- காருகுறிச்சியைத் தேடி…
- காருகுறிச்சியைத் தேடி… (2)
- காருகுறிச்சியைத் தேடி… (3)
நாங்கள் ஜானகிராம் ஓட்டலுக்குத் திரும்பினோம். கிருஷி விடைபெற்றுக் கொண்டார். தீபக்கும் நானும் ஓட்டலில் இரவுச் சாப்பாட்டைத் தருவித்தோம். சிப்பந்தி எடுத்து வருவதற்குள் எனக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டது. சாப்பிட்டதும் தீபக்கிடம் விடைபெற்றுக் கொண்டு அறைக்குச் சென்று நன்றாகத் தூங்கினேன்.
அடுத்த நாள் காலையில் சீக்கிரமே கிளம்பிவிட்டோம். கௌரிசங்கருக்கு உடல்நலமில்லாததால் அன்று எங்களுடன் கலந்துகொள்ள இயலவில்லை. இருப்பினும் ஃபோனிலேயே நாங்கள் ஆயக்குடி சென்று மந்திரக் கம்பரைச் சந்திக்க எல்லா ஏற்பாடும் செய்திருந்தார்.

நாங்கள் சந்திக்கப் போகும் கலைஞர் பெயர் மந்திரக் கம்பர் என்பதைத் தவிர வேறு எந்த விவரமும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. நாங்கள் ஆயக்குடியை அடைந்த போது மந்திரக் கம்பரின் மகன் எங்களை வரவேற்று மாடிக்கு அழைத்துச் சென்றார். மாடி அறையின் வாசலில் கிட்டத்தட்ட பத்து இளைஞர்கள் நின்றிருந்தனர்.
மந்திரக் கம்பர் இதுவரை இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாகஸ்வர கலைஞர்களை உருவாக்கியிருக்கிறாராம். எப்போதும் அவரிடம் பயிற்சி பெரும் மாணவர்களின் எண்ணிக்கை முப்பதுக்குக் குறையாமல் இருக்குமென்று தெரிய வருகிறது.
நாங்கள் அறைக்குள் சென்று அமர்ந்ததும் எழுபது வயது மதிக்கத்தக்க மந்திரக் கம்பர் வந்தார்.
வந்த விவரத்தை தீபக் சொன்னதும், “நான் அப்பம் சின்னப்பையன். எனக்கு அவ்வளவு விவரம் பத்தாதுல்லா! எங்க அண்ணாச்சி இருந்தார்னா எல்லா விவரமும் சொல்லுவார்”, என்றார்.
“அண்ணாச்சி யாருங்க,” என்று நான் கேட்டதற்கு.
“பத்தமடை ராசானு கேள்விப்பட்டிருப்பீங்களே. அவரு என் கூடப் பொறந்த அண்ணன்.”
மீனாட்சி கம்பர் பத்தமடை ராசாவைப் பற்றி அவ்வளவு சொன்ன போதும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. கௌரிசங்கரின் மாணவரின் புண்ணியத்தில் இவரைச் சந்திக்க முடிந்தது.
“காருகுறிச்சியார் எங்க வீட்டுல நல்லாப் புழங்குவாங்க. எங்க அம்மா கிட்ட உரிமையா அவங்களுக்குப் பிடிச்சதைச் சமைச்சுக் குடுக்கச் சொல்லுவாங்க. ஊரில இருந்தா அண்ணாச்சிய வந்து பார்க்காம இருக்கமாட்டாங்க,” என்று தன் நினைவுகளைப் பகிர ஆரம்பித்தார்.
“கன்யாகுமரி சுடலையாண்டி கம்பர் காருகுறிச்சியாரோட போட்டி நாகஸ்வரம் மாதிரி இருந்து இருக்கார். அவர்கிட்ட ரெண்டாவது நாயனமா இருந்த உங்க அண்ணன் கிட்ட எப்படி இவ்வளவு நெருக்கமா பழக முடிஞ்சுது?” என்று சந்தேகத்தைக் கேட்டேன்.
“அண்ணாச்சி சுடலையாண்டி கம்பர் கிட்ட வாசிக்கப் போறதுக்கு முன்னாடியிலிருந்தே எங்கக் குடும்பத்தோட காருகுறிச்சியாருக்கு சம்பந்தம் உண்டில்லா. ஆரம்ப நாள்ல அப்பா நாயனத்துக்கு தாளம் போட்டு இருக்காரே. ராசரத்தினம் பிள்ளை வந்து கூட்டிகிட்டு போறதுக்கு முன்னாடி அப்பா கிட்ட சந்தேகம் எல்லாம் நிறைய கேட்டுத் தெரிஞ்சுகிட்டு இருக்கார்,” என்றார்.
சுத்தமல்லி சுப்பையா கம்பர் என்று புத்தகங்கள் குறிக்கும் குருநாதரைத் தவிர அந்தச் சுடர்விளக்கை ஆரம்ப நாளில் தூண்டிவிட்ட தூண்டுகோல்கள் பலவற்றின் பெயரையாவது தெரிந்துகொள்ள இந்தப் பயணம் அமைந்ததில் எனக்குப் பெரிய திருப்தி.
”தெரிஞ்ச கீர்த்தனையா இருந்தாக் கூட அதைக் காருகுறிச்சியார் வாசிச்சா அவரோட முத்திரை இருக்கும். ஓய்வா இருக்கும் போது அவருக்குத் தெரிஞ்ச சிலரோட உட்கார்ந்து கீர்த்தனையை நகாசு பண்ணுவாங்க. அண்ணாச்சி ஊருல இருந்தா அவரும் நிச்சயம் அந்தக் கூட்டத்துல இருப்பாரு. அதனால அண்ணாச்சியோட வாசிப்பிலையும் அந்தப் பாதிப்பைப் பார்க்கலாம்,” என்று தொடர்ந்தார் மந்திரக் கம்பர்.
“நேஷனல் பிரோகிராம்-ல உங்க அண்ணன் அவர்கூட வாசிச்சு இருக்கார் இல்லையா?” என்று தூண்டிவிட்டேன்.
“ஆமாம்! உள்ளூர் ரேடியோ ஸ்டேஷன்ல ரொம்பக் கெடுபடி பண்ணினாங்க. அவரு குடுத்த பட்டியல்ல எந்தெந்த ராகம் எத்தனை எத்தனை நிமிஷம்-னு சரியாச் சொன்னாத்தான் புரோகிராம்-ல வாசிக்கலாம்-னு ரொம்ப கறாரா பேசியிருக்காங்க. அவருக்கு அது பிடிக்காததால ‘உங்க புரோகிராமே வேண்டாம்’-னு சொல்லிட்டார். அடுத்த வாரமே டில்லியில இருந்து அழைப்பு வந்துடுச்சு. அதுக்கு அண்ணாச்சிதான் கூடப் போய் வாசிச்சாங்க,” என்றார் பெருமை பொங்க.
”நீங்க வளர்ந்து வரும்போது காருகுறிச்சியார் உச்சியில இருந்துருப்பார். அது உங்களைப் பாதிச்சு இருக்கா?”
“பாதிக்காம இருக்குமா! குறிப்பா நிறைய உருப்படி பாடம் பண்ணனும்னு ஆசை அவர் வாசிப்பைக் கேட்டுதான் வந்துது. முக்கூடல்ல நான் ராசரத்தினம் பிள்ளை வாசிச்சே கேட்டு இருக்கேன். ராகமெல்லாம் பெருசுதான். ஆனால் ரெண்டு கண்டி ஊதுனார்னா முழுப்பாட்டு முடிஞ்சுடும். அந்தக் கீர்த்தனைக்கு தக்க சங்கதி போட்டு பங்கீடா ஆக்கினது காருகுறிச்சியார்தான். அண்ணன் நிறைய வர்ணம் வாசிப்பாங்க…”, என்று தொடர ஆரம்பித்தார். நான் குறுக்கிட்டு, “நிறைய வர்ணம் வாசிப்பாரா? நம்ம கிட்ட இருக்கற பதிவுல கானடாதானே இருக்கு,” என்று கேட்டேன்.
“நிறைய வாசிப்பாரு. அவரைக் கேட்டுதான் நாமும் நிறைய பாடம் பண்ணனும்னு ஆசைல – வர்ணம் மட்டும் எண்பது பாடம் பண்ணியிருக்கேன்,” என்றார்.
“மறக்கமுடியாத கச்சேரினு எதைச் சொல்லுவீங்க,” என்று தீபக் கேட்டார்.
“கேட்ட எதையுமே மறக்கமுடியாதுதான். தோடி, காம்போஜி எல்லாம் அப்படி வாசிப்பாங்க. ஒருக்கா கோவில்பட்டியில அவரு வீட்டுக்கு எங்க அண்ணாச்சியோட போயிருந்தேன். அப்ப அவரு வீட்டுல உட்கார்ந்து சாதகம் பண்றாரு. காம்போஜி ராகம் அப்படி வாசிக்கறாரு! வீட்டு வாசல்ல அவ்வளவு கூட்டம் – இவரு வாசிக்கறதைக் கேட்கறதுக்குனே நிக்குது. ‘மா ஜானகி’ கீர்த்தனையை வாசிச்சது இன்னும் காதுக்குள்ளையே இருக்கு. ”
“இங்க பக்கத்துல எந்த கிராமத்துல வாசிச்சாலும் போவீங்களா?”
“ஆமாம்! போகாமலா பின்ன? இதைச் சொல்லும்போது செவல்ல நடந்த கல்யாணக் கச்சேரி நினைவுக்கு வருது. அண்ணாச்சி கல்யாணத்துல வாசிக்கறாங்கன்னா முதல்லையே அதை நடத்தறவங்ககிட்ட கேட்டுக்குவாங்க. தூரத்துல இருந்து வரவங்களுக்கு சாப்பாடு போட முடியுமா-னு தெரிஞ்சுகிட்டு, முடியாத சூழல்ல அவாளே ஏற்பாடு பண்ணிடுவாங்க. செவல்ல நடந்த கல்யாணத்துல, “அதெல்லாம் யாரு வந்தாலும் பார்த்துக்கலாம்”-னு கல்யாண வீட்டுக்காரங்க சொல்லி இருக்காங்க. கச்சேரி முடிஞ்சதும் அவங்க சொன்ன மாதிரி நடந்துக்கலை. ரசிகர்களைக் கொஞ்சம் மரியாதைக் குறைவா நடத்திட்டாங்க. அண்ணாச்சிக்கு அதைப் பார்த்துட்டு சரியான கோவம். உடனே சந்திர விலாஸுக்குச் சொல்லி அத்தனை பேருக்கும் தன் செலவுல சாப்பாடு ஏற்பாடு செஞ்சாங்க. அப்புறம் எவ்வளவு கெஞ்சியும் கல்யாண வீட்டுல சாப்பிட மறுத்துட்டாங்க.”
வந்தோம், வாசித்தோம், பணம் வாங்கினோம் என்பதை மீறி ரசிகர்களுக்காக செல்வாக்குள்ளவர்கள் தொடர்பையும் உதறித் தள்ளிய காருகுறிச்சியாரின் குணம் என்னை வாயடைக்கச் செய்தது. அங்கு நிலவிய மௌனத்தை தீபக்தான் கலைத்தார்.
“தாத்தா, பத்தமடை ராசாவுக்கு ஏதோ செயின் போடறா மாதிரி படம் இருக்குனு கேள்விப்பட்டிருக்கேனே. உங்ககிட்ட இருக்கா?”
“அது வம்பாப் போயிடுச்சு,” என்றார் மந்திரக் கம்பரின் மகன்.
எனக்கு முதலில் ‘வம்பாப் போயிடுச்சு’ என்பதன் பொருள் புரியவில்லை. இந்த நிகழ்வால் ஏதேனும் சண்டை வந்துவிட்டதோ என்று நினைத்தேன். பின்னால்தான் அந்த புகைப்படம் தொலைந்துவிட்டதை இப்படிச் சொல்கிறார் என்று புரிந்துகொண்டேன்.
“இந்தச் செயினைப் பத்தி தெரியல. ஆனால் காருகுறிச்சியார் அண்ணாச்சிக்கு நிறையக் குடுத்து இருக்கார். ஒரு தடவை பெரிய சாதரா ஒண்ணு கொடுத்தார். வெள்ளிச் சரடு போட்டு நூத்த அந்தச் சாதராவைத் தூக்கறதே பெரும்பாடு. இவ்வளவு கனத்தைப் போர்த்திகிட்டு எங்கேர்ந்து வாசிக்கறதுனு அண்ணாச்சி சொல்லுவாங்க. நரசிங்கம்பேட்டைக்கு கூட்டிக்கிட்டுப் போய் அண்ணாச்சிக்கு காருகுறிச்சியாரே நாயனம் எடுத்துக் கொடுப்பார். திருவாலங்காடு சுப்ரமண்ய பிள்ளை-னு ஒருத்தர் டஜன் டஜனா மணியான சீவாளி எடுத்துகிட்டு வருவாரு. அதுலேருந்தும் அண்ணாச்சிக்குக் குடுப்பாங்க,” என்றார் நெகிழ்ந்தபடி.
“ஈஸ்வரமூர்த்தி-ங்கற பேரை ராசா-னு மாத்தினதே காருகுறிச்சியார்தானாமே,” என்று சிவகுமார் சொன்னதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
“ஆமாம்! வீட்டுல அம்மா அண்ணாச்சியை ராசானு கூப்பிடுவாங்க. ‘அத்தை! அவன் நெசமாவே ராசாதான்’-னு காருகுறிச்சியார் சொல்லுவார். பத்தமடை ராசா-னே உன் பேரைப் போட்டுக்க மாப்ள-னு அவர்தான் சொன்னாரு. காருகுறிச்சியார் அவ்வளவு சீக்கிரம் போவாருனு யாருமே எதிர்பார்க்கலை. அண்ணாச்சியைச் சமாதானப்படுத்த ரொம்பக் கஷ்டப்பட்டோம். நினைச்சு நினைச்சு அழுவாரு. எங்களுக்கே இப்பவரைக்கும் தாங்கல, அண்ணாச்சிக்கு எப்படித் தாங்கும்,” என்று கலங்கினார் மந்திரக் கம்பர்.
அப்போது தேநீர் வந்தது. இருந்த சூழலுக்கு அந்தச் சூடு இதமாக இருந்தது.
நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்கிச் சில நிமிடங்கள் சுத்த தன்யாஸி ராகம் வாசித்துக் காண்பித்தார். மிகுந்த மனநிறைவுடன் நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம்.
சிறு வயதில் தன் சித்தப்பா முத்தையாவுக்குத் துணையாக சேரமாதேவியிலிருந்து வந்துவிட்டார் மந்திரக் கம்பர். சித்தப்பா வழியில் தானும் பல கலைஞர்களை உருவாக்கி வருகிறார். அவருடைய மகன் இன்று ஆயக்குடி முருகன் கோயிலில் நாகஸ்வரம் வாசித்து வருகிறார். பேரன் பி.ஏ படித்து வந்தாலும் நாகஸ்வரத்தில் நிறைய ஈடுபாட்டுடன் பயின்று வருகிறார். எல்லோருக்கும் சாஸ்திரிய சங்கீதம் போய்ச் சேரவேண்டும் என்று பலர் வெளிச்சம்படும் தளங்களில் நின்று சத்தமாகப் பேசுகிறார்கள். அவர்களின் முயற்சியைவிட சந்தடியில்லாமல் மந்திர கம்பர் போன்றவர்களின் பங்களிப்பே தமிழகத்தின் மூலைமுடுக்குகளில்— தழைக்கவில்லை என்றாலும் வழக்கொழிந்து போகாமலாவது— சங்கீதத்தை இழுத்துப்பிடித்து வைத்திருக்கிறது என்று தோன்றுகிறது.

ஆயக்குடியிலிருந்து கோவில்பட்டிக்குப் புறப்பட்டோம். மூன்று நாட்களில் அதிக நேரம் காரிலிருந்தது இந்தப் பயணத்தில்தான். அதனால் தீபக்கின் சேகரத்தில் இருந்த படங்களைப் பார்க்கவும், இசைத்துகள்களைக் கேட்கவும் வாய்ப்பாக அமைந்தது. சில கச்சேரிகளில் காருகுறிச்சியார் சில திரையிசைப்பாடல்களை கடைசியில் வாசித்திருப்பதை நான் கேட்டிருக்கிறேன். அவை அனைத்தும் தமிழ்ப்படங்களில் வந்துள்ள பாடல்களே. காருகுறிச்சியார் வாசித்த ஹிந்திப் பாடல் ஒன்றை தீபக் போட்டுக் காண்பித்தார். அனார்கலி படத்தில் ‘யே ஜிந்தகி’ என்ற லதா மங்கேஷ்கர் பாடிய பாடல். திரையுலகத்தில் மங்கேஷ்கர் சகோதரிகளுக்கும் சிவாஜி கணேசனுக்கும் இருந்த ‘ராகி’ உறவு பிரபலமான ஒன்று. அதே உறவு காருகுறிச்சியாருக்கும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பம்பாயில் காருகுறிச்சியாரின் கச்சேரிகளுக்கு லதா மங்கேஷ்கர் வந்திருப்பதாகத் தெரிகிறது. அத்தகு கச்சேரி ஒன்றில் இந்தப் பாடலை வாசித்திருக்கக்கூடும்.
காருகுறிச்சியாரின் திரையிசைத் தொடர்பைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சிவாஜி கணேசனின் தம்பியின் கல்யாணத்துடன் தொடர்புடைய ஒரு காருகுறிச்சியார் விஷயத்தைத் தீபக் சொன்னார்.
சிவாஜி இல்லத் திருமணத்துக்கு வீட்டில் ஒருவராகத்தான் காருகுறிச்சியார் சென்றிருக்கிறார். விமரிசையான விழாவின் உச்சமாய் உஸ்தாத் பிஸ்மில்லாகானின் ஷெனாய் கச்சேரி ஏற்பாடாகியிருந்திருக்கிறது. கச்சேரியில் மால்கௌன்ஸ் ராகத்தை விஸ்தாரமாக ஒரு மணி நேரத்துக்கு வாசித்திருக்கிறார் உஸ்தாத். கச்சேரி முடிந்ததும் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் உணர்ச்சிப்பெருக்கில் “இதைவிட உசத்தியாய் யாராலும் வாசிக்க முடியாது” என்று கூறயிருக்கின்றனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் பொறுமையிழந்து, “அவர் நல்லா வாசிச்சார்-னு சொல்லுங்க. ஆனால் அப்படி வாசிக்க உலகத்துல ஆளில்லை-னு அருணாசலத்தை வெச்சுகிட்டு சொல்லாதீங்க,” என்று சொல்லியிருக்கிறார்.
சொன்னதோடு நிறுத்தாமல் காருகுறிச்சியாரை அப்போதே வாசிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார். சக கலைஞனுக்குப் போட்டியாக வாசிக்க தனக்கு விருப்பமில்லை என்று மறுத்திருக்கிறார் காருகுறிச்சியார். பிஸ்மில்லா கான் சாப்பிடப் போய்விட்டார். இனி திரும்ப வரமாட்டார் என்று சமாதானம் சொல்லி வாசிக்க வைத்திருக்கிறார் சிவாஜி கணேசன்.
கச்சேரி தொடங்குகிறது. சாப்பிட்டு முடித்த பிஸ்மில்லாகான் காருகுறிச்சியாரின் வாசிப்பைக் கேட்டுத் திரும்ப வந்து யாருக்கும் தெரியாமல் கடைசி வரிசையில் உட்கார்ந்துகொள்கிறார். இரண்டு மூன்று உருப்படிகள் போனதும் உஸ்தாத் வாசித்த அதே ராகத்தை கர்நாடக பாணியில் ஹிந்தோளமாக வாசிக்கிறார் காருகுறிச்சியார். ராகம் வாசித்து, ‘மாமவதுஸ்ரீ ஸரஸ்வதி’ வாசித்தபின் இரண்டு காலங்களில் கல்பனை ஸ்வரங்கள் பொறிபறக்கின்றன. வாசித்து முடித்ததும் பிஸ்மில்லாகான் எழுந்து வந்து காருகுறிச்சியாரைத் தழுவிக் கொண்டு உளமாரப் பாராட்டுகிறார். கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. சிவாஜி கணேசனுக்குப் பெருமை பிடிபடவில்லை. ஓடிச் சென்று கையில் கிடைத்த பணக் கத்தைகளைக் கொண்டு காருகுறிச்சியாருக்கு கனகாபிஷேகம் செய்கிறார்.
இப்படி ஒரு நிகழ்ச்சி உண்மையில் நடந்திருக்குமா? சிவாஜி கணேசனின் சகோதரர் கல்யாணக் கச்சேரி என்று ஒரு பதிவு நமக்கு இன்றும் கிடைக்கிறது. அதில் ஒரு ஹிந்தோளமும் இடம்பெற்றுள்ளது. தீபக் இந்தக் கதையைச் சொன்னதும், அந்த ஹிந்தோளத்தை ஒருமுறை காரில் போட்டுக் கேட்டோம். ‘ஐயோ’ என்றும் ‘ஆஹா’ என்று என் வாய் நிற்காமல் முணுமுணுத்துக் கொண்டே வந்தது.
”இந்தக் கதை நடந்திருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் பதிவு செய்யாதவரை இதை வரலாறாகப் பதிவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்த ஹிந்தோளத்துக்கு ஏற்ற புனைவு என்று தயக்கமில்லாமல் ஏற்றுக்கொள்ளலாம்,” என்று தீபக்கிடம் சொன்னேன்.
தீபக் இந்த விஷயம் 1990-களில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் இருப்பதாகக் கூறினார். கௌரிசங்கர் என்பவர் எடுத்திருக்கும் ஆவணப்படத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. அதைத் தீபக் குறிப்பிட்டதும் பார்க்க ஆவல் எழுந்தது. எங்கெங்கெல்லாமோ தேடி அந்தப் படத்தின் ஒரு பிரதியை சிவகுமார் கண்டுபிடித்துள்ளார். தீபக்குக்கும் ஒரு பிரதி கொடுத்திருந்ததால் பயணத்தின் போது பார்த்துக்கொண்டே சென்றோம்.
ஆவணப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் விட்டாலும்கூட, இன்று நம்மிடையே இல்லாத பலரின் கருத்துகள் ஆவணப்படுத்தியிருப்பதால் மட்டுமே இந்த ஆவணம் முக்கியமாகிறது.
மேல் சொன்ன ஹிந்தோளத்தைப் பற்றி நாகஸ்வர கலைஞர் டி.பி.ஆர்.கணேசன் கூறியுள்ளார். தான் அந்தத் திருமணத்துக்குச் செல்லவில்லை என்றும், காருகுறிச்சியாரே தன்னிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார் என்று அவர் ஆவணப்படுத்தியுள்ளார். ஆவணப்படத்தில் அவர் கூறியுள்ள இன்னொரு சம்பவம் மணியாச்சியில் நடைபெற்ற ஒன்று. (சிறுகதை வடிவில் சொல்வனத்திலேயே வெளியாகியுள்ளது).
கலையின் உன்னதங்களை கலைஞனிடம் தேடினால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்பதுதான் என் அனுபவம். அதற்கு விதிவிலக்காக காருகுறிச்சியார் போன்ற கலைஞர்கள் இருந்திருக்கின்றனர் என்பதை நினைக்கும் போதே மனம் பொங்கிப் பொங்கி வழிகிறது. அந்தச் சம்பவத்தின் ஈரம் காய்வதற்கு முன் எழுதி என் அனுபவத்தைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டுமே என்று பரபரப்பாக இருந்தது. பயணம் முடிந்தும் பல நாட்களுக்கு நண்பர்களை அழைத்து இந்தக் கதையைச் சொல்லி சொல்லி அந்த அனுபவத்தை எழுதி முடிக்கும்வரை பசுமையாக வைத்துக் கொண்டேன்.

நாங்கள் கோயில்பட்டிக்குள் நுழைந்து நேராக அரசு மருத்துவமனை எதிரில் இருக்கும் காருகுறிச்சியாரின் சிலைக்கருகே சென்றோம். காருகுறிச்சியார் மறைந்த சில ஆண்டுகளுக்குள் 1967-ல் நிர்மாணிக்கப்பட்ட மணி மண்டபத்தையும், சிலையையும் கண்டோம். இந்தச் சிலையில் திறப்பு விழா படங்களை தீபக் எனக்கு முன்பே காட்டியிருந்தார்.
சிலையை அன்பளிப்பாகத் தந்த நடிகர்கள் ஜெமினி கணேசனும், சாவித்திரியும் இருக்கும் அந்தப் படத்தில் சிலை வெள்ளை நிறத்தில் இருந்தது. சமீபத்தில் மொத்த சிலையையும் கருப்பாக மாற்றியுள்ளனர். நெற்றியை மறைக்கும்படி திருநீறு போல வெள்ளை பூசப்பட்டுள்ளது. அமர்ந்திருக்கும் உருவத்தைச் சுற்றி சாற்றப்பட்டுள்ள வேட்டி காருகுறிச்சியாரின் கையில் இருக்கும் நாயனத்தைத் தேடினாலன்றி கண்டுபிடிக்க முடியாத நிலையில் மறைத்துள்ளது. இந்தச் சிலையைப் பற்றி அறியாத இசை ரசிகரை அழைத்துச் சென்றால் இது காருகுறிச்சியாரின் சிலை என்று கண்டுகொள்வாரா என்பது சந்தேகம்தான்.
கோவில்பட்டியில் உள்ள தீபக்கின் உறவினர் ஆறுமுகம் வந்ததும் காருகுறிச்சியாரின் சமாதி இருந்த இடத்துக்குச் சென்றோம். கோவில்பட்டியில் பெரிய இசைப்பள்ளி ஒன்றைத் தொடங்குவது காருகுறிச்சியாரின் கனவாக இருந்துள்ளது. அப்போதிருந்த கலெக்டர் அதற்காகப் பத்து ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக இருந்திருக்கிறார். இது சம்பந்தமாக கலெக்டருடன் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் நெஞ்சுவலி ஏற்பட்டு அடுத்த நாளே யாரும் எதிர்பார்க்காத வகையில் 43-வது வயதில் காருகுறிச்சியார் மறைந்துவிட்டார். (கலெக்டரை வில்லனாக்கிப் பல புரளிகளை உருவாக்கி வரலாற்றாய்வாளர்களாய் உலா வருபவர்களின் கூற்றுகளுக்குள் எனக்குச் செல்ல விருப்பமில்லை. அவர்கள் நன்றாக இருக்கட்டும்.) காருகுறிச்சியார் மறைந்த பின் அவருக்குக் கொடுப்பதாக இருந்த நிலத்தை சமாதிக்காகவும், பின்னாளில் பள்ளி ஒன்றை அமைப்பதற்காகவும் கலெக்டர் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. இன்று சமாதிக்கான இடம் ஏக்கர் கணக்கில் எல்லாம் இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒன்றிரண்டு கிரவுண்டு தேறலாம். சமாதியைச் சுற்றி வீடுகள் வந்துவிட்டன.
நாங்கள் சென்ற போது சமாதி பூட்டப்பட்டிருந்தது. சமாதியின் சாவியை வைத்திருப்பவர் வெளியூருக்குச் சென்றிருந்தார். வெளியிலிருந்தபடி பார்த்துவிட்டு காருகுறிச்சியார் இருந்த ‘ஞானசம்பந்த நிலைய’த்துக்குச் சென்றோம்.

அந்த வீட்டின் பிரம்மாண்டம் ரோட்டிலிருந்து பார்த்தால் தெரியாது. வீட்டுக்குள் நுழைந்ததும் பெரிய காலியிடம். அதைத் தாண்டியதும் பல கட்டுகளாய் வளர்ந்து செல்லும் பெரிய வீடு. பின்புறத்தில் கிணறும் தோட்டமும் என்று சுமார் பன்னிரெண்டு கிரவுண்டு வீடு.
எங்களை அழைத்துச் சென்ற ஆறுமுகம் அந்த வீட்டில் சிறு வயதிலிருந்து புழங்கியவர். இப்போது உள்ள அமைப்பைப் பார்த்து அது காருகுறிச்சியார் இருந்தபோது எப்படி இருந்தது என்று சொல்லிக் கொண்டே வந்தார். பேசிக் கொண்டிருந்த போதே எதையோ தேடிக் கொண்டிருந்தது போலத் தோன்றியது. ஓர் அறையில் பெரிய கண்ணாடியைப் பார்த்ததும் அவர் தேடல் நின்றது. “அவர் சாதகம் பண்ற அறைல இது இருக்கும். செட்டுக்காரங்க எப்பவும் இங்கதான் இருப்பாங்க. ஒழிஞ்ச நேரமெல்லாம் சாதகம் பண்ணிட்டே இருப்பார்,” என்றார். அந்தக் கண்ணாடி எத்தனை பைரவியையும், காம்போஜியையும் கேட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். கொஞ்சம் பொறாமையாக இருந்தது.
நிரந்தர வருமானத்தை மனத்தில் கொண்டு வீட்டுக்குப் பின்புறத்தில் வரிசையாய் ஒன்பது வீடுகள் கட்டப்பட்டுள்ளன, அவர்காலத்தில் வாடகைக்கு விட்டிருந்தாராம். டிரான்ஸ்போர்ட் கம்பெனி நடத்துபவர்கள் இன்று அந்த வீட்டில் இருக்கின்றனர். காருகுறிச்சியார் இருந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்றால் சந்தோஷமாக அனுமதிக்கின்றனர். “நூற்றாண்டு விழாவுக்கு நிச்சயம் எங்களுக்குத் தகவல் சொல்லுங்க. நாங்களும் கலந்துக்கறோம்”, என்றார் அந்த வீட்டுப் பெண்மணி.
அந்த வீட்டிலிருந்து புறப்படுவதற்கும் சிவகுமார் வந்து எங்களைச் சந்திப்பதற்கும் சரியாக இருந்தது. கூட அவர் நண்பர் ஒருவரும், காருகுறிச்சியாரின் மனைவி வழி சொந்தக்காரர் ஒருவரும் வந்திருந்தனர். இன்று காருகுறிச்சியாரின் உறவில் நாகஸ்வர வித்வானாய் இருப்பவர் அவர்தான். கோயில்பட்டி ராமு என்றொரு தவில் வித்வான் காருகுறிச்சியாருக்கு வாசித்துள்ளார். அவரை வாய்ப்பிருந்தால் சந்திப்பதாகத் திட்டம். சிவகுமார் வந்ததும், “அவர் ரொம்பவே கவலைக்கிடமா இருக்காராம். பேசக் கூடிய நிலைல இல்லை,” என்று சொன்னார்.
திட்டம் மாறியதில் கைவசம் கொஞ்சம் நேரம் கிடைத்தது. அருகில்தானே என்று எட்டையபுரத்துக்குப் புறப்பட்டோம்.

முதலில் பாரதி மணி மண்டபத்துக்குச் சென்றோம். எனக்கு பாரதி பரிச்சயமுண்டே தவிர அவர் படைப்பில் மூழ்கியவன் அல்லன். அந்த ஆளுமையைத் தலைவணங்க அப்படி மூழ்காதது தடையல்ல என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதிகம் கூட்டமில்லாத மணி மண்டபத்தைச் சுற்றிப் பார்த்தோம். சிவகுமார், மணி மண்டபத்தில் மாட்டியிருந்த படங்களில் உள்ள ஆளுமைகளைப் பற்றியெல்லாம் சரளமாகச் சொல்லிக் கொண்டே வந்தார். எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை என்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை என்றாலும், அவர் சொல்லச் சொல்ல ‘இத்தகு ஆளுமைகளைப் பற்றிக்கூடத் தெரிந்து கொள்ளாமல் போனோமே’, என்று வெட்கமாக இருந்தது.
அந்த மண்டபம் அமைய எத்தனைக் கச்சேரிகள் எட்டையபுரத்தில் நடந்திருக்கின்றன என்று தெரிந்த பக்கமாக எண்ணத்தை ஓட்டினேன். “முருகபூபதி வாசித்தது கச்சேரி முடிந்து இரண்டு நாட்கள் கழித்தும் எட்டையபுரத்தில் ரீங்காரித்துக் கொண்டிருந்தது,” என்று கல்கி எழுதியிருந்த வரிகள் எனக்கு நினைவுக்கு வந்தன. மணி மண்டபத்தில் காருகுறிச்சியாரின் பங்கு என்ன என்று தெரியவில்லை. ஆனால், அவர் கோவில்பட்டிக்காரரானதும் வருடா வருடம் பாரதி விழா சிறப்பாக நடக்க தன்னாலானதைச் செய்துள்ளார். கச்சேரிகள் தவிர தன் பிராபல்யத்தை உபயோகித்துப் பலதுறை கலைஞர்கள் வந்து பாரதி விழாவில் கலந்து கொள்ள வழி செய்துள்ளார். அப்படி வரும் கலைஞர்கள் தங்கும் இடமாக அவர் வீடு இருந்துள்ளது.
மணி மண்டபத்திலிருந்து கிளம்பி பாரதி பிறந்த வீட்டிற்குச் சென்றோம். நல்ல அழகான இரண்டடுக்கு கிராமத்து வீடு. பாரதி உபயோகித்த பொருட்கள், அவர் கையெழுத்துப் பிரதிகள், அவர் தந்தையார் நடத்தி நொடித்துப்போன நிறுவனத்தின் நிதியறிக்கை, அவரிருக்கும் படங்கள், அவர் தொடர்பானவர்களின் படங்கள், அவர் எழுத்திலிருந்து சில வாசகங்கள் என்று வீட்டில் பல இடங்களில் பல விஷயங்கள் இருந்தாலும் எனக்கு ஏனோ ஓர் அருங்காட்சியகத்திலிருப்பது போலத் தோன்றவில்லை. யாரோ வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டிற்குள் புழங்குவது போன்ற உணர்வே இருந்தது. ‘பாரதி பிறந்த இடம்’ என்று வீட்டில் குறிக்கப்பட்ட இடத்துக்கு முன்பாக விழுந்து வணங்கி வாசலில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டேன். பாரதி காலத்தில் அவன் தீண்டிய கல்லொன்று காலப்போக்கில் மரைந்து துகளாகி, மண்ணாகி, தூசாகி என்னைத் தீண்டாதா என்று கற்பனை வளர்ந்தது.

பாரதியின் வீடு இருக்கும் தெருவில்தான் சிவானந்தரின் ஆஸ்ரமமும் இருக்கிறது. அதைப் பார்த்ததும், ‘இந்த ஆஸ்ரமத்துலதான் நாகஸ்வர கலாநிதி-னு காருகுறிச்சியாருக்குப் பட்டம் கொடுத்தாங்க,’ என்றார் சிவகுமார். அவர் விரும்பி தனது லெட்டர்ஹெட் முதலான இடங்களில் இந்தப் பட்டத்தையும் ‘நாகஸ்வர இசைச்செல்வன்’ என்கிற பட்டத்தையும் போட்டுக்கொண்டுள்ளார் என்பது ஆவணங்களைப் பார்க்கும் போது தெரிய வருகிறது.
எங்கு போனாலும் அதிலொரு காருகுறிச்சி சம்பந்தம் வந்துவிடுகிறதே என்று சொல்லிக் கொண்டே முத்துஸ்வாமி தீட்சதரின் சமாதிக்குப் புறப்பட்டோம். பாதி அதிஷ்டானம், பாதி கல்யாண மண்டபம் என்று இருக்கும் கட்டடத்துக்கு நாங்கள் சென்ற போது கதவு சாத்தியிருந்தது. அருகில் சென்று பார்த்த போது தாள் போடப்பட்டிருந்ததே தவிர, பூட்டப்படவில்லை என்று தெரிய வந்தது. கதவைத் திறந்து கொண்டு அதிஷ்டானத்துக்குள் சென்றோம். நான் அங்கு அமர்ந்து மதுரை மணி ஐயரின் ‘மீனாட்சி மேமுதத்தை’ ஒருமுறை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தேன். இரண்டிரண்டு அலைகளாய் ‘மதுரா’-வுக்கு ஒன்றும், ‘நிலையே’-வுக்கு ஒன்றுமாய் ஸ்வரங்கள் வந்து மனத்தில் அடித்தன.
தீட்சிதரின் சிலையின் முன் விழுந்து வணங்கிவிட்டுச் சுவர்களில் இருந்த கிருதிகளை நோட்டம்விட்டோம். ‘ஸ்ரீ காந்திமதிம்’ கிருதியைப் பார்த்ததும் எனக்கு காருகுறிச்சியாரின் ஹேமவதி நினைவுக்கு வந்தது. பயணத்துக்கு இரண்டு வாரம் முன்பிலிருந்து என்னை ஆட்கொண்ட அன்னை. “சாயங்காலம் காந்திமதி அம்மையைப் பார்க்க போகிறோம்தானே” — என்று தீபக்கிடம் உறுதி செய்துகொண்டேன்.
கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு எதிரில் உள்ள வீட்டில் காருகுறிச்சியார் ‘ஞானசம்பந்த நிலையம்’ கட்டுவதற்கு முன்பு குடியிருந்திருக்கிறார். அந்த வீட்டையடுத்து உள்ள உணவகத்தில் சிவகுமாரின் உபசரிப்பில் சற்றே தாமதமான மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட்டோம்.

முந்தைய நாள் இரவு அப்பாவுடன் பேசும்போது, “குழந்தைகளுக்கு இருட்டுக் கடை அல்வா வாங்கிக்க. குறுக்குத்துறைக்குப் போய் முருகனைப் பாரு. விஞ்சை விலாஸ்-ல சாப்பிடு. இது மூணும் பண்ணினாத்தான் திருநெல்வேலிக்குப் போனதுக்கே அர்த்தமிருக்கும்”, என்றார் உறுதியாக.
‘விஞ்சை விலாஸ்-னா?’ என்று தெரியாமல் கேட்டுவிட்டேன். ‘என்னமோ சுகா உன் ஃப்ரெண்டுங்கற? எவ்வளவு ரசிச்சு ரசிச்சு எழுதியிருக்காரு- விஞ்சை விலாஸ்-னா என்னன்னு கேட்கிறியே!’ என்று பொங்கினார்.
சுகாவை எனக்குப் பரிச்சயம் என்பது வாஸ்தவம்தான் — அதற்காக அவர் எழுதியது அத்தனையும் அத்துப்படியாய் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பெல்லாம் ரொம்ப அதிகம் என்று நினைத்துக் கொண்டேனே தவிர வாயைத் திறக்கவில்லை.
திருநெல்வேலிக்காரர்களின் ’அம்மையப்பர்தான் உலகம்’ லாஜிக்குக்கு எல்லாம் பதில் சொல்லி மாளாதென்று தெரியும்.

என் ஓட்டல் அறையில் ஒருமணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு குறுக்குத்துறைக்குக் கிளம்பினோம். அஸ்தமன சூரியனின் பொன்கிரணங்கள் தாமிரபரணியில் முயங்கும் காட்சியைப் பார்த்துவிட்டு நதியில் கால்நனைத்துக் கிளம்பினோம். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் முருகனைப் பக்கத்திலிருந்த கோயிலுக்கு இடம் மாற்றியுள்ளனர். குறுக்குத்துறையிலிருந்து நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்றோம். இந்தப் பயணத்துக்கு பத்து நாட்களுக்கு முன்னிருந்து காருகுறிச்சியாரின் ஹேமவதியைத் தொடர்ந்து கேட்டு வந்தேன்.
முதல் சில நாட்களுக்கு, பதிவின் தொடக்கத்தில் நீடாமங்கலத்தார் வாசித்திருக்கும் இரண்டு நிமிட சர்வலகு சொற்களைத் தண்டி காருகுறிச்சியாரின் வாசிப்புக்குள் செல்லமுடியவில்லை. வேகம் பல சமயங்களில் பிரமிப்பைத் தந்தாலும், நுணுக்கிப் பார்த்தால் துல்லியத்திலோ, அழகுணர்ச்சியிலோ கொஞ்சம் கூடக்குறைச்சலாக இருக்கும். இந்த இரண்டு நிமிடப் பதிவில் தென்படுவது கேட்பதற்கரிய பரிபூர்ணம் என்பதைத் தாண்டி எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
ஒருவழியாய் ஹேமவதியைக் கேட்கத் தொடங்கியபோது இன்ப அவஸ்தையாய் இருந்தது.
ஆலாபனையைக் கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வரி மங்கலாய் மனத்தில் வந்து வந்து போனது. ”தொண்டையில் இருக்கிறது – வாயில் வரவில்லை” என்ற நிலை.
ஆலாபனைக்கு ஏது வரி?
கற்பனைதான் — இருந்தாலும் மீண்டும் மீண்டும் மனத்துள் தோன்றியும் மறைந்தும் பூச்சி காட்டிக் கொண்டிருந்தது.
இன்று காலையில் இன்னொருமுறை கேட்டேன் அந்த ஆலாபனையை.
தைவதத்தை மையமாக்கி — மத்யம ஸ்தாயி மத்யமம் முதல் தார ஸ்தாயி மத்யமம் வரை யாரோ சாவகாசமாய் ஏறி ஏறி இறங்குவதைப் போலத் தோன்றியது.
சுழற்றிச் சுழற்றி மத்யமத்தைத் தாண்டி தார பஞ்சமத்தைத் தொட்ட போது நெடிய விக்கிரகத்துக்கு தீபாராதனை காட்டியது போல இருந்தது.
தீபக்கீற்றில் நிழலும் ஒளியுமாய் அந்த மந்தஹாசம். ஆங்காங்கே வைரங்களாய் மின்னிய நீர்த்துளிகள்.
நீர்த்துளிகள்.
எனக்கு அந்த வரி கிடைத்துவிட்டது.
“ஸஹஸ்ர கலஸ அபிஷேக மோதாம்” என்கிற தீட்சிதரின் வரி.
ஆயிரம் கலசங்களில் அன்னைக்கு அபிஷேகம்.
அருணாசலம் மத்யமத்திலிருந்து நீரை மொண்டு தைவதம், நிஷாதம், ஷட்ஜம் என்று அன்னையை ஒவ்வொரு அங்கத்திலும் நீரால் நிறைக்கும் காட்சி இப்போது மனக்கண்ணில் விரிந்தது.
ஆயிரம் கலசங்கள் ஆனதும் தார பஞ்சமத்தில் தீபாராதனை!
காந்திமதி அன்னையின் முகத்தில் குறுநகை.
“இரண்டு நாள் அலைக்கழிப்பு தீர்ந்ததா?”, என்று என்னைக் கேட்பதுபோல் இருந்தது. இந்த அனுபவம் வாய்த்த பின் திருநெல்வேலிக்குச் சென்று காந்திமதி அம்மையைக் காணாது எப்படித் திரும்புவது?
பிரம்மாண்டமான கோயிலைப் பறவைப் பார்வையாய் தீபக் சுற்றிக் காண்பித்தார். காந்திமதி அன்னையைப் பார்த்தபடி மனத்தில் காருகுறிச்சியாரின் அபிஷேகத்தை ஒருமுறை ஓட்டிப் பார்த்தேன். நிரம்பி வழிந்த மனத்துடன் நாங்கள் கோயிலிலிருந்து புறப்பட்டோம்.
பயணத்தின் கடைசிச் சந்திப்பு காருகுறிச்சியாரின் மகள் (தீபக்கின் தந்தை வழி பாட்டி) சுப்புலட்சுமி அம்மாளுடன். ‘பாட்டியைப் பார்த்துட்டு நம்ப வீட்டுலியே சாப்பிட்டுடுங்க’, என்றார் தீபக். ‘விஞ்சை விலாஸுல சாப்பிடலைன்னா வீட்டுக்குள்ள ஏத்தமாட்டாங்க,’ என்று அவசரமாக மறுத்தேன். தீபக்கே என்னை அழைத்துச் செல்வதாகச் சொன்னார்.
தீபக்கின் வீட்டுக்குள் நுழைந்த போது அவருடைய பெற்றோர்களும், பாட்டி சுப்புலட்சுமி அம்மாளும் என்னை வரவேற்றனர். அவரது படாடோபம் இல்லாத கம்பீரம் என்னை மிகவும் கவர்ந்தது.
“நான் காருகுறிச்சி அருணாசலத்தோட மகள்-ங்கறதுல எனக்கு ரொம்ப பெருமை, ” என்று பேச ஆரம்பித்தார் சுப்புலட்சுமி அம்மாள்.
“அவருக்கு மனசுக்கு உகந்த இடம் திருச்செந்தூர்தான். அடிக்கடி போவாங்க. எங்களையும் கூட்டிகிட்டுப் போவாங்க. வருஷா வருஷம் பச்சைசாற்றி உத்சவத்துல கண்டிப்பா வாசிப்பாங்க. ராத்திரி முழுக்க வாசிப்பாங்க. நாங்களும் நிறைய வருஷம் போய் கேட்டிருக்கோம். கோவில்பட்டியில கச்சேரின்னா நாங்களும் போவோம். கச்சேரிக்குப் போகும்போது கார்ல வாயால பாடி சாதகம் பண்ணிகிட்டே வருவாங்க. அவருக்கு குரலும் ரொம்ப நல்லா இருக்கும். வீட்டுக்கு வந்ததும், “நான் என்ன வாசிச்சேன் சொல்லுங்க?”-னு கேட்பாங்க. வெளியூருக்குப் போனா எங்களுக்கு நிறைய சாப்பிடற விஷயம், துணிமணிகள் வாங்கிட்டு வருவாங்க. அப்பா ரொம்ப ஆசையா எங்ககிட்ட பழகுவாங்க. நாங்கதான் நெருங்கக் கொஞ்சம் தயங்குவோம். இப்ப தோணுது அப்படித் தயங்கியிருக்க வேண்டாமோ-னு,” என்று தொடர்ந்தார்.
”வீட்டில இருந்த நேரமே குறைச்சலாதான் இருந்திருக்கும் இல்லையா?”
“ஆமாம். நிறைய வெளியூர் கச்சேரிகள். உள்ளூர்ல கச்சேரின்னாலும் அவர் வரதுக்குள்ள நாங்க தூங்கியிருப்போம். அவர் எழுந்திருக்கும்போது நாங்க பள்ளிக்கூடத்துக்கு போயிருப்போம். அப்பல்லாம் கச்சேரின்னா எட்டு மணி நேரங்கறது சாதாரணம். கடை வியாபாரிங்க எல்லாம் கடையை அடைச்சு வீட்டுக்குப் போய் சாப்பிடதுக்கு அப்புறமா ஒக்காந்து ராத்திரி முழுக்கக் கேட்பாங்க. ஒரு தடவை ‘பஜோரே பையா’ பஜனை மட்டும் ஒருமணி நேரம் அப்பா வாசிச்சார். இன்னிக்கு அப்படி வாசிக்கற சூழல் இருக்கா?” என்று என்னைக் கேட்டார் சுப்புலட்சுமி அம்மாள்.
நான் மௌனமாய்த் தலையை ஆட்டினேன்.
“அப்பாவைப் பார்க்க யாராவது வந்துகிட்டே இருப்பாங்க. காங்கிரஸ்ல நிறைய ஈடுபாடு. ஊர்மக்களுக்கு தன்னாலான உதவியைச் செய்யணும்னு நினைப்பார். பெரிய ஆளுங்களானாலும் சாதாரண ஆளுங்களானாலும் அத்தான், மாமா-னு உறவுமுறை சொல்லி ரொம்ப அன்பாப் பழகுவாரு. சங்கரன்கோயில்ல அப்பாசாமி பட்டர்-னு ஒருத்தர் உண்டு. அவர் பேங்கிலையும் உத்யோகமா இருந்தார். ஆனால் அவரை பேங்கிலியோ கோயில்லையோ பார்க்கமுடியாது. எப்பவும் அப்பா கூடவே இருப்பார். பெரிய கச்சேரிகள் நடந்தா அங்க பட்டர் வந்து கோயில் பிரசாதம் குடுத்தா அந்தக் கச்சேரி நல்லா அமையும்னு-னு அப்பாவுக்கு ஒரு நம்பிக்கை. பம்பாய்-ல கச்சேரினா சங்கரங்கோயில்ல இருந்து பட்டரும் போவார். அப்பாவோடு கடைசியா ஆஸ்பத்திரியில பட்டர் கூடவே இருந்தார். அப்பா தனக்கு நெருக்கமானவர்கள்கிட்ட எப்படிப் பழகுவார்-னு சொல்றதுக்காக இதைச் சொல்றேன்.”
“அவருக்கு சினிமாத் துறைல நிறைய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. சினிமாவிலும் ஈடுபாடு உண்டா?”
“சினிமாவுல சுத்தமா ஈடுபாடு இல்லை. சிவாஜி கணேசன் ரொம்ப நெருங்கிய நண்பர். அவர் சொல்லி ஒரு தீபாவளிக்கு எங்களை எல்லாம் ’கப்பலோட்டிய தமிழன்’ படத்துக்கு அப்பா கூட்டிகிட்டுப் போனார். ’பாவை விளக்கு’ படத்துல வர்ர ‘வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி’ பாட்டை அப்பா வாசிச்சுக் கேட்கணும்னு சிவாஜி ரொம்ப ஆசைப்படுவார்.”
சிவாஜி கணேசன் வீட்டுத் திருமணப் பதிவிலும் இந்தப் பாடலை வாசித்துள்ளது எனக்கு நினைவுக்கு வந்தது.
“கோவில்பட்டிக்கு நடிகர்கள் வந்தா நம்ப வீட்டுல வந்து தங்குவாங்க. நாகேஷ் வந்தா எல்லாரோடையும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். அவர் பண்ற சேட்டைகளைப் பார்க்கவே கூட்டம் கூடிடும். நாங்க எல்லாம் அவர் கூடவே இருப்போம். அப்பா இதையெல்லாம் பெருசா கண்டுக்கமாட்டார்.”
“ஆனால் அவரே சினிமா எடுக்கணும்னு நினைச்சு பாக்யலட்சுமி பிக்சர்ஸ் தொடங்கினார்-னு தீபக் சொன்னாரே,” என்று கேட்டேன்.
”ஆமாம். ’தில்லானா மோகனாம்பாள்’ படத்தை எடுக்கணும்னு ஆசைப்பட்டார். அதுக்காக எஸ்.எஸ்.வாசன் கிட்டப் போய் பேசினார். அவர் தானே எடுக்கறதா இருக்கறதாச் சொல்லிட்டார். ’நான் எடுக்கும் போது, நீங்கதான் வாசிக்கணும்’-னு கேட்டுகிட்டார். கடைசியில் அவரும் எடுக்கலை. படம் வரும்போது அப்பா இல்லை. சமர்ப்பணம்-னு அப்பா படம் போட்டிருப்பாங்க.”
“’கொஞ்சும் சலங்கை’ புண்ணியத்தில் அவர் வாசிப்பு திரைப்படங்களிலும் வந்திருக்கிறதே,” என்றேன்.
“ஆமாம். ’ஆஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பெண்ணும்’-னு ஒரு படத்துலையும் அப்பா வாசிச்சு இருக்கார். தில்லானா மாதிரி ஒரு பாடல், வார்த்தைகளே இல்லாம வரும். நாட்டியத்துக்கு ஏத்தா மாதிரி விறுவிறுப்பா இருக்கும். ரேடியோல முன்னல்லாம் போடுவாங்க. நான் கேட்டிருக்கேன். இப்ப அந்தப் பதிவு கிடைக்கலை,” என்றார்.
“கி.ரா ஒரு கட்டுரைல அருணாசலம் நிறையப் படிப்பார். இலக்கிய ஈடுபாடு உள்ளவர்-னு சொல்லி இருக்காரே,” என்று தூண்டிய போது,
“ஆமாம். வீட்டுல நிறைய புத்தகங்கள் இருந்தது. அப்பாவுக்கு காண்டேகர் கதைகள் ரொம்ப பிடிக்கும், நிறையப் புத்தகங்கள் அப்பா போனதுக்கு அப்புறம் நாங்க எடுத்து படிச்சு இருக்கோம்.”
தொழிலுக்கே நேரம் சரியாக இருக்கும் என்கிற சூழலில், அதுவும் பள்ளியில் வெறும் நான்காம் வகுப்புவரையிலுமே படித்தவர், இலக்கிய ஈடுபாடோடு வீட்டில் நூலகம் ஒன்றை அமைத்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
கோவில்பட்டி வீட்டுக்குத் தமிழக முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் வந்துள்ளனர். புட்டபர்த்தி சாய்பாபாவிடமும் நெருக்கமானவராக காருகுறிச்சியார் இருந்துள்ளார். அந்த வீட்டில் சந்தித்த ஆளுமைகளைச் சொல்லும் போது:
“அவருடைய குருநாதர்களா இருந்த ராஜரத்னம் பிள்ளைக்கும், விளாத்திகுளம் சுவாமிகளுக்கும் கோவில்பட்டியில அப்பா விழா எடுத்தார். அதுவும் ராஜரத்னம் பிள்ளைக்கு ஜனாதிபதி விருது கிடைச்ச போது பெரிய சாரட் வண்டியில அவரை வெச்சு புது ரோட்டுல இருந்து பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் வரைக்கும் ஊர்வலமா வந்தாங்க. அப்ப எங்க வீட்டு மாடியில ராஜரத்னம் பிள்ளைக்கு பக்கத்துல கையைக் கட்டிகிட்டி பவ்யமா அப்பா நின்னது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு.”
இந்த நிகழ்வைப் பற்றிச் சில வருடங்களுக்கு முன்னால் சங்கீத கலாநிதி ஏ.கே.சி.நடராஜன் என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த ஊர்வலத்தின் போது வாசிப்பதற்கு ஏற்பாடு ஆகியிருந்தவர்களில் ஏகேசி-யும் ஒருவர். அன்று அவர் தேர்ந்தெடுத்த தர்பார் ராகத்தைக் கேட்டு, “ஏண்டா! நான் மகாராஜா-வா வரதால நீ தர்பார் வாசிக்கிறியா,” என்று கேட்டாராம். அன்று நடந்த கூட்டத்தில், “என்னுடைய கலையுலக வாரிசு காருகுறிச்சி அருணாசலம்தான்,” என்றும் ராஜரத்தினம் பிள்ளை கூறியுள்ளார்.
சுமார் ஒருமணி நேரத்துக்குத் தன் நினைவுத்தடங்களில் அலையடித்ததையெல்லாம் சுப்புலட்சுமி அம்மாள் பகிர்ந்துகொண்டார். நேர்காணலை முடிக்கும் முன், ‘வேற ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?’ என்று கேட்டேன்.
கொஞ்சம் யோசித்துவிட்டு, “ஒரு விஷயம் இருக்கு!”, என்றார். நான் ஒலிப்பதிவை மீண்டும் தொடங்கினேன்.
“அப்பா எங்க யாருக்கும் சங்கீதம் சொல்லிக் கொடுத்ததில்லை. ஒரே ஒருமுறை மட்டும் — அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை — பிள்ளைகள் எல்லோரையும் உட்காரச் சொல்லி, ‘சாமகான ப்ரியே’ என்ற பாடலை முழுவதுமாகச் சொல்லிக்கொடுத்தார். அப்பாவிடம் கற்ற முதலும் கடைசியுமான பாடல் அதுதான்,” என்று கண்கலங்கினார்.
நான் கரம்கூப்பி வணங்கி விடைபெற்றுக் கொண்டேன்.
தீபக்கும் நான் விஞ்சை விலாஸை நோக்கிச் சென்றோம். உணவகத்துக்குச் சென்றதும்தான் ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை என்று தெரிய வந்தது.
தீபக் என்னை என் அறையில் விட்டுவிட்டுக் கிளம்பினார்.
இந்த முறை திருநெல்வேலியில் ஜானகிராம் ஓட்டலைத் தவிர வேறு எங்கும் சாப்பிடக் கூடாது என்று விதித்திருக்கிறது.
சாப்பிட்ட பின் என் அறையில் சென்று படுத்துக் கொண்டேன். விடிகாலையில் விமான நிலையத்துக்குப் புறப்பட வேண்டும். சீக்கிரம் தூங்காவிட்டால் கிளம்புவது சிரமம்.
மூன்று நாட்களில் சென்ற ஊர்களும், சந்தித்த மனிதர்களும் — அந்தத் தருணங்களின் அடிநாதமாய் இருந்த காருகுறிச்சியாரும் மனத்தில் அலையடித்து என்னைத் தூங்கவிடாமல் செய்தன.
நண்பர் சுவாமிமலை சரவணனை அழைத்து ஃபோனில் ஒருமணி நேரத்துக்கு என் அனுபவங்களைக் கொட்டித் தீர்த்தபின்தான் மனம் இலேசானது.
நான் அன்று நிம்மதியாய் உறங்கினேன்.
திருநெல்வேலிக்காரர்கள் தங்கள் ஊர்ப் பெருமைகளைச் சொல்லும் போது கேசரியில ஒரு பிடி ரவைக்கு ஒரு படி சக்கரை என்று கிண்டலடிப்பதுண்டு. காருகுறிச்சியாரைப் பொருத்தமட்டில் ஒரு படி ரவைக்கு ஒரு சிட்டிகை சர்க்கரைகூட அவர்கள் சேர்க்கவில்லை என்று தோன்றுகிறது.
Ahaa..arpudham..manadhil neendanaal nirkkum pathicu. Mikkanandri. 🙏
அற்புதம் !! இந்த கட்டுரைகளில் குறிப்பிட்ட ஆவண படங்களுக்கும் இசை பதிவுகளுக்கும் சுட்டிகள் தந்திருந்தால் நன்றாக இருக்குமே!!
மிக அருமை. மிக்க நன்றி திரு லலிதாராம், திரு காருகுறிச்சி என்ற மகா கலைஞனைப் பற்றி பல அரிய தகவல்களை தந்தமைக்கு.