- புதுமைப்பித்தன் எனும் அறிவன்
- சி சு செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – நிறைவுப் பகுதி.
- ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்
- அசோகமித்திரன் தந்த கதைப் புத்தங்களின் கதை
- துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம்
- போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர்- தி. ஜானகிராமன்
- கு.ப.ரா.வின் ‘சிறிது வெளிச்சம்’ – ஒரு குறிப்பு
- முறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் – கவிஞர் இசையின் கவிதை குறித்து.
- அம்பையின் சிறுகதைகள்
- உரக்க ஒலித்த பெண் குரல்
- மகிமை
- கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்
- தந்தைக்கு என்றும் நன்றியுடன்
- முடிவுறாத போலிப் பிரதிகள் – ராஸ லீலா நாவல் விமர்சனம்
- நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து
- கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டு

1
மனித வரலாற்றின் கதையை பல்வேறு வகையான ஊகங்கள் முடிவுகள் வழியாக ஒத்திசைந்து மிகுந்ததாக கற்பனை செய்ய வரலாற்று ஆசிரியர்களும் இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் முயன்று கொண்டே இருக்கின்றனர். வரலாற்று ஆசிரியர்கள் முறைமைகள் வழியாக மிகச் சரியான முடிவினை நோக்கிச் செல்ல முயல்வதன் வழியாகவும் இலக்கியவாதி உள்ளுணர்வினை நம்பிச் செய்யும் கற்பனைகள் வழியாகவும் அரசியல்வாதி அதிகார நோக்கிலான ஒற்றைமயப்படுத்துதல் வழியாகவும் வரலாற்றை ஒத்திசைவு மிகுந்ததாக கற்பனை செய்ய முயல்கின்றனர். யாருடைய கண் வழியாக காணும்போது வரலாறு – அதாவது நம் கடந்தகாலம் – முழுக்க ஒத்திசைவு கொள்வதில்லை. மனம் சோர்வுற வைக்கும் இந்த திசைவழிகளின் மூலம்தான் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.
புதுமைப்பித்தன் என்ற புனைக்கதையாசிரியரைப் பற்றிய கட்டுரையில் எதற்கிந்த வரலாற்று ஆலாபனை? புதுமைப்பித்தன் இறந்து சரியாக முக்கால் நூற்றாண்டு ஆகிவிட்டது என்ற அடிப்படையில் புதுமைப்பித்தனும் ஒரு ‘வரலாறு’ (அவர் தன்னைப்பற்றி ‘வாழ்ந்துகெட்ட வரலாறு’ என்று சொல்வாராயிருக்கும்) என்று கொள்ளத்தக்கவரே. புதுமைப்பித்தன் குறித்து இலக்கிய விமர்சகன் அல்லது எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவரை அழகியல் ரீதியாக மதிப்பிடுவதுதான் என் வேலையாக இருக்க முடியும். அவர் எழுதியவற்றில் இன்றும் எஞ்சுவது எது என்பதைப் பார்க்க வேண்டியதே சமகாலத்தவர்களாக நம்முடைய முதன்மையான நோக்கம். ஆனால் இலக்கியம் என்பது சமூகத்துடனும் தொடர்புடைய கலையாக இருக்கிறது. எல்லை கடந்து இலக்கியம் ‘சமூகத்துக்குப் பயன்தர வேண்டும்’ என்றெல்லாம் கூட சொல்லப்பட்டது. ஆனால் இலக்கியம் முதன்மையாக வாசகருக்கு ஒரு அனுபவத்தை வழங்குவதன் வழியாக அவருக்குள் விழுந்திருக்கும் சில முடிச்சுகளை அவிழ்க்கிறது. அவர் போதத்தை இன்னும் சற்று கூர்மைப்படுத்துகிறது. இலக்கிய அனுபவம் பற்றி ‘புறவயமாக’ ஏதாவது சொல்ல முடியும் என்றால் இவ்வளவுதான் சொல்ல முடியும். இலக்கியத்திற்கும் சமூகத்திற்குமான தொடர்பு புறவயமாக புரிந்து கொள்ளப்பட முடியாதது. அதிலும் சமகால இலக்கியத்தால் சமூகம் அடையும் பாதிப்பை அறுதியிடுவது ஏறத்தாழ இயலாத காரியம் என்றே சொல்லிவிடலாம். ஆனால் சற்றே முந்தைய காலத்தைச் சேர்ந்த படைப்புகள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை ஓரளவு நம்மால் உய்த்துணர முடியும். ஜெயகாந்தன் படைப்புகள் முன்வைக்கும் பெரும்பாலான பெண் விடுதலை கருத்தியல்கள் அவர் காலத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. இன்று அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. இயல்பாக நடைபெறவிருக்கும் மாற்றத்தை எழுத்தாளர் முன்னறிவிக்கிறாரா எழுத்தாளரின் கனவு சமூகத்தை ஊடுருவுகிறதா என்பதெல்லாம் விவாதத்துக்குரியவை. ஆனால் இலக்கியம் எப்போதும் ‘பின்னோக்கிச்’ செல்வதில்லை என்பது மட்டும் தெளிவு. இலக்கியத்தின் அக்கறைகள் எதிர்காலத்திலேயே இருக்கின்றன.
எவ்வளவு வீச்சுடன் எதிர்காலம் பற்றிய கனவை ஒரு எழுத்தாளர் கட்டமைக்கிறார் என்பதைப் பொறுத்தே அவர் இடம் வரலாற்றில் நிலை கொள்கிறது. புதுமைப்பித்தனை வரலாற்றுடன் இணைத்து யோசிக்க வேண்டிய தேவை இங்கிருந்தே தொடங்குகிறது. புதுமைப்பித்தன் பற்றிய ஒரு கூற்றினை மட்டும் இங்கு சொல்வது சரியாக இருக்கும். புதுமைப்பித்தன் தன்னை முழுமையாக அறிவுக்கு ஒப்புக் கொடுத்தவர். சமரசமற்ற மயக்கங்களும் பலகீனங்களும் அற்ற அறிதல்தான் அவரை நவீனத் தமிழ் இலக்கியத்தின் திசைவழியை நிர்ணயித்த முன்னோடியாக மாற்றுகிறது. புதுமைப்பித்தன் மிக ஆழமான மரபுப் பயிற்சியும் நவீன இலக்கியத்தின் போக்குகளையும் கற்ற பிறகே எழுத வருகிறார். அவருடைய தொடக்ககால கதைகளில் மரபின் மீது வெளிப்படும் எள்ளல் வெறுமனே மரபு எதிர்ப்பு மனநிலையில் இருந்து வந்ததல்ல. ஆழமான மரபறிவும் நடைமுறையில் அதன் செல்லுபடியாகத் தன்மையும் இணைந்துதான் அந்த எள்ளல் உருவாகிறது.
/சமயக் குரவர்கள் இயற்றும் அற்புதங்கள் என்ற செப்பிடுவித்தைகள் நடவாத இந்தக் காலத்தில் அவள் தினந்தினம் காலந்தள்ளுவதுமல்லாமல், தனது ஒரே குமாரத்திக்கு விவாகம் செய்யவும் ஆரம்பித்ததுதான் அற்புதத்திலும் அற்புதம். – சங்குத்தேவனின் தர்மம்/
இது மாதிரியான இருபது மேற்கோள்களையாவது புதுமைப்பித்தனின் தொடக்ககால கதைகளில் இருந்து எடுக்க முடியும். இந்த எள்ளலுக்கு பின்னே ஒரு விசனம் ஒலிக்கிறது. இளம் வயதில் புராணங்களின் வழியாக மனதில் படிந்த மதிப்பீடுகளை ரத்தம் வழிய வழிய அறுத்து எறியும் ஒரு மனதின் குரலாகவே இந்த ஏளனங்கள் வெளிப்படுகின்றன. புதுமைப்பித்தனின் ஏளனங்கள்தான் அவரை ‘கசப்பு மிகுந்த படைப்பாளி’, ‘இருளை எழுதியவர்’ என்றெல்லாம் சொல்ல வைக்கிறது. ஆனால் இந்த முக்கால் நூற்றாண்டு கழித்து நோக்கும்போது புதுமைப்பித்தன் இருளையோ கசப்பையோ எழுதவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. புதுமைப்பித்தனின் மாநகர் வாழ்க்கை மீதான விலக்கம் நவீன வாழ்க்கை கொடுக்கும் அச்சத்தினால் வருவதல்ல என்று ஜெயமோகன் இலக்கிய முன்னோடிகள் நூலில் நிறுவியிருப்பார். அதை நான் அப்படியே ஏற்கிறேன். புதுமைப்பித்தனின் மரபின் மீதான எள்ளலும் கசப்பிலிருந்து எழுவதல்ல என்பது என் எண்ணம். நம்முடைய சற்று பழைய சினிமாக்களில் ஒன்றைக் காணலாம். பள்ளி,கல்லூரி மாதிரியான லட்சியவாத கற்பனை ஸ்தாபனங்களில் படிக்கும் நாயகர் ‘திடீரென’ சமூகத்தை எதிர்கொள்ள நேரிடும். அவருடைய லட்சிய வாழ்க்கைக்கு துளியும் தொடர்பில்லாத பொய்யும் புரட்டும் நிறைந்த உலகத்தைக் கண்டு அதிர்ச்சி அடைவார். உடனே அதை ‘மாற்ற’ போராடத் தொடங்குவார். புதுமைப்பித்தனின் புராணங்கள் மீதான மரபின் மீதான விமர்சனங்கள் மேற்சொன்ன மாதிரி ஒரு அப்பாவி அதிர்ச்சியை நோக்கி நகர்வதால் தோன்றியவை அல்ல என்பது என் முடிவு. தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு நூல் விருத்தாச்சலத்தின் இளமைக்காலம் ஒன்றும் அவ்வளவு சொகுசாகவோ இன்பகரமாகவோ இருந்ததாக நமக்குச் சொல்லவில்லை. மேலும் புதுமைப்பித்தன் புத்தகங்களை விட்டு கண்ணெடுக்காமல் வளர்ந்த ‘அதிமேதாவி மாணவரும்’ அல்ல. அவர் பல வகுப்புகளில் ‘ஆற அமர’ தங்கித் தங்கிதான் படித்திருக்கிறார். கல்லூரிப் படிப்பும் இந்த ரீதியில் தான் சென்றிருக்கிறது. மேலும் இளமை முதலே அவர் தீவிரமான வாசகராகவே இருந்திருக்கிறார். புதுமைப்பித்தனின் சமூகப் புரிதல்கள் இந்த அபாரமான வாசிப்பினை பின்னணியாகக் கொண்டவை என்று உறுதியாகச் சொல்ல முடியும். அதனால்தான் முப்பது வயதில்(1939) ஹிட்லர் குறித்து அவ்வளவு கச்சிதமான சித்திரத்தை அவரால் தர முடிகிறது. அவருடைய முதல் படைப்பான ‘குலோப்ஜான் காதல்’ என்ற கட்டுரையிலேயே அவர் யதார்த்தத்தின் மீது எத்தகைய ஆழமான பிடிப்பினைக் கொண்டிருந்தார் என்பது விளங்கும். அன்று இருபத்தைந்து வயது இளைஞரான விருத்தாச்சலம் காதலைப் பற்றி இப்படி எழுதுகிறார்.
/”காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில், சாதாரணமாக அல்ல,அபரிமிதமாக, காவியங்கள்,நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன. இல்லாவிட்டால் அவை நமது பொருட்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா?அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல்,கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது,அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது. “/
ஆகவே புதுமைப்பித்தனின் மரபு மீதான விமர்சனம் தனிப்பட்ட கசப்பிலிருந்து எழுவதல்ல. முழுக்க அறிவார்ந்த பார்வையில் இருந்து எழுவது. சிற்பியின் நரகம் கதையைக் கொண்டும் கம்பர் பற்றிய கட்டுரைகளில் இருந்தும் புதுமைப்பித்தன் மரபிலக்கியங்களிலிருந்து அழகுணர்ச்சியையே பிரதானமாக் கருதியிருக்கிறார் என்று புலப்படும். ராமன் இறந்ததாக எண்ணி ‘கண்ணே!அமிர்தே!கருணாகரனே!’ என்று சீதை கொஞ்சி அரற்றும் பாடலே அவருக்கு முக்கியமாகப்பட்டிருக்கிறது. இந்தக் கோணத்தில் யோசித்துச் செல்லும்போது புதுமைப்பித்தன் படைப்புகளில் வெளிப்படும் மரபு பற்றிய கைப்பு நிறைந்த சொற்கள் எவையும் அவருடைய தனிப்பட்ட குணாம்சம் சார்ந்தது அல்ல என்று புலப்படும்.
‘இருநூறு வருடங்களாக சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம்’ என்று போகிற போக்கில் புதுமைப்பித்தன் சொல்லக்கூடிய வரி எவ்வளவு கூர்மையான அர்த்தங்களைத் தருகிறது! ஆகவே இந்த சீலைப்பேன் வாழ்வு, மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள், புராணங்கள் மீதான அதீத ஈடுபாடு என்று சமூகம் குறித்த தெளிவான புரிதலுடனேயே புதுமைப்பித்தன் எழுத வருகிறார். மரபறிவு என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது அது ஏதோ பழைய வாழ்க்கை குறித்த பெருமிதத்தைப் பேணிக் கொள்வது என்ற நம்பிக்கை இன்றும் பலருக்கு இருக்கிறது. எந்தவொரு அறிவுமே சமகால சமூகத்தை இன்னும் சற்று ஆழமாகவும் விரிவாகவும் புரிந்து கொள்ளும் கருவி மட்டுமே. புதுமைப்பித்தனின் மரபறிவும் அத்தகைய தன்மை உடையதுதான். புதுமைப்பித்தனின் சமகாலத்தில் அவரைவிட சிறுகதை வடிவத்தை வெற்றிகரமாக கையாண்ட கு.ப.ரா, பிரபஞ்ச கானம் மாதிரியான சில கதைகள் வழியாகவே புதுமைப்பித்தனின் கலாப்பூர்வமான வெற்றிகளைத் தாண்டிவிடும் மௌனி போன்றோரைவிட புதுமைப்பித்தன் வீச்சு மிகுந்தவராக திகழ்ந்ததற்கும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்படுவதற்கும் காரணம் அவருடைய அக்கறைகளில் இருந்த விசாலத்தன்மையே காரணம்.
புதுமைப்பித்தனுக்கு முந்தைய தலைமுறை படைப்பாளிகளான அ.மாதவையா,பாரதி,வ.வே.சு.ஐயர் எல்லோரும் இலக்கியவாதிகள் என்ற அடையாளம் மட்டும் கொண்டவர்கள் அல்ல. அவர்களுடைய ஒட்டுமொத்த சமூக மாற்றக் கனவின் பகுதியாகவே இலக்கியத்தைக் கண்டனர். இந்த குணம் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இயல்பான ஒன்றுதான். இந்த காலகட்டத்தில் ஐரோப்பில் தோன்றிய விஞ்ஞானிகள் அனைவரையும் ‘Explorers’ என்ற சொல்லினாலேயே குறிப்பிட முடியும். அவர்களுடைய கண்டறிதல்கள்தான் பிற்காலத்தில் தனித்துறைகளாக வளர்ச்சி பெற்றன. அதுபோலவே நவீன இலக்கியம் என்ற தனித்த பிரிவு தமிழில் உருவாவது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில்தான். பொதுவாக அறிவின் மீதிருந்த ஈடுபாடு என்பதே புதுமைப்பித்தனுக்கு முந்தைய படைப்பாளிகளை உருவாக்கியது. புதுமைப்பித்தனுக்கும் அவருடைய முன்னோடிகளுக்குமான ஒற்றுமை இந்த பொது அறிவுஜீவித்தன்மையும் அதிலிருந்து உருவான சமூகம் சார்ந்த ஆழமான விமர்சன நோக்கும்தான். புதுமைப்பித்தனின் எழுத்துக்களில் இருந்து அவருக்கு பாரதி மீதும் கம்பன் மீதும் ஆழமான ஈடுபாடு இருந்தது தெரிகிறது. இருவருமே ஆழமான நெகிழ்ச்சியையும் கற்பனாவாத நோக்கையும் வெளிப்படுத்தியவர்கள். ஆனால் அக்கவித்துவமும் நெகிழ்ச்சியும் செய்யுள் வடிவிலான கவிதைகளில் வெளிப்படுகின்றன. பாரதி வசன கவிதைகளுக்கு வந்துவிட்டாலும் கூட அவருமே வெற்றிகரமான உரைநடையாளர் என்று சொல்லிவிட முடியாது. அதாவது புனைக்கதைகளில் பாரதியின் உரைநடை பலகீனமானதுதான். புதுமைப்பித்தனுக்கு முந்தைய கால சிறுகதைகளை வாசிக்கும்போது அவற்றிலிருக்கும் உபதேசத் தொனியும் எழுத்தாளர் தான் சொல்வதில் இருந்து முழுக்க விலகி நின்று ‘கருத்து’ சொல்வது போல பேசிச் செல்வதும் எந்தவொரு நவீன வாசகனுக்கும் எரிச்சலூட்டக்கூடியது. அசோகமித்திரனுடையது போன்ற பிரக்ஞைப்பூர்வமான விலகல் அல்ல அது. பத்திரிகையாளர் செய்தியை விவரிக்கும் அசட்டையான விலகல். புதுமைப்பித்தனின் கதைகளில் அவர் விரும்பி வாசித்த படைப்புகளின் கவித்துவமும் நெகிழ்ச்சியுமே வேறு வகையில் வெளிப்பட்டது எனலாம். இப்படிச் சொல்வது ‘என்ன! புதுமைப்பித்தனிடம் நெகிழ்ச்சியா?!’ என்று சற்று அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். அதைப்பற்றி அடுத்த பகுதிகளில் பார்க்கலாம். முன்னதாக தன்னுடைய இலக்கிய கொள்கை அல்லது எதிர்பார்ப்பு என புதுமைப்பித்தன் சொல்வது என்ன?
/’இலக்கியகர்த்தா வாழ்க்கையை அதன் பல்வேறு சிக்கல்களுடன்,நுணுக்கத்துடன்,பின்னல்களுடன் காண்கிறான். அதன் சார்பாக அவன் உள்ளத்திலே ஒரு உணர்ச்சி பிறக்கிறது. அந்த உணர்ச்சி நதியின் நாதந்தான் இலக்கியம்’/
ஆற்றங்கரைப் பிள்ளையார் மாதிரியான தொடக்ககால கதைகளில் புதுமைப்பித்தனிடமும் இந்த ‘ஊருக்கு உபதேசம்’ உரைநடைத் தொனி வெளிப்படவே செய்கிறது. ஆனால் அடுத்தடுத்த கதைகளில் புதுமைப்பித்தன் வலிமை மிகுந்த சித்தரிப்புகளைத் தருகிறார். சொற்ப வருமானத்தில் பெண்ணுக்கு நகை செய்து எடுத்துச் செல்லும் கிழவிக்கும் ஆசாரிக்குமான உரையாடல் (சங்குத்தேவனின் தர்மம்), அடித்தட்டு மக்களின் ஊர் சித்தரிப்பு (பொன்னகரம்) என்று புதுமைப்பித்தனின் உரைநடை நவீனமடைந்து விடுகிறது. புதுமைப்பித்தனின் உரைநடை நவீனமடைந்தது ஏதோ ‘தற்செயல்’ நிகழ்வெனத் தோன்றவில்லை. அவருடைய சிறுகதைகளென (தழுவல் கதைகள் நீங்கலாக) 97 கதைகள் ஆ.இரா.வெங்கடாசலபதி தொகுத்த ‘புதுமைப்பித்தன் கதைகள்’ நூலில் இடம்பெற்றுள்ளன. இதில் 45 கதைகள் 1934ஆம் ஆண்டு வெளிவந்திருக்கின்றன. அதே ஆண்டுதான் புதுமைப்பித்தனின் முதல் கட்டுரை குலாப்ஜான் காதல் வெளியாகி இருக்கிறது. இந்த நாற்பத்தைந்து கதைகளையும் ஒரே ஆண்டில் எழுதும் வீச்சு புதுமைப்பித்தனுக்கு உண்டு.
‘வாரத்துக்கு ஐந்து ஆறு கதைகளிலிருந்து வருஷத்துக்கு ஒன்று என்று திருமூலர் அந்தஸ்து எட்டியிருக்கிறேன்’ என்று அவரே சொல்கிறார். எம்.வேதசகாயகுமார் 1934ல் வெளியான கதைகளில் பலவும் முன்னரே புதுமைப்பித்தனால் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்.’
/’நான் எழுத வேண்டியதுதான் பாக்கி;அது நேராகப் பத்திரிக்கையின் பக்கங்களில் போய் உட்கார்ந்து கொள்வது நிச்சயம் என்று கருத வேண்டாம். அப்படி ஒன்றும் இல்லை. ஒரு காலத்தில் என் கதைகளைப் போல் பத்திரிக்கைகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவை வேறு இருக்கவே முடியாது.’ /என்று புதுமைப்பித்தன் சொல்வதை வைத்து வேதசகாயகுமாரின் கூற்றை ஏற்கலாம். ஆகவே புதுமைப்பித்தனினின் இலக்கியப் பிரவேசம் திடீரென 1934ல் நிகழ்ந்து விடவில்லை. அதற்கு முன்னதாகவே பல ஆண்டுகள் தமிழ் கவிதையையும் உரைநடையையும் ஆங்கில உரைநடையையும் கவனித்தே வந்திருக்கிறார். சுந்தர ராமசாமி சொல்வது போல் புதுமைப்பித்தனின் உரைநடையில் ஆங்கிலத்தின் தாக்கம் நேரடியாகவே உண்டு.
‘அன்று இரவு இருவர் உறங்கவில்லை’ , ‘அவன் ஏன் ஒரு மனிதன் மாதிரி வெளியே வரக்கூடாது’ போன்ற பதங்கள் அடிக்கடி அவர் கதைகளில் வருவதைப் பார்க்க முடியும். ஆனால் இதுவொரு உத்திதான். புதுமைப்பித்தன் தன் மொழியை 1934லேயே மிகச்சரியாக அடைந்துவிட்டார் என்று சொல்வதற்கான ஏதுக்கள் அந்த வருடக் கதைகளிலேயே உள்ளன. வெவ்வேறு வகையான உரைநடைகளுக்குள் மிக இயல்பாக அவர் மொழி புகுந்து புறப்படுவதை இக்கால கதைகளில் காண்கிறோம்.
எழுதத் தொடங்கிய புதுமைப்பித்தனின் ஆளுமையைக் குறித்து இப்படி ஒரு சித்திரத்தை முன்வைக்கலாம். அவரிடம் ஒரு பொது அறிவுஜீவித்தன்மை இருந்தது. ஆகவே அவருடைய தேடல்கள் கதைகள் கதைச் சந்தர்ப்பங்கள் என்பதையெல்லாம் தாண்டி விரிந்து செல்கிறது. மரபிலக்கியம் குறித்த ஆழமான அறிவும் அவற்றை அப்படியே கொண்டாடும் பழமைவாதியாக இல்லாமல் அவற்றில் இருந்து தேர்வு செய்து ருசிக்கும் திறனும் புதுமைப்பித்தனிடம் உண்டு. (அவர் சங்க இலக்கியங்களை வெறும் யதார்த்த சித்தரிப்புகள் என்று கீழிறக்குவதைக் காணலாம்). அவர் கதைகளின் ஒருமை,கரு போன்றவற்றைவிட மொழிநடைக்கே அதிக முக்கியத்துவம் தருகிறவராக இருந்திருக்கிறார். இதற்கு புதுமைப்பித்தனிடம் கதைச்சரக்கு (அவர் பாஷை!) இல்லை என்பது அர்த்தமல்ல. அரிதாரம் பூசும் கணத்தில் இன்னொருவராக மாறிவிடும் திறமைபெற்ற கூத்துக்காரனைப் போல புதுமைப்பித்தன் அனாயசமாக கதையுணர்ச்சிகளில் நுழைந்து விடுகிறவர்தான். ஆனால் கதையுணர்ச்சியைவிட அதைச் சொல்லும் மொழி உணர்ச்சிக்கு ரொம்ப பக்கத்தில் போக வேண்டும் என்ற தீராத ஆவல் அவரிடமிருந்திருக்கிறது. இந்த ஆவல்தான் பிற்கால தமிழ் உரைநடையின் உணர்ச்சி நிலையை தீர்மானித்தது. ஆனால் அதுவேதான் புதுமைப்பித்தனின் தொடக்ககால கதைகள் – அதாவது அவர் கதைகளில் சரிபாதி – பலகீனமானவை என்ற பெயரையும் அவருக்கு சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அதாவது புதுமைப்பித்தன் அறிந்தோ அறியாமலோ ஒரு கரட்டு வழியில் முட்களை பிடுங்கிவீசும் வேலையைப் பார்த்திருக்கிறார். பாதையில் சென்ற முதல் வண்டியே அவருடையது என்பதால் அவர் கதைகள் சற்று ‘கடகடத்தது’ போலத் தெரிகின்றன.
2
தமிழ்ச் சிற்றிதழ் சூழல்தான் புதுமைப்பித்தன் உள்ளிட்ட மணிக்கொடி கால முன்னோடிகளை நம்மிடம் கொண்டு வந்தது அளித்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எந்தவொரு இயக்கமும் நிறைகள் மட்டுமே நிறைந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சிற்றிதழ்களின் முக்கியமான குறைபாடு அவை புனைக்கதை எழுதுகிறவர்களைச் சுற்றி புனைவுகளை உருவாக்கத் தொடங்கியது என்று சொல்லலாம். கதைகள் ‘அபூர்வங்கள்’ என்றும் படைப்பின் கணம் மிக மிக உன்னதமானது என்றும் ஒரு உறுதிப்பாட்டினை சிற்றிதழ்கள் அறிந்தோ அறியாமலோ உருவாக்கிவிட்டன. அதாவது படைப்பாளிகள் அப்படி இருக்கவில்லை. ஆனால் சிற்றிதழுக்கு என்று ஒரு கண்டிப்பான தீவிரமான மொழி உருவாகிவிட்டது. இலக்கியத்தில் கண்டிப்பும் தீவிரமும் கூடாதா? நிச்சயமாக வேண்டும். ஆனால் அது ஒரு படைப்பாளியின் அகச்செயல்பாட்டில் இருக்க வேண்டுமே ஒழிய மொழியில் வெளித்தெரிய வேண்டிய அவசியமில்லை என்பது என் நிலைப்பாடு. சுந்தர ராமசாமி தொ.மு.சி.ரகுநாதனை 1978ல் ஒரு பேட்டி எடுத்திருக்கிறார். அப்பேட்டியில் சுரா புதுமைப்பித்தன் பற்றி முன்வைக்கும் பல கேள்விகள் அயர்ச்சி தருகின்றன. அதுவொரு வானொலிப்பேட்டி. பொது வாசகர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதுதான் என்றாலும் சுராவின் சில கேள்விகள் புதுமைப்பித்தனை தன்னுடன் ஒப்பிட்டு கேட்கிறாரோ என்ற சந்தேகத்தை அளித்தன.
‘தன் படைப்பு என்ன பிரதிபலிப்பை ஏற்படுத்திற்று என்பதை அவர் மதிக்கும் நண்பரிடமோ அல்லது வாசகரிடமோ ஆராயும் குணம் அவருக்கு இருந்ததா?’
சுராவுடைய கேள்வி தவறெனச் சொல்ல வரவில்லை. இது அக்காலகட்டத்தின் ஒரு மனநிலை. அதாவது ஒரு படைப்பாளி எப்போதும் போதத்தை கட்டுக்குள் வைத்து அமர்ந்திருக்கும் ஞானி போல இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு! எழுதிய படைப்புகளை குழந்தைகள் போல செல்லஞ்கொஞ்சும் இயல்புதான் புதுமைப்பித்தனிடம் இருந்தது. சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல அவர் ஒரு பொது அறிவுஜீவியும்கூட. ஆகவே தன்னுடைய ஒட்டுமொத்த செயல்பாட்டின் பகுதியாகவே தன் கதைகளையும் கண்டிருக்கிறார்.
‘என் கதைகளில் எதையாவது ஒன்றைக் குறிப்பிட்டு அது பிறந்த விதத்தைச் சொல்லுவதென்றால் ரிஷிமூலம் நதிமூலம் காணுகிற மாதிரிதான். சில ஆபாச வேட்கையில் பிறந்திருக்கலாம்; வேறு சில அவை சுமக்கும் பொருளுக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு காரியம் கைகூடாதபோது எழுதப்பட்டிருக்கலாம். இதனால் சுயமாகக் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறவனுக்கு இன்னதுதான் இந்தக் கதையை தூண்டியது என்று சொல்வது எளிதல்ல. கேட்டால் , “என்னமோ தோணித்து, எழுதினேன்” என்றுதான் சொல்லவேண்டியிருக்கும்.’
மதிக்கத்தகுந்த படைப்பாளிகள் பலரும் இதே போன்றதொரு மனநிலையில் தான் எழுதி இருப்பார்கள். ஆனால் புதுமைப்பித்தன் இங்கும் மீறிச் செல்கிறார். அவருடைய முக்கியமான (ஆனால் முழுமைபெறாத) கதைகளில் ஒன்றான ‘கோபாலபுரம்’ கதையை ஒரு சித்திரத்தைப் பார்த்து அப்போது தோன்றியதை கதையாக எழுதியதாகச் சொல்கிறார்! நாசகார கும்பல் என்ற மிக முக்கியமான கதையும் அப்படியான ஒரு அவசர மனநிலையில் துண்டு துண்டாகவே எழுதப்பட்டிருக்கிறது.
இன்று சில படைப்பாளிகள் ‘அக்கதை எழுதப்பட்ட காலத்தில்…’ என்றெல்லாம் பேசத் தொடங்குவதை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இவ்வளவு நீட்டிச் சொல்லக் காரணம் புதுமைப்பித்தனுக்கு கதைச் செயல்பாடு என்பது உட்கார்ந்து யோசித்து அழுத்தி வெளியேற்ற வேண்டிய ஒன்றாக இருக்கவில்லை என்பதைச் சுட்டவே. அதீதமான வாசிப்பும் கூர்மையான பிரக்ஞையும் அவர் கதைகளுக்கு எந்த முயற்சியும் இல்லாமலேயே சிறப்பான வடிவத்தை வழங்கி இருக்கின்றன. இவற்றை மனதில் கொண்டு புதுமைப்பித்தன் கதைகளை அணுகுவதே சரியாக இருக்கும்.
3
புதுமைப்பித்தன் கதைகளில் சிறந்தவை என்று சூழலால் ஏற்கப்பட்டவை என்று சிலவற்றைச் சொல்லலாம். செல்லம்மாள், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், கபாடபுரம், கயிற்றவு , வேதாளம் சொன்ன கதை, காலனும் கிழவியும், சிற்பியின் நரகம் மற்றும் சில கதைகள். இக்கதைகளில் பலவும் அவருடைய ‘பிற்கால கதைகள்’. ஆனால் இன்று புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்ற ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றில் சரிபாதிக்கும் அதிகமாக அவருடைய ‘தொடக்ககால’ கதைகள்தான். ஆனால் அவரே சொன்னது போல அவர் ‘திருமூலர்’ அந்தஸ்து பெற்ற பிறகு எழுதிய கதைகளே இன்றும் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. புதுமைப்பித்தனின் பிரம்ம ராக்ஷஸ் என்ற கதைக்கு முந்தைய கதைகளை அவருடைய ‘தொடக்ககால’ கதைகள் என்று உத்தேசமாக வரையறுக்கலாம். இக்கதைகளின் பலங்களும் பலகீனங்களும் புதுமைப்பித்தனுக்கு பிறகான தமிழ் புனைவிலக்கியத்தின் உரைநடை போக்கை தீர்மானித்ததில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன என்று இக்கதைகளை இன்று வாசிக்கும்போது உணர முடிகிறது.
புதுமைப்பித்தனின் தொடக்க கால கதைகளின் முதன்மையான பலம் அவற்றின் சித்தரிப்பு நேர்த்திதான்.
/உடனே கையிலிருந்த பில் புஸ்தகத்தில் லேசாக எழுதி, மேஜையில் சிந்திய காப்பியில் ஒட்ட வைத்துவிட்டு, ஸேவரி எடுக்கப்போகிறான். “ஒரு கூல் டிரிங்க்!” “ஐஸ்கிரீம்!”/
‘இது மிஷின் யுகம்!’ என்ற கதையில் வரும் ஒரு ஹோட்டல் சித்தரிப்பு இது. அக்கதை அதிகம்போனால் மூன்று பக்கங்கள் இருக்கும். சூழலை யதார்த்தமாகவும் கூர்மையாகவும் காட்டிவிடும் வரிகள் புதுமைப்பித்தனில் நிறையவே உண்டு. இச்சித்தரிப்புகள் புறம் சார்ந்த வர்ணனைகளாக இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். பேராசிரியர், துப்பறியும் ஆள், நீதிபதி, எழுத்தாளன், ரிக்ஷா இழுப்பவர், வேசி,ஆபீஸ் குமாஸ்தா, பிச்சைக்காரன், இல்லத்தரசி, குழந்தைகள் என யாரைப் பற்றி எழுதும்போது இந்த சித்தரிப்பு நேர்த்தி புதுமைப்பித்தனை கைவிடுவதில்லை.
புதுமைப்பித்தன் அதிகமாக ‘போற்றப்படுவதற்கு’ காரணமான மற்றொரு அம்சம் பெண்கள் குறித்த அவருடைய ‘முற்போக்கான’ சித்தரிப்புகள். புதுமைப்பித்தனின் பெண் பாத்திரங்கள் முற்போக்குத்தன்மை,கரிசனம் போன்றவற்றைவிட அதிகமாக யதார்த்தத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன என்றே எனக்குப்படுகிறது. ‘உணர்ச்சியின் அடிமைகள்’ புதுமைப்பித்தனின் தொடக்ககால கதைகளில் ஒன்று. அவ்வளவாக கவனிக்கப்படாத கதையும்கூட. புதிதாக திருமணமான தம்பதிகளின் சல்லாபம். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. அப்போதும் சல்லாபம். அந்தக் குழந்தைக்கு குழந்தை பிறந்த பிறகும்கூட இவர்களுடைய சல்லாபம் ஓய்வதில்லை என்று கதை முடிகிறது. மேம்போக்காக பார்க்கும்போது சாதாரண கதை என்றே தோன்றுகிறது. ஆனால் இக்கதையின் சர்வ சாதாரணத்தன்மைதான் இதில் ஒரு அசாதாரணத்தைச் சேர்க்கிறது. தொடக்ககாலத்தில் கதைகள் கணவன் மனைவி உறவை ரொம்ப ‘இயல்பானது’ போலவே காட்டிவந்தன. தாம்பத்தியத்தில் ஆண் பெண் என்ற உயிர்களைத் தாண்டிய வேறொரு ‘உன்னத’ வாழ்க்கை நோக்கு இருக்கிறது. ஆகவே அவ்வுறவில் ஏற்படும் பிசகுகள் தோல்விகள் எல்லாமும் சீர்செய்யப்படக்கூடியவை, இயல்பானவை என்ற வாழ்க்கை நோக்குதான் பரவலாக இருந்திருக்கிறது. இல்லறம் என்ற சொல்லே இல்லத்தில் தனிமனிதர்களைத் தாண்டிய வேறொரு புனிதக் கற்பனை செயல்படுவதைச் சொல்வதுதானே! ஆனால் இக்கதை இல்லறத்தை முத்தத்துக்கான ஏக்கமாகச் சுருக்கிறது. அதேநே யதார்த்த போதமற்ற கற்பனாவாததளத்திலும் கதை இயங்கவில்லை. புதுமைப்பித்தன் மனிதனின் அகவாழ்க்கையை எழுதும் போது பெண்ணுக்கு இருக்கும் அதீத சுதந்திரத்தை கவனிக்கும் படைப்பாளியாக இருக்கிறார். இரண்டு உலகங்கள் என்ற கதையில் மனைவி அவளாகவே வந்து கணவனின் உதட்டில் முத்தமிடுகிறாள். இது சாதாரண நிகழ்வுதான் என்றாலும் அதுவரையிலும் எழுதிக் காட்டப்படாமல்தான் இருந்திருக்கிறது. இன்றும்கூட மணம் கடந்த உறவுகள், காதலுறவுகளில் உடல் சேர்க்கை விவரணைகள் இடம்பெறுவது போல மணவுறவில் இருக்கும் உடலிணைவுகள் எழுதப்படுவதில்லை. பல எழுத்தாளர்கள் மீறல்களில் இருக்கும் கிளுகிளுப்பை மட்டுமே இலக்காக்குவதே இதற்கு காரணம். மாறாக புதுமைப்பித்தன் தாம்பத்தியத்தில் உள்ள ருசிகளை எழுதி இருக்கிறார். மறுமுனையில் குடும்ப வாழ்க்கை பெண்ணுக்கு இழைக்கும் அநீதிகளும் அவரால் கூர்மையாக எழுதப்பட்டுள்ளது. அங்கும் அவர் பெண்ணை சுயம் உடையவளாகவே கற்பனை செய்கிறாள்.
வாடாமல்லிகை என்ற கதையை எடுத்துக் கொள்ளலாம். அக்கதையில் வரும் பெண்ணுக்கு ஆண் உடல்தான் தேவை என நேரடியாகவே சொல்லப்படுகிறது. அத்தேவையை உணர்ச்சிகரமான காதலால் அடையவே அவள் முயல்கிறாள். ஆனால் அவளை திருமணம் செய்து கொள்வதாக ஒரு ‘புரட்சிக்காரன்’ சொல்கிறான். அவனுடைய லட்சியநோக்கு அவளுக்கு கசப்பளிக்கிறது. அவன் நல்லவன்தான். ஆனால் அதிலிருந்து இன்னும் ஒரு புள்ளி அதிகமாக அவள் எதிர்பார்க்கிறாள். அது காதல்! லட்சியவாதத்தின் உத்தரவாதத்தைவிட காதலின் ஸ்திரத்தன்மையை மட்டுமே அவள் விரும்புகிறாள். வழி என்றொரு கதையிலும் நடப்பது இதுவே. இப்பெண்கள் தங்கள் உடல்தினவை மறைத்துக் கொண்டு அன்புக்காக ஏங்குகிறவர்களாக பாசாங்கு செய்வதில்லை. அதேநேரம் உடல் தேவைக்கு பின் இன்னொரு தேவையும் இருப்பதும் கோடிடப்படுகிறது. புதுமைப்பித்தனின் இவ்வகை கதைகளில் ஒரு பிரச்சினை இருக்கிறது. பெரும்பாலும் கதை முடிவில் இப்பெண்களை கொன்று விடுகிறார் (வாடா மல்லிகை,வழி, கோபாலபுரம்). கல்யாணி என்ற கதையில் மட்டுமே ஒரு நிதானத்துக்கு வந்திருப்பதாகப்படுகிறது.
புதுமைப்பித்தன் கதைகளின் மற்றொரு முக்கியமான அம்சம் சமூக சித்தரிப்பு. ஒரு வகையில் அவருடைய தனித்துவம் என்றும் சொல்லலாம். புதிய நந்தன்,தனி ஒருவனுக்கு,தியாகமூர்த்தி போன்ற கதைகள் சமூக சித்தரிப்பின் வலிமை கூடியவை. சமூக விமர்சனம் என்பதைத் தாண்டி இக்கதைகளில் சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் அதன் எல்லைகளும் குரூரங்களும் கோடிடப்படுகின்றன. பைரப்பாவின் குடும்பம் சிதைகிறது நாவலில் வருவதற்கு இணையான கிராம சமூகம் சார்ந்த சித்தரிப்புகள் புதுமைப்பித்தன் கதைகளில் உண்டு. ஆனால் சென்னையைப் பற்றி சித்தரிப்பு விமர்சனம் என்ற அளவில் மட்டுமே பொருட்படுத்தத்தக்கதாக உள்ளது.
புதுமைப்பித்தனின் தொடக்ககால கதைகளில் தென்படும் மற்றொரு முக்கியமான அம்சம் என மரபு குறித்த குழப்பமும் ஆவேசமும் நிறைந்த அவருடைய பார்வையைச் சொல்லலாம். அருவமானவற்றை பேசுவதற்கு புதுமைப்பித்தன் இருளை தேர்ந்து கொள்கிறார். காளி கோவில்,ஞானக்குகை,சிற்பியின் நரகம், ஒரு கொலை அனுபவம் என பல கதைகளில் இருள் ஒரு முக்கியமான பாத்திரமாக வெளிப்படுகிறது.
இக்கதைகளின் குறைபாடுகள் என்ன? பல கதைகளில் முடிவு சட்டென்று மரணத்தில் போய் நிற்கிறது. தெருவிளக்கு என்ற ஒரு கதை மட்டுமே மரணத்துக்கு நியாயம் செய்வதாக அமைந்திருக்கிறது. மரணத்தில் கதையை முடிப்பது பல இடங்களில் அபத்தமான ஒன்றாகவே மாறி நிற்கிறது. புதுமைப்பித்தன் பெரும்பாலான கதைகளில் ‘அவசரப்படுகிறார்’ என்ற விமர்சனத்துக்கு காரணம் இந்த இறப்பில் கொண்டுபோய் கதையை முடிக்கும் தன்மைதான் என்று நினைக்கிறேன்.
4
புதுமைப்பித்தன் இரண்டாம் பகுதி கதைகளில் – பிரம்மராக்ஷஸ் கதைக்குப் பிறகானவை – அவருடைய பலங்கள் அனைத்தும் ஒருங்கு திரண்டு வெளிப்படுவதைக் காண்கிறோம்.
இப்படிச் சொல்லலாம். புதுமைப்பித்தனின் தொடக்ககால கதைகள் ஒட்டுமொத்தமாக தமிழ் உரைநடை உருவாக்கத்திற்காக அவர் செய்த ‘தியாகம்’. அக்கதைகளில் தன்னளவில் மெச்சத்தகுந்த அம்சங்கள் உண்டு என்றாலும் அதையும் கடந்து அவை விஸ்தரித்து இருக்கும் எல்லைகளை இன்னுமதிகமாக மதிக்கத்தக்கவை. புதுமைப்பித்தனின் இரண்டாம் பகுதி கதைகளில் ஒரு அலை அடங்கி நிதானம் கூடி வருவதைக் காண்கிறோம். செல்லம்மாள் போல மரணத்தை முன்னறிவித்து சொல்லப்படும் கதைகளில் கூட மரணம் மிக மிக நிதானமாகவே கையாளப்படுகிறது. நாசகார கும்பல் கதையை தனி ஒருவனுக்கு கதையின் நீட்சியாக வாசிக்கலாம். நாசகாரக் கும்பலில் மரணம் சம்பவிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும் புதுமைப்பித்தன் அதை தவிர்த்துச் செல்கிறார். வடிவரீதியான முழுமை பெறாத கதைகள் என்ற விமர்சனத்தை பல கச்சிதமான கதைகள் வழியாக புதுமைப்பித்தன் கடந்து போயிருப்பதைக் காண்கிறோம் (செல்லம்மாள்,கயிற்றரவு, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், காஞ்சனை, விநாயக சதுர்த்தி). கரும்பகடி என்ற நிலையில் இருந்து நகர்ந்து இயல்பாகவே புன்னகை கூடிய கதைகள் வெளிப்படுகின்றன (எப்போதும் முடிவிலே இன்பம், கட்டிலை விட்டிறங்காக்காதை, வேதாளம் சொன்ன கதை). மரபின் இருட்டை இன்னும் உக்கிரமாக எதிர்கொள்ளும் மரபின் மீதான கேள்விகளை ஆழப்படுத்தும் கதைகள் (மனக்குகை ஓவியங்கள், கபாடபுரம்,கயிற்றரவு) என புதுமைப்பித்தனின் பலங்கள் அனைத்தும் முதிர்ச்சி அடைந்த அவரால் மட்டுமே படைக்கப்படக்கூடிய தனித்துவம் கொண்ட படைப்புலகமாக இது விரிந்திருக்கிறது.
இக்கதைகளின் சில பொதுக்கூறுகள் வழியாக புதுமைப்பித்தனை புரிந்து கொள்ள முயலலாம்.
விநாயக சதுர்த்தி, காஞ்சனை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற கதைகளில் லௌகீகத்தின் இடர்பாடுகளை சற்று சலிப்புடன் ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத் தலைவனைக் காண்கிறோம். உணர்ச்சியின் அடிமைகள் போன்ற கதைகளின் நீட்சியாக இந்த குணத்தை வாசிக்கலாம். கடவுள் சித்து வேலையின் மூலம் அரிசி மூட்டையை வரவழைக்கும்போது ‘இந்த வேலையெல்லாம் வேண்டாம்’ என்று சொல்லும் விவேகம் கந்தசாமிப் பிள்ளைக்கு இருக்கிறது. சமூகம் விமர்சனம் என்ற புள்ளியில் இருந்து நகர்ந்து புதுமைப்பித்தன் அதைப் புரிந்து கொள்ள முடிவதன் தடயங்களாக இந்த ஏற்றுக்கொள்ளும் தன்மையைப் பார்க்கலாம்.
நியாயந்தான், நாசக்காரக் கும்பல் போன்ற கதைகளில் கோபத்தைவிட சமூக இயக்கத்தில் மனிதர்களிடம் வெளிப்படும் தவிர்க்கவே முடியாத கீழ்மைகளே பேசப்படுகின்றன. எதிர்புறத்தில் எழுத்தாளனின் கையறு நிலையையும் அவலத்தையும் அடக்கத்துடன் சொல்லும் நிசமும் நினைப்பும், ஒருநாள் கழிந்தது போன்ற கதைகளையும் புதுமைப்பித்தன் எழுதி இருக்கிறார். கடிதம் கதையில் உள்ள கோபமோ வெளிப்பூச்சு,பொய்க்குதிரை போன்ற கதைகளில் வெளிப்படும் விரக்தியோ இங்கு தென்படுவதில்லை.
பாட்டியின் தீபாவளியில் மொத்த குடும்பத்தையும் காலராவுக்கு பலிகொடுத்து அநாதையாக அமர்ந்திருக்கும் ஒரு கிழவியைப் பற்றிய சித்திரம் உக்கிரமாக பேசப்பட்டிருக்கும். ஆனால் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஊரே கொந்தளிக்கும் சித்திரத்தை அளிக்கும் ‘படபடப்பு’ என்ற கதையில் நிதானம் கூடியிருப்பதைக் காண்கிறோம்.
இந்தத் தன்மைதான் புதுமைப்பித்தனை குழந்தைகள் உலகம் குறித்த இன்னும் கூர்மையும் நெகிழ்வும் கொண்ட அவதானிப்புகளுக்கு நகர்த்துகிறது.
ஒருநாள் கழிந்தது கதையில் முருகதாசர் இரவு நேரத்தில் கடைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பாத பெண் குழந்தையை தேடிப்போகிறார். அவள் குதிரை வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு குதிரைவிடச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கடவுளும் கந்தசாமிப் பிள்ளையில் வரும் சிறுமியும் அதே கள்ளமின்மையும் குறும்புத்தனமும் கொண்டவள் தான்.
/“வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா?” என்று கூப்பிட்டது. குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள். ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள். “தாத்தா, தோத்துப்போனீயே” என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை. “ஏன்?” என்று கேட்டார் கடவுள். கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம். “முந்தியே சொல்லப்படாதா?” என்றார் கடவுள். “ஆட்டம் தெரியாமெ ஆட வரலாமா?” என்று கையை மடக்கிக்கொண்டு கேட்டது குழந்தை./
இது கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதையில் வரும் ஒரு சித்தரிப்பு. சிற்றன்னை கதையில் அம்மா இறந்து அப்பா வேறொரு திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தையின் அகம் அடையும் மாற்றங்களை மிக நுண்மையாக எழுதிச் செல்கிறார்.
/தாயார் படத்தின் முன் நின்று, “அம்மா, அப்பாக் காப்பாத்து, ராசாக் காப்பாத்து, என்னைக் காப்பாத்து” என்று விழுந்து கும்பிடுகிறாள். காரியம் முடிந்த மாதிரி, மூலையில் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருந்த என்ஜினிடம் போகிறாள். ஏதோ ஞாபகம்வந்தவள் போல, படத்திடம் திரும்பிவந்து, “சித்தியைக் காப்பாத்து” என்று படத்திற்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு ரயில் வண்டி சகிதம் சட்டையையும் தூக்கிக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு மாடிப்படிகள் வழியாக பங்களாவின் பின்புறம் நோக்கிப் போகிறாள்./
தமிழில் வெளிவந்த கதைகளில் மிகச்சிறந்த குழந்தைச் சித்தரிப்பு இடம்பெற்ற கதை சிற்றன்னையாகவே இருக்க இயலும். (சிற்றன்னை முழுமையாக எழுதி முடிக்கப்படாத கதை எனத் தோன்றுகிறது).
புதுமைப்பித்தன் வேறொரு வகையிலும் வாழ்க்கை மீதான ஒரு விவேகம் நிறைந்த விலகலை மேற்க்கொள்கிளார்.
/பதினான்கு வருஷங்கள் கழித்து மறுபடியும் அதே உணர்ச்சிச் சுழிப்பு. அயோத்திக்கு ஏற்பட்ட சாபத்தீடு நீங்கவில்லையா?/
மனித மனத்தின் உணர்ச்சி சுழிப்புகள் மீதான ஒரு அவநம்பிக்கை புதுமைப்பித்தனிடம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. குழந்தைகளை நோக்கியும் மனிதர்கள் பற்றிய பெரிய அபிப்பிராயமின்மை நோக்கியும் புதுமைப்பித்தன் இந்த விலகலால்தான் நகர்கிறார் என்று தோன்றுகிறது. எல்லா பெரும் படைப்பாளிகளும் ஒரு புள்ளியில் இந்த விலகலை அடையவே செய்கின்றன. வாழ்க்கையின் உணர்ச்சிகளையும் அழகுகளையும் திரட்டி மண்ணும் மனிதரும் எழுதிய சிவராம காரந்த்தான் விலகி நிற்பவனின் விவேகத்துடன் ‘அழிந்த பிறகு’ எழுதினார்.
தனக்கும் தன் மரபுக்குமான உறவு குறித்து உக்கிரமாக புதுமைப்பித்தன் தன்னை கேட்டுக் கொள்ளும் படைப்பு கபாடபுரம். அதன் ஒவ்வொரு படிமமும் விரித்துப் பேசத்தக்கவை. ஆனால் புதுமைப்பித்தனின் (ஏறத்தாழ) கடைசிக்கதையான கயிற்றரவே நான் அவருடைய சிறந்த கதை என்பேன். அவருடைய படைப்புலகம் முழுக்க கடந்தகாலத்திற்கும் (வரலாறு,தொன்மம்,புராணம்), நிகழ்காலத்திற்குமான ஊடாட்டமாகவே இருந்திருக்கிறது. புதுமைப்பித்தனால் கடவுளின் சாயல் மரபு சார்ந்த மதிப்பீடு கூட நெருங்க முடியாத விபரீத ஆசை போன்ற கதையை ஒரு பக்கம் எழுத முடிந்திருக்கிறது. மற்றொரு எல்லையில் கபாடபுரமும் எழுத முடிந்திருக்கிறது. கயிற்றரவு ஒரு வகையில் யதார்த்தம், மரபு என இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணிக்கும் கதை. கதைப்பரப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் அறிவின் கட்டுப்பாட்டால் வழிநடத்தும் புதுமைப்பித்தன் இந்தக்கதையில் மட்டும் தன்னைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்கிறார்.
/‘கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிகுந்தோங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம் போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது . . . ஓடிக்கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே. பிளவு – பின்னம் விழாமல் இழுக்கப்பட்டுவரும் ஒரே கம்பி இழையின் தன்மைதானே பெற்றிருக்கின்றது. இல்லை – இல்லை. சிலந்திப் பூச்சி தனது வயிற்றிலிருந்து விடும் இழை போல நீண்டுகொண்டே வருகிறது. இன்று – நேற்று – நாளை என்பது எல்லாம் நம்மை ஓர் ஆதார எண்ணாக வைத்துக்கொண்டு கட்டிவைத்துப் பேசிக்கொள்ளும் சவுகரியக் கற்பனைதானே. நான் என்ற ஒரு கருத்து, அதனடியாகப் பிறந்த நானல்லாத பல என்ற பேத உணர்ச்சி, எனக்கு முன், எனக்குப் பின் என்று நாமாக வக்கணையிட்டுப் போட்டுக்கொண்ட வரிகள் . . . இவை எல்லாம் எத்தனை தூரம் நிலைத்து நிற்கும். . . . நான், நான் என நினைத்த – நினைக்கும் – நினைக்கப்போகும் பல தனித் துளிகளின் கோவை செய்த நினைப்புத்தானே இந்த நாகரிகம் . . . . /
இந்தப் பத்தியைப்போலவே கயிற்றரவு கதை முழுக்கவும் முரண் இடம்பெறுகிறது. கங்கை நதி(உருவம்), காலநதி(அருவம்) என யதார்த்தத்துக்கும் பிரக்ஞைவெளிக்கும் இக்கதை மாறி மாறித் தாவுகிறது. பனைமரத்துக்கு அடியில் அமர்ந்து மலங்கழிக்கும் பரமசிவன் பிள்ளை பாம்பு கடித்து இறப்பது என்ற சாமான்யமான சம்பவத்தைக் கொண்டு புதுமைப்பித்தன் இக்கதையில் எட்டித் தொடும் எல்லைகள் விஸ்தாரமானவை. அவருடைய மரணத்திற்கு சற்று முன்பு எழுதப்பட்ட கதை என்பதால் காலம் முழுக்க அறிவுக்கு தன்னை திறந்து வைத்திருந்த மனிதனின் மரணம் பற்றிய உச்ச சாத்தியமான கற்பனை என்று இக்கதையைச் சொல்லலாம்.
இன்று புதுமைப்பித்தனை ஒரு தனித்த படைப்பாளியாக மதிப்பிடும்போது தமிழ்ச் சிறுகதைச் சூழல் வளர்ந்திருக்கும் இந்தச் சூழலில் வைத்து அணுகும்போது அவரை இவ்வளவு உயரங்கள் தொடவைத்த பண்பே அவருடைய எல்லையாகவும் மாறி நிற்பதைக் காண்கிறோம். அறிவினால் வழிநடத்தப்படும் படைப்புலகம் புதுமைப்பித்தனுடையது. ஜோடனையாக அல்லாமல் தன்னை அறிவின் பிரதிநிதியாக மிகத்துல்லியமாக அவர் மாற்றிக் கொண்டார் என்பது உண்மையே என்றாலும் அந்த லட்சியவாதமே அவர் படைப்புலகுக்கு பாத்தி கட்டிவிடுகிறது. புதுமைப்பித்தன் நொய்மையான அந்தரங்கமான படைப்பாளி இல்லை. அவர் ஒரு படைப்பியக்கம். அதன் காரணமாகவே நொய்மைகளில் இருந்து முளைக்கும் சில அபூர்வங்களை புதுமைப்பித்தன் கதைகள் தவறவிடுகின்றன. அவருடைய சமகாலத்தவர்களான மௌனி,குபரா போன்றோர் சாதாரணமாக தொட்டு நகர்ந்திருக்கும் சில புள்ளிகள் புதுமைப்பித்தன் கைக்கு கடைசிவரை எட்டவில்லை. இதுவொரு பெருங்குறையா என்று தோன்றலாம். ஆனால் தமிழ்ச் சிறுகதையின் ருசிபேதம் தோன்றத் தொடங்கும் புள்ளி என்பதால் இது குறிப்பிடும் அருகதை உடையதே. புதுமைப்பித்தன் இந்த நொய்மையால் உருவாகும் எல்லையை கயிற்றரவு கதையில் தாண்டிவிட்டார் என்றே தோன்றுகிறது.