சிவகாமி நேசன் என்னும் இனிமை

பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார். அவை ‘மூச்சே நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கம் அல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக் கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை என்று பின்னட்டைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நான் இந்த நூலை ஒரு இலக்கிய பிரதியாக அல்லது கவிதையாகவே வாசித்தேன். என்னால் இந்த எல்லைக்குள் தான் அக்கமகாதேவியின் எழுத்துகளில் உள்நுழைய முடிந்தது. கவிதை வாசகி என்ற தகுதியின் அடிப்படையில் மட்டுமே இந்தநூலைப்பற்றி எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

நூலில் பெருந்தேவி குறிப்பதைப்போல சென்னமல்லிகார்ச்சுனா என்று அக்கமகாதேவி சிவனை அழைக்கும் அழைப்பே எத்தனை அன்பானது என்று ஒவ்வொரு வசனத்தை வாசிக்கும் போதும் தோன்றுகிறது.

‘உன்னை அறியும் நரகமே மோட்சம்
உன்னை அறியாத மோட்சமே நரகம்
நீ விரும்பாத சுகம் துக்கமே
நீ விரும்பும் துக்கமும் பரமசுகம்
சென்னமல்லிகார்ச்சுனனே…
நீ கட்டிச்சிதைக்கும் பந்தனைகளே
விடுதலை என்றிருப்பேன்’

என்ற அக்கமகாதேவியின் வரிகள் என்ன மாதிரியான நிலை? இத்தனை பெரிய அன்பின் சுமையை மனிதர்கள் மீது வைக்க முடியுமா? கங்கையின் விசையை தலையில் வாங்கிய ஒருவனால் தான் இத்தனை பெரிய அன்பிற்கு பாத்திரமாக முடியும். மற்றவை சிதறிப்போகும் என்று தோன்றுகிறது.

அக்கமகாதேவியின் வரிகள் அடிமுடி அறியவொண்ணா ஜோதியை மல்லிகை மலராக்கி அதை நறுமணமாக உணர்கின்றன. காற்றில் உள்ள ‘நறுமண அரூபமான ஈசன்’ என்ற படிமம் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. மகாதேவி தன் அன்றாடத்தில் இருந்து உவமைகளை எடுத்துக் கொடுத்து நாம் அறியாத ஒன்றை அறிய வைக்க முயற்சிக்கிறார் அல்லது அவருடைய தன்னிலையை சொற்களில் வைத்துவிட்டு என்னைப் புரிகிறதா? என்று நம்மிடம் அல்லது மகாதேவரிடம் கேட்பதைப்போல இருக்கிறது.

அன்பை எடுத்துரைக்கும் சொற்கள் திரும்பத்திரும்ப அன்பை வெவ்வேறு உவமைகளில் சொல்லிப்பார்க்கின்றன. எத்தனை உவமைகள்? காணும் அனைத்தும், உணரும் அனைத்தும் இவருக்கு ஈசனாக இருப்பதால் இவ்வாறு எழுத முடிந்திருக்கிறது.

‘நீருக்குள் இறங்கியிருக்கும் வண்ணான்
தாகித்துச் செத்ததைப் போல
தன்னுள் இருக்கும் மகத்துவத்தை
அறியாதிருக்கின்றனர் மல்லிகார்ச்சுனனே’

‘பட்டுப்புழு தன் சிநேகத்தால் கூடுகட்டி
தன் நூல்களால் தன்னைச்சுற்றி மடிவதைப் போல’

போன்ற உவமைகளை உதாரணங்களாகக் கூறலாம்.

ஆண்டாள், அக்கமகாதேவி என்று சிலருக்கு மனம் சிந்தனை செயல் எல்லாம் இப்படியானதாக மாறியிருக்கிறது. எத்தனை பெரிய மானிட அன்பும் குறையுள்ளதே. ஏனெனில் அது வாழ்வியல் என்ற அன்றாடத்தில் நிலைகொள்வது. அதை ஏற்க முடியாத சிலமனங்கள் பிரபஞ்சத்தை, இந்த இயற்கையை நோக்கிச் செல்கின்றன. அதை பற்றிக்கொள்ள ஒரு நாமம் போதுமானதாக இருந்திருக்கிறது.

‘ரத்தினத் தளை என்றாலும் தடை அல்லவா
முத்துவலை என்றாலும் பந்தனம் அல்லவா
தங்கக்கத்தியால் தலையை அறுத்தால் சாகாதிருப்பாரா?
உலகத்து பூஜை பஜனையில் மாட்டிக்கொண்டிருந்தால்
பிறப்பு இறப்பு விடுமா சென்னமல்லிகார்ச்சுனனே’

‘சென்ற பிறவிகள் என்னவும் ஆகட்டும்
இனி கருணை செய் சென்னமல்லிகார்ச்சுனனே’

என்ற வசனங்கள் மூலம் உலகியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் மனநிலையை கூறுகிறார்.

அன்பாக ஆதல் என்பதே துறவின் முழுநிலையா என்று இந்த நூலை வாசித்ததும் தோன்றியது. அப்படி ஆகமுடியுமா? என்ற கேள்விக்கு அக்கமாகாதேவியின் இந்தவரிகள் வரிகள் நம்முடன் உரையாடுகின்றன.

‘நானற்று நீயாகும் வழியை
பிரபுவே எனக்குக் காட்டு’ என்கிறார்.
‘மனமும் மனமும் உரசி அனுபவம் பிறந்ததால் சுற்றியிருக்கும் உடல் தன்மைகள் எரிந்தன’
‘சென்னமல்லிகார்ச்சுனனுக்குள் இருப்பவளை
என்னவென்று அழைப்பாய் அம்மா?’

என்று கேட்பதன் மூலம் தன் நிலை கெட்டு, நாமம் அழிவதை கூறுகிறார்.

‘உலகமே கண்ணான சென்னமல்லிகார்ச்சுனனிடம்
மூடி மறைக்க என்ன இருக்கிறது சொல்’

என்ற வசனத்தில் ஆடை துறப்பை கூறி சாதாரண பெண்ணான நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். மீண்டும் எனக்கு அதே கேள்வி. இந்த வரிகளை எழுதிய மனம் உணர்ந்தது என்ன?

‘என்னை நான் அறியும் முன்பு எங்கிருந்தாய் தேவனே
பொன்னுக்குள் வண்ணம் போல என்னுள் இருந்தாய்’

என்ற வரிகளில் கண்டுகொள்ளுதலை,அகம் சட்டென எதைநோக்கியோ விழித்துக்கொள்ளுதலைப் பற்றிக் கூறுகிறார்.

ஆலங்கட்டி கரைதலைப் பார்க்கலாம். உப்பு கரைதலைப் பார்க்கலாம் முத்து கரைதலைப் பார்த்தவர் யார்? என்ன அழகான கரையும் உவமைகள். முத்து கரைவதை நாம் நீண்ட நாட்களுக்குப் பிறகே அறியமுடியும். இப்படியான உவமைகள் மூலம் மகாதேவருடன் தான் கரைந்து இல்லாமலானதை பற்றிக் கூறுகிறார்.

‘பெயர் மட்டும் போதும் என்ற நிலை
சிவசிவா சிவசிவா
சிவசிவா சிவசிவா
என்றால் மட்டும் போதாதா ஏழு கோடி மந்திரங்கள் எதற்கு?’

என்ற வசனத்தை வாசிக்கும் போது ஒரு திரைப்பாடல் நினைவிற்கு வந்தது.

என் மனம் கவரும் ஒற்றைப் பேர்! அதற்குத்

தாள் பணிந்தேன்…தாள் பணிந்தேன்

என்று ஒரு பாடலில் திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருப்பார். இந்த வசனங்கள் ஒவ்வொன்றிலும் சென்னமல்லிகார்சுனனே… சென்னமல்லிகார்சுனனே… என்று மகாதேவி விளித்து எழுதும் பொழுதும் அந்த வரி மனதில் வந்து கொண்டே இருந்தது.

மானுடர்க்கென்று பேச்சுபடில் வாழ்கிலேன் என்ற கோதை சொல்லின் இன்னொரு வடிவம் அக்கமகாதேவியின் இந்த வரிகள்…

‘சென்னமல்லிகார்ச்சுனனைத் தவிர வேறெவனும்
நமக்கு முறையல்ல பாரண்ணா’

என்று தன்னிலையை உறுதியாக எடுத்துக்கூறுகிறார்.

‘அக்கா கேள் நானொரு கனாக்கண்டேன்.. கங்கணம் கையில் கட்டித் தீராத அட்சதையிட்டு..’

போன்ற மனம் சார்ந்த வசனங்களும் உண்டு.

இந்த வசனங்கள் ஒவ்வொன்றும் சிவனிற்காக அக்கமகாதேவி என்ற மல்லிகைச் செடியில் மலரும் மலர்கள். அவை காத்திருத்தல் என்ற நிலையால் இனிமை கொள்கின்றன.

‘ஐயனே நீ கேட்டால் கேள் கேட்காவிட்டால் விடு என்று தொடங்கும் வசனத்தில்..

என் விண்ணப்பத்தைக் கேள் …..
ஏன் செவிகொள்ள மறுக்கிறாய்
சென்னமல்லிகார்ச்சுனனே?’

என்று மானுட இயல்புகளுக்குள் ஈசனை இழுத்துவிட்டு கேள்வி கேட்கிறார்.

‘நிறைகுடம் ததும்பாது பார்…
முழுக்க அறிந்தது மறக்காது பார்
நீ அருளிய சரணுக்கோ பரம சுகம் பார்’

என்ற வசனத்தில் அக்கமகாதேவி அழிந்து முழுக்க சிவகாமி ஆகிறார்.

‘நான் நீயான பிறகு யாருக்கு சேவை செய்வேன், யாரை நினைப்பேன், யாரை ஆராதிப்பேன், யாரை அறிவேன் …நான் நீயாகும் போது உன்ன மறப்பேன்’ என்று ஒரு வசனம் வருகிறது. இந்தக் கவிதையை வாசிக்கும் போது மகாதேவி ஒன்றாக கலத்தலில் கூட ஈடுபாடில்லாதவராக தனித்து ஈசனை நினைத்திருத்தலைப் பேறாக நினைக்கிறார். அது தவறிப்போகுமோ என்ற ஏக்கம் தெரிகிறது . எய்துதல் என்று ஏதுமில்லை. அன்பில் நிலைத்திருத்தல் என்ற நிலையே கூட எய்துவதற்கான ஒன்றாக நினைக்கிறாரா? என்றும் தோன்றுகிறது.

பிறகு வருத்தத்துடனோ, உவகையுடனோ ‘நான் நீயான பிறகு உன்னை மறப்பேன்’ என்று சொல்கிறார். அந்த வரிகளை வாசிக்கும் போது அதுவரை இருந்த கொந்தளிப்பும், அலைக்கழிப்பும், தள்ளிப்பும் இல்லாமலாகிய சாந்தமான அக்கமகாதேவியை உணர்ந்தேன். எங்கோ ஓர் பாழ்மண்பத்தில் வான் பார்த்து அமர்ந்திருக்கும் ஐயனின் தேவியை மனதில் காணமுடிந்தது. அவரின் இடபாகமான தேவி.

‘என் தந்தை சென்னமல்லிகார்ச்சுனனே
என்னைக்கொன்றாலும்
சரணமெனாமல் உயிர் தரிக்க மாட்டேன்’

‘இல்லறம் என்ற பகை, தந்தையே
பிறவி பிறவியாகத் தப்பாமல் துரத்துகிறது…’

‘குழந்தாய், இங்கே வா என்று
உன் வடிவைக் காட்டு சென்னமல்லிகார்ச்சுனனே’

வாசிப்பவர்களுக்கு சட்டென தந்தை என்று சில வசனங்களில் கூறுவதைப்பற்றி திடுக்கிடல் ஏற்படும். இந்த வசனங்கள் அன்பின் உச்சநிலையில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கூறுவேன்.

என் சாதாரண அனுபவத்தில் இருந்து இதை என்னால் உணரமுடிகிறது. எங்களுடைய தாத்தா இறக்குமுன் மூன்றுமாதங்கள் படுக்கையில் இருந்தார். ‘எங்கய்யாவுக்கு பிறகு மனசார உன்னத்தானே அய்யாவா நினைச்சிருந்தேன்’ என்று அம்மாச்சி அந்த கடைசிநாட்களில் தாத்தாவின் அருகில் அமர்ந்து அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

அன்று இருபத்தி இரண்டு வயது பெண்ணான எனக்கு வியப்பாக இருந்தது. அப்போது அம்மாச்சிக்கு எழுபது வயதிருக்கும். எந்த உறவு என்னவாக ஆகும் என்று யாருக்குத் தெரியும். அது மனதை பொருத்ததல்லவா?

பெண்ணிற்கு மீண்டும் மீண்டும் தந்தையே தேவைப்படுகிறார் என்று நினைக்கிறேன். அந்த வகையில் அக்கமகாதேவி உணர்தல், காத்திருத்தல், அழைத்தல், சங்கமம் என்ற பல பலநிலைகளைத் தாண்டிய பிறகு மீண்டும் அவருக்கு மல்லிகார்ச்சுனன் தன்னை ‘பெற்றவனாக’ ஆகிறார். பெண்ணெனத் தான் ஏற்ற அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று குழந்தையென கள்ளமற்ற மனத்துடனும், உடலுடனும் தந்தைக்கு முன் வாயில் விரல் வைத்து சிரிக்கும் மழலை என மாறும் நிலை அது.

மகத்துவமான மெய்யறிதல் நிலைகள் நமக்கு நிறைய இருக்கின்றன. மானுடரின் சாதாரண அன்பானது அதன் உச்சத்தில் எய்தும் நிலை ஒன்று உண்டென்றால் அது இதுவாக இருக்கலாம். மீண்டும் வளைந்து சுற்றி வட்டமாகி முதல் நிலையைச் சேர்தல். அக்கமகாதேவியின் தந்தை மல்லிகார்ச்சுனன் இந்த பிரபஞ்சத்தையே பெற்றவன் என்பதால் இந்த வசனங்கள் எழுதப்பட்டு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகும் நிலைபெற்று உள்ளது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் கொடி தரையில் படரும். ஒவ்வொரு கணுவும் வேராகும். படர்ந்து பெரிய வலைபோல வளரும். வளர வளர வேராகும் ஒவ்வொரு கணுவிலும் மண்ணின் இனிமை கிழங்காக மாறியிருக்கும். அந்த வலை போலான கொடிகளைக் களைந்த பிறகு கிழங்குகளை அகழ்ந்து எடுக்க வேண்டும். அக்கமகாதேவியின் பக்தி அப்படியானது. அதை உணர்வதற்கு நாம் சில படிகள் ஏறியோ இறங்கியோ செல்ல வேண்டும். ஆனால் இவை கவிதைகளாக உணரப்படும் போது அதன் இனிமையை சட்டென நம்மால் சுவைக்க முடிகிறது.

மாசி மாத மகா சிவராத்திரிக்கான படையல் அமுதான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அறுவடையாகும் நேரம் இது. விவசாயிகள் மண்ணை அகழ்ந்து இனிமையை குவித்து வைத்திருக்கிறார்கள். இந்தப் புத்தகம் அது போலத்தான் என்று தோன்றுகிறது.

***


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “சிவகாமி நேசன் என்னும் இனிமை”

  1. அன்பு மிகு கமலதேவி – என்ன ஒரு அழகிய நடை! வேற்று மொழியில் வந்திட்ட ஒரு படைப்புச் சிறப்பினை என் இனிய தமிழில் நீங்கள் எழுதியிருக்கும் அழகில் சொக்கிப் போனேன். குறிப்பாக உங்கள் அம்மாச்சியை நினைவில் கொண்டு வந்தது எனக்குள் என் ஆச்சியைக் கொண்டு வந்து என்னுள் ஆட்சி செய்திடும் அழகினைச் சொல்லிட ஒரு கம்பன் வேண்டும். ‘மூச்சே நறுமணமானால் …’ வாங்கிப் படிக்க வேண்டும். திருவாசகத்தில் மூழ்கி எழமறுக்கும் இத்தேனீக்கு இன்னொரு தேன்குடத்துள் வீழ்வதென்பது … ஓ … அதற்கு எத்தனை கொடுப்பினை வேண்டும்.
    மிக்க நன்றி.
    அன்புடன் கோம்ஸ் பாரதி கணபதி, மெம்ஃபிஸ், டென்னசி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.