உபநதிகள் – அத்தியாயம்: பத்து

This entry is part 10 of 17 in the series உபநதிகள்

Kalavathi’s Dilemma

அத்தியாயம் ஆறு

பகுதி ஐந்து 

இந்திய செவ்வியல் கலைமன்றம் – மாலை

மலர்மாலைகளும் வண்ணக்கொடிகளும் அலங்கரித்த கலையரங்கம். 

காமரா அதைச்சுற்றி வருகிறது. அரங்கின் ஒரு பாதியில் பன்னிறப் பட்டாடைகளிலும் மினுமினுக்கும் அணிகலன்களிலும் செந்நிறம் ஏற்றிய விரல்களிலும் பதின்பருவப் பெண்கள். மீதி இடங்களில் சேலைகள், சூடிதார் சட்டைகள், குர்த்தாக்கள். பெரும்பாலும் இந்தியர்கள். அங்கங்கே ஒன்றிரண்டு வெள்ளை முகங்கள். அவர்களில் ஷான் இந்திய பட்டுச்சட்டையில். 

சிவப்புத்திரை மூடிய மேடை. அதன் மேல் குறிவைத்த ஒளிவிளக்குகள். திரைக்கு நேர் எதிரே தொடர் காமரா. அது தவிர ஒருசில பார்வையாளர்களின் கைகளில் அலைபேசிகள் இயங்கத் தயாராக இருக்கின்றன.  

பேச்சுக்குரல்கள் அடங்கி அரங்கில் நிசப்தம்.

அரங்கின் இடப்பக்கம் இந்திய செவ்வியல் கலைமன்றத்தின் தலைவி மோனிகா மைக்கைப் பிடித்து நிற்கிறாள். தந்தத்தின் நிறத்தில் பின்னலும் செந்நிறப் பட்டுப்புடவையும் சமஸ்க்ருத வார்த்தைகளின் தெளிவான உச்சரிப்பும் அவளை இந்தியப்படுத்துகின்றன. 

மோனிகா

இந்த ஆண்டுநிறைவு விழாவை முடித்துவைக்க குமாரசம்பவத்தில் இருந்து ஒரு காட்சி. சமஸ்க்ருதத்தின் மிகச்சிறந்த கவிஞர் காளிதாஸ். அவர் படைப்புகளில் குமாரசம்பவம் உச்சமாகக் கருதப்படுகிறது. தலைப்புக்குத் தகுந்தாற்போல் அது கார்த்திகேயக் கடவுளின் தோற்றத்தை விவரிக்கிறது. அதற்கு ஷிவாவையும் பார்வதியையும் ஒன்றாக இணைக்க வேண்டும். அதற்கு எத்தனை தடங்கல்கள்!  

மோனிகா பார்வையில் இருந்து மறைய திரை விலகுகிறது. 

மரத்தடியில் ஒரு மண்மேடு. அதன்மேல் புலித்தோல் விரித்து ஷிவா தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். ஜடாமுடி, மூடிய கண்கள், கவனம்குவிந்த முகம். மங்கிய மஞ்சள் ஒளியில் பனிபடர்ந்த மலைகள் பின்னணியில் தெரிகின்றன. 

சில நொடிகளுக்கு எந்த ஓசையும் அசைவும் இல்லை. 

மெல்லிய இனிய சங்கீதம். மேடையின் வலப்பக்கம் கரும்பு வில்லுடன் மன்மதனும் அவன் நாயகி ரதியும் மெல்ல காலடி வைத்து நுழைகிறார்கள். காமராவின் பார்வை அவர்களைப் பின்பற்றி முழு மேடையையும் முன்வைக்கிறது. வானத்தில் வெளிச்சம் பரவுகிறது. பனி உருகி அருவியாக வழிகிறது. மரங்கள் பூத்துக்குலுங்குகின்றன. எங்கும் பறவைகளின் கீச்சுக்கூவல்கள். வசந்தகாலத்தை வரவேற்க மன்மதனும் ரதியும் இணைந்து கலந்து ஒருவரை யொருவர் ஆசையுடன் பார்த்து ஆடுகிறார்கள். அதனால் ஷிவாவின் தியானம் பாதிக்கப்படவில்லை. வந்தவழியே அவர்கள் நகர்ந்ததும் பார்வதி மேடையின் இடப்பக்கமாக நுழைகிறாள். அவளுடைய சலங்கை ஒலியின் ஓசையில் சிவா கண்களைத் திறக்கிறார். ஆனால் கவனம் சிதறவில்லை, முகத்தில் மாற்றம் சிறிதும் இல்லை. பார்வதியின் முக அபிநயமும் உடல் அசைவுகளும் அவள் பின்னலின் நெளிவும் சிருங்கார ரசத்தை வெளிப்படுத்துகின்றன. நடனத்திற்கு ஏற்றாற்போல் கல்யாணி ராகத்தில் வீணையின் சங்கீதம். ஷிவாவின் அலட்சியத்தால் வந்த விரகதாபம் அவள் வேட்கையை மேலும் வளர்த்துகிறது. இருவருக்கும் நடுவில் இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. பார்வதி அவரை நெருங்கிவிட்டாள். தன் கூந்தலில் இருந்து ஒரு பூவை எடுத்து அவர் பாதத்தில் வைக்கப்போகிறாள். வீணை வேகமாக ஒலித்து அதன் தந்தி அறுகின்ற அபஸ்வரம். அப்போது மேடையின் ஓரத்தில் இருந்து மன்மதன் எய்த மலர் அம்பு சிவாவின் மார்பில் பட்டு விழ.. அவர் முகத்தில் ரௌத்ரம். அதன் தாக்குதலில் மன்மதன் தரையில் சரிகிறான். புஸ் என்று புகையில் அவன் மறைகிறான். பார்வதி திகைத்து நிற்கிறாள்.  

திரை மூடுகிறது. 

பலத்த கைதட்டல் நின்றதும், மோனிகா தோன்றுகிறாள். 

மோனிகா 

இறுதி நிகழ்ச்சி இன்றைய விழாவின் உச்சம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இராது.  இதில் பங்கெடுத்தவர்கள்.. 

பார்வதி – கலாவதி முத்தையா 

ஷிவா  – அனுப் படேல் 

மன்மதா – ஹரிணி கோபால்

ரதி – காமினி க்ருஷ்ணா 

கல்லூரியில் நுழையப்போகும் இவர்களுக்கு என் வாழ்த்துக்கள். 

அவள் கைதட்ட மற்றவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள். 

பாராட்டு சற்றே அடங்க..

மோனிகா

பார்வதி மனம் தளராமல் இன்னொரு வழியில் ஷிவாவை அடைகிறாள். அது அனுப் படேலின் அரங்கேற்றத்தில் பிரதான நிகழ்ச்சி. அடுத்த வாரம் இதே நேரம் இதே இடத்தில் நடக்கப்போகிறது. அதற்கும் வந்து சிறப்பிக்கும்படி உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

விழாவில் பங்கு கொண்ட இளையவர்களுக்கும் விழாவை நடத்திய அன்பர்களுக்கும் நன்றி! அதைத் தெரிவிக்க அரங்கின் வெளிமுற்றத்தில் ஒரு சிறு விருந்து. 

கூட்டம் சற்று கலைந்ததும், கலாவதி ஷானைக் கண்களால் தேடி அவன் அருகில் வருகிறாள். 

கலாவதி

வா! போகலாம்! 

மௌனமாக அவளைத் தொடர்கிறான். பின்னணியில் பார்வையாளர்களின் மகிழ்ச்சி பொங்கும் பேச்சுக்குரல்கள். 

அடுத்த காட்சியில் அரங்குக்கு வெளியே கலாவதியின் சொகுசான  ஊர்தி. அவர்கள் அமர்ந்ததும்… (உரையாடலின்போது காமரா இருவரையும் வெவ்வேறு கோணங்களில் மாறிமாறிப் பார்க்கிறது.) 

ஷான்

கலா! நாம் எங்கே போகிறோம்? 

கலாவதி

என் கோட்டைக்கு.  

கார் சாலையில் சேர்ந்து ஒரு பெரிய நாற்சந்தியில் நிற்கிறது. 

ஷான்

நீ உடை மாற்றி வந்திருக்கலாமே.  

கலாவதி

இந்த வேஷத்தின் வேலை இன்னும் முடியவில்லை. 

கலாவதி ஒரு மயக்கும் புன்னகையை வீசுகிறாள். 

ஷான்

அது என்னவாக இருக்கும்? (நெற்றி சுருக்குகிறான்.)  

கலாவதி

ஷிவாவை என்னால் துளிக்கூட அசைக்கமுடியவில்லை. 

ஷான்

இந்த ஷான் எந்த எதிர்ப்பும் காட்டாமல் பார்வதிக்கு அடிபணியப் போகிறான்.  

பச்சை விளக்கு எரிய பயணம் தொடர்கிறது. இருவரின் முகங்களும் சாதாரண நிலைக்கு இறங்குகின்றன. 

கலாவதி

இதுவரை உன் முற்றுகைகளை நான் தடுத்து நிறுத்தினேன்.. (மன்னிப்பை வேண்டும் குரல்)  

ஷான்

எதற்கும் ஒரு நேரம் காலம். இதற்கு பதமான மனமும் அவசியம்.  

கலாவதி

உண்மைதான்.  

சிறு மௌனம். ஊர்தி ஒரு நெடுஞ்சாலையில் நுழையக் காத்துநிற்கிறது. 

ஷான்

கிரேக்க புராணத்தின் க்யுபிட் போல உன் நாட்டுக் கதையிலும் காதல் கடவுள் மலர் அம்பு எய்கிறான்.

கலாவதி 

அவனைப்போலவே மன்மதாவும் ஷிவாவின் கோபத்தினால் எரிந்துவிட்டதால் ரதியைத் தவிர மற்றவர்கள் கண்ணுக்குப் புலப்படாதவன்.

ஷான் 

வேறுபட்ட கலாசாரங்கள் என்றாலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. 

கலாவதி முகத்தில் சிந்தனையும் வருத்தமும்.  

கார் வேகம் எடுத்ததும், 

கலாவதி

எங்கள் பண்பாட்டைக் காப்பாற்றும் முயற்சியைக் கைவிடப்போகிறேன். (கைவிட்ட குரலில் அறிவிக்கிறாள்.)  

ஷான்

அதைக்கேட்க வருத்தமாக இருக்கிறது. நீ அதைத் தோல்வியாகக் கருதக்கூடாது. 

கலாவதி  

சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் எங்கள் மூதாதையர்கள் தமிழ் நாட்டில் இருந்து இலங்கைத்தீவின் வடபகுதியில் குடியேறினார்கள். குடிபெயர்ந்த நாட்டின் பண்பாட்டையும், முக்கியமாக மொழி மதம் இரண்டையும் பின்பற்றினார்கள். 

ஷான்  

புகுந்த நாட்டினருடன் அதிகத்தொடர்பு இல்லாததால் அது சாத்தியமாக இருந்திருக்கும்.

கலாவதி  

அது ஒருவேளை சரியில்லையோ? 

ஷான்  

புது மண்ணில் வாழ்க்கை தொடங்கும்போது எத்தனையோ எதிர்பாராத பிரச்சினைகள். பழக்கப்பட்ட பண்பாடு ஒரு பாதுகாப்பு, இல்லையா? 

மௌனத்தில் அதை ஒத்துக்கொள்கிறாள். 

கலாவதி

ஸ்ரீலங்க்கா பிரிட்டிஷ் காலனி ஆன பிறகும் அந்த வழக்கம் தொடர்ந்தது. என் தாத்தா தன் அப்பாவின் பேரேடை ஜாக்கிரதையாக எடுத்துவந்து இருக்கிறார். அது இவ்வளவு தடி. (மூன்று அங்குலத்தில் உள்ளங்கைகளைப் பிரிக்கிறாள்.) அதில் குழந்தைகள் பிறந்த தேதி, ஜாதகங்கள், கடன் வாங்கியது கொடுத்தது, நெல் அறுவடை செய்தது, மாடு கன்று போட்டது… 

ஷான்  

ஃபேமிலி பைபிள் போல. 

கலாவதி    

கரெக்ட். அத்துடன் இன்னும் பல விவரங்கள். பண்டிகைகள், தினசரி வழக்கங்கள், நோய்கள் அவற்றுக்கு மருந்துகள். 

ஷான் 

வரலாறு எழுதுகிறவர்களுக்கு உதவியாக இருக்கும். 

கலாவதி    

என் தாத்தா எழுதியிருக்கிறார், வரலாறு அல்ல, சரித்திர சிறுகதைகள். எல்லாமே அந்தக் காலத்து மனிதர்களையும் சூழல்களையும் சித்தரிக்கின்றன. அவை பல பரிசுகள் வாங்கியிருக்கின்றன. 

ஷான் 

கலை உன் ரத்தத்தில் ஓடுகிறது. (அவள் பக்கம் திரும்பிச் சொல்கிறான்.) 

கலாவதி

தாங்க்ஸ். கலா என்றால் ‘ஆர்ட்’ என்று தான் அர்த்தம். 

(வருத்தமும் சிந்தனையும் கலந்த மௌனம்.)

கலாவதி

எங்கள் குடும்பம் ஸ்ரீலங்க்காவின் உள்நாட்டுப் போரில் இருந்து தப்பித்து டொரான்ட்டோ வந்த பிறகும் பாரம்பரிய மொழியையும் பண்பாட்டையும் காப்பாற்ற நாங்கள் முயற்சித்தோம். 

ஷான் 

அங்கே முடிந்தது. 

கலாவதி  

ஒரு குறுகிய எல்லைகளுக்குள். 

ஷான்  

நான்கு ஆண்டுகளுக்கு முன் யூ.எஸ். வந்தபிறகு முடியவில்லை, சரியா?

கலாவதி 

பண்பாடு ஒரு உயிரினம் போல. அதைச் சேர்ந்த மக்கள் புதுமைகளில் மோகம்வைக்காமல் ஒழுகலாறுகளைப் பின்பற்ற வேண்டும். சூழ்நிலை மாறும்போது அதற்குத் தகுந்தபடி பண்பாடும் தன்னை மாற்றிக்கொள்ளும். ஆனால், மிக மெதுவான கதியில்.

ஷான்  

உயிரினங்களின் பரிணாம மாற்றங்களைப்போல. 

கலாவதி  

பொருத்தமான உவமை. பல உயிரினங்களின் நசிவுக்குக் காரணம் அவை அனுசரித்துப்போகாத அளவுக்கு சூழலில் தீவிர மாற்றங்கள். அதுபோல… உணவு, வேலை, குடும்ப அமைப்பு, வசிக்கும் இடங்கள் அதிவேகமாக மாறும்போது பண்பாடு கட்டுப்பாட்டையும் தனித்துவத்தையும் இழக்கிறது. 

நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறி சந்தடி இல்லாத தெருக்களில் கார் செல்கிறது. 

கலாவதி

இதுவரை தமிழ்ப் பண்பாட்டின் மடியில் குழந்தையாக இருந்தேன். நான் வளர்ந்தாக வேண்டும். கல்லூரியில் படித்து வேலை தேடுவது தவிர்க்க முடியாதது. அதற்குத்தேவை இன்றைய இயந்திர வர்த்தக பொருளாதாரத்தைச் சார்ந்த பண்பாடு. 

ஷான்

அதுகூட பூமி சூடாகுதல் போன்ற வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறலாம்.  

ஒரு வீட்டின் அடித்தளத்தின் முன் கார் நிற்கிறது. 

கலாவதி

நீயோ நானோ கல்லூரியில் சமூகவியல் படித்து அதை ஆராய்ச்சி செய்யலாம். இப்போது இனிய மாலைப்பொழுது. (பிரகாசமாகச் சொல்கிறாள்.)  

ஷான்  

ஒன்று மட்டும் சொல்ல ஆசை.  

அவள் முகத்தில் கேள்விக்குறி. 

ஷான்

நீ பிறந்த பண்பாட்டின் ஒருசில வழக்கங்களைக் கைவிடாமல் பின்பற்ற முடியுமானால் அதற்கு நான் உதவுவேன். 

கலாவதி   

தாங்க்ஸ். அதைப் போகப்போக யோசித்து முடிவுசெய்யலாம். இப்போதைக்கு எங்கள் பண்பாட்டின் ஒரு அம்சத்தை நான் கைவிடப்போகிறேன். (குறும்புடன் சிரிக்கிறாள்.) 

ஷான் 

அது எது என்று நான் கேட்கப்போவது இல்லை. (வேடிக்கையாக அவள் நீண்ட பின்னலை இழுக்கிறான்.)   

கலாவதி இறங்கி வாசற்கதவைத் திறக்கிறாள். காமரா நடைவழி, சமையல் பகுதியைத் தாண்டி படுக்கை அறையைக் காட்டுகிறது. அவர்கள் அதில் நுழைகிறார்கள். 

கதவு சாத்தப்படுகிறது. 

பேச்சுக்குரல் அதிக நேரம் நீடிக்கவில்லை. பிறகு சலங்கையின் ஒலியும் அணிகலன்களின் ஓசையும். சிறிது நேரத்தில் அவையும் அடங்கிவிடுகின்றன. 

‘காதல் – தோல்வி இல்லாத விளையாட்டு’ என்கிற வாசகம் பளிச்சிடுகிறது.  

Kalavathi’s Dilemma

அத்தியாயம் நான்கு 

பகுதி ஒன்று

விவசாயிகள் சந்தை – பிற்பகல் 

கோடைகாலத்தின் உச்சம். சூரியன் இறங்கத் தொடங்கி சில மணி நேரம் ஆகியிருந்தாலும் அதன் வெம்மை குறையவில்லை என்பதைக் கலாவதியின் கையில்லாத சட்டையும் குட்டைப்பாவாடையும் கழுத்தை மறைக்காமல் உயரப்பின்னிய கூந்தலும் காட்டுகின்றன. 

கலாவதி

பை, மாம்! 

ரஞ்சனி

எல்லாம் எடுத்துண்டு இருக்கியா? 

கலாவதி

ம்ம்.. 

இரண்டு அகலமான துணிப்பைகளையும் கைப்பையையும் தூக்கிக் காட்டுகிறாள். 

ரஞ்சனி

மழை வரும்போல இருக்கு. ஜாக்கிரதை! 

கலாவதி

சரிம்மா! 

கலாவதி காரில் ஏறி அதைக் கிளப்புகிறாள். 

அடுத்த காட்சியில், ஒரு சர்ச்சின் முன் பரந்த புல்வெளி. அதை ஒட்டிய சரளைக்கல் பரப்பில் பதினைந்து இருபது சாமான்கள் ஏற்றும் ஊர்திகள். அவற்றில் இருந்து கூடைகளும் அட்டைப்பெட்டிகளும் இறங்குகின்றன. 

சற்றுத்தள்ளி கோடிட்ட இடத்தில் கலாவதி காரை நிறுத்துகிறாள். இறங்கி மேற்கு வானத்தின் கருமையைப் பார்த்து அவள் முகத்தில் கவலைக் கோடுகள். மனதைத் தேற்றிக்கொண்டு காரில் இருந்து பைகளை எடுத்து நடக்கிறாள். புல்வெளியில் ஏற்கனவே சில கூடாரங்கள் எழுந்து நிற்கின்றன. இன்னும் சில தரையில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கின்றன. விவசாயிகள் சந்தையில் என்ன வாங்கலாம் என்பதைத் தீர்மானிக்க கலாவதி ஒரு சுற்று நடக்கிறாள். கோடியில் ஒரு இளைஞன். சதுரமான துணிக்கூரையின் நான்கு கால்களை நிலைப்படுத்தும்போது திடீரென்று வீசிய காற்றினால் ஒரு கொம்பு பயங்கரமாக ஆடுகிறது. கலாவதி ஓடிச்சென்று அதை இறுக்கப்பிடித்து முட்டுக்கொடுத்ததும் கொட்டகை நிமிர்ந்து நிற்கிறது. அதன் மேல் ‘மென்டல்சன் ஃபார்ம்ஸ்’ என்ற பச்சை எழுத்துக்கள். 

இளைஞன்

தாங்க்ஸ் அ லாட்! 

கலாவதி

அத்துடன், பத்து சதம் தள்ளுபடி! 

இளைஞன்

முடியாது, வேண்டுமானால் இருபது சதம். 

என்ன காய்கள் கொண்டுவந்து இருக்கிறான் என்பதை அறிய ஒரு மேற்பார்வை. 

இளைஞன்

அப்பாவும் நானும் வருவது வழக்கம். சரக்கு அதிகம் இல்லை யென்பதால் இன்று நான் மட்டும்.

முதலில் சடசடவென்ற மழைத்துளிகள். தொடர்ந்து பலத்த காற்று. பிறகு முன்னறிவிப்பு இல்லாமல் கொட்டும் மழை. கூரை காற்றின் வேகத்திலும் மழையின் கனத்திலும் ஆடுகிறது. 

இளைஞன்

இங்கே நின்றால் ஆபத்து. நீ உடனே போ! 

அவன் சொல்லும்போதே அது சரியத் தொடங்குகிறது. 

கலாவதி பைகளைக் குடையாக்கி சர்ச்சின் முகப்பிற்கு ஓடுகிறாள். தோட்டக்காரர்களும் காய்கறி வாங்க வந்தவர்களும் மழையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உள்ளே ஒட்டிக்கொண்டு நிற்கிறார்கள். அந்த இளைஞன் கூடைகளை பிளாஸ்டிக் துணியால் மூடிவிட்டு வருவதற்குள் தொப்பலாக நனைந்து விடுகிறான். கலாவதி ஒதுங்கி அவனுக்கு இடம் தருகிறாள். 

இளைஞன்

தாங்க்ஸ் அ லாட்! 

கலாவதியின் முகத்தில் கலவரம், அவனுக்கு சலனமற்ற முகம். 

கலாவதி

உன்னைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். எப்படி உன்னால் நிதானத்தை இழக்காமல் இருக்க முடிகிறது? 

இளைஞன்

வெயிலுக்கும் மழைக்கும் பயப்பட்டால் எங்கள் தொழில் நடக்காது.

கலாவதி

ட்ரூ! ட்ரு!

மழை நின்று பெய்கிறது. அதன் ஓசையையும் தாண்டிப் பேசுகிறார்கள். 

இளைஞன்

உன் அம்மா வரவில்லையா? 

எப்படித் தெரியும் என்கிற கேள்வி அவள் முகத்தில். 

இளைஞன்

உன் பைகள்.  

அவற்றின் மேல் தோகைவிரித்த மயில்களின் படங்களுடன் ‘கற்பகம் சில்க்ஸ்’ என்ற தமிழ் எழுத்துக்கள். 

கலாவதி

அவள் விருந்தினருக்கு சமைக்கிறாள். உன் பண்ணை எங்கே இருக்கிறது? 

இளைஞன்

தெற்கே 840 நெடுஞ்சாலையில் இருந்து மாநில விவசாய மையத்தைத் தாண்டி. 

கலாவதி

அங்கே முழுநேர வேலையா? 

இளைஞன்

இல்லை. கொலம்பியா கம்யுனிடி காலேஜில் சேரப்போகிறேன். படிக்காத போது பண்ணையில் அப்பாவுக்கு உதவி. நீ?

கலாவதி

வரும் ஆண்டு ரேவன்வுட்டில் சீனியர். 

மழையின் வேகம் குறைந்தாலும் தரையின் பள்ளங்களில் சிறு ஓடைகள். ஒவ்வொருவராக தங்கள் இடம் நோக்கி நடையைக் கட்டுகிறார்கள். இளைஞன் தன் ஊர்திக்குப்போய் இரண்டு துண்டுகளால் உடலின் ஈரத்தைப் போக்குகிறான். கொட்டகையை நிறுத்திவைக்க கலாவதி உதவுகிறாள். 

இளைஞன்

என் பெயர் ஷான். 

கலாவதி

நான் கலா. 

ஷான்

மழைக்குப்பின் சூடு குறைந்து ரம்மியமாக இருக்கிறது. 

அவன் ஒவ்வொரு கூடையாகத் திறந்துவைக்க அவள் பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், ஸுக்கினி, வெள்ளரிக்காய், முள்ளங்கி என்று சிறு காகிதப்பைகளில் அடுக்கி குட்டி மேஜை மேல் வைக்கிறாள்.  

அவன் ஒவ்வொன்றாகத் தராசில் நிறுத்தி விலைபோட்டு ‘கற்பகம் சில்க்ஸ்’ பைகளை நிரப்புகிறான். 

ஷான்

மொத்தம் நாற்பத்தி நான்கு டாலர்! நீ ஸ்பெஷல் கஸ்டமர். நாற்பது கொடுத்தால் போதும். 

கலாவதி

எல்லாம் அநியாய விலை. ஐம்பது தான் கொடுப்பேன். 

கைப்பபையில் இருந்து இரண்டு இருபது டாலர் நோட்டுகளும் ஒரு பத்தும் கொடுத்துவிட்டு தள்ளி நிற்கிறாள். பத்து டாலர் நோட்டைத் திருப்பித்தரலாமா வேண்டாமா என்று யோசிக்கிறான். கடைசியில் தயக்கத்துடன்,

ஷான்

அடுத்த வாரம் இதே நேரம், பார்க்கலாம்! 

கலாவதி

அதற்கு முன்னால் மென்டெல்சன் பண்ணைக்கு நானே வந்து உன்னை சந்திக்கலாம் என நினைத்தேன். நீ என்னை அழைக்காததால் உனக்குப் பிடிக்கவில்லை போல..  

போலிக் கோபத்துடன் திரும்பிப்பாராமல் நடக்கிறாள். 

ஷான்

கலா! ஹைவே 840 எக்சிட் 42 தெற்கே. நான் எல்லா நாளும் உன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். (கொட்டகைக்கு வெளியே வந்து கையை நீட்டி கத்துகிறான்.) 

சிலர் நின்று திரும்பிப்பார்த்து புன்னகையைப் பரிமாறிக்கொள்கிறார்கள். 

காருக்கு வந்து அதைக் கிளப்புவதற்கு முன் கலாவதி முகத்தில் பரவசச் சிரிப்பு. 

Series Navigation<< உபநதிகள் – ஒன்பதுஉபநதிகள் – 11 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.