ஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்

முன்னுரை

பல வருடங்களுக்குமுன் நான் பார்த்த ஒரு செய்தி, வாகனத்தைப் பழுதுபார்க்க 700 டாலர் தேவைப்பட்டால் உடனே அதைப் புரட்டமுடியுமா என்ற கேள்விக்கு 70 சதவீதத்தினர் முடியாது என்றே பதிலளித்தனர். 2019 செய்தி; 58 சதவீத அமெரிக்கர்களின் வங்கிச் சேமிப்பு 1,000த்திற்கும் குறைவாகவே உள்ளது. 32 சதவீத அமெரிக்கர்களிடம் சேமிப்பு என்பதே இல்லை. 2020 விவரம்; 40% முதிய அமெரிக்கர்கள் சமூகப் பாதுகாப்பு அளிக்கும் பணத்தை வைத்துதான் காலத்தை தள்ளுகிறார்கள்.

எனது பயணத் தொடக்கம்

1976ல் எனது முதல் வருடப் பயிற்சிக்கான ஊதியம் $11,000. ஆறாவது வருடப் பயிற்சியின்போது இது இரண்டு மடங்கானது. குடும்பம் பெருகிய அளவு ஊதியம் பெருகாவிட்டாலும் போதுமானதாக இருந்தது. ஆனால் சேமிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை. 30 வயதைத் தாண்டிவிட்டாலும்கூட நினைத்தும் பார்க்கவில்லை. பயிற்சி முடிந்தபின் மற்றொரு மருத்துவரிடம் வேலைக்கு சேர்ந்தபின் பண வரவு அதிகரித்தாலும் வேலைப்பளுக் காரணத்தினால் சேமிப்பில் கவனம் செலுத்தவில்லை. இரண்டு வருடங்களுக்குப்பிறகு என்னை வேலைக்கு எடுத்துக்கொண்டவரின் ஆலோசனைப்படி நியூயார்க்கில் ஒரு நிதி ஆலோசகரைச் சந்தித்தேன். அவர் எனது நிதி விவரங்களை பார்த்தபின் ஊர் திரும்பப் பணம் தேவையா என்று கேட்டபோது சுரீரென்று உரைத்தாலும், அக்கேள்வியில் பொதிந்துள்ள உண்மையை 35 வருடங்களுக்கு பிறகும் மறக்கவில்லை. மற்றவர்களைப் போலவே, சேமிப்பைப் பற்றிய புத்தகங்களைப் படிக்க நேரமில்லை. செய்தி மடல்களும் நீண்டகாலச் சேமிப்பிற்கான ஆலோசனைகளைச் சீராக அளிக்கவில்லை. ஆனால் நானே எழுப்பிக்கொண்ட கேள்விகளுக்குப் பதில்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இப்புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி மடல்களிலும் சிதறிக் கிடந்தன. இம்முத்துகளைக் கோர்வைப்படுத்த ஆரம்பித்தேன். நம் உபநிடதங்கள் ஒரு பெரிய சமுத்திரமாக இருந்தாலும் மஹா வாக்கியங்கள் என்பவை நான்குதான். சேமிப்பிற்கான தேவைகளும் நான்குதான் எனப் புரிந்துகொண்டேன். அவை பணம், காலம், திட்டம், கட்டுப்பாடு ஆகிய நான்குதான். இந்த நான்கையும் சீரான பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்பது புரிய சில காலமாயிற்று.

சேமிப்புப் படலம்

எனது பாதையும் குத்திய முட்களும்

முதல் மைல் கல்

பலரைப்போல் என் மனத்திலும் எழுந்த முதல் கேள்வி, “எதற்காகச் சேமிக்கவேண்டும்? அதை ஏன் பல விதமான முதலீடுகள்மூலம் பெருக்கவேண்டும்? என்பதாகும். இதற்கான காரணங்கள் இரண்டுதான் என்பது பின்னர் தெரியவந்தது.

1. எவருமே ஆயுட்காலம் முடியும்வரை ஊதியம் பெறப்போவதில்லை என்பதால் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் சேமிப்பை வைத்துத்தான் காலம் தள்ளவேண்டும்.

2.அந்தச் சேமிப்பு கணவன் – மனைவி இருவரின் காலம் முடியும்வரை நீடிக்க வேண்டுமென்றால் முதலீடுகளிலிருந்து கிடைக்கும் லாபம் பண வீக்கத்தைவிட அதிகமாக இருந்தால்தான் தேவைகளை ஈடு கட்டமுடியும்.

2ம் மைல் கல்

எவ்வளவு தொகை சேமிக்க வேண்டும் என்று ஆராய்ந்ததில் வரி கட்டுமுன் வரும் மாத ஊதியத்தில் 15 சதவீதமாவது தவறாமல் சேமிக்க வேண்டும் என பல நிதி நிறுவனங்கள் அறிவுறுத்துவது தெரியவந்தது.: எனது முதல் அனுபவத்தினாலோ அல்லது 10% நிதி ஆலோசர்கள்தான் பங்கு சந்தையில் வெற்றியடைகிறார்கள் என்பதாலோ முதலிலிருந்தே நிதி ஆலோசகர்களிடமிருந்து ஒதுங்கிக்கொண்டேன். இவர்களைத் தொலைபேசியிலோ நேரிலோ தவிர்ப்பது எளிதன்று என்பதையும் தெரிந்துகொண்டேன்.

3ம் மைல் கல்

நீண்ட கால முதலீட்டுச் சாதனங்களின் நூற்றுக் கணக்கான வருட வரலாறு, அதிக லாபத்தைத் தருவது பங்க்ச் சந்தைதான் என தெரியவந்தது. ஆனால் நேரடியாகப் பங்குகளை வாங்குவதற்கான விவரங்களைச் சேகரிக்க நேரமுமில்லை, திறமையுமில்லை என்பதால் பல நிறுவனப் பங்குகளை ஒரே சமயத்தில் வாங்குவதற்குச் சிறந்த இடம் பரஸ்பர நிதியங்களின் பங்குகள் என முடிவுசெய்தேன். அதிலும், பல நிதியங்கள் தனித் தரகர்களைபோல் பங்குகளை வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ தனியாகக் கட்டணம் வசூல் செய்வது தெரியவந்ததால் இந்நிதியங்களைத் தவிர்க்க வேண்டியதாகியது. இவ்வாறு பணம் வசூல் செய்யாத நிதியங்களில் (No load Mutual Funds) குறைவான வருடக் கட்டணம் வசூலிக்கும் நிதியங்களைத் தேடவேண்டியதாக இருந்தது.

4ம் மைல் கல்

60லிருந்து 80 சதவீதம் மேலாளர்கள் தங்கள் நிதியங்களுக்காகப் பொறுக்கி எடுத்துள்ள வர்த்தகப் பங்குகளின் 10 வருட லாபம் இலக்குக் குறிகளாகக் கருதப்படும் S & P 500 போன்றவற்றைவிட குறைவான லாபத்தையே பார்க்கின்றன என்ற விவரத்தைப் படித்து அதிர்ந்தேன், இதை எப்படிச் சரிக்கட்டுவது என்பதை ஆராய்ந்து, இலக்குக் குறிகளின் வர்த்தகப் பங்குகளை அதே அளவில் கொண்டுள்ள குறியீட்டு நிதியங்களைக் கண்டுபிடித்து அதன் பங்குகளில் முதலீட்டை மாற்றினேன்.

5ம் மைல் கல்

இதன்பிறகு, ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் வைக்கக்கூடாது என்ற பொருளாதார அறிவுரையைக் கண்டேன். இதன் அர்த்தம், ஒரு வகைப் பங்குகளினால் ஏற்படும் நஷ்டத்தைப் பலவகை பங்குகள் கொடுக்கும் லாபத்தின்மூலம் ஈடு செய்யமுடியும் என்பதாகும். இதில் பொதிந்துள்ள உண்மையைக் கண்கூடாகக் கண்டபின், பல விதமான இலக்குக் குறிகளைப் பின்பற்றும் குறியீட்டு நிதியங்களில் முதலீடு செய்யத் தொடங்கினேன் .

6ம் மைல் கல்

நிதி ஆலோசகர்கள் அனைவருமே வங்கியில் அவசரத் தேவைக்காக ஆறு மாத ஊதிய அளவு பணம் மட்டுமே வைத்திருக்கவேண்டும் என்கின்றனர். இச்சமயத்தில் பல வர்க்கங்களுக்கு நிதி ஆலோசகராகப் பணியாற்றிவந்த எனது உறவினர் எழுதிய ஒரு சிறிய பொருளாதாரப் புத்தகத்தை அவரது முன்னிலையில் புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு பக்கத்தில் கொட்டை எழுத்தில் இருந்த வரவு – செலவு = சேமிப்பு என்ற சமன்பாடு என்னைக் கவர்ந்தது. நான் அவரிடம் இந்த சமன்பாட்டை வரவு – சேமிப்பு = செலவு என மாற்றி அமைத்தால் சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் இருக்கும் என்று சொன்னேன். சற்று சிந்தித்தபின் அவரும் ஒப்புக்கொண்டார். இதன்பின், என் சொந்த அனுபவத்திலும் வரவு அதிகரிக்க அதிகரிக்கச் செலவும் கூடிக்கொண்டே போவதைப் பார்த்தபின் நான் கூறிய சமன்பாட்டைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியிலிருந்து நிதியம் தானாகவே எடுத்து அதைப் பல குறியீட்டு நிதியங்களில் முதலீடுசெய்ய அனுமதித்தேன்.

7ம் மைல் கல்

நிதியங்களில் சேமிக்க ஆரம்பித்தபின்னும் தனியார் நிறுவனப் பங்குகளைத் தனிப்பட்ட முறையில் வாங்கவேண்டும் என்பதில் ஆர்வம் அவ்வப்போது தலை காட்டிக்கொண்டுதான் இருந்தது. நான் பல வருடங்களாகச் சந்தா செலுத்தும் பொருளாதார செய்தி மடல், அதிக சதவீதம் ஆதாயப் பங்களிக்கும் முதல் நான்கு தனியார் நிறுவனங்களில் வாங்கிய பங்குகளை 18 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்றுவதின்மூலம் கிடைக்கும் முதலீடு மற்ற முறைகளைவிட அதிகமாக உள்ளதைப் பல பத்தாண்டு புள்ளி விவரங்களுடன் விவரமான கட்டுரையாகப் பதித்திருந்தது. எனது ஆர்வத்தைப் பூர்த்திசெய்யும் நாள் வந்து விட்டதென்று தோன்றியது. எனவே, பங்குகளை வாங்கவும் விற்கவும் குறைந்த கட்டணம் வசூலிக்கும் ஒரு தரகு நிறுவனத்தைக் கண்டுபிடித்து அதன்மூலம் அமல்படுத்தினேன்.

மேற்சொன்னவை எனக்குப் பாடங்களாக அமைந்ததே தவிர மற்றவர்களுக்கு இப்பாடங்கள் உதவும் என நான் சொல்லவிரும்பவில்லை. பல நிதி ஆலோசகர்கள் கூறுவதுபோல் நிதியங்கள், தரகர்கள் வசூலிக்கும் கட்டணத்தில் ஒரு கண் இல்லையென்றால், சேமிப்பு நிதி கணிசமாகக் குறைந்துவிடும் என்பது என் மனதில் முக்கியமாகப்பட்டது. மேலும், நிதியங்கள் கொடுக்கும் ஆதாயப் பங்கை அந்த நிதியங்களின் பங்குகளை வாங்குவதற்கான சலுகையைப் பயன்படுத்திக்கொண்டால் சேமிப்புப் பெருகும் என்பதும் தெரியவந்தது. மேலும், வரி செலுத்துவதைச் சம்பாதிக்கும் சமயத்திலிருந்து ஒய்வு காலத்திற்குத் தள்ளிப் போடுவதும் (Tax Deferred Instruments) சேமிப்பிற்கு ஆதாயமானது என்பது அனைத்து நிதி ஆலோசகர்களும் அடித்துக்கூறும் விஷயம்தான். ஆனால் நான் கற்ற பொருளாதாரப் பாடங்களும் சேமிப்பும் இறுதிவரை என் தேவைகளைப் பூர்த்திசெய்யுமா என்பதை நிதி ஆலோசகர்களோ நானோ உறுதியாகக் கூறுவதற்கு இல்லை. அதை அடுத்து ரும் படலம்தான் நிச்சயிக்கும்.

சேமிப்பின் மீதான போர்ப் படலம்

அமெரிக்கா இதுவரை ஐந்து போர்களைத் தொடுத்துள்ளது. ஒரே ஒரு போரில் மட்டுதான் உண்மையான எதிரியைச் சந்தித்தது. மீதி நான்கு போர்களும் பெயரளவில் பெயர்மீது தொடுக்கப்பட்ட போர்கள். வறுமை, போதை மருந்து, தீவிரவாதம், கோவிட் ஆகியவையாகும். அமெரிக்க அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ அமெரிக்கர்களின் ஓய்வுக் காலத்தின்மேல் மற்றொரு போரையும் நடத்திக்கொண்டிருக்கிறது. முன்னறிவிப்புச் செய்து திட்டமிட்டு இறங்கிய போரன்று. ஆனால், அமெரிக்க அரசாங்கம் படிப்படியாகத் திட்டமிடாமல், தொடந்து செய்துவரும் செயல்கள் பணியிலிருந்து ஒய்வு என்பதையே குழாய்க் கனவாக மாற்றும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

இந்த போர், 1935ல் ஆரம்பித்த சமூகக் காப்புறுதித் (Social Security) திட்டத்துடனேயே ஆரம்பித்துவிட்டது. ஒரு சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்து அமெரிக்க மக்களை வலுக்கட்டாயமாக வேலைக் காலத்தில் சேமிக்க வைத்துப்பின் அவர்களது ஒய்வுக் காலத்தில் வட்டியுடன் அச்சேமிப்பைத் திருப்பாமல், பிற்பாடு பங்கேற்பவர்கள் பணத்தை ஒய்வு பெற்றவர்களுக்கு அளிக்கும் ஒரு பான்சி (ponzi) திட்டத்தை அரசாங்கம் நிறுவியது. இத்திட்டம் மற்ற பான்சி திட்டங்களைபோலவே, பங்கேற்பவர்களிடமிருந்து வரும் தொகை ஒய்வு பெற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் தொகையைவிட அதிகமாக இருக்கும் வரைதான் நடைபெறும். 1980ல், இத்தகைய வரவு கணிசமாகக் குறைந்துவிட்டது. இதைச் சரிக்கட்ட, அதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்ட ஓய்வினரின் பணத்திற்கு வரி சுமத்தப்பட்டது. இதன்மூலம் இத்திட்டத்தின் கையிருப்பு மீண்டும் அதிகரித்தது. மீண்டும் 2010லிருந்து இத்திட்டம் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. அப்போதிலிருந்து வெளியே செல்லும் பணம் உள்ளே வருவதைவிடக் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் 2035ல் இந்த நம்பிக்கை நிதியம் (Trust Fund) நொடித்துவிடும் என மதிப்பீடுகள் கணக்கிட்டுள்ளன.

ஏற்கெனவே மிகவும் உப்பியுள்ள திட்டத்தை அரசாங்கம் தொடர நினைத்தால், அமெரிக்கர்கள் மற்றொரு குண்டு வீச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும். ஓய்வினர்கள் பெறும் தொகை குறையலாம். அல்லது வேலையிலிருப்பவர்களின் வரிப்பளு அதிகமாகலாம். நாளுக்கு நாள் இந்த வரிச்சுமை கழுத்தை சுற்றிக்கொண்டிருக்கும் மலைப் பாம்புபோல் உழைப்பவர்களை இறுக்கிக்கொண்டே வரும்.

இப்போரில் அமெரிக்காவின் மத்திய வங்கி (Federal Reserve) அரசாங்கத்தின் விலைமதிப்பில்லாத கூட்டாளியாக உள்ளது. 1980லிருந்தே மத்திய வங்கி வட்டி வீதத்தை (Interest rate) அயராமல் குறைத்துக்கொண்டே வந்துள்ளது. சேமிப்புக் கணக்கு, வைப்பு நிதி (Fixed Deposit), கரூவூலச் சீட்டு (Treasury Bill) அனைத்திலுமே வட்டி வீதம் பூஜ்யத்தைவிடச் சற்று மட்டுமே அதிகமாக உள்ளது. நிறுவனப் பத்திரங்கள் (Corporate Bonds) அளிக்கும் வட்டிப் பணத்தில் பணவீக்கத்தைகூட தாக்குப்பிடிக்க முடியாது. எனவே, மத்திய வங்கியின் பிடியில் மாட்டிக்கொண்டிருக்கும் சேமிப்பாளிகள் ஒய்வு காலச் சேமிப்பை முதலீடு செய்வதற்கான ஒரே ஓர் இடம் பங்குச் சந்தைதான். ஆனால் இச்சந்தையின் பாதையோ மேலும் கீழுமாகச் செல்லும் ஒன்று. இளைய தொழிலாளர்கள் இந்தச் சீரற்ற பாதையில் தொடர்ந்து செல்லமுடியும். ஆனால் பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்களையும், அதன் அருகிலுள்ளவர்களையும் கரடுமுரடான இப்பாதையில் செல்லக் கட்டாயப்படுத்துவது மிகவும் அபாயகரமானதாகும்.

இப்போது, அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிர்வாகம், அடிபட்டு வீழ்ந்து கிடைக்கும் குதிரையைக் கருணைக் கொலை செய்வதற்கு ஈடாக மூலதன ஆதாயத்திற்கான வரியை இரட்டிக்கத் திட்டமிட்டுள்ளது. பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபத்திலிருந்து அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் பணத்தை இரட்டிப்பாகுவதற்குத் திட்டமிடுகிறது. வெள்ளை மாளிகை இவ்வரி ஒரு மில்லியன் டாலருக்குமேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும் என்கிறது. பணக்காரர்கள்மீது விதிக்கப்படும் வரி எவ்வாறு வெகு விரைவில் எல்லோரையும் பாதிக்கிறது என்பது பழங்கதை. ஆரம்பத்தில் வருமான வரி ஒரு சதவீதம்தான், பணக்காரர்கள் மட்டுமே வரி செலுத்துவார்கள் எனக் கூறப்பட்டது. நடந்தது என்ன? ஐந்தே வருடங்களில் இது ஆறு மடங்கானது மட்டுமல்லாமல் ஒருவருக்குமே விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.

மெய்யான போராக இருந்தால், தோல்வியைத் தழுவிய எதிரி, மனிதாபிமான நடத்தையை எதிர்பார்க்கலாம். ஆனால் இப்போரில் ஒய்வு பெற்றவர்கள் அவ்விதமான நடத்தையை அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது. மேற்கூறிய தடைகளைத் தாண்டி ஒருவர் சேமித்திருந்தால் அவர் மரணத்திற்குபின் மற்றொரு தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது; அதுதான் சொத்து வரி. பைடன் நிர்வாகம் வரி விதிவிலக்கு அளிக்கப்பட்ட சொத்தின் அளவைப் பாதியாகவும், வரிக்குட்பட்ட சொத்திற்கு 40 சதவீதம் வரி விதிக்கவும் நினைந்துள்ளது. வரி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள சொத்தான ஐந்து மில்லியன், செல்வந்தர்களையும் சிறு தொழிலதிபர்களையும்தான் பாதிக்கும். ஆனால் வருமான வரிக்கு ஆனதுபோல் சொத்து வரிக்கு ஆவதற்கு எத்தனை வருடங்கள் அரசாங்கத்திற்கு வேண்டியிருக்கும் என்பதுதான் கேள்வி. இது போதாதென்று, புதிய நிர்வாகம் மரபுவழிப் பங்கு (Inherited Stocks) களின்மேல் விதிக்கப்படும் மூலதன வரி (Capital Gain tax) யை அதிகமாக்குவதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறது.

ஓய்வுகாலச் சேமிப்பின்மேல் நடக்கும் போருக்கும் முதல் உலக யுத்தத்திற்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. செர்பிய நாட்டைச் சேந்த ஒருவர் ஆஸ்டிரிய – ஹங்கேரி பேரரசரின் மருமானைக் கொன்றார், உடனே அப்பேரரசு செர்பியாவின்மேல் போர் என அறிவித்தது. செர்பியாவுடன் நட்புப் பூண்ட ரஷியா தன்னுடைய படைகளைச் செர்பியாவை நோக்கி நகர்த்த ஆரம்பித்தது. இதனால் ஆத்திரமுற்ற ஜெர்மனி, ரஷ்யாவுடன் போர் என அறிவித்தது. உடனே ஃபிரான்ஸ் ஜெர்மனியுடன் போரை அறிவித்தது. சம்பந்தமேயில்லாத சிறு சிறு சம்பவங்கள் ஒன்று சேர்ந்து ஓர் அருவியாக மாறியதுதான் முதல் உலக மகாயுத்தம். நடந்தேயிருக்கக்கூடாத ஒன்று. இதுபோலதான் ஓய்வுக் காலத்தின்மேல் நடக்கும் போரும். அரசாங்கத்திற்கு ஒய்வு பெற்றவர்களுடன் போர் செய்வதில் விருப்பமில்லை. ஆனால், அரசாங்கம் அங்கீகரித்துள்ள பல்வேறு கொள்கைகள் அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. உலக மகா யுத்தத்திற்கு இழுத்துச்சென்ற ஆர்ச் பெர்டினாண்ட் கொலையின் அமெரிக்க வடிவம் 1935ல் நிறைவேறிய சமூக காப்புறுதித் திட்டம். அப்போதிலிருந்தே விளையாட்டுச் சீட்டுகள் தொடர்ந்து வரிசையாக விழ ஆரம்பித்துவிட்டன. கடைசிச் சீட்டு விழும் நேரம் நெருங்கிவிட்டது. ஒய்வுக் காலத்தைச் சற்றே நிம்மதியாகக் கொண்டுசெல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டம் ஒய்வுக் காலத்திற்கே உலை வைத்துவிட்டது. எண்ணம் நல்லதா அல்லது கெட்டதா என்பதை நினைத்து இனி என்ன பயன்?

(ஆதாரம்: The War on Retirement; James H. Harrigan & Antony Davies
Research reports, Volume LXXX1;June 2021,Published by American Institute of Economic Research.
)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.