
தொடக்கத்திலேயே ஒன்றைச் சொல்லிவிடுவது நேர்மை என நினைக்கிறேன். இசையும், சம்ஸ்க்ருதமொழியும், வேதாந்த சாரமும் சிறு நெல் அளவு கூட அறிந்தவளில்லை. ஆனால், சிலநேரங்களில் நம்மை அறியாத ஒரு வேகம் நம்மை ஆட்கொண்டு அதன் போக்கில் நம்மை வளைத்துவிடுகிறது. தற்செயலாகக் கேட்ட ‘மான மாத்ரு மேயே மாயே’ என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது. விளைவு இந்தக் கட்டுரை. இதில் குறைகள் பல தென்படலாம், மன்னித்துவிடுங்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீக்ஷிதர் பல அபூர்வ இராகங்களைக் கையாண்டு முத்தான கீர்த்தனைகள் படைத்தவர். மும்மூர்த்திகளில் பாரதத்தில் பெரும்பாலான இடங்களுக்குப் பயணித்தவரும் அவர்தான். அந்தந்தப் பிரதேசத்தின் சிறப்பு இராகங்களைக் கையாண்டு கர்னாடக இசைக்கு ஏற்றவாறு கீர்த்தனைகளை இயற்றினார். அவரது பாடல்களில் ‘குருகுஹ’ என்ற முத்திரையும், பாடப்படும் தெய்வத்தின் மூர்த்தியும், கீர்த்தியும், அந்தத் தலத்தின் வரலாறும், அதன் பூகோள அமைப்பும், அதன் முக்கிய பீஜாக்ஷரமந்திரமும் இடம் பெறும். மேலும், அந்தக் கீர்த்தனை எந்த இராகத்தில் பாடப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக வந்துவிடும். அவர் இயற்றிய நவாவர்ண கீர்த்தனைகள் முழுதுமே சக்தி உபாசனா மந்திரங்கள். நவக்ரஹ கீர்த்தனைகளை வெவ்வேறு இராகங்களில் அமைத்ததுமல்லாமல் வெவ்வேறு தாளங்களிலும் அமைத்த மெய்ஞான வித்தகர் அவர்.
அதைவிடச் சிறப்பு என்னவென்றால் அந்தந்த கிரஹங்களுக்குரிய இராகத்தில் அவற்றை அமைத்துள்ளதுதான். உதாரணமாக, சூர்யனைப் பற்றிய கீர்த்தனையான ‘சூர்யமூர்த்தே நமோஸ்துதே’ என்பதில் சரணத்தில் ‘சௌராஷ்ட்ரான மந்த்ராத்மனே’ என்று அவனுக்குரிய சௌராஷ்டர மந்திரத்தையும், அந்த இராகத்தையும் குறித்திருப்பது அவரது சங்கீத ஆளுமைக்கும், வித்வத்திற்குமான சிறந்த எடுத்துக்காட்டு. அதைப்போல, சனீஸ்வரனின் மெதுவேகத்தைக் குறிக்கும் வகையில் பல்லவியை மிக மெதுவாகக் கமகங்களோடு பாடும் வகையில் யதுகுல காம்போதியில் ‘திவாகரதனுஜம் சனைச்சரம் தீரதரம்’ என்று அமைத்திருப்பார்.
‘கமகப்பிரியா’வில் அவர் ஐந்து இரத்தினங்களை அமைத்துள்ளதை இப்போது பார்ப்போம். இன்று ‘பூர்விகல்யாணி’ என்று பொதுவில் அழைக்கப்படும் கமகப்பிரியா, தீக்ஷிதர் பள்ளியில் கமகப்பிரியா என்றேதான் அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற் போல் கமகங்கள் ஆட்சி செய்யும் இராகம். கமகங்கள் பொதுவாக, கர்னாடக இசையின் சிறப்புகள். இதை ஸ்வர அசைவுகள் எனப் புரிந்து கொள்ளலாம். அதாவது, ஏழு ஸ்வரங்களில் ஒவ்வொரு இராகத்திற்கும் பிரத்யேகமான ஸ்வரங்கள் உண்டு. சொல்லப்போனால் ‘ச’ ‘ப’ இரண்டைத் தவிர மற்ற ஐந்தும் இருவகை கொண்டவை- உதாரணம் பிரதி ‘ம’த்யமம், சுத்த ‘ம’த்யமம். எனவே, 5*2+2= 12 என்று ஸ்வரங்களை பன்னிரெண்டு எனவும் சொல்லலாமல்லவா?
நாம் மீண்டும் கமகத்திற்கு வருவோம். கமகம் என்பது அசைவு என்று பார்த்தோம். அது ஒரு ஸ்வரம் பக்கத்து ஸ்வரத்தைச் சார்ந்து இராக அழகை வெளிப்படுத்தும் இரசானுபவம். ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒரு அதிர்வெண் உண்டு. ஆனால், கர்னாடக இசையில் இவ்வதிர்வெண்களுக்கு நெகிழ்த்தன்மை உண்டு. அந்த நெகிழ்வினால், அது அனுஸ்வரங்களை அணுகி, சீராட்டி பாராட்டும் பெற்று விடுகிறது. பழைய திரைப்படப்பாடல் ஒன்று நினைவில் வருகிறது- ‘இராகத்திலே அனுராகம் மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா?’
15 கமகங்கள் இருப்பதாக ‘சங்கீதரத்னாகரம்’ சொல்கிறது. கமகங்கள் குரல் இசையை விட தந்திவாத்யங்களில் சிறப்பாக வெளியாகும் என்றாலும் குரலிலும் அதைக் கொண்டு வந்தவர்கள் விரும்பப்பட்டனர்.
தீக்ஷதரின் ஐந்து கமகப்பிரியா ரத்தினங்கள் என்ன என்று பார்ப்போம்.
1. மீனாக்ஷி மேமுதம் தேஹி
2. காசி விசாலாக்ஷி
3. ஏகாம்பர நாதம்
4. நவரத்ன மாலினம்
5. திருவட்டீஸ்வரன் நமாமி
தியாகராஜ ஸ்வாமிகள்,(ஞானமோசகராதா) ஷ்யாமா சாஸ்திரிகள், (எந்நேரமும்உன்நாமம்) கோபால கிருஷ்ண பாரதியார் (சற்றே விலகி இரும் பிள்ளாய்) ஆகியோரும் இந்த இராகத்தில் பாடல்கள் செய்துள்ளனர்.
கமகங்களால் இழைத்து இழைத்து, அத்வைத சாரம் வழிந்தோட மீனாக்ஷி என்னும் ராஜமாதங்கியை தீக்ஷிதர் கொண்டாடிக் கொண்டாடி மோக்ஷம் பெற்றிருக்கிறார். தன் வாழ்நாளின் கடைசி கணத்தில் சிஷ்யர்களை ‘மீனலோசனி பாசமோசினி’ என்ற தன் கீர்த்தனையைப் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டே அவர் சித்தி பெற்றுள்ளார்.
சொல்லழகு, பொருளழகு, இராகப் பொருத்தம், வேதாந்த சாரம், ஜூவன் முக்தி என்று இந்தக் கீர்த்தனையில் அனைத்துமுள்ளன. அதிஅற்புதமாக ‘வீணா கான தச கமகப்பிரியே’ என்பதில் அவரது இராக, கமக, தாள, மெய்ஞான, இசை ஓங்கிய ஆகிருதி வெளிப்படுகிறது. மீனாளை மாதங்கியாக, ஞான இசை சரஸ்வதியாக வர்ணிக்கிறார். அம்பாள் வீணையை மீட்டி வாசிக்கிறாள். வீணை என்பது இந்து மதத்தில் அகப், புற உடலின் குறியீடு; அதில் ஞானலயத்தைக் கொண்டு வர அம்பிகை வாசிக்கிறாள். வீணை ஞானக் கருவி. பத்து கமகங்களும் அதில் பேசும். அந்தக் கமகங்களுக்கும் பெயர்கள் உள்ளன. கடன் பெற்றுத்தான் இந்தக் கமக வகைகளை எழுதுகிறேன் (1.ஆரோஹண கமகம் 2. அவரோஹண கமகம் 3. தாட்டு, 4.ஜண்டை, 5.கம்பிதம், 6.த்ரிபுச்ச கமகம், 7.ஆந்தோளம் 8. மூர்ச்சனம் 9. மிஸ்ரிதம் 10. அபன்யாசம்)
இந்த ‘மீனாக்ஷி’ பாடலின் சொல்லழகிற்காக அதை அப்படியே தருகிறேன்.
இராகம்: கமகப்பிரியா தாளம்: ஆதி
ஆரோஹணம்:ஸ ரி க ம ப த ஸ
அவரோஹணம்: ஸ நி த ப ம க ரி ஸ
ஜீவ ஸ்வரங்கள்: ரி, ம, த, நி; ‘கமனாஷ்ரமா’ என்ற 53 வது மேளகர்த்தாவில் பிறந்துள்ள இராகம் இது.
பல்லவி
“மீனாக்ஷி, மே முதம் தேஹி
(மீனாக்ஷி, எனக்கு நிரந்தரமான ஆனந்தம் தருவாயாக)
மேச்ச ஹாங்கி ராஜ மாதங்கி
(தங்க நகைகள் பூண்டவளே! பத்து மஹா வித்யைகளில் ஒன்பதாவதான ராஜ மாதங்கி நீயே!)
அனுபல்லவி
மான மாத்ரு மேயே மாயே
( நீயே அறிவு, அறிபடு பொருள், அறிவின் முழுமை, மாயை)
மரகத சாயே ஷிவ ஜாயே
(பச்சை வர்ணத்தவளே! சிவனின் அன்பே!)
மீன லோசனி, பாச மோசனி
(மீன் போன்ற அழகிய கண்களைக் கொண்டவளே! பாச பந்தங்களை விலகச் செய்பவளே!)
மானினி கதம்ப வன வாசினி
(பரந்தவள், இனிய நறுமணத் தோட்டத்தில் இருப்பவளே)- (மீ)
சரணம்
மதுராபுரி நிலயே மணி வளையே
(அழகிய மதுரை நகரில் வசிப்பவளே! நவரத்தினக் கற்கள் பொருந்திய வளையல்கள் அணிந்தவளே!)
மலயத்வஜ பாண்ட்ய ராஜ தனயே
(மலயத்வஜ பாண்டிய அரசனின் மகளே!)
விது விடம்பன வதனே விஜயே
(முழு நிலவைப் பழிக்கும் தோற்ற எழில் முகத்தவளே! வெற்றி பெறுபவளே!)
வீணாகான தச கமகப்ரியே
(வீணை இசையும், பாடலுமாக பத்துவித கமகங்களை இரசித்திருப்பவளே!)
மது மட மோதித ஹ்ருதயே சதயே
(இனிமை நிரம்பியவளே, இரக்கம் உள்ளவளே)
மஹாதேவ சுந்தரேச ப்ரியே
(சுந்தரேசனின் அன்பிற்குப் பாத்திரமானவளே!)
மது முரரிபு சோதரி சாதோதரி
(மது கைடப அசுரர்களின் எதிரியான விஷ்ணுவின் சகோதரியே! மெல்லிடையாளே!)
விதி குருகுஹ வசங்கரி ஷங்கரி
( அனைவரையும் வசப்படுத்துபவளே! சங்கரியே)- (மீ)
கமகங்களுக்கு இடம் கொடுக்கும் வகையிலேயே அசைச் சொற்களை அமைத்துள்ளார். உதாரணத்திற்கு பல்லவியின் முதல் வரியில் மீ (மீ.. என்று நீட்டலாம்) அடுத்த எழுத்து ‘நா’ அதுவும் நீட்டப்படக் கூடியதே. பாடல் முழுதும் ‘அ’ காரம்’ ‘ இ’ காரம் ‘எ’ காரம் நிறைந்து கமகமக்கிறது.
இப்பாடலில் நான்கே நான்கு வார்த்தைகளில் அவர் வேதாந்த சாரத்தைக் கொடுத்து விடுகிறார். ‘மான’ என்பது அறிவு என்னும் பொருளைக் குறிப்பது. ‘மாத்ரு’ என்பது அந்த ‘அறிவை’ அறிந்தவனைக் குறிக்கும். ‘மேயே’ என்பது அறிவின் அளவீடு. ‘மாயே’ என்பது அறிதலின் எல்லையாக, அறிவாகவே அவள் இருப்பதையும், அதை அவள் மறைத்து மாயையில் நம்மை ஆழ்த்தி விளையாடுவதையும் குறிக்கும். எதை அறிந்தாலும், அத்வைதத்தை அறியாமல் இருந்தால் அந்த அறிவு மாயையால் சூழப்பட்டிருக்கிறது என்பது இதன் உள்ளீடு. 14 வரிகளில் சொல்லழகு, இராக இலட்சணம், உபனிஷத்தின் சாறு எனக் கொடுத்த மகான் இவர். ராஜ மாதங்கி எனச் சொல்வதால் விசுத்தி சக்கரத்தை (தொண்டைப் பகுதி) குறிப்பிடுவதாகவும் அறிஞர்கள் சொல்கிறார்கள்.
24-03-1775-ல் திருவாரூரில் பிறந்தார் அவர்; 21-10-1835-ல் தீபாவளி அன்று எட்டயபுரத்தில் ‘மீன லோசனி, பாச மோசனி’ என்ற தன் பாடலைக் கேட்கையில் அவரது உயிர் ஒரு ஒளியாகப் பிரிந்து அந்த அன்னையுடன் கலந்தது. அவருக்கு எட்டயபுரத்தில் சிறந்த சமாதி அமைக்கப்படுள்ளது. அந்த ஊரின் சிறப்பு ஒன்றா, இரண்டா?