப்பிரதேசத்தில் பெயோட்டிகளை அறுவடை செய்து விற்பனை செய்ய உரிமம் வைத்திருப்போர்  peyoteros எனப்படுகின்றனர் இவர்கள் கள்ளியின் மேற்புறத்தை மட்டும் கவனமாக அறுவடை செய்து மீண்டும அடியிலிருந்து பெயோட்டிகள் வளர்வதை உறுதி செய்வார்கள்.

 கடந்த 50 வருடங்களில் டெக்சாஸில் பெயோட்டி கள்ளிகளின் இயற்கையான வாழிடங்கள் சுருங்கிக்கொண்டே வருகின்றன

 கள்ளிகளின் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவரான ஸ்டீவன் (Steven Van Heiden) நகரமயமாக்கல், கால்நடைகளின் மேய்ச்சல், காற்றாலைகள் ஆகியவற்றால் பெயோட்டிகள்  பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றன என்கிறார்

 சட்டபூர்வமாகவும், அனுமதியின்றியும் இவை அதிக அளவில் முறையில்லாமல் அறுவடை செய்யபடுவதும் இவை அருகி வருவதற்கு மற்றுமோர் முக்கிய காரணம்

2013ல் பெயோட்டி கள்ளிகள் அழியும் அபாயத்திலிருப்பதாக அறிவித்த பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) , 2017 ல் இவற்றின் 3% முழுவதுமாக அழிந்துவிட்டது என்றும்  அறிவித்திருக்கிறது 

 பெயோட்டியுடன் ஒரு மரபும் அழிந்து கொண்டிருப்பதுதான் மிகுந்த கவலைக்குரியதாகி விட்டிருக்கிறது. பெயோட்டிகளின் பயன்பாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் எந்த தொடர்புமின்றி அவை வெகு வேகமாக அழிந்துகொண்டு வருகின்றன 

 The Indigenous Peyote Conservation Initiative (IPCI) என்னும் பழங்குடியின பெயோட்டி பாதுகாப்பு அமைப்பும்  இக்கள்ளிகளின் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. டெக்ஸாசில் தற்போது பெயோட்டிகளை நர்சரிகளில் வளர்க்கும் திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது. மரங்களினடியில் வளர்க்கப்படும் சிறு பெயோட்டிகள் பின்னர் மீண்டும் எடுக்கப்பட்டு அவற்றின் இயற்கை வாழிடங்களில் வளரச்செய்யப்படுகின்றன

பழங்குடியினரிடம் இந்த பெயோட்டிகளை அளித்து அவர்கள் வீட்டிலும் அவற்றை வளர்க்கச் செய்யும் திட்டமும் செயல்படுத்தப்பட இருக்கிறது

இதன் பாதுகாப்பிற்கெனவே அரசு இதன் பயன்பாடுகளை கட்டுபடுத்த சட்டங்களை பிறப்பித்தது, எனினும் பழங்குடியினர் அத்தகைய சட்டங்கள் அவர்களின் கலாச்சார உரிமைகளுக்கு எதிரானது என எண்ணுவதால் பெயோட்டியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

பெயோட்டியின் பிரபலம் அதிகரித்து அதன் தேவைகளும் அதிகரித்திருப்பதால் அவற்றை அழிவிலிருந்து காக்கவேண்டிய அவசியம்  உண்டாகி இருக்கிறது

சட்டரீதியான பல கட்டுப்பாடுகள், கலாச்சார மாற்றங்கள், வாழிட அழிப்பு என பல அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் பெயோட்டி மிகச்சக்தி வாய்ந்த ஒரு கலாச்சார குறியீடாகவும், பல்லாயிரக்கணக்கான பழமையுள்ள  பழங்குடியின மரபின் தொடர்ச்சியாகவும் திகழ்கிறது. நோய் சிகிச்சைகளில், குறிப்பாக ’உணர்வுரீதியான நலவாழ்வு’ எனப்படும் emotional well being என்பதில் இவற்றின் தேவை உலகெங்கிலும் அதிகரித்திருக்கிறது.

மெஸ்கலைனின் பயன்பாடு குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மெஸ்கலைன் பயன்பாடு  சர்வதேச அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

பெயோட்டி கள்ளி அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகத்துக்கான அமைப்பான  Convention on the International Trade in Endangered Species (CITES) மூலமும் கண்காணிக்கப்படுகிறது. இந்ததாவரம் தொடர்ந்து பூமியில் வாழ்வதற்கான அதன் தேவைகளுக்கும், இத்தாவரத்திற்கான் மனிதனின் தேவைகளுக்குமான இடைவெளியில் காத்துக்கொண்டிருக்கிறது இதன் பாதுகாப்பின் உத்திரவாதம் வருங்காலத்தில் பெயோட்டி கள்ளிகளுடன் இணைந்த கலாச்சாரங்களை பாதுகாப்பதையும், பெயோட்டி கள்ளிகளை பாதுகாப்பதும் மிக இன்றியமையாததாகி விட்டிருக்கிறது. தொடர்ச்சியான செயல்பாடுகள், சட்டபூர்வமான நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் பெயோட்டியை  சுற்றியுள்ள சிக்கல்களை தீர்த்து அவற்றிற்கான இயற்கையான  நிலப்பரப்பில் அவை வளர்வதை உறுதி செய்வதின் மூலம், தொடரும் தலைமுறைகளுக்கு அதன் கலாச்சார முக்கியத்துவதை கடத்தவும் முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.