ஜமீலா நிஷாத்தின் தலைப்பிடாத சில கவிதைகள்

ஆங்கில மொழிபெயர்ப்பு: பேரா. ஸிராஜுதீன், ஹோசங் மெர்ச்சன்ட்

காலத்தின் குருட்டு சுழற்சந்தில்
எங்கு செல்கிறாய் ?
என்ன தேடுகிறாய்?
சூறையாடப்பட்ட தாயின் கருப்பையில்
எதைக் கூர்ந்து பார்க்கிறாய்?
என்ன நோக்கி நிற்கிறாய் ?

காகிதத்தில் படர்ந்திருக்கும் இந்தச் சிவப்பு
சித்திரம் அல்ல
மலரும் அல்ல
தளர்ந்து விட்டாயா?
இது எந்த ஞானகுருவின்
இரத்தமுமல்ல
பாவங்களைக் கழுவிக்கொள்ள
இந்த அடர்ந்த சிவப்பு
வாழ்வேதான்

பார்
பாதை சிதறுண்டு கிடக்கிறது
ஆன்மாக்களில்
மரணத்தின் களைகள் மண்டிப் போர்த்தியுள்ளன
எலும்புகளில்
எரிமலைகள் உறங்குகின்றன
போகாதே
இந்தக் குருட்டுச் சந்தில்

எவரையும் அழைக்கவோ
எழுப்பவோ வேண்டாம்
செவிமடுப்பதென்றால்
அதோ
அந்த மொட்டை மரத்தில்
அலறும் ஆந்தைகளைச்
செவிமடுத்துக்கொள்
அவற்றின் கதைகளைச்
செவிமடுத்துக்கொள்
ஆனால்
யாரிடமும் சொல்லாதே
அவர்கள் உறங்கிவிட்டார்கள்.


பொழுது சாய்ந்தது
துக்கம் படர்ந்தது எங்கும்
நிழல்போல்
கருத்த இரவின்
மாலைக் கண்கள்
மூடிக் கொண்டன
பரபரப்பு ஒடுங்கியது
நிழல் அடர்ந்தது
இதயத்தைக் கப்பியது பயம்

ஒரு புயல் எழுந்தது
கதவுகள் குலுங்கின
மூச்சில் வெடித்து அடங்கியது
ஓர் இடி

பாழ்பட்டன வீடுகள்
வாழ்க்கை தனது
சிறகுகளை
அடித்துக்கொண்டது
பிணங்கள் விழுந்தன
கருத்த அலைகளிலிருந்து எழுந்தது
வேதனை கப்பிய ஓர் அழுகை

அம்மாவின் நெஞ்சோடு
ஒட்டிய வாழ்க்கை
வேறாகப் போனது
ஓயாத இரவு ஓய்ந்து
காலையும் வந்தது
தன் நனைந்த கண்களால்
இறந்தவர்களைப் பார்த்தபடி.


டிந்த சுவர்
செங்கல் துண்டுகள்
செடிகள் மலர்கள்
வெண் முயல்கள்
கோழிகள் பூனைகள்
கறுப்பு எருமைகள்
இயற்கை மற்றும் வாழ்வு
நித்திய துயிலில் ஒரு மனிதன்
சிவப்புப்பூக்கள்
அவனது கல்லறையைப் போர்த்தியபடி.
இடிந்த சுவரின் ஒரு பகுதி
முட்கள்,
செங்கல் குவியல்
இந்த அறையில்
வார்த்தைகளின் யுத்தம்
துப்பாக்கிகள் வெடிகுண்டுகள்
தேர்தல், பிரச்சினைகள்
நான்கு முகங்களும் ஒரு விளக்கும்
நகரும் நிழல்கள்

ஓர் இருட்டறை
கிழவி ஒருத்தி
பாக்கு உரலில்
எண்ணற்ற வார்த்தைகளை
செங்கல் துண்டுகளை
வேலமுட்களை
ஒரு குழவியால் இடித்துக்கொண்டிருக்கிறாள்.


ரவு நகர்ந்து சென்றது
சந்து சந்தாக
பின் சந்தில்
முன் சந்தில்
சந்தின் முடிவில் உயர்ந்த சுவர்களில்
எங்கு தொலைந்தது
அவனிருக்கும் சந்து?
ஊரடங்கு
சுவாசிக்கக்கூடத் தடை இங்கு.
யாரேனும் இங்கு பதுங்கியிருக்கலாம்
எங்கேனும் இங்கு ஒரு கல்லறை
தோண்டப்படுகிறது.
கரிசல் மண்
இரத்தச் சிவப்புச் சுவர்கள்
யாருடைய கல்லறை இது?
யாருக்குத் தெரியும்?
காவியின் ஆட்சி
எங்களில் யாரோ இறந்திருக்கிறார்கள்
கல்லறையில்
பாதாமும் அக்ரூட்டும்
இவ்வளவு எதற்காக?
மரணத்தில்
ஒளிந்திருக்கிறதா வாழ்வு?


ன்ன நாள் இன்று?
பாறை நிலம்
தூசி எங்கும்
மற்றும் இரக்கமற்ற சூரியன்
ஒரு உடும்பைப்போல
உடைந்த சுவரை
நம்பிக்கை பற்றிக்கொண்டிருக்கிறது.

நண்பர்களென யாருமில்லை
வழித்துணையுமில்லை
யாரும் யாருமேயில்லை
தனிமை அந்த உடைந்த சுவரை
பற்றித் தழுவித் தேம்புகிறது

அவள் தன் தாய்க்கு
பெருங்கவலையாக இருந்தாள்
இன்று ஓர் உடைந்த சுவருக்கு
அஸ்தமிக்கும் வாழ்க்கைக்கு
அவள் வாழ்க்கைப்பட்டாயிற்று
குறைந்தது தாயின் பாரம்
அவளது கடன்கள் அடைக்கப் படவேண்டுமே
இவளுக்குக் கிடைத்தான்
உலர்ந்த எலும்புகளின்
எச்சிலைத் தூவும்
ஓர் எழுபது வயது கிழவன்.


ண்ணெண்ணெய் ஊற்றி
எரித்து சாம்பலாக்கினாய் என்னை
ஆனால் நானோ
ஒரு பீனிக்ஸை போல அந்தச் சாம்பலிலிருந்து
எழுந்து நடனமாடினேன்.
என்னைத் துர்தேவதையாக்கி
கட்டையால் தாக்கி
இரத்தம் சிந்த வைத்தாய்
இந்த இரத்த நதிதான் வாழ்க்கை
“ஜெகான் நூமா”வில் எழுந்த
புதிய வாழ்க்கை
நான் சக்தி
நானே எல்லம்மா
என்னைத் தாக்கியபோதெல்லாம்
ஓர் அலையென என்னுள் எழுந்தது
உயிர்ப்பு
காலத்தின் உலர்ந்த மார்பை
அணைத்துக் கிடக்கும்
நான் ஒரு பீனிக்ஸ்
ஒரு புதிய வாழ்க்கையைக் கண்டடைந்தேன்
புதிய வாழ்க்கை, புதிய பாதை
புதிய கோபுரங்கள், புதிய மினார்கள்
மசூதியிலிருந்து எழும் மௌலவியின் அழைப்பு
கோவில் மணியோசை
தா தின் தின் தா
சாம்பலிலிருந்து
எழுந்து நடனமாடுவேன்
ஓர் பீனிக்ஸைப் போல.

(ஜெகான் நூமாவில் இரண்டு சகோதரிகள் கொல்லப்பட்டனர். அதன் எதிரொலியாக எழுதப்பட்டது இந்தக் கவிதை.)


புர்காவை அணிந்துகொண்டே
நான் பட்டதாரி ஆனேன்
கம்ப்யூட்டரும் கற்றுக்கொண்டேன்
எளிதாகப் பிறரை மிஞ்சினேன்

உம்மாவுக்குச் சந்தோஷம்
வாப்பாவுக்கு அதற்குமேல்
சினாய் மலையைத்
தனியாய் தூக்கிவிட்டேனல்லவா?

இந்த உலகத்தைக் காலடியில் இட்டு
தேய்க்க ஆசைகொண்டேன்
என் ஒவ்வொரு மூச்சும்
வெற்றிகொள் வெற்றிகொள் என்றன
புர்காவிற்குள் ஓர் அலெக்ஸாண்டர்!

பொழுதைப் போக்குவோமென்று
வெளியே கிளம்பினேன்
தியேட்டர் ஒன்றில் நுழைந்தபோது
தார்மீகப் படை ஒன்று
குண்டாந்தடிகளுடன்
தடுத்தது என்னை

ஏ பெண்ணே
புர்காவுக்கு இல்லை உள்ளே அனுமதி;
எழுந்தது கரும்புகை
எனது கருப்பு முகத்திரையிலிருந்து –
பறந்தது என் புர்கா.


ஞாபகங்கள்
அணிலைப்போல
மனமெனும் கோல்கொண்டாவில்
அலைகின்றன
காகம் கரைகிறது இப்போதும்
ஆனால் திரும்பிவரவேயில்லை
குதூப் ஷா
தக்காணத்தின் மார்புடன்
பிணைந்திருக்கும்
தாராமதியின் ஆடும் பாதங்களின்
தா தை தத்தித் தை
கல்லறைகளில் ஒலித்து எதிரொலித்துச்
சோர்கின்றன
சிலந்திவலை படர்ந்த சுவர்களில்
படர்கின்றன நிழல்கள்
ஒரு ஹைதராபாத் முடிவுக்கு வந்துவிட்டது
தக்காணத்தின் பழுப்பு நிலம்
உலர்ந்த கண்ணீர் உகுக்கிறது
ஆனால்
அணிலின் கண்களில் மின்னும் ஒளி
இன்னொரு ஹைதராபாத் எழுந்துவிட்டதைக்
கட்டியம் கூறுகிறது.
பாழிலிருந்து புத்தெழுச்சி
ஒரு சுழற்சி
வாழ்க்கை வட்டம்
கோல்கொண்டாவிலிருந்து
வெளியெங்கும் விரிந்து
பரவுகிறது
பிரபஞ்சம் முழுதும்.


ணுகுண்டையும் உறங்கச் செய்யும்
இது என்ன தாலாட்டு?
என் இதயத்தில் ஏனிந்த நடுக்கம்?
என் ஆன்மா
சிதறிப்போகிறது
நான்
சில நேரம் காஷ்மீரில்
சில நேரம் கோயம்புத்தூரில்
கண்ணீர் சிந்துகிறேன்.
ஆள்பவர்களோடு சிலநேரம் சண்டையிடுகிறேன்
ஹுஸைனின் ஓவியத்திற்காகச் சிலநேரம்.
என் ஆன்மா
உடைந்த கண்ணாடிச் சில்லுகள் மேல்
காலத்தின் ஓசைக்கு ஆடுகிறது.
என் கன்னி உடல்
கண்ணாடிச் சில்லுகள் மேல்
புரள்கிறது:
ஆனால்
ஒவ்வொரு சில்லிலிருந்தும்
ஒரு புதுவாழ்வு எழுகிறது.
சந்தேகத்தின் கிடுக்கிப்பிடியில்
என் ஆன்மா.
அறிவியல் அதை நடுங்கச் செய்கிறது.
பீதியில்
அது அணுகுண்டை உருவாக்க முயல்கிறது.


ன்பு கண்ணியம் நட்பு என
முகமூடிகள் பல அணிந்து
செல்லும் உனக்கு
எல்லாமே எளிதுதான்.
என்னை மணந்து
சிவப்புச் சால்வையில் என்னைப் போர்த்தி
உன் வீட்டின் அழகுப் பொருளாக்கினாய்.
நெகிழ்ந்துபோய்
பேதை நானும்
என் அதிர்ஷ்டம் என்று மகிழ்ந்தேன்.
ஒன்று மட்டும் அறிந்திருந்தேன்
என்னைத் தெருவில் இறக்க
உனக்குப் போதும்
உன்னில் துடித்துக் கொண்டிருக்கும்
தலாக் தலாக் தலாக்!
என் பவித்ரமோ
உனது புரிதலுக்கு அப்பால்.
உனது மனிதாபிமானமோ
உனது தொடைகளின் நடுவில்.
மெல்லிய என் மனதால்
உன் வஞ்சத்தை அறியமுடியவில்லை.
மனிதாபிமானம் கண்ணியம் நட்பு
அருமையான நடிப்பு.
இவற்றின் பின்னாலிருக்கிறது
ஓர் ஓநாய்
நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு
என் இதயத்தில்
அதன் எச்சில்
சொட்டியபடி.


னது இமைகளின் தந்திகளை
அதிர்வூட்டும்
என்ன கருவி இது?
ஒலித் திரையில்
தோன்றி தோன்றி மறையும்
என்ன சித்திரம் அது?
மூட்டமான இந்த இதயத்தில்
விரிந்து பரவும் நிழல் என்ன நிழல்?
உனக்குத் தெரியும்
நான் நிழல்களை நேசிப்பவள் என்று.
ஆனால் இந்த நிழலின் சிறகு விரியும்போதோ
எனது குருதியில் பொங்கி எழுகிறது
எண்ணங்களின் அலை.
எனது பேனாவிலிருந்து
சொட்டத் துவங்குகிறது
குருதி.


பாழின் கடலிலிருந்து
வாழ்வு
மனிதக் கடலில் மூழ்கிக்கிடக்கிறது.
கோகம்*
பாறைகளில் வியர்வை சிந்தவில்லை.
இப்போது வலுவற்ற நகரங்களில்
சோதனைக் குழாய்களிலும் குடுவைகளிலும்
குருதி சிந்துகிறது

காதல் இன்று ஒரு தொற்றுவியாதி.
புற்றுநோயைப்போல
நாகரிக மனிதர்களின் திசுக்களைத்
தின்றுகொண்டிருக்கிறது
ஆதிமனிதன்
விட்டுவந்த தனது நாகரிகத்தை
இன்றைய படைப்புகளினிடையே
தேடி அலைகிறான்.
பூமியைச் சுற்றி
வருகிறது
ஒரு வினோத
வல்லூறின் நிழல்.

(*பாரசீக இளவரசி ஷெரீனின் காதலனாக பாரசீகக் கதையில் வருபவன் ஃபர்ஹாத். பாறைகளை உடைத்து அவற்றின் வழியே கால்வாயை உருவாக்கும் பெரும் பணி அவன் மேல் சுமத்தப்படுகிறது. பாறையை உடைக்கும் இந்த பணியைத்தான் கோகம் என்று குறிப்பிடுகிறார்கள்.)


நானும் நீயும் பகிர்ந்த
அந்தக் கணம்
எவ்வளவு விநோதமானது
ஆர்வமுற்றிருந்தாய்
பொங்கித் ததும்பினேன் நானும்
ஏனென்று அறியாமலே.
என் சுழலிலிருந்து தப்பித்து விடுவாய்
நான் அறிவேன்
உடைந்த ஒரு கண்ணாடியின் சில்லுகள்
எனது இமைகளை மூடும்.
இந்த ஒரு கணத்திற்காகத்தான்
நாம் சந்துகள் சுற்றினோம்
சாலைகள் கடந்தோம்
மசூதிகள் கோயில்கள்
துர்க்கையின்
அல்லாவின் வீடு
எங்கும் சென்றோம்
எல்லாம் கண்டோம்.
ஆனால்
காலம் நமக்கென்ன உறவு
அறிந்திருக்கவில்லை நாம்.
அது ஒரு கணம்
பித்தேறிய கணம்
இச்சையா
காதலா
சொல்லத் தெரியவில்லை எனக்கு
சொட்டு சொட்டாக
விழுந்த ஒரு கணம் அது.


லர்களைப் பறித்து
புழுதியில் எறிகிறேன்
பின்னர்
மீண்டும் எடுத்து வந்து
எனது கண்ணீரால்
மாலையாகத் தொடுக்கிறேன்.

கிறுக்குத்தனமா?
இருந்துவிட்டுப் போகட்டும்.
மஜ்னு போல
பாலைவனங்கள் சுற்றித் திரியவோ
என்னைப் பற்றி
மஸ்னவி எழுதவோ
எண்ணமில்லை எனக்கு.
நான் தேடி அலைவதெல்லாம்
என்னில் தூவப்பட்ட மலர்களைத்தான்

சாம்பலில் கிடைக்காது அவை
கிறுக்குத்தனம்தான்
ஆனாலும் நான் விடமுடியாது.


ரவில்
ஒரு கருத்த படகில்
மரணமெனும் நதியில்
மிதந்து செல்கிறோம் நாம்

வெள்ளைச் சல்லா சுற்றிய
இந்த பிணங்கள்
அந்த ஓடக்காரனோடு
எவ்வளவு தூரம்தான்
மிதக்கும் மௌனமாக?

எப்போது கரை எட்டும்
இந்தப் படகுகள்?

வானவில் தனது
வண்ணங்களை
எப்போது
இந்த வெள்ளைச்சல்லா மீது
வீசும்?


ன் கருப்பை வலித்தது
கால்களை விரித்தேன்
நீர்ச்சுழலிலிருந்து வெளித்தள்ளப்பட்டு
ஒரு கடற்கன்னியானேன்.

என் முன்னே நின்றார்
ஒரு மனிதர்
வெள்ளைத்தாடி, வெற்றுக்கால்
என்னிடம் சொன்னார்
வா
என் ஓவியங்களில் பெண்குதிரையாக
வாலைச் சுழற்றிக்கொண்டு
கம்பீரமாக நான் நடந்தேன்
டக் டக்
டக் டக்

எனது வாலிலிருந்து
ஷெனாய் ஒலித்தது
பிஸ்மில்லா கான் என்னிடம்
ஓ பெண் குதிரையே
தாளத்திற்கு ஓடு
என்றார்
நான் சுழன்று சுழன்று சுழன்றாடினேன்

பாதல்தா வந்து சொன்னார்
உனது உடல் ஓர் உணர்ச்சிக் காடு

காட்டில் தொலைந்தேன் நான்

நின்றேன்
என் எதிரில் சந்திரலேகா
உன் இதயம் சொற்படி
ஆடு
உடலில் எதுவுமில்லை
ஆடு
நான் ஆடிக்கொண்டேயிருந்தேன்

நான் சந்தோஷமாயிருந்தேன்

எனது சிரிப்பொலி பிரபஞ்சம் முழுவதும்
எதிரொலித்தது
அப்போது யாரோ என் கன்னத்தில் அறைந்தார்கள்.

திடுக்கிட்டு பார்த்தபோது நான் படுக்கையிலிருந்தேன்
ஒரு குளுக்கோஸ் பாட்டில் தொங்கிக்கொண்டிருக்க
என் உடலிலிருந்து ஓர் குருதிப்புனல்
வடிந்துகொண்டிருந்தது.


நான் ஒரு நிலையான புள்ளி
பிரபஞ்சத்தின் மையம்
வட்டப்பாதையில் சுற்றிவரும்
என்னுள் மூழ்குகிறாய்

நானே யோனி
வாழ்வின் ஊற்று
என் வேர்களிலிருந்து தோன்றி பரவியது
லிங்கங்களின் காடு
நீ ஒரு குருடு
நீ அறியாய்
உனக்காக இந்தக் காந்தாரி
தன் கண்களைக் கட்டிக்கொண்டிருக்கிறாள்
நானே நூர்
ஒளி
நூர்ஜஹான்
உலகின் ஒளி
நிர்மல ஆன்மா
நானே காளிமாதா
*நிர்மல் ஹிருதய்யின்
அன்னதாதாவும் நான்தான்

என் கருப்பையிலிருந்து
ஜனித்தவர்கள் நீங்கள்

என்றாலும் நீங்கள் கேட்கிறீர்கள்
நான் யாரென்று
யார் நான்?
நான் ஒரு நிலையான புள்ளி
பிரபஞ்சத்தின் மையம்.

(* நிர்மல் ஹிருதய் : அன்னை தெரசாவின் அமைப்பு)


ன் நெஞ்சில்
துயில் கொள்கிறது
ஒரு கவிதை.
ஒரு மங்கலான கண்ணாடி
அதற்கு உருவம் கொடுக்க முயல்கிறது
ஒரு கஜலாக
ஒரு வரியாக
ஒரு சொல்லாக

இரவும் பகலும்
பற்றித் தன்வசம்
இழுக்கிறது என்னை அது
இசையில்லை
ஓசையில்லை
ஏன் மௌனம்கூட
இடைஞ்சலெனத் தோன்றுகிறது
என்னுள் துயில்கொண்ட
என்னைத் துயில் கொள்ளவிடாத
இந்தக் கவிதைதான் என்ன?


வெண்ணிறக் கனவுக்கடலில்
நாங்கள் மூழ்கினோம்
மஞ்சள் நிற கல் போன்றிருந்த நிலவு
என்னப் புதுமையென வியந்தது.

வானத்தின் இருட்டுப்பொந்தில்
நட்சத்திரங்கள் தொலைந்தன
ஒரு செம்மண் திட்டில்
ஒரு குண்டு வெடித்தது
டமார்!
தொடுவானம் முதல் தொடுவானம் வரை
அந்தி பரவியது
நிர்மலமான உடலில்
ஒரு தேவதை புகுந்தாள்
வெளிச்சத்தின் ஒரு துளி என் இமைகளில் விழுந்தது
ஸ்பரிசத்தின் நரம்புகள் அதிர்ந்தன
எல்லா வண்ணங்களையும் நீயே
சேகரித்து வைத்துக்கொண்டாய்

நான் ஒரு ராகமானேன்
ஒரு மெட்டாகிப்போனேன்
வாழ்க்கை ஏழு வண்ணங்களாக விரிந்தது
ஏழு ஸ்வரங்களாக

இரவின் சிப்பிகளில் முத்துக்கள் விழுந்தன
கடல் தன் பாத்திரத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது.

அப்போதுதான்
என் கையில்
சூரியன் இறங்கியிருந்ததைக் கண்டேன்.


தயத்தில்
இரத்தம் உறைந்தது
நகரம் ஒரே ரத்த வெள்ளம்.
ஆன்மா படபடத்தது.
குயில் எழுப்பியது
குக்கூவென தன்
பிலாக்கணத்தை.

இரவின் கருப்புக் கூந்தல்
வானமெங்கும் அலைபாய்ந்தது.

நட்சத்திரங்களைச் சென்று தேம்பியது
ஒரு தாயின் அழுகை.

கல்லறைத் தோட்டத்திலிருந்து
கிளம்பிய கருப்பு ரத்தம்
நகரத்தில் பாய்ந்தது
மனிதர்கள்
மிதந்தனர் அதில்.


ந்த நகரத்தில்
எந்தக் கண்ணாடி வீட்டில்
வாழ்கிறேன் நான்?
இந்தப் பக்கமாக ஒரு பெண்
என்னை இழுக்கிறாள்
அந்தப் பக்கமாக
ஒரு எலக்டிரிக் வயர்
ஒருவன்
என் கைரேகைகளைப் பார்த்தபடி இருக்கிறான்.
என் உள்ளங்கை
பற்றி எரியும் ஒரு சிவப்பு முக்கோணம்
இந்த மின்னோட்டம்
என் கையிலிருந்து கிளம்புகிறது
என் தலை வரை சென்று
என் முழு உடலையும் இதயத்தையும் உலுப்புகிறது

என்ன இந்த மின்னோட்டம்?
எந்த நகரம்?
எங்கு
எங்குதான் வந்திருக்கிறேன்?


பேனாவிற்கும் காகிதத்திற்குமிடையில்
மூண்டது ஒரு போர்

இரத்தத்தில் குளித்தன வார்த்தைகள்
காகிதம் கிழிபட்டது இரண்டாக
நீயும் நானும்
இரண்டு துண்டுகளாக
இந்த அறையின் இருமூலைகளிலும் கிடந்தோம்
காம தேவதை
ஜன்னல் வழி நுழைந்து
காகிதத்துண்டுகளைச் சேர்த்தெடுத்து
படுக்கை மேல் வைத்தது.
நெருக்கத்தின் புனித நீர்
தெளிக்கப்பட்டது
இதன் பின்னர்தான்
அந்தக் கவிதை உருவெடுத்தது.


தொடர்புள்ள பதிவு: https://solvanam.com/?p=90645

ஆங்கில பிரதி உருவாக்கம் : சி. எஸ். லக்ஷ்மி
தமிழ் தொகுப்பு : அ. ஸ்ரீனிவாஸன் , எம். சிவசுப்ரமணியன்
முகப்போவியம் : பாரதி கபாடியா
முகப்பு வடிவமைப்பு : தமால் மித்ரா
புகைப்பட உதவி : ப்ரியா டிஸுஸா

குறிப்பு:

ஜமீலா நிஷாத்தின் வாழ்க்கையைக் கூறும் ‘நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை’ பிரதியும் கவிதைகளும், புகைப்படங்களும் ஸ்பாரோ அமைப்பின் காப்புரிமைக்கு உட்பட்டவை. இவற்றை யாரும் எந்தத் தளத்திலும் வேறு எந்தப் பதிப்பிலும் உபயோகிக்க அனுமதி இல்லை.

Series Navigation<< நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்கள் >>

One Reply to “ஜமீலா நிஷாத்தின் தலைப்பிடாத சில கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.