டாக்டரும், முனைவரும்

நான் பள்ளி இறுதி வகுப்பில் இருக்கையில் எங்கள் வீட்டுக்கு அப்போதுதான்  மகப்பேறியலில் முதுகலை பட்டம் முடித்திருந்த கண்ணகி என்பவரின் குடும்பம்  குடி வந்திருந்தது. அவர் மருத்துவராக பணியில் சேர்ந்திருந்த ருக்மணி அம்மாள் மருத்துவமனை எங்கள் வீட்டுக்கு சற்றுத் தொலைவில்  பாலக்காடு-பொள்ளாச்சி பிரதான சாலையில்தான் அமைந்திருந்தது.

அப்போது திருமணம் ஆகியிருக்காத கண்ணகி அக்காவுடன்  விடுமுறைகளின் போது மருத்துவமனைக்கு செல்வதும், அவர் சிகிச்சையளிப்பதை கவனிப்பதும், அகாலத்தில் பிரசவம் பார்க்க  அவருக்கு அழைப்பு வருகையில் துணைக்கு சென்று அறுவை அரங்கினுள் இருந்து கேட்கும்  பச்சிளம் சிசுக்களின் முதல் வீறிடல்களை   கேட்பதுமாக புதிய பரவசங்கள்   வாழ்க்கையில் அறிமுகமாயிருந்தன.

கண்ணகி அக்கா ஓய்வு நேரங்களில் விரல்களால் மணலில் வரைந்து உடலின் பாகங்களை எனக்கு விளக்குவார். அவரோடு மிகுந்த நெருக்கமுண்டாகி இருந்தது எனக்கு. எப்போதும் மொட மொடவென்று ஆர்கண்டி புடவைகள் மாத்திரம் உடுத்தும் அவருக்கு காலையில் புடவை கொசுவமடிப்புக்களை  நீவி சீராக்குவதை மிக பெருமையுடன் செய்வேன். அவருக்கு கிடைக்கும் மரியாதைகளை, அவரது தொழிலின் முக்கியத்துவத்தை, டாக்டரம்மா டாக்டரம்மா என்ற அழைப்புக்களை எல்லாம் கவனித்துக் கொண்டே இருந்ததில் எனக்கு மருத்துவராக வேண்டும் என பெருவிருப்பமுண்டாகி இருந்தது. 

என்னுடையது பெண்களைக் கல்லூரிக்கு படிக்க அனுப்பும் வழக்கம் இல்லாத குடும்பம் என்பதால் கல்லூரிப்படிப்பே  எனக்கு கனவாக இருந்தது. எனினும் எனக்கிருந்த ஆர்வத்தை கண்ட  கண்ணகி அக்காவே அப்பாவிடம் என்னை மருத்துவ படிப்பில் சேர்ப்பிக்குமாறு பரிந்துரைத்தார். ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்களும் இருந்ததாலும் இப்போது போல் நீட் குளறுபடிகளெல்லாம் இல்லாததாலும் அப்பா கோவைக்கு சென்று  மருத்துக்கல்லூரியில் விசாரித்து வர சம்மதித்தார். ஆனால் ஐந்தும் மேலுமிரண்டுமாக 7 வருடங்கள் படித்து முடிக்க லட்சக்கணக்கில் செலவாகும் என்பது தெரிந்து அந்த விருப்பத்தை முற்றாக நிராகரித்தார். 

 வீட்டுக்கு பின்னாலேயே ஒரு கலை அறிவியல் கல்லூரி இருந்தது. அப்போது திருமணத்திற்கான நிதி அப்பாவிடம் இல்லாததால் நான் எனக்கு பிடித்த தாவரவியல் படிக்க ஏற்பாடாகியது, மருத்துவராகும் கனவை மனதில் ஆழக்குழி தோண்டி புதைத்திருந்தேன்.

பெரிய சிரமமின்றி படித்து தாவரவியலில் இளங்கலை பட்டம் பெற்றேன் பொள்ளாச்சியில் மேலே படிக்க கல்லூரிகள் இல்லாததால் பட்ட மேல் படிப்புக்கு என்னை அனுப்பும் உத்தேசம் சிறிதும் அப்பாவிடம் இல்லை. ஆனால் எனக்குள்ளிருந்த தாவரவியல் ஆர்வத்தை எப்படியோ உணர்ந்திருந்த  என் ஆசிரியரும் மிகுந்த கண்டிப்பானவருமான திரு சண்முக சுந்தரம்  அப்பாவிடம் நேரில் பேசினார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அதுவரையிலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் மட்டுமே இருந்தன. 90களில் தான் முதன்முறையாக முதுகலை படிப்புகள் துவங்கப்பட்டன. அந்த வருடம் முதல் மாணவர் சேர்க்கை நடை பெறுவதற்கு முன்னர் அப்பாவிடம் பேசிய அவர்  ’’விண்ணப்பிக்கச் சொல்லுங்க, கிடைச்சா சேரட்டுமே’’ என்றார் அப்பாவும் சம்மதித்தார்.

திரு சண்முகசுந்தரம் அவர்கள்தான் தார்பாலின் மூடு துணிகளை வாங்கிக் கொடுத்து   மாணவர்களை பெருமழை நாளொன்றில்  நீலக்குறிஞ்சிகளை காண தொட்டபெட்டாவிற்கு அழைத்து சென்றவர். மலைச்சரிவெங்கும் நீலக்கம்பளம் போல் விரிந்திருந்த குறிஞ்சி மலர்வைக் காட்டி ’’நீலகிரி’’ என்னும் பெயர் காரணத்தையும் விளக்கினார்.   தொட்டபெட்டா சிகரத்தில் என் காலடியில் இருந்த பொன்னிற நுண் மலரொன்றை சுட்டிக்காட்டி அதுதான் சிண்ட்ரெல்லா ஸ்லிப்பர்  என்று அவர் சொன்ன அந்த கணம் எனக்கு தாவரவியல் மீது பெரும் காதல் உண்டாகியது. அப்படியான நல்லாசிரியர் ஒருவர்  அருளப்பட்டது என் பாக்கியம் தான்

கோவை பல்கலை கழகத்திற்கு  விண்ணப்பித்தேன்.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அங்கிருந்து  நேர்முகத்தேர்வுக்கான ஆணை வர தபால்காரரை காத்துக்கொண்டு வீட்டு வாசற்படியில் கால் கடுக்க நின்ற பல நாட்கள்.

நேர்முகத்தேர்வுக்கு 44 மாணவர்கள் வந்திருந்தோம். ஆங்கிலம் தெரியாமல் திணறினாலும் தாவரவியல் போதுமான அளவுக்கு தெரிந்திருப்பதை என்னால் அந்தத் தேர்வில் நிரூபிக்க  முடிந்தது முதல் முறையாக முதுகலை வகுப்புகள் தொடங்குவதால், 5 மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை.  எனக்கும் நான்கு பையன்களுக்குமாக MSc Plant sciences வகுப்பில் இடம் கிடைத்தது. 

மிக கட்டுப்பெட்டியாக ஒரு கிராமத்தில் வளர்ந்த, எந்த வெளிஉலக அனுபவங்களும் கிடைத்திருக்காத ஆங்கிலம் தெரியவே தெரியாத. போதிய ஊட்டச்சத்தில்லாமல் சோகையாக இருந்த  இளம்பெண்ணான எனக்கு உணமையிலேயே பல்கலைக்கழக வாழ்வு கண்ணைக்கட்டி காட்டில் விடப்பட்டது போலத்தான் இருந்தது.

ஆனால் தாவரவியல் துறையும் அதனுடன் இணைந்திருந்த தாவரவியல் பூங்காவும், அதுவரை  கரும்பலகையில் வரையப்பட்டும் புத்தகங்களில் கோட்டுச்சித்திரங்களாகவும் கண்டிருந்த சைகஸ் உள்ளிட்ட பல தாவரங்களை நேரில் பார்க்க வாய்ப்பும் கிடைத்தபோது தாவரவியல் துறை எனக்குள் விரிந்து கொண்டே சென்றது. 

ஆய்வு மாணவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்ய விரும்பி செல்வேன். அச்சமயத்தில் கடற்பாசிகள் குறித்தும் பழங்குடியினரின் உணவுத் தாவரங்களில் விதைகளின் புரத அளவு குறித்தும் விரிவான ஆய்வுகள் அங்கு நடந்துகொண்டிருந்தன. நான் முதுகலை படிப்பில் சேர்ந்து சில மாதங்களில் முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு நடந்தது, ’’ viva voce ’’ என்னும் சொல்லையே நான் அப்போதுதான்  கேள்விப்பட்டேன்

Tribal pulse  துறையில் ஆய்வுகள் செய்த திரு ராஜா ராம்  என்பவருக்கு எங்கள் அனைவரின் முன்பு வாய்மொழித் தேர்வு நடைபெற்றது, அவரது ஆய்வை அவர் 1 மணி நேரத்தில் விளக்கினார்  அவ்வாய்வில் எனக்கு பெரும் ஆர்வமுண்டாகியது. ஆசிரியர்கள்  நடத்துவதைப் புரிந்துகொண்டு தேர்வெழுதி வெற்றி பெறுவதுதான் படிப்பென்று அறிந்திருந்த எனக்கு,  நாமாகவே ஒரு ஆய்வை அப்படி செய்து ஒரு பட்டம் வாங்க முடியும் என்பது பெரும் ஆர்வமுண்டாக்கியது  அவரைப் பலரும் கேள்விகள் கேட்டார்கள். நிகழ்வில் துணைவேந்தரும் நேரில் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் போது சாப்பிடக் கொடுத்த  திண்பண்டங்களைக் கூட  புறக்கணித்துவிட்டு வாயைப் பிளந்தபடி அவரது விளக்கங்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.

நிகழ்வின் இறுதியில் புறநிலைத் தேர்வாளர் இனி ராஜா ராம், “டாக்டர் ராஜா ராம்’’ என்றழைக்கப்படுவார் என்று அறிவித்து அனைவரும் மகிழ்ந்து கைதட்டிப் பாராட்டினார்கள். ராஜாராம் அவர்களின் முக மலர்ச்சியும் அந்த கைதட்டல்களும், ’டாக்டர்’ என்னும் அழைப்யும் எனக்குள்  பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது.  அனைவருடனும் இணைந்து ராஜாராம் அளித்த மதிய உணவு விருந்துக்கு முதன் முறையாக கோவை அன்னபூர்ணா உணவகத்துக்கு சென்றென்.

’டாக்டர்’’ என்னும் அந்த பட்டப்பெயர் மீண்டும் என் காதில் விழுந்து முன்பு குழியில் புதைத்திருந்த ஒன்றை மீண்டும் வெளியே இழுத்துப்போட்டது.

இப்படி ஆய்வு செய்தும் டாக்டர் என்றழைக்கப்படும்   ஒரு வாய்ப்பிருப்பது என்முன்னே  நான் மனதார  நுழைய விரும்பிய  ஒரு வசீகர உலகிற்கான  பெரும் கதவை திறந்து வைத்தது

.

முதுகலைப் படிப்பில் எந்த துறையில் முன் ஆய்வுகள்  செய்யலாம் என்பதை அப்பல்கலைக்கழகத்தில்   ஒரு சுவாரஸ்யமான வழியில் முடிவு செய்தார்கள். ஐந்து மாணவர்களுக்கு முன்பாக அந்த பல்கலைக்கழக தாவரவியல் துறையின் முக்கிய ஆய்வகங்களின் பெயர்கள் எழுதப்பட்ட துண்டுக்காகித சுருள்கள் வைக்கப்படும் எதை எடுக்கிறோமோ அதில் ஆய்வுகளை செய்யலாம்.

தெய்வ நிமித்தம் போல நான் பழங்குடித்தாவரவியலைத் தேர்ந்தெடுத்தேன், இன்னும் அதில் தான் இருக்கிறேன்.

பிறகு பல்கலையின் மென்கலைக் குழுக்களில் இணைந்தும்,  பிரம்மாண்டமான  நூலகத்தில் பழி கிடந்தும் நான் முற்றிலும் வேறு ஒரு ஆளுமையாக மாறிக்கொண்டிருந்தேன். அதிகாலை குளிரில் திறந்த ஜீப்பில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகிலிருந்த கோதுமை வயல்களுக்கு  ஆசிரியர் திரு ராம கோட்டி ரெட்டியுடன் சென்று கோதுமை மலர்கள் அவிழும் முன்பாக மகரந்தங்கள் சேகரிப்பது, ராமேஸ்வரம் சென்று ஆய்வளர்களுக்கு மட்டும் அனுமதி அளித்த தீவுகளில் பாசிகளை சேகரித்தது, படகில் செல்லும் வழியில் புத்தகங்களில் மட்டும் பார்த்திருந்த டால்பின்களை அருகில் கண்டது, பல முக்கிய தாவரங்களை அவற்றின் வாழிடங்களுக்கே  சென்று நேரில் அவற்றை குறித்து பயில்வது,  ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது, தேடித்தேடி  தாவரவியலைப் படிப்பது என தாவரவியல் துறை என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. ஆங்கிலத்துக்கு என்னையும் எனக்கு ஆங்கிலமும் ஓரளவுக்கு  பரிச்சயமுமாக்கியது.

கோவையின் மற்றொரு பல்கலைக்கழகத்தில் இணைந்து முனைவர் பட்ட  ஆய்வை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிதி உதவியுடன் மூன்றே வருடங்களில் முடித்து ராஜாராம் அவர்களின் வாய்மொழித்தேர்வு நிகழ்வு எனக்களித்த கனவையும், கண்ணகி அக்கா போல மருத்துவராக முடியாத குறையையும்  ஒருசேர நிறைவேற்றி  டாக்டர் லோகமாதேவி என  1997லிருந்து அழைக்கப்பட்டேன். அப்போது எழுதிய முக்கிய ஆய்வுக் கட்டுரைகளில் 6 கட்டுரைகள் ஒரே இணைப்பாக லண்டனில் வெளியானது பல்கலைக்கழகத்திலும் பின்னர் கல்லூரியில் பேராசியராக சேர்ந்தபோதும் பெரும் அங்கீகாரத்தை  பெற்றுக்கொடுத்தது.

மேற்கொண்டு ஆய்வையோ அல்லது  பெருமுயற்சியின் பேரில் எனக்கு கிடைத்திருந்த ஹைதராபாத் சணல் ஆராய்ச்சி மையத்தின் இளம் விஞ்ஞானி பதவியையோ தொடர முடியாதபடிக்கு அதுநாள் வரையிலும் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வேண்டி இருந்தது

ஆனால் மிக அருகிலேயே அமைந்திருந்ததால்  நான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியையாக தற்காலிகமாக பணி கிடைத்தபோது, அதற்கு அனுமதி கிடைத்து நானும் பணியில் சேர்ந்திருந்தேன். அக்கல்லூரி ஆசிரியர்களில் முதல் டாகடர் பட்டம் பெற்ற பெண் என்னும்  பெருமையுடனும் இருந்தேன். திருமண அழைப்பிதழில் டாக்டர் என்னும் அடைமொழியுடன் என் பெயர் எனக்களித்த மகிழ்ச்சி அளவற்றது

திருமணம் முடிந்து கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருந்த சில நாட்களில்  அந்த கிராமத்து புகுந்த வீட்டில் புதுப்பெண்ணான என்னை  கும்பல் கும்பலாக வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாளில்  என் மாமியார்  அவர் வயதில் இருந்த இரு பெண்களுடன் வந்தார். அவர்கள் என்னருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்களில் ஒருவரைக்காட்டி என் மாமியார் என்னிடம் ’’இவளுக்கு ரெண்டு நாளா காய்ச்சலடிக்குது’’ என்றார்.

நான் ஆதுரமாக அவர் கையை பற்றிக்கொண்டு ’’அப்படியா நல்ல ஓய்வில் இருந்து உடம்பை பார்த்துக்குங்க’’ என்றதும் என் மாமியாருக்கு வந்ததே கோபம், ’’ஆமா, இதை சொல்லத்தான் நீ இருக்கியா? ஒரு ஊசி போடு சரியா போகும்’’ என்றர். எனக்கு தூக்கிவாரி போட்டது.’’’ஊசியா என்னத்தை சொல்லறீங்க?”’ என்றேன்.

 ’’டாக்டருக்கு படிச்சுட்டு என்ன ஊசியாங்கறே? ஏன் மருந்துப் பெட்டி கொண்டு வரலையா? என்றார்கள். ’’இல்லத்தை நான ஊசி போட மாட்டேன்’’  ’’நான் வந்து’’ என்று மேலே சொல்ல துவங்குவதற்குள் அவர் இடைமறித்து ’’அப்படின்னா மருந்தாவது எழுதிக் கொடு’’ என்ற போது தான் எனக்கு விபரீதம் புரிந்தது. 

எளிய, கல்விப் பின்புலம் இல்லாத அந்த குடும்பத்தின் முதல் பட்டதாரியுடன் தான் எனக்கு திருமணம் நிகழ்ந்திருந்தது.  அழைப்பிதழின் டாக்டர் பட்டம் குடும்பத்துப்பெரியவர்களி அப்படி நினைக்க செய்திருக்கிறது

நான் உள்ளூர பெருகிய திகிலை மறைத்துக்கொண்டு  மெல்ல ’’அத்தை நான் ஊசி போடற அந்த டாக்டர் இல்லை’’ என்றேன், 

அவர் முகம் மாறி ’’பின்ன ஆயுர்வேத டாக்டரா? ’’ என்றார்கள். ’’இல்லத்தை’’ என்றேன் பலஹீனமாக.

’’அப்படினா சித்தாவா?’’ என்றார் முகம் இருள

’’அதுவும் இல்லத்தை,  இது ஆராய்ச்சி பண்ணி வாங்குற டாக்டர் பட்டம்’’ என்றேன். நிராசையுடன் மீண்டும் ’’அப்படீன்னா ஊசி போட மாட்டியா’’? என்றார்கள்,’’இல்லை’’ என்றேன் 

அவர் முழுக்க இருண்டு தன் தோழிகள் முன்னால் உண்டான அந்த இழிவை தாங்கமுடியாதவராக விருட்டென்று வீட்டு கூடத்திலிருந்து  வெளியேறினார்.

லண்டனில் வெளியாகியிருந்த ஆய்வுக்கட்டுரைகள் அளித்த அங்கீகாரம், டாக்டர் என்னும் அடைமொழி அளித்திருந்த பெருமிதம், நிறைவேறிய என் நெடுநாளைய கனவு ஆகியவையும்  என்னுடன் சேர்ந்து திகைத்து நின்றன.

தனது புகுந்த வீட்டில் மாமியாரால் பெரும் துன்பத்துக்குள்ளாகி இருந்த தோழி ராஜி “அடிப்பாவி உனக்கு வந்த வாய்ப்பெல்லாம் எனக்கு வந்திருந்தா, என் பிரச்சினையெல்லாம் ஒரு ஊசியில் முடிஞ்சிருக்குமே’’ என்று இன்னுமே  அங்கலாய்ப்பாள். அவளும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் ராஜிதான்.

 22 நீண்ட வருடங்களுக்கு பின்னரும் அத்தைக்கு நான் மருத்துவரில்லை என்னும்  மனக்குறை இருக்கிறது, வளர்ந்த என் மகன்கள்  மூலம் அக்கனவை நனவாக்க மீண்டும் முயற்சித்தார். பள்ளி இறுதி முடித்த சரணிடம் ’’நீ டாக்டருக்குப் படி என்ன செலவானாலும் நான் பாத்துக்கறேன்’’ என்றார்.

அவன் ”நான்தான் அந்த ஸயின்ஸே படிக்கலையே, எனக்கு கம்ப்யூட்டர் தான் படிக்க ஆசை’’ என்று அவர் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டான். 

சற்றும் மனம் தளராமல் அடுத்து தருணிடம் முன்கூட்டியே “நீ டாக்டராகற  ஸயின்ஸ் படிக்கற தானே’’ என்று கேட்டுக்கொண்டார்

அவன் உயிரியல் படித்திருந்தான் ஆனால் டாக்டருக்கு படிக்கச் சொல்லி அவரால் அழுத்தம் கொடுக்கப் பட்டபோது ’’எனக்கு காட்டியல்தான் படிக்க விருப்பம்” என்று அந்த கனவில் நெருப்பையள்ளிக் கொட்டினான்.

 இத்தனைக்கும் பிறகும் அத்தையின் அடிமனதில் குடும்பத்தில் ஒரு டாக்டரை பார்த்து விடும், தன் வீட்டில் ஒருவருக்கு ஊசி போடப்பட வேண்டும் என்னும் ஆசை கனன்று கொண்டே இருக்கிறது. எனவே இப்போது சரண், தருண் இருவருக்கும் டாக்டர் மணப்பெண்களாக பார்க்கலாமே என்று மற்றொரு வடிவில் தன் டாக்டர் மோகத்தை தணித்துக் கொள்ள முயல்கிறார். 

சரண் இந்த பேச்சை துவக்கத்திலேயே வெட்டிவிட்டான் ’’டாக்டர் தொழில் எல்லாம் ரொம்ப நல்லதுதான் ஆனா எனக்கு குடும்பத்துக்கு நேரம் செலவழிக்கும் பெண் தான் வேணும், நேரம் கெட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு அலையும் பெண் வேண்டாம்’’ என்று  கறாராக சொல்லி விட்டான்.

தருணோ இன்னும் ஒரு படி மேலே போய் ’’நீங்க ஆசைப்படுவதெல்லாம் சரிதான், அதுக்காக நான் ஒரு டாக்டர் பொண்ணை கல்யாணம்  பண்ணிக்கறதெல்லாம் இருக்கட்டும், நீங்க இத்தனை ஆசை இருந்தும் எங்கப்பாவை அதான் உங்க மகனை  ஏன் டாக்டருக்கு படிக்க வைக்கலை? ’’ என்று ஒரே ஒரு  எதிர்க்கேள்வி   கேட்டு  டாக்டர் பிரச்சனைக்கு முடிவு கட்டினான். இனி ஒருபோதும் அக்கேள்வி வீட்டில் வராது என்று உறுதியாகிவிட்டது. 

நேற்று எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. தன் சகோதரனுக்கு பார்த்தினிய ஒவ்வாமையினால் சரும அழற்சி வந்து அவர் மிகவும் துன்பப்படுகிறார் என்றும் அவருக்கு நான் எப்படியாவது  சிகிச்சையளித்து குணமாக்க வேண்டும்  என்றும் கேட்டு நீண்ட கடிதம் அது.  பார்த்தீனியம்  குறித்து வெளியான என் கட்டுரையை  வாசித்துவிட்டு என் மின்னஞ்சலை பெற்று அதில் என் பெயருக்கு முன்பாக  Dr என்றிருப்பதை கவனித்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதம் . விளக்கமாக பதில் எழுதியனுப்ப வேண்டும்.

விடாது துரத்தும் இந்த டாக்டர் பிரச்சனைக்கு ஒரே வழிதான் இருக்கிறது அரசு இதில் தலையிட்டு இனி மருத்துவர்களும் முனைவர்களும் ஒன்றுபோல டாக்டர் என குறிப்பிடப் படக் கூடாது. முனைவர்களுக்கென தனித்த ஒரு அடைமொழியை உருவாக்க வேண்டும் என்று அறிவித்தால் ஒழிய எனக்கு விமோசனம் இல்லை.

One Reply to “டாக்டரும், முனைவரும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.