- காருகுறிச்சியைத் தேடி…
- காருகுறிச்சியைத் தேடி… (2)
- காருகுறிச்சியைத் தேடி… (3)

எனக்குத் தந்தை வழியில் பூர்வீகம் திருவாரூர். நான் அதிகம் கழித்த நாட்கள் சென்னையிலும், பெங்களூரிலும் என்றிருந்தாலும். மனத்தளவில் தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்தவனாகவே என்னை நினைத்துக் கொள்வேன். தஞ்சையில் நான்கு வருடக் கல்லூரிப் படிப்பும், அந்தப் பிரதேசத்துக்குக் கடந்த இருபது ஆண்டுகளில் மேற்கொண்ட எண்ணற்றப் பயணங்களும் அதற்குக் காரணங்களாக இருக்கக்கூடும்.
பெயரளவில் இன்றும் தஞ்சாவூர் ஜில்லா சம்பந்தம் உண்டு என்றாலும், என் பாட்டனாரின் காலத்திலேயே அவர் குடிபெயர்ந்துவிட்டார். என் தந்தையாரும் அவர் உடன்பிறந்தோரும் பால்யத்தைக் கழித்து, படித்து ஆளானது திருநெல்வேலி ஜில்லாவில்தான். அதனால் பல நேரங்களில் குடும்ப சம்பாஷணைகளில் தாமிரபரணியின் பெருமையே ஓங்கி ஒலிக்கும்.
என் குடும்பத்தாரையும், எனக்கு அமைந்த திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்த நண்பர்களையும் பார்க்கும் போது அளவுக்கு அதிகமாகப் பொங்குகிறார்களோ என்று தோன்றும். குற்றால சீஸன், இருட்டுக் கடை அல்வா, நெல்லையப்பர் கோயில் எல்லாம் சரிதான். அம்மையப்பர்தான் உலகம் – உலகம்தான் அம்மையப்பர் என்கிற ரீதியில் நெல்லை புகழைப் பாடும் போதுதான் கொஞ்சம் திகட்டிவிடும். எனக்குத் திகட்டாத ஒரு திருநெல்வேலி சமாசாரம் உண்டு. அது மேதை காருகுறிச்சி அருணாசலத்தின் வாசிப்பு.
என்னுடைய சேகரத்தைப் பார்த்தால், நாகஸ்வரப் பதிவுகளில் அதிக மணி நேரம் இருப்பது காருகுறிச்சியாரின் பதிவுகளாகத்தான் இருக்கும். ஒப்பீட்டளவில் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் பதிவுகளைவிட நான்கு மடங்காவது இருக்கும். இருப்பினும் ராஜரத்தினம் பிள்ளை என்றதும் மனத்தில் தோன்றும் பரிச்சயம் (மாயைதான் என்றாலும்) காருகுறிச்சியாரின் பேரில் வருவதில்லை.
ராஜரத்தினம் பிள்ளையின் எந்தப் பதிவையும் நான் கேட்டிருக்காவிட்டாலும் கூட, அவருடைய பெயரை மந்திரம்போல் உச்சாடனம் செய்த ரசிகர்களின் கதைகள் மட்டுமே எனக்கு அவரை பரிச்சயமாக்கியிருக்கும். புத்தகங்கள். கட்டுரைகள், பத்திரிகைச் செய்திகள் என்று அவர் இருந்த போதும் மறைந்த பின்னும் வெளியானவை ஏராளம். இவற்றைவிட அவர் இசையை அனுபவித்த ரசிகர்களின் பகிர்வுகளாகக் கேட்டுக் குளிர்காயும் வாய்ப்பு எனக்கு நிறைய வாய்ததுண்டு.
நாளடைவில் நான் கேட்ட கதைகளில் பாதிக்கு மேல் கற்பனைக் கதைகள்தாம் என்று தெரிய வந்தாலும் அந்தக் கற்பனைகள் கூட அவரைப் பற்றிய பிம்பம் மனத்தில் மேலெழக் காரணமாயிருந்தவை என்றே தோன்றுகிறது.
காருக்குறிச்சியாரின் நூற்றாண்டு இந்த வருடம் ஏப்ரலில் துவங்குகிறது. அதையொட்டி அட்சரம் பதிப்பகம் நடத்தும் என்.ஏ.எஸ்.சிவகுமார் ஒரு மலரினைத் தயாரிக்கும் பணியில் உள்ளார். மலருக்காக என்னிடம் ஒரு கட்டுரை வேண்டும் என்று காருகுறிச்சியாரின் கொள்ளுப் பெயரன் தீபக் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் கேட்டதும்தான் எனக்கு இந்தப் பரிச்சியமின்மை உறைத்தது.
தீபக்கிடம் பேசியதிலிருந்து என்னிடம் உள்ள பதிவுகளைக் கேட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கினேன். அவரும் இரண்டு நாளைக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு காரணத்துக்காகத் தொலைபேசி வந்தார். முதலில் சிறு அவஸ்தையாய்த் தோன்றிய பரிச்சியமின்மை, இரண்டு வாரங்களில் மனத்தை அரித்தெடுக்க ஆரம்பித்தது.
போதாக்குறைக்கு நண்பர் கோலப்பனை எப்போது அழைத்தாலும், ‘திருவிடைமருதூரில் இருக்கேன்’, ‘பறக்கையில் இருக்கேன்’, ‘நாகர்கோயிலில் இருக்கேன்’, என்று சென்னையைத் தவிர ஏதாவது ஊரிலிருந்து பேசி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார்.
பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமானம் இருப்பது தெரிந்தவுடன் வார இறுதியுடன் வெள்ளிக்கிழமையையும் சேர்த்துப் பயணச்சீட்டை வாங்கிவிட்டேன்.
எங்கு தங்க? யாரையெல்லாம் பார்க்க? உள்ளூரில் எப்படிப் பயணம் செய்ய? — இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமலே பயணத்துக்குத் தயாராகிவிட்டேன்.
தீபக்கை அழைத்துச் சொன்னதும் அவர் ”வாங்க! நான் பார்த்துக்கறேன்,” என்றார். கிளம்புவதற்குச் சில நாட்கள் முன்னால் ”ஜானகிராமில் ரூம் போட்டுவிட்டேன். மூன்று நாளைக்கு வண்டிக்கு சொல்லி ஆகிவிட்டது” என்பதைத் தவிர கடைசி வரை எந்தத் திட்டத்தையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. குறைந்த பட்சம் காருகுறிச்சியார் இருந்த வீடுகளையும் வாசித்த இடங்களையும் அவரது குடும்பத்தினரையுமாவது சந்திக்கலாம் என்கிற தைரியத்தில் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.
பெங்களூரிலிருந்து செல்லும் அதிகாலை விமானத்தில் கிளம்பித் தூத்துக்குடி சென்றடைந்தேன். பெங்களூரில் சம்பிராதாயத்துக்காகவாவது கொஞ்சம் கரோனா கிலி கண்ணில்பட்டது. தூத்துக்குடியில் கரோனா என்றால் பியர் வேண்டுமா, செருப்பு வேண்டுமா என்று கேட்பார்கள் என்று தோன்றியது. சிறிய விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சென்னையில் இருந்து வரவேண்டிய விமானத்தில் பெரிய அரசியல் தலைவரை எதிர்நோக்கிக் கையில் மாலையுடன் கரை வேட்டியில் பல பேர் காத்திருந்தனர். நான் தீபக்கை அழைத்த போது இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடுவதாகக் கூறினார். பேசி முடித்ததும் அரசியல் பிரமுகரின் விமானமும் வந்துவிட, சரசரவென ஏழெட்டு இன்னோவாக்கள் விமான நிலையத்தை நீங்கின. இதனால் ஏற்பட்ட நெரிசலில் தீபக் வருவதற்கு 90 நிமிடங்கள் ஆயின.
தூத்துக்குடி விமான நிலையம் அரை மணி நேரத்தில் சந்தடியில்லாமல் ஆனது. நுழைவாயிலுக்கு அருகில் இருந்த கடையில் தேநீர் ஒன்றை பருகிவிட்டு ஒட்டியிருந்த சாலையில் வேப்பமர நிழலில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். பத்தரை மணி ஆகிவிட்ட போதும் அந்தக் காற்றுக்கும் நிழலுக்கும் நல்ல ஏகாந்தமாக இருந்தது. ஒருசில பறவை ஒலிகள் காதில் விழுந்தன. “இந்தத் தி.ஜானகிராமன் எத்தனையோ பறவை ஒலிகளைப் பற்றி சொல்கிறாரே. நமக்கு ஏன் காகத்தின் கரையலைத் தவிர ஒன்றையும் தெரியவில்லை?”, என்று நினைத்துக் கொண்டேன். அப்போது ஒரு வினோதமான ஒலி மரத்துக்கு பின்னால் இருந்து எழுவது போல ஒலித்தது. பெரிய மால்களில் காசு கொடுக்கும் இடத்தில் நாம் வாங்கிய பொருட்களில் உள்ள பார்கோடை லேசரால் தீண்டும் போது எழும் ஒலியைப் போன்றதொரு ஒலி. இப்படி ஒரு பறவை ஒலியா? அதைப் பார்த்துவிட வேண்டுமென்று கழுத்தைத் திருப்பி மரத்தை நோட்டம் விட்டேன். என் கண்ணுக்குக் காகங்கள்தாம் தென்பட்டன. அரை நிமிடத்துக்கு ஒருமுறை ஒலி மட்டும் வந்துகொண்டே இருந்தது. மூன்று நிமிடம் அண்ணாந்தபடி தேடிய பின் தலையைக் கவிழ்த்தபோது மரத்தின் பின்னால் இருந்து ஒரு காவலர் வெளிப்பட்டார். அவர் கையில் ஒரு மெட்டல்டிடெக்டர் இருந்தது. அவர் இன்னொரு காவலருடன் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டார். பேசிக் கொண்டிருக்கும்போது அவர் கரம் அவர் அணிந்திருந்த பெல்டை நோக்கிச் சென்றது. மெட்டல்டிடக்டர் க்ஷண நேரம் உயிர்பெற்றுக் கீச்சியது. நமக்கு இந்த பறவை ஒலியெல்லாம் சரிப்படாது என்று தீபக்கை அழைத்தேன். அவரும் “பத்து நிமிடங்களில் வந்துவிடுவேன்” என்று பேச்சு மாறாமல் இருந்தார்.
ஒரு வழியாக பதினொன்றரை மணிக்கு வந்துசேர்ந்தார். அவருடன் தவில் வித்வான் பாலமுருகனும் வந்திருந்தார். கோவில்பட்டியிலிருந்து கிளம்பி என்.ஏ.எஸ் சிவகுமாரும் தூத்துக்குடியில் வந்து சேர்ந்து கொள்வதாகத் திட்டம். அவரும் நெரிசலில் அகப்பட்டுக் கொண்டார் போலும். நாங்கள் தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் அரை மணி நேரம் காத்திருந்தோம்.
சிவகுமார் வந்ததும் திருச்செந்தூரை நோக்கிக் கிளம்பினோம். அவரிடம் அதற்கு முன் ஒருமுறைதான் ஃபோனில் பேசியுள்ளேன். அன்றுதான் முதன்முதலாய் பார்க்கிறேன். இருந்தாலும் ஏதோ நீண்ட நாட்கள் பழகியவர் போன்ற உணர்வு எழுந்தது. மனிதர் விளாத்திகுளம் சுவாமிகள் பற்றிய ஆய்வுக்காகவும், காருகுறிச்சியாரைப் பற்றித் தகவல் திரட்டுவதற்காகவும் தமிழ்நாட்டையே சல்லடை போட்டுத் துழாவியுள்ளார். இவ்விருவர் சம்பந்தமாக ஏதாவது ஓர் இடத்தின் பெயரையோ, ஆளின் பெயரையோ சொன்னால் விரல்நுனியில் இருக்கும் தகவல்களை எடுத்து சிறு பிரசங்கமே செய்துவிடுகிறார்.
ஓர் உதாரணத்தை மட்டும் இங்கு பதிவிடுகிறேன். சில மாதங்களுக்கு முன் நாகஸ்வர வித்வான் காசிமிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் காருகுறிச்சியரின் உறவினர் (பெரியப்பா மகள்) ஒருவரைப் பற்றிச் சொன்னார். அவர் விளாத்திகுளம் ஸ்வாமிகளின் சிஷ்யை என்றும், அந்தப் பெண்மணியிடம் காருகுறிச்சியார் நிறையக் கற்றுள்ளார் என்றும் கூறினார். இதை நான் சிவகுமாரிடம் கூறிய போது, “குருமலை லட்சுமி அம்மாளைச் சொல்றாரா இருக்கும்”, என்று சொல்லியபடி தன் கைப்பேசியில் அந்த அம்மாளின் படத்தையும் காட்டினார். அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு குருமலை லட்சுமி அம்மாளைப் பற்றித் தான் சேகரித்த தகவல்களை எல்லாம் பொழிந்தார். விளாத்திகுளம் ஸ்வாமிகள் புத்தகத்தின் அடுத்த பதிப்பில் அந்தத் தகவல்களும் இடம்பெறும் என்று நினைக்கிறேன்.
இசைத் துறையில் சிலரைப் பற்றி மட்டும்தான் புத்தகங்கள், இணையம் போன்ற இடங்களில் தேடினாலே கணிசமானச் செய்திகள் கிடைக்கின்றன. அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெரும் புகழுடன் வாழ்ந்த மேதைகளைப் பற்றிக்கூட நம்பகமானச் செய்திகள் பொதுவெளியில் இல்லாத சூழல்தான் நிலவுகிறது. பழைய இதழ்கள், ஆய்வுக்குட்படுத்தும் ஆளுமைகளின் குடும்பம், அவர்கள் சிஷ்ய பரம்பரை, ரசிகர்கள் என்று அலைந்து திரிந்தாலன்றி செய்திகள் திரட்டுவது கடினம். கடந்த இருபது ஆண்டுகளில் இதில் உள்ள சிக்கல்களை எல்லாம் ஓரளவு அறிவேன். அதனால் சிவகுமார் செய்திருக்கும்/செய்துகொண்டிருக்கும் பணியின் வீச்சை நன்கு உணரமுடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் என்றால் அவரைப் பார்த்து கொஞ்சம் பொறாமை கூடப் பட்டிருப்பேன். இந்தக் குறுகிய வாழ்வில் வரலாறு என்னும் பெருவெளியில் இருந்து சிறு துரும்பைக்கூட பிடுங்கிப் போடமுடியாது என்பதை ஒவ்வொரு நாளும் உணர்த்தும் போது, என்னுடன் பயணிக்க அல்லது எனக்கு முன் சென்று வழிகாட்ட ஒருவர் இருக்கிறாரே என்று ஆறுதலடைந்தேன்.
நாங்கள் திருச்செந்தூரை அடையும்போது இரண்டு மணி ஆகிவிட்டது. நான் விமான நிலையத்தில் குடித்த தேநீரைத் தவிர எதுவும் சாப்பிடவில்லை என்பதால் நேராகச் சாப்பிடப் போனோம். சாப்பிடும்போது, கரோனா கால ஊரடங்கின் போது தானும் மற்ற நாகஸ்வர/தவில் கலைஞர்களும் சந்தித்த இடர்களைப் பற்றிச் சொன்னார் பாலமுருகன். “இதெல்லாம் எப்பவாவது வரும் போகும். ஆனால் ஒரு பெரிய நிரந்தரப் பிரச்னை இருக்கிறது. அதற்கு எதாவது செய்யமுடியுமா பாருங்கள்” என்றார்.
அவர் கூறிய பிரச்னை இதுதான். இன்று அரசு இசைப்பள்ளிகள் பலவற்றில் எழுதப்படிக்கத் தெரிந்தாலே இடம் கிடைத்துவிடும். ஆனால் அந்தப் பள்ளிகளில் அடிப்படைகளைக் கற்று தன் கலையை மேம்படுத்திக்கொள்ளக் கல்லூரிக்குச் சென்று படிக்கவேண்டும் என்றால் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி குறைந்தபட்ச தகுதியாக உள்ளது. இதனால் இசைப் பள்ளியில் பயின்ற பலரால் — எண்ணமும், சூழலும் இருந்தாலும்கூட— கல்லூரியில் சேர முடிவதில்லை. இது தவிர அரசு நியமத்தின் கீழ் வரும் கோயிலைச் சேர்ந்த வேலை வாய்ப்புகளுக்கும்கூட இந்தத் தகுதியின்மை ஓர் இடராக இருக்கிறது. அவர் ஆதங்கத்தைக் கேட்டுக் கொண்டேன். (வேறென்ன செய்ய?).
நாங்கள் கோயிலுக்குச் சென்றபோது கடற்கரையிலும், கோயிலிலும் கூட்டம் அம்மியது. என்னுடன் வந்தவர்கள், “இன்னைக்குப் பரவாயில்லை. கூட்டம் குறைச்சல்தான்,” என்றனர். தூத்துக்குடியே கரோனாவைச் சுக்குக்கும் மதிக்காத போது திருச்செந்தூரா மதிக்கும்? நுழைவாயிலில் இருந்த காவலரைக் கடக்கும் போது மட்டும் பலர் முகக் கவசத்தை அணிவதுபோல பாவனை காட்டி, அவரைத் தாண்டியதும் அதைக் கழட்டிப் பைக்குள் வைத்துக் கொண்டனர்.
எனக்கு அந்தக் கூட்டத்தில் செல்ல அச்சமாக இருந்தது. பாலமுருகன் திருச்செந்தூர் கோயிலில் அடிக்கடி வாசிப்பவர் என்பதால் எங்களுக்குச் சிறப்பு வழியில் செல்ல அனுமதி கிடைத்தது. அடுத்த அரை மணியில் தரிசனத்தை முடித்து வெளியில் வந்தோம். பாலமுருகன் யாருடனோ தொலைபேசினார்.
“இன்னிக்குத் திருச்செந்தூர்ல எல்லா விசேஷத்துக்கும் மேளம் ஏற்பாடு பண்றவர் கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். அவர் நிறைய பேரைப் பார்க்க கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி இருந்தார். அவருக்குத்தான் இப்ப ஃபோனடிச்சேன். அவரைப் போலிஸ்ல பிடிச்சு கல்யாண மண்டபத்துல வெச்சு இருக்காங்களாம். கோயில்ல விழா நடத்த அனுமதி கேட்டுப் போராடி இருக்காங்க. அதுக்காக அவரைப் பிடிச்சு வெச்சிருக்காங்களாம்” என்றார் பாலமுருகன்.
நான் பொறுமை இழக்க ஆரம்பித்தேன்.
இன்றைய சூழலில் எனக்கே எனக்காக நேரம் கிடைப்பது அரிதினும் அரிது. எப்படியோ கிடைத்த மூன்று நாட்களில் அரை நாளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் இன்னும் நான் சந்திக்க எண்ணியவர் எவரையும் நான் பார்த்தபாடில்லை. பாலமுருகன் கடற்கரையில் சேர்ந்து படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார். “அதெல்லாம் எதுக்குங்க…” என்று நான் சொல்வதற்குள் யாரிடமோ தன் கைப்பேசியைக் கொடுத்துவிட்டு சந்தோஷமாய் என் அருகில் நின்றுகொண்டார். என் அலுப்பை முகத்தில் காட்டாமல் இருக்க முயன்றேன்.
கைப்பேசியை வாங்கியபடி பாலமுருகன் நடக்கத் தொடங்கினார். எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் நாங்கள் அவரைத் தொடர்ந்தோம். இருபுறமும் கடைகளில் விளையாட்டுச் சாமான்களும் சுவாமி படங்களும் நிறைந்திருந்தன. இரண்டு நிமிடங்களில் ஒரு தொண்ணூறு வயது மதிக்கத்தக்கப் பெரியவர் எதிர்ப்பட்டார். அவர் நின்றிருந்த இடத்தில் ஒரு சாப்பாட்டுக் கடை இருந்தது. நாலைந்து மேஜைகளும் நாற்காலிகளும் இருந்தன. கடை காலியாக இருந்தது. அங்கு சமையலுக்கான சுவடே இல்லை. பெரியவர் குள்ளமாக இருந்தாலும் மேல்சட்டை அணியாத உடலில் அதன் திண்மை நன்கு வெளிப்பட்டது.
பாலமுருகன் அந்தப்பெரியவரிடம், “உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்” என்றார்.
பெரியவர் கண்ணை தன்னால் இயன்றவரை அகல விரித்து ஆச்சர்யத்தைக் காட்டி எங்களை வரவேற்றார்.
இவ்வளவு வயதான ரசிகரைப் பிடித்து இருக்கிறாரே பாலமுருகன். இவரிடம் என்னென்ன கதைகள் தேறுமோ என்று எனக்கு ஆவல் பெருகியது. நாங்கள் எல்லோரும் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டோம்.
அவர் எங்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்து கொண்டிருந்தார்.
“இவர் பையனத்தான் பார்க்க வந்தோம். போலிஸ் பிடிச்சு வெச்சுருக்கு,” என்றார் பாலமுருகன்.
எனக்கு எரிச்சலாகிவிட்டது. இந்தக் கதைதான் முன்னரே தெரியுமே. இந்தக் கிழவரிடம் காருகுறிச்சியாரைப் பற்றி ஒன்றும் தேறாது என்று தோன்றியது. ”இது என்ன பயணம்? எதற்காக இப்படி நேரத்தை வீணடிக்கிறோம்” என்று என்னை நானே நொந்து கொண்டிருந்த போது தீபக் அந்தப் பெரியவரிடம், “நீங்க தாத்தாவைப் பார்த்திருக்கீங்களா?” என்று கேட்டார்.
“ஓ! வருஷா வருஷம் திருவிழால வந்து வாசிக்கத் தவறமாட்டாங்கல்ல” என்றார் கண்களை விரித்தபடி.
“அவர் வாசிப்பு எப்படி இருக்கும்?” என்று கேட்டார் தீபக்.
”ஏழாம் திருநாளைக்கு…” என்று சொல்ல ஆரம்பித்துப் பேச முடியாமல் திக்கி நிறுத்தினார் அந்தப் பெரியவர். அவர் வாயிலிருந்து வார்த்தை வராமல் நின்றதும் அவர் உடலில் ஓர் அலை எழுந்தது. வயிற்றிலிருந்து எழுந்த அந்த அலை, மார்பில் படர்ந்து, கழுத்தில் ஏறி, அவர் தலையைச் சிலுப்பி இறுதியாய் அவர் கைகள் இரண்டையும் உதறச் செய்யவைத்து அடங்கியது.
அதற்கு மேல் அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். என் மனத்துள் ஏதோ கதவைத் திறந்துவிட்டதுபோல வெளிச்சம் பாய்ந்தது.
இதற்கு முன்னால் எத்தனையோ பேர் காருகுறிச்சியாரின் வாசிப்பைப் பற்றிப் பேசியிருக்கக்கூடும்/எழுதி வைத்திருக்கக்கூடும். இனிமேலும் எத்தனையோ பேர் அவர் இசையை அக்கு முதல் ஆணி வரை ஆராய்ந்து தள்ளக்கூடும். ஆனால் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் கேட்ட அனுபவத்தை அந்தப் பெரியவர் பரமசிவம் பிள்ளை சிலிர்த்துக் காட்டியது போன்ற துல்லியமான வெளிப்பாட்டை இன்னொருவர் வேறொரு வடிவத்தில் செய்துகாட்ட முடியுமென்று தோன்றவில்லை. அந்த நிமிடமே பெங்களூருக்குத் திரும்பியிருந்தாலும் முழுத் திருப்தியுடன் திரும்பியிருப்பேன் என்றே தோன்றுகிறது.

பரமசிவம் பிள்ளையின் பாதம் பணிந்து வணங்கிவிட்டு பத்து தப்படிகள் நடந்திருப்போம். ஒரு வீட்டின் வாயிலில் ‘மீனாட்சி கம்பர் – நாகஸ்வர வித்வான்’ என்று பலகை காட்டியது.
கூடத்தில் இருந்த கட்டிலில் கோட்டா ஸ்ரீநிவாஸ ராவ் ஜாடையில் ஒருவர் அமர்ந்திருந்தார். பாலமுருகன் எங்களை அறிமுகப்படுத்தியதும் உற்சாகமாய் பேச ஆரம்பித்தார்.
“காருகுறிச்சியாருக்கு ஆத்தூர்ல இருந்து இசக்கிதான் தாளம் போட வருவார். ஒருக்கா இசக்கி வர நாழியாயிட்டுது, அன்னிக்குக் காருகுறிச்சியாருக்கு கொஞ்ச நேரம் தாளம் போட எனக்கு வாய்ப்பு கிடைச்சுது. அவருக்குத் திருச்செந்தூர் சுப்ரமண்யர் மேல உசுறு. இங்கேயே நிறையக் கேட்டு இருக்கேன். சுத்துமட்டுல அவர் எங்க வாசிச்சாலும் போய் கேட்போம். திருவிழால வாசிச்சுட்டுத் திரும்ப வரும்போது துடைச்சுக்கத் துண்டு கொடுப்போம். வாசல்ல உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டுக் கொஞ்சம் வெத்தல போடுவாங்க. அவர் கண்ணுல பட்டா “தம்பி, தம்பி”-னு ஆசையாக் கூப்புடுவாங்க. நான் வாய் பேசமாட்டேன். அவரையே பார்த்துகிட்டு இருப்பேன்” என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் மீனாட்சி கம்பர்.
காருகுறிச்சியாருக்குப் பிறகு திருநெல்வேலி வட்டாரத்தில் நாகஸ்வரத்தில் கோலோச்சியவர் பத்தமடை ராஜா. ராஜாவின் மனைவி மீனாட்சி கம்பரின் அக்காதான். “ராசா அத்தானுக்கு இவங்க வாசிப்புனா ரொம்பப் பிடிக்கும். காருகுறிச்சியார் வாசிக்கறார்னா போய் முன்னால தரையில உட்கார்ந்துடுவார். அப்பல்லாம் ஒரு கீர்த்தனம் எடுத்தாங்கன்னா அவரைச் சுத்தி நகரவிடாம வட்டமா உட்கார்ந்துடுவோம். அந்தப் பாட்டை முடிச்சாத்தான் நகர வழிவிடுவோம். அப்பல்லாம் இப்ப மாதிரியா — சாயங்காலம் ஏழு மணிக்கு ஆரம்பிச்சா காலைல 4.30 வரைக்கும் வாசிப்பாங்க. இவர் வாசிப்பைக் கேட்கவே ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பதி, ஆழ்வார்திருநகரினு பல ஊர்ல இருந்தும் கூட்டம் கூட்டமா வருவாங்க. பாட்டுல ஒரு சங்கதி விட்டுட்டா ‘என்னடே விட்டுட்ட’-னு கேட்கறா மாதிரி அம்புட்டு பேரும் திரும்பிப் பார்ப்பாங்க. எவ்வளவு பாட்டுக்காரங்க, வயலின்காரங்க எல்லாம் இருந்தாங்க. இன்னிக்கு ஒருத்தரில்ல. இன்னிக்கு வாசிக்கப்பட்ட பையனுங்களைக் கூப்பிட்டு ஒரு கேள்வி கேட்டுப் பாருங்க? எவனாச்சும் பதில் சொல்றானானு பார்ப்பம். ஒரு கீர்த்தனை முழுசாப் பாடம் கிடையாது. நாலு சினிமாப் பாட்டை வாசிச்சாப் போதும்னு இருக்காணுவோ..” என்று உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தார் மீனாட்சி கம்பர்.
சிவகுமார் கொஞ்சம் மடை மாற்றினார். “நீங்க கேட்டதிலேயே மறக்க முடியாத காருகுறிச்சி கச்சேரி எது?”
“எதைச் சொல்றது? எல்லாமே மறக்கமுடியாதுதான்! இங்கக் கட்டளைக்கார ஐயரு வீட்டுக் கல்யாணத்துல ஒரு உசைனி வாசிச்சிருக்காரு பாருங்க”
காருகுறிச்சியாரின் உசைனியைப் போன்ற கற்பனையைத் தூண்டக்கூடிய பதிவுகளைக் கேட்பதரிது.
ஒருநாள் சென்னையில் ராஜரத்தினம் பிள்ளை ஒரு பூங்கா வழியாய்ச் செல்கிறார். அங்கிருக்கும் வானொலியில் ஒலிபரப்பாகும் உசைனி அவரைக் கட்டி இழுக்கிறது. காலை எடுத்து வைக்கப் பார்க்கிறார். அவர் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. நல்ல தஞ்சாவூர் திட்டு வார்த்தையில் இரண்டைச் சொல்லி, ‘வேலையைக் கெடுக்கறானே பாவி’ என்று சமைந்து நிற்கிறார். ராஜரத்தினம் பிள்ளை நிற்கிறார் என்கிறதும் மெதுமெதுவாய் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிடுகிறது. உச்சங்களைத் தொட்ட அந்த உசைனி முடியும்போது மெல்ல நகர ஆரம்பிக்கிறார் பிள்ளை. சுற்றி இருந்த கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ‘என்னைக் குழி தோண்டிப் புதைக்க இவன் ஒருத்தன் போதும்’ என்று முகத்தில் பெருமை பொங்க நடந்து செல்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.
காருகுறிச்சியாரின் உசைனியைப் பற்றி உலாவும் பல கதைகளில் இதுவுமொன்று. மீனாட்சி கம்பருக்கு கதையெல்லாம் வேண்டாம். நிஜமாகவே நாதத்தில் மூழ்கிக் கரைந்து போனவர்.
“திருச்செந்தூர் திருவிழாவுக்குனு எதுவும் பத்ததி உண்டா? இந்தந்த நாட்கள்ள இன்னென்ன உருப்படிகள் வாசிக்கணும்னு ஏதும் முறை உண்டா?” சிதம்பரம் கோயிலில் உள்ள பத்ததியை மனத்தில் வைத்து இந்தக் கேள்வியைக் கேட்டேன்.
“திருவிழால ஒண்ணாத் திருநாளன்னைக்கும், ஆறாம் திருநாளன்னைக்கும் நாகஸ்வரம் கிடையாது. பதினொண்ணு அன்னிக்குக் கச்சேரி வாசிக்கணும். மத்த நாளெல்லாம் பொறப்பாடுதான். மல்லாரி வாசிச்சுட்டு ஒரு ராகத்தை எடுத்துக்கிட்டு மணிக்கணக்கா வாசிப்பாங்க. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ராகம்னு வந்தது வராம வாசிப்பாங்க. முடிக்கும்போது கொஞ்சம் சில்லறை உருப்படிங்க வாசிச்சுச் சாமியை இடத்துல கொண்டு நிறுத்துவாங்க. மத்தபடி இந்த நாளைக்கு இந்த ராகம்னு எல்லாம் பத்ததி கிடையாது. வடக்கு வீதியில சில்லறை கேட்கனே ஒரு தனிக்கூட்டம் காத்துகிட்டு இருக்கும்.”
மீனாட்சி கம்பர் மல்லாரி என்றதும் நான் உற்சாகமானேன். இன்று காருகுறிச்சியார் வாசித்ததில் நமக்குக் கிடைப்பவை எல்லாம் நகர்ப்புறங்களில் கச்சேரியில் வாசித்த பதிவுகள்தான். கோயிலில் புறப்பாட்டுக்கு மல்லாரி எல்லாம் அவர் எப்படி வாசித்திருப்பார் என்று கேட்டுணர பதிவுகள் ஏதுமில்லை. அதைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டினேன்.
“அண்ணன் நிறைய மல்லாரி வாசிப்பாங்களே! தேர் மல்லாரி பிரமாதமா வாசிப்பாங்க. சங்கீர்ண திரிபுடை, மிஸ்ர ஜம்பை, கண்ட திரிபுடை தாளங்கள்ல மல்லாரி வாசிச்சுக் கேட்டு இருக்கேன். அதைக் கேட்டு பாடமும் பண்ணி இருக்கேன்” என்றார் மீனாட்சி கம்பர்.
“அவர் வாசிச்ச மல்லாரி ஏதாவது பாடிக் காட்ட முடியுமா?” என்று கேட்டதற்கு மிஸ்ர ஜம்பை மல்லாரியை இரண்டு காலங்களில் பாடிக் காண்பித்தார்.
அதன்பின் ‘பா பா ப ஸா’ என்று மந்திர பஞ்சமத்தை நங்கூரம் பாய்ச்சியபடி கண்ட திரிபுடை மல்லாரியைப் பாடிய போது எனக்குக் காருகுறிச்சியார் வாசிப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. பிசிறில்லாத மந்திர ஸ்தாயியில் மத்தகத்தின் கம்பீர பவனியாய் அந்த மல்லாரி என் மனக்கண் முன் தோன்றியது.
அவர் பாடி முடித்ததும் யார் வாயிலிருந்தும் வார்த்தைகள் எழவில்லை.
சிவகுமார்தான் சுதாதரித்து, “பத்தமடை ராசாவுக்கு ராசா-னு பேர் வெச்சதே காருகுறிச்சியார்தான்னு சொல்றாங்களே” என்று நிலைமையைத் தளர்த்தினார்
“இருக்கலாம் எனக்கு அதைப் பத்தி தெரியலை. ஆனால் ராசா அத்தானோட பேரு ஈஸ்வரமூர்த்தி கம்பர். காருகுறிச்சியார் அத்தான் கிட்ட மாப்ளே, மாப்ளே-னு ரொம்ப ஆசையா இருப்பார். அத்தான் சேரமாதேவில இருந்தபோது நான் அவர்கிட்ட கொஞ்சம் சிட்சை கத்துகிட்டேன். ஒருநாளைக்கு பிளசரைப் போட்டுட்டு அண்ணாச்சி வந்துட்டாக. பெரிய அருணாசலத்துக்கு பல்லு வலி வந்துட்ட. “நாயனம், புதுத் துணி எல்லாம் இருக்கு மாப்ளே — உடனே புறப்படு” ன்னாங்க. ராசா அத்தான் கூடப் போய் வாசிச்சுட்டு ஒரு வாரம் கழிச்சுதான் வந்தாக.”
“டில்லியில நேஷனல் பிரோக்ரோம்-ல கூட ராசாதான் ரெண்டாவது நாயனம் வாசிச்சு இருக்கார்” என்றார் சிவகுமார்.
”இன்னிக்கு அப்படி எல்லாம் நடக்கச் சாத்தியமே இல்லை” என்றார் மீனாட்சி கம்பர்.
எனக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்டேன்.
“காருகுறிச்சியார் தமிழ்நாட்டுல எப்படியோ அதே அளவுக்குப் பேரோட கேரளா முழுக்க வாசிச்சுகிட்டு இருந்தவர் கன்யாகுமரி சுடலையாண்டி கம்பர். நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று கேட்டார்.
நான் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேனே என்று யோசிக்கும் போதே, “வளையபட்டி ஒருகாலத்துல அவருக்குதான் செட் தவில் வாசிச்சார்” என்று எடுத்துக் கொடுத்தார் சிவகுமார்.
“கேரளால எங்க போனாலும் ‘கம்பர் வாயிக்கணும்’-னுதான் சொல்லுவாங்க. அங்க அவர் கால் படாத கிராமமே இல்லை. அவங்க கிட்டதான் ராசா அத்தான் ரெண்டாவது நாயனம் வாசிச்சுகிட்டு இருந்தாங்க. ஒருதடவை அவரை இங்க வந்து வாசிக்கச் சொல்லி சுப்ரமண்யர் கோயில்ல கேட்டாங்க. அவரு காருகுறிச்சியாருக்கு என்ன கொடுப்பீங்களோ அதைக் கொடுத்தா வந்து வாசிக்கறேன்னு கேட்டு வாங்கிக்கிட்டு வாசிச்சாரு. அப்படியெல்லாம் போட்டி இருந்தும் கூட ராசா அத்தானும் காருகுறிச்சியாரும் நெருங்கிப் பழகினாங்க. அண்ணன் திருநெல்வேலிக்கு வந்தாருன்னா அவருக்குனு ஒரு கூட்டம் இருக்கும். ஆர்மோனியம் நடராஜ ஐயர், எஸ்.எஸ்.ரங்கப்பா நாயனக்காரர், ராசா அத்தான் எல்லாரும் சேர்ந்துக்குடுவாங்க. இருக்கற கீர்த்தனைல எப்படி சங்கதி வைக்கலாம், புதுசா என்ன கீர்த்தனம் பாடம் பண்ணலாம்-னு நாள் முழுக்க சங்கீதத்தைப் பத்திதான் பேசுவாங்க. போட்டி செட்டுல வாசிக்கறவரை இதுக்கு கூப்பிட்டுகிறதெல்லாம் இந்தக் காலத்துல நடக்குமா?” என்று முன்னால் சொன்னதை விளங்கச் செய்தார் மீனாட்சி கம்பர்.
பொதுவாகவே நாகஸ்வர வித்வான்களின் வாழ்வு அதிகம் பதிவாகவில்லை. அப்படி பதிவானவற்றிலும்கூட தஞ்சாவூர் ஜில்லா வித்வான்களின் பெயர்களும் வாழ்வும் பதிவான அளவுக்கு மற்ற இடங்களில் இருந்த வித்வான்களைப் பற்றிய பதிவுகள் இல்லை. காருகுறிச்சியார் போன்ற ஒருசிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. சுடலையாண்டிக் கம்பரைப் பற்றி சொன்னதும் அவரைப் போல பெரிய கலைஞர்களாக இருந்தவர்களைப் பற்றி சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.
“பசுவந்தனை சுப்பையா கம்பர்-னு இருந்தார். அவரு எங்களுக்கு உறவுதான். திருநெல்வேலி அய்யாக்குட்டி கம்பர்-னு இருந்தார். அவரு ராஜரத்தினம் பிள்ளைக்கு ஈடு. பன்னீர்ல குளிப்பார்-னு சொல்லுவாங்க. கையில ரெண்டு நடை, காலில ரெண்டு நடை, வாயில ஒரு நடை-னு ஒரே நேரத்துல அஞ்சு நடையில அவர் பாடி நான் கேட்டு இருக்கேன். கடைசி காலத்துல குடிச்சு பாவம் சாப்பாட்டுக்கே இல்லாம கஷ்டப்பட்டார். காருகுறிச்சியார் கச்சேரிக்கு வருவார். அவரைப் பார்த்துட்டா தன்னால் முடிஞ்ச பணத்தை அய்யாகுட்டி கம்பருக்குக் கொடுப்பார். இங்க நயினார்சாமி இருந்தாரே – அவர் அய்யாகுட்டி கம்பர்கிட்டதான் விவரமெல்லாம் கத்துகிட்டார்” என்று விவரங்களை அடுக்க ஆரம்பித்தார் மீனாட்சி கம்பர்.

“நயினார்சாமி பெரிய தவிலுங்களா?”என்று என் அறியாமையைப் பறைசாற்றினேன்.
“ஒலக சாம்ராட்டாச்சே அவரு! இந்த ஊருக்கு எத்தனையோ தவில்காரங்க வந்து இருக்காங்க. யாரு வந்தாலும் சளைக்காம வாசிச்சவரு அவருதான். ஒரு தடவை நீடாமங்கலம் சண்முகவடிவேல் வந்திருந்தார். இவங்க ரெண்டு பேரும் வாசிக்கறாங்க-னு பெரிய கூட்டம் கூடிடுச்சு. மாறி மாறி வாசிக்கறாங்க — ஒண்ணும் இன்னொண்ணை ‘பீட் அடிக்க’ முடியல. ஒரு மட்டம் திருவையாத்துக்கு நயினார்சாமி போயிருக்காரு. தஞ்சாவூர் மேளக்காரங்க எல்லாம் சேர்ந்து பட ஊர்வலத்துல இவரை வாசிக்கச் சொல்லி இருக்காங்க” என்று சொல்லிக் கொண்டிருந்த போதே உள்ளிருந்து ஒருவர் சில படங்களை கொண்டு வந்தார்.
படத்தைக் காட்டி, “இவர்தான் பத்தமடை ராசா! இவரு நயினார்சாமி,” என்று விளக்க ஆரம்பித்தார்.
கதையை ஆரம்பித்துவிட்டு முடிக்காமல் போனாரே என்று எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.
“அவர் திருவையாத்துல வாசிச்சபோது என்ன ஆச்சு?” என்று ஆவலில் கேட்டேன்.
“என்ன ஆகும்? ஊர்வலம் வழக்கத்தைவிட கூட ஒருமணி நேரம் போயிருக்கு,” என்று அலட்சியமாய் முத்தாய்ப்பு வைத்து படத்துக்குள் மீண்டும் நுழைந்தார் மீனாட்சி கம்பர்.
“நயினார்சாமி காருகுறிச்சியாருக்கு வாசித்து இருக்கிறாரா?”, என்று கேட்டேன்.
“வாசிச்சு இருக்கணும். எனக்குக் கேட்ட நினைவு இல்லை. காருகுறிச்சியாருக்கு செட்டுத் தவில்-னா அம்பாசமுத்ரம் கோஸ் தவில்காரரும், அம்பாசமுத்ரம் குழந்தைவேல் தவில்காரரும்தான். பெரிய கச்சேரின்னா ராகவ அண்ணனும் (நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளை) நீடாமங்கலம் தம்பியும் (சண்முகவடிவேல்) வாசிப்பாங்க.”
“நிறைய பதிவுகள்ல கூட குழந்தைவேல் தவில்காரர் வாசிச்சு இருக்கார். அவரைப் பத்தி வெளியில ஒண்ணும் தெரியலையே. அவர் வாசிப்பு எப்படி இருக்கும்?” என்று கேட்டேன்.
“அவர் வாசிப்புல விவகாரமெல்லாம் இருக்காது. ஆனால் பாட்டுக்கு இணக்கமா இருக்கும். சங்கதிக்குக் கச்சிதமா சொல்லு போட்டு வாசிப்பார். காருகுறிச்சியும் அம்பாசமுத்ரமும் பக்கத்து பக்கத்து ஊருதானே. அதனால சின்ன வயசுல இருந்து சேர்ந்து வாசிச்சவங்க. போஸ் தவில்காரர் பெரும்பள்ளம் வெங்கடேசன் வந்ததும் கோயமுத்தூருக்குப் போயிட்டாரு. குழந்தைவேலுதான் கடைசி வரையிலையும் கூட இருந்தவர்.”
“பெரும்பள்ளம் வெங்கடேசன் பன்னிரெண்டு வருஷம் செட்டுத் தவிலா வாசிச்சாரு” என்றார் சிவகுமார்.
“ராகவ அண்ணன் கூட்டிகிட்டு வந்து காருகுறிச்சியார் கிட்ட ஒப்படைச்சுட்டுப் போனாரில்ல. அவர் வந்ததும் எதுக்கு வேணும்னாலும் இந்தச் செட்டு தாங்கி நிற்கும்னு ஆச்சு. காருகுறிச்சியாருக்குப் பொருத்தமான தவில்-னா அது வெங்கடேசன் அண்ணன்தான். ராகவ அண்ணன் கிட்ட படிச்சா வாசிக்கறதுக்கு கேட்கவா வேணும்? இருந்தாலும் அவரோட பணிவு — அது இயற்கையா வந்தாத்தான் உண்டு.”
பெரும்பள்ளத்தாரின் பணிவு என்று சொன்னதும் எனக்குக் கோலப்பன் சொன்னது நினைவுக்கு வந்தது.
ஒருமுறை வெங்கடேசனிடம், “நீங்கள் ஏன் உங்கள் பெயருக்கு முன்னால் சிறப்புத் தவில் என்று போட்டுக்கொள்ளவில்லை?” என்று கேட்டாராம்.
அதற்கு அந்த வித்வான், “தம்பி, முதல் முதல்ல சிறப்புத் தவில்னு நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் ஐயா போட்டுக்கிட்டாங்க. அதுக்கு அப்புறம் நீடாமங்கலத்துத் தம்பி போட்டுகிச்சு. அவங்க போட்டுக்கிட்ட பேரை நான் போட்டுக்க முடியுமா? என் காலத்துல ஒருத்தர் போட்டுக்கலாம்-னா வலங்கைமான் சண்முகசுந்தரம் போட்டுக்கலாம்” என்றாராம்.
மீனாட்சி கம்பர் நாங்கள் அருந்துவதற்கு எதையோ வாங்கி வர ஆளைக் கூப்பிட்ட போதுதான் மணியைப் பார்த்தோம்.
“திருச்செந்தூர்லையே இன்னும் ரெண்டு பேரைப் பார்த்துட்டு ஏரலுக்கு வேற போகணும்,” என்றார் பாலமுருகன். எனக்கு அப்போதுதான் அந்தத் திட்டமே தெரிய வந்தது.

மீனாட்சி கம்பரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு தெருவின் எதிர்சாரியில் இருந்த சங்கரலிங்கக் கம்பரின் வீட்டுக்குச் சென்றோம்.
சுருக்கம் விழுந்த தோலும், மெலிந்த தேகமுமாய் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். உடல் தளர்ந்திருந்தாலும் அவர் கண்களில் இருந்த ஒளி என்னை வசீகரித்தது.
பாலமுருகன் நாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னதும், “எனக்கு காருகுறிச்சியாரைப் பத்திச் சொல்ல வயசும் பத்தாது, விவரமும் பத்தாது” என்றார்.
அவர் சொன்ன விதத்தில் எந்த போலித் தன்னடக்கமும் இல்லை. ‘சும்மா நேரத்தை வீணாக்காதீங்க’ என்ற கண்டிப்புத் தெரிந்தது.
“பார்த்த தலைமுறை நீங்க. நீங்க சொன்னாத்தான் பார்க்காத தலைமுறையான எங்களுக்குக் கொஞ்சமானும் வந்து சேரும்” என்று நான் வேண்டிக் கேட்டுக் கொண்டதும் பேச ஆரம்பித்தார்.
“திருநெல்வேலியில எஸ்.எஸ்.ரங்கப்பா-னு இருந்தாரே, அவர் என் தாய்மாமன். அவர்கிட்டத்தான் நான் சிட்சை கத்துகிட்டேன். அவரும் காருகுறிச்சியாரும் ரொம்ப நெருக்கம். அவர் திருநெல்வேலிக்கு வந்தா வண்டி அனுப்பி மாமாவைக் கூப்பிட்டு அனுப்புவாங்க. ஹரிகேசநல்லூர்ல ஒருத்தர் உண்டு, அவரையும் கூப்பிட்டுப்பாங்க.”
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதராக இருக்குமோ? அவர் இவர்களுக்கெல்லாம் ரொம்ப மூத்தவராயிற்றே — இருக்க வாய்ப்பில்லையே — என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த நாள் அதற்கான விடை கிடைத்தது.
“நெல்லை சங்கீத சபாவுல நிறைய கச்சேரி வாசிப்பாங்க. அப்ப எங்க மாமா எங்களைக் கூட்டிட்டு போவாரு. அவரு வாசிக்கும்போது, “என்ன வாசிக்கிறார்-னு தெரியுதா?”-னு கேட்பாங்க. தெரியாட்டா சொல்லிக் கொடுப்பாங்க. அவர் என்ன வாசிச்சார்-னு புரிஞ்சுக்கற வயசு இல்லை எனக்கு. கோயில்பட்டியில வீடு கட்டி கிருஹப்ரவேசம் பண்ணினார் காருகுறிச்சியார். அதுக்கு நாங்க எல்லாம் போயிருந்தோம். எனக்குத் தெரிஞ்ச காருகுறிச்சியார் அவ்வளவுதான்” என்றார்.
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு அதே சாரியில் அருகில் இருந்த இன்னொரு வீட்டில் நுழைந்தோம்.
அது திருச்செந்தூர் ராஜகோபால கம்பரின் வீடு. யாருடைய வீடு என்று தெரிந்ததுமே, “1950-களில் முன்னணி நாகஸ்வர வித்வான்களின் படங்கள் தீபாவளி மலரில் வெளியாகியிருந்தது. அவற்றுள் ராஜகோபால கம்பரின் படமும் உண்டு” என்றார் சிவகுமார்.

எங்களை வரவேற்றவர் ராஜகோபால கம்பரின் மகன் ராமன். உடன் அவர் மனைவியும் இருந்தார். அந்த அம்மாளின் தந்தையார் ‘சின்ன காருகுறிச்சி’ என்று குறிக்கப்பட்ட வித்வான் சின்ன சுப்பைய்யா.
“நான் ஒரு இஞ்சினியரா ஆனதுக்குக் காரணமே காருகுறிச்சி அருணாசலம் அத்தான்தான்” என்று பேச ஆரம்பித்தார் ராமன்.
“கோயில் திருவிழாபோது எவ்வளவு பெரிய நாயனம் வந்தாலும் சரி, முதல்ல அப்பா மல்லாரி வாசிச்சுக் கொடுத்ததுக்கு அப்புறம்தான் மத்தவங்க வாசிப்பாங்க. நான் சின்னப் பையனா இருக்கும்போது தாளம் போடுவேன். அப்ப தலையை மேலேயே எடுக்க மாட்டேன். அப்பா காலைப் பார்த்துக்கிட்டே தாளம் போடுவேன். அவர் பெருவிரல்ல தாளம் இருக்கும். ஒரு தடவை நான் தாளம் போட்டுக்கிட்டு இருக்கும் போது காருகுறிச்சியார் வந்துட்டார். அப்பா வாசிச்சு முடிச்சதும் என்னைப் பார்த்து, “இவன் யாரு”-னு காருகுறிச்சியார் கேட்டார். “ஒம் மச்சினந்தான் மாப்ள”-னு அப்பா சொன்னது காதுக்குள்ளையே இருக்கு. “இந்தத் தொழில் நம்மளோட போகட்டும் மாமா. இவனைப் படிக்க வைங்க”-னு அன்னிக்கு காருகுறிச்சியார் சொன்னார். அவர் சொன்னா மாதிரியேதான் ஆச்சு. நான் பி.யூ.சி முடிச்சு இஞ்சினியரிங்குக்கு விண்ணப்பிக்கறதுக்குள்ள காலக்கெடு முடிஞ்சு போச்சு. அப்ப இந்தப் பக்கம் நிறைய பாலிடெக்னிக்கும் கிடையாது. திருநெல்வேலி ஜில்லால இருந்த ஒரே தனியார் பாலிடெக்னிக் தாழையூத்துல இந்தியா சிமெண்ட்ஸ் நடத்தினதுதான். அப்பா காருகுறிச்சியார் கிட்ட நான் படிக்க ஆசைப்படறேன்னு சொன்னதும், “நான் பாத்துக்கறேன் மாமா”-னு சொல்லிட்டார். நான் இண்டிர்வ்யூக்கு போனதும், “What is your father” னு பிரின்சிபால் கேட்டார். “நாகஸ்வர வித்வான்”-னு சொன்னேன். “Are you related to Karukurichi Arunachalam”-னு கேட்டார். நான் ஆமாம்-னு சொன்னதும் இண்டெர்வ்யூ முடிஞ்சாச்சு கிளம்புனுட்டாங்க.”
ராமன் தழுதழுக்க அவர் மனைவியார் பேச ஆரம்பித்தார்.
“ஏழாம் திருநாள்/எட்டாந்திருநாள் அன்னிக்கு இப்படி வீதியோட வாசிச்சிட்டு வரும் போது வாசல்ல நின்னு மாமாவைப் பார்த்து நாயனத்தோட ஒரு கும்பிடு போட்டுட்டு கொஞ்ச நேரம் வாசிக்காம நகரமாட்டாங்க. அவர் போயி வருஷக்கணக்கு ஆனாலும் “காருகுறிச்சியார் நின்னு வாசிக்கிற இடம்”-னு சாமியை நிப்பாட்டி இங்க நின்னு வாசிச்சிட்டுத்தான் போவாங்க. என் சடங்கன்னிக்கு எங்கேயோ வெளியூர்ல இருந்து வந்தவங்க சாயங்காலம் ஏழு மணிக்கு ஆரம்பிச்சு காலைல மூணி மணி வரைக்கும் வாசிச்சாங்க. எங்கப்பா எப்ப வெளியில கிளம்பினாலும் அவர் படத்தை விழுந்து கும்பிடாம கெளம்பமாட்டாங்க” என்றார்.
“நாங்க உங்க வீட்டுக்குப் போய் அந்தப் படத்தையெல்லாம் பார்த்துட்டு வந்தோமே” என்றார் சிவகுமார்.
இப்போது ராமன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டுவிட்டார்.
”அவருக்குத் திருச்செந்தூர் முருகன் மேல ரொம்ப பக்தி. எல்லா வருஷமும் ஏழுக்கும், எட்டுக்கும் இங்க வந்து வாசிச்சே ஆகணும்னு தேவஸ்தானத்துல அவர்கிட்ட எழுதியே வாங்கிகிட்டாங்க. ஒரு தடவை திருவிழாக்கு வாசிக்க வீருசாமி பிள்ளையைக் கூப்பிட்டிருக்காங்க. அவரு பன்னெண்டு நாளும் தங்கி வாசிக்கறாரு. ஏழாம் திருநாளன்னைக்கு அவரு சாமியை அழைச்சுகிட்டு மல்லாரி வாசிச்சுகிட்டு வராரு. காருகுறிச்சியாரும் வழக்கம் போல வாசிக்க வந்துட்டாரு. ஜனங்க எல்லாம் வீருசாமி பிள்ளையை நிறுத்தச் சொல்றாங்க. அவர், “நான் சாமியை அழைச்சுட்டேன், திருப்பக் கொண்டு சேர்க்கறதுதான் முறை. நடுவுல நிறுத்த முடியாது. அவனை வேணும்னா கொஞ்சம் தள்ளிப் போய் வாசிக்கச் சொல்லுங்கறாரு. ஜனங்க எல்லாம் கொதிக்கறாங்க. காருகுறிச்சியார்தான் “அவர் சொல்றதுதான் நியாயம்-னு’ சொல்லி வசந்த மண்டபத்துக்கிட்ட போய் வாசிச்சாரு. ரெண்டு பேர் நாயனமும் ஒரே சமயத்துல ஒலிச்சுது.”
ராமன் மீண்டும் அறுபது ஆண்டுகள் பின் சென்று வாழ ஆரம்பித்துவிட்டார்.
”அவங்க கோயில்பட்டி விட்டு விசேஷத்துல வராத பெரியவங்களே இல்லைனு சொல்லுவாங்க. இவங்க அப்பா சாப்பிட பந்தியில உட்கார்ந்து இருக்காரு. பந்தியில பரிமாரறது சிவாஜி கணேசனாம். பாத்துக்கிடுங்க அவருக்கு எவ்வளவு மதிப்பு இருந்திருக்கும்-னு” என்று ராமனை மீண்டும் தற்காலத்துக்கு இழுத்தார் அந்த அம்மையார்.
சினிமாவைப் பற்றிப் பேச்சு திரும்பியதும், காருகுறிச்சியார் ‘கொஞ்சும் சலங்கை’-யில் வாசித்த பின் அவருக்கு மக்களிடமிருந்த செல்வாக்கில் ஏதேனும் மாற்றம் தெரிந்ததா என்று நான் கேட்டேன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. அந்தப் படத்துக்கு முன்னாலேயே அவர் இங்கப் பெரிய ஆளுதான். அவருக்கு இருந்த நாதம் யாருக்கும் இல்ல. அதனால அவரைக் கூப்பிட்டு வாசிக்க வெக்க வேண்டியதாப் போச்சு” என்று பொங்கினார் ராமன்.
“ஆமாம்! எவ்வளவோ பேர் விவரமா வாசிச்சு இருக்கலாம். இந்தக் குளுமை யாருக்கு இருந்துது? அதனாலத்தானே ராசரத்தினம் பிள்ளையே இவரைக் கேட்டுட்டு ‘என்னோட வாரியா’-னு கையோடக் கூட்டிட்டுப் போனாரு,”
“எங்கப் பெரியப்பாவும் ராசரத்தினம் பிள்ளை கிட்ட படிச்சவருதான்” என்று சேர்ந்துகொண்டார் அந்த அம்மையார்.
திருநெல்வேலி ஜில்லாவில் காருகுறிச்சியாரைத் தவிர ராஜரத்தினம் பிள்ளைக்கு இன்னொரு சீடரா என்று நாங்கள் ஆச்சர்யப்பட்டோம். திருச்செந்தூர் ராஜாமணி கம்பரும் காருகுறிச்சியார் ராஜரத்தினம் பிள்ளையிடம் இருந்த காலத்தில் அங்கிருந்து குருகுலவாசம் செய்தவர். பின்னாளில் யாழ்பாணத்தில் தங்கி நிறைய வாசித்தவர் என்றும் தெரிந்து கொண்டோம்.
இலங்கை வானொலி காருகுறிச்சியார் மறைந்த சில ஆண்டுகளில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. அந்தப் பதிவு இன்றும் கிடைக்கிறது. அதில் காருகுறிச்சியாரின் இசையினூடே அவரைப் பற்றியத் தகவல்களும் கிடைக்கின்றன. அந்தப் பதிவில் காருகுறிச்சியார் டில்லியில் குடியரசு தினத்தில் வாசித்ததாக ஒரு வரி வருகிறது.
ராஜரத்தினம் பிள்ளை 1947-ல் சுதந்திர தினத்தன்று வாசித்ததைப் பற்றி விஸ்தாரமாய் பதிவு செய்யப்பட்ட கதைகள் உண்டு.
தங்க ஃப்ரேம் கண்ணாடியும், பளபளக்கும் ஷெர்வானியுமாய் கம்பீரமாய்ச் சென்ற ராஜரத்தினம் பிள்ளையை ஏதோ சமஸ்தானத்து மகாராஜா என்று நேரு நினைத்துக் கொள்ள — “ஆமாம்! இவர் இசை சமஸ்தானத்தின் மகாராஜாதான்” என்று ராஜாஜி அறிமுகப்படுத்தியதாக ஒரு கதையுண்டு.
இன்னொரு கதையில், சுதந்திரம் கிடைக்கின்ற மங்கல வேளையில் மங்கல வாத்யத்தை வாசிக்க வேண்டும் என்று பிள்ளைவாள் ஆசைப்பட, விழாத் திட்டத்தில் அப்படி ஒரு நிகழ்வே இல்லாதபோது எப்படியோ மன்றாடி 3 நிமிடங்கள் மட்டும் வாசிக்க வாய்ப்பு வழங்கப்பட — ராஜரத்தினம் வாசிக்கிறார். அவர் வாசிக்க ஆரம்பித்ததும் அங்கிருந்தவர்களுக்கு காலப்ரக்ஞையே இல்லாமல் போகிறது. அரை மணி வாசித்து அவரே நிறுத்தியதும்தான் 27 நிமிடங்கள் விழா தாமதமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று உணர்கிறார்கள்.
இப்படியெல்லாம் காருகுறிச்சியாரைப் பற்றிக் கதைகள் சொல்ல யாரும் கிடைக்கமாட்டார்களா என்ற ஏக்கத்தில்தான் குடியரசு தினக் கச்சேரியைப் பற்றி ஏதேனும் தெரியுமா என்று ராமனிடம் கேட்டோம். முக்கியமாய், முதல் குடியரசு தினத்தின் போது ராஜரத்தினம் பிள்ளையே நன்றாகக் கச்சேரி செய்யும் நிலையில் இருந்ததால், அவரை அழைக்காமல் காருகுறிச்சியாரை அழைத்திருப்பார்களா? ராஜரத்தினத்தின் மறைவுக்குப்பின் நடந்த விழாவை இலங்கை வானொலியில் குறிப்பிட்டார்களா? — இப்படிப் பல குழப்பங்கள்! துரதிருஷ்டவசமாய் அவருக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
‘கொல்லு கொல்லுனு கொன்னு எடுத்த பந்துவராளி’ அவர் காதுகளுக்குள் பத்திரமாய் இருக்கும்போது இந்தத் தகவல்கள் எல்லாம் அவருக்கு எதற்கு?
அவரிடம் விடை பெற்றுத் திருச்செந்தூரிலிருந்து கிளம்பினோம்.
(தொடரும்)
Beautiful information about a great legend. Awaiting eagerly for forthcoming write ups.
இதுபோன்ற பதிவுகள் காண்பது அரிது. சாரு அவர்களின் பதிவு வழியாக இதை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. லலிதாராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
வருக வருக லலிதாராம் அவர்களே. தங்களின் “துருவ நட்சத்திரம்” தொடரையும் ரசித்த பல ரசிகர்களில் அடியேனும் ஒருவன்.
சாரு நிவேதிதா பக்கம் மூலமாக வந்து, உடனே வாசித்தேன். நல்ல பதிவு.
ஶ்ரீவைகுண்டம், தென்திருப்பதி..- இது தென்திருப்பேரை என்று வந்திருக்கணும்.
லலித ராம், அருமையான பதிவு, இந்த மாதிரி பழைய வித்வான்களைப் பற்றியும், நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றியும் தேடி பதிப்பிப்பதற்கு நன்றி. இல்லா விட்டால், நாம் நம்முடைய பாரம்பரியத்தைத் தொலைத்து விடுவோம்
இசையின் நுட்பங்களைத் தெரியாதவர்களையும் ஈர்க்கும் பதிவு. வாழ்த்துகள் லலித் ராம்.i
Dear Lalith Ram,
Please listen to this..
https://m.facebook.com/story.php?story_fbid=10226699295334248&id=1404777150
Valaiyapatti mentions that he has played with kannar in 1959…
Kindly write a book about Karukurichi Arunachalam in Tamil and publish the ssme early.This is the request of the one amongst thousands of admirers of the Great Vidwan from Tirunelveli.