அஞ்சலி: பேராசிரியர் பசுபதி

பேராசிரியர் சுப்பராயன் பசுபதி பெப்ருவரி 12, 2023 அன்று கனடாவின் டொராண்டோ நகரில் காலமானார். அவரை வரையறை செய்ய ‘மென்மையான, மாபெரும் அறிவுஜீவி (a gentle intellectual giant)’ என்பதே மிகவும் பொருத்தமாக இருக்கும். சுயதேவைகளைக் குறுக்கி, தன்னைத் தெளிவாக வரையறுத்து, தன் அறிவுத் தேட்டத்தைத் பெருக்கி, தன்னாலியன்ற அளவில் பிறருக்கு உதவி, நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துமுடித்திருக்கிறார். 

இணையத்தில் தமிழ் இலக்கியம், கர்நாடக இசை, தமிழிசை, திருப்புகழ் கருத்தாடல் குழுக்களில் பங்கேற்பவர்களுக்கு பேரா. பசுபதியை நன்றாகத் தெரிந்திருக்கும், குறிப்பாக செவ்வியல் இலக்கியக் குழுக்களில். கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக எங்களில் பலர் அவரிடம் செவ்வியல் இசை, இலக்கியங்கள், தமிழ் இலக்கணம் போன்றவற்றைக் குறித்து நிறைய கருத்தாடல்களில் ஈடுபட்டிடுக்கிறோம்.  பள்ளிப் படிப்பிற்குப் பிறகு உருவான பெரும் இடைவெளிக்குப் பிறகு தமிழ் இலக்கணம் குறித்த பல சந்தேகங்களை பசுபதி தீர்த்து வைத்திருக்கிறார்.

ஆனால் பசுபதி தமிழ்ப் பேராசிரியர் இல்லை.  அவர் தகவல் நுட்பத் துறையில் விற்பன்னர். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மின்னணுவியல் மற்றும் கணிபொறியியல் துறையில் 1973 முதல் 2007 வரை பேராசிரியராகப் பணியாற்றியவர். இந்தக் காலங்களில் சில ஆண்டுகள் மின்னணுவியல் துறையில் இணைத் தலைவராகப் பணியாற்றினார். தகவல் நுட்ப ஆய்வுக்குழுவின் தலைவராகவும் சேவைபுரிந்திருக்கிறார்.  மின்னணுத் தகவல் கருத்தாக்கம் (Electronic Communications Theory), எண்ணிய தகவல் நுட்பம் (Digital Communication Technology), மற்றும் புள்ளியியல் சமிக்ஞை செயலாக்கம் (Statistical Signal Processing) போன்ற துறைகளில் 300-க்கும் மேற்ப்பட்ட ஆய்வறிக்கைகளை எழுதியிருக்கிறார். இவரிடம் கற்ற முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பொழுது கனடா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஈரான், இந்தியா, தென்கொரியா போன்ற நாடுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களில் புகழ்மிக்க பேராசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். இந்தத் துறைகளில் பல உலகளாவிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். 

Figure 2 இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னையில் MTech தகவல்நுட்ப வகுப்பில் முதலாமிடத்தைப் பெற்ற பசுபதி, சர். சி.வி. ராமனிடமிருந்து பரிசைப் பெறுகிறார்.1966

பேரா. பசுபதி சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் (தற்பொழுதைய அண்ணா பல்கலைக் கழகம்) BE பட்டமும், சென்னை ஐஐடியில் M.Tech பட்டமும் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழத்தில் M.Phil, Ph.D  ஆய்வுப் பட்டங்களைப் பெற்றார்.  அதன்பின் கனடாவில் டொராண்டோ பல்கலைக்கழகத்திற்கு வந்த பசுபதி, 35 வருடங்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அரும்பணி ஆற்றியிருக்கிறார்.  மூன்று தலைமுறைக்கு மேற்பட்ட அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சிக் காலத்தில் அவர் தகவல் நுட்பத்துறை பேராளுமைகளான க்ளாட் ஷாணன், ஹாரி நைக்வ்ஸ்ட் போன்றவர்களின் ஆராய்சிகளை நேரடியாக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்.  உதாரணமாக தன் மாணவர் (கா)ஷிஷாங்ங்குடன் இணைந்து அவர் கண்டுபிடித்த 36 பரிமாண ஒழுங்கில் அடர்த்தியாக தகவல் பொதிக்கும் முறைக்கு Kschischang-Pasupathy Lattice or KP36 Lattice (http://www.math.rwth-aachen.de/~Gabriele.Nebe/LATTICES/KP36.html) என்று பெயரிடப்பட்டிருக்கிறது.  

பேராசிரியர் பசுபதி தகவல் நுட்ப உலகின் முன்னணி ஆராய்சி சஞ்சிகைள் பலவற்றில் ஆராய்சிக் கட்டுரைகளின் தரத்தை உறுதிசெய்யும் மதிப்பீட்டாளராக பல வருடங்கள் தொடர்ந்து பங்களித்திருக்கிறார்.  மேலும் IEEE Transactions on Communications, IEEE Communications Magazine போன்றவற்றில் இணை ஆசிரியராகவும் பல வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். அடர்த்தியான ஆராய்சிக்கட்டுரைகளுக்கு இடையே, கணிதம், இயற்பியல், தகவல் நுட்பம், செவ்வியல் இலக்கியம், மர்ம நாவல்கள், இசை போன்றவற்றின் அற்புதக் கலவையாக Light Traffic என்ற தொடரைக் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் IEEE Communications Magazine என்ற சஞ்சிகையில் அளித்து வந்தார்.  இது பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர்.  

Figure 3 கணிதம், மின்னணுவியல், தகவல் நுட்பம், மொழிவிளையாட்டு, நகைச்சுவை, கவிதை, புதிர்கள் என பல துறைகளையும் தொட்டுச் செல்லும் Light Trafffic என்ற தொடரை பேரா. பசுபதி IEEE Communications Magazine  என்ற நுட்ப சஞ்சிகையில் 1984 முதல் 1998 வரை எழுதிவந்தார்.

எல்லாவற்றையும் விட அவருடைய அதியற்புத சேவையும் பங்களிப்பும் அவருடைய மாணவர்களுக்கானது. மே 11, 2007 -ல் அவரது பணி ஓய்வை முன்னிட்டு டொராண்டோ IEEE மற்றும் அவருடைய துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாள் முழுவதும் அவரது சேவையைப் பாராட்டும் விதமாக ‘தகவல் நுட்பத்திற்குப் பேராசிரியர் பசுபதி பங்களிப்புகள்’ என்ற பட்டறை ஒன்றை நடத்தினார்கள். எனக்கு அந்த ஆய்வரங்கில் பங்கேற்கும் பாக்கியம் கிடைத்தது. விழாவில் மாணவர்களுக்கு பசுபதியின் மீதான மரியாதை கலந்த நேசத்தையும், பசுபதிக்கு மாணவர்கள் மீதான பாசத்தையும், வாஞ்சையையும் மிகத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. உலகின் பல்வேறு முன்னணி பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும்,  தகவல் நுட்ப நிறுவனங்களில் ஆராய்சியாளர்களாகவும் இருக்கும் பலர் அன்று ஒன்றுகூடி பசுபதியின் சேவைகளைப் பாராட்டும் விழா எடுத்தார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் பசுபதியில் தொடங்கி இப்பொழுது தாங்கள் தகவல் நுட்பத்தை முன்னெடுத்துச் செல்லும் விதத்தைப் பரிமாறிக்கொண்டார்கள். பேசிய ஒவ்வொருவரின் இன்றைய ஆய்வுக்கும் ஆணிவேராக பசுபதியிடம் அவர்கள் பயின்றவையே சொல்லப்பட்டன. ஆராய்சி மாணவர்களைத் தவிர இளமறிவியல் முது அறிவியல் மாணவர்களைப் பயிற்றுவித்தலிலும் அவருடைய பெயர் வட அமெரிக்காவின் பல முன்னணி பல்கலைக்கழகங்களிலும் பிரபலமானது. 

பேரா. பசுபதியைக் குறித்த அறிமுகம் எனக்கு ஏற்பட்டது  Light Traffic தொடர் மூலமாகத்தான். நான் பெங்களூரு ஐஐஎஸ்ஸியில் படித்த காலத்தில் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் இந்தத் தொடரின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறோம். பின்னர் 1999-ல் நான் ஜப்பானில் வசிக்கும் பொழுது, செவ்வியல் இலக்கிய ஆர்வலர்கள் குழுவில் பங்கெடுத்து வந்தேன். நான் மூனேமுக்கால் வரிக்கு மூன்று தளைதட்டலுடன் எழுதி வெண்பா என்று அழைத்தவற்றை செப்பனிட்டுப் பயிற்றுவித்திருக்கிறார். மடலாடல் பரிமாற்றங்களுக்கிடையே ஒருமுறை சந்தேகத்தின் பேரில் ‘அந்த Light Traffic பசுபதி நீங்கள்தானா?’ என்று நான் கேட்க, எங்களுக்கிடையேயான நெருக்கம் இன்னும் அதிகரித்தது. 

நான் கனடாவுக்குப் புலம்பெயரப் பேராசிரியர் பசுபதி ஒரு முக்கிய கர்த்தாவாக இருந்திருக்கிறார். அமெரிக்காவில் மூன்று அழைப்புகளையும் டொராண்டோவில் ஒன்றையும் வைத்துக்கொண்டு முடிவெடுக்கத் திணறிக்கொண்டிருந்த சமயத்தில் பசுபதிதான் ‘நீ இங்க வா, எல்லாம் நல்லபடியாக இருக்கும்’ என்று ஊக்கமூட்டினார். தொடர்ந்து என்னை வரவேற்க விமானநிலைத்திக்கு வந்தார். வீடு கிடைக்கும்வரை ஒரு மாதத்திற்கும் மேலாக அவருடைய வீட்டில் தங்கியிருக்கும் பாக்கியம் கிடைத்தது. தூங்கும் நேரமும், எங்கள் ஆய்வகங்களில் வேலை நேரமும் போக, அந்த நாட்களில் காலையுணவு, பஸ், இரயில், பல்கலைக்கழகத்தில் மதிய உணவு, மீண்டும் வீடு திரும்புதல், எனக்கு வீடுபார்க்க அலைதல், என இடைவிடாமல் பேச எங்களுக்குப் பல விஷயங்கள் இருந்தன. அந்த நாட்களில் நாங்கள் செவ்வியல் ஆங்கில உரைநடை, நகைச்சுவை, தத்துவம், இசை என்று பல விஷங்களைப் பேசியிருக்கிறோம். ஆங்கிலத்திற்கு இணையாக, செவ்வியல் தமிழ், கர்நாடக இசை, தமிழிசையின் வேர்கள், இலக்கணம், என்று வகையில்லாமல் உரையாடியிருக்கிறோம். எங்களில் மற்றவரை நெருங்க, யார் வயதைத் தொலைத்தோம் என்பது விந்தை.  முகம் தெரியாமல், வெறும் இணையத்தின் வழியே மாத்திரமே அறிந்திருந்த என்னை அரவணைத்துக்கொண்டு டொராண்டோவில் காலூன்ற உதவிய அவருடைய பெருங்கருணைக்கு நான் எந்தப் பிறவியில் எப்படிக் கைம்மாறு செய்வேன் என்று தெரியவில்லை. 

பசுபதி சங்கீதப் பரம்பரையில் வந்தவரல்லர். அவருக்கு சாகித்தியகர்த்தா பாபநாசம் சிவனுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பசுபதியின் தமையனார் சு.நடராஜ ஐயர் ‘திருப்புகழ் அடிமை’ என்று அறியப்பட்டவர். இந்தத் தொடர்புகளால் இயல்பாகவே அவருக்குத் தமிழ்மீதும் இசைமீதும் தீராக் காதலிருந்தது. கர்நாடக இசையின் இலக்கணங்களில் நுண்ணறிவு கொண்டவர். சந்தமும் தமிழும் கலந்த திருப்புகழ் அவர் வாழ்வின் முக்கியமான அங்கமாயிருந்தது. பணி ஓய்விற்க்குப் பிறகு அவர் தமிழ் இலக்கணம், தமிழிசை, திருப்புகழ் குறித்து நிறைய உரையாற்றியிருக்கிறார்.  வெண்பாவின் ஈற்றடி கொண்டு அவர் எழுதிய ‘கவிதை இயற்றிக் கலக்கு’ என்ற புத்தகம் செவ்வியல் தமிழைத் துய்க்க, பாவிலக்கணம் கற்றுக்கொள்ள ஒரு எளிமையான அறிமுகம். 

சொல்விளையாட்டுகளில் பசுபதிக்குப் பேராவல் இருந்தது. கணித, அறிவியல் பயிற்சிபெற்ற அவருக்கு மொழியில் வார்த்தைகளைக் அடுக்கியும் கலைத்துப்போட்டும் விளையாடுவதில் – அது தமிழோ ஆங்கிலமோ பேரானந்தம் இருந்தது. தமிழில் மரபுக்கவிதை, சிலேடை, சித்திரக்கவி என்றும் ஆங்கிலத்தில் pun, oxymoron, palindrome, anagrams, mnemonics என்றும் சொல்லாட்டங்களில் ஆர்வம் கொண்டவர். இதன் நீட்சியாக செவ்வியல் இசையிலும், மரபு ஓவியங்களிலும் நாட்டம் இருந்தது. 

பணி ஓய்வு பெறும் சமயத்தில் பேரா. பசுபதி முறையான எதிர்காலத் திட்டங்கள் எதுவுமில்லை என்று வழமையான அமைதியுடன் புன்னகைத்துக்கொண்டே என்னிடம் மழுப்பிவிட்டார். ஆனால் நான் பசுபதியின் இரண்டாவது இன்னிங்கஸ் முதல் இன்னிங்கஸைப் போலவே சிறப்பாக இருக்கும் என்று ஊகித்திருந்தேன்.  பணி நிமித்தங்களால் கணிதம், தகவல் துறை போன்ற குறுகிய வரையறைகளுக்குள்ளே நிதானமாக ஆடிய பசுபதி, பணி ஓய்விற்குப்பின் தமிழ், செவ்வியல் இசை, தமிழிசை, தொல்லியல், ஓவியம் (ஆமாம் பசுபதி ஒரு நல்ல ஓவியரும்கூட), என்று பரந்துபட்ட களங்களில் இரண்டாவது இன்னிங்க்ஸில் அடித்தாட வேண்டும் என்ற என்னுடைய ஆசையைச் சொன்னேன். “இல்லப்பா, இனிமே எல்லாம் தமிழ்தான்” என்று சொன்னார். பசுபதி ஒன்றை வரையறுத்தால் அதில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் அவர் தமிழையே சுவாசித்துக் கொண்டிருந்தார்.  அவருக்கு மிகவும் பிடித்த அருணகிரிநாதரைக் கேட்டுக்கொண்டே சுவாசத்தை நிறுத்திவிட்டார். 

கணிதம், தகவல் நுட்பம், மின்னணுவியில், ஆங்கில இலக்கியம், செவ்வியல் தமிழ் இலக்கியம், இலக்கணம், ஓவியம், கர்நாடக இசை, தமிழிசை, என்று அவர் தொட்ட அனைத்திலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு அதிலேயே நிறைவு கண்டவர் பேராசிரியர் பசுபதி. அவருடைய எதிர்பாராத மரணத்தில் நாம் ஒரு மாமேதையை, பேராசானை, பல்துறை விற்பன்னரை இழந்திருக்கிறோம்.

***

[பதிப்புக் குழுவின் குறிப்பு: வாசகர் திரு.வெண்பா விரும்பி சில தவறுகளைச் சுட்டிக் காட்டினார். அவை சரியான சுட்டல்கள் என்று உணர்ந்த, வெங்கட்ரமணன் அவர்கள் சில திருத்தங்களைச் செய்யக் கோரினார். 28 ஃபெப்ரவரி 2023 அன்று மேலே உள்ள கட்டுரையில் சில திருத்தங்கள் செய்தோம். இது பற்றி, கட்டுரை ஆசிரியரின் குறிப்பு கீழே:]

1. பசுபதி டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மின்னணுவியில் துறையில் ‘இணைத் தலைவராக’ சில ஆண்டுகள் பணியாற்றினார். (முதலில் குறிப்பிட்டதுபோலத் ‘தலைவராக’ அல்ல).

2. பசுபதி பாபநாசம் சிவனுக்கு உறவுக்காரர் அல்லர் (நான் 2001-ல் பசுபதியுடன் பாபநாசம் சிவன் குறித்து உரையாடிய பொழுது அவர் சொன்னதைத் தவறாக நினைவில் கொண்டிருந்திருக்கிறேன்). இரண்டு குடும்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.

திரு வெண்பா விரும்பி இத் தவறுகளைச் சுட்டிக்காட்டினார். தவறுகளுக்கு வருந்துகிறேன். அவருக்கு நன்றியுடன் தகவல்கள் திருத்தப்பட்டுள்ளன. – வெங்கட்ரமணன்

4 Replies to “அஞ்சலி: பேராசிரியர் பசுபதி”

  1. இரு திருத்தங்கள்:

    1. பேராசிரியர் பசுபதியவர்கள் டொரோண்டோ கலாசாலையின் மின்னணுவியல் துறைத் துணைத் தலைவராகச் சிலவாண்டுகள் பணி புரிந்தாரேயொழியத், தலைமைப் பதவியை எக்காலும் வகிக்கவில்லை.

    2. அவர் நிச்சயமாக இசைப் பரம்பரையைச் சேர்ந்தவரல்லர். பாபநாசம் சிவனுக்கு நெருங்கிய உறவினர் என்பதும் தவறான செய்தி. பசுபதியின் தமையனாரான காலஞ் சென்ற ‘திருப்புகழ் அடிமை’ சு. நடராஜ ஐயர் அவர்கள் பாபநாசம் சிவனுடன் பல காலம் நன்கு பழகியவராதலின், அவ்விரு குடும்பதினருக்கும் இன்று வரை நல்ல தொடர்புண்டு. பசுபதியவர்களின் மகள் வாணியின் திருமண வரவேற்பு விழாவில் இசை வினிகை நிகழ்த்தியவர் பாபநாசம் சிவனின் பேரனாகிய பாபநாசம் அஷோக் ரமணி அவர்கள்.

    1. அன்புள்ள வெண்பா விரும்பி. தவறுகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்தங்களை ஆசிரியர் குழுவுக்கு அனுப்பியிருக்கிறேன். விரைவில் வெளியிடுவார்கள் என நம்புகிறேன். தவறுக்கு வருந்துகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.