பையப் பையப் பயின்ற நடை

சொல்வனம் பத்திரிகையின் 250 ஆம் இதழைப் பற்றிச் சில எண்ணங்கள்.  

சில பத்திரிகைகள்- மேலும் இதர பண்பாட்டு வெளிப்பாடுகள்- எடுத்த எடுப்பிலேயே உசைன் போல்ட் தடகளத்தைக் காற்று வேகத்தில் கடப்பது போல, அசாதாரண லாகவத்துடன், துரிதத்துடன் செயல்படத் துவங்கி விடுகின்றன. 

சொல்வனம் துவக்கத்திலிருந்து மதலை போல நடை பழகத் தொடங்கி, இன்று சிறுபிராயத்தினரின் நடை வேகத்துக்கு நகர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்தப் பனிரெண்டு ஆண்டு மெது நடைக்குப் பல காரணங்கள். 

முதல் கட்டங்களில் ஊடகத்தின் இயல்பே ஒரு காரணமாக இருந்தது. வலைத்தளப் பத்திரிகை என்பது இன்னமுமே ஒரு புது முயற்சியாகத்தான் அன்றிருந்தது. வாசகர்கள் மட்டுமில்லை, எழுதுவோரும், பதிப்புக் குழுவினருமே இந்தப் புது வகை ஊடகத்தின் பல வியப்புகளைப் படிப்படியாக அறிந்து இயல்பான கதியில் இயங்கக் கால அவகாசம் தேவைப்பட்டது. 

வலைத்தள வடிவு என்பது துரித இயக்கத்துக்குக் காரணமாக இருந்தது, பல புது வகை வெளிப்பாடுகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது என்பது ஒரு புறம் உண்மைதான். உதாரணமாக, இளையராஜாவின் இசை பற்றிய சுகாவின் கட்டுரைக்கு, அவரது ஆக்கங்களான பாடல்களுடைய சில பகுதிகளை இசைப் பதிவுத் துண்டுகளாகக் கட்டுரையின் நடுவே பொதிக்க முடிந்தது.  இது அவரது இசையின் பின்னே இருந்த ஆழ்ந்த இசை ஞானத்தைப் பற்றிய எழுத்து வடிவு விளக்கத்துக்கு உடனடி சான்றுகளை வாசகருக்குக் காட்டிக் கட்டுரையை எளிதில் அணுகக் கூடியதாக்கியது. 

இது அச்சுப் பத்திரிகைகளுக்கு இன்று கூட இயலாத ஒரு செயல். இதன் வெற்றி எங்களுக்கு ஊக்கம் கொடுத்து இசை பற்றிய பல கட்டுரைகளில் இசைத் துணுக்குகளை எங்களால் பதிக்க முடிந்தது. இன்றுவரை இந்த உத்தி தொடர்கிறது. 

அதே போல பல காணொளித் துண்டுகளையும் (விடியோ துண்டுகள்) வாசகர்களுக்கு அளிக்க முடிந்தது. உலக சினிமா மட்டுமல்ல, பல அறிவியல் சம்பாஷணைகள், உரைகள், விளக்கங்களையும் கொடுக்க இந்த விடியோ இணைப்புகள் உதவின. 

ஆனால் இவை ஒவ்வொன்றும் பதிவு சுலபம் போலத் தெரிந்தாலும் வடிவமைப்பில் தொடர்ந்து பல சோதனைகளைக் கொணர்ந்தன. ஒரு சோதனை, இவற்றின் பின்னே ஒட்டிக் கொண்டு வரும் காப்புரிமை பற்றிய பிரச்சனைகள். சமீபகாலங்களில் பல உலக நிறுவனங்கள் தம் காப்புரிமையைப் பாதுகாப்பதில் கடுமையைக் கையாள்கின்றன என்பதால் இங்கு பிரசுரமாகும் அனேக விஷயங்களின் காப்புரிமை நிலை பற்றி நாங்கள் சோதிக்க வேண்டி வருகிறது. 

விருப்பப்பட்ட படங்கள், விடியோக்கள், இசைத் துண்டுகளைப் பயன்படுத்த முடியாமல் போகும்போது அது ஒரு அளவு களைப்பைக் கொடுக்கிறது.  அதே நேரம் இலவசமான பத்திரிகையாக இயங்கும் ஒரு அமைப்பு பிற இடங்களிலிருந்து பெறும் படைப்புகளுக்குச் சன்மானம் கொடுக்க முடியாமல் இருப்பதும் ஒரு வேகத் தடைதான். காப்புரிமை பற்றிச் சோதிக்க ஆகும் நேரத்தைச் சொல்லி மாளாது. 

இந்த இயக்க முறையில், உலகெங்குமிருந்து எழுத்தாளர்களும் வாசகர்களும் தம் படைப்புகள், எண்ணங்களை நேரே மின்னஞ்சல் மூலம் பதிப்புக் குழுவுக்கு அனுப்ப முடிந்ததோடு, சில எழுத்தாளர்கள் அவற்றைத் தாம் விரும்பியபடி கட்டமைத்தும் அனுப்பினார்கள். அந்தப் படைப்புகளை நேரே வலைத் தளத்துக்கு மாற்றிப் பொருத்தி விட முடிந்தது.  

பெரும் அச்சு எந்திரங்கள், தொழில் வல்லுநர்கள், அச்சுக் கூடங்கள், காகிதக் கற்றைகள் என்று ஏதும் இல்லாது பிரசுரிக்க முடிந்தது ஒரு முன்னேற்றம் என்றுதான் எங்களுக்குத் தெரிந்தது. பிரசுரித்த சில வினாடிகளில் உலகெங்கும் இருந்த வாசகர்கள் பத்திரிகையை உடனே வாசிக்க முடிந்தது. பல எழுத்தாளர்கள் தம் படைப்பு பிரசுரமாகிய சில நிமிடங்களில் அதன் பிரசுர வடிவைப் பார்த்து விட்டு, தம் மகிழ்ச்சியை, துன்பத்தை, மாற்றத்துக்கான விருப்பத்தை எங்களுக்குத் தெரிவித்து விட முடிந்தது. அவற்றைக் கவனித்து மறுவினை செய்ய எங்களுக்கு முடிந்தது. 

பிரசுரித்த வடிவில் சிறு மாற்றங்களைச் செய்ய முடிந்தது என்பதும் இன்னொரு முன்னேற்றம். ஆனால் அந்த மாற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க முயல்வது நெறிமுறை நேர்த்தியைப் பொறுத்தது.  அதைத் தொடர்ந்து கவனத்தில் வைத்திருக்கிறோம்.

மின்னஞ்சல்கள் எத்தனை துரிதப்படுத்துகின்றனவோ, அத்தனைக்கு இடைஞ்சல்களையும் கொணர்கின்றன. அனேகநேரம் வாசகர்களோ, படைப்பாளிகளோ தம் அளிப்புகளை உடனடியே தளத்தில் பார்க்க விரும்புவோராக ஆகி விட்டிருக்கிறார்கள். மாதமிரு முறை மட்டுமே வெளிவரும் ஒரு பத்திரிகை அவர்களுக்குப் பொறுமை காக்கச் சொல்லிக் கோருவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத போது அது அவர்களிடம் ஓரளவு விலகலைக் கொணர்கிறது. இதே நபர்கள் அச்சுப் பத்திரிகைகளிடமிருந்து பாராமுகத்தையோ, அல்லது மாதக் கணக்கிலான தாமதத்தையோ அடையும்போது எப்படிப் பொறுத்திருந்தார்கள் என்பது எங்களுக்குப் புரியாத மர்மம். 

எங்களுக்கு வரும் மின்னஞ்சல் வடிவ அளிப்புகள் எல்லாமே எப்போதும் உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய வடிவில் இருப்பதுமில்லை. சுதந்திரச் சந்தைக்கான எல்லாக் குறைகளும் இங்கு உலவுகின்றன. 

படைப்பாளிகளின் அளிப்புகளில் வடிவுச் சிக்கல்கள், அச்செழுத்துச் சிக்கல்கள் என்று பல உண்டு. தவிர நிரந்தர ஊழியர் இல்லாத பத்திரிகையான சொல்வனம், படைப்பாளிகளின் அளிப்புகளைக் கறாராகப் பிழை திருத்திப் பயன்படுத்த முடியாத அமைப்பாக இருக்கிறது.  படைப்பாளிகள் எத்தனைக்குச் செயல் நேர்த்தியோடு எழுதுகிறார்களோ அத்தனைக்கு அவர்களின் படைப்புகள் வலைத் தளத்தில் நேர்த்தியாகப் பிரசுரமாகின்றன. அல்லது அவை எழுத்துப் பிழைகளோடு வெளிவருவதைத் தவிர்க்க இயலவில்லை. 

இன்னொரு காரணம், இது தன்னார்வலர்களின் செயலூக்கத்தை நம்பியே நடந்து வருவது என்பது. அதுவே இதன் வலு. ஆனால் அதுவே இதன் வளர்ச்சியின் நிதானத்துக்கும் காரணம். சொந்த வாழ்வின் பிரச்சனைகள், செயல்பாட்டு நிர்பந்தங்களை மீறி அதிக நேரத்தைப் பத்திரிகையின் வேலைகளுக்கோ, அதன் மேம்பாட்டுக்கோ கொடுக்க முடியாத நிலையில் பதிப்புக் குழுவினரில் சிலரோ, பலரோ இருக்கும்போது இயக்க கதி மந்தமடைவது தவிர்க்கவியலாத விளைவு. 

ஆனால் அந்தத் தேக்க நிலைகளை மீறி பெரும் ஊக்கம் பெற நாங்கள் பயன்படுத்தும் ஒரு உத்தி அவ்வப்போது சில சிறப்பிதழ்களைக் கொணர்வது என்பது. ஒவ்வொரு சிறப்பிதழும் பெரும்பாடுபடலைக் கேட்கும் முயற்சிகள். அவற்றை வெளியிடும்போது எங்களிடையே எத்தனை வலு உள்ளது எங்கெல்லாம் மெலிவுகள் உள்ளன என்பதெல்லாம் எங்களுக்குத் தெளிவாகின்றன. 

முக்கியமான ஒரு காரணத்தை இங்கே சொல்லி விட வேண்டும். அச்சுப் பத்திரிகைகளுக்கு விலை கொடுத்து வாங்க வாசகர்கள் தயங்குவதில்லை. அதுவும் ஆடம்பர வடிவில் வண்ணப் படங்களை பளபளப்பான காகிதங்களில் அச்சடித்துக் கொடுக்கும் பத்திரிகைகள் தொடர்ந்து தம் விலையை ஏற்றிக் கொண்டே போனாலும் குறையேதும் சொல்லாமல் லட்சக்கணக்கான வாசகர்கள் அவற்றை வாங்கிப் படிக்கிறார்கள்.  அதே வாசகர்கள் வலைத்தளப் பத்திரிகைகளுக்கு அச்சுப் பத்திரிகைகளுக்கு அவர்கள் கொடுக்க முன்வரும் தொகையில் பத்து சதவீதம் கூடக் கொடுப்பார்களா என்பது ஐயம்தான். 

இது சொல்வனம் ஓர் இலவசப் பத்திரிகையாக இயங்குவதற்குக் காரணமும் கூட.  இது எங்களுக்குப் படைப்புச் சுதந்திரம் தருகிறது, எந்தப் பெரும் சக்தி, இயக்கம், நிறுவனம், வணிக மையத்தையும் நம்பி இராமல் எங்கள் இச்சைப்படி பத்திரிகையை நடத்த இடம் தருகிறது. 

அதே நேரம் படைப்பாளிகளுக்குச் சிறு சன்மானம் கூட கொடுக்க முடியாத நிலையிலும் பத்திரிகையை இது இருத்துகிறது. 

இதை மாற்ற வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். என்ன மாற்றம், எப்படி அதை நிகழ்த்துவது, மாற்றம் இப்போதிருக்கும் சுதந்திரங்களைக் குறைக்காமல் இருக்க என்ன செய்வது என்று யோசிக்கிறோம். 

***

ஒரு காலத்தில் நீர்மோரைக் குடித்துக் கொண்டிருந்தவர்கள், பிறகு தேநீருக்கு மாறுகிறார்கள். அதே போல கதை நிகழ்த்தல்களில்  கேளிக்கைகளை ஊரார் அனுபவித்த காலம் போய், வானொலியும் திரைப்படமும் படைப்புகளின் மீது அந்தந்த ஊர் மக்களுக்கு இருந்த பங்கெடுப்பைக் கரைத்து இல்லாமல் ஆக்குகின்றன. 

மேன்மேலும் கலைகள் சமூகங்களின் நடுவே இருந்து பிரித்தெடுக்கப்பட்டு கிட்டத் தட்ட அன்னியமாக்கப்பட்டு, பற்பல ஊடக வடிவுகள் மூலம் பெருநகரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் வசப்படுகின்றன. 

வானொலியை ஏராளமான மக்கள் நம்பிய காலம் மிகத் துரிதமாக ஒரு சில பத்தாண்டுகளில் மாறி விட்டது. தொலைக்காட்சி என்பது உலகெங்கும் மக்கள் நடுவே பெரும் படைப்பு வெளியாக, பண்பாட்டு மாற்றச் சக்தியாகி விட்டிருக்கிறது. 

வெகுவாக வளர்ந்து விட்ட தொலைக்காட்சி, தன் பரிணாம வளர்ச்சிகளான பல வலை வெளி சார் அமைப்புகளால்,  திரைப்படங்களைச் செல்லாக் காசாக்கி வருகிறது. 

அதே போல இன்னொரு புறம், மரபுத் தொலைக்காட்சிகளை சமூக ஊடகங்கள் எனப்படும் வேறு சில படைப்பு வெளிப்பாட்டு வடிவங்கள் ஓரளவு ஒடுக்கி விட்டிருக்கின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் இன்று தம்மைத் தோலுரித்து வேறு வகைப் பூச்சிகளாக மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன. 

இதுவே அச்சு எந்திரங்கள் மூலம் மக்களை அடைந்த பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியனவற்றுக்கும் நேர்ந்து வருகிறது. கித்தான்களில் வரையப்பட்ட படங்களை ஓரம் கட்டிய ஃபோட்டோகிராஃபி தன் இருப்புக்கு ப்ளாஸ்டிக் தகடுகளை நம்பி வளர்ந்திருந்தது. அரை நூற்றாண்டு கொடிகட்டிப் பறந்த ஃபோட்டோக்ராஃபி இன்று பெரிதாக உருமாறி டிஜிடல் கருவிகளுக்கு அடிபணிந்து ப்ளாஸ்டிக் தகடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறது. 

புத்தகங்கள், பத்திரிகைகள், ஃபோட்டோக்கள் ஆகியன எல்லாம் பிரபலமாவதற்கு ஒரு அடிப்படைக் காரணம், அவை தனிநபர்களுக்கு நுகர் பொருட்களாகக் கிட்டியதோடு தனி நபர்கள் அவற்றைத் தம் சொத்து போல தம் கட்டுப்பாட்டிலும், தம் வசதிப்படியும் வைத்திருக்க முடிந்தது முக்கியமான காரணம். 

அதே பொருட்களின் இன்றைய வடிவுகள் அந்தத் தனிநபர் சொத்து வடிவை ஓரளவு பாதுகாத்து வரும் அதே நேரம், சிறு சிறு அடியெடுப்புகளில் அவை தனிநபர்களிடமிருந்து இந்தப் பொருட்களை அகற்றிப் பொது வெளியில் நிறுவுதலையும் நிகழ்த்தி வருகின்றன. 

நம் கணினி, நம் செல்ஃபோனில் சேமித்த படங்கள், கட்டுரை/ கதைகள் ஆகியனவற்றை நாம் இன்று க்ளௌட் சேமிப்பில் போடத் தயங்குவதில்லை. அவை திடீரென்று காணாமல் போகக் கூடியவை என்பது கூட நமக்குத் தெரிந்தேதான் இருக்கிறது. ஆனாலும் அங்கே சேமிப்பதை நம்மால் தவிர்க்கவும் முடியாமல் போகிறது. முன்பெந்தத் தலைமுறைகளையும் விட அதிகமான நினைவுத் தடங்கள், பயன்படு பொருட்கள் ஆகியவற்றை நாம் தடயங்களாக, காலப் பயணச் சுவடுகளாகச் சேமிக்கிறோம். ஆனால் அவை அனேகமாக முந்தைய காலத்து மக்களின் சுவடுகள் போலவே எளிதில் கரையக் கூடியவையாகவே இருப்பதை நாம் தெளிவாக இன்னும் அறியவில்லை. சோழர், பாண்டியர், சேரர், மற்றும் பற்பல குறுநில மன்னர் காலத்து அரண்மனைகள், வாழ்வுக்கான கட்டடங்கள் இன்று அனேகமாகக் காணக் கிடைப்பதில்லை. அவர்கள் கட்டிய கோவில்கள் மட்டுமே காணக் கிடைக்கின்றன. அதே போல 20+ நூற்றாண்டுகளில் வாழ்ந்த மனிதர்களின் தடயங்களில் மிகச் சிறு சதவீதம்தான் 30+ நூற்றாண்டுகளில் வாழப் போகும் மனிதருக்குக் கிட்டும்.

ஆனால் நமக்கு நம் மூதாதையரை விட மேலான தொழில் நுட்பம், பொறியியல் சாதனைகளோடு நாம் வாழ்கிறோம் என்ற மனத் தைரியம் இயல்பாக இருக்கிறது. [அதே போன்ற சுயமயக்கம் ஒவ்வொரு காலத்து மக்களுக்கும் இருந்திருக்கலாம்.] 

அது உண்மையா என்று நாம் சோதிக்கவாரம்பிக்கவில்லை. ஒப்பீட்டில் பத்து, பதினைந்து, பதினெட்டாம் நூற்றாண்டின் புத்தகங்கள் இன்னும் நமக்குக் கிட்டுகின்றன. இந்த அளவு ஆயுள் கூட நம் நூற்றாண்டு மனிதர்களின் படைப்புப் பொருட்களுக்கு இருக்குமா என்பது நமக்கு எழ வேண்டிய கேள்வி. 

இந்தக் கட்டத்துக்கான வடிவத்தோடு வெளிவரும் சொல்வனம், 250 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரசுரமாகி வரும் ஹார்ப்பர்ஸ் பத்திரிகை போல அத்தனை காலம் தாக்குப் பிடிக்குமா என்பது எங்களுக்கும் தெரியாது. ஆனால் நூறாண்டாவது தாக்குப் பிடித்தால் நல்லது என்று மட்டும்தான் தெரிகிறது. 

அதற்கான முயற்சி, திட்டமிடல் எல்லாம் என்ன என்றுதான் இன்னமும் தெரியவில்லை. இதுவரை தற்செயலாக நிகழ்ந்து திட்டமிடலுக்கு அடிபணிந்து ஓரளவு நிதானத்துடன் இயங்கும் சொல்வனம், இனி அடுத்த கட்டத்தில் என்னவாக வேண்டும்? அதை யோசித்து வருகிறோம். 

***

எல்லாமே தற்செயலாக நடப்பதில்லை, ஆனால் வாழ்வில் ஏராளமானவை தற்செயலாக நடந்து விடுகின்றன. திட்டமிட்டே அனைத்தையும் செய்வோம், அதுதான் வெற்றிக்கு வழி என்று அடித்துப் பேசுபவர்கள் ஏராளம். ஆனால் அவர்கள் வாழ்விலும் சரி, சுற்றத்தார் வாழ்விலும் சரி தினசரி எந்தத் திட்டமும் இல்லாமல் ஏதேதோ நடந்தபடியே இருக்கும், அவர்கள் அவற்றைக் கவனிப்பதுதான் இல்லை.  நாம் எதை அங்கீகரிக்க விரும்புகிறோமோ அவைதான் முக்கியம் என்று நினைக்கிறோம். எதார்த்தம் நம்மை மீறியது, நம் விருப்புகள் அதில் சிறு பகுதிதான் என்று ஒத்துக் கொள்வது நம் இருப்புக்கே ஆபத்தைக் கொணர்வதாக நாம் உணர்கிறோமா என்று யோசிக்க வேண்டி வருகிறது. 

எதிர்க் கருத்தாக, திட்டமில்லாமலே வாழ்ந்து விடலாமா, முடியுமா என்று கேட்டால், வைத்தால் நீளக் கூந்தல், இல்லையேல் மொட்டைத் தலை என்று எப்போதும் முடிவெடுத்தாக வேண்டும் என்று என்ன கட்டாயம் என்று எதிர்க்கேள்வி கேட்க வேண்டும்.  

திட்டமிடுதலைத் தவிர்க்கவோ, அதில்லாமல்தான் வாழ வேண்டும் என்றோ நான் சொல்லவில்லை. திட்டமிடுதலுக்கு ஏற்கனவே மனித மனதில், வாழ்வில், நாகரீகத்தில், வரலாற்றில் பெரிய பீடம் அளிக்கப்பட்டு அது கிட்டத் தட்ட ஒளி வட்டத்தோடு, மமதையோடு, அதிகாரத்தோடுதான் உலவுகிறது.  

தற்செயல் நிகழ்வுகள் புள்ளியியல் ஆய்வுகளில்தான் ஏதோ அங்கீகாரம் பெற்று, கவனிக்கப்படுவதால், அறிவியல் அலசல்களுக்கு ஆதாரமாகவும் ஏற்கப்படுகின்றன.  நாம் நம் தனி நபர் வாழ்வில் தற்செயல் நிகழ்வுகள் நிறைய உண்டு என்பதை அங்கீகரித்து, அவற்றுக்குக் கொஞ்சமாவது கவனிப்பைத் தரலாம் என்றுதான் சொல்ல வருகிறேன். 

ஏனெனில் 12 ஆவது வருடத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் சொல்வனம் பத்திரிகையின் தோற்றமே ஒரு தற்செயல் நிகழ்வுதான். அதில் திட்டமிடல் இல்லையா என்றால் இருந்தது. ஆனால் கருத்துருவாக, இது சாத்தியம் என்ற நினைப்பாகத் தோற்றம் பெறத் தற்செயல் நிகழ்வுகள்தான் ஆரம்பம்.  இந்தப் புள்ளியைத் தொட்டுச் சுட்டினால், பிறகு சொல்வனம் பத்திரிகையின் வாழ்வில் நடந்த பற்பல சம்பவங்கள், முன்னேற்றங்கள், சறுக்கல்கள் எல்லாம் அப்படி எதேச்சையாக நடந்தவற்றினால் என்று கவனிப்பது சாத்தியமாகும். 

சொல்வனம் பத்திரிகையின் 250 ஆம் இதழ் பிரசுரமாக நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கிய பதிப்புக் குழுவினர் இருட்டில் கல்லை விட்டெறிந்து கொண்டிருந்தார்கள். சூழ இருந்தது செழிப்பான பழமர வனம், கல் எங்கே விழுந்தாலும் பலன் கிட்டும் என்ற நினைப்பா? இல்லை. லாட்டரி போல ஏதாவது நல்லதாகக் கிட்டலாம் என்ற நம்பிக்கை. சொல்லால் ஆன வனத்தில் எதுவும் திடீரென்று நடக்குமில்லையா?

அவரவருக்குத் தெரிந்த நண்பர்கள், தாம் மதிக்கும் எழுத்தாளர்கள் என்று பலரைக் கேட்டு 250 ஆம் இதழுக்கு ஏதும் எழுதச் சொல்லி அழைத்திருந்தார்கள்.  அந்த அழைப்புகளைத் திட்டம் என்று சொல்லி விட முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் முயற்சி என்பதால் ஓரளவு திட்டம் என்று வருணிக்கலாம். 

துவக்கத்தில் இதே நிலைதான் இருந்தது. அந்த நிலை இன்றும் கூடப் பெரிதாக மாறி விடவில்லை. ஆனால் பொதுவாகப் பார்த்தால்,  துவக்கக் கட்டத்தை விட நிறைய பேர்கள் தாமாகவே பத்திரிகைக்குத் தம் படைப்புகளை அனுப்புகிறார்கள். எங்கள் முயற்சி இல்லாமல் பத்திரிகை வாசகர்களின் வட்டங்கள் வழியே பற்பல திக்குகளில் பரவி புதுப் புது வாசகக் குழுக்களைக் கொண்டு வரத் தொடங்கி இருக்கிறது. 

ஆக ஓரளவு திட்டம் என்பதைப் போல ஓரளவு தற்செயல் என்று ஏதும் இருக்கக் கூடும். மனித வாழ்வில் பெரும் நகர்வுகள் தூக்கத்தில் நடப்பவர்களுக்குப் பொக்கிஷம் கிட்டுவதைப் போலக் கிடைத்தவை என்று ஒரு ஹங்கேரிய எழுத்தாளர் தன் 1959 ஆம் வருடத்துப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.  அந்தச் சொல், ‘ஸ்லீப் வாக்கர்ஸ்’என்பது, மனித வரலாற்றையே சுருக்கி வருணிப்பதாக எனக்குத் தோன்றும்.  மாறாக இந்தியப் பாரம்பரியத்தில் முழு விழிப்புணர்வுடன் இருப்பதையே மனித குலத்திற்கான சிறப்பான குறிக்கோளாகச் சொல்கிறோம். அது மட்டுமல்லாமல் எதற்கும் கலங்காத விழிப்புணர்வும் பரிந்துரைக்கப்படுகிறது. ‘ஸ்திதப் பிரக்ஞன்’  என்ற சொல்லால் இந்து மரபு அசாதாரணமான புத்தித் தெளிவும், செயல் திறனும் கொண்டவர்களை வருணிக்கிறது. அதையே சாதாரண மனிதருக்கு வாழ்வுக்கான ஓர் இலக்காகக் கூட முன்வைக்கிறது. 

நுகர்வு, மேன்மேலும் நுகர்வு, கட்டுக்கடங்காத பொருள் உற்பத்தி ஆகியனவற்றையே நாகரீகத்தின் அடையாளம், உச்சம் என்று யோசிக்கும் உலகப் பொருளாதார அமைப்பு, மேற்கின் பிரம்மாண்ட வளர்ச்சியால் பாதிக்கப்பட்டு தீவிர யோசனை செய்ய முடியாத இயக்க கதியில் சிக்கி இருக்கிறது. அவற்றையே மதிக்கத் தக்க குறிக்கோள்களாக நம் முன் வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்திய மரபு இவற்றை இலக்காகக் கொள்வதை விலக்குவதோடு, அளவோடு நுகர்வு, பேராசை இல்லாத மனம் என்று மாற்று அணுகல்களை இலக்காக முன்வைக்கிறது. இந்த அணுகலில் உள்ளூற இருக்கும் விலகல் நோக்கு, பெரும் சோர்வுகளை விலக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கும். பெரும் உத்வேகங்களில் நாசத்தைக் கொணர்வதையும் தவிர்க்கச் சொல்லித் தரும்.

பையப் பைய நடப்பதை எழில் என்று கூட நம் மரபு கவனிக்கிறது.  சொல்வனம் அப்படி ஒரு எழிலை அடைந்திருக்கிறதா என்று இப்போதே கணிக்க எனக்குத் தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு நேர்த்தியை, எழிலை, பூரணத்துவத்துக்கு அருகில் செல்வதைச் சொல்வனம் அடைய முயல வேண்டும் என்று மட்டும் சொல்வேன். 

***

இந்த 250 ஆம் இதழ் அப்படி ஒரு நிலையை எட்டுவதற்கான முதல் சில அடியெடுப்புகளில் ஒன்று. இன்னும் பற்பல நூறுகளை இந்தப் பத்திரிகையின் இதழ் எண்ணிக்கை தாண்டி வர வேண்டும் என்பது என் அவா. 

இந்தப் பத்திரிகையின் துவக்கத்திலிருந்து இன்று வரை இதன் பதிப்புக் குழுவில் இயங்கி வரும் நபர் என்ற வகையில் என் இந்த அவா நியாயமானது என்று நான் நினைக்கிறேன். அதைச் சாத்தியமாக்குவது அடுத்தடுத்து பதிப்புக் குழுவாக வருவோரின் கடமை. 

7 Replies to “பையப் பையப் பயின்ற நடை”

  1. 12 வருடங்கள், 250 இதழ்கள் அரும் சாதனை. தரத்துடன், தமிழில் இப்படி இதழைக் கொண்டு வருவதற்கு தன்னலமில்லாமல் உழைக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். அனைத்துப் பகுதிகளிலும் சமமாக ஒளி படும் வண்ணம் ‘பையப் பையப் பயின்ற் நடை’ உண்மையான எழுத்து. மேன் மேலும் வளர்ந்து என்றும் நிலை பெற வாழ்த்துகள்

  2. இருநூற்றி ஐம்பதாம் இதழ் என்பது எந்த ஒரு பத்திரிக்கைக்கும் ஒரு நல்ல/பெரிய மைல்கல். சோர்வுதரும் குப்பைகள் நிறைந்திருக்கும் தமிழ் வலைதளங்களிடையே, தரமான பதிவுகளை, வெறும் தன்னார்வலர்களின் உதவியுடன், வியாபார நோக்கங்கள் ஏதுமின்றி பிரசுரித்து வரும் சொல்வனம் ஒரு பாலைவனச்சோலை! பதிப்புக் குழுவுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
    -சுந்தர் வேதாந்தம்.

  3. அருமையான கருத்துக்கள். தாங்கள் ஒரு சிறிய தொகையை சந்தாவாக வசூலிப்பதில் தவறு எதுவும் கிடையாது. மேலும் தங்கள் தொண்டு தொடர என் வாழ்த்துக்கள்.

  4. 250 வது இதழா? ஆச்சரியமாக இருக்கிறது. நான் கவனிக்கவே இல்லை! அதே நேரத்தில் பெருமையாகவும் உள்ளது. தமிழில் இப்படியொரு தரமான, குழு சாராத பத்திரிக்கை செழித்து வளர முடியும் என்று கட்டிய உங்களையும் , உங்கள் குழுவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துகள்!

  5. எல்லா படைப்புகளையும் படிப்பதில்லை என்றாலும் படித்தவரை ஆழமானவை.12 ஆண்டுகள் .பாராட்ட வேண்டிய சாதனை.என்னைப் போன்ற தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கும் இடம் தருவதற்கு நன்றி.

  6. சொல்வனம் குழுவினர் 250 இதழ்களை நடத்திய, அனுபவங்களை இன்றைய இணைய கருத்து பரிமாற்றச்சூழலின் பின்னணியில் திரு. மைத்ரேயன் பகிர்ந்துள்ளார். முந்தியே திட்டமிட்டதுபோல் அமைந்த இயற்கையின் ஒழுங்கமைப்புகள் ஒவ்வொன்றும் தற்செயலாகவே கண்டுணரப்பட்டுள்ளன.! ஆகவே திட்டமிடலும் தற்செயல் நிகழ்வுகளும் ஓரளவு உடனிகழ்வு இணைகோடுகளாகவே உணரமுடிகிறது ! கடந்தாய் 250. வாழி சொல்வனமே! காலாயிரம் மாதங்கள் நடந்தாய், இனி எஞ்சிய மூன்று காலாயிர மாதங்களைத் தாண்டி வைரம் பாய்ந்த. வனமாய் விழுதுவிட்டு நிற்பாய்! சொல்வனம் ஆசிரியர் குழுவினருக்கும் சகபடைப்பாளிகளுக்கும் நல்வாழ்த்துகள்

Leave a Reply to SRINIVASA RANGARAJANCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.