விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி

எழுபது-எண்பதுகளில் பொங்கல் தினத்தன்று சூரியன், கோலம், கரும்பு, வாழைப்பழம், பரங்கிப்பூ, சர்க்கரைப் பொங்கல் இவற்றுடன்கூட தமிழர் இல்லங்களில் தவறாது இடம்பெற்றது சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள். இதற்கு மகுடம் வைத்ததுபோல் அகில இந்திய வானொலியில் தமிழ் கிரிக்கெட் வர்ணனை. ஐந்து நாட்களுக்கு வானொலியுடன் காதைக் கட்டிப்போட்ட வித்தகர்கள் அவர்கள். இராமமூர்த்தி, கூத்தபிரான், அப்துல் ஜபார், கணேசன், இவர்களுடன் கூட வல்லுநர்கள் ரங்காச்சாரி,K.S.S.மணி.  கிரிக்கெட்டில் ஆர்வத்தைப் பெருக்கவும் அதன் நுணுக்கங்களை அறியவும் எனக்கு (என் வயதையொத்தவர்களுக்கு) தமிழ் கிரிக்கெட் வர்ணனைகள் மிக முக்கியமானவை. 

இந்தப் பொங்கல் அந்த வகையில் ஒரு சோகத்தை நிறைத்திருக்கிறது. வர்ணனையாளர் இராமமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன் காலனமான செய்தி பொங்கலன்றுதான் கிடைத்தது. இது பல நினைவுகளைக் கலைத்து கீழடுக்களிலிருது மேலெழுப்பியிருக்கிறது. திரு இராமமூர்த்தி ஒரு ஐ.ஏ.ஏஸ் அதிகாரி. பண்முக ஆற்றல் கொண்டவர். இந்திய எண்ணைய் வித்து விவசாயிகள் கூட்டுறவுக் கழகத்தின் (Tamil Nadu Cooperative Oil Seeds Growers Federation) மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறார். ஓய்விற்க்குப் பிறகு தி ஹிந்துவின் ஆசிரியக்குழு ஆலோசகராகப் பத்தாண்டுகளுக்கு மேல் உதவியிருக்கிறார். கிரிக்கெட்டைப் போலவே வினாடி வினா நடத்துதல், சிக்கலான ஆங்கிலக் குறுக்கெழுத்துப் போட்டிகளைத் தயாரித்தல் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவர். இலக்கிய ஆர்வங்கொண்ட இராமமூர்த்தின் மூன்று ஆங்கில நூல்களை எழுதியிருக்கிறார் (Mahatma Gandhi: The Last 200 Days – படிக்கவேண்டிய புத்தகப் பட்டியலில் இருக்கிறது). திருவையாற்றில் நடைபெறும் தியாகராஜா ஆராதனைகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.  எண்பத்தாறு வயதுக்கு நிறைவாழ்வு வாழ்ந்தவர். 

எனக்கு விபரம் தெரிந்த நாட்களில் அகில இந்திய வானொலியில் ஆங்கிலத்தில் மாத்திரமே வர்ணனைகள் இருந்தது. விரைவில் இது ஆங்கிலம்-இந்தி என்ற இருமொழியாக மாறிமாறிவரத் தொடங்கியது. ஆங்கிலத்தில் Kishore Bhimani, Anand Setalvad, Narottam Puri, Anupam Gulati, and Madras’ own R. Balu Alaganan போன்றவர்கள் மாறிமாறி வருவார்கள். இவர்களில் கிஷோர் பிமானியை எனக்குப் பிடித்திருந்தது. இந்தியில் நரோத்தம் பூரி, அனுபம் குலாட்டி, ரவி சதுர்வேதி, சுஷீல் தோஷி போன்றவர்கள். ஆனாலும் இந்தியா முழுவதற்கும் பாதி ஆங்கிலம் – பாதி இந்தி என்பது எனக்கு அராஜகமாகத் தோன்றியது. இந்தியில் வரும் கால் மணிநேரம் வானொலியை மூடிவிட்டுப் பிறவேலைகளை(?)க் கவனிக்கப் போய்விடுவேன். தமிழ் வர்ணனை வரும் அந்த ஐந்து நாட்களுக்கும் என் வீட்டு நெல்கோ டாஃபி 2-பாண்டு ட்ராண்ஸிஸ்டரை என் கையிலிருந்து யாராலும் பிடுங்க இயலாது. 

இந்த நிலையில் பொங்கல் சென்னை டெஸ்களும் தமிழ் வர்ணனையும் வருடம் முழுவதற்குமான எதிர்பார்ப்பை உண்டாக்கும்.  ஆனந்த விகடனில் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னால், வருகைதரும் மற்றும் இந்திய அணி வீரர்களின் போட்டோக்கள் வரும். வீட்டில் வாங்கக் காசு தரமாட்டார்கள். ஆனாலும் அதை அடைவதற்கு வேறு வழிகள் இருந்தன. கிரிக்கெட் ஆர்வமில்லாத, விகடன் தொடர்ந்து வாங்கும் யாரவது ஒரு அக்காவை நச்சரித்து அதைக் கைப்பற்றிவிடுவேன் (அக்கா, சிவசங்கரி,லக்‌ஷ்மி, சுஜாதா, போன்றவர்களின் தொடர்கதைகளைக் கிழித்தெடுத்துக்கொண்டு, ‘ஒழிந்துபோ’ என்று கொடுப்பாள் ).  முழுத் தொடர் (ஐந்து டெஸ்ட் மேட்சுகள்) ஸ்கோர் கார்ட்டை நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைப்பேன்.  அந்தக் காலங்களில் எங்கள் ஊரில் நான்தான் ஸ்கோரர், புள்ளிவிபர நிபுணன், கிரிக்கெட் வரலாற்றாளன், எல்லாம் (விளையாடுவது?? ஓரளவிற்கு ஆஃப் ஸிபின் பௌலிங்கும், சந்தீப் பாட்டிலைப் போன்ற ஸ்கொயர் ட்ரைவும் வரும்).  தமிழ்நாட்டுச் சிற்றூர்களின் எல்லா சிறுவர்களையும் போலவே பந்துவீச்சுக்கு வெங்கட்ராகவனும், மட்டையாளர்களில் விஸ்வநாத்தும் ஆதர்சம்.  இதை எல்லாம் வளர்த்தெடுத்ததில் தமிழ் வர்ணனைக்கு முக்கிய பங்கு உண்டு.  ‘வீசும் கை விக்கெட்டின் மேல்வர, வீசுங்கை விக்கெட்டைச் சுற்றிவர’ என்று சொல்லத்தான் Over the wicket, round the wicket, என்பவற்றின் அர்த்தம் பிடிபட்டது. बल्ले का किनारा – பல்லே கா கினாரா என்று பாதிநேரம் இந்தியில் திணிக்கப்படுவது, மட்டையின் விளிம்பில் பட இரண்டாவது ஸ்லிப்பில் காளிச்சரணால் பிடிபட்டு வெங்க்ஸர்க்கார் ஆட்டமிழந்தார் என்று என்று கேட்டவுடன் விளங்க ஆரம்பித்தது. 

ஆட்டம் துவங்குமுன் அணிகளின் உறுதிசெய்யப்பட்ட பதினொருவரைப் பற்றிய அலசல்கள், ஆடுகளத்தின் அமைப்பு, அது ஐந்து நாட்களில் என்னவாக நிலைமாறும், எனவே காசு சுண்டலின் முக்கியத்துவம் என்று அழகாக் பிரித்து ஆராய்ந்து சொல்வார்கள். இவர்களில் அப்துல் ஜபார் மிகத் தெளிவான, அற்புதமான குரலைக் கொண்டவர். ஜபாரின் வர்ணனைகள் இலக்கியத் தரமாக இருக்கும். கூத்தபிரான் சில சமயங்களில் உணர்ச்சிவசப்படுவார். இராமமூர்த்தியின் குரலில் ஒரு மென்மை கலந்த நளினம் இருக்கும்.  இவர்கள் மூவருக்குமே தமிழ் ஆர்வமும் நல்ல வாசிப்பனுபவமும் உண்டு என்றாலும், இராமமூர்த்தி ஒருபடி மேல். நன்றாக நினைவிருக்கிறது. Overs-Maidens-Runs-Wickets என்பதை வீச்சுகள்-கன்னி ஓவர்கள் – ஈன்றவை – இயற்றியவை என்று இராமமூர்த்திதான் சொல்லத் தொடங்கினார்.  இதைப்போலவே வர்ணணையில் ஏற்றிறங்கும் உச்சரிப்பையும் (cadence) அவர்தான் அழகாகக் செய்வார். “அடுத்த ஓவரின் முதல் பந்தை, பட்டாபிராமன் முனையிலிருந்து வீச வருகிறார் மால்கம் மார்ஸல்.  சீரான ஓட்டம், விரைவான ஓட்டம், அம்பையரைக் கடந்து மேலெழுந்து வீசப்பட்ட பந்து, நடு ஸ்டம்பில் பிட்சான பந்து, விரைவான கதியில் ஆர்த்தெழுந்து வந்த பந்து. மட்டையாளரின் இடுப்பளவுக்கு உயர்ந்து, மெல்ல விலகி முதாவது ஸ்லிப்பை நோக்கிச் சென்ற பந்து. விஸ்வநாத் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவிற்குக் காத்திருக்க முடிவு செய்து, மட்டையை நளினமாக மேலே உயர்த்தி பந்தைச் செல்ல விடுகிறார். விக்கெட் காப்பாளர் தூஜான் முதாவது ஸ்லிப்பிற்கு முன்னே பாய்ந்து அதைப் பெற்றுக் கொள்கிறார்…”.   இது சராசரி இராமமூர்த்தி வர்ணனை. ஒவ்வொரு ஓவரின் துவக்கத்திலும் பீல்டர்களின் இருப்பிடத்தைத் துல்லியமாக வரையறுப்பார். இவர் சொல்வதையும் நோட்டுப்புத்தகத்தில் வரையப்பட்ட இடங்களின் பெயர்களையும் வைத்துக்கொண்டுதான் Backward Square Leg, Short Fine Leg இரண்டுக்கும் இடையேயான வித்தியாசங்கள் புலப்பட ஆரம்பித்தன. 

என்னைப்போன்ற சிறுவனுக்கு மட்டுமல்ல, அப்பொழுது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கும்-கூடத் தமிழ் வர்ணனை பெரிதும் ஆர்வமூட்டியிருக்கிறது, உதவியிருக்கிறது. காற்று வெளியினிலே என்ற தன் நினைவுத் தொகுப்பு நூலில் திரு. அப்துல் ஜபார்-

1982-ல் இந்தியா – இங்கிலாந்து போட்டியைக் காண எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அன்று கிரிக்கட் சங்கத் தலைவரின் மதிய போசன விருந்து. சுயம் பறிமாறிக் கொண்டு நின்ற வண்ணம் சாப்பிடும் ஏற்பாடு நடுவில் எம்.ஜி.ஆர். அவரது துணைவியார் வி.என். ஜானகி, அமரர்கள் பாரத ரத்னா சுப்பிரமணியம், சிலம்புச் செல்வர் மா.பொ.சி. ஆகியோருக்கு ஆசனங்கள் போடப் பட்டு இருந்தன. கூட்டத்தில் ராமமூர்த்தியை அடையாளம் கண்டுகொண்ட எம்.ஜி.ஆர். அவரை சைகை காட்டி அழைத்தார். அவர் என்னையும் இழுத்துக் கொண்டு போனார். “நல்லாருக்கு, ரொம்ப நல்லாருக்கு, புரிஞ்சிக் கிட்டு நல்லா ரசிக்க முடிகிறது” என்று வாயாரப் பாராட்டி னார். ராமமூர்த்தி என்னை அறிமுகம் செய்ததும் “ஒ. அப்படியா. என்றவர் என் தாய்மொழி உருது என்று நினைத்தாரோ என்னவோ.” தாய்மொழி தமிழாக இல்லாமலிருந்தும் என்றவரை என்தாய் மொழிதமிழ் தான் ஐயா” என்று இடைமறித்தேன். அவர் முகத்தில் ஒரு பெருமிதம். ஒரு மந்தகாசப்புன்னகை, புகைப்படக்காரர்கள் யாரும் இல்லை. உடனே அணிந்திருந்த “பேட்ஜை’ எடுத்து நீட்டினேன். இடைவெளியே இல்லால் நிரப்பி கையெழுத்திட்டுத் தந்தார்.

என்னதான் இருந்தாலும் இந்த நால்வர் வர்ணனைக் குழு, தங்களின் எல்லையைச் (இராமமூர்த்தியின் குரலில் சொல்ல வேண்டுமென்றால் ‘எல்கைக் கோட்டை’) சரியாக அறிந்திருந்தது. இவர்கள் நால்வருமே தொழில்முறையில் கிரிக்கெட் விளையாடியவர்கள் அல்லர். எனவே, முக்கியமான தருணங்களில் வல்லுநர் ரங்காச்சாரியிடம் நுணுக்கங்களை விளக்க மைக்கைக் கையளித்துவிடுவார்கள். சற்றே நடுங்கும் குரலில் சாரி, மட்டையைத் தளர்த்திப் பிடிக்காமல் இறுகப் பிடித்துத் தடுப்பதில் இருக்கும் அபாயங்களை விளக்கி காலின் க்ராஃப்ட் எப்படிச் சௌகானை ஆட்டமிழக்கச் செய்தார் என்று துல்லியமாகச் சொல்வார். 

டெஸ்ட் மேட்ச்சுகளைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாடிய ரஞ்சிக் கோப்பைப் பந்தயங்கள், தமிழ்நாடு-இலங்கை (அப்பொழுது டெஸ்ட் விளையாடத் தகுதி பெற்றிருக்கவில்லை)இடையேயான வருடாந்திர எம்.ஜே. கோபாலன் கேடயப் போட்டிகள் போன்றவற்றிலும் தமிழ் வர்ணனைகளைக் கேட்டிருக்கிறேன். லலித் கலுபெரும (Lalith Kaluperuma) பௌலிங்கில் சிலோன், தமிழ்நாடு அணியை நசுக்கிய ஆட்டத்தின் தமிழ் வர்ணனை இன்னும் மங்கலாக நினைவிருக்கிறது. அதீத ஆர்வம் காரணமாக பெங்களூரில் நடந்த தமிழ்நாடு-கர்நாடகா இரஞ்சிப் போட்டியில் புரியாமல் கன்னட வர்ணனைகளைக் கேட்டதும் உண்டு. (எனோ இந்தி, தமிழ் கடந்து பிற இந்திய மொழிகளில் வர்ணனை பிரபலமாகவில்லை. வங்காள மொழியில் இருந்திருக்கலாம்).

இராமமூர்த்தியைக் (சக வர்ணனையாளர்களைக்) கேட்க, பின்னர் நல்ல ஆங்கில வர்ணனையாளர்களின்மீது இயல்பான ஆர்வம் வரத் தொடங்கியது. BBCயின் Chiristopher Martin-Jenkins, Tony Craig, John Arlott, Trevor Bailey, ஆஸ்திரேலியாவின் Richie Benaud, Bill Lawry, வெஸ்ட் இண்டீஸின் Tony Cozier என்று பல நல்ல வர்ணனையாளர்களைக் கண்டெடுப்பதற்கும் அந்தச் சாளரங்களின் வழியே புதிய உலகங்களைக் காணவும் தமிழ் வர்ணனைகள் உதவின. என்னுடன் சேர்ந்து தமிழ் வர்ணனையில் ஆரம்பித்த என் அப்பாவும் ஐம்பது வயதிற்குப் பிறகு கிரிக்கெட்டையும் வானொலி வர்ணனையும் கண்டுகொண்டார். 

ஒரத்தநாட்டையும் கும்பகோணத்தையும் கடந்து, தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையைத் தாண்டாத பதினொரு வயது சிறுவனுக்கு வாலாஜா சாலை, மெரினாவிலிருந்து தவழ்ந்து வரும் மாருதம், சீரான கதியில் சீறிவரும் இம்ரான்கான், கம்பீரமாகத் தோளுயர்த்தி நிற்கும் விவியன் ரிச்சர்ட்ஸ், ஆறரையடி உயரத்திலிருந்து பந்தை விடுவிக்கும் ஜோயல் கார்னர், லில்லி-தாம்ஸன்-பாஸ்கோ, சில்லிப் பாயிண்டில் நின்று எல்லாவற்றையும் பிடிக்கும் ஸோல்கார், நடன அசைவின் நளினத்துடன் ஸ்கொயர்கட், லேட் கட் அடிக்கும் ஜி.ஆர். விஸ்வநாத், என்று ஒரு கனவுலகத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை, சக நண்பர்கள் கூத்தபிரான், ஜப்பார், கணேசன், சூழக் கைப்பிடித்து நடத்திச் சென்ற வர்ணனையாளர் இராமமூர்த்திக்கு இந்தச் சிறுவன் என்றும் கடமைப்பட்டவன். 

One Reply to “விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி”

  1. திரு. இராமமூர்த்தி இ.ஆ.ப அவர்கள் இராமாயணம்,மகாபாரதம் நன்றாக பிரவசனம் செய்பவர்.கிரிக்கெட்டில் தமிழ் வர்ணனை அவரால் கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த விஷயமாக கருதுகிறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.