இராம். பொன்னு

கண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா! இப்பயிரை செந்நீரால் காத்தோம், கருகத் திருவுளமோ? என்று பாடினான் பாரதி. அந்நிய அடிமைத் தளையை அகற்றி ஆனந்த சுதந்திரம் அடைந்திட உடல், பொருள், ஆவி மூன்றையும் அமைதியாக அர்ப்பணித்துச் சென்ற நாட்டுப்பற்றாளர்கள், அவர்களின் தியாகத்தை வரலாற்றுப் பக்கங்களில் நாழும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர். அண்ணல் காந்தியின் தலைமை செல்வந்தனையும் ஏழையையும், கற்றவனையும் கல்லாதவனையும், ஆண் பெண் இருபாலரையும் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஈர்த்தது. அவரது அகிம்சை வழியைப் பின்பற்றி தாய்த் திருநாட்டிற்காக போராடுவதை தங்கள் வாழ்வில் பெரும்பேறாக கருதினர். பணம், பதவி, புகழ் என்று எதையும் நாடாது நாட்டைப பற்றியே சதா காலமும் சிந்தித்தனர். வருங்கால சந்ததியினராவது சுதந்திரக் காற்றை சுவாசித்துவிட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் விடுதலை வேள்வியில் வீர வேங்கைகளாக தம்மை ஆகுதி ஆக்கினர். காந்தி சொல்லியதை உடனே செயலில் காட்ட ஓடோடிவந்து அடிமை இருளைப் போக்கிட தங்களையே மெழுகுவர்த்திகளாக்கி ஒளிகாட்டினர். நாட்டிற்காகத் தங்கள் உயிரையே தியாகம் செய்ய முன்வந்தனர். அந்தத் தியாக சீலர்களுள் ஒருவரே ‘கொடி காத்த குமரன்’ என்று போற்றப்படும் தியாகி குமாரசாமி ஆவார்.
இளமைப் பருவம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் செங்குந்தர் மரபில் தறி நெய்யும் ஏழை நெசவாளர் குடும்பத்தில் 1904 அக்டோபர் 4ஆம் நாள் நாச்சிமுத்து முதலியார் – கருப்பாயி அம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாகக் குமாரசாமி தோன்றினார். குடும்பத்தை வாட்டி வதைத்த ஏழ்மை காரணமாகப் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் சென்னிமலையில் தற்போது குமரன் சதுக்கம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்புடன் கல்வியை முடித்துக் கொண்டு, குடும்பத்தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை செய்துவந்தார். பின்னர் பள்ளிப்பாளையம் சென்று தனது தாய் வழி மாமன் காளியப்ப முதலியார் வீட்டில் பட்டு நெசவுத் தொழிலைக் கற்றுத் தேர்ந்தார். மீண்டும் சென்னிமலை வந்து பட்டு நெசவுத் தொழிலைத் தொடர்ந்தார். ஈரோடு சென்று அங்கு பாவு நூல் வாங்கி வந்து துணி நெய்து மீண்டும் ஈரோடு சென்று விற்பனை செய்து வாழ்க்கை நடத்தினார். போக்குவரத்து வசதிகள் குறைந்த காலமாதலால் விற்பனை செய்ய மாட்டு வண்டிகளிலோ அல்லது கால்நடையாகவோ சென்று நெசவு செய்தத் துணியை சுமந்து செல்ல வேண்டியதாயிற்று.
தேசபந்து வாலிபர் சங்கம்
1923ஆம் ஆண்டு குமாரசாமி தனது பத்தொன்பதாம் வயதினில், திருப்பூர்-காங்கேயம் சாலையில் படியூருக்கு அருகிலுள்ள ஓட்டபாளையம் எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஓ.என்.சிவன்மலை முதலியார் என்பாரின் இளைய மகளான இராமாயி அம்மாளுடன் அவரது பதினான்காம் வயதினில் திருமணம் செயவிக்கப்பட்டார். தொழிலில் போதிய வருமானம் இல்லாததாலும், அலைச்சல் ஒத்துக்கொள்ளாததாலும், மாற்றுத்தொழில் தேடி குமாரசாமியின் குடும்பம் திருப்பூருக்குக் குடிபெயர்ந்தது. அங்கு வேலை தேடி அலைந்தார். வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஏற்கெனவே திருப்பூரில் குடியேறி, பருத்தி வாணிபம் செய்துவந்த அவரது மாமனார் சிவன்மலை முதலியார் தனக்கு தெரிந்த ஒ.கே.எஸ். & இ.ஆர்.ஆர்.. பருத்தி அரைக்கும் நிறுவனத்தில் எடை குறிக்கும் வேலையில் சேர்த்து விட்டார். பஞ்சு எடைபோட்டு வாங்குவது, கொடுப்பது என்ற பணியில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்பவர்களையே ஆலை உரிமையாளர்கள் வைத்துக்கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட நேர்மையாளராக குமாரசாமி இருந்தமையால் அவ்வேலை அவருக்கு அளிக்கப்பட்டது. குமாரசாமி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் கடமை தவறாது ஆறு ஆண்டு காலம் செவ்வனே பணியாற்றினார்.
சமூக மற்றும் தேசச் சேவையில் ஈடுபாடு இருந்தமையால், திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். வேலை நேரம் முடிந்ததும், சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டு மக்கள் சேவையில் தனது ஓய்வு நேரத்தை பயன்படுத்தினார். கடவுள் நம்பிக்கை உடையவராதலால் பஜனைப் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வமுடையவராக விளங்கினார். தான் குடியிருந்த வீட்டிற்கு அருகாமையிலிருந்த காமாட்சியம்மன் கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் சென்று பஜனை செய்யும் வழக்கமுடையவராக இருந்தார். மக்களிடம் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பும்விதமாக நாடகம் நடத்துவதிலும், பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வதிலும் ஈடுபட்டார். காந்தியடிகளின் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமாரசாமி, நாட்டு விடுதலைக்காக காந்திய அறவழியில் போராட மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். எனினும், குமாரசாமியின் வீட்டார் மற்றும் உறவினர்கள் அவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பதை விரும்பவில்லை. ஏனெனில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் அச்சுறுத்தல்களும் உயிருக்கு ஏதேனும் ஆபத்தும் ஏற்படக்கூடும் என்று அஞ்சினர். அவரது உறவினர்கள் அவர் பணிபுரியும் நிறுவன உரிமையாளர்களிடம் குமாரசாமியை விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு முறையிட்டனர். எல்லாவற்றையும் புறம் தள்ளி குமாரசாமி நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு காந்தியத் தொண்டராகப் பங்கேற்பதில் ஆர்வம் காட்டினார். காந்தியடிகளின் தீவிர தொண்டரான குமரன் தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினரான பின் கதராடை அணிந்தே வாழ்ந்தார்.
சட்ட மறுப்பு இயக்கம்
1929 டிசம்பர் 31ஆம் நாளன்று நள்ளிரவில், லாகூரில் ராவி நதிக்கரையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர கூட்டம் ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்றது. அங்கு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு. ‘பூரண சுயராஜ்யமே இந்திய தேசிய காங்கிரசின் குறிக்கோள்’ என பிரகடனப்படுத்தப்பட்டது. 1930 ஜனவரி 2ஆம் நாள் கூடிய காங்கிரஸ் செயற்குழு ஜனவரி 26ஆம் நாளை பூரண சுயராஜ்ய தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தது. ஆங்கில அரசுக்கெதிரான சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்திடும் முழுப் பொறுப்பும் காந்தியிடம் வழங்கப் பெற்றது. இயக்கத்தின் ஒரு பகுதியாக அண்ணல் காந்தி உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்திட முன்வந்தார்.
இந்தியக் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவையாக விளங்கின. மக்களுக்கு தேவையானைப் பொருட்கள் யாவும் தத்தம் கிராமங்களுக்குள்ளேயே உற்பத்தி செய்யப்பட்டன.. பெரும்பாலும் வெளியே இருந்து வரக்கூடிய ஒரே உற்பத்திப் பொருள் உப்பு மட்டுமே. ஆகவே அதுவே அன்றைய இந்தியாவின் மிக முக்கியமான வணிகப் பொருளாகப் பார்க்கப்பட்டது. எனவே ஆங்கில அரசாங்கம் அவ்வாணிபத்தை தனதாக்கிக் கொண்டு அதற்கு வரி விதித்ததுடன், வரி செலுத்தியவருக்கே உப்பு எடுக்கும் உரிமை உண்டு என்றும் அறிவித்திருந்தது. சமூகத்தின் அடித்தட்டு மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கிய உப்புச் சட்டத்தை மீறுவதன் மூலம் விடுதலை இயக்கத்தில் ஏழை எளிய மக்களையும் பங்குபெற செய்யலாம் என்ற எண்ணத்தில் காந்தி உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த முன்வந்தார். . உப்புச் சத்தியாக்கிரக நடைப் பயணத்திற்கு காந்தி, சபர்மதி ஆசிரமத்தில் ஒழுக்க தரநிலைகளில் நன்கு பயிற்சிப் பெற்றிருந்தவர்களைத் தேர்ந்தெடுத்தார். 1930 மார்ச் 12ஆம் நாள் காந்தியும் மற்றும் 78 ஆண் சத்தியாக்கிரகிகளும் சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள குஜராத்தின் கடற்கரையோர கிராமமான தண்டிக்கு கால்நடையாகக் நடந்து சென்றனர். பயணத்தின் போது எளிய உணவு மற்றும் தங்குவதற்கும் உடல் தூய்மை செய்துகொள்வதற்கும் ஓரிடம் தவிர கூடுதலாக எதையும் சத்தியாக்கிரகிகள் நாடவில்லை. காந்தி இந்நடைப்பயணம் பாமர மக்களை விடுதலைப் போரில் பங்கு கொள்ள வைக்கும் எனவும், அது போராட்டத்தின் இறுதி வெற்றிக்கு முன்னெடுத்துச் செல்லும் எனவும் உறுதிபட எண்ணினார்.
23 நாள்கள் நடைபயணத்திற்குப் பின், சத்தியாக்கிரகிகள் ஏப்ரல் 5ஆம் நாள் தண்டி கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். மறுநாள் காலையில், பிரார்த்தனைக்குப் பின், காந்தி உப்பை எடுத்து அரசின் உப்புச் சட்டத்தை மீறி சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினார். அதன் மூலம் ஆங்கிலப் பேரரசின் அடித்தளத்தை அசைத்து, இந்திய மக்கள் சக்தியின் ஆற்றலை காந்தி வெளி உலகத்திற்கு காட்டினார். பெருமளவிலான பெண்கள் பங்கேற்புடன், அனைத்து தரப்பு மக்களும் வரிகொடா இயக்கம், அந்நிய துணிக்கடைகள் மற்றும் மதுபானக் கடைகள் முன்பு மறியல் என வெவ்வேறு வடிவங்களில் சட்ட மறுப்பில் பங்கேற்றனர். காந்தி, தண்டி நடைபயணம் மேற்கொண்ட போது, இராஜ கோபாலாச்சாரியார் தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரையிலுள்ள வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக்கிரகம் மேற்கொண்டு ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டார். குமாரசாமி இச்ச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கு கொள்ள விரும்பினார். ஆனால் அவருக்கு வாய்ப்பு அமையவில்லை.
தண்டியைத் தொடர்ந்து நடைபெற்ற தர்சனா சத்தியாக்கிரகம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. யுனைடெட் பிரஸ் நிருபர் வெப் மில்லர் பதிவு செய்தார்: “பதினெட்டு ஆண்டு காலமாக இருபத்திரண்டு நாடுகளில் நான் மேற்கொண்ட செய்தி சேகரிப்புப் பணியில் எண்ணிலடங்கா சட்ட மறுப்பு போராட்டங்கள், கலவரங்கள், , கிளர்ச்சிகள் போன்றவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், தர்சனாவில் பார்த்த அச்சமூட்டுகின்ற காட்சிகளைப் போன்று நான் எங்குமே பார்த்ததில்லை…ஒரு ஆச்சரியமான விஷயம் யாதெனில் தொண்டர்களின் நேர்த்தியான் ஒழுங்குமுறையே. அவர்கள் யாவரும் காந்தியின் அகிம்சை நெறியில் நன்கு பயிற்சி பெற்று ஊக்குவிக்கப்பெற்றவர்கள் என்பதைக் காட்டியது. ஒரு சத்தியாக்கிரகி கூட தன் மீது விழும் அடியிலிருந்து தன்னைக் காக்கும்விதமாக தனது கரங்களைக் கூட உயர்த்தவில்லை. அவர்கள் பந்து உருட்டும் விளையாட்டின் மர முளைகளைப் போல் விழுந்தனர். நான் நின்றிருந்த இடத்திலிருந்து தொண்டர்களின் தலைகளின் மீது விழுந்த அடிகளின் ஒலிகளைக் கேட்டேன். பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் தேம்பி அழுதது.. அடிபட்டவர்கள் கைகால்களை நீட்டியவாறு விழுந்தனர், உடைந்த மண்டை அல்லது முறிந்த தோள்பட்டை வலியுடன் சுய நினைவற்று சுருண்டு நெளிந்து வீழ்ந்தனர். இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் சத்தியாக்கிரக இடம் யாவும் வீழ்ந்து கிடந்த தொண்டர்களின் உடல்களால் நிரம்பியது. அவர்களது வெள்ளை ஆடைகளில் மிகுதியான இரத்தக் கறைகள் படிந்தன. மீதமிருந்தவர் வரிசையை மீறாமல் அமைதியாக மற்றும் விடாப்பிடியாக அடிபட்டு விழும் வரை நடந்தனர்”. உப்பு சத்தியாக்கிரக இயக்கம் காந்தி நடைமுறைப் படுத்திய அகிம்சையின் பேராற்றலை உலகிற்கு உணர்த்தியது. உலக வரலாற்றில் ஒரு அரசியல் போராட்டமானது முழுமைபெற்ற அகிம்சை வழியில் நடத்தப்பட்டது இதுதான் முதல் முறையாகும். அகிலத்தோர் வியக்கும் வகையில் எம்மாதிரியும் இல்லாத புதுமாதிரியாய் அகிம்சை வழிப் போராட்டம் அமையப் பெற்றதனை இது பறை சாற்றியது. இப்போராட்டத்தின் போது, 80 ஆயிரம் நாட்டுப்பற்றாளர்ர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்’ என கணக்கிடப்பட்டது. அமெரிக்காவின், டைம்ஸ் பத்திரிகையின் கணிப்பீட்டின்படி, உலக நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய 10 போராட்டங்களுள் காந்தியின் உப்பு சத்தியாக்கிரகமும் ஒன்று என பதிவு செய்யப் பெற்றுள்ளது. மே 4அன்று நள்ளிரவில், காந்தி கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி சிறைவைக்கப்பட்டார்.
சட்ட மறுப்பு இயக்கத்தை ஒடுக்கும் விதமாக 1932ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டன. சட்டமறுப்பு இயக்கம், அதனைச் சார்ந்த மறியல் போராட்டங்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின. ஆங்கில அரசின் அடக்குமுறையினை எதிர்த்து மக்கள் போராட்டம் நாடெங்கிலும் மேலும்மேலும் வலுவடைந்தது. நாட்டின் விடுதலை வேள்வியில் காந்தியடிகள் எண்ணியவாறு சமூகத்தின் அடித்தட்டு மக்களும் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றனர். ஜவஹர்லால் நேரு குறிப்பிடுவதைப் போன்று, ‘இவ்வியக்கத்தின் உண்மையான முக்கியத்துவம், நமது சொந்த மக்களின் மீது ஏற்படுத்திய தாக்கத்தில் இருக்கிறது. குறிப்பாகக் கிராம மக்களை அவர்களின் தாழ்வான எண்ணத்திலிருந்து வெளிக்கொண்டுவந்து, அவர்களுக்குத் தன்மானத்தையும் தற்சார்பையும் கொடுத்தது… அவர்களை துணிச்சலுடன் செயல்பட வைத்தது.; மேலும் அநீதியான ஒடுக்குமுறைக்கு அவர்கள் அடிபணியவில்லை; அவர்களின் புறப்பார்வை விரிவடைந்தது; இந்தியா முழுமைக்குமாக என்ற வரையறையில் அவர்கள் சிறிதளவு சிந்திக்கத் துவங்கினர்….அது ஒரு நினைவு கூறத்தக்க மாற்றமாகும்’.
திருப்பூரில்
இந்தியாவின் பிற இடங்களைப் போன்று திருப்பூரிலும் காங்கிரஸ் கட்சியின் கிளை கலைக்கப்பட்டது; கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது. காந்தியடிகளின் கைதால் மக்கள் வெகுண்டெழுந்தனர். திருப்பூரிலும் மற்ற இடங்களிலும் சட்ட மறுப்பு நடவடிக்கைகள் சூடுபிடித்தன அங்கு அமுலில் இருந்த அரசின் தடை உத்தரவினை மீறி நகரில் நொய்யல் ஆற்றுப் பாலத்திற்கு மேற்குப் பகுதியிலுள்ள அகன்ற மணற்பரப்பில் பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர், கே.எஸ்.இராமசாமி கவுண்டர், கே.ஆர்.ஈஸ்வர மூர்த்தி கவுண்டர், பி.எஸ்.சுந்தரம் ஆகியோர் ஏற்பாட்டில் 1932 ஜனவரி 6 அன்று மாலை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தீர்மானித்தவாறு, ஜனவரி 10ஆம் நாள் சட்ட மறுப்பினை உணர்த்த ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது. தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஊர்வலத்துக்கு கே.ஆர்.ஈஸ்வர மூர்த்தி கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியிருந்தது. ஊர்வலத்துக்கு முதல் நாளன்றே, மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர் தம்பதியினர் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். கே.ஆர்.ஈஸ்வர மூர்த்தி கவுண்டர் தலைமையேற்று நடத்துவதிலிருந்து ஏனோ பின்வாங்கிக் கொண்டார். இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரமே ஊர்வலத்துக்கு தலைமை தாங்க நேர்ந்தது. அவரது தலைமையில், குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன் செட்டியார், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் யாவரும் சீருடை அணிந்து காங்கிரஸ் கட்சியின் மூவர்ணக் கொடிகளை ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலம் திருப்பூர் மங்களவிலாஸ் முன்பிருந்து தொடங்கியது. ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களிடையே பி.எஸ்.சுந்தரம் எழுச்சி உரை ஆற்றினார். கே.எஸ்.இராமசாமி கவுண்டரின் மனைவி கொவிந்தம்மாளும் மகள் முத்து லட்சுமியும் ஊர்வலத்தில் செல்ல இருப்பவர்களை ஆரத்தி எடுத்து நெற்றித் திலகமிட்டு வாழ்த்தியனுப்பினர். ஊர்வலத்தில் பங்கேற்றோர் இரண்டு இரண்டு பேர்களாக வரிசையாக தேசிய முழக்கங்களோடு சென்றனர். அவர்கள் கைகளில் தேசியக்கொடியைத் தவிர வேறு ஆயுதம் எதுவுமில்லை. குமாரசாமி தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டு தலை நிமிர்ந்து ஊர்வலத்தின் முன்னதாக ஏறுநடை போட்டுச் சென்றார். வி.இராமானுஜம் என்ற துவக்கப்பள்ளி ஆசிரியர் பின்னாளில் நாளிதழ் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், “குமரனிடம் நான் கொடியை கொடுப்பதைப் பார்த்த காவல்துறையினர் என்னை உதைத்து அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில் தள்ளினர்” என்று, தானே குமரனிடம் கொடி எடுத்து கொடுத்ததாக கூறியுள்ளார்.
சாலையின் இருமருங்கிலும் மக்கள் ஒருவித திகில் உணர்வுடன் பிரார்த்தினை செய்தவாறு நின்றுகொண்டிருந்தனர். ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்களோ,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
என்ற பாரதியின் பாடலில் கண்டவாறு அச்சம் தவிர்த்து, தாய் திருநாட்டின் அடிமை விலங்கை அறுத்தெறியப் புறப்பட்ட காந்தியத் தொண்டர்களாக, ‘வந்தே மாதரம்’ ‘மகாத்மா காந்திக்கு ஜே’, ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று ஓங்கி முழக்கமிட்டவாறு சென்று கொண்டிருந்தனர். வழிநடைப் பாட்டாக நாமக்கல் கவிஞரின் “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடலை எழுச்சியோடு பாடிச் சென்றனர். ஊர்வலம் கச்சேரி வீதி வழியாக வடக்கு காவல் நிலையம் முன் வந்து கொண்டிருகையில், சுமார் 30 காவலர்கள் தடிகளுடன் காவல் நிலையத்திலிருந்து ஓடி வந்தனர். எச்சரிக்கை ஏதும் செய்யாமல் ஊர்வலத்தில் வந்தோரைத் தடுத்து கண்மூடித்தனமாக தாக்கினர். அண்ணலின் அகிம்சைப் படை அயுதமேந்திய காவலர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் காவலர்கள் அடித்து நையப் புடைத்தனர். கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர். தொண்டர்கள் காவலர்களின் தாக்குதலுக்கு எவ்வித மறுப்பும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மண்டைகள் உடைந்தன; கை கால்கள் முறிந்தன. தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரம் குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டு கொட்டியது. எனவே, மயக்கமுற்று மண்ணில் சாய்ந்தார். ஆனால், குமாரசாமி எனும் அந்த வீரத் தியாகி உணர்வற்று தரையில் வீழ்ந்த போதிலும், அவன் கையில் பிடித்திருந்த கொடி மட்டும் கீழே விழவேயில்லை. அவன் கை உறுதியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு காவலர் சிரமத்துடன் பிடித்து இழுத்து தரையில் வீசி எறிந்தார். உயிர் பிரியும் நிலையிலும், விடுதலை இயக்கக் கொடியினை அந்நியர்களுக்கு தலை வணங்காமல் கையில் தூக்கிப் பிடித்து நாட்டின் மானம் காத்தமையால் கொடிகாத்த குமரன் என்று பின்னாளில் தமிழ் மக்களால் போற்றப்பட்டார்.
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள்
நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்.
என்று பாரதி பாடியதனை, ம.பொ.சி. குமரனின் தியாகத்துடன் ஒப்பிட்டு கூறுவார். ‘அவ்வீரர்’ என்று சுட்டிக்காட்டியது குமரனைத் தான் போலும்; ‘நம்பற்குரியர்’ என்று குறிப்பிட்டது, உயிருள்ளவரை கையிலிருந்த கொடியை விடாத நிலையைத்தான் போலும்; ‘தங்கள் நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்’ என்பதனை , குமரனின் வரலாறே மெய்ப்பித்துவிட்டது என்று சிந்தித்த ம.பொ.சி. பாரதியின் கவிதை வரிகளுக்கு குமரன் பொருளானார்’ என்று கூறுவார்.
மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தன. ஆனால், காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை. காவலர்கள் அடித்த அடியில் அவரது கேட்கும் திறன் முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு ஆகிய அங்கங்களில் பத்திற்கும் மேற்பட்ட எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. விடுதலை போராட்டத்தில், இந்நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராகவும் காது கேளாதவராகவும் வாழ நேர்ந்தது கொடுமையாகும். .அடிபட்டு வீழ்ந்த சுந்தரம், குமாரசாமி, இராமன் நாயர் ஆகிய மூவரையும் காவலர்கள் தூக்கி, பொருட்களை வீசுவது போல ஒரு கட்டை வண்டியில் வீசி, மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். ஏனைய தொண்டர்களை அவர்களது உற்றார் உறவினர் தூக்கிச் சென்றனர். பிறகு காவல் துறையினரின் கோரத் தாண்டவம் திருப்பூரை திக்கு முக்காட வைத்தது. வெறிபிடித்தவர்களைப் போன்று திறந்திருந்த கடைகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்தும் கண்ணாடிகளையும் தேசத் தலைவர்களின் படங்களையும் போட்டு உடைத்தும் துவம்சம் செய்தனர். அன்று இரவு முழுவதும் நகரில் மயான அமைதி நிலவியது. இவ்வளவு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டபின்னரும் அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் போலீஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது கொடுமையிலும் கொடுமையாகும்.
மரண அடிபட்ட குமாரசாமிக்கு மண்டை உடைந்து இரத்தம் வெளியேறிய நிலையில், நினைவு திரும்பவில்லை. ஜனவரி 10ஆம் நாள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமாரசாமி 11ஆம் நாள் காலையில் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. குமாரசாமி நாட்டின் விடுதலைக்காகப் போராடி தடியடி பட்டு தனது 28ஆவது வயதில் உயிர் நீக்க நேரிட்டது. சாவை சடங்காக நினைக்கும் மனிதர்கள் நடுவே அதை சரித்திரமாக்கியவர் தியாகி குமாரசாமி.
குமரனின் உடலை ஒரு துணியால் கட்டி, மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூளியில் கிடத்தி, மூடி மறைத்து தூக்கிச் சென்று காவல்துறையினரால் அடக்கம் செய்யப்பட்டது. காவல்துறை இரகசியமாக சவ அடக்கம் செய்தமையால்,, உற்றார் உறவினர் யாரும் குமரனின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று. ஆட்சியாளர்களின் அடக்குமுறை, காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கை, அதனால், மக்கள் மத்தியில் ஏற்பட்ட பீதி உணர்வு இவற்றினால் மக்கள் தத்தம் வீடுகளை விட்டு வெளியே வர இயலாமல் இருந்திருக்கலாம் எனவே அடக்கம் செய்யப்பட இடம் எது என்றும் உறுதியாக இதுகாறும் உறுதியாக அறியப்பட வில்லை என்று கூறப்படுகிறது. திருப்பூர் மருத்துவமனைக்கு தென்கிழக்கில் உள்ள சங்கிலிப்பள்ளத்தில் தான் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்பது செவிவழிச் செய்தியாக உள்ளது.
தொண்டர்கள் மீதான வெறித் தாக்குதலை முன்னின்று நடத்திய காவல்துறை ஆய்வாளர் முகமது குமரனின் மரணத்தினால் கோபமுற்ற திருப்பூர் மக்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொலைவிலுள்ள வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். எனினும் திருப்பூர் நகரில் காவல்துறையினரின் கெடுபிடிகள் தொடர்ந்தன. தேசபந்து இளைஞர் சங்க அலுவலகம் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. நகரில் கதரணிந்து காந்தி குல்லாய் தரித்து வீதிகளில் செல்வோர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். தெருவில் சென்று கொண்டிருக்கையில் சிதம்பரம் ஐயர் என்பவர் தாக்கப்பட்டு உயிர் துறந்தார்.
கொடிக்கு மரியாதை செலுத்துவது என்பது தாய் நாட்டிற்கு அளிக்கும் மரியாதையெனவே தொண்டர்கள் கருதினர். நாட்டின் குறிடாகவே கொடி உற்று நோக்கப்பட்டது. சட்ட மறுப்பு இயக்கத்தில் கொடியின் பெருமையை நாட்டுக்குணர்த்தி தனது உயிரைத் தியாகம் செய்து நீங்காப் புகழை சேர்த்துக்கொண்டார் குமாரசாமி.. தன்னைத் தானே அர்ப்பணம் செய்வது என்பதான சத்தியாக்கிரகியின் தனித்துவமிக்க இயல்பிணை குமாரசாமி வெளிப்படுத்திச் செறார். சட்டமறுப்பில் தன்னையே ஆகுதியாக்கி கொடியின் பெருமையை நிலைநாட்டி உயிநீத்த குமாரசாமி ‘”கொடி காத்த குமரன்” என்று போற்றப்பட்டார்.
நினைவைப் போற்றி

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில், நாட்டின் விடுதலையின் பத்தாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, 1957 ஆகஸ்ட் 15ஆம் நாள் திருப்பூரில் தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பக்கம் குமரன் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. 1991 ஏப்ரல் 7ஆம் நாள் ஸ்தூபியின் பின்புறம் குமரன் நினைவு மண்டபம் ஒன்றும் கட்டப்பெற்றுள்ளது. அதனுள், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1997 ஆகஸ்ட் 15 அன்று இந்திய விடுதலைப் பொன்விழாவின்போது குமரன் அடிபட்டு வீழ்ந்த நினைவிடம் சீரமைக்கப்பெற்றது. அதே நாளன்று, தினமலர் நாளிதழ் சார்பாக ‘விடுதலப் பொன்விழா ஓட்டம்; குமரனின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் நடைபெற்றது. திருப்பூரில் சாலை ஓன்று குமரன் சாலை என்றும் கல்லூரி ஒன்று அவரது பெயரைத் தாங்கியும் அவர் நினைவை போற்றிடும் வகையில் உள்ளன. வருங்கால சந்ததியினருக்கு, விடுதலைப் போராட்டத்தின் பெருமையை உணர்த்தும் வகையில், 2015ஆம் ஆண்டு திருப்பூர் குமரன் பிறந்த அக்டோபர் 4ஆம் நாள் அரசு விழாவாக மாநில அரசால் கொண்டாடப்பெற்றது. பிறந்த நாள் விழா ஊர்வலம், குமரன் சிலையில் இருந்து புறப்பட்டு, காதர்பேட்டை, நஞ்சப்பா பள்ளி ரோடு, நேரு வீதி வழியாக, தெற்கு ரோட்டரியை அடைந்தது.

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று குமரனின் நூறாவது பிறந்த நாள் நிறைவை யொட்டி, அவர் நினைவை போற்றும் வகையில் 2004 அக்டோபர் 4ஆம் நாள் சிறப்பு தபால் தலை ஒன்று இந்திய அரசால் அவர் பிறந்த சென்னிமலையில் வெளியிடப்பட்டது.
பல்வேறு விடுதலை இயக்கத் தியாகிகளின் உறவினர்கள் திருப்பூர் குமரனின் தியாகத்தை மதித்து போற்றும் வகையில், திருப்பூரில் அவர் தன் இன்னுயிரை தியாகம் செய்த இடத்தில் ஒரு நினைவு வாயில் அமைத்திடுமாறு மாநில அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.
“கொடி காத்த’ திருப்பூர் குமரனுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கக் கோரியும், குமரனின் அகிம்சை போராட்டம், தேச உணர்வு ஆகியவற்றை இன்றைய இளைய தலைமுறையிடம் கொண்டு செல்லும் வகையில், திருப்பூர் குமரன் உயிரிழந்த ஜனவரி 11ஆம் நாளை “தேசப்பற்று, அகிம்சை வளர்க்கும் நாள்’ என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும், அவர் பிறந்த இடமான சென்னிமலையில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் எனவும் “கொடிகாத்த திருப்பூர் குமரன் இளைஞர் பேரவை’ சார்பில் புது டில்லி ஜந்தர் மந்தரில் 2014 அக்டோபர் 4 சனிக்கிழமை அன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
பொதுவாக, உலக நாடுகளில் நடைபெற்ற விடுதலை இயக்கங்களின் வரலாற்றில் தலைமையேற்று நடத்திய தலைவர்களே பெருமையாகப் பேசப்படுவதுண்டு. ஆனால், இந்திய விடுதலை இயக்கத்தில் மட்டும் தலைமையேற்று நடத்திய அண்ணல் காந்தி அடிகள் மட்டுமன்றி அவரது தொண்டர்களும் தங்களின் உயரிய தியாகத்தால் மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடமும் நிலைத்தப் புகழும் பெற்றனர். இந்திய விடுதலை இயக்கத்தின் சிறப்பியல்புகளில் ஒன்றாக இன்றும் நினைவு கூரப்படுகிறது. காந்திய இயக்கத்தில் ஒர் ஏழைத் தொண்டன் கூட தனது தனிப்பட்டப் பங்களிப்பால் பேரும் புகழும் அடைய முடிந்தது. அது தான் அண்ணல் வழங்கிய அகிம்சை நெறியிலான இயக்கத்தின் தனித்துவ பெருமையாகும். தொண்டனாய்- சத்தியாக்கிரகியாய்- சட்டமறுப்பில் பங்கேற்று விடுதலை போராளியாய்- வறுமையிலும் குடும்ப நலம் ஒதுக்கி, நாட்டின் நலம் ஒன்றையே கருத்தில் கொண்டு தன்னுயிரை ஈந்து தியாகச் சுடராய் குமரன் மிளிர்ந்தார். விடுதலை இயக்கத்தில் எத்தனையோ தொண்டர்கள் தடியடிப்பட்டு மாண்டுள்ளனர் என்றாலும் குமாரசாமி நாடறியும்படியாகத் தனிப்புகழ் பெற்றுள்ளார். ஏனெனில், அடிபட்டு வீழ்ந்தாலும் தாய் திருநாட்டின் கொடியை கையில் கட்டியாக பிடித்தவாறே இருந்ததுதான். கொடி என்றதும் உடனடியாக எல்லோருடைய நினைவலைகளிலும் ஓடி வருவது “கொடி காத்த குமரன்” தான். ஏனெனில், காவலர்களின் தாக்குதலால் மயக்கமுற்று வீழ்ந்த போதிலும், தேசிய கொடியை தரையில் வீழாது, உயர்த்திப்பிடித்து, நாட்டுப்பற்றின் எல்லையை கொடி மூலம் தொட்டுக் காட்டிய தியாக செம்மல் குமரன்.
ஆம்!
கொடியின் மகத்துவத்தை தனது வீர மரணத்தின் வாயிலாக பறைசாற்றி இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு புதிய அத்தியாயத்தினை எழுதிச் சென்றது அத்தியாகத் திருவுரு.
………………………………………..
(கட்டுரை ஆசிரியர் மேனாள் முதல்வர், காமராஜர் அரசு கலைக் கல்லூரி, சுரண்டை, தென்காசி மாவட்டம்.)
EXCELLENT
Thank you
குமரனின் தியாகவாழ்வை விவரித்த ஆசிரியருக்கு மிக்க நன்றி! ஐம்பதுகளில் கரூரில் வளர்ந்தவன் நான். நகரப்பூங்காவின் நடுவில் கொடியைத் தாங்கிய அவர் சிலை. அந்தப் பக்கம் போகும்போது எல்லாம் என் கைகள் தாமாகவே கூப்பிக்கொள்ளும்.