கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டு

கு. அழகிரிசாமி (23/9/1923 – 5/7/1970)

ஒரு கதை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பது வாசிப்பவரின் மனப்பாங்கையும், மனோ நிலையையும் பொருத்தது. விவரம் தெரிந்து அனுபவ பாசி, சார்பு மாசுகள் படிந்த பின் அவையும் பார்வையின் கூர்மையை, நேர்மையைப் பாதிக்கும். இலக்கிய அனுபவ சாம்ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கவும் குழந்தைகளைப் போல மாசற்ற கவனமும், எதிர்பார்ப்பில்லா குதூகலமும் வேண்டும். ஒருவர் தன்னை எந்த சிதறலுக்கும் ஆளாக்கிக் கொள்ளாமல் தூய்மையான கவனத்தோடு வாசிப்பு சுகத்துக்காகவே வாசித்து, தனக்குக் கிட்டியவற்றை பகிர்கையில் பிறருக்கும் அவை பயன் தரும். அத்தகைய பகிர்தல், தேவைப் பட்டால் ஓர் உரையாடலுக்கும் – நல்ல கதையைப் போலவே – இடம் தரும்.

எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் பலதரப்பட்ட விமர்சனங்கள் உள்ளன. ஓர் எழுத்தாளர் பற்றிய விமர்சனங்கள் தவிர, இரண்டு எழுத்தாளர்களை ஒப்பிடுவதும் வழக்கத்தில் உள்ளதுதான். சார்லஸ் டிக்கன்ஸா – டால்ஸ்டாயா, தஸ்தாயெவ்ஸ்கியா – டால்ஸ்டாயா ஆய்வுகளெல்லாம் நூல்களாகவும், யூட்யூப் பதிவுகளாகவும் இருக்கின்றன. நவீன தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான, நூற்றாண்டு காணும் கு. அழகிரிசாமி பற்றியும் பல்வேறு எடை போடல்கள் உள்ளன. வாசிப்பு வானில் நிம்மதியாக முழு ஈடுபாட்டுடன் பறந்து கொண்டிருக்கும் வாசகனுக்கும், எழுத்தாளனுக்கும் இடையேயான உறவு இவற்றால் தொடப்படாதது. அந்த உறவால் மலரும் இன்பத்தை அழகிரிசாமியின் முகம் தெரியா வாசகர்கள் பலரும் கால காலமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

நாம் எப்போதும் இலக்குடனும், பெருமளவு இலக்கின்றியும் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டும், பதிந்து கொண்டும் இருக்கிறோம். அதில் கு. அழகிரிசாமி போன்ற தேர்ந்த எழுத்தாளர் அதன் எல்லா அம்சங்களையும் கூர்ந்து நோக்குகிறார். வாசகரோடு பகிர்கிறார். இதயத்தை நொறுங்க வைக்கும் தாங்கொணாத் துயரையும், நிராசையையும், சாமான்ய மனிதர்களுக்கு நிகழும் சாமான்ய சம்பவங்கள் மூலம் வாழ்வின் சாரத்தையும், அர்த்தத்தையும், அனர்த்தத்தையும், தினசரி வாழ்வில் தானாய் நிகழும் நகைச்சுவையையும் இவரது கதைகளில் நாம் காண்கிறோம். இவற்றில் அவரது நூற்றாண்டு என்னும் இச்சந்தோஷமான தருணத்தில் அவர் தொட்டு நம் இதயங்களில் இட்ட ஆனந்தம் பற்றிய கதைகளில் மூன்றைப் பற்றி சில வரிகள் :-

வனஜம்

வனஜம் என்கிற இந்தக் கதை, கு. அழகிரிசாமி பற்றிய நகுலனின் “ அவருடைய கதைகளை ஒரு முறைக்கு இரு முறையாகப் படிப்பவர்களுக்கு சௌந்தர்ய உணர்ச்சி என்பதன் அர்த்தம் தெளிவாக விளங்கும்” என்கிற கூற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இக்கதை சொல்லப்பட்ட விதம், விஷயம், வர்ணனைகள் சுகானுபவம்.

14 வயது சிறுமி, 17 வயது வளர்ந்த சிறுவன் இவர்கள் இடையே நிகழ்பவை. கோவில்களுக்கு அருகாமையில், மாட வீதிகளில், திருவிழா, உற்சவ காலங்களில் இருக்க வாய்ப்பு பெற்றவர்கள் இந்தக் கதையில் தவழும் குளுமையை, இனிமையை மீண்டும் அனுபவிக்கலாம். அத்தகு வாய்ப்பு கிட்டாதவர்களும் இக்கதையைப் படிக்கையில் அதைப் பரிபூரணமாக அனுபவிக்கலாம்.

காதலா அது? பாரமில்லாத இன்பப் பிரவாகம். அப்பாவிக் குழந்தைகளின் ஊடாகச் சொரியும் அன்பு ஊற்று. கோவில் சார்ந்த ஊர்க் கூட்டம், அக்காடாவென்று பொறுப்பேதுமில்லாத நிம்மதியும், ஆனந்தமும், களியும் ததும்பும் உல்லாசச் சூழல், அதற்கு உயிரேற்றும் இசை. அங்கு சிவராமன் சிறுவன் போலவா பேசுகிறான்? வாலிபனைப் போல் தன்னை நாஸ்திகன் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன் கவிதையாய் நினைப்பதில், பேசுவதில் என்ன ஆச்சர்யம்? வனஜம் என்கிற அந்தக் குழந்தை. அதன் அப்பாவித்தனம். அழகு. வெள்ளைப் போக்காக படபடவென்ற பேச்சு. அகன்ற கண்களில் பொருந்தியிருந்த, அளவிற்கு அதிகமான மடப்பம். ஒரு மாற்றம் நிகழ்கையில் அதில் கொஞ்சம் குடியேறும் கள்ளப் பார்வை. மனிதர் என்னவாகவெல்லாம் அனுபவிக்க வைக்கிறார் !

60, 70 வருடங்களுக்கு முன்பு வந்த சினிமாக்களில் இது போன்ற காதல் ஓரளவு சித்தரிக்கப் பட்டு இருக்கிறது. பின்னால் தெரியும் வட்ட நிலா, ஓர் ஓடை, சில மரங்கள், பூக்கள், கறுப்பு வெள்ளையிலும் பிரகாசிக்கும் இரவு. வனஜத்தையும், சிவராமனையும் விட சற்று வயதில் மூத்த காதலர்கள் பெரும்பாலும் மிக நல்ல காதல் பாட்டை பாடுவார்கள். பெண்ணின் உதட்டுச் சுழிப்பிலும், ஆணின் அன்பூறும் கண்களின் ஒளியிலும் தூய காதல் பிறந்து கொட்டகைகளை நிரப்பும்.

அற்புதமான இதயப் பிணைப்புகளை, அதன் மூலம் இவ்வுலகின் இயக்க சக்தியை நமக்குக் காட்டும் இன்ப அனுபவம் இக்கதை. கதையைக் கடைசி வரை படிப்பவர்கள் நடுவில் எழும் கேள்விகளும் தானே அடங்கிவிடுவதைக் காணலாம்; உடன் பேரானந்தத்திலும் மூழ்கலாம்.

அன்பளிப்பு

எழுத்தாளன் மனித மனங்களிலும், புற உலகிலும் கவனத்தோடு பயணித்து எழுதுபவன். எல்லா மனிதராகவும் ஆகும் சக்தி அவனுக்கு உள்ளது. அதனால்தான் 80 வயது ஆண் பதினாறு வயது சிறுமியை நம்முன் கொண்டுவர முடிகிறது. ஐம்பது வயது பெண்ணால் இருபத்தைந்து வயது இராணுவ வீரனை தத்ரூபமாக சித்தரிக்க முடிகிறது. இதில் குழந்தைகளை வர்ணிப்பது அலாதியான வரம். அந்த வரத்தைப் பூரணமாகப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் அழகிரிசாமி முக்கியமானவர்.

குழந்தைகளே அன்பளிப்புதானே ? நமக்கு மாசற்ற அன்பு அவர்களிடமிருந்துதானே கிடைக்கிறது. அந்தக் குழந்தைகளோடு, சந்தோஷமாய் இருக்கும் பேறு பெற்றவனின் கதை இது. அவனுக்கு ஒரு நோக்கமும் இல்லை. குழந்தைகள் உலகம் என்கிற சொர்க்கலோக வாசி அவன். இதில் அவன் குழந்தைகள் ஒருவரும் இல்லை. அவனுக்கு மணமாகக் கூட இல்லை.

சின்னஞ்சிறு சம்பவங்கள். சாதாரண வாழ்க்கை நிகழ்வுகள். குழந்தைகளின் செய்கைகள், நம்பிக்கைகள், நினைவில் இருத்தி மீண்டும், மீண்டும் துயருறாத நிகழ் இருப்பு. பயம், கட்டற்ற சுதந்திரம், உரிமை. அவனை பெரிய மனித பீடத்தில் தூக்கி வைக்காமல் சமதையான ஜீவனென்று கருதி கைகோர்த்துக் கொள்கிறார்கள். விளையாடுகிறார்கள். சண்டை போடுகிறார்கள். அடிக்கிறார்கள். தண்டிக்கிறார்கள். மன்னிக்கிறார்கள். நேசிக்கிறார்கள். அனைத்தும் அற்புதமாக நம் கண் எதிரே நடக்கின்றன.

இது தானாய்க் கிட்டிய பாக்கியம். அதில் மூழ்கி நீந்துகையில் அவன் கற்றுக் கொண்டே இருக்கிறான். ” உலகத்தில் எல்லோரும் குழந்தைகளிடம் பிரியமாக நடந்து கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள். ஆனால் அவர்கள் அன்பில் விளையாட்டுணர்ச்சியும், நடிப்பும் கலந்திருக்கின்றன. அவர்களுக்குக் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள். ஆனால் குழந்தைகள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் ” என்கிற உண்மை என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மனதில் தைத்த நாள் முதல் அவன் அவர்களை குழந்தைகளாக நடத்துவதில்லை. உள்ளன்பு என்கிற அந்தஸ்தில் அவனும், குழந்தைகளும் சம உயிர்களாகிறார்கள். மேலும் எத்தனை எத்தனை அவன் குழந்தைகளைப் பற்றி அறிந்துணர்ந்து கொண்டே இருக்கிறான். கடைசி வரை இது தொடரும். கதை முடிந்த பின்பும். அவனுக்கும், நமக்கும்.

தெய்வம் பிறந்தது

இது ஓர் ஆதர்ச இலட்சியவாதக் கதை. இது மனிதனின் முடிவுறா தூய்மைப் படுத்திக் கொள்ளும் முயற்சி பற்றியது. சமூகம் விதித்த விதிமுறைகளைக் கேள்வி கேட்காது ஏற்றுக் கொண்ட மனிதர்கள் பற்றியது. இந்த சுய சுத்திகரிப்பும், தவம் போன்ற அடைமொழிகளைப் பற்றிய பிரக்ஞையே கூட இல்லாத பயன் கருதாச் செயல்பாடுகளும் தவப்பயனுக்கு இட்டுச் செல்லும் அற்புதம் பற்றிய கதை. எழுத்தாளரின் உளத் தூய்மை மட்டுமே இது போன்ற கதைகளை எழுத வைக்கும்.

ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக வேண்டிக் கொண்ட தெய்வங்கள், யாத்திரை செய்த ஸ்தலங்கள் என்று அவர் செய்த பதிமூன்று வருட தவம். ஜென்மாந்திர வாசனையைப் போல் அவர் மனச்சுவரில் ஏதேனும் கறை இருந்தாலும் அதையும் சுட்டெரித்த அத்தவத்தின் கனல். இதில் அவரது உள்ளமே ஒரு கோவிலாகி விட்டது. தவம் செய்து பிறந்த குழந்தை புண்ணியாத்மாவாக இருக்க வேண்டும் என்று, பொறாமை, துவேஷம் இல்லாதவனாக வளர்க்கிறார். பள்ளி ஆசிரியரிலிருந்து வீட்டுக்கு முடி திருத்த வருபவர் வரை அனைவரிடமும் எப்படி அன்பாக, மரியாதையாகப் பழக வேண்டும் என்று சொல்லித் தருகிறார். ”குழந்தையாக வந்து தெய்வம் பேசுகிறது” என்று முடி திருத்தும் வேலாயுதம் சொன்ன போது “என் வயிற்றிலா? நான் என்ன புண்ணியம் செய்திருக்கிறேன்? தெய்வம் வேண்டாம். மனிதன் பிறந்திருக்கிறான் என்று உலகம் சொல்ல வேண்டும். எனக்கு அந்த ஒரு கீர்த்தி போதும் “ என்கிறார்.

உள்ளமே கோவிலாகி விட்ட பிறகு அதில் குடியிருக்க தெய்வம் எப்படி வராது இருக்கும் ? அவர் வயிற்றில் எப்படிப் பிறக்காது இருக்கும் ? தெய்வம் வந்ததை, பிறந்ததை, கண் காண அவருக்குப் பிறந்து விட்டதை, இது நடந்த விதத்தைச் சொல்லி கதை முடிகிறது.

***************

இந்தக் கட்டுரையின் தலைப்பு ‘ஓர் எளிய மலர்ச்செண்டு’. கு. அழகிரிசாமியின் கதைகளையும் அப்படியே குறிப்பிடலாம். அதில் இல்லாத மலர்களே இல்லை.

*************

Series Navigation<< நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து

One Reply to “கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.