ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி?

தமிழாக்கம்: ஷ்யாமா

நீங்கள் அதை “பை”( π) தினத்தன்று நிகழ்த்துவீர்கள் –  “பை” ஒரு மாறிலி. விகிதமுறா எண்ணும் கூட –

ஆனால், அதற்கான அடிப்படை வேலைகள்,  பல மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்துவிடுகின்றன. அதற்கு,  முதலில் நீங்கள் அந்த நபரை ஒரு  STEAM மாநாட்டில் சந்திக்க வேண்டும். நடுநிலைப் பள்ளியின் கலை ஆசிரியராக, அறிவியல் பொறியியல் தொழில்நுட்பம் போன்ற பெரும் அரக்கர்களுக்கு மத்தியில்,  கலைக்கும் உண்மையான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக,  நீங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள.  ஒரு கருப்பினப் பெண்ணாக,  வழக்கமாக இத்தகைய மாநாடுகளில் செய்வதைப் போலவே,  நீங்கள்,  அங்கு வந்திருக்கும் நீக்ரோக்களை எண்ணும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நூறு பேர்களுக்கும் மேலானவர்கள் குழுமியிருக்கும் அந்த மாநாட்டில்,  அவர்  பன்னிரண்டாம் நபர். மாநாட்டின் முதல் நாளன்று, நகரும் படிப் பாதையில் நீங்கள் மேலேறிச் சென்று கொண்டிருக்கும் போது, அவர் கீழே இறங்கிக் கொண்டிருப்பதை கவனிக்கிறீர்கள். எந்த சுருக்கப் பெயரால் அவரை அடையாளப் படுத்தலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். அவரது சிறிய குச்சி முடி,  “கவிஞர்” அல்லது “உயர்நிலைப்பள்ளி கணக்காசிரியர்” என்னும் இரு  அடையாளங்களுமே,  அவருக்கு சமமாக பொருந்துவதாக எண்ண வைக்கிறது.

மாநாட்டின் இரண்டாம் நாளன்று,  நீங்கள்,  அவரை “கலை ஒருங்கிணைப்பும் உலகக் குடிமக்களும்” என்கிற அமர்வில் பார்க்கிறீர்கள். அவர், அமர்வு தொடங்குவதற்கு முன்பாக அதை தொகுத்து வழங்கவிருக்கும் பதிமூன்றாவது நபரிடம், “சகோதரி” என அழைத்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் பேசுவதைத் தூரத்திலிருந்து கேட்டதில்,  தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்,   அட்லாண்டாவில் கல்லூரயில் படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே, அவர்கள் ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள் என்று புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் படித்த கல்வி நிலையங்களில்,  அவர்களுக்குப் பல பொது நண்பர்கள் இருந்தார்கள். மாநாடு முடிவடைவதற்கு முன் மறுபடியும்  சந்திக்கலாமெனக் கூறி,  அவர்கள் விடை பெறுகிறார்கள். “சகோதரி” திருமண மோதிரம் அணிந்திருப்பதையும்,  அவரது கையில் அது இல்லை என்பதையும் நீங்கள் கவனிக்கிறீர்கள்.

  இடைவேளையில் அமர்வை விட்டு நீங்கள் வெளியேறும் போது, நீங்கள் அவரை கவனித்துக் கொண்டிருந்ததை அவரும் கவனித்திருந்தார். மிகவும் பிரகாசமான புன்னகை அவருடையது. நீங்களும் பதிலுக்குப் புன்னகைக்கிறீர்கள்.  அவர் உங்களுக்கு அருகாக நடந்து வந்து,  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு,  கைகளை நீட்டுகிறார். அவர் தன்னை “எரிக் டர்மன்” என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். நீங்கள் “எரிக்க் செர்மன் ” என்று புரிந்து கொள்கிறீர்கள். அவர் வினோதமான முறையில் கேலி செய்கிறாரோ என நினைத்து,  நீங்கள் உங்கள் கண்களை ஒரே நேரத்தில்,  விரித்தும் சுருக்கவும் செய்கிறீர்கள்.

“எரிக் டர்மன்” என அவர் மறுபடியும் சிரித்தவாறே சொல்கிறார். பாடகர்களின் பெயரின் முதல் எழுத்தால் அமைந்த EPMD என்கிற ஹிப் ஹாப் இசைக்குழுவைச் சேர்ந்தவன் அல்ல என அவர் விளக்குகிறார்.

 நீங்கள், புரிந்து கொண்டதாகவும்,  தன் பெயர் லைரா ஜேம்ஸ் எனவும்,  ரிக் ஜேம்ஸுடன் (அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர்) குழப்பிக்கொள்ளலாகாது எனவும்  கூறுகிறீர்கள்.

எரிக் உள்ளூர சிரிக்கிறார். “ஆனால் இரவு வானத்தின் மிகப் பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்றான லைராவுடன் இணைத்துக் குழப்பிக் கொள்ளலாம்” என்கிறார்.

அவரது புகழ்ச்சி உங்களை ஆச்சரியப்படுத்துகிறது. அதை மறைக்க எடுக்கும் முயற்சியில் தோற்று,  நீங்கள் அசடு வழிகிறீர்கள். அவரிடம் நீங்கள் அறிவியல் ஆசிரியரா எனக் கேட்கிறீர்கள்.

அவர் அறிவியல் ஆசிரியர் இல்லை. கவிஞரும் இல்லை. அவர் ஒரு இயற்பியலாளர் மற்றும் அமெரிக்க இயற்பியல் மன்றத்தின் கல்வி திட்டக்குழுவின் தலைவர். 

“கலை ஒருங்கிணைப்பும் உலகக் குடிமக்களும்” என்பதைக் குறித்து சிறிய அறிமுகம் ஒன்றைத் தருகிறீர்கள். அவர் நீங்கள் எந்த வகையில் இம்மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். நீங்கள் நடுநிலைப்பள்ளியில் கலை ஆசிரியராக இருப்பதாகவும், சிற்பக்கலை,  அச்சுக்கலை,  ஓவியம், இழைக் கலை மற்றும் மண்பாண்டங்கள் வனைதல் போன்றவற்றை கற்பிப்பதாகவும் கூறுகிறீர்கள். மதிய உணவு நேரத்தில் இதைப் பற்றி மேலும்  விரிவாகக் கூற முடியுமா என அவர் கேட்கிறார். நீங்கள் விளக்குகிறீர்கள். பேச்சு இரவு உணவின் போதும்  தொடர்கிறது. அமெரிக்க இயற்பியல் மன்றத்தின் கல்வி திட்டக்குழுவின் தலைவராக அவரது பணி என்னவென்று நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். மாநாடு நடக்கும் ஹோட்டலின் மதுபான அறையிலும் அதைத்தொடர்ந்து வரவேற்பறையின் சோஃபாவிலும் பேச்சு தொடர்கிறது. நீங்கள் இருவரும் தமக்குப் பிடித்த முதல் ஐந்து MC க்களைப் பற்றி (Master of ceremonies) பகிர்ந்து கொள்கிறீர்கள். முதலாம் இடத்திற்கு ஸ்கேர்ஃபேஸ் அல்லது ராக்கி மா, யார் பொருத்தமானவர் என்று விவாதிக்கிறார்கள்.

நீங்கள் அவரது அடர்த்தியான இமைகளையும்,  பெரிய கைகளையும்,  வலது புருவத்திற்கு மேலிருக்கும் சிறு வடுவையும் கவனிக்கிறீர்கள். அவர் தனது தொப்பியைக் கழற்றி தலையைச் சொரிந்து கொள்ளுகையில், நீங்கள்,  அவரது முடி ஒழுங்காக எண்ணெய் தடவி வாரப்பட்டிருப்பதைக் கவனிக்கிறீர்கள்.

அவர், தனது மாதாந்திர செலவுகளைப் பூர்த்தி செய்ய உதவும் அவரது பணியை பற்றியும், எந்த இடத்தில் அவர் வானவியல் மற்றும் அண்டவியல் தேற்றங்களை உருவாக்குகிறார் என்றும், அத் தேற்றங்களை பரிசோதிக்க அவர் மேற்கொள்ளும் ஆய்வுகளை பற்றியும் விளக்குகிறார். தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையோடு கூடவே,  விண்வெளி வீரனாக வேண்டும் என்கிற தனது கனவைப் பற்றியும், எப்படி நாசாவினர் அதற்கு இன்னமும் பதில் ஏதும் கூறாமல் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும், தோள்களைக் குலுக்கியபடியே  வருத்தத்தை பகிர்கிறார்.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”

“நானா?  நான் ஒரே ஒரு வேலை மட்டும் தான் செய்கிறேன்.”

“உங்கள் அபிலாஷைகள்?”

நீங்கள்  ஆழ்ந்து மூச்சு விட்டபின், தன் கனவுகளைப் பகிர்கிறீர்கள்.

“அமெரிக்க் கூடைப்பந்தாட்ட வீரர்  லெப்ரான் ஜேம்ஸ் துவங்கிய பள்ளிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனக்கும் அப்படி ஒரு பள்ளியைத் துவங்க வேண்டும் என்று ஆசை. சொல்லப்போனால், ஒன்றில்லை, பல.  நாடு முழுவதும். நான் முழு குடும்பத்துக்கும் பலனளிக்கும் வகையில் ஒரு பள்ளியை ஆரம்பிப்பேன். அதுதான் சரியான வழி, தெரியுமா?” என்கிறீர்கள்.

அவருக்குத் தெரிந்திருக்கிறது. நேரம் நள்ளிரவைக் கடந்துவிட்டதை நீங்கள் உணரவில்லை. நீங்கள் இருவரும் இன்னமும் மாநாட்டிற்கென அணிந்து வந்த உடையிலேயே இருக்கிறீர்கள. நீங்கள் இணைந்து பொதுக் கல்வித் துறையின் பிரச்சினைகளை தீர்ப்பதிலும், அமைப்புரீதியான இனவாதத்திற்கு ஒரு  நிரந்தர முடிவைத் தேடுவதிலும், பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கும் தற்போதைய வழக்கத்தை ஒழிப்பது குறித்தும் பேசுகிறீர்கள்.

எரிக் தன்னுடைய தொலைபேசியை எடுத்து சில கணக்குகளை போடுகிறார். கலைஞர்கள், கலைப்பொருட்கள்,  புத்தகங்கள், பொதுப் பள்ளிகளுக்கான ஆலோசனை திட்டங்கள் போன்றவை குறித்தான உங்களுடைய பரிந்துரைகளை, தனது தொலைபேசியில் பதிவு செய்து கொள்கிறார். உங்கள் பேச்சை அவர் ஆர்வத்துடன் கேட்கிறார்.

விடியற்காலை இரண்டேகால் மணிக்கு, நீங்கள் இன்னமும் உற்சாகத்துடன் இருப்பதாக அவர் நினைக்கிறார். நீங்களோ மதுபான நிலையத்தில் குடித்த ஃப்ரென்ச் ‘75 களின் காரணமாக,  லேசான மயக்கத்தில் இருப்பது போல உணர்கிறீர்கள். நீங்கள் அவர் தொடர்ந்து பேச வேண்டுமென்றும் கேட்க வேண்டுமென்றும் விரும்புகிறீர்கள்.

மேலே  அறைக்கு வரும்படி அழைக்கலாமா. வேண்டாம். அது மிகவும் அவசரப்படுவது போலத் தோன்றும். நீங்கள் அவரைக் கொலைகாரன் என நினைக்கவில்லை. “அந்த மாதிரியான பெண்” என அவர்  உங்களை நினைத்து விடக்கூடாதென்பதில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறீர்கள்.  எப்படி இருக்கக்கூடாது என உங்கள் அம்மா எச்சரித்தாரோ, நீங்கள் அவரது அறிவுரைகளையே பின்பற்றினீர்கள். இப்போது உங்கள் வயது நாற்பத்தி இரண்டு.

எனில், நாளை காலை உணவின் போது சந்திக்கச் சொல்லலாமா? வேண்டாம். அது என்னை மண்டை கனம் பிடித்தவள் எனக்  காட்டக்கூடும்.

நீங்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே,  உங்கள் கண்கள் செருகியதை அவர் பார்த்திருக்கக்கூடும். நீங்கள் உண்மையிலேயே சற்று ஓய்வெடுக்க வேண்டுமென்றும் உங்களோடு பேசியது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததென்றும் அவர் கூறுகிறார்.

நீங்கள் இருவரும் எழுந்து நின்று சோம்பல் முறித்துக் கொள்கிறீர்கள்.இருப்பினும், நீங்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி, அங்கேயே நின்று கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் என்னை திமிர் பிடித்தவன் என்று நினைக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். நாளை காலை உணவின் போது உங்களைச் சந்திக்கலாமா என அவர் கேட்கிறார்.

ஒரு இயற்பியலாளரோடு கலவி கொள்வது எப்படி?

மாநாட்டிலிருந்து வீடு திரும்பும்போது,  வானூர்தியில் உங்கள் இருவரிடையே பொதுவாக இருந்த அம்சங்களை நீங்கள் கணக்கிடுகிறார்கள்.

•  இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பிறர் கேட்பது உங்களை அயர்ச்சியடையச் செய்கிறது.

• உங்களுக்கு குழந்தைகளைப் பிடிக்கும். ஆனால்,  தனக்கென குழந்தைகள் தேவையில்லை என நினைக்கிறீர்கள்.

• இலையுதிர்காலம் உங்கள் இருவருக்கும் பிடித்தமானது.

• நீங்கள் அமெரிக்க நடிகர் டைலரின் பெரிய விசிறி இல்லை ஆனால் உங்களை நடிகராகச் சொல்லி மற்றவர்கள் வற்புறுத்தும் போது நீங்கள் சோர்வடைகிறீர்கள்.

• உங்கள் இருவருக்குமே தீவிரமான பார்வைக்கோளாறு இருக்கிறது. நீங்கள் இருவருமே சிறுவயதில் மற்றவர்களின் பரிகசிப்பிலி ருந்து தப்பிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

(உன் கண்ணாடி இத்தனை கனமாக இருக்கிறதே,  நீ இதன் வழியாக உன் எதிர்காலத்தையே பார்த்துவிட முடியும் என்பதே வழக்கமான பரிகாசமாக இருந்தது)

• கற்பனை கதாபாத்திரமான ஆன்ட் விவ், உங்கள் இருவருக்குமே பிடித்தமானவர்.

• ப்ரின்ஸா, மைக்கேல் ஜாக்சனா என்ற கேள்வி எழும்போது,  நீங்கள் ப்ரின்சை தேர்ந்தெடுத்தீர்கள்.

மாநாட்டின் மீதமிருந்த நாட்களில் நீங்கள் சேர்ந்தே உணவருந்தினீர்கள். மணிக்கணக்காக பேசியும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஏதோ இன்னமும் மிச்சமிருந்தது.  உயர்நிலைப்பள்ளியிலும், 

கல்லூரியிலும், உங்களுக்கு ஒரு காதலன் இருந்த தகவலைப் போல. ஆண்கள் உங்களை தேர்ந்தெடுத்ததையும், உறவுகளுக்காக நீங்கள் பல வருடங்களைச் செலவழித்ததையும், அவர்களுடன் உடலைப் பகிர்வதில்  இயல்பாக இருக்க முடியாததையும் –  இப்புரிதலைக் கண்டடைவதிலும்,  அதைத் தெளிவாக வெளிப்படுத்துவதிலும்,  உங்கள் மனநல சிகிச்சையாளர் உங்களுக்கு பெருமளவில் உதவியிருந்தார். உங்களது ஆண் நண்பர்கள்,  உங்களை விட அழகான,  தன்னம்பிக்கை அதிகம் வாய்ந்த,  உங்களைக் காட்டிலும் இயல்பாக தங்கள் உடலைக் கையாளத் தெரிந்த பெண்களுக்காக, உங்களை விட்டு விலக முடிவு செய்யும்வரை நீங்கள்  அவ்வுறவுகளில் தொடர்ந்து இருந்ததை அவரிடம் சொல்லவில்லை.

தேய் வழக்காகக் தெரிந்த போதிலும், உங்கள் கலையின் வாயிலாகப் பேசுவதே உங்களுக்கு அதிகம் பழக்கமானது என்று அவரிடம் சொல்லவில்லை. ஓவியங்களையும் கோட்டு உருவங்களையும் மரச்சட்டம் இட்டு நீங்கள் நண்பர்களுக்கு பரிசளித்திருக்கிறீர்கள் அல்லது உங்கள் சொந்த வீட்டுச் சுவரில் தொங்கவிட்டி ருக்கிறீர்கள். ஆனால் இந்நாட்களில் நீங்கள் முழுமையாக உங்கள் மாணவர்களிடம் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு விட்டீர்கள். அவ்வகையில்,  அது பாதுகாப்பானதே.

கடந்த பத்து வருடங்களில்,  ஒருவர் பின் ஒருவராக,  உங்களுடைய தோழிகளைத் திருமணத்திற்கும் தாய்மைப் பேறுக்கும் தாரைவார்த்து விட்டதையும்,  உங்கள் நட்பு,  தற்போது,  குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களோடோ அல்லது எப்போதாவது அரிதாக நிகழும் பெண்களுக்கு மட்டுமேயான இரவு நிகழ்வுகளோடோ சுருங்கிவிட்டதையும் நீங்கள் அவரிடம் சொல்லவில்லை.

எப்போதாவது இணையம் வாயிலாக ஏற்படுகிற நட்புகளையோ,  அல்லது சிறுவயது நண்பனுடன் ஊர் சுற்றியதையோ தவிர, நீங்கள் பல மாதங்கள் தொடர்ந்து மனத்துறவு பூண்டிருப்பதை 

அவரிடம் சொல்லவில்லை.

பின்னர், உங்கள் மன நல சிகிச்சையாளர் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்த நபரிடம் இவற்றையெல்லாம் ஏன் சொல்லவேண்டும் என்று உங்களை கேட்பார். அவர் கேட்பதில் பொருள் உண்டு என்று உங்களுக்கு தெரிந்தாலும், நீங்கள் கவனமாகவும் பொறுப்புத் துறப்பு டனும் கையாளப்பட வேண்டிய பெண் என்பதை தவிர,  உங்களிடம் அவருடைய கேள்விக்கு வேறு விடை  எதுவும் இல்லை. 

நீங்கள் சொல்லாமல் விட்டதில் ஒரு பங்கேனும் எரிக் சொல்லாமல் இருந்தால் கூட,  அது கணிசமானதாகவே இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள். விமானம் தரையைத் தொடுவதற்கு முன்பாகவே, எரிக் உண்மையானவரா அல்லது அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை அறிய மேலும் வாய்ப்புகள் ஏதுமில்லை என்று நீங்கள் முடிவு செய்து விடுகிறீர்கள். பயணப் பெட்டிகளை பெரும் வரிசையில் நிற்கும் போது,  நீங்கள் அது வெறும் தாற்காலிகக் கிளர்ச்சிதான் எனவும்,  அவர் தன்னுடைய தினசரி வாழ்க்கைக்கு திரும்பிய பிறகு, உங்களை முற்றிலும் மறந்து விடக் கூடும் என்றும் நினைக்கிறீர்கள். நீங்களும் அவ்வாறே செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்காக நீங்கள் அவருடைய எண்ணை உங்கள் தொலைபேசியிலிருந்து அழித்து விடுகிறீர்கள்.

அன்றிரவு, வீடு திரும்பி,  உங்களது படுக்கையிலிருந்தபடியே, கணிதம் மற்றும் அறிவியல் துறையில் பணி புரியும் உங்கள் நண்பர்களுக்கு, வரும் கல்வி ஆண்டில் நீங்கள் எவ்வாறு அவர்களுடன் இணைந்து பணி புரிய விரும்புகிறீர்கள் என்று விளக்கமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்புகிறீர்கள்.

ஒரு இயற்பியலாளரோடு கலவி கொள்வது எப்படி?

கரித்துண்டை வெளியே எடுத்து,  நினைவிலிருந்து, அவருடைய முகத்தை வரைய நீங்கள் முயற்சிக்கிறீர்கள். அவர்  உங்களை இன்னும் மறக்கவில்லை என்றும் நீங்கள் அவரது தொலைபேசி அழைப்புகளை ஏற்காமல் இருப்பதையும்,  அவருடைய குறுஞ்செய்திகளைப் படித்தும் பதிலளிக்காமல் இருப்பதையும்,  உங்கள் மன நல சிகிச்சையாளருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள். ஏனெனில்,  இத்தகைய விஷயங்களில் உங்களுக்கு அனுபவம் போதாது என நீங்கள் நினைக்கிறீர்கள்.

“இத்தகைய விஷயங்கள்” என்றால் என்ன என்று உங்கள் மனநல சிகிச்சையாளர் கேட்கிறார்.

“ஆண்கள். எனக்கு அவர்கள் சரிப்படுவதில்லை” என்று பதிலளிக்கிறீர்கள்.

“ஆனால்,  நீங்கள் அவருடைய முகத்தை வரைந்தி ருக்கிறீர்கள். அவரைப்பற்றி என்னிடம் பகிர்ந்தும் இருக்கிறீர்கள். ஏன்?” என்று அவர் மறு கேள்வி கேட்கிறார்.

“ஏனெனில்,  நாங்கள் அந்நாட்களில் மகிழ்ச்சியாக இருந்தோம். அவ்வளவுதான். அதற்குமேல் இதில் எதுவும் இல்லை,” என பதில் அளிக்கிறீர்கள்.

“அப்படியென்றால் அவர் இன்னமும் ஏன் உங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்?”

“தன்னை நல்லவராக காட்டிக் கொள்ளத்தான்.”

“போதும் இந்த விளையாட்டு பெண்ணே!” என்கிற பாவனையில்,  அவர் தன் தலையை அசைத்து, உங்களுக்கு சவால் விடுகிறார். நல்ல விஷயங்களிலி ருந்து தன்னை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொள்வதற்கான உங்கள் முயற்சிகளின் மற்றுமொரு உதாரணமா இது என அவர் கேட்கிறார்.

ஒரு இயற்பியலாளரோடு கலவி கொள்வது எப்படி?

நீங்கள் பதில் அளிக்காத போதிலும் அவருடைய குறுஞ்செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள். சற்றும் சளைக்க்காமல்,  அவர் பல வாரங்கள் தொடர்ந்து உங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புகிறார். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பதுடன், தான் எப்படி இருக்கிறேன்,  என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்றும் அவர் விளக்குகிறார். பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு,  கலையும் அறிவியலும் இணைந்த கோடை முகாம்கள் நடத்தும் திட்டத்திற்கான வரைவு ஒன்றை தன்னுடைய துறை அதிகாரிகளுக்கு அனுப்பி இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். அதற்கு ஊக்கக் காரணியாக இருந்ததற்காக, உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

ஒரு ஞாயிறு,  தேவாலயத்துக்கு சென்று விட்டு,  நீங்கள் உங்கள் அம்மாவின் வீட்டில் இரவு உணவிற்காக தங்கியிருந்தபோது, “என்றென்றைக்குமான ஒளிக்கதிர்களின் பிரிகை” என்று தலைப்பிடப்பட்ட,  அடர் ஆரஞ்சு வண்ணமும் சிவப்பு வண்ணமும் கலந்த சூரிய அஸ்தமன ஒளிப்படமொன்றை உங்களுக்கு அனுப்புகிறார். நீங்கள் ஏன் புன்னகைக்கிறீர்கள் என்று உங்கள் அம்மா உங்களைக் கேட்கும் வரை நீங்கள் அதை உணர்வதில்லை. அவரது குரலில் ஆர்வம் குறைவாகவும் சந்தேகம் மிகுந்தும் இருக்கிறது. நீங்கள் புன்னகைப்பதை உங்கள் அம்மா எப்பொழுது கடைசியாகப் பார்த்தார் என்று நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ள முயற்சிக்கிறீர்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் பத்து பேருக்கான உணவைக் கொண்டு போகச் சொல்லி உங்களை வற்புறுத்தி விட்டு,  அதே சமயம், ஏதேனும் ஒரு ஆணை சந்திக்கத் தகுந்தவராக,  எப்பொழுது நீங்கள் எடையைக் குறைக்க போகிறீர்கள் என்றும் அவர் உங்களைக் கேட்கிறார்.

புத்தாண்டுக்காக உங்கள் வகுப்பறையை ஒழுங்குபடுத்த நீங்கள் பள்ளிக்கு திரும்பி செல்லும்போது,  எரிக்கிடமிருந்து ஒரு பெட்டி, ஆசிரியர்களின் அறையில் உங்களுக்காகக் காத்திருக்கிறது. நீங்கள் இருக்கும் இடத்தை அவர் எப்படி கண்டுபிடித்தார் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பிறகு,  மாநாட்டு அடையாள அட்டையில், நீங்கள் பணிபுரியும் பள்ளியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது உங்களுக்கு நினைவுக்கு வருகிறது. அவர் உங்களுக்கு, துல்லியமான, இருநூறுக்கும் மேற்பட்ட,  செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட,  பூமியை மக்கள் எவ்வாறு மாற்றிவிட்டார்கள் என்று தெரியப்படுத்துகிற புகைப்படங்களின் தொகுப்பை அனுப்பியிருக்கிறார். “வான் வழிப் பார்வை விளைவு” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, பிரமிப்பு,  ஆச்சரியம் மற்றும் விண்வெளி வீரர்கள் வானிலிருந்து பூமியை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கிடைக்கும் பார்வை ஆகியன கலந்து கட்டிய உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

ஃப்ளோரிடாவின்  புறநகர் பகுதியில், திட்டமிட்டுக் கட்டப்பட்ட ஒரு அடுக்ககம், பல வண்ண மலர்கள் நிறைந்த பூங்கொத்தைப் போல காட்சி அளிக்கிறது.டேவிஸ் மாந்த்தன்  விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஓய்வுபெற்ற ராணுவ மற்றும் அரசாங்க விமானங்கள், அமெரிக்க பழங்குடியினரின் அம்புகளைப் போல காட்சியளிக்கின்றன. நெதர்லாந்தில் இருக்கும் ட்யூலிப் மலர்ப்படுகைகள், இழைக் கலைப்பொருட்களை போல காட்சியளிக்கின்றன.

நீங்கள் அந்த புத்தகத்தை உங்கள் வகுப்பின் நூலகத்தில் பிரதானமாக காட்சிப்படுத்துகிறீர்கள். நீங்கள் எரிக்குக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள்: “புத்தகம் அனுப்பி வைத்தமைக்கு நன்றி. மிகவும் பிரமாதமாக  வந்துள்ளது.”

கோடை முகாம் திட்டத்திற்கு முழுப் பண உதவி அளிக்க அவரது நிறுவனம் சம்மதித்திருப்பது குறித்த, அவருடைய கடைசி குறுஞ்செய்திக்கும் நீங்கள் பதில் அளிக்கிறீர்கள்.

 “பண உதவி பெற்றதற்கு வாழ்த்துக்கள்” என நீங்கள் எழுதுகிறீர்கள்.

 “மிக்க நன்றி” என அவர் பதில் அளிக்கிறார்.

அன்றிரவு நீங்கள் அத்தொகுப்பை,முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை கவனமாக படிக்கிறீர்கள். அடுத்தநாள்,  நீங்கள் மறுபடியும் ஓவியம் வரைய ஆரம்பிக்கிறீர்கள். இறந்த லயத்தை மறுபடியும் மீட்டெடுப்பதற்காக நீங்கள் வெகு நேரம் வரை விழித்திருக்கிறீர்கள்.

 குறுஞ்செய்திகள் அனுப்புவது உங்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காது என்பதால், வார இறுதியில், நீங்கள் அவரை தொலைபேசியில் அழைக்கிறீர்கள். அவர் உடனடியாக பதிலளிக்கிறார். ஏன் இத்தனை தாமதம் என்று அவர் உங்களைக் கேட்பதில்லை. உங்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததிலேயே அவர் மகிழ்கிறார். உங்கள் இருவருக்குமே மூச்சிரைக்கிறது.

நீங்கள் பேசுகிறீர்கள். அவரது கோடைக்கால முகாம் திட்டத்தை குறித்தும், இருவரும் இரவுக்கு என்ன உணவைத் தயாரிக்க போகிறீர்கள் மற்றும் வார இறுதிக்கான திட்டங்கள் குறித்தும் பேசுகிறீர்கள். டோனி மாரிசனின் புதிய ஆவணப்படம் பற்றியும் அவர் உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் நீங்கள்  இருவரும் பேசுகிறீர்கள். இழப்புகளைக் குறித்தும் நீங்கள் பேசுகிறீர்கள்.

நீங்கள் தொடர்ந்து தினமும் பேசுகிறீர்கள். காணொளி அழைப்பின் வாயிலாக நீங்கள் மெய்நிகர் சந்திப்புகளை நிகழ்த்திக் கொள்கிறீர்கள். அவை நேருக்கு நேர் பார்க்கும் சந்திப்புகளை விட சிறப்பாகவே அமைகின்றன. நீங்கள் தொலைக்காட்சி தொடர்களை ஒருசேர பார்க்கிறீர்கள்; ஒருசேர சமைக்கிறீர்கள்: ஒரு சேர வைன் குடிக்கிறீர்கள்.  ஒருவர் மற்றவர் துணி துவைப்பதைப் பார்க்கிறீர்கள். நீங்கள் பகலிலும்,  இரவுகளிலும்,  இரவுகள் காலையாக மாறும் வரை பேசுகிறீர்கள்.

சில சமயம் நீங்கள் விடியலில் எழுந்து விடும் போது அவரது உறங்கும் முகம் உங்கள் தொலைபேசித்திரையை நிறைத்திருக்கிறது. நீங்கள் மறுபடியும் படுக்கிறீர்கள். உங்கள் மூச்சு அவருடைய மூச்சோடு இயைந்து,  நீங்கள்  மறுபடியும் தூங்கி விடுகிறீர்கள்.

ஒரு இயற்பியலாளரோடு கலவி கொள்வது எப்படி?

கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்றும்,  அறிவியலையும் மதத்தையும் இணைப்பது சாத்தியமா என்றும் நீங்கள் அவரிடம் கேட்கிறீர்கள். “இயற்பியல் கொள்கைகள் கடவுள் என்னும் தத்துவத்தை ஆதரிக்கின்றன. ஏனெனில் ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து,  நீங்கள் ஒரு பொருளை உருவாக்க முடியாது என்று அவை கூறுகின்றன,” என்று அவர் சொல்கிறார். ஏதோ ஒரு சக்தி இவையனைத்தையும் உருவாக்கி இருக்க வேண்டும். நாம் எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறோம், பெரு வெடிப்புக் கோட்பாடு என்கிற ஒன்று இல்லவே இல்லை,  இப் பிரபஞ்சத்திற்கு ஆரம்பப்புள்ளி என்று ஒன்றும் கிடையாது என்று நீங்கள் நம்பினால் அது முற்றிலும் வேறு விஷயம்,ச்” என்கிறார் அவர். 

அது எப்படி செயல்படுகிறது என்று எனக்கு தெரியாது,  ஆனால் நம்மை விட வலிய சக்தி ஒன்று கண்டிப்பாக உள்ளது. எல்லா சக்திகளும் ஏதோ ஒரு இடத்திலிருந்து தானே வரவேண்டும்?”

“ஓ!  நீங்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர் என நான் நினைத்தேன்!”

ஐன்ஸ்டைன் கூட நாத்திகர் இல்லை என்கிறார் அவர். அவர் கடவுளைப் பற்றி தான் எந்நேரமும் பேசினார். மனிதச் செயல்பாடுகள் குறித்து கவலைப்படும் ஒரு கடவுள் சக்தியை அவர் நம்பவில்லை. மனிதச் செயல்பாடுகளை குறித்த வெறித்தனமான கருத்துக்கள் தேவாலயங்களுடையவை. அவமானத்தையும் குற்ற உணர்ச்சியையும், அவை கிறிஸ்துவ மதத்தை நிலைநாட்ட உபயோகிக்கின்றன.

“நாம் அடுத்தவர்களையும் இந்த உலகத்தையும் எப்படி நடத்துகிறோம் என்று கடவுளுக்கு அக்கறை எதுவம் இல்லை என்று நினைக்கிறீர்களா?”

“அது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன். ஆனால் மனிதர்கள் தேவாலயங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே அதைச் செய்யும் திறன் படைத்தவர்கள். நாம் பைபிளை முழுக்க படித்திருக்கிறோம். பல விஷயங்கள் மொழிபெயர்ப்பிலும் நமது புரிந்துகொள்ளலுக்கேற்பவும் அமைந்துவிடுகின்றன. நான் ஒரு கத்தோலிக்கனாக வளர்ந்தேன். எனக்கு அம் மதத்தின் சடங்குகள் மிகவும் விருப்பமானவை. ஆனால் தனிப்பட்ட ஒரு கடவுளின் மீது நம்பிக்கை வைக்கத்  தேவையில்லை என்று நான் புரிந்து கொண்டு விட்டேன். எனக்கு அந்த அவசியம் இல்லை.” என்கிறார்

அப்படியானால் சொர்க்கம் என்பது என்ன என்று நீங்கள் அவரை கேட்கிறீர்கள். உண்மையில் நீங்கள் கேட்க நினைத்தது “நரகம் என்பது என்ன” என்பதைத்தான்.

“அதைப்பற்றி என்ன?”

சொர்க்கம்- அதன் உள்ளே நுழைவது எப்படி, அதற்கான மாற்றை தவிர்ப்பது எப்படி என்பதுதான் நெறிப்படி வாழ்வதின் அர்த்தம் இல்லையா? உங்கள் அம்மா நீதி நாளைக் குறித்து ஏக்கத்தோடு பேசுவதும்,  கடைசிக் கணக்கு வழக்கிற்கு பிறகு,  சொர்க்கத்தின் உள்ளே நுழைய செல்ல  யார் அனுமதிக்கப்படுவார்களென புலம்புவதில்லையா? தன்னுடைய கணக்கும் கடவுளுடைய கணக்கும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று உங்கள் அம்மா நம்பினார். அது மிகச் சிறிய எண்ணாகத் தான் இருக்கும் என்று கூறிக்கொள்வதில் அம்மா பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார். குறுகிய நேர்வழிப் பாதையில் செல்பவர்கள் மட்டுமே கடவுளின் முகத்தை காண முடியும் என்று உங்கள் அம்மா தீவிரமாக நம்பினார்.

கடவுளால்  எல்லோரையும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க முடியுமெனில்,  உங்கள் அம்மா கண்டிப்பாக கிறிஸ்தவ மதத்தை கைவிட்டு விடுவார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிர்கள். நல்ல சக்திகளையும் தீய சக்திகளையும் மையக் கதாபாத்திரங்களாக கொண்ட மற்றும் தண்டனைகளையும்   வெகுமதிகளையும் சுற்றி புனையப்பட்ட தேவதைக் கதைகளைக் குறிப்பிடாமல், சொர்க்கம் குறித்தான எரிக்கின் கேள்விக்கு எப்படி பதில் அளிப்பதென உங்களுக்குத் தெரியவில்லை.

**

அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ள உங்களுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. நீங்கள் உங்கள் அம்மாவை பற்றியும் அவர் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் கடவுளின் சிறு உருவத்தைப் பற்றியும் யோசிக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த கடவுளின் உருவம் அது மட்டும்தான். நீங்கள் அதை விட்டு விலகப் பயப்படுகிறீர்கள் . எரிக்குடனான உங்கள் தொலைபேசிப் பேச்சுக்கள், மதச் சடங்குகளைப் போல மாறிவிட்டன என்றும் நீங்கள் நேரில் சந்திக்கும்போது, அது ஒரு வகையில் நேர்த்திக்கடன் போல இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த நினைப்பு உங்களுக்கு சிலிர்ப்பையும் பயத்தையும் ஒருசேரத் தருகிறது. பயம் ஏன் எனில், நீங்கள் இதுவரை மதத்தைப் பற்றி அறிந்ததெல்லாம், உங்களால் கொடுக்க முடிந்ததை விட அதிகமாக அது எதிர்பார்க்கிறது என்பதே.

மனிதன் சொர்க்க அனுபவத்தை இந்த பூமியிலேயே அடைய முடியும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

“நான் அடைகிறேன்” என்கிறார் எரிக். ”ஒவ்வொரு முறையும் நீங்கள் புன்னகைக்கும் போதும்,  உங்கள் மாணவர்களை குறித்து  உணர்ச்சி பூர்வமாகப் பேசும்போதும் எனக்கு அவ்வனுபவம் ஏற்படுகிறது. இவை மட்டுமின்றி,  நீங்கள் மௌனமாக இருக்கும்போதும்,  ஓவியம் வரையும் போதும், ஏன்…வெறுமனே  துவைத்த துவாலைகளை மடித்து வைக்கும் போதும் கூட.”

”நான் துவாலைகளை மடித்து வைப்பதி லா சொர்க்கம் தெரிகிறது?”

“சரி,  மரச் சட்டகங்களிலிருந்து,  நீங்கள் ஓவியத் தாள்களை சுருட்டி மடித்து வைக்கும் போது என வைத்துக் கொள்ளலாம்.அதிசயங்கள் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன,” என்கிறார் எரிக்.

ஒரு இயற்பியலாளரோடு கலவி கொள்வது எப்படி?

நீங்கள் அவரை வசந்த காலத்தில் நடைபெற இருக்கும் உங்கள் தனிப்பட்ட ஓவியக் கண்காட்சிக்கு அழைக்கிறீர்கள். நீங்கள் படித்து வியந்த “வான்வழிப் பார்வை விளைவு” தொகுப்பில் இருந்த புகைப்படங்கள், ரூமி,  குர்ஆன் மற்றும் மாரிசனின் “சாலமனின் பாடல்கள்” புத்தகத்தைப் படித்து உங்களுக்கு ஏற்பட்ட புரிதலை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெறும்.” நான் அன்பைப் பற்றி ச் சொல்வதெல்லாம் ” என்கிற, ரூமியின் “மஸ்னவி” என்னும் கவிதைத் தொகுப்பில் இருந்து ஒரு வரியை,  நீங்கள் கண்காட்சிக்கு தலைப்பாக வைத்திருக்கிறீர்கள். இதுவரையில் வரைந்திருப்பதை விட அதிகமான ஓவியங்களை இப்போது நீங்கள் வரைகிறீர்கள்.

கண்காட்சிக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. கண்காட்சி அரங்கில் உங்கள் அம்மா, “இது என்ன படம்,  ஒன்றும் புரியவில்லை” என்று யாருக்கும் கேட்காதபடி முணுமுணுத்துக் கொண்டிருப்பது போல நீங்கள் கற்பனை செய்து கொள்கிறார்கள். நீங்கள் அவரோடு தங்கியிருந்தபோதும், அம்மா முன்னறிவிப்பு ஏதுமின்றி உங்கள் படுக்கை அறை கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைவார். நீங்கள் வரைந்த படத்தைச் சட்டமிட்டு, அன்பளிப்பாக அவருக்கு ஒருபோதும் கொடுத்ததில்லை. வாசனை திரவியங்களோடும் நகைகளோடும் நிறுத்திக் கொண்டு விட்டீர்கள்.

நீங்கள் உங்கள் மனநல சிகிச்சையாளரிடம் அம்மாவை உங்கள் கண்காட்சிக்கு அழைக்கா விட்டால் அது தவறாக இருக்குமா என்று கேட்கிறீர்கள். உங்கள் கேள்விக்கு அவர் தனது கேள்வியின் வாயிலாக பதிலளிக்கிறார் –  “அம்மா கண்காட்சியின்போது அங்கே இருக்கவேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா?”

“உண்மையாக சொல்ல வேண்டுமென்றால்,  இல்லை.”

“அப்படியானால்,  அம்மாவை அழைக்காதீர்கள்.”

நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள். ஒரு நொடி கழித்து, ” நான் அப்படிச் சொன்ன போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? என்று அவர் கேட்கிறார்.

“பயமாக இருந்தது.”

“எது குறித்து பயப்படுகிறீர்கள்?”

“எல்லாவற்றைக் குறித்தும்.”

ஒரு இயற்பியலாளரோடு ’கலவி’ கொள்வதெப்படி?

நீங்கள் எரிக்கைக் குறித்து பாலுணர்வு சார்ந்த கனவுகளைக் காண ஆரம்பிக்கிறீர்கள். அவை மிக மிக விஸ்தாரமான கலவி சார் கனவுகள். வாழ்க்கையில் முதல் முறையாக நீங்கள் உடலுறவுக்காக ஏங்குகிறீர்கள். முதல் முறையாக உங்களுக்கு ஒரு ஆணின் உடல் குறித்த ஆர்வமும், நீங்கள் ஆணுக்கு மேலும் கீழும் இயங்கும்போது எப்படி உணர்வீர்கள் என்பதையும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

இதற்கு முன் நீங்கள் உடலுறவு கொண்ட தருணங்களையும், அதை சகித்துக்கொள்ள, நீங்கள் உங்களுக்குள்ளேயே மறைந்து ஒளிய வேண்டி இருந்ததையும் நினைத்துப் பார்க்கிறீர்கள். முழு நேரமும், உங்கள் வயிற்றையும் தொடைகளையும் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததையும், நீங்கள், நீங்களாக இல்லாமல் வேறொரு நபராக இருந்திருக்கக் கூடாதா என்றும், உங்கள் நண்பரும் அதையே நினைத்திருக்கக் கூடும் என்றும் எண்ணித் தவித்ததை நீங்கள் மீண்டும் நினைவு கூர்கிறீர்கள். கலவி என்பது, உங்களைப் பொருத்தவரையில், வெறும் தொடுகை மட்டுமே. உண்மையிலேயே நீங்கள் வெறும் தொடுகையை மட்டுமே விரும்பி இருந்தபோதிலும், ஆண்கள் எப்போதும் அதைவிட அதிகம் எதிர்பார்த்தார்கள்.

எரிக்கும், கடைசியில்,  மற்ற எல்லா ஆண்களையும் போல, உங்களால் கொடுக்க முடிந்ததை விட அதிகம் எதிர்பார்ப்பார். அவர் ஏமாந்து விடக் கூடும். ஒருவேளை,  அவரைத் தூண்டி விட்டதற்காக,  உங்கள் மீது வெறுப்படையவும் கூடும். எனவே நீங்கள் மிகக் கடினமான ஒரு காரியத்தை செய்கிறீர்கள். நீங்கள் அவரது என்னை உங்கள் தொலைபேசியில் இருந்து மறுபடியும் அழித்து விடுகிறீர்கள். இந்த முறை நீங்கள், அவரது என்னை தடை செய்து விடுகிறீர்கள்.

ஒரு இயற்பியலாளரோடு கலவி கொள்வது எப்படி?

உங்கள் அம்மா உங்களுக்கு அளித்த வீட்டுப் பயிற்சிகளை எல்லாம் மறந்து விடுங்கள். வயிற்றுக்கொழுப்பையும், ப்ருஷ்டங்களையும், தொடைகளையும் உங்கள் சுதந்திரத்தையும், சேணமிட்டு கச்சைகளால் கட்டியடைத்ததை குப்பையில் வீசுங்கள். இறையருளால் நீங்கள் இன்னமும் மிருதுவாகவும் கட்டுக்குள் சிக்கிக்கொள்ளாதவராகவும் இருக்கிறீர்கள்.

ஆடையின்றி உறங்குங்கள்.

மேற்கூறியவை உங்கள் மனநல சிகிச்சையாளரின் அறிவுரைகள். முதலில் நீங்கள் ஒப்புக்கொள்ள மறுத்துத் தயங்குகிறீர்கள். மாறாக,  அவர் இதனால் விளையக்கூடிய ஏதேனும் ஒரு பாதகத்தையேனும் குறிப்பிடச் சொல்லும்போது,  உங்களால் எதையும் பட்டியலிட முடிவதில்லை.

நீங்கள் சுடுநீரில் நீண்ட நேரம் குளிக்கிறீர்கள். சோப்பு நுரை நிறைந்த தண்ணீரை கொப்பளித்து வாயின் ஓரத்திலிருந்து வெளியேற்றுகிறீர்கள். குளியல் தொட்டியில் இருந்து வெளியே வந்து ஈர உடலில் லாவண்டர் எண்ணெயை உச்சியிலிருந்து பாதம் வரை தடவிக் கொள்கிறார்கள். குளிர்காலமாக இருப்பதால் நீங்கள் கம்பளிக்குள் நுழைந்து கொள்கிறீர்கள். கைகளால் உங்கள் உடலையும்,  அதன் வளைவுகளையும் உணர முயற்சிக்கிறீர்கள். எந்தவித முன் அனுமானமும் இன்றி,  உண்மையைக் கண்டறிவது போல நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். நிதானமாக உங்களைக் கண்டறிந்து ருசிக்கிறீர்கள். ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு பகலிலும்.

வார இறுதி நாட்களில் நீங்கள் நன்றாகத் தூங்கி எழுந்து,  பிறகு தனக்கு விருப்பமான உணவை – டப்பாக்களில் அல்லது தகரக் குவளைகளில் திணிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவோ அல்லது விரைவு உணவோ இல்லை – ஒவ்வொரு பொருளாகத் தேடி எடுத்துச் சமைத்து உண்கிறீர்கள். நண்டுகள்,  கேல் ஆம்லெட்டுகள்,  வறுக்கப்பட்ட சிவப்பு உருளைக்கிழங்குகள்,  கடலுணவு வகைகள்,  பாஸ்தா,   இஞ்சி மஞ்சள் சேர்த்த பட்டர்நட் ஸ்க்வாஷ் ஸூப், சர்க்கரை சேர்த்து வறுக்கப்பட்ட முளைகட்டிய தானியங்கள் ,  ஆட்டுப் பால் பால் கட்டியுடன் வறுக்கப்பட்ட பீட்ரூட் சலாட், தேங்காய் சேர்த்து செய்யப்பட்ட கறி வகைகள். கேக்குக்குள் அடைக்கப்பட்ட வெலிங்டன் மாட்டுக்கறி  போன்றவைகள்.

நீங்கள் சமைக்கிறீர்கள்; ஓவியம் வரைகிறீர்கள்; பகலில் தூங்குகிறீர்கள்; மற்றும் இரவில் தன்னைத்தானே தாலாட்டிக் கொள்கிறீர்கள்.

உங்கள் உடலுடன் நீங்கள் இயல்பாகப் பொருந்தி வருவதாக தோன்றத் தோன்ற,  உங்கள் தைரியமும் கூடுகிறது. தேவாலயப் பூஜைகள் முடிந்து, வண்டி நிறுத்தும் இடத்தில், கச்சைகள் அணிந்து வராததற்காக அம்மா உங்களைக் கடிந்து கொள்ளும் போது,   அம்மாவைவிட அதிக தைரியம் உங்களுக்கு வந்துவிடுகிறது.

நீங்கள் ஏன் கச்சைகள் அணிந்து வரவில்லை, முப்பது வருடங்களுக்கு முன்பு அவர் சொல்லித்தந்த படி நீங்கள் ஏன் நடந்து கொள்ளவில்லை,  எல்லாவற்றுக்கும் மேலாக,  கடவுளின் இருப்பிடத்திற்கு,  நீங்கள் எப்படி இம்மாதிரி உடையில் வரமுடியும் என்று அவர் கேட்கிறார். 

இந்நாட்களில் தேவாலயத்துக்கு உள்ளாடைகள் வெளியே தெரியும் படியாக பெண்கள் உடை உடுத்தி கொண்டு வருவதைக் குறைகூறும் உங்கள் அம்மா,  உங்களை அவர்களை விடச் சிறந்த முறையில் வளர்த்திருப்பதாகக் கூறுகிறார்.

என்னால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை என்று நீங்கள் பதில் அளிக்கிறீர்கள். கூடவே இம்மாதிரி இனி தேவாலயத்துக்கு வர மாட்டேன் என்றும் வாக்கு கொடுக்கிறீர்கள். நீங்கள் அதற்குப் பிறகு எப்பொழுதும் தேவாலயத்துக்கு போகப்போவதிலை என முடிவு செய்து விட்டபடியால்,   நீங்கள் உங்கள் வாக்கையும் காப்பாற்றுகிறீர்கள்.

ஒரு இயற்பியலாளரோடு கலவி கொள்வது எப்படி?

நீங்கள் அவரை வரைந்த பல கோட்டோவியங்கள் ஒன்றுக்கு வெள்ளிச் சட்டமிட்டு அனுப்பி, அவரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள். அவர் உடனடியாக எதிர்வினை ஆற்றுவது இல்லை. நீங்கள் அதுகுறித்துச் சலனம் அடையவில்லை ஏனெனில், நீங்கள் நடுவிலேயே காணாமல்  போனதும் அதனால் நீங்கள் சந்திக்க நேரிடப் போகிற ஆபத்துக்களை பற்றியும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.  அவர் உங்களைத் தொடர்பு கொள்ளும்போது, நீங்கள் இருவரும் தொலைபேசியில் வெகுநேரம் மௌனமாக இருக்கிறீர்கள். நீங்கள், “அதைத் தவிர என்னிடம் வேறு வழி இருந்திருக்கவில்லை. நான் அதை எனக்காகத்தான் செய்தேன். என்னிடம் அப்போது உங்களுக்கு அதைப் புரிய வைக்க வார்த்தைகள் இல்லை. இப்போதும் என்னிடம் அதற்கான போதிய வார்த்தைகள் இருக்கின்றனவா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை” என்று சொல்கிறீர்கள்.

“நீங்கள் உங்கள் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இனிவரும் நாட்களிலும் இப்படி நடக்குமாயின்,  நீங்கள் நிச்சயமாக  முயற்சி செய்து பார்க்க வேண்டும். அவ்வாறு நீங்கள் எடுக்கும் முயற்சியில்,  நீங்கள் வருந்தும்வகையில் நான் எதையும் செய்ய மாட்டேன் என வாக்களிக்கிறேன்,” என்கிறார் அவர்.

எந்த ஆண் கடைசியாக உங்களிடம் வாக்குறுதி அளித்தார் என்று நீங்கள் நினைத்து பார்க்கிறீர்கள். அப்படி நினைவு கூரத் தேவையில்லை என்று நீங்களே முடிவு செய்கிறீர்கள். இந்த நபர் இப்போது உங்களுக்கு வாக்களிக்கிறார். அது தான்  முக்கியம்.

ஒரு இயற்பியலாளரோடு கலவி கொள்வது எப்படி?

மார்ச் 13 அன்று கண்காட்சிக்கு முந்தைய இரவு அவர் வரவிருக்கிறார். நீங்கள் வெகு நேரம் வரை விழித்திருந்து, அந்தக்கால ஹிப்ஹாப் பாடல்களுக்கும் தற்போதைய மியூசிக் வீடியோக்களுக்கும் நடனமாடி களைக்கிறீர்கள். உங்களுக்கிடையே இருக்கும் கிரக ரீதியான பொருத்தங்களை இணையத்தில் தேடுகிறீர்கள். உங்களுடைய கன்னி ராசிக்கும் அவருடைய கும்ப ராசிக்கும் பொருத்தமிருக்குமா என்று மயங்கிச் சிரிக்கிறீர்கள்.

கடைசியில் “பை” தினம் வந்துவிடுகிறது. அவர் விமான நிலையத்துக்கு புறப்பட்ட அதேநேரம் நீங்கள் குளிக்க ஆரம்பிக்கிறீர்கள். அவரது ஆறு மணி நேர விமான பயணம் உங்களுக்கு ஒரு யுகம் போல தோன்றுகிறது. விமானத்திலிருந்து இறங்கி உங்களுடைய கார் வரை நடந்து வரும் அவரது பயணம் தீர்த்த யாத்திரையை போல உங்களுக்கு தோன்றுகிறது.அவர ஸபாராவின்  மேற்குச் சுவரை முத்தமிடுவது போலவும், சின்னபானுக்கருகே விம்மி அழுவது போலவும், ஆண்ட்டி ஆனின் காலடியில் காணிக்கை செலுத்துவது போலவும் நீங்கள் கற்பனை செய்துக் கொள்கிறீர்கள். இவை யாவும் விமான நிலையத்திலிருக்கும் உணவுக்கடை மற்றும் துணிக்கடைகள்.

உங்கள் காரின் பின்புறம் தனது பெட்டியை வைத்து மூடிய பிறகு உங்களிடம் திரும்பி “கடைசியாக” என்று சொல்கிறார். நீங்களும் “கடைசியாக” என்று சொல்கிறீர்கள். அவர் உங்களை தன்னருகே இழுத்து முத்தமிடுகிறார். நீங்கள் எதிர்பார்த்தது போலவே அவருடைய உதடுகள் மிகவும் மிருதுவாக இருக்கின்றன.

உங்கள் வீட்டில் நீங்கள் பொரித்து தரும் ஆம்லெட்டுகளையும் வரால்களையும் அவர், மிகுந்த பசியில் விரும்பி உண்கிறார். நீங்கள் இருவருமே தூக்கமின்றி களைத்திருந்தபோதிலும், அட்ரீனலின் மிகுதியால்,  நடனமாடத் தொடங்குகிறீர்கள். அவரால், பேச முடிகிற அளவுக்கு,  நடனமாட முடியவில்லை.

நான் வென்றதற்கு என்ன பரிசு தரப் போகிறீர்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

அவர் உங்களை படுக்கையில்  சாய்த்து மறுபடியும் முத்தமிடுகிறார்.

நாம் இருவருமே ஜெயித்து விட்டோம் என்கிறீர்கள். “இதோ, பங்கேற்றதற்கான கோப்பை” என்றவாறே மேலும் முத்தமிட்டுக்கொள்கிறீர்கள். இவர் எப்போதும் என்னோடு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

நீங்கள் இருவரும் தூங்க ஆரம்பிக்கிறீர்கள். நடுவில் கண் விழிக்கும் போது நீங்கள் அவர் மடியில் படுத்திருப்பதை உணர்கிறீர்கள். நாளை தொடங்க இருக்கிற உங்கள் கண்காட்சியை குறித்து நீங்கள் யோசிக்கிறீர்கள். அரங்கின் ஒரு மூலையிலிருந்து  அவர் உங்களது ஓவியங்களை பார்ப்பது போல நீங்கள் கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

உங்கள் தோழிகளுக்கும்,  உடன் வேலை செய்பவர் களுக்கும்,  மாணவர்களுக்கும் அவரை அறிமுகப்படுத்துவது போலவும். உங்கள் அம்மாவுக்கும்.

வாழ்வில் இன்றும் நாளையும் மட்டுமே எஞ்சி இருப்பதாக இருப்பினும் அது உங்களுக்கு ஒப்பாக இருக்கிறது.

இப்பொழுது நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள் என்பதைவிட என்ன உணர்கிறீர்கள் என்பதே முக்கியம் என்று உங்கள் மனநல சிகிச்சையாளர் சொல்வது போல உங்களுக்கு தோன்றுகிறது.

வெதுவெதுப்பான நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான முழுமையான போன்ற வார்த்தைகளை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள்.

எரிக் உங்களது அடர்த்தியான புருவங்களை வருடுகிறார். உங்கள் முகத்தில் அமைதி பரவுகிறது.

 “இறுதியில்,  காதலர்கள்,  சந்தித்துக் கொள்வதில்லை. அவர்கள் ஒருவருக்குள் ஒருவராகவே எப்போதும் வாழ்கிறார்கள்” என ரூமி சொல்கிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா?” என்று கேட்கிறீர்கள்.

“எனக்குத் தெரியவில்லை. விதி வசப்பட்ட காதலைக் குறித்த ஆன்மீகவாதி ஒருவரின் கருத்து போல தோன்றுகிறது. ஆனால்,  நான் விதியை நம்புவதில்லை  என்று கூறியவாறு அவர் கொட்டாவி விடுகிறார்.

நீங்கள் சற்றே உற்சாகமிழக்கிறீர்கள். நீங்கள் எந்த நபருக்காகக் காத்திருந்தீர்களோ, அவர்  இவராக இருக்க வேண்டுமென நீங்கள் விழைகிறீர்கள். அவரும் உங்களை தவிர்க்க முடியாத ஒரு நபராக நினைக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் அவரது இயல்பான தேர்வாக இருக்க வேண்டும் எனவும் எதற்கும் மாற்றாக இருக்கக் கூடாது எனவும் நினைக்கிறீர்கள். புது மதம் அளிக்கப்போகும் நம்பிக்கைகளை எதிர்கொள்ளக் காத்திருக்கிறீர்கள்.

எண்பதுகளின் பாடல் வரிகளிலேயே தேங்கி விட்டதற்காக நீங்கள் உங்களையே கடிந்து கொள்கிறீர்கள்.

அவரோ, பால்வழிப் பாதையின் நடுவில் இருந்த மாபெரும் கருப்புத் துளை,  சமீபத்தில் இரண்டு மணி நேரம் தொடர்ந்து, எழுபத்தி ஐந்து மடங்கு பிரகாசத்துடன் ஜொலித்ததெனவும்,  கடந்த இருபது வருடங்களிலிருந்ததைவிட அது இரண்டு மடங்கு அதிகம் என்று,  அதை தொடர்ந்து  ஆராய்ந்துவரும் வான்வெளி வீரர்கள் கருதுவதாகவும் கூறுகிறார்

அவர் அறிவியல் குறித்து பேசுவது இப்போதெல்லாம் உங்களுக்கு பழக்கமாகிவிட்டபோதிலும்,  இதை வைத்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது உங்களுக்குப் புரியவில்லை.

அவர் தொடர்ந்து, ” ஒரு கருத்து என்னவென்றால், இந்த நிகழ்வு சூரியனை விட பதினைந்து மடங்கு பெரிய  நட்சத்திரம் ஒன்று,  கருப்புத் துளையின் ஓரத்திற்கு வெகு அருகில் சென்று அதன் சில வாயுக்களின் சமன் நிலையைக் குலைத்ததால் , சூடேறி, கருப்புத் துளையின் ஓரங்களிலிருந்து வரும் அகச்சிவப்பு மாறுபாட்டை அதிகரித்தது என்பதாகும். நாங்கள் ஒரு வருடம் முன்பாகவே நட்சத்திரம் ஒன்று கருப்புத் துளையை நெருங்கிக்கொண்டிருப்பதையும் அதனால் கருப்புத் துளையின் மீது ஏற்பட்ட தாக்கங்களையும் கவனித்தோம்,” என்கிறார்.

நீங்கள், “இதிலிருந்து இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும் கோள்களுக்கிடையிலான தூரம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்றும் புரிகிறது” என்கிறீர்கள்.

“மிகச்சரி. தூரம் இல்லை, தூரங்கள். பன்மையில். நட்சத்திரத்திற்கும் கருப்புத் துளையின் ஓரத்திற்கும் இடையே இருந்த தூரமும்,  கருப்புத் துளைக்கும் பூமிக்கும் இடையே இருந்த தூரமும். எனவே நான் இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்,  சில சமயங்களில், தீப்பொறி கண்ணில் தென்படுவதற்கு முன்பாகவே, கீழிருக்கும் சக்கரங்கள் சுழல வைக்கப்படுகின்றன. இதைத் தான் விதி என்பதா? எனக்குத் தெரியாது. ஆனால் அரிதான ஒளிர்விடும் நிகழ்வுகள் நிகழ காலம்  தேவைப்படும் என்பது எனக்குத் தெரியும்.”

அவர் பெருமூச்சு விட்டபடியே, “அதனால் தான்,   நீ என் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்காமலிருந்தபோது,  நான்  முதலில் பதட்டப்படவில்லை. நான் உன்னை விட்டு விலக வேண்டும் என நீ நினைத்திருப்பாயெனில் அதை நீ என்னிடம் சொல்லியிருப்பாய் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் நீ அப்படி எதுவும் செய்யவில்லை. நீ என்னுடைய எண்ணை அழித்துவிட்டு, அதைத் தடை செய்தபோது நான் உண்மையில் பதட்டமடைந்தேன், ஆனால்,”.. அவர் உங்களைத் தன்னருகே இழுத்து, “அதற்காக உன்னிடம் ஏதேனும் காரணம் கண்டிப்பாக இருக்கக்கூடும் என்றும் புரிந்து கொண்டேன்,” என்கிறார்.

ஒரு இயற்பியலாளரோடு கலவி கொள்வது எப்படி?

அவர் உங்கள் சட்டைப் பொத்தானை அவிழ்த்தபடியே, “நாம் இப்படியேதான் ரூமியைப் பற்றியும், கருப்புத் துளையைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கப் போகிறோமா அல்லது…. என்கிறார் நீங்கள் “இரண்டுமே தான்” என்று கூறியபடியே உடைகளைக் களைகிறீர்கள்.

“ரூமி கடவுளின் மீதான உள்ளுணர்வால் நிரம்பிய அன்பை பற்றி பேசுகிறார் அவர் ஒரு முஸ்லிம்,” என்கிறீர்கள். ” “ஆனால் மக்களோ,  அவரது படைப்புகளில் இருந்து இஸ்லாத்தை கிழித்தெறிய விரும்புகிறார்கள்,”  என்கிறீர்கள். அவர் உங்கள் மார்பகங்களையும்,  தொடைகளையும், கச்சைகளால் இறுக்கிக் கட்டப்படாத வயிற்றையும் தடவுகிறார்.

ஒரு இயற்பியலாளரோடு கலவி கொள்வது எப்படி?

பயமற்ற,  பசுமையான,  உங்கள் முழுமையும் சிலிர்த்து நடுங்கிக் கொண்டிருக்கும்

வேளையில்.

***

The Secret Lives Of Church Ladies, by Deesha Philyaw

ஆங்கில மூலக்கதை: டீஷா ஃபில்யா தமிழாக்கம்: ஷ்யாமா

The Secret Lives of Church Ladies

Deesha Philyaw

ISBN: 1949199738  

ISBN13: 9781949199734

Edition Language: English

Literary Awards: PEN/Faulkner Award for Fiction (2021)Los Angeles Times Book Prize for First Fiction (2020)National Book Award Finalist for Fiction (2020)

மூலம்: https://www.theguardian.com/books/2022/may/05/short-story-writer-deesha-philyaw-i-wanted-to-challenge-the-churchs-obsession-with-sex

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.