இந்திய கீதத்தின் சின்னம் – 1

தேசிய சின்னங்கள்:

சுதந்திரப் போராட்டம், இந்தியாவை சுதந்திர நாடாக, அதுவும் அச்சமயம் புழக்கத்திலிருந்த தேசிய அரசாக நினைத்துப் பார்க்க ஆரம்பித்த பின், தேசிய சின்னங்களுக்கான தேவையை உணர்ந்தது.

தேசியக் கொடிக்கு சத்ரபதி சிவாஜியின் குங்குமப்பூ நிறத்தைப் போன்ற முழு ஆரஞ்சு வண்ணத்தையே உபயோகிக்கலாமா என விவேகமாகச் சிறிது காலம் சிந்தித்தது. இது மௌமார் கடாஃபியின் முழு பச்சைக் கொடியைப் போலிருந்திருக்கும். ஆனால் முஸ்லிம்கள் ஆதரிக்கும் ஒரு இயக்கம் இந்தப் படிகம் போன்ற தெளிவான சின்னத்தை விரும்பாததால் தூர தள்ளி வைக்கப்பட்டது. 1907ல் ஷ்டுட்கார்டில்நடந்த சோஷலிச மாநாட்டில் திருமதி. பிகாஜி காமா1 சூரியனையும் சந்திரனையும் கொண்ட வடிவமைப்பை அறிமுகப்படுத்தினார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி சமூகங்களை திருப்திப்படுத்தும் வகையில் மூவர்ணக் கோடியை தேர்ந்தெடுத்தது. ஹிந்து சமூகத்தை பிரதிபலிக்கும் ஆரஞ்சு நிறத்தை மேலிலும். இஸ்லாமிய மதத்திற்காக பச்சை நிறத்தை கீழிலும் அமைத்தது.இதை சுவாமி விவேகானந்தரின் வெற்றி சூத்திரமான, ‘வேதாந்த மூளை: இஸ்லாமிய உடல்’ என்பதின் உருவகமாகக் கொள்ளலாம். சமீப காலத்திய பச்சை வண்ண அரசியல் கொடிகளை போல், இவ்விரு நிறங்களும் இரு வகுப்பினரையும் மகிழ்விக்கிறது என்ற இஸ்லாமியர்களும் நேருவியர்களும் கூறும் காரணத்தை ஏற்க வேண்டிய தேவையில்லை. இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு முன்னரே, பச்சை நிறம் பல காலமாக பல பொருட்களை கொண்டதாக இருந்து வருகிறது; செல்வ வளமை, செழுமை, மற்றும் இயற்கை. அது போலவே ஆரஞ்சு நிறம் தீ, தவம், ஆன்மிகம் ஆகியவற்றை குறிக்கின்றன.

நடுவிலுள்ள வெள்ளை நிறம் இரண்டு மதங்களுக்கும்(அனைத்து மதங்ககுக்கும்) பொதுவான தூய்மைக்கு அடையாளமாக உள்ளது.மஹாத்மா காந்தி இராட்டையை நடுவில் அலங்காரமாக வைக்க ஆசைப்பட்டார். ஆனால் நேருவியர்கள், மாற்றாக முன்வைத்த நீல நிற ‘அசோக சக்கரம்’ வெற்றி பெற்றது. இந்தியாவின் கடைசி வைஸ்ராய், ஜவஹர்லால் நேரு முகலாய கலாச்சாரத்தையும் பிரிட்டிஷ் காலனிய கலாச்சாரத்தையும் மும்முரமாக ஆதரித்தவர். உள்நாட்டு கலாச்சாரத்தைப் பற்றி சரியாக அறியாதவர். எனவே, 24 கம்பிகளை கொண்ட சக்கரம் அசோகருக்கு முன்னதாகவே இருந்த ஒன்று என்பதை அறிந்திருக்கவில்லை. இச்சக்கரம், ஏற்கனவே சக்கரவர்த்தி அல்லது ‘சக்கிரத்தை திருப்புபவர்’, ‘சாம்ராஜ்யம் எனும் சக்கரத்தின் அச்சு’, ‘ஒருங்கிணைந்த ஆட்சி’, ‘பேரரசு’, போன்ற பல லட்சியங்களை குறிக்கும் சொல்லாக காவியங்களில் பாடப்பட்டுள்ளது.

இந்தியாவை சக்கரவர்த்தி க்ஷேத்ரமாக மாற்ற வேண்டும் எனும் கருத்தியல் பழமையானது. அசோகர் ஆட்சி இதற்கு வெகு அருகாமையில் வந்தது என்பது ஒப்புக் கொள்ளக் கூடியது. கிட்டத்தட்ட ‘அனைத்திந்திய பேரரசராக இருந்தார் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இக்கருத்தியலை இவர் தோற்றுவிக்கவில்லை. 24 கம்பிகளை கொண்ட சக்கரம் மையத்திலுள்ள பேராட்சிக்கும் வெளிப்புறத்திலுள்ள சிற்றாட்சிகளுக்கும் உள்ள உறவின் உருவகமாக இருந்தது. அதாவது, மையத்திலுள்ள அதிகாரக் குடை விரிப்பின் கீழ் மற்ற மாநிலங்கள் சுயதர்மத்துடன் சுதந்திரமாக நிர்வாகம் செய்ததை குறிக்கிறது. எனவே, இது இந்தியாவின் கூட்டாட்சிக்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற பதத்திற்கும் ஒரு சிறந்த சின்னம்.

மற்றும், இச்சக்கரம், அசோகரின் அடையாளம் எனும் நம்பிக்கை, அனைத்துலக புத்த மதத்தினரையும் இந்தியக் குடியரசை மகிழ்ச்சியுடன் அணுக உதவுகிறது. மேலும், இந்திய ரூபாயின் ஒரு பக்கத்தில் , ஏழ்மையை போதித்த காந்தியின் முகத்துடன் அசோக சக்ரவர்த்தியின் உண்மையான அன்பளிப்பும், 1905ல் சாரநாத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அசோக ஸ்தூபியின் உச்சியிலுள்ள நான்கு சிங்கத்தலைகளும்தான் அச்சிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய கீதம், ரவீந்திரநாத் தாகூரால் 1911ல் எழுதப்பட்ட ‘ஜன கண மன’ என்னும் கவிதை. அது ‘ஜன கண மன அதிநாயக’,மக்களின் மனதில் அதிகாரம் செலுத்துபவர், என தொடங்குகிறது. பாரத பாக்கிய விதாதா என்னும் அடுத்த வரி, இந்தியாவின் தலை விதியை நிர்வகிப்பவர் என்பதாகும். யாரிவர்?

கடவுள் அரசியை காப்பாற்றட்டும்(GOD SAVE THE QUEEN):

இந்தியாவின் தேசிய கீதம் யாரைக் குறித்தது போன்ற விவரங்களில் கவனத்தைத் திருப்புவதற்கு முன், சில நாடுகளின் முந்தைய தேசியகீதங்களைப் பற்றிய நன்கு தெரிந்த சில உண்மையான விவரங்களை வாசகர்களுக்கு நினைவு படுத்த வேண்டும். அதன் மூலம் எவ்வாறு அவை தேசிய கீத நடைக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்பது தெரிய வரும். முக்கியமாக, பேதங்கள், ஒற்றுமைகள், உரசல்கள் பற்றிய குறிப்புகளை முன்னிலைப்படுத்தப் பார்க்கிறேன். அதன் மூலம் இந்திய தேசிய கீதத்தின் கட்டமைப்பை மதிப்பீடு செய்ய இயலும்.

பிரிட்டனின் தேசிய கீதம்தான் இருப்பதிலேயே மிகப் பழமையானது. இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. 1618ல் ஜான் புல் என்பவர்தான் இதை செய்தார் என்பது பொதுவான கருத்து. கடவுளை வேண்டுவதாக காணப்பட்டாலும் முழுவதுமே அரசியை(மன்னரை)ப் பற்றியதாகத்தான் உள்ளது. கடவுள் நமது கருணை மிகுந்த அரசியை(மன்னரை)காப்பாற்றட்டும். கடவுள் நமது உன்னத அரசியை காப்பாற்றட்டும். கடவுள் நமது அரசியை காப்பாற்றட்டும். அவரை வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமானவராகவும்,, போற்றத்தக்கவராகவும் நம்மை எப்போதும் ஆட்சி செய்பவராகவும் வழி நடத்தட்டும். கடவுள் அரசியை காப்பாற்றட்டும்.

இவ்வார்த்தைகளின் கவனம் மக்களின் மேல் அணுவளவுமின்றி வெற்றி, செழுமை, நல்லாட்சி ஆகியவற்றின் உருவகமான அரசியின் மேல்தானுள்ளது என்பது தெரிய வருகிறது. இதுதான் பாரம்பரிய முடியாட்சி திட்டம்: ஆட்சி செலுத்துபவர் நாட்டின் உருவகம், அவரது முதன்மையை மதமும் சட்டபூர்வமாக்குகிறது.

இந்த கீதம், பல நாடுகளின் தேசிய கீதங்களுக்கு, ரஷ்யா உட்பட(1816-1833), அதன் இசையை அளித்தது.. தேசிய சின்னங்களை உருவாக்கிய சமயம், பல புதிய தேசிய அரசுகள் மதிப்பிற்குரிய பிரிட்டிஷ் பேரரசின் தேசிய கீதம், அவர்களது தேசிய பாடலுக்கு இயல்பாகவே உள்ளார்ந்த இன்னிசையாக அமைந்துள்ளது என எண்ணினர். பிரஷ்யா 1795ல் அதை ஏற்றுக் கொண்டது. ஆட்டோ வான் பிஸ்மார்க், ஜெர்மானிய மாநிலங்களை ஒன்று சேர்த்து(ஆஸ்திரியா, சுவீடன் தவிர) ஒரு பேரரசை நிறுவி அதன் தலைவரான பின் பிரஷ்யாவின் தேசிய கீதத்தை தன்னுடையதாக ஆக்கிக் கொண்டது. பிரிட்டன், பிரஷ்யாவை சேர்ந்தது இந்த தேசிய கீதம் என எண்ண வைப்பதால், சில தென் மாநிலங்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் இசை, ‘கடவுள் அரசியை காப்பாற்றட்டும்’ பாடலுடையதாக இருந்தாலும், அதன் வரிகள், ‘வெற்றி விருதுகளுடன் உள்ள உன்னை வாழ்த்துகிறோம்!! தந்தை நாட்டை ஆள்பவரே! பேரரசரே! உன்னை போற்றுகிறோம்!’ என்பதாகும். இதில் கடவுள் எங்குமே இல்லை. தேசம் இங்கும் அங்குமாக தென்படுகிறது. முழுக்க முழுக்க மன்னர் வாழ்த்தாகத்தான் உள்ளது. ‘தந்தை நாட்டின் மேலுள்ள காதலும் , சுதந்திர மனிதனின் காதலும் மன்னரின் அரியணையை கடலினுள்ள பாறையைப்போல் நிறுத்தியுள்ளன’.

1918ல் நடந்த பெரிய போரில் தோல்வியுற்ற பேரரசர் சிம்மாசனத்தை துறந்தார். அவருடன் அந்த தேசிய கீதமும் மறைந்தது. அவருக்கு பின்வந்த வெய்மர் குடியரசு மற்றொரு கீதத்தை தேர்ந்தெடுத்தது. அது முந்தையதை விட சர்ச்சைக்குரியதாக இருந்தது.

‘வில்ஹெல்மஸ்’(WILHELMUS):

கடவுள் அரசியை காப்பாற்றட்டும் என்ற பாடல் நாட்டிற்கு தேசிய கீதம் தேவை என்ற கருத்தை முதலில் விதைத்தாலும், அது முதலாவது தேசிய கீதம் அல்ல. முதலாவது தேசியப் பாடலின் வரிகள், 1572ல் ஆண்ட்வெர்ப் நகரத் தலைவர், Filips Van Marnix Van Sint-Aldegonde என்பவரால் அவரது நண்பரும் நெதர்லாந்து ஸ்தாபகருமான Willem Van Oranje-Nassauவுக்காக எழுதப்பட்டிருக்கலாம். 1932ல்தான் அது அதிகாரபூர்வமாக தேசிய கீதம் என அறிவிக்கப்பட்டது. இதன் இசை 1568ல் மெட்டமைக்கப்பட்டு, கத்தோலிக்க முற்றுகையை எதிர்த்த ப்ராட்டஸ்டண்ட் சார்ட்ரசின் ஆதரவாளர்களுக்கு உயிரூட்டியது. நெதர்லாந்து, பெல்ஜியம் லக்சம்போர்க், பிரான்சின் ஒரு துண்டு ஆகியவற்றை ஸ்பெயினிடமிருந்து கைப்பற்றினாலும் , ஸ்பெயின் மீண்டும் அப்பகுதிகளை மீட்டு விட்டது.

வில்லியம் ஆஃப் ஆரஞ்ச், டட்ச் குடியரசின் ஆயுட்கால ஜனாதிபதி ஆனார். ஆனால், தேசிய கீதமோ முடியரசிற்கானதாக உள்ளது. வில்லியம் எனும் ஒரு தனி நபரை விவரிப்பதாக அமைந்துள்ளது. முக்கியமாக, ஸ்பெயின் அரசரிடம் அவருக்கிருந்த விசுவாசத்திற்கும் இறைவன் கட்டளையான மக்கள் தொண்டிற்கும் இடையேயுள்ள சிக்கல்களை சித்திரிக்கின்றது.

சுதந்திரம் என்பது மூளையை உபயோகித்துப் பெறுவதல்ல என சிலர் நினைக்கலாம். ஆனால் அது கண்மூடித்தனமான தேச பக்தி அல்ல. அது அதற்கும் மேலான ஒரு மனச்சாட்சி பிரச்சினை என்றறிய வேண்டும். இப்பாடலின் மொழி பெயர்ப்பு ,நாஸ்ஸாவை சேர்ந்த வில்ஹெல்மஸ் எனும் நான் ஜெர்மானிய இரத்தப் பரம்பரையில் வந்தவன். எனவே, நான் எனது தந்தை நாட்டிற்கு இறுதி மூச்சு வரை உண்மையாக இருப்பேன். ஆரஞ்சு நாட்டின் இளவரரசனாக சுதந்திரமாக பயமின்றி நடப்பேன். ஸ்பெயின் அரசரை நான் ஏப்போதுமே கௌரவித்துள்ளேன்.

(இவர் தற்போதைய ஜெர்மனியைச் சேர்ந்த நகரத்திலிருந்து வந்தவர். ஆனால், இவ்வார்த்தைகளுக்கான காரணம் அதுவல்ல. இது எழுதப்பட்ட சமயத்தில் ஜெர்மன், டட்ச் என்ற இரண்டு கிளைமொழிகளும் டுயூட்ச்(Duytsch) அல்லது டியிட்ச்(Dietsch) என்ற கிளைமொழியின் தொடர்ச்சியாக இருந்தது.. இதன் பொருள் கிராமப்புறத்தை சார்ந்தது அல்லது பாமர மக்கள் விரும்பியது என்பதாகும். பிரபுக்களின் ஃபிரெஞ்ச், பாதிரிகளின் லத்தீன் மொழி இவற்றிலிருந்து வேறுபட்டது என்பதை சுட்டிக்காட்டவே இவ்வாறு பெயரிடப்பட்டது. இது தனி மொழியாக இருந்தாலும், Nederduytsch , கீழ் மட்ட ஜெர்மன் என்றுதான் அழைக்கப்பட்டது).

நீண்ட இப்பாடலின் நடுப்பாகமாகிய எட்டாவது சீர் அல்லது சரணம் அதிகமாக இசைக்கப்படுவதில்லை. இப்பகுதியில், வில்லியம் விவிலியத்தில் கூறப்படும் மன்னர் டேவிட்டுடன் ஒப்பிடப்படுகிறார். பாடலாசிரியர் பைபிள் மேல் மிகுந்த பற்றுள்ள கால்வினிசத்தால் ஈர்க்கப்பட்டவர் என்பது தெரிகிறது. ஆறாவது சீர் அரசர் இறைவனுக்கு அடி பணிந்தவர் என்பதை தெளிவாகக் கூறுகிறது. ‘ ‘இறைவா! என் தலைவா! நீதான் எனது கேடயமும் நம்பிக்கையும். உனக்காகவே நான் கட்டிடங்களை எழுப்புகிறேன். என்னைத் தனியாக விட்டு விட்டு என்றுமே போகக் கூடாது. நான் உன்னிடம் பக்தியுள்ளவனாக என்றும் இருக்க வேண்டும். உனது பணியாளாக எப்போதும் இருப்பேன். எனது இதயத்தை புண்படுத்தும் கொடுமைகளை விரட்டுவேன்’. போலிக் கடவுள்களை வணங்குவதை வெளிநாட்டு அரசர்களை பணிவதுடன் ஒப்பிடுவதின் மூலம் கிருத்துவம் தேசியப்பற்றின் மேல் நிழல் போல் படர்ந்துள்ளது என்பது தெரிய வருகிறது.

இப்பாடலின் இசையும் ஜெர்மனியின் தேசியப் பாடலுக்கு இசையாக அமைந்தது. 1814ல், நெப்போலியனின் இறுதி கட்ட ஆக்கிரமிப்பு காலத்தில் மாக்ஸ் வான் ஷெங்கென்டார்ஃப்(Max von Schenkendorf) என்பவர் ஜெர்மனியின் தேசப்பற்று உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கவிதையை எழுதினார். மற்றவர்கள் எல்லாம் விசுவாசத்தை இழந்த பின்னரும் நாங்கள் விசுவாசத்துடன் இருப்போம்’. இது ஜெர்மன் ரைஹ் (Reich)க்கான உறுதிமொழியுடன் முடிகிறது. 1800களில், ஜெர்மனி உருவமற்ற ஒரு ஆவியாகத்தான் மக்கள் மனதில் படர்ந்திருந்தது.. நெப்போலியன் 1806ல் அதை அழித்த பின்னர் 1930களில் நாட்சி கட்சியினால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்வரை ஜெர்மன் ரீஷ் ஒரு கருத்தியலாகத்தான் இருந்தது.

இந்த கவிதை வில்ஹெல்மஸ் இசையோடு இணைக்கப்பட்ட பின் இதற்கு Treuelied, விசுவாசமான பாடல் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. 100 வருடங்களுக்கும் மேலான பிறகு நாட்சி கட்சியின் பிரதான பாதுகாப்பு பட்டாளமாகிய SS இப்பாட்டை தனதாக்கிக் கொண்டது. சமகால ஆதாரங்கள் பல இப்பாடலை SS Treuelied என தவறாக அழைக்கின்றன. உண்மையில், ஸ்வஸ்திகா போன்ற மற்ற பழமையான சின்னங்களை போலவே இதுவும் தேசிய சோஷலிசத்திற்கு எவ்விதக் கடனும் பட்டிருக்கவில்லை. இருந்தாலும், ஐரோப்பாவில், இச்சின்னங்களின் மேல் படிந்துள்ள கறை முழுவதுமாக நீங்கி பழையபடி சரியான உபயோகத்திற்கு வர இன்னும் சில காலம் பிடிக்கும். டட்ச் மக்கள் SS உடன் அதற்கேற்பட்ட சம்பந்தத்தைக் காரணமாக்கி, தங்கள் கீதத்தைக் கைவிட்டு விடவில்லை.(இந்தியாவின் தேசிய கீதத்தை நாட்சி கட்சியுடன் சம்பந்தம் இருப்பதாக சொல்வதை பிறகு பார்ப்போம்) மாறாக, மற்றொரு கள்ளங்கபடமற்ற பாடலின் வரிகள் பூதாகாரமாக சித்தரிக்கப்படுவதை பார்ப்போம்.

‘கெய்சர்ஹிம்/ டியூட்ச்லாண்ட்லைய்ட்’(KAISERHYMNE/DEUTSCHLANDLIED):

1797ல், ஆஸ்திரிய பேரரசர் ஃபிரான்ஸ்(Franz) பிறந்த நாளன்று, முன்னணிக் கவிஞர் லோரன்ஸ் லியோபோல்ட் ஹஷ்கா(Lorenz Leopold Haschka)எழுதிய பாடலுக்கு, பிரபல இசையமைப்பாளர், ஜோசப் ஹைடன் (Joseph Haydn) இசையமைத்தார். இவர் இங்கிலாந்து சென்றபோது எல்லோருமறிந்த தேசிய ஒருமைப்பாட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு அழகிய பாடலைக் கேட்டு உற்சாகமுற்றார். சொந்தமாக இசையமைக்கும் திறமையிருந்தாலும் இறைவன் அரசியை காப்பாற்றட்டும் என்ற தேசிய கீதத்தால் ஈர்க்கப்பட்டார். பாட்டின் வரிகளும் இங்கிலாந்தின் தேசிய கீத வரிகளுடன் ஒத்திருந்தது. இறைவன் பேரரசர் ஃபிரான்சிசை காப்பாற்றட்டும். நமது நல்ல பேரரசர் ஃபிரான்சிஸ்’ மேலும், ஃபிரான்சிஸ் நீண்ட காலம் ஒளிமயமான பேரின்பத்தில் வாழட்டும். புன்னை மரக் கிளைகளின் பூக்களை அவர் எங்கு சென்றாலும் மரியாதையுடன் மாலையாக சூடட்டும்’ இப்பாடலில், பேரரசரின் உடல் நலம் வேண்டப்படுகிறது. நாட்டின் நலமல்ல. ஆனால் கடவுளுக்கு கீழ்ப்படிந்தவராக விவரிக்கப்படுகிறார்.

இங்குமே, 1918ல் ஏற்பட்ட தோல்வி இப்பாடலை பொருளற்றதாக ஆக்கி விட்டது. எனவே வரிகள் மாற்றப்பட்டன. ஆனால் அதன் இசை பத்து வருடங்களுக்கு பிறகு 1929ல் மீண்டும் உயிர்த்தெழுந்தது. ஆனால், இவ்வரிகளனைத்தும் குடியரசைச் சார்ந்ததாக மாறியது. தேசத்தலைவனிடமிருந்து தேசத்தின் மேல் மக்களின் கவனத்தை திருப்புவதாக அமைக்கப்பட்டது. பின்னணியில் இறைவன் மறைந்திருப்பதும் தெரிகிறது. ‘முடிவற்ற ஆசிகள் வழங்கப்படட்டும்’. 1938ல், ஜெர்மனி ஆஸ்ட்ரியாவை இணைத்துக் கொண்ட பின், இப்பாடலின் மவுசு மழுங்கி விட்டது.

1918 இறுதியில் ஜெர்மனி குடியரசாக மாறியது. ஒரு புதிய பாடலை இயற்ற வேண்டிய அவசியம் இல்லை. தேசியப் பாடலுக்கான வரிகளை 1841லேயே ஆகஸ்ட் ஹெய்ன்ரிச் ஹாஃப்மன் வான் ஃ பாலர்ஸ்லீபென்(August Heinrich Hoffman von Fallesleben) என்பவர் எழுதியிருந்தார். இசையும் ஆஸ்த்ரிய பேரரசருக்காக எழுதப்பட்டதுதான். ஜெர்மனியை ஒன்றிணைப்பதற்கான காலமது. எனவே, ஜெர்மானியர்கள் அனைவரையும் தங்களது மாநிலங்களின் மேலிருந்த விசுவாசத்தை மூட்டை கட்டிவைத்து விட்டுச் சிதறிக் கிடக்கும் ஜெர்மனியின் மேல் கவனத்தை திரும்புமாறு முறையிடும் பாடல். பாடலின் தலைப்பு, ‘ஜெர்மானியர்களின் பாட்டு ’ அல்லது ஜெர்மனியின் பாட்டு. அயல்நாட்டினர் இதன் முதல் வரியை அறிந்திருந்தினர்; ‘அனைத்திற்கும் மேலான ஜெர்மனி’. இது பிற நாட்டினர் கீழானவர்கள் என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டதல்ல. முழுமையான ஜெர்மனியின் படிநிலைகளான பாகங்கள், அதாவது, பவேரியாவிற்கு மேலான ஜெர்மனி, ரைன்லாந்திற்கு மேலான ஜெர்மனி போன்றதை குறிக்கும்.

இப்பாடல் மன்னருக்காக எழுதப்பட்டதல்ல. ஜெர்மனிநாட்டிற்காக எழுதப்பட்டது. அச்சமயம், முன்னணியில் இருந்த தாராளவாத தேசியவாதிகள் அவர்களது தாராளவாத, அதிலும் முக்கியமாக மதச்சார்பற்ற தேசியவாதம், ரோமானிய ஆஸ்திரிய பேரரசரின் மேலுள்ள விசுவாசத்திற்கு மாறுபட்டது என்பதை காட்டுவது போல் அமைந்துள்ளது. 1848ல், நாடு கடந்த உயர் குடியினரை எதிர்த்த மக்கள் புரட்சியை பிரதிபலிப்பதாக இருந்தது. அதே காரணத்திற்காகவே, 1922ல் புதிய ஜெர்மானிய வைமார் குடியரசு தனது தேசிய கீதமாக இதை தேர்ந்தெடுத்தது. கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஜெர்மானிய ஏகாதிபத்தியம் (கைஸரின் முடியாட்சி காலம்) முறியடிக்கப்பட்டதை குறிப்பதாக அமைந்தது.

ஓரளவு, ஜன கண மன போலவே இப்பாடலும் நாட்டை ஒரு பூகோள வடிவமைப்பாக காண்பித்துள்ளது. பஞ்சாப,சிந்து, குஜராத, மராத்தா என்பது போலில்லாமல் நாட்டின் எல்லைகளை குறிப்பதாக அமைந்துள்ளது. இந்த எல்லைப் பகுதிகள், முன்னிருந்த ஏகாதிபத்தியத்தை குறிப்பிடாமல், 19ம் நூற்றாண்டு நடுவில், பிரெஞ்ச், டட்ச், இத்தாலிய, டேனிஷ் மொழி பேசும் நாடுகளில் ஜெர்மானிய மொழியை பேசும் பகுதிகளை தனது எல்லைகளாகக் காண்பித்தது. அச்சமயம் ஒன்றிணைந்த ஜெர்மனி ஒரு வெற்றுக் கருத்தாக மட்டுமே இருந்தது. எல்லைகள் அனைத்துமே விவாதத்திற்குரியதாக இருந்தது. இத்தாலியின் எல்லையாக இருப்பதற்காக ஆஸ்திரியாவை தன்னுடன் இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டியது. 1920களில் இது யதார்த்தமான பிரேரேபணையாக இருந்தது. ஏனென்றால், ஆஸ்திரியா ஜெர்மனியுடன் இணைவதற்காக நடந்த வாக்கெடுப்பு மிகப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை பெற்றிருந்தது. ஆனால், போரில் வெற்றியடைந்த ஃபிரான்ஸ் அதை அனுமதிக்கவில்லை.

1933ல், ஹிட்லரின் தலைமையில் தேசிய சோஷலிசவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியபோதும் இதுவே தேசியகீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1939லிருந்து 1945 வரை, ஐரோப்பாவின் பெரும்பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தில் இருந்த வரை அது தொடர்ந்தது. அதன் கடைசி காலத்தில் இப்பாடல் எதிர்மறை தாத்பரியத்துடன் பார்க்கப்பட்டது. வெளிநாட்டினர் இதன் முதல் வரி ‘மற்ற நாடுகளுக்கெல்லாம் மேலான ஜெர்மனி ‘என்ற புதிய அர்த்தத்தை கற்பித்தனர். டட்ச் குழந்தைகள் பிரிட்டிஷ் வெடிவிமானங்கள் ஜெர்மனியில் குண்டு வீச்சு நடத்த அவர்களது நாட்டின் மேல் பறந்து சென்றபோது, இவ்வரியைத் திருப்பி ‘எல்லா குண்டுகளையும் ஜெர்மனியின் மேல் பொழியுங்கள்’ என முழங்கினார்.

1945ற்கு பிறகும், இக்கீதம் ஓரளவிற்கு தொடர்ந்தது. இசை மாறவில்லை. அதன் வரிகளில் மூன்றாவது சீர் அல்லது சரணம் மட்டுமே அதிகாரபூர்வமாக உள்ளது. இது பாடலாசிரியரின் இணைப்பு இயக்கத்தை குறிப்பிடுவதாக உள்ளது. தந்தை நாடான ஜெர்மனியில் ஒற்றுமை, நீதி, சுதந்திரம் நிலவட்டும். அதற்காகவே, சகோதரர்களாக இதயத்தாலும் கைகளாலும் பாடுபடுவோம்’

இரண்டாம் சீர் கபடமற்றதாக இருந்தாலும் தேசிய கீதத்திற்கான மதிப்புடன் இல்லையெனக் கருதப்பட்டது. முதற் சீர், 1945க்கு முன்னிருந்த எல்லையை மீட்பது போல் அமைந்துள்ளது என பலரை முகம் சுளிக்க வைத்தது. கிழக்கு பிரஷ்யாவை இழந்த பின் மெமேல் நதி ஜெர்மனியின் எல்லையிலிருந்து நூற்றுக் கணக்கான மைல்கள் தள்ளியுள்ளது. ஆஸ்திரியா சுதந்திரமடைந்த பின், இத்தாலியின் எல்லை நாடென்பதும் ஒரு பாவனையாக நின்று விட்டது. இவ்வரிகள், நிச்சயமாக ஜெர்மானிய ஏகாதிபத்தியத்தை குறிப்பதாகத்தான் அர்த்தம் செய்யப்படும்; ஜெர்மானிய மொழியை சார்ந்த மூலப் பொருளில் அல்ல.

பெரும்பான்மை சாமானியர்கள் இப்பாடலை நாட்சி கட்சியுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கின்றனர். இவர்கள் தாமச குணம் நிறைந்த, தங்கள் காலி மனங்களை முடிவேயில்லாத ஹிட்லரைப் பற்றிய குறிப்புகளால் நிரப்புவதின் மூலமே தார்மீக உச்சியில் இருப்பதாக எண்ணும் இடதுசாரிகள் மட்டுமல்ல. பொது மக்களுமே இதைப் பற்றிய அறிவில்லாதவர்களாக இருக்கின்றனர். இப்பாடலின் உண்மையான கதை இதற்கு தலைகீழானது; அரசியலில் தாராள மனப்பான்மை, அரசியலமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றிற்கு ஆதரவு, பிரபுத்துவம் அல்லாத மக்கள் சார்ந்த தேசிய நோக்கம் ஆகியவை அமைந்த பாடல் இது. ஜெர்மனியைச் சேராத எந்த நிலத்திற்கும் உரிமை கொண்டாடவோ மற்ற நாடுகளின் மேலோ யூதர்கள் போன்ற மற்ற இனங்களின் மேலோ ஒரு துளி வெறுப்பையும் காட்டுவதாக இயற்றப்படவில்லை. இதற்கு மேலும் என்ன சொல்ல முடியும்.? இது ஒரு மிக அழகான பாடல் என்பதை தவிர.

‘லா மார்சேய் மற்றும் லா ப்ரபாங்ஸொன்’(La Marseillaise & La Brabanconne)

1789 பிரெஞ்சு புரட்சிக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த புரட்சிக்காரர்கள் அனைவருமே தேசியவாதிகள். இன்றைய இடதுசாரிகள் இதை மறக்க நினைத்துத் திறந்த எல்லைகளை ஆதரிக்கிறன்றனர். இராணுவப் படையினரை பழிக்கின்றனர், கருச்சிதைவை எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்களைக் கேலி செய்கின்றனர். இவையெல்லாவற்றிலுமே இவர்கள் முன்மாதிரியாகக் கருதும் பிரெஞ்ச் புரட்சிக்காரர்கள் எதிர் துருவமாக இருந்துள்ளனர். 1792ல், புரட்சி தேசியவாதிகள் ஒரு பாடலை உருவாக்கி 1795ல் தேசியகீதமாக ஏற்றுக்கொண்டனர். இதில் கடவுளுக்கோ அரசருக்கோ ஒரு வேலையுமில்லை. நாட்டிற்கு மட்டுமே முழுக் கவனம் அளிக்கப்பட்டது. அதன் தொனியும் போருக்குச் செல்வதாக அமைந்துள்ளது. தந்தை நாட்டின் குழந்தைகளே! நமது மகிமையைக் காட்டும் நேரம் வந்து விட்டது’. இவ்வார்த்தைகள் பல நாடுகளின் மதச்சார்பற்ற தேசிய கீதங்களுக்கு மாதிரித் தகடாகி விட்டது. சக்தி வாய்ந்ததாகவும், சுய நேர்மையை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் புத்திசாலித்தனமானதாக இல்லை. குறுகிய கால அரசாட்சிக்கு பின்னும் பல ஆட்சி மாற்றங்களுக்கு பின்னரும் கூட இத்தேசிய கீதம் நடைமுறையில் இருந்தது.

லா மார்சேய், மார்ஸெயில்லின் பாட்டு, ஸ்டராஸ்போர்கில்(Strasbourg) மார்செயிலிலிருந்து பாரிஸுக்குள் நுழைந்த தொண்டர்கள் பாடிய தொனியிலேயே எழுதப்பட்டது. இது பெல்ஜிய தேசிய கீதமாகிய லா ப்ரபாங்ஸொன், பிராபொண்டின் பாட்டிற்கு மாதிரியாக அமைந்தது. பிராபொண்ட், பிரஸ்ஸல்ஸ் நகரத்தை உள்ளடக்கிய மாகாணம். இது காசி வாரணாசிக்குமுள்ள சம்பந்தம் போலவாகும். இதிலும் இறைவன் இல்லை. ஆனால் அரசருக்கான பெருமதிப்பை வெளிக்கோடாக வைத்துள்ளது. நெப்போலியன் காலத்திற்கு பிறகு 1914-15ல் நடந்த வியென்னா மாநாடு புரட்சி முறைக்கு எதிரான முடியாட்சியை உலகின் பல நாடுகளில் நிறுவியிருந்த இக்கால கட்டத்தில்,1830ல் உருவான பெல்ஜியம் அவ்வழிப் பாதையிலேயே செல்ல வேண்டியிருந்தது.

ஆரம்ப கட்டத்தில், பெல்ஜியம், பத்திரிகை சுதந்திரம், அந்நியநாட்டு எதிர்ப்பாளர்களுக்கு புகலிடம் போன்ற தாராளக் கோட்பாடுகளை கொண்டிருந்தது. எனவே அதன் தேசிய கீதம் தாராள மனப்பான்மையை விவரிக்கும் வரிகளை கொண்டிருந்தது. பயமின்றி பேசலாம்; இது சத்தியம்’. ஆனால், மையக் கருத்து, நாடும் அதன் எல்லைகளும்தான். மதிப்பிற் சிறந்த பெல்ஜியமே! எங்களது மூதாதையர்களின் புனிதமான பூமியே! எங்களது ஆன்மாவும் இதயங்களும் உனக்கே உரியது என சபதம் செய்கிறோம்!

நட்சத்திரங்கள் மின்மினுக்கும் கொடி(STAR-SPANGLED BANNER):

அமெரிக்காவின் தேசிய கீதம் 1814ல் வழக்கறிஞர்,பிரான்சிஸ் ஸ்காட் கீ (Francis Scott Key) அவர்களால் பிரிட்டனில் அப்போது பிரபலமாக இருந்த பாடல் ஒன்றின் இசையையொட்டி அமைக்கப்பட்டது. 1812ல் நடந்த ஆங்கிலேய – அமெரிக்க போரின் போது அதி சௌகரியமான இடத்திலிருந்து ஒரு நிகழ்வை கண்டார். பால்டிமோர் நகரத்தை பிரிட்டிஷ் கப்பற்படை முற்றுகையிட்டபோது அவர் ஒரு கப்பலில் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து, கடலோரக் கோட்டை கோபுரத்தின் மேல், இரவு முழுவதும் நடந்த சண்டைக்குப் பிறகும் பறந்து கொண்டிருந்த அமெரிக்கக் கொடி அவரை மிகவும் கவர்ந்தது. அதுவே, அவர் எழுதிய தேசிய கீதத்தின் மையக் கருத்தாக அமைந்தது. ஆண்டவனோ, ஆள்பவரோ இல்லை. தேசத்தையும் மேலோடு தொடுவதோடு நின்று விடுகிறது. (நாட்டை ஒரு சின்னமாக பதிவு செய்கிறது-சுதந்திரமானவர்களின் நிலம், துணிச்சல் மிக்கவர்களின் இல்லம்’). அமெரிக்கக் கொடியையும் அதற்காகப் போரிடும் படை வீரர்களின் வீரத்தையும்தான் பேசுகிறது. இப்பாடல் நூறு வருடங்கள் அரையளவு மட்டுமே அதிகார தேசிய கீதமாக இருந்தபின் முடிவாக 1931ல் முற்றிலும் அதிகாரபூர்வமான தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.

(* This Piece has been adapted from the article published on Voice of India, 7 April 2017)

Series Navigationஜன கண மன எவ்வகையை சேர்ந்தது? அதன் பொருள் என்னவாக இருந்தது? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.