மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும்

‘மகாத்மா காந்தியின் பெருமை அவர் நடத்திய தீரமான போராட்டங்களைக் காட்டிலும் அவர் வாழ்ந்த தூய்மையான வாழ்க்கையிலேயே தான் இருக்கிறது’ என்பார் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் சர்.எஸ்.ராதாகிருஷ்ணன். அந்த அளவுக்கு அவரது சிந்தனை, சொல், செயல் அனைத்தும்  தூய்மையானதாக இருந்தது. பிரச்சனைகளை அவர் அணுகிய விதம்-அவற்றிற்கு தீர்வு காண அவர் கையாண்ட வழிமுறை- அகிம்சையைப் பற்றுக்கோடாக கொண்டு, மாற்றம் நோக்கிய அவரது நகர்வு- போராட்டங்களில் மக்களைப்  பெருமளவு பங்கேற்கச் செய்தது  எல்லாமே அண்ணலின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அவரைப் போன்று எந்த தலைவரும் தன்னை மக்களுடன் சமன்படுத்தியது கிடையாது. அவர் மக்களோடு நின்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பினார். நாட்டில் கடைநிலையில் இருப்பவர்களோடும்  உறவாடினார். அவருக்கு முன்னரோ அல்லது பின்னரோ அவர் அணுகியது போன்று இந்தியாவில் எந்த தலைவரும் துணி பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தான் அணிந்த ஆடையையே மாற்றி எளிமையாக்கிக் கொண்டது கிடையாது. சத்திய சோதனைகள் செய்து தனது வாழ்வையே செய்தியாக விட்டுச் சென்ற அந்த சத்திய உபாசகன்  மதுரை மண்ணில் மேற்கொண்ட  மேலாடை துறவு மூலமும் உன்னதமான  செய்தியினை உலக வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.‘அண்ணல் அமர்ந்த இடமெல்லாம் ஆலயமாகும்’ என்று ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டது போன்று, மதுரை நகரில் அவர் தங்கிய, உரையாற்றிய, வருகை தந்த  இடங்கள் எல்லாம் மக்கள் நினைவுகளில் பசுமையாக பதிந்துள்ளது. அவை இன்றும் போற்றப்பட்டு வருகிறது. வரலாறாக வடிவம் பெற்றுள்ளது. அண்ணலின் வரலாற்றில் மட்டுமன்றி, இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி முக்கியத்துவம் பெற்ற அவரது மேலாடை துறவினை  மதுரை நகரில் தான் அண்ணல் மேற்கொண்டார். இங்கு தான் தரித்திர நாரயணர்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.  

காந்தி எழுதிய  இந்திய சுயராஜ்யம் நூல் அவரது கொள்கை விளக்க நூலாகவே காட்சி தருகின்றது. அந்நூலில் இயந்திரங்கள் உதவியுடன்  ஆலைகள் உற்பத்தி செய்யும் துணிகளுக்கு மாற்றாக கைத்தறிகளில் நெய்யப்படும் துணிகளை  அணிந்துகொள்ள அவர் வற்புறுத்தினார். இந்தியாவில் வளர்ந்துவரும் வறுமையைப் போக்குவதற்கு சரியான மருந்து கைத்தறி அல்லது கைராட்டையே என்று அண்ணல்  உறுதியாக நம்பினார். 1911ஆம் ஆண்டு ‘ஒவ்வொரு அறிவார்ந்த மனிதனும் நெசவு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று விருப்பம் தெரிவித்தார்.  எனினும், அப்போது ஐரோப்பிய முறையிலான உடையையே அவர் அணியலானார். 1913ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது டர்பனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக தான் அணிந்துவந்த உடைக்குப் பதிலாக அங்கு வாழ்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் இந்திய உடையினை உடுத்திக்கொண்டார். 

சத்திய சோதனையில் காந்தி குறிப்பிடுகையில், ‘தென் ஆப்பிரிக்க சத்தியாக்கிரகத்தின்போது ஒப்பந்தத் தொழிலாளரின் உடைக்குப் பொருத்தமானதாகவே என் உடையும் இருக்க வேண்டும் என்பதற்காக என் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தேன்…ஆனால், பம்பாயிலிருந்து தொடர்வண்டியில் மூன்றாம் வகுப்பில் நான் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் அங்க வஸ்திரமும் மேல் சட்டையும் தேவையற்றவையாக கருதி அவற்றை அணிவதை கைவிட்டுவிட்டேன். எட்டு அல்லது பத்து அணா விலையில் ஒரு காஷ்மீரி தொப்பி வாங்கிக் கொண்டேன். இத்தகைய உடை அணிந்திருப்பவரை இந்தியாவில் ஏழை என்றே கருதுவார்கள்’என்று பதிவு செய்துள்ளார். காந்தியின் உடை மாற்ற பரிசோதனைகள்  யாவும் கை நூற்பு மற்றும் கைநெசவு இவற்றை அடிப்படையாகக் கொண்டே இருந்தது. 1915ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமம் அமைக்கப்பட்டதும் கை நூற்பு மற்றும் நெசவில் அவர் தனிக் கவனம் செலுத்தினார். 

1916அம் ஆண்டு காந்தி கலந்துகொண்ட லட்சுமணபுரி காங்கிரஸ் அமர்வில் பங்கேற்ற ஆடம்பரமாக உடை அணிந்த இரு நிலக்கிழார்கள் அவரை ஒரு கிராமத்து குடியானவனாகவே எண்ணிய நிகழ்வும் உண்டு. காங்கிரஸ் போன்ற ஒரு பொதுஜன இயக்கத்தில் தலைவர்கள் மக்களோடு இரண்டற கலந்து அவர்களது ஆதரவைப் பெற வேண்டுமேயானால், அவர்களைப் போன்றே உடை உடுத்த வேண்டியதன் தேவையை காந்தி நன்கு உணர்ந்திருந்தார். தொண்டர்களின் முழுமையான பங்கேற்புடனே  ஒரு இயக்கம் பொதுமக்கள் இயக்கமாக முடியும் என்பதை தமது அனுபவம் மூலம் நன்கு அறிந்திருந்தார்.  எனவே, தனது உடை மாற்றம் மூலம் ஒரு மாறுபட்ட செய்தியை காங்கிரசுக்கு மட்டுமன்றி நாட்டுமக்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது போலும். எனவே, காந்தி தனது தோற்றத்தால், பேச்சால், நடத்தையால் தலைவர்-தொண்டர்  இடைவெளியை   வெற்றிகரமாக நிரப்பிட தக்கத் தருணம் நோக்கி இருந்தார்.

சம்பாரண் விவசாயிகளின் உரிமைக்காக குரல் கொடுக்க செல்லும் வழியில் அவர் பாட்னா சென்ற போது,  ‘காந்தியின் உடை மற்றும் அவரது பொதுவான தோற்றம் ஒரு கிராமத்து மனிதராகவே அவரைக் காட்டியது. பொது நிகழ்வுகளில் அவர் வேட்டி, முழங்கால் வரையிலான மேல் ஆடை, கத்தியவார் தலைப்பாகையே அணிந்திருந்தார். பொதுவாக, வேட்டி, குர்தா மற்றும் குல்லா அணிவார்’ என்று இராஜேந்திர பிரசாத் கூறுகிறார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது  இந்திய தேசிய ஆடையாக கதர் மலர வேண்டும் என்பது காந்தியின்  தலையாய விருப்பமாக இருந்தது. அனைத்து இந்தியர்களும் கதர் அணியும்போது அது ஏழை பணக்காரன் இடைவெளியை குறைக்கும் என்று எண்ணினார். கிராம கைத்தொழில்களை உயிர்பிப்பதன் மூலம் கிராமங்களில் வாழும் மக்களை, அவர்களின் ஆன்மப் பசியிலிருந்தும் வயிற்றுப் பசியினின்றும்  காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். கிராமங்களுக்குப் புத்துயிர் அளிக்கவல்ல,  கதரை அணியவும் அதனை ஆதரித்து பரப்புரை செய்யவும்  விடுதலை இயக்கத்தின் ஊடாக மற்றொரு மக்கள்  இயக்கத்தை அண்ணல் நடத்தினார். இந்திய தட்ப வெப்ப நிலை, மக்களின் வறுமை, வேலையில்லா பிரச்சனை, மரபார்ந்த  பண்பாடு, விதேசி கொள்கையினை எதிர்கொள்ளதத்தக்க  சுதேசிய அணுகுமுறை, மூலதனம்  பற்றாக்குறை எனப் பல்வேறு இந்திய சூழல்களை மனதில் கொண்டு அகிம்சை ரீதியிலான ஒரு பொருளாதாரத் தீர்வினை கதர் மூலம் அவர் முன்னெடுத்துச் சென்றார். காந்தியின் முயற்சியால் விடுதலைப் போராட்டத்தில் ஓர் அங்கமாகவே கதர் கருதப் பெற்றது. ஏழைகளின் துன்பத்தைப் போக்கவல்ல அருமருந்தாகவும் குடியானவர்களுக்கு ஊன்றுகோல் போன்று உதவுகின்ற ஓர் உபதொழிலாகவும்  அவர் அதனைக் கருதினார்.

சுதேசி இயக்கம் மலர்ச்சியுற்ற வேளையில் அந்நிய ஆலைத் துணிகளைத் தவிர்த்து கதர் ஆடைகளை அணிய நாட்டு மக்களைத் தூண்டியதுடன், தனது உடையையும் சுத்தமான கதராடையாக மாற்றிக்கொண்டார். கதர் இயக்கத்தை  அப்பொழுது சுதேசி இயக்கம் என்றே மக்கள் சொல்லி வந்தனர். கதர் பயன்பாட்டை காந்தியும் காங்கிரசும் வேகமாக முன்னெடுத்து சென்றபோது, விலை அதிகமுள்ள கதராடைக்காக அந்நிய துணிகள் அணிவதை கைவிட முடியாது  என்ற எதிர்மறை எண்ணமும்  ஒருபுறம் இருந்தது. அதற்கு  பதிலளிக்கும் விதமாக, 1919 ஏப்ரல் 8அம் நாள் சுதேசி உறுதிமொழி கூறுகையில் காந்தி, அரையாடை பற்றி முதன் முதலாக கூறினார். “அரையாடை அணிவதுடன், நாம் மனம் நிறைவுபெறும் சூழ்நிலை ஏற்படும்போது கூட  சுதேசி ஆடையையே முழுமையாக நாம்  அணிந்திட வேண்டும்” என்று அண்ணல் வலியுறுத்தினார். 

அஸ்ஸாம் குல்னா பஞ்சத்தின் போது உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வறுமையில் மக்கள் இறந்துபடும் அவலம் ஏற்பட்டது. அத்தகைய ஒரு சூழலில், அந்நியத் துணிகளைப் புறக்கணிக்குமாறும்  எரித்து சாம்பலாக்குமாறும் காந்தி மக்களை வற்புறுத்தியதற்காக  விமர்சனத்திற்கு உள்ளானார். தன் மீதான விமர்சனத்திற்காக அரையாடை அணிந்து, தனது சட்டை மற்றும் வேட்டியினை பஞ்ச நிவாரணப் பணியாளர்களுக்கு அனுப்பி வைத்து விடலாமா என்றுகூட அவர் சிந்தித்தார். இரண்டாவதாக, ஆந்திரா வால்டையரில் அவரது கண் முன்னால்  மௌலானா முகமது அலி  கைது செய்யப்பட்ட போது அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசுவதற்குச் செல்லும்போது சட்டை மற்றும்  தொப்பி அணிவதை  கைவிட எண்ணினார். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தான் நினைத்ததை அவரால் செய்து முடிக்க இயலவில்லை. ஏனெனில், முதல் நிகழ்வில் தற்பெருமைக்காகவும்  இரண்டாவது நிகழ்வில் பரபரப்புக்காகவும்  ஆடை துறவு மேற்கொள்ளப் பெற்றது  என்ற எண்ணம் மக்களிடம் எழக்கூடும் என்பதால் அவர் அவற்றிற்கு செயல்வடிவம் தர முன்வரவில்லை. ஆடை மாற்றத்திற்குத்  தக்கத் தருணம் நோக்கி காத்திருந்தார். அவர் கொணர்ந்த மாற்றங்கள் எவையும் அவசரக் கோலத்தில் கொண்டுவரப்பட்டவையல்ல. ஆடை அணிவதில் தான் மேற்கொண்ட மாற்றங்கள் யாவையும் ஆழ்ந்த சிந்தித்து  ஆராய்ந்து அதன்பின்னரே கொண்டுவரப்பட்டவையாகும் என்று அண்ணல் கூறுவது குறிப்பிடத்தக்கது. 

ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், கதர் மற்றும் சுதேசி இயக்கம் மக்களிடம் வலுப்பெறவும், அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கவும்  அவர் இந்தியா முழுவதும்  சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சுதேசி இயக்கத்தில் தமிழ்நாடு  மிகவும் பிற்போக்கான நிலையிலேயே இருந்தது. கதராடை அணிவது கட்டாயமாக்கப் படாத நிலையிலும் பெரும்பாலான  காங்கிரஸ் தொண்டர்கள் கதர் அணிந்திருந்தது அண்ணலுக்கு ஓரளவு திருப்தி அளிப்பதாக இருந்தது. எனினும், பெண்கள் கதராடை அணியாமல் இருந்தது அண்ணலை வருத்தமுறச் செய்தது. மக்களை இராட்டையில் நம்பிக்கை கொள்ளுமாறு செய்வதே அவருக்கு ஒரு சவாலாக இருந்தது. ஆனால், அதுவே, தனது உண்மையான பணி என்பதை அண்ணல் உணர்ந்தார். இத்தகைய ஒரு சூழலில்தான்  அண்ணலின்  மதுரை வருகை அமைந்திருந்தது. அவரது வருகை ஒத்துழையாமை இயக்கத்துடன் சுதேசி மற்றும் கதர் பரப்புரையின் ஒரு பகுதியாக  அமைந்திருந்தது. 1921 செப்டம்பர் 21 அன்று பிற்பகல் அவர் மதுரை வந்தடைந்தார். அன்று இரவு மதுரை மேலமாசி வீதியில் தனது ஆதரவாளரும் குஜராத் தொழிலதிபருமான  ராம் கல்யாண்  என்பவருக்கு சொந்தமான  251 A எண்ணிட்ட முகவரி இல்லத்தில் மாடி அறையில் தங்கினார்.  அன்று தனது பாரம்பரிய குஜராத்தி உடையைத் துறந்து, ஏழை இந்திய விவசாயியின்  ஆடையை அணிய அவர் தீர்மானித்தார். இந்த ஆடை மாற்ற முடிவிற்கு  காந்தி திடீரென்று வந்துவிடவில்லை. இது குறித்துப் பல நாட்களாக சிந்தித்தார். ஏற்கனவே இருமுறை எளிய விவசாயியின் உடையை அணிவது பற்றிய முடிவை நெருங்கிய காந்தி, மதுரை தான் அத்தகைய முடிவை எடுப்பதற்குத் தேவையான மன உறுதியைத் தந்ததாக குறிப்பிட்டுள்ளார். ”எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து பின்னர் நான் ஒருபோதும் நான் வருந்தியது கிடையாது. நான் அவற்றைச் செய்தே ஆக வேண்டியிருந்தது. அத்தகையப் பெரும் மாற்றம் ஒன்றினை எனது உடையில்  நான் மதுரையில் செய்தேன்”  என்று  அண்ணல்  பதிவு செய்துள்ளார். 

ஆடைமாற்றம் செய்தபோது அண்ணல் தங்கிய மேல மாசி வீதியில் உள்ள வீடு

செப்டம்பர் 22ஆம் நாள் காலையில் மதுரையில்  காந்தியடிகள் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவமிக்க  மேலாடை துறவு  நிகழ்ந்தது. ஆடை மூலம் எளிமையை – இந்தியாவின் அடையாளத்தை- தொழிலோடு இயைந்த இந்திய விவசாயிகளின் பாரம்பரிய உடையினை அவர்களின் தூதுவர் போன்று காந்தி விரும்பி ஏற்றுக் கொண்டார்.  சுதேசி இயக்கத்தில் அந்நியத் துணிகளை  புறக்கணிப்பதுடன்  சுதேசி கதரை மக்கள் ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த மாற்றத்தினை மேற்கொண்டார். சபர்மதி ஆசிரமவாசியான கிருஷ்ணதாஸ்  எழுதுகையில், ‘(மதுரைக்குச் செல்லும் வழியில்)திண்டுக்கல்லில் தொடர்வண்டியில் வைத்து காந்தி அவசரம் அவசரமாக ஒரு அறிக்கையினைத்  தயார் செய்தார். பின்னர் என்னை நகல் எடுத்து பொதுமக்களுக்கான கொள்கை விளக்க அறிவிப்பாக அவற்றை பல்வேறு இடங்களுக்கு அனுப்புமாறு கூறினார். அதில் துக்கத்தின் அடையாளமாக ஒரு மாத காலத்திற்கு வேட்டி, மேல்சட்டை, தொப்பி ஆகியவற்றை அணிவதை விட்டுவிட்டு அரையாடையை மட்டும் தான் அணியப் போவதாகவும், தேவைப்படும் போது மட்டும்  தனது மேலுடம்பை மறைப்பதற்கு மேலாடையைப் பயன்படுத்தப் போவதாகவும் அறிவிப்பு இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையாயின், தொடர்வண்டி பயணத்திலேயே தனது ஆடை மாற்ற முடிவினை  அண்ணல் நெருங்கி விட்டார் என்றே கருதலாம்.

காந்தி இது பற்றி  கூறியதாவது, “சென்னையிலிருந்து மதுரைக்கு மேற்கொண்ட ரயில் பயணத்தின்போது எங்களது பெட்டியில் இருந்த மக்கள் நாட்டின் நிலை குறித்து எவ்வித கவலையுமின்றி இருப்பதாக எனக்குத்  தோன்றியது. விதி விலக்கின்றி அனைவரும் அந்நிய ஆடைகளை அணிந்திருந்தனர். நான் பயணி ஒருவருடன் பேச்சுக்  கொடுத்து கதருக்காக வாதாடினேன்… அவர்களோ ‘நாங்கள் மிகவும் வறியவர்கள், எங்களால் கதரை  வாங்க இயலாது; அதன் விலை அதிகமாக உள்ளது’   என்று சொன்னார்கள். அவர்களது கூற்றில் பொதிந்திருந்த உண்மை எனக்குப் புரிந்தது. நான் முழுச் சட்டையும் தொப்பியும் முழு வேட்டியும் அணிந்திருந்தேன். அவர்கள் சொன்னதில் பாதி உண்மைதான்; நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணிகூட இல்லாமல், வெறும் கோவணத் துணியுடன் தமது வெற்றுடம்பு வாயிலாக இந்த  உண்மையை நாழும்  பறை சாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்ன பதிலுரைக்க முடியும்? ‘நாகரீகமான அளவிற்கு, எந்த அளவில் நான் எனது ஆடையைக் குறைக்க இயலுமோ அது தான் இந்த அரைகுறை ஆடையணிந்த மக்களுடன் என்னை சமன்படுத்திட உதவ முடியும். இதனை நான் மதுரையில் செய்து முடித்தேன்”. மேலாடை துறவு  மேற்கொள்ள  அவர் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்ததற்கு அங்குள்ள மக்களின்  எளிமை அவரைக் கவர்ந்தனால்கூட இருக்கலாம். 1919 மார்ச் 29 அன்று நாகப்பட்டினத்தில் காந்தி ஆற்றிய உரையில், ‘…உங்களைப் பார்க்கும்போது நம்முடைய மாபெரும் முனிவர்களே எனக்கு நினைவுக்கு வருகின்றனர். இதைக் காட்டிலும் எளிய வாழக்கையை நம் முன்னோர்கள்கூட வாழ்ந்திருக்க முடியாது’ என்று கூறியுள்ளார். தான் நேரில்  கண்ட அத்தகைய எளிமைக்குள் தன்னையும் ஐக்கியப்படுத்திக்கொள்வதான நிலையை மதுரையில் அண்ணல் அரங்கேற்றம் செய்தார் என்றே சொல்லலாம். 

செப்டம்பார் 21ஆம் நாள் இரவு மேலாடை துறவுக்கான முன்னேற்பாடுகள் நடைபெறலாயின. அன்று  இரவு 10 மணிக்கு முடி திருத்துபவர் ஒருவரை  வரச் சொல்லி தனது தலையை மொட்டை அடித்துக்கொண்டார். அன்றிரவு முழுவதும் மறுநாள் தான் செய்யவிருக்கும் மாற்றம் குறித்து ஆழ்ந்த சிந்தனையுடன் இருந்தார். கிருஷ்ணதாஸ் இது பற்றிக் கூறுகையில், “அன்று எங்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் கவலை குடிகொண்டிருந்தது. அடுத்து என்ன நடைபெறப் போகிறதோ என்று ஒவ்வொருவருடைய முகத்திலும் ஆவலின் நிழல் படர்ந்திருந்தது. கனத்த இதயத்துடன் நாங்கள் அனைவரும்  பின்னிரவு வரை அவரைச் சுற்றி அமர்ந்திருந்தோம். ஓரிரு

வார்த்தைகள் பேசி அவரது எண்ணத்தை திசை திருப்ப முயற்சித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.  எந்த முயற்சியும் அண்ணலின் முடிவை மாற்றவில்லை. சுயராஜ்யம் அடைவதற்கு மேலாடை துறவு  ஒன்றே தீர்வு என்பதில்  அண்ணல் உறுதியாக இருந்தார். செப்டம்பர் 22 அதிகாலையில் வழக்கம் போல் எழுந்த காந்தி, அருகில் நின்றிருந்த  விருதுநகரைச் சேர்ந்த  பழனிகுமார் பிள்ளை என்ற காங்கிரஸ் தொண்டரை வேட்டியைப் பிடிக்கச் சொல்லி மடித்துக் கட்டிக் கொண்டார். சட்டையையும் குல்லாவையும் அகற்றிவிட்டார். தன் சட்டைப் பையில் வழக்கமாக கொண்டு செல்பவைகளை வைத்துக் கொள்வதற்காக ஒரு சிறு கதர் பையை வைத்துக் கொண்டார். அண்ணல் அரையாடைக்குள் தன்னை வைத்தார். அரையாடை இந்தியாவின் ஏழ்மையை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக இருந்தது.

செட்டி நாடு கூட்டத்தில் பங்கேற்க அவரை அழைத்து செல்வதற்காக  காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் காந்தியை எளிய ஆடையில்- இந்திய ஏழை விவசாயியின் உடையில் – மேலாடை துறவு  கோலத்தில் பார்த்தனர். அன்றைய நாளில்தான், முதன்முதலாக, சட்டையில்லாமல் அரை ஆடை புனைந்து வெளியில் பொது நிகழ்வுகளில்

பங்கேற்க அண்ணல்  சென்றார். மேலாடை துறவு  கோலத்தில், புதிய அவதாரத்தில் காட்சி தந்த அண்ணல் மேற்கொண்ட இந்நடவடிக்கை வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வாயிற்று. அவரது மேலாடை துறவு பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியம் எப்படி இந்தியாவை ஏழை நாடாக மாற்றியுள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்தது. அண்ணலின் ஆடைமாற்றத்தைத் தொடர்ந்து, அன்னிய ஆடைகளை விலக்கி, இடையில் சிறு வேட்டியும் தோளில் துண்டும் அணிவது சத்தியாக்கிரகிகளின் ஓர் அடையாளச் சின்னமாகவே மாறியது. அவருடைய இந்தப் புதிய தோற்றம் அவரை ஏழை இந்தியனுக்கு  மேலும் நெருக்கமானவராக்கியது. பின்னர், அரையாடை  அவரது அடையாளமாகவே மாறிவிட்டது என்றே கூறலாம். அ.இராமசாமி இதுபற்றி எழுதுகையில், “இவ்வளவு பெரிய வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவை காந்தி மதுரை வந்து மேற்கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரே கூட, முன்கூட்டி இந்த நாளில் இந்த இடத்தில் இந்த மாற்றத்தை மேற்கொள்வது என்று திட்டமிட்டு செய்யவில்லை. அவர் உள்ளத்தில் எழுந்த ஓர் எண்ணம் படிப்படியாக வளர்ந்து மதுரையில் முழுமை அடைந்தது” என்று குறிப்பிடுகிறார். ஆம்! தனது மூன்றாவது முயற்சியில், அதுவும் மதுரையில் அண்ணல் மேலாடை    துறவினில்  வெற்றி கண்டார். அண்ணலின்மேலாடை    துறவினை  நினைவு கூர்ந்திடும் விதமாக அவர் தங்கிய  இல்லத்தின் தரை தளத்தில்  கதர் விற்பனையகம் ஒன்று இயங்கி வருகிறது. 

அண்ணலின் இந்தப் புரட்சிகரமான செயலை அக்காலத்திய செய்தித் தாட்கள் முக்கியத்துவம் அளித்து ஒரு செய்தியாக வெளியிடவில்லை. அண்ணலின் ஆடை துறவு உடனடியாக பத்திரிகைகளாலோ மக்களாலோ பெரிதும் பேசப்படவில்லை என்பதாகத் தான் கருத வேண்டியுள்ளது. செய்தித் தாட்களில் தலையங்கங்கள் எதுவும் எழுதப்படவுமில்லை. அண்ணல் இதுகுறித்து கொடுத்திருந்த அறிக்கையை மட்டும் இந்து மற்றும் சுதேசமித்திரன் இரண்டும் வெளியிட்டிருந்தன. 

அரையாடை அணிந்த அன்று, செட்டி நாடு செல்லும் வழியில் மதுரை நகர மக்களின் அன்பான வரவேற்பைப் பெறுவதற்காக காந்தி ஆங்காங்கே நின்று செல்ல வேண்டியதாயிற்று. அவ்வாறு மக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டு, மதுரையில்  தற்போதைய காமராஜர் சாலையில், அலங்கார் திரையரங்கம் எதிரில் சூ.ஆ.ராயலு மகப்பேறு மருத்துவமனை அருகில் சிற்றுரை நிகழ்த்த வேண்டி முதல் முதலாக மேலாடை துறந்த  கோலத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றினார். முதல் நாள் தலைப்பாகை அங்கவஸ்திரத்துடன் குஜராத்தி பாரம்பரிய உடையில் மதுரையில் காந்தியைப் பார்த்தவர்கள் மறுநாள் சட்டையின்றி இடுப்பு வேட்டியுடன் பார்த்தபோது வியப்படைந்தனர். தன்னார்வ  வறுமையினைக் ஏற்றுக்கொள்ளும் விதமாக  இந்திய  ஏழை மக்களோடு தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக்கொண்டு, அரை முழ ஆடையுடன் அண்ணல் அங்கு புதிய வரலாறு படைத்தார். அங்கு அவர்  உரையாற்றிய பொட்டல் பின்னர் அவர் நினைவாக காந்தி பொட்டல் என்ற பெயரால் வழங்கலாயிற்று. அண்ணலின்  நினைவைப் போற்றும் விதமாக அந்த இடத்தில் 1984ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் சிறிய அளவிலான  அவரது உருவச்சிலை ஒன்று காங்கிரஸ் தொடர்களால்  அமைக்கப்பட்டது.  

மதுரை வருகைக்கு முன்னதாக 1921 செப்டம்பர் மாதம் சென்னை கடற்கரை கூட்டத்தில், ‘நமது இடையில் இருக்கும் அரையாடையுடன் மனநிறைவு கொள்ளுங்கள். நமது தட்பவெட்பச் சூழலின் வெப்பம் அதிகமான  மாதங்களில் நமது உடலைப் பாதுகாக்க வேறெதுவும் நமக்குத் தேவையில்லை. உடை குறித்து போலி நாகரிகம் எதுவும் வேண்டாம். நமது பண்பாட்டில் ஆண்கள் தமது முழு உடலையும் மறைக்க வேண்டும் என்று இந்தியாவில் எப்போதும் வற்புறுத்தப்பட்டதில்லை. இந்த ஆலோசனையை நான் எனது முழுப்பொறுப்புணர்வுடன் கூறுகிறேன். எனக்குள்ள முழுப் பொறுப்பையும் நன்றாக உணர்ந்தே நான் இந்த யோசனையைக் கூறுகிறேன். எனவே, இதற்கு முன்னுதாரணமாக நடக்க வேண்டும் என்பதற்காக, அக்டோபர் 31 வரையிலாவது எனது தொப்பி மற்றும்  மேல்சட்டை அணிவதை விட்டுவிட்டு, இடுப்பு வேட்டி ஒன்றே போதும் என்று இருப்பது எனவும் உடம்பைப்  போர்த்திக்கொள்ள  தேவைப்படும்போது, மேலாடை மட்டும் அணிந்து கொள்வது எனவும்  எண்ணியுள்ளேன். என்னளவில்  நான் பின்பற்றத் தயாராக இல்லாத ஒன்றை நான் பிறருக்கு அறிவுறுத்த எப்போதும் தயங்கியுள்ளேன்… மேலும், இந்த ஆடை மாற்றம்  துக்கத்தின் வெளிப்பாடாக  என்னைப் பொறுத்தமட்டில் அவசியம் என்றும் கருதுகிறேன். தேசத்தின் எங்கள் பகுதியில், வெறும் தலையுடனும் வெற்றுடம்புடனும் இருப்பது துக்கத்தின் அடையாளங்களாகும்.  இந்த ஆண்டு  முடியப்போகும்  இந்த வேளையிலும் நாம் சுயராஜ்யம் பெறவில்லை என்பது  நாம் துக்கத்தில் இருக்கிறோம் என்பதை மேலும் மேலும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆதலால், நான் மிகத் தெளிவாக கூற விரும்புவது என்னவென்றால்,  உடன் பணியாற்றுபவர்கள்  தத்தம்  பணிகள் நிமித்தம் தேவைக்கேற்ப தமது மேலங்கி, தொப்பியை அகற்றலாமே தவிர முற்றிலும் துறக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதுதான்’. உண்மையில், காந்தியடிகள் தாம் பின்பற்றியதை மட்டுமே  பிறருக்கு உபதேசித்தார்.  எனவே தான் அவரது வாழ்வே ஒரு திறந்த புத்தகமாக, அனைவருக்கும் ஒரு செய்தியாகத் திகழ்கிறது. செப்டம்பர் 23ஆம் நாள் தனது செயலர் மகாதேவ் தேசாய்க்கு எழுதிய கடிதத்தில், ‘நான் என் உடையில் செய்துள்ள மாபெரும் மாற்றத்தை தாங்கள் கவனித்திருப்பீர்கள். இனியும் என்னால் வலியினைப் பொறுத்துக் கொள்ள இயலாது’ என்று குறிப்பிட்டிருந்தார். அவருள்ளே இருந்த நீண்ட நாளைய வலி மேலாடை துறவின் மூலம்  அகற்றப்பட்டது.

தனது ஆடை மாற்றத்தின் நோக்கத்தை நவஜீவன் இதழில் ”எனது  சகப் பணியாளர்களோ அல்லது வாசகர்களோ இந்த ஆடை மாற்றத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. ஆனால், அந்நியத்  துணிப் புறக்கணிப்பிற்கான பொருளை  அவர்கள் முழுமையாக உணர வேண்டும் என்றும், இந்தப் புறக்கணிப்பு மூலம், கதர் உற்பத்திக்காக தமது முழு உணர்வையும் முன்னிறுத்த வேண்டும் என்றும் சுதேசி தான் நமக்கு எல்லாமும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று எழுதினார்.

மேலாடை துறவுக்கு  எதிர்ப்பு மற்றும் அதிருப்தி ஒரு பக்கம் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டமையால் அண்ணலை  ஒரு சமயத் துறவியாகப் பார்த்தவர்களுக்கு இவ்வாடைக் குறைப்பு பார்த்த மாத்திரத்திலேயே அவரை ஒரு துறவியாகவே எளிதில் அடையாளப்படுத்திக்கொள்ள ஏதுவாயிற்று. காந்தியைப் பார்க்கவும் போற்றவும் அவரது அரையாடை துறவி உருவமே மக்களுக்கு உடன்பாடாயிற்று. காந்தியின் எளிய ஆடை தோற்றமே அவருக்கு எதிரான அரசின் தீவிர பிரச்சாரத்தை எதிர்த்து நின்றது. பல்லாயிரம் சொற்களில் சொல்ல வேண்டியதைத் தன் உடையில் மேற்கொண்ட எளிமை  மூலம்  நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் காந்தி உறுதிபட சொன்னார். ஐரோப்பியர்களிடம் சொல்லால் எழுத்தால் பேசியதைக் காட்டிலும் அவரதுப் புதியத் தோற்றம் அதிகமாகவும் அழுத்தமாகவும் பேசாமல்  பேசியது எனலாம். காந்தியின் அதிரடி ஆடை மாற்றம் உலகையே  திரும்பி பார்க்கச் செய்தது. மதுரையில் தான் அன்று மேற்கொண்ட முடிவினில், தனது வாழ்வின் இறுதி மூச்சு வரை அவர் எந்த மாற்றமும் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்து காந்தி பின்னர் எந்தச் சூழ்நிலையிலும் வருந்தியதும் கிடையாது. அரை பட்டினியும் அரை நிர்வாணமுமாக வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான தரித்திர நாராயணர்களின் பிரதிநிதியாக அண்ணல் இம்மண்ணில் வலம் வந்தார். ஆற்றலற்ற நாட்டில் ஆர்த்தெழுந்த வலிமையின் சின்னமாக- அடிமைகள் வாழும் நாட்டிலே சுதந்திர மனிதனாக அரையாடையுடனான  இந்தியனாக அண்ணல் நடமாடினார்.

தன் ஆடை வழியாக காங்கிரஸ் இனிமேல் படித்த உயர் வர்க்கத்தின் கட்சி அல்ல; அது பாமரர்களின் கட்சி என்று அவர் இந்தியாவின் ஏழை மக்களிடம் சொன்னார். அந்த அரையாடையுடன் அவர்  அரசியல் மாநாடுகளில் பங்கெடுத்தார். தேசிய போராட்டங்களை வழி நடத்தினார். அரசப் பிரதிநிதியைச் சந்திக்கச் சென்றார். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலாடை துறந்த  ஒருவருக்கு அதெல்லாம் சாத்தியம் என்பதே இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் சிந்தித்துபார்க்கக்கூட முடியாத ஒரு நிகழ்வாகும். அரையாடை மூலம் சுதேசியை மட்டுமன்றி கதரின் மகிமையையும் மக்கள் மன்றத்தில் ஆழமாக அவர் வேரூன்றச் செய்தார்.

ஆடை மாற்றம் குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு தக்கப் பதில் அளித்த அண்ணல், ‘இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உடுக்க  இந்த அரையாடை கூட இல்லாமல் இருக்கின்றனர் என்பதை  புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வெறும் கோமணத்துடன் தான்  நடமாடுகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் ஒரு ஜதை காலணிகளைக் கூட  பார்க்காதவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு அவை தேவையானது என்பதைக்கூட அவர்கள் உணராதவர்களாக உள்ளனர். இந்த ஏழை மக்கள் எப்படி கழுத்துப் பட்டையுடன் கூடிய நீளமான சட்டையை வாங்க முடியும்? அவர்களுக்கு தொப்பி யார் கொடுப்பார்கள்? ஏராளமான நகைகளை நாம் அணியும்போது, ஏழைகளுக்குத் தேவையான ஆதார ஆடையைக் கூட நாம்  வழங்கவில்லை. ஆனால், முதலில் அவர்களை  ஆடை அணியச் செய்தபின் நாம் அணிவதும் அவர்களுக்கு உணவளித்தபின் நாம் உண்பதும் தான் நமது  கடமையாகும். விமர்சிப்பவர்கள் ஆடையை மட்டுமே பார்க்கின்றனர். நான் அவர்களைப் பணிவோடு ஒன்று கேட்கிறேன்.   வறுமையில் வாடும் இந்நாட்டு மக்கள் உண்பதற்குக்கூட போதிய உணவு இல்லாதபோது ஆடை சீர்திருத்தத்தைப் பற்றி நாம் எப்படிப் பேசுவது?’ என்று வினவினார்.

 ஆடை மாற்றம் செய்த அதே நாள் திருப்பத்தூரில் தனக்கு வரவேற்பு அளித்த மக்களிடம் உரையாற்றுகையில், இந்தியாவில் உள்ள ஏழை பணக்காரர் எல்லோருக்கும் உடுத்தப் போதுமான துணி கிடைக்கும்வரை தான்  முழத்துண்டே உடுத்தப் போவதாகச் சொன்னார். செப்டம்பர் 23 அன்று நெல்லை கைலாசபுரத்தில் எஸ்.கே. ஷேக் முகைதீன் என்பவர் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மேடையில் சட்டையின்றி காந்தி அமர்ந்திருந்த காட்சியை ‘தமிழ்நாட்டில் வாழும்  தமிழரைப் போன்று மேலுடம்பில்  ஒரு துண்டுடன் புன்னகையுடன் மேடையில் அமர்ந்திருந்தார்’ என்று சுதேசமித்திரன் எழுதியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் பின்னாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், கிராமங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணங்கள் செய்வதற்கு இந்த ஆடை மாற்றம் மேலும் மேலும் அவசியமானதாகத் தமக்குத் தோன்றுவதாக குறிப்பிட்டார். 1927ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் இந்திய உறுப்பினர் சபுர்ஜி சகலத்வாலா காந்தியிடம், ‘கடவுளுக்காகாவது இரண்டு காற்சட்டைகளை அணிந்துகொள்ளுங்கள்’ என்று நகைசுவையாக கூறிய நிகழ்வுண்டு. 

காந்தி மேலாடையைத் துறந்ததும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எண்ணற்ற  காந்தியத் தொண்டர்கள் மேலாடையைத் துறந்தனர். தன்னார்வ ஆடை துறப்பினை ஏற்றுக்கொண்டு சேவையை நாடிச் சென்றனர். அண்ணல் காட்டிய வழியில்  உடையில் எளிமை கொண்டு பொதுச் சேவையில் தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டனர். தான் மட்டுமன்றி அண்ணல்   ஒரு தலைமுறையையே எளிமையில் இனிமை காணச் செய்தார். பிற தலைவர்களால் செய்ய முடியாததை அண்ணல் தான் மேற்கொண்ட எளிமை மூலம் சாத்தியமாக்கினார்.

இந்திய அரசப் பிரதிநிதி இர்வின் காந்தியின் ஆடை பற்றி பயோனியர்(Pioneer) இதழில் விமர்சனம் செய்தபோது “உண்மையில் நான் அணிந்திருப்பது இந்தியாவின் தேசிய ஆடையாகும். இது இயற்கையோடு ஒன்றியது. இந்தியனாக இருப்பதற்கு மிகவும் தேவையானது. ஐரோப்பிய முறையிலான ஆடையை நாங்கள் பின்பற்றுவதை  இழிவு, அவமானம், பலவீனம் போன்றவற்றின் அடையாளமாகக் கருதுகின்றோம். இந்திய தட்ப வெப்ப நிலைக்கு மிகவும் பொருத்தமான, எளிமையான, கலைநயமிக்க, மலிவான, பூமிக்கு பாதகம் விளைவிக்காத, சுகாதாரமான,  அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற ஆடையை கைவிட்டதன் மூலம்  ஒரு தேசிய பாவத்தை நாங்கள் செய்தவர்களாகி விட்டோம்” என்று கூறினார்.1931ஆம் ஆண்டு அரசப் பிரதிநிதி இர்வின் பிரபுவைச் சந்திக்கச் சென்ற போது அரையாடையே உடுத்திக்கொண்டார். ‘காந்தி அவரின் அரை நிர்வாணக் கோலத்தில் இர்வினைக் காணச் சென்றது சகிக்காமல் வின்ஸ்டன் சர்ச்சில், “கிழக்கில் வெகு பரிச்சயமான அரை நிர்வாண பக்கிரியைப் போல் உடை தரித்து அரசப் பிரதிநிதியின்  மாளிகையின் படியேறி, நம் பேரரசரின்  பிரதிநிதியோடு சரிநிகர்  சமமாகப் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்’ என்று கோபத்துடன் முழங்கினார். மான்செஸ்டர் கார்டியன் எழுதியது: அரசப்  பிரதிநிதியைச் சந்திக்கச் செல்லும் ஆங்கிலேயர் ஒரு குறிப்பிட்ட விதத்திலான உடையணிந்து செல்ல வேண்டும் என்பது மரபாக இருக்கையில், காந்தியோ காந்தியாகத் தான் சென்று சந்தித்தார். இந்திய தேசியத்திற்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்பட்டது. அரை நிர்வாண மகாத்மா இதன் மூலம் பாதி வெற்றியை அடைந்துவிட்டார். 

வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்க சென்ற போது, லண்டனில் காந்தி தங்கியிருந்த நாட்களில் அவரது  அரையாடை கோலம் மேலை  நாளிதழ்களில் முக்கிய செய்தியாக இடம் பிடித்தது. அவரை அக்கோலத்தில் புகைப்படங்கள்  எடுப்பதுவும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரைப் பார்ப்பதுவும் அன்றாட நிகழ்வுகளாயின. காலை நேரத்தில் அண்ணல்  நடை பயிற்சி செல்கின்றபோது அங்குள்ள சிறுவர்கள், ‘காந்தி, தங்கள் காற்சட்டை எங்கே?’ என்றுகூட  கேலி செய்தனர். அரசியார்  மேரி மற்றும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் தேநீர் அருந்துவதற்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மாநாட்டு பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். காந்தியை  தேநீர் விருந்துக்கு அழைத்த பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜ், காந்தியால் ஒரு தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாக வேண்டியிருந்தது. ஏனெனில் காந்தியின் உடையானது,  வழக்கத்தில் இருந்த அரசவை மரபிற்கு ஏற்றதாக இல்லை. ஆனால் காந்தியோ, தாம் அரசரைப் பார்க்கச் சென்றாலும் மாற்று உடையில் செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக முன்பாகவே அறிவித்துவிட்டார். பிரிட்டனால் தான், இந்திய ஏழை எளியோர் இன்னமும் வெற்றுடம்புடன் இருக்க நேரிட்டுள்ளது என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. தனது வழக்கமான  அரையாடையுடன்  வீட்டில் செய்யப்பட காலணிகளுடன் எளிய கோலத்தில்- அரண்மனைக்கு வருபவர்களின் வழக்கமில்லா கோலத்தில் – இந்தியாவின் ஏழ்மையை எடுத்துச் சொல்லும் விதமாக வலிந்தேற்ற எளிமையை சுமந்து அண்ணல் சென்றார். தேநீர் விருந்து முடிந்து, அரண்மனையில் இருந்து வெளியே வந்த  அண்ணலிடம்  ஒரு பத்திரிகையாளர், ‘அரசரைச் சந்திக்கச் சென்றபோது போதுமான உடை அணிந்திருந்தீர்களா என்று கேட்டதற்கு, ”எங்கள் இருவருக்கும் சேர்ந்து போதுமான ஆடைகளை அரசரே அணிந்திருந்தார்” என்று நகைச்சுவையுடன் அவர்  கூறிய  பதில் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. பக்கிங்ஹாம் அரண்மனை இதற்குமுன் இந்த மாதிரியான ஒரு விருந்தினரை பார்த்ததேயில்லை. மேலும், காந்தியைத் தவிர்த்து வேறு யாருக்கும் உடை விஷயத்தில் சம்பிரதயாத்தை மீறுவதான உரிமையை வழங்கியதுமில்லை  என்பது குறிப்பிடத் தக்கது. மொத்தத்தில், காலனி ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சியின் சீருடையாகவே அண்ணலின் ஆடை அழுத்தமான செய்தியை மேலை நாடுகளுக்கு கொண்டு சென்றது. 

காலமெல்லாம் நாட்டிற்காக- நாட்டு மக்களுக்காக வாழ்ந்த அண்ணல் ஆடை துறவு மூலம் தன்னை ஒரு தரித்திர நாராயணனாக அடையாளப்படுத்திக் கொண்டதுடன் சதா காலம் அவர்களையே சிந்தித்து அவர்களுக்காகவே வாழ்ந்து முடித்தார். ஆடைத் துறவு மூலம் ஏகாதிபத்திய பிரிட்டன் எவ்வாறெல்லாம் இந்தியாவைச் சுரண்டியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.  அண்ணல் மேற்கொண்ட ஆடைத் துறவு அந்நியத் துணி புறக்கணிப்பினை செவ்வனே நடத்தவும் சுதேசி கதராடையினை இந்தியர்கள் உடுத்துவதை பரவலாக்கவும் இந்திய விவசாயிகளின் பாரம்பரிய உடையுடன் ஐக்கியமாகி காலனி ஆட்சியில் இந்தியாவின் பரிதாபகரமான வறுமை நிலையை வெளிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டதாகும். “தனது அரையாடை மூலம் பல மொழிகளைப் பேசுகின்ற – எழுத்தறிவில்லாத மக்களின் வரம்புகளையெல்லாம் தாண்டி அண்ணல் எளிதில் உறவாடினார். பண்பாட்டு எல்லைகளையும் கடந்து அவரது ஆடை மக்களிடம் பேசியது.  அண்ணல் மேற்கொண்ட மேலாடை  துறவு பின்னர்  அவரது அடையாளமாகவே மாறியது. குண்டடிபட்டு இறக்கும் தருவாயிலும் அவர் அரையாடையுடனே வாழ்க்கை பயணத்தை முடித்தார். அந்த அரையாடை மனிதர் பயணத்தை முடித்தபோது உலகமே அழுதது. உண்மையில் அந்த அரையாடைக்குள் ஒளிந்த எளிய மனிதன்   ‘உலக குடிமகனாக’ மரணத்திற்குப் பின்னரும் மக்கள் இதயங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 

  • பேரா. டாக்டர் இராம் பொன்னு
  • முன்னாள் முதல்வர்
  • சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி
  • (மதுரையில் காந்தி  நூலாசிரியர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.