கிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்

சி.எஸ். லக்ஷ்மி

தமிழில்: சு. அருண் பிரசாத்

மேற்கு வங்கத்தின் சந்தன்நகரில் பிறந்த கிருஷ்ணா பாஸு, தன்னுடைய பதினோரு வயதிலேயே முன்னணி வங்க மொழி இதழ்களான ஏக்‌ஷாதே, தேஷ், கீர்த்திபாஷ், அம்ருதோ ஆகியவற்றில் படைப்புகளை வெளியிட்டதன் மூலம் தன் கவிதை ஆக்கும் வேலையைத் தொடங்கினார். அவரது தனிக் கவிதைகளின் முதல் தொகுப்பு 1976-இல் வெளியானது. வியப்படையவைப்பது  என்னவென்றால் அன்று தொடங்கி மேலும் 18 தொகுப்புகளை அவர் வெளியிட்டிருப்பதுதான். தன் தீவிரமான பெண்ணிய அரசியலை எந்தவிதச் சப்பைக்கட்டும் இல்லாமல் ஏற்கும் அவர் இந்த உரையாடலில் ஆண் எழுத்தாளர்கள் அவரை ராகீ மஹிலா, ராகீ கவி (சீற்றமுள்ள பெண், சீற்றமுள்ள கவிஞர்) என்றழைத்து அவர் கவிதைகளை வெறும் பொழிவுகள் என்று கூறுவது குறித்து நகைச்சுவையுடன் பேசுகிறார். தன் அன்னையைத் தன் பெரும் க்ரியாயூக்கியாக கருதும் அவர் தன் சம கால வங்காள எழுத்தாளர்களின் தாக்கமும் தன் எழுத்தில் இருப்பதை ஏற்று அவர்களை வெகுவாகப் பாராட்டுகிறார். ஐநாவின் மக்கள்தொகை குறித்த செயல்பாடுகளுக்கான நிதி (UNFPA – United Nations Fund for Population Activities) நிறுவனமும் லாட்லீ ஊடகக் குழுவும் இணைந்து வழங்கும் பாலினம் குறித்த நுன்னுணர்வுக்கான விருது அவருக்கு 2007இல் அவர் ஸம்வாத் ப்ரதிதின் தினசரியில் எழுதும் மோனே மோனே (ஆழ் மனம்) என்ற பத்தியைப் பாராட்டித் தரப்பட்டது. அமெரிக்காவிலுள்ள ப்ரபாஷி பாங்லா சங்கம் அவருக்கு உத்ஸப் புரஸ்கார் விருதை வழங்கியுள்ளது.  

***

கிருஷ்ணா பாஸு மற்றும் சி. எஸ். லக்ஷ்மியின்  ஆங்கில உரையாடலிலிருந்து சில பகுதிகள்.  

உரையாடல் நிகழ்ந்த இடம்: கொல்கத்தா

தேதி: செப்டெம்பர் 27, 2005

***

சி.எஸ். லக்ஷ்மி (ல): எழுத்தாளர் ஒருவர் எப்படி எழுதத் தொடங்கினார் என்று அறிய முயல்கிறோம், எழுதுவதற்கான வெளியைத் தன் வாழ்வில் அவர் எப்படி ஏற்படுத்திக் கொண்டார், அவருடைய குழந்தை பருவம் எப்படி இருந்தது — அவர் எப்படி வளர்ந்தார், எது எழுதத் தூண்டியது? எனவே உங்கள் குழந்தை பருவம் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்கிறீர்களா?

கிருஷ்ணா பாஸு (கி): என்னுடைய குழந்தைப் பருவத்தில் என் தாயின் தாக்கம் என் மீது அதிகம் இருந்தது. இலக்கியச் செயல்பாடுகளில் அவருக்கு விருப்பம் அதிகம். அவர்  இலக்கிய ஆர்வலர்,  அசல் கல்கத்தாவாசி. இலக்கியத்தில் அவருக்கு அதிக விருப்பம் இருந்தது. என்னுடைய ஏழு அல்லது எட்டாம் வயதிலிருந்தே எழுதும்படி என்னை  ஊக்குவித்தார். எனக்கு  எட்டு வயது இருக்கலாம் அப்போது நான் கவிதைகள் எழுதினேன்; சந்தம்,  தொடை நயம் போன்ற விஷயங்கள் எனக்குப் பிடித்தமானவை. குழந்தைப் பருவத்திலிருந்து  இருந்து கவிதைகள், இலக்கியச் செயல்பாடுகள், கூட்டங்கள், வானொலி நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டேன்—மிகவும் சின்னக் குழந்தையாக இருந்தபோதிலிருந்தே. 

ல: உங்கள் அம்மாதான் இதற்குக் காரணம்…

ப: ஆம், என் அம்மாவினால், மேலும் அவள் என்னை மிகவும் ஊக்குவித்தாள். 

கே: உங்கள் தந்தை என்ன செய்துகொண்டிருந்தார்?

ப: அவர் ஓர் ஆசிரியர், உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர் ஒரு கற்றறிந்த நபர், ஆனால் இலக்கிய நபர் அல்லர். 

கே: கிருஷ்ணா, நீங்கள் கொல்கத்தாவில் வளர்ந்தீர்களா?

ப: இல்லை, என்னுடைய குழந்தை பருவம் சந்தன்நகர் என்னும் புறநகரில் கழிந்தது. 

கே: சந்தன்நகர்…

ப: அதுவொரு பிரெஞ்சு நகரம், ஒரு பிரெஞ்சுக் காலனியாக அது இருந்தது. அது கங்கையாற்றின் அருகில் அமைந்திருக்கிறது, மேலும் மிக நல்ல கலாசாரப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. நான் அங்குதான் பிறந்தேன், பள்ளிக் கல்வி முடித்தேன், என்னுடைய கல்லூரி நாட்கள் எல்லாம் அங்குதான்; நான் ஒரு சந்தன்நகர் பெண்.

கே: நீங்கள் எப்போது கொல்கத்தா வந்தீர்கள்?

ப: நான் 1980-இல் கொல்கத்தா வந்தேன்.

கே: உங்கள் திருமணத்துக்குப் பிறகு?

ப: திருமணத்துக்குப் பிறகு. 

கே: உங்கள் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதா?

ப: இல்லை, அது ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமில்லை. அவர் என்னுடைய மூத்த சகோதரரின் நண்பர், நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தோம், அது ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமன்று.

கே: உங்கள் திருமணத்துக்கு முன்பே ஏற்கெனவே சில கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள்?

ப: ஆம்.

கே: அவை வெளியாகியிருக்கின்றன?

ப: ஆம்.

கே: எந்தெந்த இதழ்களில் வெளியிட்டீர்கள்?

ப: தேஷ், கீர்த்திபாஷ், அம்ருடோ போன்ற முன்னணி இதழ்கள். தேஷ் பத்ரிகா ஒரு முன்னணி இதழ், இலக்கிய இதழ். சகர்மோய் கோஷ் ஒரு பிரபல ஆசிரியர் (எடிட்டர்), அவர் என்னுடைய கவிதைகளை விரும்பினார். அவர் எங்களுடைய தந்தையைப் போன்றவர்; அவர் எங்களிடம் மிகுந்த பிரியத்துடன் இருப்பார். நான் நிறைய எழுதினேன், தேஷ் மற்றும் அம்ருடோ இதழ்களின் ஓர் அங்கத்தினராகவும் இருந்தேன். திருமணத்துக்கு முன்பு நான் ஒரு கவிஞர், திருமணத்துக்குப் பிறகும் நான் கவிஞராகத் தொடர்கிறேன். 

கே: திருமணத்துக்கு முன்பு நீங்கள் எழுதிய கவிதைகள், தொடக்க கால கவிதைகள், எதைப் பற்றியவை?

ப: என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே என்னுடைய குடும்பத்தில், சமூகத்தில் பாலின அரசியல் இருப்பதைக் கவனித்து வந்தேன். என்னுடைய பதினைந்தாம் வயதில் நான் எழுதிய கவிதை ஒன்று ஆணாதிக்கச் சமுதாயம் நம்மை ஆண்டுகொண்டிருப்பதைப் பேசியது. சிறுவயதில் இருந்தே நான் பெண்ணியவாதியாக இருந்திருக்கிறேன். 

கே: நீங்கள் எப்போது இதை எதிர்த்துக் கலகம் புரிந்திருக்கிறீர்கள்…

ப: ஆம், சமூகத்தைப் பற்றி நான் எப்போதும் இப்படியே உணர்ந்தேன், அதை எழுத்தில் மொழிபெயர்க்க விரும்பினேன். என்னுடைய உணர்வுகளுக்கு நான் மிகவும் உண்மையாக இருந்தேன், என்னுடைய தாய் எனக்கு உறுதுணையாக இருந்தார். ஆணாதிக்க அமைப்பைக் கொண்ட பெரிய குடும்பம் ஒன்றில் அவர் வாழ்க்கைப்பட்டிருந்தார். என் தந்தையும், என் தந்தையின் தந்தையும் என் தாய், என் அத்தை ஆகியோரிடம் ஆதிக்கம் செலுத்தியதை என்னுடைய மிகக் குழந்தை பருவத்தில் இருந்தே கவனித்துவந்தேன். பதிமூன்று அல்லது பதினான்கு வயதில் இருந்தே நான் பெண்ணியவாதியாக இருக்கிறேன். சிறு பெண்ணொருத்தி (கற்பனாவாதக்) ரொமாண்டிக் கவிதைகள் எழுதாமல் ஆணாதிக்க அமைப்பின் வேர்களைத் தேடிக் கொண்டிருந்தது சற்று வழக்கத்துக்கு மாறானதுதான்; நான் எதை நம்பினேனோ அதற்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்.

ல: கதை அல்லாமல் எது உங்களைக் கவிதை எழுத வைத்தது, கிருஷ்ணா?

கி: சில அனுபவங்களால் நான் தீவிரமாக உந்தப்பட்டேன். சில வரிகள் எப்படி என் மனத்தில் வந்தன என்று எனக்குத் தெரியவில்லை. முதல் அல்லது இரண்டாவது வரி வந்துவிடும், பிறகு என்னுடைய நாட்குறிப்பில் எழுதுவேன், என்னுடைய தேர்வுத் தாளில் எழுதி என்னுடைய ஆசிரியர்களால் கண்டிக்கப்படேன். என் தந்தையும் குடும்பப் பொறுப்பில் இருந்த மற்றவர்களும் திட்டினார்கள்.   அப்படியும் நான் எழுதினேன்; அதை வெளியிட விரும்பினேன். என் தாய் எனக்கு மிகவும் உதவினார்; நான் பதினோரு வயதுப் பெண்ணாக இருந்தபோதே என்னுடைய கவிதைகள் வெளியாயின. 

ல: வெறும் பதினொன்று வயதுதானா?

கி: பதினோரு வயதிலேயே…

ல: தேஷ் இதழிலா?

கி: இல்லை, அது வெளியானது ஏக்ஸாதே இதழில். முன்னணி பெண்கள் இதழ் ஒன்று இருந்தது, [அதுதான்] ஏக்ஸாதே; பத்தொன்பது வயதில் தேஷ் இதழில் என் கவிதை வெளிவந்தது… என்னுடைய உறவினர்கள் என்னைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்கள்—என் தலைவிதி எப்படியிருக்குமோ, என் எதிர்காலம் என்னவாகுமோ?  நாள் முழுவதும் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறாள், கவிதைகளை வாசிக்கிறாள். இது உபயோகமே இல்லாத வேலை அவர்களைப் பொருத்தவரை. என்னைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்கள். 

ல: உங்கள் தேர்வில் ஒரு நபரை மணந்துகொள்ள நீங்கள் விரும்பியபோது, உங்கள் குடும்பத்தினர் ஆட்சேபிக்கவில்லையா?

கி: சில ஆட்சேபணைகள் இருந்தன. அப்போது  அவர் வாழ்க்கையில் நிலையூன்றியிருக்கவில்லை,  எனக்கும் அதிகம் வயதாகவில்லை; எனவே இது  ஒன்றும் சரிப்பட்டு வராது, எதிர்காலம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காது என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் நாங்கள் இருவரும் இப்போது இருபத்தொன்பது – முப்பது ஆண்டுகளாக இணைந்து இருக்கிறோம், அவர் ஒரு வேதியியல் பேராசிரியர். நான் வித்தியாசமானவள் என்று அவர் உணர்கிறார். அவர் என்னை எழுத அனுமதிக்கிறார் என்றில்லை, நான் அவருடைய அனுமதியை நாடவில்லை—என் முதல் தேர்வு என் எழுத்து; என்னுடைய இரண்டாவது தேர்வு என் மண வாழ்வு. இது அவருக்குத் தெரியும், அவர் இதோடு ஒத்துப் போகிறார். 

ல: உங்களுக்கு சகோதர சகோதரிகள் உண்டா அல்லது நீங்கள் ஒரே பிள்ளையா?

கி: இல்லை, எனக்கு ஒரு சகோதரியும் சகோதரரும் உண்டு, ஆனால் அவர்கள் இலக்கிய ஆர்வலர்கள் இல்லை. என் தாய்  இலக்கியவாதி. அவர் இளமையிலேயே கவிதைகள் எழுதியிருக்கிறார்; கவிதை வாசிப்பும் செய்திருக்கிறார். தான் தாகூரின் சிஷ்யை என்று  அழுத்திக் கூறுவார். நம் வாழ்வில் ஏசு கிருஸ்துவைவிட ரவீந்திரநாத் தாகூர் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று அவர் சொல்வதுண்டு.

ல: ஏசு கிருஸ்துவைவிடவும்…

கி: நான் அம்மா பிள்ளை…

ல: ஆ… நீங்கள்  அம்மா பிள்ளைதான். நீங்கள் கவிதை எழுதத் தொடங்கினீர்கள், திருமணத்துக்குத் பிறகும் எழுதினீர்கள், இல்லையா?

கி: ஆமாம், நான் தொடர்ந்து எழுதினேன். 

ல: உங்கள் அம்மாவைத் தவிர்த்து உங்களை உந்தியவர் யார்? அந்தக் காலகட்டத்தில் இருந்த மற்றக் கவிஞர்கள் யார், பெண் கவிஞர்கள், ஆண் கவிஞர்கள்…?

கி: கவிதா ஷிங்கோ மிகவும் தூண்டுதலாக இருந்தார்.  

ல: கவிதா?

கி: ஆமாம், கவிதா. அவருடைய கவிதைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. அவர் மிகத் திறமையான ஒரு கவிஞர், ஆனால்  கவனிக்கப்படாதவர், அங்கீகாரம் பெறாதவர். 

ல: அவர் ஐம்பதுகளில் எழுதினார், இல்லையா?

கி: ஆமாம், அவர் ஐம்பதுகளில் எழுதினார், நான் அப்போது சிறுமியாக இருந்தேன், அவரை மிகவும் விரும்பினேன்; நான் அவர்மேல் உயிராக இருந்தேன்… கவிதா ஷிங்கோ, கிருஷ்ணா பாஸு, மல்லிகா ஸென்குப்தா மூவரும் பெண்ணியக் கவிதையின் மூன்று பெயர்கள், அவர்கள் ஒருவகைப்பட்டவர்கள், அவர்கள் ஒரே சுருதியில் பாடுகிறவர்கள், அவர்கள் ஒரே நதியில் பயணிப்பவர்கள் என்று சிலர் கூறுவார்கள்… பல்லோரி ஸென் என்ற விரிவுரையாளர் கவிதா ஷிங்கோ, கிருஷ்ணா பாஸு, மல்லிகா ஸென்குப்தா ஆகியோரைப் பற்றி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி முனைவர் பட்டம் பெற்றார்.

ல: நபனீதா போன்ற கவிஞரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவரும்கூட மூத்த கவி. 

கி: ஆமாம், மக்கள் அவரைப் பெண்ணியக் கவி என்பார்கள்… அவர் ஒருபோதும் சொல்லவில்லை.  சுசித்ரா பட்டாச்சாரியாவும் அப்படித்தான். தான் ஒரு பெண்ணியவாதி என்று அவர் சொல்லியதில்லை. பாநீ பாஸுவும் அதேபோல்தான். ஆனால் நான் ஒரு விதிவிலக்கு. நான் ஒரு பெண்ணியவாதி என்று எப்போதும் சொல்லிவந்திருக்கிறேன் மேலும் அதைப் பெருமையாகக் கருதுகிறேன். நான் போலியாகவோ, பாசாங்காகவோ இல்லை. மேலும்,  எந்த வகையில் பார்த்தாலும் நான்  பெண்ணியவாதிதான்…

ல: ஆக நீங்கள் உங்கள் எட்டு வயதிலிருந்து பெண்ணியவாதியாக இருப்பதாகச் சொல்கிறீர்கள்?

கி: ஆமாம். (சிரிப்பு)

அம்மா, அத்தை, பெரியம்மா, சின்னம்மா, மற்ற பெண்கள் எல்லோரும் ஏன் நீங்கள் சாப்பிட்ட பிறகு சாப்பிடுகிறார்கள் என்று என் தந்தையிடமும் பெரியப்பாவிடமும் நான் ஏழு அல்லது எட்டு வயதாக இருக்கும்போது கேட்டேன்…

ல: அவர்கள் என்ன சொன்னார்கள்?

கி: அவர்கள் என்னைக் கண்டித்தார்கள்… நான் அப்படியான கேள்விகளைக் கேட்கக்கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் திருப்தியாகப் பசியாறியபின்பே என் தாய், அத்தை, பெரியம்மா, சின்னம்மா மற்றும் மூத்த சகோதரிகள் சாப்பிடுவது என்பது என்னைப் பொருத்தவரை கேள்வி கேட்க வேண்டியது.   மிகச் சிறிய வயதிலிருந்தே பாலின அரசியலை என்னால் உணர முடிந்தது. 

ல: கிருஷ்ணா, நீங்கள் கவிதைகள் எழுதும்போது எவையெல்லாம் உங்களை உந்தும்?

கி: வாழ்க்கை—மனித வாழ்க்கை. அவமதிப்பு, தவறாக நடத்தப்படுதல், வீடில்லாமை, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை  இவை என்னை எப்போதும் வருத்துகின்றன. உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது ஒரு முறை. ஆசிரியர் ஒருவர்—ஹிந்தி ஆசிரியர்—இரண்டு பெண்களை மணந்திருந்தார். அவரது மரணத்துக்குப் பிறகு முதல் மனைவிக்குப் பணியும் இரண்டாவது மனைவிக்குப் பணிக்கொடையும் ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியது. உங்களுக்குப் புரிகிறதா? ஆண்கள் பலதார மணத்துக்கு உயர் நீதிமன்றம் உதவுகிறது… 

ல: ஆக பெரும்பாலான உங்கள் பேசுபொருட்கள் சமூகத்தில் பெண்களுக்குள்ள தாழ்வு நிலை உங்களுக்குத் தரும் உந்துதலா? 

கி: ஆமாம், பெரும்பாலும் அப்படித்தான். இயற்கையும் என்னைத் தூண்டுகிறது. வரலாறு, பழங்கால இந்திய வரலாறு, நாட்டுப்புறவியல்— ஆனால் முக்கியமாக வாழ்க்கையும் பெண் வாழ்க்கையும். 

ல: அது உங்களை மிகவும் உந்துகிறது…

கி: அது என்னை மிகவும் உந்துகிறது.

ல: உங்கள் கவிதைகள் எத்தகைய வரவேற்பைப் பெற்றன, கிருஷ்ணா? மக்கள் உங்கள் கவிதைகளை விரும்பினார்களா?

கி: படித்த பெண்கள், பேராசிரியைகள், மாணவிகள் இவர்களுக்கு என் கவிதைகள் மிகவும் பிடிக்கும். நுண்ணுணர்வு உள்ள ஆண்களுக்கும் பிடிக்கும்.  ஆனால் சராசரி ஆண்  என் கவிதைகளை விரும்பமாட்டார். 

ல: ஆக உங்கள் வாசகர்களில் பெரும்பான்மையினர் பெண்கள்?

கி: பெண்களும் நுண்ணுணர்வு உள்ள ஆண்களும் ஆனால் அநேகமாகப் பெண்கள். நபனீதா தேவ் ஸென்னுக்கு என் கவிதைகள் மிகவும் பிடிக்கும். மல்லிகா ஸென் குப்தாவுக்கு என் கவிதைகள் மிகவும் பிடிக்கும்; பாநீ பாஸுவுக்கு என் கவிதைகள் மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண் எழுத்தாளர்கள், என்னைப் பற்றி அறிந்திருந்தாலும், அவர்கள் என்னை அதிகம் விரும்புவதில்லை என்று நினைக்கிறேன்… நீ பக்கசார்பு கொண்டவள் என்பார்கள்….

ல: பக்கசார்பா?

கி: ஆகவே நான் அவர்களிடம் எப்போதும் சொல்வேன்: உங்களுக்குத்தான்  பக்கசார்பு இருக்கிறது; உங்கள் வெறுப்பு பக்கசார்பானது…

ல: நீங்கள் வேலைக்குச் செல்லும் பெண்ணா, கிருஷ்ணா?

கி: ஆமாம்.

ல: நீங்கள் எங்கு பணிபுரிகிறீர்கள்?

கி: டிகிரி கல்லூரியில் ரீடராக இருக்கிறேன், இது, என்ன சொல்வது, என்னுடைய வேலை, ஆனால் என்னுடைய வாழ்க்கையன்று, என் வாழ்க்கை இலக்கியம், என் வாழ்க்கை கவிதைகள். 

ல: நீங்கள் என்ன பாடம் எடுப்பீர்கள்?

கி: இலக்கியம், வங்க இலக்கியமும் மொழியும். 

ல: பெண் எழுத்தாளர்களிடையே தோழமையுணர்வு இருக்கிறதா அல்லது நிறைய பொறாமை இருக்கிறதா?

கி: பெண் எழுத்தாளர்களிடையே ஒத்துழைப்பை நீங்கள் பார்க்க முடியும், சக உணர்வு, நட்பு இருக்கிறது. ஆண்களிடையே மிகவும் பொறாமை இருக்கிறது — இது என்னுடைய அனுபவம். ஆனால் எனக்கு மல்லிகாவின் கவிதைகள் பிடிக்கும், நபனீதாதீ என் கவிதைகளை விரும்புவார், பாநீ பாஸுவின் எழுத்து எனக்கு விருப்பமானது, சுசித்ரா பட்டாச்சாரியாவின் எழுத்தும். நாங்கள் ஒருவரோடொருவர் நெருக்கமானவர்கள். 

ல: வங்க இலக்கியத்தில் வணிக மையநீரோட்ட எழுத்து என்ற ஒன்று இருக்கிறதா? வெகுசன எழுத்து, இலக்கிய எழுத்து  என்ற பிரிவு இருக்கிறதா?

கி: பிரிவு இருக்கிறது.

ல: பெண் எழுத்தாளர்களிடமும் அத்தகைய பிரிவு இருக்கிறதா… பிரபலமாக இருப்பவர்கள்…

கி: சுசித்ரா மிகவும் பிரபலமானவர், பாநீ பாஸு மிகப் பிரபலமானவர் கிடையாது. ஆனால் மிகச் சிறந்த எழுத்தாளர் என்று நான் நினைக்கிறேன். பாநீ பாஸு மிகச் சிறந்த நாவல் ஒன்று எழுதினார், மைத்ரேய ஜாதக் (மைத்ரேயனின் பிறப்பு)—மிகச் சிறந்த எழுத்து.  வெறும் நல்ல எழுத்து இல்லை, பிரமாதமான எழுத்து அவருடையது. சுசித்ரா மிகப் பிரபலம். இரண்டு நீரோட்டங்கள் இருக்கின்றன. 

ல: வெகுசன இதழ்களில் அல்லது இலக்கிய இதழில் நீங்கள் வெளியிடும்போது, இப்படித் தான் எழுத வேண்டும் என்று இருக்கிறதா— நீங்கள் எழுதுவதை அவர்கள் தணிக்கை செய்வார்களா? 

கி: ஆமாம், ஆரம்பத்தில் எனக்கு அறிவுரை வழங்க முயற்சித்தார்கள், ஆனால் அவர்கள் [அறிவுரையை] நிராகரித்தேன். என்னுடைய உணர்ச்சிகளுக்கு  நேர்மையாக இருப்பவள் நான். 

ல: அதாவது, அறிவுரை தந்தது ஆண் பத்திரிகை ஆசிரியர்களா?

கி: ஆமாம், ஆண் ஆசிரியர்கள். இப்படி எழுதாதீர்கள்; இப்படி எழுதுங்கள்  போன்றவை. ஆனால் நான் அவற்றை நிராகரித்தேன். என்னுடைய உணர்ச்சிகளுக்கு, என் வாழ்க்கைக்கு, என் வாசிப்புக்கு நான் என்னை ஒப்புக்கொடுத்துள்ளேன். 

ல: ஆக நீங்கள் எழுத விரும்பியதை நீங்கள் எழுதினீர்கள்…

கி: ஆமாம், நான் எழுத விரும்பியதை நான் எழுதினேன். 

ல: அவர்கள் சொன்னதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை…

கி: இல்லை, இல்லை, அவர்கள் என்னை ஆத்திரக்காரப் பெண் என்று அழைப்பார்கள், ராகீ மஹிலா. 

ல: ஆத்திரக்காரப் பெண்ணா? (சிரிப்பு)

கி: ஸுனீல் கங்கோபாத்யாய், மிகப் பிரபலமான எழுத்தாளர்—அவர் என்னை  ராகீ கவி, க்ரோதீ கவி (சீற்றமுள்ள கவிஞர், குரோதமுள்ள கவிஞர்) என்றழைப்பார். 

ல: ஒரு கவிஞராக உங்கள் குடும்பத்துக்குள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?

கி: ஒரு குடும்ப உறுப்பினராக, நான் ஒரு தாய், நான் ஒரு மனைவி, என்னுடைய சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் சகோதரி; என்னுடைய மூத்த சகோதரியும் என் கணவரும்—அவர்கள் என்னைப்பற்றி பெருமை கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். 

ல: அவர்கள் உங்களைப் பற்றி பெருமை கொள்கிறார்கள்.

கி: ஆமாம், என்னுடைய ஆளுமையை அவர்கள் விரும்புகிறார்கள், என்னுடைய தனித்தன்மையை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் என்னுடைய பெண்ணியத்தை ஆதரிக்கிறார்கள். 

ல: உங்கள் மகளைப் பற்றி?

கி: கணினி விளையாட்டுகள் விளையாடுவதில் அவளுக்கு விருப்பம் அதிகம். அவள் டி.விக்கு அடிமையாகிவிட்டாள், அவள் ஒரு சேட்டைக்காரப் பெண்… (சிரிக்கிறார்)

ல: அவள் இன்னும் மிகச் சிறியவள்தானே.

கி: ஆமாம்.

ல: உங்கள் கவிதைகளை அவள் வாசிப்பாளா?

கி: அவள் ஒரு டி.வி பைத்தியம் என்று நினைக்கிறேன். 

ல: உங்கள் கவிதைகளை அவள் வாசிப்பாளா?

கி: எப்போதாவது வாசிப்பாள், ஆனால் நேற்று என்னிடம், “உனக்கு  துர்க்கை அம்மனைப் பிடிக்கும், எனக்குத் தெரியும்,” என்று கூறினாள். ஏன் என்று நான் கேட்க, அவள் சொன்னாள், “நீ ஒரு பெண்ணியவாதி, எனவே துர்க்கையைத்தான் உனக்குப் பிடிக்கும், சிவனை இல்லை.” (சிரிப்பு)

ல: நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள், கிருஷ்ணாதீ? நீங்கள் அதிகாலையில் எழுந்து  நாள் முழுவதும் எழுதுவீர்களா?

கி: நான் தொடங்கும்போது—ஏதாவது நிகழ்வு அல்லது அனுபவம் ஏதாவது பொறியைக் கிளப்பும், நான் என்னுடைய நாட்குறிப்பில் சில வரிகளை எழுதிக்கொள்வேன்;  பிறகு இரவில், என் கணவர், என் மகள், என்னுடைய வீட்டு உதவியாளர் மற்ற உறவினர்கள் எல்லோரும் உறங்கும்போது நான் என் கவிதைகளை எழுதுவேன். 

ல: இரவிலா?

கி: இரவில் 11:30, 12:00, 12:30…

ல: நீங்கள் ஓர் ஆசிரியர் என்பதால் உங்கள் மாணவர்களிடையே உங்களைப் போற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்களா?

கி: ஆமாம், மாணவிகள் என்னை மிகவும் விரும்புகிறார்கள், அவர்கள் என்மேல் பைத்தியமாக இருப்பார்கள்.

ல: மாணவர்களைப் பற்றி? (சிரிப்பு)

கி: அவர்கள் சந்தேகிகள். (சிரிக்கிறார்.) மாணவிகள் என்னை விரும்புகிறார்கள், அவர்கள் என்னை மிகவும் விரும்புகிறார்கள். 

ல: எத்தனை நூல்கள் வெளியிட்டுள்ளீர்கள்?

கி: பத்தொன்பது.

ல: பத்தொன்பது கவிதை நூல்களா?

கி:  பத்தொன்பது கவிதைத் தொகுப்புகள்.

ல: முதல் தொகுப்பு எப்போது வெளிவந்தது?

கி: 1976இல்.

ல: எவ்வளவு எழுதியிருக்கிறீர்கள், கிருஷ்ணா, எழுதித்தள்ளும் எழுத்தாளர் நீங்கள்!

கி: நான் எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்தான்… ஒருவர் அல்லது ஒருத்தி தன்னுடைய எழுத்துக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும், ஏனென்றால் அது நம்முடைய வழிபாடு, இறைவி சரஸ்வதிக்கான நம்முடைய வழிபாடு. நான் சரஸ்வதியின் மகள் என்று நினைக்கிறேன்.

ல: நீங்கள் மற்ற எழுத்தாளர்களையும் வாசித்து வந்திருப்பீர்கள். சமகால எழுத்தாளர்களில் நீங்கள் விரும்பும் எழுத்தாளர்கள் யார்? பாநீ பாஸுவைக் குறிப்பிட்டீர்கள்…

கி: பாநீ பாஸுவின் நாவல்கள் எனக்குப் பிடிக்கும். நபனீதா தேவ் ஸென்னின் அன்யோன்யமான உரைநடை எனக்குப் பிடிக்கும். கவிதா ஷிங்கோவின் கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை, மல்லிகா ஸென்குப்தாவின் கவிதைகளும். தாகூரின் கவிதைகளையும் பாடல்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். சரத்சந்திர சட்டோபாத்யாய், மானிக் பந்தோபாத்யாய், இவர்கள் மிக நல்ல எழுத்தாளர்கள். அப்புறம் பிபூதி பூஷன் பந்தோபாத்யாய். 

ல: ஆங்கில அல்லது மற்ற மொழிகளைப் பற்றி?

கி: ஆங்கில இலக்கியத்தில், ஆங்கிலச் செவ்வியல் இலக்கியம், வோர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ் ஆகியோரை எனக்குப் பிடிக்கும் மற்றும் ஷேக்ஸ்பியரின் படைப்புகளும். டால்ஸ்டாயின் எழுத்து எனக்குப் பிடிக்கும், மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன்.

ல: ரஷ்ய எழுத்து…

கி: இந்திய இலக்கியச் சமூகம் ரஷ்ய இலக்கியச் சமூகத்துடன் மிகவும் நெருக்கமானது தெரியுமா?

ல: ஆமாம். நீங்கள் ஏழு அல்லது எட்டு வயதில்  வெளியிடத் தொடங்கிவிட்டீர்கள். உங்கள் எல்லா நூல்களும் நன்றாக வரவேற்பைப் பெற்றனவா அல்லது ஏதாவது நூல் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியதா?

கி: என்னுடைய நூல்கள் முக்கியமாகப் பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றன. பத்திரிகையாசிரியர்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு என்னைப் பிடிக்கும், ஆனால் என்னுடைய சில நூல்கள், சில கதைகள் மற்றும் என்னுடைய சில கவிதைகள் அவர்களுக்குப் பிடிக்காது ஏனென்றால் அவற்றில் நான் இந்தச் சமூகத்துக்குச் சவால் விட்டிருக்கிறேன். அவர்கள் நான் கேள்வி கேட்பதை விரும்பவில்லை, ஒப்புக்கொள்வதையே அவர்கள் விரும்புகிறார்கள்… இது அரை-காலனிய, அரை-நிலவுடமைத்துவ அமைப்பு, என்னால் அதை உணரமுடிகிறது, அனுபவிக்க முடிகிறது, ஆனால் என்னுடைய சக ஆண் எழுத்தாளர்கள் என்னுடைய மனப்பாங்கை விரும்புவதில்லை; என்னுடைய எழுத்தையும். நாம் உருவாக்கியுள்ள இந்த நாகரீகம் மொத்தமும் பான் மற்றும் பானிதா நிறைந்தது. முழுக்கப் பாசாங்குத்தனம். 

ல: பான் என்றால்?

கி: பான் என்றால் பாசாங்கு, பானிதா என்றால், போலித்தனம் என்று சொல்லலாம். அடிக்கடி நான் சொல்வேன்: கிருஷ்ணா ராதையிடம் சொல்கிறார்: 

வதஸி யதி கிஞ்சிதபி தந்தருசி கௌமுதி ஹரதி தர திமிரம் அதி கோரம்

(கொஞ்சமாவது பேசு; என்னைப் பற்றி நல்லதோ கெட்டதோ, பேசு; உன் பற்களின் நிலவொளிப் பிரகாசம் என்னுள்ளிருக்கும் இருண்மையைக் கொள்ளைகொண்டுவிடும்.) அவர் ராதிகாவை இச்சகம் பேசிவிட்டுப்  பிறகு சந்திராவலி, சத்யபாமா, ருக்மணியிடம் செல்கிறார். (சிரிப்பு)…

ல: அவர் உன்னுடைய காலை என் தலை மீது வை என்று அவளிடம் சொன்னார், அதன் பிறகு வேறு யாரிடமோ சென்றுவிட்டார்.

(சிரிப்பு)

கி: தேஹி பத பல்லவமுதாரம்— உன்னுடைய காலை என் தலை மீது வை என்று அவளிடம் சொல்லிவிட்டு, அதன் பிறகு சந்திராவலியிடம் சென்றுவிட்டார். இதுதான் அவர்களின் இயல்பு. 

ல: நாம் இங்கு நிறுத்தலாம் என்று நினைக்கிறேன், கிருஷ்ணா. வேறு ஏதாவது நீங்கள் என்னிடம் சொல்ல விரும்புகிறீர்களா?

கி: நான் முக்கியமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இலக்கியக் கலைஞருக்கு— எழுத்தாளர் மற்றும் கவிஞர்— இரண்டு கைகள்; ஒரு கையால் வாசகரையும் மற்றொரு கையால் முடிவிலியையும் அவன் தொடவேண்டும்…

ல: முடிவிலி…

கி: முடிவிலி, அனந்தர் திகே ஏக்டா ஹாத் தாக்பே படாகெர் திகே ஏக்டா ஹாத் தாக்பே (ஒரு கை முடிவிலியை நோக்கியும் ஒரு கை வாசகரை நோக்கியும் இருக்க வேண்டும்) இது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை; நான் இதை உணர்கிறேன். ஒரு கையால் என் வாசகர்களை அடைவேன், மற்றொரு கையால் முடிவிலியைத் தொடுவேன்.

ல: இப்போதும்கூட எழுத்தாளர்களைப் பற்றிப் பேசியபோது… எப்போதும் அவர்களை ஆணாகப் பாவித்தே பேசப்படுகிறது. அவன் செய்யவேண்டும் என்று கூறுவார்களே ஒழிய… அவள் செய்யவேண்டும் என்று சொல்வதே இல்லை.

கி: ஆமாம், அது நம்முடைய பழக்கம், நம்முடைய மரபு. 

ல: கலைஞர்களைப் பற்றிப் பேசுபவர்கள், ‘அவன்’ என்று ஆணையே குறிப்பிடுவார்கள்…

கி: அவன் சொன்னான்…

ல: அவர்கள் ஒருபோதும் ‘அவள்’ என்று கூற மாட்டார்கள், அது அவர்கள் வாயிலிருந்து வராது. கிருஷ்ணா, நீங்கள் உங்கள் மொழியை மாற்ற வேண்டும்!

கி: ஆமாம், கண்டிப்பாக மாற்ற வேண்டும். (சிரிப்பு) நான் அதைப் பற்றிய பிரக்ஞையுடன்தான் இருக்கிறேன்.

ல: உங்களுடைய கவிதை அல்லது கதை ஒன்று பெரிய விவாதத்தைக் கிளப்பியது…

பெண்ணுக்கு வீடு உண்டா என்ற கவிதை ஒன்று. அது பரபரப்பை ஏற்படுத்தியது., நீ எங்கு தங்குகிறாயோ அதுவே உன் வீடு, பெண்களுக்கு வீடு இல்லையென்று நீ ஏன் கூறுகிறாய் என்று ஸுநீல் கங்குலியும் சக்தி சட்டோபாத்யாயும்  சொன்னார்கள்.  ஆனால், பெண் எழுத்தாளர்களுக்குக் கவிதை மிகவும் பிடித்திருந்தது. பெண்ணுக்கு எங்காவது வீடு  உண்டா? பெண்ணுக்கு வீடு இல்லை. பாபேர் பாடி, ஷொஷுர் பாடி— தந்தையின் இல்லம், மாமனாரின் இல்லம், ஆனால் நமக்கென்று வீடில்லை… ஸகா என்றொரு கவிதை எழுதினேன்; ஸகா என்றால்   தோழன். 

ல: ஸகி மாதிரியா?

கி: ஆமாம், ஸகி மாதிரி

ஷம்பர்கே தாகோனி ஸகா ஷங்க்கய் தேகேசோ

உறவுகளில் உனக்கு நாட்டமில்லை நண்பா, எண்ணிக்கைகளில்தான் நாட்டமுனக்கு— 

எத்தனை பெண்களை அனுபவித்திருக்கிறாய் [என்று சொல்வதுபோல் கவிதை] 

ஷம்பர்கே தாகோனி ஸகா ஷங்க்கய் தேகேசோ

ஷங்க்கா என்றால் எண்ணிக்கை, ஷம்பர்கோ என்றால் உறவு. 


தமிழில்: சு. அருண் பிரசாத்

One Reply to “கிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.