படகோட்டி தரிணி

  • மூலம்      : தாராசங்கர் பானர்ஜி
  • ஆங்கிலம்   : ஹிரண் முகர்ஜி
  • தமிழில்     : தி.இரா. மீனா

படகோட்டி தரிணி எப்போதும் குனிந்து கொண்டுதான் நடப்பான். அசாதாரணமான உயரம். அடிக்கடி விட்டங்களிலும், மரக்கிளைகளிலும், குடிசைகளின் மூங்கில் பிளவுகளிலும், உத்தரத்திலும் தன் தலையை மோதிக் கொண்டு பாடம் கற்றவன். ஆனால் படகோட்டும் போது மட்டும் நன்றாகத் தன்னை நிமிர்த்திக் காட்டிக் கொள்வான்.

அது மழை மாதம்.அம்புபாச்சி திருவிழாவையொட்டி பக்தர்கள் புனிதகங்கையில் நீராடி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு களைப்பான கூட்டம், குறிப்பாக மூதாட்டிகள், மயுராக்ஷியைக் கடந்து தங்கள் வீட்டிற்கு அவசரமாகத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

“பெரியவர்களே , இனிமேல் உங்களையெல்லாம் என்னால் அழைத்துக் கொண்டு போக முடியாது. உங்களுடைய பக்தியையும் சேர்த்து, நீங்களும் மிகப் பளுவாக இருக்கிறீர்கள் “ என்று புகைத்து முடித்து விட்டு தரிணி கத்தினான்.

“இன்னும் ஒருவர்தானப்பா. இந்தச் சின்னப் பையன்….”ஒரு மூதாட்டி கெஞ்சினாள். ”சபி, வா ,வேகமாக வா … நீ சிரித்ததும் ,உளறியதும், அரட்டையடித்ததும் போதும் உன் துருத்திய பல்லை நாங்களும் பார்க்கும்படி வைத்துவிடாதே.” மற்றொருத்தி தன் சினேகிதியைக் கூப்பிட்டாள்,

பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த பெண்களோடு சிரிப்பும் கும்மாளமுமாகப் பேசிக் கொண்டிருந்த சபி அல்லது சாபித்ரி அவர்களிடம் “ நீங்கள் போகலாம். நாங்களனைவரும் அடுத்த தடவையில் வருகிறோம்” என்றாள்.

“இல்லை ! இந்தத் தடவையே நீங்கள் வந்து விடுங்கள் . உங்கள்கூட்டம் ஒன்றாகச் சேர்ந்து வந்தால் கண்டிப்பாக என் படகு மூழ்கிவிடும்” என்று எதிர் பதில் சொன்னான்.

“தரணி, அது மூழ்க வேண்டுமென்றால் வயதான பெண்களுடன் மூழ்கட்டும்.அவர்கள் எல்லோரும் பத்து, பன்னிரண்டு தடவை கங்கையில் குளித்திருக்கின்றனர்; அவர்கள் நேரடியாக சொர்க்கத்துக்குப் போவார்கள் என்பதால் அவர்கள் சாவைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். என்னுடைய முதல் யாத்திரை இதுதான் “ என்று அந்தப் பெண் சொன்னாள்.

“பெண்ணே , கங்கை அலைகளைப் பற்றிய உன் கற்பனை போதும்” என்று சொல்லிவிட்டு படகிற்குள் குதித்தான். அவனுடைய தோழன் காலாசந்த் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கினான்.

“கடவுளே காப்பாற்று “ என்று சொல்லிக் கொண்டே தரணி ஆற்றில் படகைச் செலுத்தினான்.அவனுடைய அந்தக் குரல் கரையின் இரண்டு பக்கங்களிலும் எதிரொலிக்க, வேகமாகப் பாயும் ஆறும் அதற்கு பதிலளித்து மெலிதாகச் சிரிப்பது போலிருந்தது.

“காலா சுக்கானைச் சிறிது கெட்டியாக உன்னால் பிடிக்கமுடியாதா ? நீ சோறு சாப்பிடுவதில்லை போலும்;உன்னால் அந்த வேகமான நீரோட்டத்தைப்  பார்க்கமுடியவில்லையா ?” என்று தரிணி உறுமினான்.

தரிணி சொன்னது சரிதான். மயூராக்ஷி தனது வேகமான நீரோட்டத்திற்குப் பெயர் போனவள். ஓர் ஆண்டில்  ஏழு ,எட்டு மாதங்கள் அந்த ஆறு ஒரு பாலைவனம்தான்— ஒன்று ஒன்றரை மைல் வரை கரைக்குக் கரை மண் பரவிக் கிடக்கும். ஆனால் மழை வந்துவிட்டால் அவள் அசுர பலம் பெற்று நான்கு, ஐந்து  மைல் வரை விரிந்து, ஆழமான சாம்பல் நிற நீரால் எல்லாவற்றையும்  மூழ்கடித்து விடுவாள். எப்போதாவது ஒரு முறை ஆறிலிருந்து ஏழு முழம் வரையான ஆழத்தில் வரும் ஹர்பா வெள்ளம், அருகிலுள்ள கிராமங்களின் வீடுகளை,களஞ்சியங்களை  அழித்து விடும். எனினும் இது அடிக்கடி நடப்பதில்லை. கடைசியாக நடந்தது இருபது வருடங்களுக்கு  முன்னால் .

சூரியன் இப்போது தகிக்க, ஒரு பயணி தன்குடையை விரித்தார். ”உங்கள் பயணத்தை நிறுத்தி விடாதீர்கள் தாக்கூர். காற்றில் நீங்கள் பறந்து விடுவீர்கள் ’என்று தரணி அறிவுறுத்தினான்.அவர் தன் குடையை மூடி விட்டார்.

ஆற்றிலிருந்து திடீரென்று கிரீச்சொலி வர, படகிலிருந்த எல்லோரும் பீதியடைந்து சுற்றி வரப் பார்த்தனர். “எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள். ஒல்குரா கரையருகே ஒரு படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது…

பாட்டி , ஏன் பயந்து நடுங்கிறாய் ? தாக்கூர் ,அவளை கவனித்துக்கொள்ளுங்கள். பயப்பட ஒன்றுமேயில்லை; நாம் அருகே வந்து விட்டோம். காலா, இந்த துடுப்பைப் பிடித்துக் கொள், கவனமாக இரு” என்று சொன்னான் தரிணி. அடுத்த கணம் ஆற்றுத் தண்ணீரில் குதித்து மூழ்கிக் கொண்டிருந்த படகை நோக்கி நீந்தினான்.

“தரிணி போய் விட்டாரே,நாம் என்ன செய்வோம்?“ என்று வயதான பெண்கள் புலம்பத் தொடங்கினர்.

“எல்லோரும் பேசாமலிருங்கள். அவரைக் கூப்பிட வேண்டாம். அல்லதுநீங்களும் இறந்து போய் விடுவீர்கள்“ என்று அவர்களை அடக்கினான் காலாசந்த்.

கடந்து போகும் சாம்பல் நிற நீரில் ஏதோ ஒரு பொருள் மூழ்கியும், மீண்டும் வெளியே வருவதுமாக இருந்தததைப் பார்க்க முடிந்தது. அதை நோக்கி தரிணி வேகமாக நீந்தினான்.அருகில் சென்றவுடன், அதைப் பிடிப்பதற்காக மூழ்கி, வெளியே வரும்போது ஒரு கையால் எதையோஇழுத்துக் கொண்டும் , மறுகையால் நீந்தியும் வந்தான்.

கரையிலுள்ள கூட்டம் ஒருவித பயத்தோடும், பதற்றத்தோடும் தரிணியை கவனித்துக் கொண்டிருந்தது.ஒரு நிமிடத்தில் ’’கடவுள் காப்பாற்றிவிட்டார் “என்று கூட்டம் கத்தியது.

“எல்லாம் சரியாகி விட்டதா ? எல்லாம் சரியாகி விட்டதா?” என்று மற்றொரு கரையிலிருந்தவர்கள் குரல் கொடுத்தனர். காலாசந்த் தரிணியை நெருங்கினான்.

தரிணி அதிர்ஷ்டக்காரன். அவன் காப்பாற்றிய பெண் அந்தப் பகுதியில் வாழும் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் பயணம் செய்த படகு பாதுகாப்பாக இருந்தது;ஆனால் அவள் படகின் விளிம்பில் உட்கார நகர்ந்தபோது, முகத்திலிருந்த நீண்ட முகத்திரை காலில் சுற்றிக் கொள்ள அவள் தவறி விழுந்து விட்டாள். சிறிய அளவு தண்ணீரையே அவள் குடித்திருந்ததால் விரைவில் மயக்க நிலையிலிருந்து வெளிக்கொண்டு வர முடிந்தது.

பதினாறு வயதிருக்கலாம்,அழகாக இருந்தாள். தோடு, மூக்குத்தி, வளையல்கள்,நெக்லஸ் என்று பல நகைகள் அணிந்திருந்தாள். அவள் கணவனும், மாமனாரும் அந்த இடத்திற்கு வந்த போது அவள் இன்னமும் மூச்சுத்திணறிக் கொண்டிருந்தாள். தரிணி குனிந்து அவர்களிருவரையும் வணங்கினான். அவள் வேகமாகத் தன் புடவையால் முகத்தை மூடிக்கொண்டாள். “அதிகம் கூச்சப்படாதீர்கள் .கொஞ்சம் நிதானமாக மூச்சு விடுங்கள் தாயே . உங்கள் கூச்சம்தான் தொந்தரவை வரவழைத்திருக்கிறது.”என்றான் தரிணி.

“ சொல் தரிணி, வெகுமதியாக உனக்கு என்ன வேண்டும் ?” என்று மாமனார் கேட்டார்.

அவன் தன் தலையைச் சொறிந்து கொண்டு “ஒரு ஒயின் குடிக்க காசு தாருங்கள்; எட்டணா ” என்று முணுமுணுத்தான்.

“முட்டாள் மாதிரி பேசாதே. ஏதாவது விலையுயர்ந்த பொருளைக் கேட்க முடியாதா உன்னால் ?”என்று கூட்டத்திலிருந்து சபி சொன்னாள்.

“எனக்கு ஒரு பெரிய மூக்குத்தி தாருங்கள் ஐயா “ என்று அந்தச் சூழ்நிலையை அப்போதுதான் அறிந்தவன் போல சங்கடமான புன்னகையுடன் சொன்னான்.

“ஆமாம். தரிணி.  மூக்கை அலங்கரிக்கும் அதைப் போட்டுக்கொண்டு உன் மனைவி அசைந்து அசைந்து பேசும் போது அது எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா?” அந்த நகைச்சுவையைக் கேட்டு கூட்டம் சிரித்தது.

காப்பாற்றப்பட்ட அந்தப் பெண்  தன் கையை நீட்டிய போதுஉள்ளங்கையில் ஒரு தங்க மூக்குத்தி இருந்தது. காலைச் சூரியனில் அது பளபளத்தது.

“தசராவின் போது எங்கள் வீட்டுக்கு வா தரிணி .உனக்கு வேட்டியும் துண்டும் தருகிறேன். இந்தா ஐந்து ரூபாய் “ என்று அந்தப் பெண்ணின் மாமனார் சொன்னார்.

“ஐயா, எனக்கு வேட்டி தருவதற்கு பதிலாக  என் மனைவிக்குஒரு சேலை தந்தால்…” குனிந்து வணங்கியபடி தரிணி முணுமுணுத்தான்.

“சரி, உனக்கு ஒரு சேலை கிடைக்கும்” என்று சொல்லிச் சிரித்தார்.

“ உன் மனைவியை நாங்கள் பார்க்க வேண்டும், தரிணி “ கட்டுப்படுத்த முடியாமல் சபி சொன்னாள்.

“அவளைப் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை ,பார்ப்பதற்கு ஒன்றுமில்லை தாயே , அவள் கறுப்பாக ,அவலட்சணமாக இருப்பாள் “ என்றான் தரிணி.

அன்றிரவு தரிணி தன் வீட்டிற்கு முழு போதையோடு போனான். போகும் வழியில் “காலா, யார் இந்த குழிகளையெல்லாம் தோண்டியது ? குழிகள் குழிகள் எங்கும்..” என்று போகும் வழியில் காலாசந்திடம் உளறிக்கொண்டேபோனான். காலாவும் அதிக அளவு குடித்திருந்ததால், அவனும் ஒப்புதலாக ஏதோ முணுமுணுத்தான்.

“வா நீந்திக் கொண்டே வீட்டுக்குப் போய்விடலாம். இந்தக் குழிகளில் எல்லாம் தண்ணீர் நிரம்பிக் கிடப்பதை நீ பார்க்கவில்லையா…ஆனால் இங்கு தண்ணீரே இல்லை—சமமாக இருக்கிறது. என்ன சிக்கல் காலா?” என்று கேட்டான். பதிலில்லை.நீச்சலடிப்பது போல தன் கைகளை அசைத்துக் கொண்டே மேலே நடந்தான்.

அவன் குடிசை கிராமத்தின் எல்லையிலிருந்தது. அவன் மனைவி சுகி கையில் விளக்கோடு அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் மூக்குத்தியைப் பற்றி பாட்டுப் பாட முயற்சித்தான், ஆனால் சுகி “சத்தம் போட்டது போதும், வந்து சாப்பிடு—உணவு குளிர்ந்தும் ,விறைத்தும் போய்விட்டது. “என்றாள்.

தரிணி அவளைத் தள்ளினான்.”சாப்பாடு !சாப்பாடு !அதை விடு..முதலில் நீ அந்த மூக்குத்தியை அணிந்து கொள்ள வேண்டும்… நான் அதை எங்கேவைத்தேன்?” இடுப்பைச் சுற்றியுள்ள வேட்டியின் முடிச்சில் ஆட்டம் கண்ட விரல்களைக் கொண்டு தேடினான்.

“வரப்போகிற நாட்களில் நீ யாரோ ஒருவரைக் காப்பாற்றப் போய்  உன்னையே தொலைத்து விடப்போகிறாய், அப்படி நடக்கும் போது நான் தூக்கில் தொங்கிவிடுவேன் ” ஏற்கனவே காலையில் நடந்த அருமைச் செயலைக் கேள்விப்பட்டிருந்த சுகி சொன்னாள்.

“நான் என்ன செய்தேன் ?” தரிணி குழம்பியவனாகக் கேட்டான்.

“மிக மோசமான வெள்ளம்.. நீ …”

அந்த மழையின் கருமை இரவில் அவனுடைய சத்தமான சிரிப்பு திடுக்குற வைத்தது..“யாராவது தன் அம்மாவிற்கு பயப்படுவார்களா? மயுராக்ஷி என்னுடைய அம்மா,இல்லையா? எனக்குக் கிடைக்கும் இந்த சாப்பாடு அவளால்தான்,இல்லையா ?”

சுகி அவனை கவனிக்காமல் அவன் உணவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான் சொல்வதை நீ ஏன் கேட்கக்கூடாது? நீ இப்போதே என்னுடன் வா. ஆற்றைப் போய்ப் பார்க்கலாம்.” தரிணி சமையலறையிலிருந்த சுகியின் பின்னால் போய்க் கத்தினான்.

“ஏதாவது உளறி என்னைக் கவலைப்படுத்தாதே  “என்றாள்.

“நீ வரவேண்டும்.ஆமாம், ஒரு நூறு தடவை சொல்வேன்,ஆமாம். நாம் ஆற்றிற்குப் போகலாம்.உன்னை என் முதுகில் வைத்துக் கொண்டு குதிப்பேன் , பிறகு பஞ்சதுபி மலை  கரைக்கு நாம் வந்துவிடலாம்.”

“ஆமாம், அது சரி, அது சரி ஆனால் அதற்கு முதலில் நீ சாப்பிட்டு முடிக்க வேண்டும்“ என்று சமாதானப் படுத்தினாள்.

தரிணி மீண்டும் கத்த  நினைத்து , ஆனால் தலையை கதவில் மோதிக் கொண்டான், சிறிது தெளிவடைந்தான். “சில பசுக்களை நான்அந்தச் சமயத்தில்  காப்பாற்றவில்லையா, மோசக்காரன் மதன் காப் பதினைந்து ரூபாய் தராமல் ஏமாற்றி விட்டான்—பதினைந்து ரூபாய்! அது பெரிய அளவு பணம்; இருபதுக்கு ஐந்து ரூபாய் குறைவு .அந்த வளையல்களை யார் உனக்குத் தந்தது ?சொல் ; உன் எந்த மாமன் அதைத் தந்தான்? அந்த மதன்ஆற்றில் மூழ்கி விட்டால், அவனைக் காப்பாற்றுவதற்கு முன்னால் நான் அவன் வாயில் எதையாவது  அடைப்பேன், அதை நிச்சயம் செய்வேன். “

சாப்பிட்டுக் கொண்டே பேசினான்.இதற்கிடையே சுகி அவன் இடுப்பு முடிச்சைத் தளர்த்திய போது அங்கு மூக்குத்தியும், மூன்று ரூபாயுமிருந்ததைப் பார்த்தாள்.

“மீதம் இரண்டு ரூபாயை என்ன செய்தாய் ?” விசாரணை செய்தாள்.

“ஓ,அதைக் காலாவிடம் கொடுத்தேன் . அவன் என்னுடன் அங்கிருந்தான். அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளச் சொன்னேன் “அவன் குரலில் குற்றவுணர்வு வெளிப்பட்டது.

அவன் எங்கே போயிருந்தான் என்று சுகிக்குத் தெரியும், ஆனால் எதுவும் சொல்லவில்லை.அவளுக்கு  கடுமையான  வார்த்தைகள் பேசிப் பழக்கமில்லை. தரிணி மீண்டும் ஆரம்பித்தான் :”அந்தச் சமயம் –உனக்கு நினைவிருக்கிறதா? நீ உடல் நலமில்லாமல் இருந்தாய்; நான் படகோட்டப்போகவில்லை. போலீஸ் அதிகாரியால் கரை கடந்து போகமுடியாததால் நான் அழைக்கப்பட்டேன். நான் கொடுத்த சில தகவல்களால் உனக்கு அந்தத் தோடு கிடைத்தது.இல்லையா? ஆறு எப்போதும் எனக்கு சாதகமாகவே இருந்திருக்கிறது.”

“கொஞ்சம் இரு. இந்த மூக்குத்தியைப் போட்டுப் பார்க்கிறேன் “என்றாள் சுகி.

மகிழ்ச்சியடைந்த தரிணி உளறுவதை நிறுத்தினான். சிறிய கண்ணாடியைக் கையில் வைத்துக் கொண்டு தன்னை அவள் அலங்கரித்துக் கொண்டபோது சாப்பிடுவதை மறந்து விட்டு அவளையே பார்த்தபடி இருந்தான். அவள் அலங்கரித்துக் கொண்ட பிறகு, தன் கையைக் கழுவாமலேயே லாந்தரை உயர்த்தி “எங்கே என்னைப்பார் , சுகி “ என்றான்.

அவள் முகம் மகிழ்ச்சியால் மெருகேறியிருந்தது. சாபித்ரியிடம் தரிணி சொன்னது பொய்தான். சுகி மெலிதான தோற்றமும் ,அழகும்கொண்டவள்.அத்தனை கருமையுமில்லை. அவளை நினைத்து அவனுக்குப் பெருமையும், மகிழ்ச்சியுமாகஇருந்தது.

படகோட்டி சொன்னது சரிதான். மயுராக்ஷிதான் அவனை வாழவைத்தவள்.எல்லா வருடங்களிலும் அவன் தசரா நாளில் ஆற்றை வணங்குவான். இந்தவருடமும் வழக்கம் போல வணங்கினான்.கோஷ் பரிசாகத் தந்த புதிய வேட்டி, புடவையை இருவரும் அணிந்திருந்தனர். மழை இன்னும் ஆரம்பிக்கவில்லை; கோடை காலச் சூரிய ஒளியில் ஆற்று மண் மின்னிக்கொண்டிருந்தது. “ஆற்றுத் தாயை நன்றாக கும்பிட்டுக் கொள். நல்ல மழை,வெள்ளம் ஆகியவற்றை அவள் தரவேண்டும் -–விவசாயிகள் நன்றாக வாழ வேண்டும். இல்லையா?” என்று போக்பூர் கிராமத்தைச் சேர்ந்த கேஸ்தோ தாஸ் சொன்னான்.

இரு கரைகளிலும் ஆறு பொங்கிப், பொங்கிப் பாய்ந்திருந்த வண்டல் குவியலில் பொன்னிறப் பயிர்கள் வளர்ந்திருந்தன.

’நீ சொல்வது சரிதான். ஜனங்கள் என்ன சொல்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? வெள்ளம் வரவேண்டுமென்று நான் ஆற்றை வணங்குகிறேனாம். ஆறுதான் நம் தாய், நம் நிலத்திற்குச் செல்வம் தருபவள் என்பதை அந்த அறிவிலிகள் மறந்து விடுகின்றனர் “என்று சிரித்துக் கொண்டே சொன்னான். பலியாகப் போகும் ஆட்டின் மீது அவன் பார்வை போனது.

“காலா, ஆடு ஓடி விடாமல் பார்த்துக் கொள் “ என்றான். தகிக்கிற அந்த ஆற்று மணல் பிடிக்காமல் ஆடு தவித்தது..

பூஜை முடிந்து விட்டது.காலாவும்,தரிணியும் ஏகமாய்க் குடித்திருந்தனர்.

“இந்த முறை யாராவது தண்ணீரில் மூழ்கி விட்டால் , நான் தான் போய்க் காப்பாற்றி, சன்மானம் பெறுவேன் . ஆமாம் நான்தான் “என்றான் காலா.

 “என்ன ! தண்ணீரிலிருந்து மனிதர்களைக் காலா காப்பாற்றுவான். ஹா ..ஹா!”தரிணி பெரிதாகச் சிரித்தான்.

“என்ன சொன்னாய் நீ ?” காயம் பட்ட  குரலில் காலா கத்தினான்.

அவனோடு சண்டை போட தரிணி தயாரானபோது ,சுகி குறுக்கிட்டு சமாதானம் சொன்னாள். ” பக்கூர் மரம் இருக்கிற இடம்வரையில், வெள்ளம் வந்து யாராவது மூழ்கி விட்டால் நீ காப்பாற்ற வேண்டும். “என்று கணவனிடமும், “அந்த எல்லை கடந்து விட்டால் நீ காப்பாற்றலாம்” என்று மற்றவனிடமும்  சொன்னாள்.

குடி போதை உச்சத்தின்  நன்றியுணர்வில், காலா அழுகையோடு சுகியின் புழுதி படர்ந்தபாதங்களைத் தொட்டு “ அக்கா ,நீங்கள் மிகவும் நல்லவர்கள், உங்களைப் போல யாரும் இருக்க முடியாது “என்றான்.

அடுத்த நாள் காலை இருவரும் படகைப் பழுது பார்த்தனர்.இருட்டும் வரை வேலை செய்து புதுப் படகு போலாக்கி விட்டனர்.ஆனால் சுட்டெரிக்கும் சூரியன் அதில் விரிசல் விழச் செய்து விட்டது. அந்த மாதம் முழுவதும் வெள்ளம் வரவேயில்லை. மண்ணை ஈரமாக்கும் அளவிற்குகூட மழையில்லை. பேரிடர் வானத்தில் இருந்தது; மிகச் சன்னமான சோகமான அழுகை பூமியிலிருந்து எழுவதை ஒருவரால் கேட்க முடியும்.

அல்லது ஒருவேளை பேரிடர்  எங்காவதுஅருகில் வந்திருந்து தன் முன்னுணர்வை அனுப்பியிருக்கலாம். தரிணிக்குச் சம்பாத்தியமேயில்லை. சில சிறு அதிகாரிகள் மணலில் சைக்கிள்களைத் தூக்கிச் செல்வதற்கு அவனுக்குச் சில நாணயங்கள் கொடுத்திருந்தாலும் அது அவன் சரக்கிற்குக் கூடப் போதவில்லை.ஏதாவது கஷ்டம் இருக்கிறதா என்று கேட்பதற்கு அடிக்கடி அதிகாரிகள் வந்தனர்.ஆனால் உலர்ந்து போனசில சிகரெட்டுகள் தவிர அவர்களிடமிருந்து வேறெதுவும் கிடைக்கவில்லை.

அடுத்த மாதத்தில் மழை வந்தது. சிராவணம். தரிணி நிம்மதியாக மூச்சுவிட்டு ஆற்றில் குதித்து  சிறுவனின் உற்சாக மனநிலையோடு  நீந்தினான். அடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு தண்ணீர் முழங்கால் அளவே இருந்தது. தரிணியும் ,காலாவும் படகை மரத்தில் கட்டி விட்டு யாராவதுஅக்கரை போவதற்கு வருவார்கள் அவர்களோடு படகில் போகலாம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர்.

மாலையாகி விட்டபோதும் யாரும் வரவில்லை.” மிக வேடிக்கைதான் இது. இல்லையா  காலா ?” தரிணி கேட்டான்.

“ஆமாம்.இப்படியான ஒரு நிலையை என் வாழ்க்கையில் நான் சந்தித்ததேயில்லை.” என்று குழப்பமான குரலில் காலா சொன்னான்.

“மேற்கு வானத்தைப் பார். நீலமாக இருக்கிறது; ஒரு மேகம் கூட எங்குமில்லை.வானத்தில் ஒரு சத்தமுமில்லை ” என்றான் தரிணி.

“ஆமாம்.ஆமாம் “காலா ஒப்புக் கொண்டான்.

“ஆமாம்! ஆமாம்! ஆமாம் !நீ சொல்வதைக் கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது” திடீரென்ற வெறியில் தன் சினேகிதனை அறைந்தான்.

காலாசந்த் ஒருவித சங்கடமான தன்மையில் தரிணியை வெறித்தான். அவனுக்குக் கோபம் கூட வரவில்லை. இவ்வளவு நேரம் தான் அங்கிருந்திருக்கக் கூடாதென்று நினைத்துக் கொண்டே தரணி உட்கார்ந்திருந்தான்.சிறிது நேரம் கழித்து திடீரெனத் திரும்பினான், ”காலா ,காற்றின் திசை மாறிவிட்டது. மேற்கிலிருந்து வருகிறதா…நான் பார்க்கிறேன்..”அது மேற்குக் காற்றா என்றறிய கை முழுக்க மண்ணை எடுத்து மெதுவாகக் கொட்டினான். “ ம்ம்..இது மேற்கிலிருந்துதான் வருகிறது.வா ,காலா .என்னிடம் இரண்டணா இருக்கிறது. நான் சுகியின் புடவைச் சுருக்கிலிருந்து  எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். நாம் சிறிது சாராயம் குடிக்கலாம்” என்றான்.

காலா அந்த அழைப்பால் மகிழ்ச்சியடைந்தான்.” உன் மனைவியிடம் சிறிது பணமிருக்கிறது அண்ணா.நீ வீட்டுக்குப் போனால் உனக்குசாப்பாடிருக்கும். ஆனால்.. நான் ..எனக்கு..”

“சுகி நல்ல பெண் ,காலா மிக நல்லபெண். அவளில்லாவிட்டால் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது.என் சகோதரன் திருமணம் செய்து கொண்ட போது ..”

“ஒரு நிமிடம் அண்ணா, நான் அங்கேயிருக்கிற நொங்கை எடுத்துவருகிறேன்“காலா கத்திக் கொண்டே அந்தப் பனைமரத்தடியை வேகமாக ஓடினான்.

ஒரு சின்னக் கூட்டம்  மரத்தடியில் கூடியிருந்தது.

’நீங்கள் எல்லோரும் எங்கிருந்து வருகிறீர்கள்?எங்கே போகிறீர்கள்?” தரிணி விசாரித்தான்.

“பீர்சந்பூரிலிருந்து வரும் நாங்கள் புர்த்வான் போகிறோம். அங்கே வேலை கிடைக்கும் என்று நம்புகிறோம்.”

“புர்த்வானிலும் நல்ல மழை பெய்திருக்கிறதா?”

“இல்லை .அங்கு அதிக மழையில்லை. ஆனால் நீர்ப்பாசனத்திற்கான கால்வாய் இருக்கிறது.”

பெருந்துன்பம் விரைவில் ஆரம்பமாகிவிட்டது.கடுமையான உஷ்ணத்தால் பூமி பிளந்து, தன் கோரமுகத்தைக் காட்டியது. தானியங்களைத்தங்களிடம் சேமித்து வைத்திருந்த விவசாயிகள் வாடிக்கையாளர்களுக்கு அதைத் தராமல் கதவடைத்தனர். ஏழை உழைப்பாளிகள் பட்டினியில் தவித்தனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

அன்று காலை தரணி ஆற்றின் பக்கம் போனான். காலாசந்த் அங்கில்லை. பொழுதேறிய போதும் காலாசந்த் வரவில்லை. தரிணி அவன் குடிசைக்குச் சென்று பெயர் சொல்லிக் கூப்பாடு போட்டான்,ஆனால் பதில் எதுவுமில்லை.அவன் குடிசைக்குள் நுழைந்து பார்த்த போது அங்கு யாருமேயில்லை. அடுத்த குடிசையிலும் அதே கதைதான். முழு கிராமமும் போய்விட்டதாகத் தெரிந்தது.பல இடங்களில் விசாரித்த போது அங்கிருந்தவர்கள் எல்லோருமே முதல் நாளிரவே அந்தப் பகுதியை விட்டு வெளியேறியதாகத் தகவல் கிடைத்தது.

“உனக்குத் தெரியுமா ,தரணி ,  அவனிடம் போக வேண்டாம் என்று திரும்பத் திரும்பச் சொன்னேன். அவன் கேட்கவில்லை. ஒரு பணக்கார கிராமப் பகுதிக்குப் போய்ப் பிச்சை எடுக்கப் போவதாகச் சொன்னான்” என்றான் ஹரி மாண்டோல்.

துக்கம் தொண்டையை அடைக்க தரிணி எதுவும் பேச முடியாமல் நின்றான்.

“இந்த நாட்டில் யாராவது பணக்காரர்கள் இருக்கிறார்களா?” ஹரி தொடர்ந்தான். “அவர்கள் எல்லோரும் போய் விட்டனர். சிலர் மிக மோசமான நிலையில் இருந்தார்கள்—அவர்கள் பசியில் பரிதவிப்பார்கள், ஆனால் தங்களுடைய கௌரவம் கருதி அமைதியாக இருப்பார்கள். பலாஸ்தங்காவில் ஒருவர் கயிற்றால் தன் கழுத்தை இறுக்கிக் கொண்டு விட்டார்.சாப்பிட அவருக்கு எதுவுமேயில்லை,பாவம்.”

அடுத்த நாள் தரிணியின் கண்ணில் ஓர் அதிர்ச்சியான காட்சி பட்டது. அது ஒரு முதிய பெண்ணின் சடலம். இரவில் அவளுடைய கைகால்களை நாய்களும், நரிகளும் தின்றிருந்தன.தரிணியால் அவளை அடையாளம் காணமுடிந்தது; அவள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தவள். முதல் நாளிரவு அந்தக் குடும்பம் – சக்கிலியர்கள்—அவளைவிட்டு விட்டு வெளியேறியிருக்கவேண்டும்.

அவன் தாமதிக்காமல் நேரடியாகத் தன் வீட்டிற்குப் போனான். ”உன் நகைகளையும், புடவைகளையும் இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொண்டு புறப்படு சுகி. இங்கிருந்து நாம் போய்விடலாம். டவுனில் நமக்கு வேலைகிடைக்கலாம் “என்று சொன்னான்.

அவர்கள் சாலையை அடைந்த போது ,சுகியிடம் எந்த ஆபரணங்களும் இல்லாததை கவனித்தான். ஆச்சர்யமடைந்து, அவளிடம் கேட்டான்.

“இவ்வளவு நாட்கள் நான் எப்படிச் சமாளித்தேன் என்று நினைத்தாய் ?” என்று வறட்சியாகச் சிரித்தபடி சுகி கேட்டாள்.

மூன்று நாட்கள் அலைந்து இறுதியில் ஒரு கிராமத்தின் எல்லையை அடைந்தனர். பக்கத்து மரத்திலிருந்து விழுந்த இரண்டு கனிந்த  பழங்கள் அவர்களின் இரவு உணவானது.

“ஒரு நிமிடம் உன் துண்டைத் தா “என்றான் தரிணி.அதை ஒரு கிளையில் தொங்க விட்டு காற்றின் திசையை அறிய அதை உன்னிப்பாகக் கவனித்தான். வைகறையிலும்அவன் அதே இடத்தில், அதே நிலையில் உட்கார்ந்து கொண்டிருந்ததை சுகி பார்த்தாள்.

“நீ தூங்கவே இல்லையா? நீ உடல்நலம் குன்றிப் படுத்து விட்டால் எனக்கு எவ்வளவு நன்றாக  இருக்கும்? உன்னைப் போல ஒரு மனிதன் ஏன் தன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் ?” என்று வசையாகக் கேட்டாள்.

தரிணி அவளை பொருட்படுத்தாமல் “நீ அதைப் பார்த்தாயா சுகி ?” என்று கேட்டான்.

“என்ன ? எனக்கு ஒன்றும் புரியவில்லை; உண்மையில் புரியவில்லை.”

“அங்கே பார், எறும்புகள் வாயில் தம் முட்டைகளைக் கவ்விக் கொண்டு மரங்களின் மேல் ஏறிக் கொண்டிருக்கின்றன. மழை பெய்யப் போகிறது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். “

“உனக்கென்று சில வேடிக்கையான எண்ணங்கள் ” சுகி சொன்னாள்.

“உனக்குப் புரியவில்லையா சுகி ? எறும்புகளுக்கு மழை வருமென்ற உள்ளுணர்வு ஏற்படும் போது அவை மரங்களின் மேல் போகின்றன. பார், மேற்கிலிருந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.”

“ஆனால் வானம் உலர்ந்தும், பிரகாசமாகவும் இருக்கிறதே. உன்எண்ணங்கள் வினோதமானவைதான்.“

தரிணி தொலைவிலுள்ள அடிவானத்தை வெறித்தான். ”மேகங்கள் கூடி வருவதற்கு அதிக நேரமாகாது. காகங்கள் உலர்ந்த சுள்ளிகளைப் பொறுக்கித் தம் கூடுகளுக்கு வலுச்சேர்ப்பதைப் பார். மழை பெய்கிறதா என்றுபார்த்துக் கொண்டு நாம் இங்கேயே இருப்போம் சுகி.”

படகோட்டியின் ஆழமான அனுபவப் பார்வை பொய்க்கவில்லை.

மாலையில் வானத்தில்மேகங்கள் சூழ்ந்தன.மேற்குக் காற்று கடுமையாக வீசத் தொடங்கியது.

“எழுந்திரு சுகி, நாம் திரும்பிப் போய் விடலாம். “

“இந்த நேரத்திலா ?”

“ இருட்டைக் கண்டு நீ பயப்படுகிறாயா? நான் உன்னுடன் இருக்கிறேனே ? தலையில் தொப்பியைப் போட்டுக் கொள். மழைத்துளிகள் அபாயமானவை.”

“நீ என்ன செய்வாய் ?உன் உடம்பு கல்லால் ஆனதா?” சுகி கேட்டாள்

“ஆமாம்.மழை எனது நண்பன். நான் சூரியனில் குளிர் காய்வேன். மழையில்களிப்படைவேன். அந்தச் சுமைகளை  என்னிடம் கொடு ,வா போகலாம். ”

சிறிது நேரம் மழை பெரிதாகப் பெய்தது, காற்று நின்று விட்டது. மழை குறைந்தது.ஆனால் மீண்டும் காற்று பலமாகிப் பெருவெள்ளமாக மழை கொட்டியது.

போவதற்கு மூன்று நாட்கள் ஆனபோதும் அவர்கள் இரண்டு நாட்களுக்குள் வீடு திரும்பி விட்டனர். மாலையில் ஆற்றைப் பார்ப்பதற்கு தரிணி போனான்.திரும்பி வந்தவன் கரை கடந்து தண்ணீர் பொங்கி வழிவதாகச் சுகியிடம் சொல்லி மகிழ்ந்தான்.

அடுத்த நாள் காலை வானம் கருமையாகவும், கனமாகவுமிருந்தது. பலமானகாற்று வீச, மழை கொட்டியது.தரிணி ஆற்றுப் பக்கம் போனான். மதியம் திரும்பி வந்தவன்  சுகியிடம் “நான் உடனடியாக உலைப் பட்டறைக்குப் போகவேண்டும்”என்றான்

“சாப்பிட்டு விட்டுப் போ “ சுகி பதட்டத்தோடு சொன்னாள்

“படகிற்குப் புதிய முளை தேவைப்படுகிறது. தண்ணீர் மட்டம் உயர்ந்துகொண்டே போகிறது. சாதாரண நேரமாக இருந்தால் நானே சரிசெய்து விடுவேன்.வா,ஆற்றைப் போய்ப் பார்ப்போம் “அவளை இழுத்துக் கொண்டு போனான்.

மயுராக்ஷியின்கொந்தளிக்கும் அழகு கவர்ந்திழுப்பதாக இருந்தது. ஆற்றின் மற்றொரு கரை கண்ணுக்குத்  தெரியவேயில்லை. தண்ணீர் குங்கும நிறத்திலிருக்க, அலைகளிலிருந்து வெளிப்பட்ட வெள்ளை நுரை பூக்களின் தொகுதிகளை விசிறியடிப்பது போலிருந்தது. “அவளுடைய இரைச்சல் உனக்குக் கேட்கிறதா சுகி?அது இன்னும் மிக மோசமாகி விடும். நீ வீட்டிற்குப் போ, நான் எப்படியாவது நாளை…படகை எடுத்தாக வேண்டும்.”

“இந்தப் பருவ நிலையில், உன்னால் போக முடியாது “ஆனால் தரிணி அதைக் கேட்காமல் புறப்பட்டான். இருட்டிய பிறகு அவன் வீடு திரும்பினான், முகத்தில் கவலை அப்பிக்கிடந்தது. டுக் ! டுக் ! டுக்! அது என்ன ? ஆமாம், அதற்கு என்ன அர்த்தமென்று அவனுக்குத் தெரியும். வரவிருக்கும் அபாயம். வந்து கொண்டிருக்கும் வெள்ளம் அவன் தொழிலுக்கு ஆதாயமான ஒன்றல்ல.

கிராமத்தை அடையவேண்டுமென்றால் எவ்விதத் தொந்தரவும் தராத மயுராக்ஷி கிளையாற்றின் மேலான மூங்கில் பாலத்தை அவன் கடந்தாக வேண்டும். பொதுவாகக் கண்ணை மூடிக் கொண்டு வீடு போய் விடும் தரிணிக்கு இன்று மூங்கில் பாலமே கண்ணுக்குத் தெரியவில்லை. எங்கே அது இருந்திருக்கவேண்டுமோ அந்த இடத்தில் எண்ணெய் கலந்த தண்ணீர் இருந்தது. ஈரமாகி விடாமலிருக்கத் தன் வேட்டியை மேலே இழுத்துக் கொண்டான் .பயம் தருகிற இரைச்சல்,காற்றின் ஒசை, வேகமாகப் பெருகி வரும் தண்ணீரின் சப்தம் ஆகியவற்றை அவனால் கேட்க முடிந்தது.

புழுக்கள் அவன் மேல் ஊறின;பூமியின் அடியிலிருந்த அவைகள் கூடத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் வேகமாக வெளியே வந்தன.

தரிணி தண்ணீரில் குதித்து நீந்தினான். ஆனால் எல்லா இடத்திலும் இடுப்பளவு தண்ணீரிருந்தது. வெளியேறி விட வேண்டுமென்ற முன்னெச்சரிக்கை உணர்வில் சில கிராமவாசிகள் உதவிக்காக ஒருவரை ஒருவர் அழைத்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர். பசுக்களும், ஆடுகளும், நாய்களும் கூட வேதனையில் முனகிக் கொண்டிருந்தன, இவை எல்லாவற்றிற்கும் மேலாக மயுராக்ஷியின் கொந்தளிப்பு, மழையின் சத்தம், காற்றின்கோரமான சிரிப்பு ..கொள்ளையடித்துப் பயமுறுத்தும் கொள்ளையர்கள் தங்களின் பலியாடுகளைப் பார்த்துக்கொக்கரிப்பது  போல இருந்தது.

இருட்டில் எதையும் பார்க்க முடியவில்லை. தரிணியின் பாதங்களை விலங்கு போன்ற ஏதோ ஒன்று தொட்டது. அவன் குனிந்து அதைக் கையில் எடுத்தான்—ஆட்டுக்குட்டி செத்திருந்தது. அதைத் தூக்கியெறிந்தான்.எப்படியோ தன் வீட்டை அடைந்து “சுகி ..சுகி.. எங்கேயிருக்கிறாய்?” கத்தினான்.

“நான் இங்கே இருக்கிறேன்…வா.. “சுகியின் குரல் கேட்டது. அவன் கடவுளருக்கு நன்றி சொன்னான்.

அந்தச் சிறிய முற்றத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தது. முழங்கால் அளவுத் தண்ணீரில் கண்களில் பயம் தெரிய,தலைக்கு மேலுள்ள மூங்கிலைப் பிடித்தபடி சுகி நின்றிருந்தாள்,

“வா,வெளியே வா.ஏன் அங்கேயே நிற்கிறாய் ?வீடு ஒரு நிமிடத்தில் இடிந்துவிடும் “ தரிணி அவள் தோளைப் பிடித்திழுத்தான்.

“நான் உனக்காகத்தான் காத்திருந்தேன்.வேறெங்கே நீ என்னைப் பார்க்க முடியும் ?”

சில நொடிகளில் அவர்கள் சாலைக்கு வந்து விட்டனர். இடுப்பளவு தண்ணீர்.“நாம் என்ன செய்யலாம் சுகி ?” தரிணியின் குரல் நடுங்கியது.

“கவலைப்படாதே .எல்லோரும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள் .”

“வெள்ளம் இன்னும் அதிகரித்து விட்டால்? நீ அந்த முழக்கத்தைக் கேட்டாயா ?”

“எனக்குக் கேட்கவில்லை. நாட்டிற்கு என்ன ஆகும்?கடவுள் தன்னுடைய படைப்பைத் தானே அழித்து விடுவாரா  என்ன ?”பெண்ணிற்கேயுரிய எளிய பாவனையில் கேட்டாள்.

புதிரான முன்ஜாக்கிரதை…தரிணி ஆறுதல் தேட விரும்பினான், ஆனால் முடியவில்லை.திடீரென்று தண்ணீர் பெரிதாக விசிறியடித்தது.

“வா, நாம் போய் விடலாம். உன் மார்பளவிற்கு தண்ணீர் இங்கு வந்து விட்டது.”

“உதவி ! “ ஒரு குரல் ஓலமிட்டது. என் குழந்தை போய்விட்டது!என் குழந்தை !என் மகன் !”

“நான் போய்ப் பார்க்கிறேன். நீ இங்கேயே இரு. தயவு செய்து நான் கூப்பிடும் போது பதில் சொல்..”எங்கே குழந்தை “ கேட்டுக் கொண்டே தரணி இருட்டிற்குள் ஊடுருவினான்

“இந்த வழியி்ல்தான்! இந்த வழியில்தான்!”

“நான் வருகிறேன் .”

குரல் சைகைகள் — வார்த்தைகள் என்னவென்றே கண்டுபிடிக்கமுடியவில்லை—பிறகு ஒரே அமைதி. உடனடியாக “சுகி ! சுகி ! என்று தரிணி கத்தினான்.

“நான் இங்கிருக்கிறேன் “தரிணி அவள் குரல் கேட்ட இடத்தை நோக்கிப் போனான்.அவளைப் பார்க்க முடிந்தது. ”சுகி,மிக மோசமாக இருக்கிறது.என் இடுப்பைப் பிடித்துக் கொள்.”

கணவனின் இடுப்பைச் சுற்றியிருந்த வேட்டியை சுகி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.”யாருடைய குழந்தை அது ? உன்னால் அவனைக் காப்பாற்ற முடிந்ததா ?” என்று கேட்டாள்.

“காப்பாற்ற முடிந்தது. அது பூப்தே பல்லாவின் மகன் .”

மிக கவனமாகஅவர்கள் தண்ணீரினூடே நடந்தனர். போகப் போக மிக கடினமாக இருந்தது.”என் முதுகில் ஏறிக் கொள் சுகி “ என்றான்.”ஆனால் நாம் எங்கேயிருக்கிறோம் ?…எங்கே?..அவன் நிறுத்திவிட்டான். ஆழமான தண்ணீரிலிருப்பது தெரிந்தது.”சுகி,எனக்கு பயமாக இருக்கிறது.என் வேட்டியைப் பிடித்துக்கொண்டு மிதக்க முயற்சிசெய்“ மிதந்தபடி சொன்னான்.

அவர்கள்  நீரோட்டத்தில் விரைவாக நகர்ந்தனர். கும்மிருட்டு.காற்றின் சத்தம் ஆற்றின் விசித்திரமான சத்தத்தோடு கலந்தது. எவ்வளவுநேரம் ஆனதென்று தெரியாமலே வைக்கோல் கட்டின் மேல்  மிதந்தனர்.

அவர்களின் கை கால்கள் இறுகத் தொடங்கின; கொடுரமான அலைகள் அவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தின. சுகியின் பிடிவித்தியாசமானதாக இருப்பதாக தரிணி பதட்டப்பட்டான். அவள் கனமாகிக் கொண்டே, மிக கனமாகிக் கொண்டேயிருந்தாள்.

“சுகி!” அவன் திணறலோடு கூப்பிட்டான்.

“உம் “ என்று கலக்கமாக பதில் வந்தது.

“பயப்படாதே “

அடுத்த கணம் தாங்கள் மூழ்குவதை, சுழலில் சுற்றிச் சுற்றி வருவதை அவன் உணர்ந்தான். அவன் தாக்கப்படமாட்டான், அவனால் விரும்பப்படுகிற ஆற்றால் அவன் தாக்கப்பட மாட்டான் என்று நம்பினான். ஆனால் சுகி—தன் முழு பலத்தையும் சேர்த்து  அவளோடு மேல்பரப்பை அடைய நினைத்தான். நீர்ச்சுழி ஒன்று வர, அதிலிருந்து வெளியே வர முயன்றான், ஆனால்சுகி தன் கைகளால் அவனை இறுகத் தழுவியிருந்தாள்.

”சுகி! சுகி! கெஞ்சி அழைத்தான். பதிலேயில்லை.

அவர்கள் மீண்டும் மீண்டும் சுற்றினர். அவர்கள் மூழ்கிக் கொண்டிருந்தனர். சுகியின் தழுவலால் தன் கால்கள் இறுகுவதை தரிணி உணர்ந்தான்.

அவள் உயிரோடிருக்கிறாளா?…அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது…அவனால் அதைப் பொறுக்க முடியவில்லை…. ஒரு கணத்தில் அவன் கைகள் சுகியின் தொண்டையைச் சுற்றின….பித்துப் பிடித்தவனானான். அவனுடைய பலம் முழுவதும் கைகளுக்குள் பாய்ந்து விட்டது.

அவன் சுமையை இறக்க முடிந்தால் மட்டும்தான் அவனால் பிழைக்க முடியும்.ஹஹ் !ஹஹ் ! அவன் ஆழமாக மூச்செடுத்தான்…அவன் விடுவிக்கப் பட்டான் .—வெளிச்சத்தைப் பார்க்க விரும்பினான். பூமியைத் தொட விரும்பினான் –அவன் சாகவில்லை.


நன்றி :Contemporary Indian Short Stories Series  II Sahitya Academy

வங்காள மொழி இலக்கிய உலகில் மிகச் சிறந்த படைப்பாளியாக மதிப்பிடப்படும் தாரா சங்கர் பானர்ஜி [1898 –  1971] நாவல்கள்,சிறுகதைத் தொகுப்புகள், நாடகங்கள்,கட்டுரைகள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்.சாகித்ய அகாதெமி பரிசு பெற்றஅவரது’ஆரோக்ய நிகேதன் ’ நாவல் பல இந்திய மற்றும் அயலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஞானபீட விருது   [1966 ]உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.