காருகுறிச்சியைத் தேடி… (2)

This entry is part 2 of 3 in the series காருகுறிச்சி

திருச்செந்தூரிலிருந்து கிளம்பி அரைமணி நேரத்தில் ஏரலை அடைந்தோம். காரைவிட்டு இறங்கும் போதே எனக்கு ஏனோ திருவையாறு நினைவுக்கு வந்தது.

காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜரின் சமாதிபோல இங்கு தாமிரபரணியின் படுகையில் சேர்மன் அருணாசல ஸ்வாமியின் சமாதி. பஹுள பஞ்சமியில் தியாகராஜருக்கு ஆராதனை போல ஆடி அமாவசையில் சேர்மன் ஸ்வாமிகளுக்கு ஆராதனை. ஆற்றங்கரை மணலில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் திருவையாற்றில் அமர்ந்து கேட்பது போன்றே ஏரலிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆற்றங்கரையில் அமர்ந்து கச்சேரிகள் கேட்டு ரசித்து வருகிறார்கள்.

1930-களிலிருந்து கச்சேரிகள் தொடர்ந்து நடத்தப்படுவதாகத் தெரிகிறது. காருகுறிச்சியார் வளர்ந்து வரும் காலத்தில் அவரை ஆடி அமாவசைக்கு வாசிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர் தன் நாட்குறிப்பில் தவறாக ஆனி மாதத்தில் குறித்துக் கொண்டு ஒரு மாதம் முன்பே ஏரலுக்குச் செல்கிறார். சென்றபின்தான் நடந்த குளறுபடி தெரிய வருகிறது. ஆடி அமாவாசைக்கோ வேறு ஓர் இடத்தில் வாசிக்கக் காருகுறிச்சியார் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், “கவலைப்படாதீர்கள். நான் பொறுப்பெடுத்து சிறப்பான மாற்றுக் கச்சேரியை ஏற்பாடு செய்து தருகிறேன்,” என்று வாக்களிக்கிறார். சொன்னபடி தன் குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரியை ஏற்படுத்திக் கொடுக்கிறார். அப்போது ஏற்பட்டப் பழக்கம் காருகுறிச்சியார் இருந்தவரை தொடர்கிறது.

தொடர்ந்து வருடா வருடம் வந்து ஏரலில் கச்சேரி செய்தவர்கள்/செய்பவர்களின் பட்டியல் பெரியது. மதுரை சோமு தொடர்ந்து 33 ஆண்டுகள் ஏரல் திருவிழாவில் பாடினாராம். காருகுறிச்சியாரும் அங்கு வருடம் தவறாமல் வாசித்ததில் ஆச்சரியமில்லை.

ஆச்சரியம் எதுவெனில், கச்சேரி செய்ததோடு நிற்காமல் திருவிழாவில் மற்ற கச்சேரிகளும் சிறப்பாக அமைய தன்னால் ஆனதை தொடர்ந்து செய்துள்ளார். 1958-ல் நடந்த திருவிழாவில் வேதாரண்யம் வேதமூர்த்தி குழுவினரும், இராஜபாளையம் செல்லையா குழுவினரும் வந்து வாசிக்க ஏற்பாடு செய்துவிட்டதைத் தெரிவிக்கும் இரண்டு கடிதங்களை இன்றளவும் ஏரல் கோயில் நிர்வாகத்தினர் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருகின்றனர். ”காருகுறிச்சி அருணாசலத்தின் ஈடுபாட்டில்தான் ஏரல் ஆடித் திருவிழா வெகு விமர்சையாய் நடக்க ஆரம்பித்தது. ஏ.கே.சி நடராஜன் போன்ற பல வித்வான்களை வரவழைத்தது காருகுறிச்சியார்தான்,” என்று கோயில் நிர்வாகி தெரிவித்தார்.

“இங்க வரவங்களுக்கு தனியாக ஓட்டல் அறைகளோ, அதிகமாகப் பணமோ கொடுக்கும் வசதியில்லை. இருந்தாலும் நாங்க கச்சேரிக்கு கூப்பிட்டா எல்லா வித்வான்களும் சந்தோஷமா வந்து கலந்துக்கிடுவாங்க,” என்றும் அவர் கூறினார். வளர்ந்து வரும் கலைஞர்கள் ஏரலில் வந்து கச்சேரி செய்தால் விரைவிலேயே புகழேணியில் ஏறிவிடுவார்கள் என்கிற நம்பிக்கையும் கலைஞர்களிடையே உள்ளது.

காருகுறிச்சியாரின் கடிதத்தில் இருந்த கையெழுத்து எங்களை உணர்ச்சிவசப்படச் செய்தது என்றால், லெட்டர்பேடில் கிடைத்த விவரங்கள் அவர் பெற்றிருந்த பட்டங்களையும், வகித்த ஆஸ்தான வித்வான் பதவிகளையும் தெரிவித்தது. கோயில் நிர்வாகி அவரிடம் இருந்த காருகுறிச்சியாரின் படங்களை எங்களுக்காகப் பிரதி எடுத்து வைத்திருந்தார். 

அந்தப் படங்களை எங்கள் கைப்பேசியில் படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, பத்திரிகையிலிருந்து கத்தரித்த இரண்டு செய்திக் குறிப்புகளை எடுத்து வந்தார்.

பழுப்பேறிய அந்தக் காகிதங்களில் நாங்கள் திருச்செந்தூரில் திரு.ராமனிடம் கேட்டுப் பதில் கிடைக்காமல் போன கேள்விக்குக் ’கிட்டத்தட்ட’ விடையிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 

நாங்கள் பார்த்த முதல் குறிப்பு அனேகமாய் கல்கியிலோ, ஆனந்த விகடனிலோ வந்திருக்கக் கூடும். தியாகராஜரின் 102-வது பிறந்த நாள் விழாவில் அந்நாளைய பிரதமர் நேரு கலந்து கொண்டதைப் பற்றி படங்களும் செய்திகளும் வந்துள்ளன. தியாகராஜர் பிறந்தது 1767. நிச்சயம் அவரது 102-வது பிறந்த நாள் விழாவில் பிறந்தே இருக்காத ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கியிருக்க முடியாதென்பதால், அது தியாகராஜரின் 102-வது நினைவு தினம் என்று கொள்ளலாம். அந்த விழாவில் காருகுறிச்சியாரின் கச்சேரி நடந்துள்ளது. 

1847-ல் மறைந்த தியாகராஜரின் 102-வது நினைவு தினம் 1949-ல் நடந்திருக்கும். வருடம் சரியெனில், 1949-லேயே காருகுறிச்சியாரின் பெருமை தில்லி வரை பரவி இருந்ததென்பதை ‘தேசிய கலாசார ஸ்தாபனம்’ ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் அவர் இடம் பெற்றதிலிருந்து உணரலாம். காருகுறிச்சியாருக்கு அரசியல் ஈடுபாடு இருந்ததை அவருடன் பழகியவர்கள் பதிவு செய்துள்ளார்கள். குறிப்பாகக் காமராஜருக்கு மிக நெருக்கமானவராக இருந்துள்ளார். பல காங்கிரஸ் விழாகளில் காருகுறிச்சியாரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அவர் ஆடம்பர ஆடைகள் தவிர்த்து கதராடை மட்டுமே அணிந்ததற்கும் அவர் அரசியல் ஈடுபாடே காரணமாகக் கொள்ளலாம். 

ஏரலில் கிடைத்த செய்திக் குறிப்பையும், காங்கிரஸாருடன் காருகுறிச்சியாருக்கு இருந்த நெருக்கத்தையும் மனத்தில் கொண்டு இலங்கை வானொலி செய்தியைப் பொருத்திப் பார்த்தால் — முதல் குடியரசு தினத்தில் காருகுறிச்சியாரின் இசை நிகழ்சி நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.

ஏரலில் கிடைத்த இன்னொரு குறிப்பின் தலைப்பு, “எங்கள் நாட்டுக்கு வாருங்கள்! பீப்பீ ஊதிக் காட்டுங்கள்” என்று கொட்டை எழுத்தில் ஒலிக்கிறது. காருகுறிச்சியாரின் அழகான இளவயதுப் படத்துடன் வெளியாகியிருக்கும் இந்தக் குறிப்பில் அமெரிக்காவிலிருந்து காருகுறிச்சியாருக்கு தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டிருந்ததைத் தெரிவிக்கிறது. எட்டு வரிச் செய்தியைப் படிக்கும்போது இரண்டு மூன்று முறை புருவம் தூக்கலாம். அதற்கு மேல் அதைப் பொருட்படுத்தக்கூடிய அளவுக்கு அதற்கு நம்பகத்தன்மை உண்டா என்று தெரியவில்லை. 

மனமும், (குடித்த தேநீரினால்) வயிறும் நிறைந்த நிலையில் நாங்கள் ஏரலில் இருந்து கிளம்பினோம். 


அடுத்த நாள் நாகர்கோயிலில் ஒரு மருத்துவரைச் சந்திக்கலாம் என்று தீபக் திட்டமிட்டிருந்தார். நாங்கள் திருநெல்வேலி திரும்பும் போது அவர் அழைத்துத் தனக்கு உடல்நலமில்லை என்று கூறினார். இம்முறை நான் பதறவில்லை. காருகுறிச்சியார் பார்த்துக்கொள்வார் என்று தோன்றியது.

வழியில் சிவகுமாரும், பாலமுருகனும் இறங்கிக்கொண்டனர். எங்களை ஜானகிராம் ஓட்டலில் இறக்கிவிட்டுவிட்டு ஓட்டுநர் விடைபெற்றுக் கொண்டார். தீபக்கும் நானும் ஓட்டலில் உணவருந்தினோம். அடுத்த நாள் காலையில் ஆறரை மணிக்குச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு தீபக் கிளம்பினார். நான் என் அறைக்குச் சென்று உடைமாற்றிக் கொண்டேன். அப்போதே தீபக்கிடம் இருந்து அழைப்பு வந்தது. 

“கிருஷி சார் உங்களைப் பார்க்கணுங்கறாங்க. கீழ வர முடியுமா?”, என்று கேட்டார் தீபக்.

எனக்குக் கிருஷி என்றால் யாரென்றே தெரியாது. தெரியாதது அவர் குற்றமில்லை என் அஞ்ஞானம் என்று அவரைப் பார்த்ததும் உணர்ந்துகொண்டேன்.

ஏதோ ஒரு பைத்தியம் வேலை மெனக்கெட்டுப் பெங்களூரிலிருந்து காருகுறிச்சியாரைத் தேடி அலைகிறதே. விசாரித்துப் பார்த்தால் ஏதும் பூர்வ ஜென்மப் பந்தம் புலப்படும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

 “திருநெல்வேலிக்கு ஒருத்தர் வந்து சார்வாளைப் பார்க்காம போக முடியாது,” என்றார் தீபக். 

என்னைப் பற்றியும் பரிவாதினியைப் பற்றியும் ஆர்வமாய்த் தெரிந்து கொண்டார். அவரைப் பற்றி அவரிடமே கேட்க எனக்குக் கூச்சமாக இருந்தது. எப்படியும் இணையத்திலும் மற்ற இலக்கிய பரிச்சயம் உள்ள நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

பேச்சுவாக்கில் தஞ்சாவூர் சங்கர ஐயரை நேர்காணல் செய்து ஆவணப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். எனக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சங்கர ஐயரைப் பார்த்துவிட வேண்டும் என்று பல வருட ஏக்கம். என் நண்பர் நாகஸ்வர வித்வான் இஞ்சிக்குடி சுப்ரமண்யம் ஏற்றிவிட்ட ஏக்கமது. இஞ்சிக்குடியுடன் பேசும் போது பத்து நிமிடத்துக்கு ஒருமுறை சங்கர ஐயர் பெயரைக் குறிப்பிடாமல் இருக்கமாட்டார். சங்கர ஐயரின் நளினகாந்தி கிருதியைப் பற்றி அவர் விளக்கிச் சொல்லிக் கேட்க வேண்டும். எவ்வளவு குறைந்த அசைவுகளின் ராகத்தின் சாரத்தை வெளிக் கொணர்ந்துவிடுகிறார் என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார். 

சங்கர ஐயர் திருநெல்வேலியில் இருக்கிறார் என்று நான் அறிந்திருந்தாலும், 98 வயதானவரை இந்தக் கரோனா சூழலில் சந்திப்பது உசிதமா என்று குழம்பி எதுவும் செய்யாமல் இருந்துவிட்டேன். இப்போது கிருஷி அவர் பெயரைக் குறிப்பிட்டதும் எனக்கு ஆசை எழுந்தது.

என்னுடைய நெடுநாள் ஆசையை கிருஷியிடம் தெரிவித்தேன். 

”சாதாரணமாகவே அவரைச் சந்தித்துப் பேசுவது சுலபமில்லை. நான் ஏதும் செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்,” என்று பட்டும்படாமல் சொன்னார் கிருஷி. 

நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அடுத்த நாள் காருகுறிச்சியார் பிறந்து புழங்கிய இடங்களுக்குப் போகப் போகிறோம் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. 


முதல் நாள் நடுராத்திரி பெங்களூரிலிருந்து கிளம்பி நாள் முழுவதும் அலைந்ததில் அடுத்த நாள் பொறுமையாகத்தான் கிளம்ப முடிந்தது. தீபக் என்னைவிடப் பொறுமைசாலி என்றால் எங்களை அழைத்துச் சென்ற ஓட்டுநர் அதைவிடப் பொறுமைசாலி. ஒருவழியாய் காலை உணவை சாப்பிட்டுவிட்டு புறப்பட முற்பகல் ஆகிவிட்டது. திருநெல்வேலி அரசு இசைப்பள்ளியில் பணியாற்றும் வித்வான் கௌரிசங்கரும் எங்களுடன் சேர்ந்துகொண்டார். சமீபத்தில் பெய்த மழையாலோ என்னமோ திருநெல்வேலி ஜில்லாவெங்கும் பசுமையாய் இருந்தது. 

செல்லும் வழியில் சுத்தமல்லிக்கு செல்லும் சாலையைக் காட்டும் பலகையைப் பார்த்தோம். காருகுறிச்சியாரின் முதல் நாகஸ்வர குரு சுத்தமல்லி சுப்பைய்யா கம்பர் என்கிற ஒரு தகவலைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை. ஒருவேளை அந்த ஊரில் சென்று விசாரித்தால் கிடைக்குமோ என்னவோ என்று அங்கலாய்த்தபடி காருகுறிச்சிக்குச் சென்றோம். 


நெடுஞ்சாலையிலிருந்து காருகுறிச்சி ஊருக்குள் நுழையும் இடத்தில் காருகுறிச்சியாருக்கு ஒரு சிலை இருக்கிறது. 

சட்டிப்பானையைக் கவிழ்த்தது போன்ற தலை. குன்னக்குடி வைத்தியநாதனுக்கு சவால்விடும் குங்குமப் பொட்டு. சிறிய சிப்ளா கட்டைகள் போன்ற காதுகள். அளவுக்கு அதிகமாய் நீண்ட கிரேக்க மூக்கு. அதீதமாய் அடர்ந்த புருவங்கள். ஐந்து விரலும் ஒன்றாய்த் தோன்றும் அதிசயக் கரங்கள். நகங்களில் நெயில்பாலிஷ். அவசரத்துக்கு ஏதோ வீட்டுக் குளியலறையிலிருந்து பிடுங்கிய குழாயைப் போன்ற நாகஸ்வரம். நாகஸ்வரம் என்று சொல்லக் கூட தயங்க வைக்கும் அணைசுக்கு அருகில் இருக்கும் வளைவு.

மொத்தத்தில் உள்ளூர்க்காரர்கள் பார்த்தால் வருந்தும்படியாகவும், வெளியூர்க்காரர்கள் பார்த்தால் சிரிக்கும்படியான சிலை.

நானும் அந்தச் சிலையைப் பார்த்துச் சிரித்ததுண்டு. காருகுறிச்சிக்கு செல்லாதிருந்தவரை.

நான் அங்கு சென்றபோது, சந்தித்த அத்தனை பேரும் இந்தச் சிலையைப் பற்றித் தவறாமல் பேசினர்.

“எங்க ஊருக்கே பெருமை அவருதான். நாங்கதான் இப்படி ஒரு சிலையை வெச்சுட்டோம்,” என்று சொல்லாத ஆளில்லை.

போகும்போதும் வரும்போதும் கண்ணில் பட்டு உறுத்தும் சிலைதான் அவர் நினைவைப் பசுமையாக வைத்துக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

அந்த ஊரில் ஒரு வயதான பெண்மணி இந்தச் சிலை வந்த கதையைச் சொன்னார்.

காருகுறிச்சியார் மறைந்த போது அவர் பிறந்த ஊரில் அவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிதி திரட்டப்பட்டதாம். ஊருக்குள் நுழையுமிடத்தில் பிரதான இடமொன்றும் குறிக்கப்பட்டு, நல்லதொரு நாள் பார்த்துச் சிலை திறப்புக்கான விழா ஏற்பாடுகளும் ஆகிவிட்டனவாம்.

சிலையை நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பை ஊரில் ஒருவர் ஏற்றுக் கொண்டதும் அவரிடம் கணிசமான தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காசை வாங்கிக் கொண்ட புண்ணியவானும், ”இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும்,” என்று போக்குக்காட்டி சிலைத் திறப்புக்கு இரண்டு நாட்களே இருக்கும் போது சந்தடியில்லாமல் ஊரைவிட்டு ஓடிவிட்டாராம்.

சிலையைத் திறக்க விழாவெல்லாம் ஏற்பாடு செய்து, வெளியூரிலிருந்து முக்கியஸ்தர்களை எல்லாம் அழைத்துவிட்ட நிலையில் சிலை இல்லாவிட்டால் என்ன செய்ய?

காருகுறிச்சியார் சிலை இருக்கும் தெருவுக்கு அடுத்தார்ப்போல் மண்பாண்டம் செய்யும் குயவர்கள் இன்றும் இருந்து வருகிறார்கள். அவர்கள்தான் ஆபத்பாந்தவர்களாய் உதவியிருக்கின்றனர்.

குறித்த நாளில் மண்ணின் மைந்தனுக்கு சிலை திறப்பு தடையில்லாமல் நிகழ தங்களால் ஆனவற்றை செய்துள்ளார்கள்.

இந்தக் கதையைக் கேட்டதும் அந்தச் சிலையைப் பார்த்தேன்.

பிள்ளையார் சதுர்த்திக்கு அச்சில் வார்த்த அழகான பிள்ளையார்களை கடைகளில் வாங்கி வந்தாலும், வீட்டு வாண்டு ஒன்று நாலைந்து களிமண் உருண்டைகளை உருட்டி “இதுதான் பிள்ளையார்” என்று சொல்லும்போது உலகின் அழகான பிள்ளையார் அதுதான் என்று தோன்றுவது நினைவுக்கு வந்தது.

சங்கீத உலகின் மிக அழகான சிலையாக காருகுறிச்சியாரின் சிலை என் கண்களுக்குப்பட்டது.


காருகுறிச்சியார் பிறந்த வீடு

சிலையை ஒட்டி நெடுஞ்சாலையிலேயே இருந்த சிறிய வீடொன்றுக்கு தீபக் அழைத்துச் சென்றார். அதுதான் காருகுறிச்சியார் பிறந்த வீடென்று சொல்கிறார்கள் என்றார்.

சிறிய வீட்டின் கூடத்துக்கு முன் வராண்டா போன்ற ஒரு சிறு இடம். அதன் சுவர்களில் காருகுறிச்சியார் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் பல மாட்டப்பட்டுள்ளன. 

நான் கண்களை மூடி ஒரு நிமிடம் காருகுறிச்சியாரின் தந்தையார் பலவேசம் பிள்ளையை நினைத்துக் கொண்டேன்.

கூரைநாடு நடேச நாயனக்காரரின் வாசிப்பையும், பந்தாவையும் பார்த்து தான் அதுவரை செய்து வந்த பூக்கட்டும் தொழிலைவிட்டு நாயனத்தின் பக்கம் வருவதற்கு முன் அந்தச் சிறிய வீட்டில்தான் அவர் தத்தளித்து குறுக்கும் நெடுக்கும் நடந்திருப்பாரோ? அவர் மட்டும் அன்று துணிந்து அந்த முடிவை எடுக்காதிருந்திருந்தால் நமக்குக் காருகுறிச்சியார் என்கிற மேருவே கிடைக்காது போயிருக்குமே என்ற எண்ணம் அலைக்கழித்தது.

அங்கிருந்த புகைப்படங்களை நான் என் கைப்பேசியில் படமெடுக்க ஆரம்பித்தேன். தீபக் என்னைத் தடுத்து, தான் எல்லாவற்றையும் ஏற்கெனவே நல்லமுறையில் ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறினார். அவர் அந்தப் படங்களை பிரதியெடுப்பதற்காக அந்தச் சுவர்களிலிருந்து கழட்டி எடுத்துச் சென்று மீண்டும் கொண்டுவருவதாக இப்போது அந்த வீட்டில் இருப்பவரிடம் கேட்டுள்ளார். அந்த வீட்டுச் சொந்தக்காரரோ, “எங்கள் வீட்டு லட்சுமியைக் கழட்டிப் போகவா என்று கேட்கிறீர்கள். அதை மட்டும் செய்யாதீர்கள்!” என்று கண் கலங்கியுள்ளார். தீபக் அந்தப் படங்களை கழட்டாமலே பிரதியெடுத்துள்ளார்.

வீட்டின் சொந்தக்காரருக்கு படங்களில் உள்ள லட்சுமி கடாட்சம் தென்படுவது போலவே அந்தப் படங்களின் பரவியிருக்கும் செல்லரிப்பும் கண்ணில்பட்டால் வரலாறு வளம் பெறும்.

இராஜரத்ன விலாஸ்

அடுத்து காருகுறிச்சியார் அவர் சொந்த ஊரில் கட்டிய ‘ராஜரத்ன விலாஸ்’-க்குச் சென்றோம். வீட்டின் பெயர் இருந்த வளைவு இன்று சுண்ணாம்பால் மொழுகப்பட்டு மூளியாக நிற்கிறது.

ஒருவீதியில் தொடங்கி மறு வீதியை இணைக்கும் பெரிய கிராமத்து வீடு. காருகுறிச்சியார் காலத்தில் முன்புறத்தில் பெரிய திண்ணைகள் இருந்தனவாம். இந்த வீட்டின் கிருஹப்ரவேசத்தில் ராஜரத்தினம் பிள்ளை தலைமை தாங்கி கச்சேரியும் செய்தார் என்று கூறுகிறார்கள். காருகுறிச்சியார் இசைக் கலைஞராகவும் திருநெல்வேலி ஜில்லாவின் முக்கிய ஆளுமையாகவும் அசுர வேகத்தில் வளர்ந்ததைக் கண்ட வீடு.  

அவர் காலத்துக்குப்பின் அந்த வீட்டை வாங்கியவர்கள் மாற்றிக் கட்டியுள்ளார்கள். இந்த வீட்டிலும் காருகுறிச்சியாரின் படங்கள் நிறைய மாட்டப்பட்டுள்ளன. 

காருகுறிச்சியாரின் பரிந்துரையில்தான் அந்த ஊருக்கு இரயில் நிலையம் வந்தது என்று கூறுகின்றனர். அவரின் வளர்ச்சி உள்ளூர் பெரிய புள்ளிகளை உறுத்தியுள்ளது. தனக்கு எந்த நேரமும் ஆபத்து வந்துவிடலாம் என்று கச்சேரி நேரம் தவிர எப்போதும் கையில் ரிவால்வரோடு இருந்திருக்கிறார் காருகுறிச்சியார். ஒரு கட்டத்தில் கச்சேரிகளுக்காகப் பல ஊர்களுக்கு தொடர்ந்து செல்லும் போது உள்ளூரில் அவர் குடும்பத்துக்கு நிறைய சங்கடங்கள் உருவாகியுள்ளன. தான் பிறந்து வளர்ந்து ஊரில், தான் ஆசையாய்க் கட்டிய வீட்டில் இருப்பதைவிட கோயில்பட்டிக்குச் சென்றுவிடுவதே பாதுகாப்பு என்று காருகுறிச்சியார் முடிவெடுத்துள்ளார். 

நாங்கள் அந்த வீட்டை விட்டு வெளியில் வரும்போது, அந்த வீட்டை விட்டு நீங்கும்போது காருகுறிச்சியாரின் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.


அடுத்து காருகுறிச்சி அருணாசலத்தின் வீட்டுக்குச் சென்றோம். முன் சென்றதும் காருகுறிச்சி அருணாசலத்தின் வீடுகள்தானே என்று குழம்ப வேண்டாம். இப்போது நாங்கள் சென்றது காருகுறிச்சியாருடன் நிழலாய் வாசித்த நாகஸ்வரக் கலைஞரின் வீட்டுக்கு. அவர் பெயரும் அருணாசலம்தான்.

சங்கீத உலகில் பிறப்பால் சகோதரர்களாக இல்லாதவர்கள் இசையால் இணைந்து சகோதரர்களாக அறியப்படும் கதைகள் பல உண்டு.  நாகஸ்வர உலகில் காருகுறிச்சி சகோதரர்கள் என்று அறியப்பட்ட அருணாசலங்களின் கதை அதிகம் பேசப்படாத ஒன்று. 

ஆலத்தூர் சகோதரர்கள் போல இணையர்களின் கச்சேரியாக காருகுறிச்சி சகோதரர்களின் கச்சேரிகள் பார்க்கப்பட்டதா என்ற கேள்வி எழலாம். 1950-களின் தொடக்கத்தில் வந்த பத்திரிக்கை செய்திகளைப் பார்க்கும் போது இந்தச் சந்தேகம் தீர்கிறது. 1954-ல் கல்கியில் காருகுறிச்சி சகோதரர்கள் கச்சேரி என்றே ஈ.கிருஷ்ணைய்யரின் விமர்சனம் வெளியாகியுள்ளது. காலப்போக்கில், தன்னைவிட இளையவருக்கு பேரும் புகழும் கிடக்கிறதே என்று புழுங்காமல், கச்சேரியின் வெற்றிக்குத் தன் பங்கு என்பதை நன்கு உணர்ந்து வாசித்துள்ளதை நமக்குக் கிடைக்கும் பதிவுகள் சுட்டுகின்றன.

பெரிய அருணாச்சலம்

எம். அருணாசலம் இரண்டாம் நாயனம் வாசிக்கும் முறை அலாதியானது. பெரும்பாலும் ராக ஆலாபனைகளின் போது அவருக்கென்று தனியாக வாய்ப்பை அவர் எடுத்துக் கொண்டதே இல்லை. பி. அருணாசலம் வாசித்த சங்கதிக்கு மாற்றாய் ஒன்றை வாசிப்பது, அல்லது  வாசித்த பிரயோகத்தில் கடைசி பகுதியை மட்டும் வாசித்துக் கோடிட்டுக் காண்பிப்பது போன்ற வழக்கமான உத்திகளை அவர் பயன்படுத்தவில்லை. அதற்காக அவர் வாசிக்காமலும் இல்லை. பெரும்பாலும் ஓர் உசிதமான ஸ்வரத்தில் கார்வையாய் சேர்ந்து கொள்வார். அப்படி அவர் சேர்ந்து கொள்வதை விளக்க, தக்க வார்த்தை இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்தக் கார்வை இல்லாவிட்டால் மொத்த ஆலாபனையின் கனத்தில் பாதி குறைந்துவிடும் என்று வேண்டுமானால் சொல்லலாம். மேற்கத்திய சிம்பொனி ஒன்றில் வாத்தியக்காரர்கள் வாசிப்பதை தனித்தனியாகக் கேட்டால் ஒலிச்சிதறல்களாகக் ஒலிக்கக்கூடும். அனைத்து வாத்தியங்களும் சேர்ந்து ஒலிக்கும்போதுதான் முழுவுருவாய் நமக்குப் புலப்படும். எம்.அருணாசலத்தின் உடன் இசை கொடுக்கும் அனுபவங்கள் மேற்கத்திய இசையில் மனத்தை மயக்கும் ஹார்மனிக்கு ஒப்பானவை. கீர்த்தனைகளில் கூட இத்தகைய அணுகுமுறையைக் காணலாம். குறிப்பிட்ட சங்கதிகளை மத்திய ஸ்தாயியில் பி.அருணாசலம் வாசிக்க, அதற்குக் கீழ் ஸ்தாயியில் சுஸ்வரமாய் எம்.அருணாசலம் வாசித்து உருவாக்கும் சூழல் அலாதியானது. இருவரும் மாற்றி மாற்றி வாசிக்கும் ஸ்வரங்களில் மட்டும்தான் தன் திறமையை ஓரளவு வெளிக்காட்டும் வகையில் வாசித்துள்ளார் எம்.அருணாசலம். அவற்றில் கூட ஓரளவுக்கு மேல், “இது போதும். தம்பி வாசிக்கட்டும்,” என்று தன்னை இழுத்து நிறுத்திக் கொள்வதை நுணுக்கமாய்க் கேட்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

நாங்கள் அருணாசலத்தின் வீட்டுக்கு நுழைந்தபோது அவருடைய மகனும் மருமகளும் எங்களை வரவேற்றனர். அவர்கள் வீட்டுக் கூடத்தில் ஐந்தாறு படங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் எம்.அருணாசலத்தின் படம். மற்றவை எல்லாம் பி.அருணாசலத்தின் படங்கள்தான். அருணாசலத்தின் மகன் எங்களைப் பார்த்து வெள்ளந்தியாய்ச் சிரித்தார். பல ஆண்டுகளுக்கு முன்னால் அவரைத் தாக்கிய மூளைக் காய்ச்சலால் அவர் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அவருடைய துணைவியார்தான் எங்களிடம் பேசினார்.

“ரெண்டு பேரும் உடப்பொறந்தா மாதிரிதான் பழகினாங்க. கச்சேரி வாசிக்கறதைத் தவிர மத்த எல்லா விஷயத்துக்கும் எங்க மாமனார்தான் பொறுப்பு. ரேட் பேசறதுல இருந்து, பணத்தை வாங்கி எல்லோருக்கும் குடுக்கறதுல இருந்து எல்லாத்தையும் ஒரு அண்ணனாப் பார்த்துகிட்டாங்க. 1964-ல அவங்க (பி.அருணாசலம்) காலமானதும் இவங்க நாகஸ்வரத்தையே தொடலை. தம்பிக்கு வாசிச்சதுக்கு அப்புறம் வேற யாருக்கும் வாசிக்கறதில்லை-னு முடிவு பண்ணிட்டாங்க,” என்றார்.

கோலப்பன் ஒரு கட்டுரையில் அன்றில் பறவை என்று எம்.அருணாசலத்தைக் குறிப்பிட்டது எனக்கு நினைவுக்கு வந்தது.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது காருகுறிச்சியில் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற மணி வந்து சேர்ந்தார். அவரிடம் பெங்களூரில் இருந்த போதே குடும்ப நண்பர் ஒருவர் மூலமாகப் பேசியிருந்தேன். காருகுறிச்சியில் நுழையும்போதே அவரை அழைத்திருந்தேன். அவர் வேலைகள் முடிந்ததும் வந்து சேர்ந்துகொண்டார்.

காருகுறிச்சியில் ஒரு குன்றுள்ளது. அங்கு உள்ள முருகன் கோயிலை மலைக் கோயில் என்று குறிப்பிடுகின்றனர். அங்கு கார்த்திகை தீப விழா சிறப்பாக நடக்குமாம். விளக்கை மலைக் குன்றில் ஏற்றிக் கிளம்பி ஊர் முழுவதும் ஊர்வலமாய் வருவார்களாம். காருகுறிச்சியார் தொடர்ந்து பல வருடங்கள் அந்த உற்சவத்தில் வாசித்துள்ளதை மணி நினைவுகூர்ந்தார். ஒரு நிலையில் “செலவை ஏற்றுக் கொள்கிறேன். வேறு மேளத்தை வைத்துக் கொள்ளுங்கள்,” என்றாராம்.

ஊரைவிட்டு வெளியெறியதையும், உற்சவத்துக்கு வாசிப்பதை நிறுத்திக் கொண்டதையும் என் மனம் தானாகப் பொருத்திப் பார்த்தது. மனம் கனத்துப் போக, மௌனமாய் அங்குள்ள படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

”அவரோட பழகினவங்க எல்லாம் இப்ப இங்க யாருமில்லை. வயசானவங்க எல்லாம் ஒண்ணு  செத்துப் போயிட்டாங்க. இல்லைனா ஊரைவிட்டுட்டுப் போயிட்டாங்க. ஊரில பாதி பேர் வீட்டுல அவர் படத்தை மாட்டிச் வெச்சு இருப்பாங்களே தவிர அவரைப் பத்தி யாருக்கும் ஒண்ணும் தெரியாது.”

நான் அதிர்ந்து போனேன். காருகுறிச்சியார் அந்த ஊரைவிட்டுச் சென்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இத்தனை நாளாகியும் கூட கிராமத்தில் பாதி வீடுகளில் அவர் படம் மாட்டியிருக்கிறர்கள் என்பது எனக்குப் பெரிய விஷயமாகப்பட்டது.

”எங்க வீட்டுல எல்லாம் அப்பா அம்மா படம் வைக்கறதே அதிசயம்தாங்க. ஊருல பாதி பேர் வீட்டுல அவர் படமிருக்குனு சொல்றீங்களே! அதுக்குமேல என்ன வேண்டும்,” என்று நெகிழ்ந்தேன்.


நாங்கள் காருகுறிச்சியிலிருந்து கிளம்பினோம்.

கல்லிடைக்குறிச்சியில் ஒருவரைப் பார்த்துவிட்டு ஆயக்குடிக்குச் சென்று ஒருவரைப் பார்ப்பதாகத் திட்டம். வண்டியில் ஏறும் போது கிருஷி அழைத்தார்.

“சாயங்காலம் அஞ்சு மணிக்குத் தயாரா இருங்க. சங்கர ஐயரைப் போய்ப் பார்க்கலாம்”, என்றார். நான் மகிழ்ச்சியில் ஏதோ சொல்ல வாயெடுத்தேன். என்னைப் பேசவிடாமல், “அஞ்சு மணின்னா சரியா அஞ்சு மணி. தாமதம் கூடவே கூடாது”, என்று பன்னி பன்னிச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். ஆயக்குடி செல்வதை அடுத்த நாளைக்குத் தள்ளி வைத்துவிட்டு கல்லிடைக்குறிச்சிக்குக் கிளம்பினோம்.

என் ஜி.என்.பி பற்றிய ஆய்வுகளின் போதே நான் சென்றிருக்க வேண்டிய ஊர் கல்லிடைக்குறிச்சி. அங்கு அவருக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. அவர்கள் வீட்டில் காது குத்து முதலான எந்த விழாவாகினும் ஜி.என்.பி வந்து பாடினால்தான் உண்டு. இன்று நமக்குக் கிடக்கும் ஜி.என்.பி பதிவுகளில் சிறந்த ஐந்தைத் தொகுத்தால் அவற்றுள் கல்லிடைக்குறிச்சியில் பாடிய கச்சேரி நிச்சயம் தேறும். நெடுஞ்சாலையில் செல்லும்போது எனக்குள் இருந்த ஜி.என்.பி ரசிகன் விழித்துக் கொண்டான். இன்று வளர்ந்து வரும் பாடகர் அபிஷேக் ரவிஷங்கரின் தாத்தா முன்சொன்ன ரசிகர்களுள் ஒருவர். அபிஷேக்கிடம் நல்ல அக்மார்க் ஜி.என்.பி ரசிகர் இன்னும் ஊரில் இருக்கிறார்களா என்று விசாரித்தேன். எதிர்பார்த்தபடி யாருமில்லை என்று பதில் வந்தது. இந்தப் பயணம் காருகுறிச்சியாருக்காகத்தானே — அலைபாய வேண்டாம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

தீபக் யாருடனோ தன் கைப்பேசியில் வழிகேட்டுக் கொண்டிருந்தார். சற்றைக்கெல்லாம் அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் எங்களுக்கெதிரில் தன் ஆக்டிவா வண்டிக்கு அருகில் நின்றபடி கையசைத்துக் கொண்டிருந்தார். முழுக்க வெளுத்த தாடி, பாலுமகேந்திரா தொப்பி — உள்ளூரில் காதலிக்கும் என்.ஆர்.ஐ கதாநாயகனுக்குக் கல்யாணத்துக்கு முன் வரும் தந்தையாரை ஒத்த தோற்றமவருக்கு. நாங்கள் அவரை நெருங்கியதும் வண்டியில் ஏறி முன்னே செல்ல ஆரம்பித்தார். அவர் வீட்டுக்கு வழிகாட்டி முன் செல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சாலையில் ஓரமாக வண்டியை நிறுத்தினார். எங்கள் காரும் அவர் வண்டிக்கு அருகில் நின்றது. அவர் எங்களை நோக்கி வேகமாய் நடந்து வந்து அழுத்தமாகக் கையைக் குலுக்கி “ஐ ஆம் பார்த்தசாரதி”, என்றார்.

அவர் நிறுத்திய இடத்தில் சாலையை ஒட்டி வயல்வெளிகளாய் இருந்தன. ஒரு பெரிய மரத்தின் நிழலில் பெரிய கல் ஒன்று இருந்தது. “உட்கார்ந்து பேச இது நல்ல இடம்.”, என்று அந்தக் கல்லின் மேல் அமர்ந்துகொண்டார்.

நாங்கள் அமர்ந்து கொண்டதும் எங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

என் பூர்வீகம் தஞ்சாவூர் ஜில்லா என்றதும், “உங்களுக்கும் எங்களுக்கும் தீர்க்க வேண்டிய பஞ்சாயத்து ஏகத்துக்கு இருக்கு,” என்று சிரித்தார்.

தீபக்கைப் பார்த்து, “சில தஞ்சாவூர்காரங்க நம்ப காருகுறிச்சியார் என்னமோ சினிமாவுல வாசிச்சதாலத்தான் பேர் எடுத்தார்னு சொல்லிகிட்டு அலைஞ்சாங்க, தெரியுமா?” என்றார்.

“அவர் ’கொஞ்சும் சலங்கை’ல வாசிச்சது 1960-கள்லதானே. அதுக்கு முன்னாடியே அவர் பெரிய பேர் எடுத்தாச்சே!” என்றேன்.

“பரவாயில்லையே! தஞ்சாவூர்காரனாக இருந்தாலும் நல்லவனா இருக்கியே,” என்று சத்தமாகச் சிரித்தார் பார்த்தசாரதி.

திருநெல்வேலி ஜில்லாவில் பள்ளி வாத்தியாராய் இருந்த தொண்ணூறு வயதான சங்கீத ரசிகரை நான் சமீபத்தில் பெங்களூரில் சந்தித்து இருந்தேன். அவர் சொன்ன விஷயத்தை பார்த்தசாரதியின் பரிகாசத்துக்கு பதில் சொல்ல உபயோகித்துக்கொண்டேன்.

ராஜரத்தினம் பிள்ளையிடம் கற்கத் தொடங்கி சில காலம் இரண்டாவது நாயனம் வாசித்து வந்தார் காருகுறிச்சியார். அந்தச் சமயத்தில் திருநெல்வேலி ஜில்லாவில் கச்சேரி என்றால் காருகுறிச்சியார் எப்போது நாயனத்தில் கைவைக்கிறார் என்று பார்த்துக்கொண்டே இருப்பார்களாம். அவர் ஷட்ஜத்தைப் பிடித்து ஸ்ருதி சேர்த்தால்கூட அத்தனை ரசிகர்களும் கரகோஷம் செய்வார்களாம். ராஜரத்தினம் பிள்ளையும் ஒருவகையில் இந்த விளையாட்டை ரசித்திருக்கிறார். பதினைந்து நிமிடங்கள் வாசித்துவிட்டு, “டேய்! எல்லாப் பயலுவளும் ஒன்னக் கேக்கத்தான் வந்திருக்கானுவோ. நீயே வாசி,” என்று ஜாகைக்கு சென்றுவிடுவாராம்.

இந்தக் கதையை நான் சொன்ன போது பார்த்தசாரதி மிகவும் அணுக்கமாகிவிட்டார்.

ஃபேஸ்புக்கில் நாமறியாத ஒருவருக்கும் நமக்கும் ஐந்நூறு பரஸ்பர நண்பர்கள் இருப்பது போல, சங்கீதத்தால் நான் பெற்ற பல நண்பர்களை தனக்கும் நெருங்கியவர்கள் என்றார் பார்த்தசாரதி. ஆனால் எங்கள் இருவருக்கும் அதுநாள் வரை பரிச்சயம் இல்லாமல் போனது ஆச்சரியம்.

பார்த்தசாரதியின் பூர்வீகம் காருகுறிச்சி. அவருடைய பாட்டனார் காருகுறிச்சியாருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்திருக்கிறார். தன்னுடைய சிறு வயதில் பார்த்தசாரதி இரண்டொரு முறைதான் காருகுறிச்சியாரை நேரில் பார்த்திருக்கிறாரென்றாலும்  ஊர்ப் பாசமும், சங்கீத ஞானமும் அவரை வாழ்நாள் முழுவதும் காருகுறிச்சியாரின் இசைக்கு அடிமையாக்கி வைத்திருக்கின்றன.

“எனக்கு சங்கீத ஞானம் உண்டு என்பதைக் கூறிக் கொள்வதில் எனக்கு கூச்சமேயில்லை. தினமும் காருகுறிச்சியாரின் படத்துக்கு ஊதுபத்தி காட்டி வருவதால்தான் எனக்கு அந்த ஞானம் வந்தது என்பதில் சந்தேகமில்லை; பெருமையுண்டு!”, என்று தன் பேச்சைத் தொடங்கினார்.

பேச்சு மீண்டும் காருகுறிச்சியாரின் உசைனிக்குச் சென்றது. பார்த்தசாரதியின் உடல் சிலிர்த்து ரோமாஞ்சனமடைந்தது. அவர் பங்குக்கு இரண்டு உசைனி கதைகள் சொன்னார். அவற்றை மொத்தமாகத் தொகுத்து எழுதுவதற்காக இங்கு சொல்லாமல் விடுகிறேன்.

”நான் வாழ்க்கையில பெருசா சாதிச்சுட்டதா நினைக்கலை. அகாடமியில Hall of Fame-ல காருகுறிச்சியார் படம் வர்றதுக்கு நானும் ஒரு காரணமாயிருந்தேங்கறதை சாதனையா நினைக்கிறேன்,” என்று விவரிக்கத் தொடங்கினார் பார்த்தசாரதி.

“சங்கீத வித்வான்கள் பலபேருடன் நெருங்கிப் பழக எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. நான் வங்கியில் ஒரு சாதாரண வேலையில் இருந்தேன். ஆனால் என்னுடைய நண்பர்கள் பல பேர் கோடீஸ்வரர்கள்.  அப்படிப்பட்ட பரிச்சயங்களில் மியூசிக் அகாடமியின் ப்ரெசிடெண்ட் டி.டி.வாசுவும் அடக்கம். அவ்வப்போது அவருடன் சேர்ந்து மது அருந்தும் அளவிற்கு நெருக்கம். டிசம்பர் சீஸன் நடந்துகொண்டிருந்த போது ஒருநாள் நான் வாசுவைச் சந்திக்கப் போயிருந்தேன். அப்போது பேச்சில் காருகுறிச்சி அருணாசலத்தின் பெயர் வந்தது.

’என் கல்யாணத்துக்கு காருகுறிச்சிதான் நாகஸ்வரம். ஊரே பேசித்து அவர் வாசிப்பைப் பற்றி,’ என்று வாசு சொன்னார்.

’அதெல்லாம் சரி. அவருக்கு என்ன செஞ்சீங்க அகாடிமில,’ என்று கேட்டுவிட்டேன்.

‘என்னடா செய்யணுங்கற,’ என்று வாசு கேட்டார்.

‘அதெல்லாம் ஒண்ணும் செய்யமுடியாது குரு. நான் ஏதாவது சொன்னா நீங்க கமிட்டியக் கேட்கணும்பீங்க. அப்புறம் கிணத்துல போட்ட கல்லுதான்,’ என்று உசுப்பிவிட்டேன்.

’என்ன பண்ணனும். சொல்லுடா!’ என்று பொறுமையிழந்தார் வாசு.

‘ஒண்ணும் வேண்டாம். அகாடமி லாபியில Hall of Fame-ல காருகுறிச்சியார் படம் வரணும்,’ என்றேன்.

அப்போதிருந்த வேகத்தில், ‘வர்ற ஞாயித்துக்கிழமை படம் திறக்கறோம். நீ படத்துக்கு ஏற்பாடு’ என்றார் வாசு.

நான் சந்தோஷ்த்தில் வெளியில் வந்தேன். அப்புறம்தான் அகாடமியில் வைப்பதற்குத்தக்க படம் ஒன்றும் கைவசமில்லை என்று உரைத்தது.

மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் எனக்கு நெருங்கிய நண்பர். அவரைக் கேட்டேன். அவர் படத்துக்கு ஏற்பாடு செய்யமுடியும் ஆனால் தொடர்ந்து எம்.எல்.வி அம்மாவுக்கு கச்சேரி வாசிக்க இருக்கிறது என்றார். எம்.எல்.வி அம்மாவுடனும் எனக்கு நல்ல பழக்கம். அவரிடம் சென்று விஷயத்தைச் சொன்னோம். அவர் உடனே. “நல்ல விஷயம். பக்தவத்சலம் போய் படத்தை எடுத்துக் கொண்டு வரட்டும். நான் ஈஸ்வரனை வாசிக்கச் சொல்கிறேன்,” என்று உடனே அனுப்பிவைத்தார்.

அப்படித்தான் காருகுறிச்சியாரின் படம் அகாடமியில் வந்தது. அவர் படம் வந்ததைப் பார்த்துதான் பின்னாளில் ராஜரத்னம் பிள்ளையின் படத்தையே அங்கு வைத்தார்கள்.”

பார்த்தசாரதி போன்ற ரசிகர்கள் தங்கள் சங்கீத ஆதர்சங்களுடன் வாழ்பவர்கள். அவர்கள் கூறுவதில் வரலாறு எது, கற்பனை எது என்று ஆராய்ந்தால்தான் கூறமுடியும். ஆனாலும் ஒரு சங்கீத ஆளுமை தன் காலத்துக்குப் பின்னும் எப்படித் தனக்குப் பின்வரும் தலைமுறையை வசப்படுத்தி வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள இத்தகைய ரசிகர்களே தேவைப்படுகின்றனர்.

இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்ததும் பார்த்தசாரதியிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு உணவகத்துக்குச் சென்றோம்.


ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

முந்தைய நாள் சங்கரலிங்க கம்பர் பேசும்போது ஹரிகேசநல்லூரைக் குறிப்பிட்டிருந்தார். அதன் தாக்கத்தில் காரில் செல்லும்போது மேதை முத்தையா பாகவதர் வாழ்ந்த ஊரைப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருந்தேன். கல்லிடைக்குறிச்சியிலிருந்து கிளம்பும் போது காரின் ஓட்டுநர், “ஹரிகேசநல்லூர் போகணும்னு சொன்னீங்களே! பக்கத்துலதான் இருக்கு,” என்றார்.

சாயங்காலம் சங்கர ஐயரைப் பார்ப்பதைத் தவிர அன்றைய தினத்துக்குத் திட்டம் ஒன்றுமில்லாததால் கல்லிடைக்குறிச்சியிலிருந்து ஹரிகேசநல்லூருக்குக் கிளம்பினோம்.

ஊருக்குள் நுழைந்ததும், அக்கிரகாரம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிப்பதில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது சாலையில் எதிர்பட்ட ஒருவரிடம் விசாரித்தோம்.

“நீங்க கீழ அக்கிரகாரத்துக்குப் போகணுமா, மேல அக்கிரகாரத்துக்குப் போகணுமா,” என்று கேட்டார்.

“இங்க முத்தையா பாகவதர் இருந்தாரே…” என்று நான் சொல்ல ஆரம்பித்து நாக்கைக் கடித்துக் கொண்டேன்.

”முத்தையா எவன்?” என்று சுரீரென்று திருப்பியடித்தது அவர் பதில்.

ஓட்டுநர்தான் முதலில் சுதாதரித்துக் கொண்டு, “பெரிய இசைக் கலைஞருங்க”, என்றார்.

“அப்ப இருங்க,” என்று யாருக்கோ தொலைபேசிவிட்டு என்னிடம் ஃபோனைக் கொடுத்தார்.

“ஹரிகேசநல்லூர் முத்தய்யா பாகவதர்…” என்று சொல்ல ஆரம்பிப்பதற்குள்.

“இருங்க வரேன்,” என்று ஃபோனைத் துண்டித்துவிட்டார்.

இரண்டு நிமிடங்களில் ஒரு இளைஞர் பைக்கில் வந்தார். அவர் பின்னால் நடுத்தர வயதில் ஒருவர் அமர்ந்திருந்தார்.

”வாங்க போகலாம்,” என்றார் அந்த பின்னால் அமர்ந்திருந்த மனிதர்.

நாங்கள் அவர் பின்னால் சென்று கோயிலைத் தாண்டி ஒரு வீட்டை அடைந்தோம்.

“இதுதான் மூக்கய்யா கம்பர் வீடு. அவரு காலமாகி ரொம்ப வருஷமாச்சே. இப்ப அவங்க குடும்பத்து ஆளுங்க இங்க இல்லையே!” என்றார்.

நான் பதறி, “மூக்கய்யா இல்லைங்க – முத்தய்யா,” என்றேன்.

“ஓ! நீங்க இசைக் கலைஞர்-னு சொன்னீங்க இல்லையா? மூக்கய்யா கம்பர்-னு நினைச்சுட்டேன். இவரைத்தான் காருகுறிச்சி அருணாசலத்துக்கே குரு-னு சொல்லுவாங்க”, என்றார்.

ஹரிகேசநல்லூருக்கு நாங்கள் காருகுறிச்சியார் தொடர்பாக வரவில்லை என்றாலும் எங்களுக்கு புதியதாக ஒரு தகவல் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தோம்.

முந்தின நாளில் சங்கரலிங்க கம்பர் ”ஹரிகேசநல்லூர்ல இருந்து ஒருத்தரும் வருவாரு,” என்று சொன்னது இவரைக் குறிப்பிட்டுத்தான் இருக்கும் என்று பொருத்திக்கொண்டேன்.

”பாகவதர்-னா கோயில் கிட்டதான் இருக்கும்,” என்று காக்க வைத்துவிட்டு யாரிடமோ விசாரித்து வந்தார்.

அவர் அழைத்துச் சென்ற இடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் ஒரு சிறிய வெள்ளைநிறக் கட்டடம் இருந்தது. சிறிய கதவுக்கு முன் நிறைய முட்கள் வெட்டிப்போட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆடுகள் புகுந்துவிடாமல் இருக்க அந்த ஏற்பாடாம்.

அந்தக் கட்டடம் இருந்த தெரு அக்கிரகாரம். அங்கிருந்த வீடுகள் பெரும்பாலும் பாழடைந்து இருந்தன. சிறிது நேரத்தில் எங்களுக்கு வழிகாட்டி வண்டி ஓட்டி வந்த இளைஞர், தன் வண்டியில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண்மணியை அழைத்து வந்தார்.

கோயிலருகில் சிலர் மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் உதவியுடன் முட்களை அகற்றி கதவைத் திறந்து எங்களை வரவேற்றார் அந்தப் பெண்மணி.

உள்ளே நுழைந்ததும்தான், அது முத்தைய்யா பாகவதர் இருந்த வீடல்ல. அவர் கட்டிய பஜனை மடம் என்று தெரிய வந்தது.

முத்தைய்யா பாகவதர் பிரதிஷ்டை செய்த வேல்

பஜனை மடத்தில் அமர்ந்து பஜனை செய்யக் கொஞ்சம் பெரிய அறை, அதையொட்டிக் கருவறை போன்ற சிறிய அறை ஒன்றுமாய் இருந்தது. அந்தச் சிறிய அறையில் இருந்த வேல் முத்தய்யா பாகவதர் பிரதிஷ்டை செய்ததாம். பெரிய அறையில் நிறையச் சுவாமி படங்களும், முத்தய்யா பாகவதரின் இள வயதுப் படமொன்றும் மாட்டப்பட்டுள்ளன.

பாகவதர் இருந்த காலத்தில் கந்த சஷ்டி உற்சவம் மிக விமரிசையாக நடந்திருக்கிறது. பெரிய பெரிய வித்வான்கள் கூட அந்த உற்சவத்தில் பாட பதினைந்து நிமிடங்கள் கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறார்கள்.

பாகவதர் காலத்துக்குப் பின் கவனிப்பாரின்றி கட்டடம் பாழடைந்துவிட்டது.

“எங்க அப்பாதான் ரிட்டையரானதும் 1970-களில் புதுப்பிச்சிக் கட்டினார். சில வருஷம் திரும்ப உற்சவம் பண்ணக்கூட முயற்சி செய்தார். அப்பா செஞ்ச கைங்கரியத்தை விட்டுடக்கூடாது-னு நான் பார்த்துக்கறேன். வாரத்துக்கு ஒருநாளாவது வந்து பெருக்கி மொழுகி விளக்கேத்தறேன்,” என்றார் அந்தப் பெண்மணி.

”மகாராஜாவாகவே வாழ்ந்தவர் முத்தைய்யா பாகவதர். அவரையே ‘முத்தைய்யா எவன்?’ என்று கேட்கும் போது பஜனை மடமா ஜீவிக்கும்?” என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டேன்.

“அப்படிச் சொல்லாதீர்கள்”, என்றார் அந்தப் பெண்மணி.

”அவரிருந்த காலத்துலியே, அவர் பிறந்த ஊரைவிட மைசூர்லையும் திருவனந்தபுரத்துலையும்தான் அவருக்குப் பெரிய பேரு. எனக்குச் சின்ன வயசா இருக்கும்போது ஒரு தடவை மைசூருக்குப் போனோம். அங்க தங்கறதுக்கு ஒரு இடம் தேடினோம். எங்கப்பா யார்கிட்டையோ விசாரிச்ச போது  ’எங்கேர்ந்து வரீங்க’-னு கேட்டிருக்கார். அப்பாவும், “திருநெல்வேலி ஜில்லா”-னு பொதுவாச் சொல்லியிருக்கார். அவர் விடாம, “திருநெல்வேலில எங்க”-னு கேட்டிருக்கார். ஹரிகேசநல்லூர்-னு சொன்னதும் “ஆஹா! மகான் முத்தைய்யா பாகவதர் ஊர்ல இருந்தா வரீங்க. நீங்க எங்கேயும் போக வேண்டாம், என் வீட்டுலதான் தங்கணும்-னு எங்களைக் கூட்டிண்டு போனார்.”, என்றார்.

அந்த அம்மாள் இருக்கும்வரையாவது ஹரிகேசநல்லூரில் முத்தைய்யா பாகவதரை விட்டுக் கொடுக்காமல் பேச ஒரு ஜீவனுண்டு என்று நினைத்துக் கொண்டேன்.


தஞ்சாவூர் சங்கர ஐயர்

ஹரிகேசநல்லூரிலிருந்து கிளம்பித் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தோம். கௌரிசங்கர் விடை பெற்றுக் கொண்டார். நானும் தீபக்கும் ஓட்டல் அறையில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு கீழே இறங்கி வந்த போது கிருஷி எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

முந்தைய தினம் பார்த்த நிதானமில்லாமல் பதற்றமாக இருந்தார் கிருஷி. சந்திப்புச் சரியாக நடக்கவேண்டுமே என்கிற கவலை அவருக்கு. நாங்கள் சங்கர் நகருக்குள் நுழைந்து செல்ல வேண்டிய வீட்டருகில் சற்றுக் குழம்பினோம். சங்கர ஐயரின் மருமகள் (அண்ணன் மகனின் மனைவி) எங்கள் காரிருந்த இடத்துக்கே வந்து அழைத்துச் சென்றார்.

நாங்கள் சென்ற போது, தினமும் வந்து பார்த்துக் கொள்ளும் ஆண் நர்ஸ் சங்கர ஐயருடன் இருந்தார். நாங்கள் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

“அவர் இருப்பது பூமி செய்த புண்ணியம். அவருக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வதைவிட வேறு புண்ணியம் இந்தப் பிறவிக்குத் தேவையேயில்லை,” என்று சங்கர ஐயரைப் பார்த்துக் கொண்டிருக்கும் திரு.சந்திரசேகரையும் அவர் மனைவியையும் கிருஷி மனதாறப் பாராட்டினார். 

“சங்கீதம்தான் அவரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. மணிக்கணக்கில் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருப்பார். தியாகராஜ ஆராதனை அன்று புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள் முழுவதும் பாடினார். அவர் அறையில் நாட்காட்டியோ, கடிகாரமோ இல்லை. ஆனாலும் நாள்/கிழமை/நேரம் எல்லாம் எப்படி அவருக்குத் துல்லியமாகத் தெரிகறது என்று புரியவில்லை. உபயோகித்து உபயோகித்து பழைய டி.எஸ்.பார்த்தசாரதி புத்தகம் சுத்தமாக நைந்துவிட்டது. சமீபத்தில்தான் புதிய புத்தகம் வாங்கினோம்,” என்றார்.

சற்றைக்கெல்லாம் சங்கர ஐயர் தயாராகிவிட்டார். நாங்கள் அவர் அறைக்குச் சென்றோம்.

கட்டிலில் சங்கர ஐயர் உட்கார்ந்து இருந்தார். காலம் அவர் உடலைக் கரைத்திருந்தாலும் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவே எனக்குப்பட்டது.

“உங்களில் யாராவது பாடுவீர்களா?”, என்று கேட்டார்.

“இந்த ஜென்மத்துல கேட்கத்தான் கொடுத்து வைத்திருக்கிறது,” என்றேன்.

”ஒழுங்காப் பாடறதைவிட ஒழுங்காக் கேட்கறது ஒசத்தி,” என்று சிரித்தார் சங்கர ஐயர்.

சங்கர ஐயரின் மருமகள் எங்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார். அவருக்குக் காதில் விழுந்த வரை உள்வாங்கிக் கொண்டார்.

“அந்த ஸ்விட்சைப் போடு,” என்றார்.

ஸ்ருதிப் பெட்டி உயிர்பெற்றது.

‘ராம நன்னு ப்ரோவரா’

தியாகராஜரின் ஹரிகாம்போதி கிருதியைப் பாட ஆரம்பித்தார் சங்கர ஐயர்.

சில வார்த்தைகள் நினைவுத்தடங்களில் சிக்கி, அவர் இரண்டாவது மூன்றாவது முறைபாடும் போது வெளிப்பட்டன. 

’மெப்புலகை கன்ன தாவுனப்பு படக விர்ர வீகி’ – சரணத்துக்கு வந்தார் சங்கர ஐயர்.

வழக்கமாய்க் கச்சேரிகளில் இந்த வரியில் நிரவல் செய்வார்கள். 

எனக்கு இந்த வரியைக் கேட்டாலே சிரிப்பாக வரும். 

“புகழுக்காகக் கண்ட இடத்தில் கடன்படும் நிலையில் நல்லகாலம் நான் இல்லை”, என்கிறது வரி. அதை ஒருமுறை பாடினால் சரி. திரும்ப திரும்ப நிரவலாகப் பாடும்போது ‘புகழுக்காக நான் இல்லை பார்த்தாயா’ என்று திரும்பத் திரும்பச் சொல்லும் முரண்நகையாக எனக்குத் தோன்றும். நிரவல் பாட பாட கிருதியின் அர்த்தம் மறைந்து ‘மெப்புலகை’-யில் ஸ்வரம் பாடும் போது புகழுக்காக மட்டுமே பாடுவதாக அர்த்தம் எனக்குத் தொனிக்கும்.

சங்கர ஐயர் அந்த வரிகளைப் பாடிக் கடந்த போது தியாகராஜர் எதை நினைத்து எழுதியிருப்பாரோ அந்த அர்த்தம் பிரசாதமாய் கிட்டியதாக எனக்குத் தோன்றியது. 

புகழோ, பணமோ, காலமோ ஒரு பொருட்டு இல்லாமல் சங்கர ஐயர் பாடிக் கொண்டிருக்கிறார். ராமனும், தியாகராஜரும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். 

மீண்டும் பல்லவியில் ‘ராமா என்னைக் காக்க வரமாட்டாயா’ என்று பாடும்போது, “நான் கூப்பிடாவிட்டாலும் நீ இங்கதான் இருக்க-னு தெரியும். இருந்தாலும் நான் கூப்பிடறதுதான் மரியாதை,” என்ற சம்பாஷணையாக எனக்கு அவர் பாட்டு ஒலித்தது.

நாங்கள் அவரை வணங்கிவிட்டு மீண்டும் கூடத்தில் அமர்ந்து கொண்டோம். எவ்வளவுதான் பெரிய மேதை என்றாலும் வயதான தம்பதியர் தன்னிலும் வயதான, அதிலும் நடமாட முடியாத பெரியவரைப் பார்த்துக் கொள்வதென்பது சாதாரண காரியமல்ல. முகம் சுளிக்காமல் அதைச் செய்யும் சந்திரசேகரன் தம்பதியனருக்கு இன்னொருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொண்டு கிளம்பினோம்.

காரில் ஏறியதும் நான் கிருஷிக்கு நன்றி சொல்ல வாயெடுத்தேன்.

“நீங்க எங்க ஊருக்கு வந்ததாலதான் நான் இன்னொரு தடவை சங்கர ஐயரைச் சந்திக்க முடிஞ்சது,” என்று முந்திக் கொண்டார் கிருஷி. 

(மேலும்)

Series Navigation<< காருகுறிச்சியைத் தேடி…காருகுறிச்சியைத் தேடி… (3) >>

3 Replies to “காருகுறிச்சியைத் தேடி… (2)”

  1. எல்லா சங்கீத ரசிகர்களும் நம்மிடையில் வாழ்ந்த மேதைகளைப் பற்றின இந்த வ்யாசத்தை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.
    சங்கர ஐய்யரை பற்றி படிக்கும் போது கண்களுக்கு வேர்த்து விட்டது.
    வாழ்த்துக்கள்!
    நாராயணன் வேதாந்தம்

  2. My father was in karukurichi as a neigbour of karukurichi Arunachalam. He is no more . But he has told me many incidents in the life of Karukurichi Arunachalam. Moreover I have seen Harikesanallur Mookiah kambar who was guru of Karukurich Arunachalam.Now Iam abroad. If you are interested I can send the stories of Karukurichi arunachalam

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.