சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2

This entry is part 16 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

ரவி நடராஜன்

“அட, சிகரெட்டுக்கு என்ன விஞ்ஞானம் வேண்டிக் கிடக்கிறது? வரவர, ‘சொல்வனம்’ பத்திரிகையில் எதை வேண்டுமானாலும் வெளியிடுகிறார்கள்,” என்று நீங்கள் முகம் சுளிப்பது புரிகிறது. விண்வெளியை ஆராய்வது மட்டும் விஞ்ஞானம் அன்று. இயற்கையைப் புரிந்துகொள்வது விஞ்ஞானத்தின் குறிக்கோள் என்றாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட பல பொருட்களின் பின்னாலும் விஞ்ஞானம் உள்ளது. பல்லாண்டுகளாக மனிதனால் உருவாக்கப்படும் பொருட்களுக்குப் பின்னால் லாப நோக்கே இருந்தாலும் விஞ்ஞானம், லாப நோக்கைத்தாண்டி, மனித குலத்திற்கு உதவவும் செய்கிறது. அந்த நோக்குடனே சிகரெட் பற்றிய விஞ்ஞானத்தை இங்கே எழுத உள்ளேன். விஞ்ஞானம் என்னவென்று அறிந்தாலே, அது, எப்படி வளைக்கப்படுகிறது என்பதை அறியமுடியும்.

சிகெரெட் என்றவுடன், அதில் உள்ள பொருட்கள் என்ன என்று தெரிந்துகொள்ளுதல் இந்த விஞ்ஞானத்தின் ஒரு பகுதி. நாமெல்லாம் அறிந்த புகையிலை ஒரு சின்ன அங்கம்தான். இதைத் தவிர புகை பிடிப்பதால், புகையிலையை மெல்லுவதால் என்னென்ன தீங்குகள் நேரும் என்று எவ்வாறு கண்டறிந்தார்கள் என்றும் பார்ப்போம்.

முதலில், ஒவ்வொரு சிகரெட்டிலும் உடலுக்குக் கேடான 93 ரசாயனங்கள் உள்ளன. இவை அத்தனையும் சிகரெட் உற்பத்தியால் உருவானதா என்று கேட்டால் ‘பெரும்பாலும்’ என்றுதான் பதில் சொல்லவேண்டும். சிகரெட்டில் உள்ள ரசாயனங்கள், மூன்று படிகளில் உருவாகின்றன.

  1. புகையிலைச் செடியிலிருந்து வரும் தீய ரசாயனங்கள்.
  2. சிகரெட்டைத் தயாரிக்கும்போது கலக்கப்படும் ரசாயனங்கள்.
  3. சிகரெட் புகையை உள்வாங்கும்போது சேரும் ரசாயனங்கள்

இவற்றின் மொத்தக் கணக்கே 93.

செடியிலிருந்து, ஒருவர் ஊதும் புகை வரை என்னவென்ன ரசாயனங்கள் சேர்கின்றன என்பதை விளக்கும் அருமையான விடியோ இங்கே:

இந்த ரசாயனங்களை அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாடு அமைப்பு (FDA) ஐந்து வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். இவை:

  1. மூச்சுக்காற்று நச்சுப்பொருள் (Respiratory toxicant)
  2. இருதய நச்சுப்பொருள் (cardiovascular toxicant)
  3. வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க நச்சுப்பொருள் (developmental and reproductive toxicant)
  4. அடிமையாக்கும் நச்சுப்பொருள் (addictive)
  5. புற்றுநோய் உருவாக்கி (carcinogen)

இதன் முழுப் பட்டியல் இங்கே:

https://www.fda.gov/tobacco-products/rules-regulations-and-guidance/harmful-and-potentially-harmful-constituents-tobacco-products-and-tobacco-smoke-established-list

இன்று அரசாங்கமே இவற்றை ஒப்புக்கொண்டு வெளியிடுகின்றது. ஆனால், இந்த விஷயங்களை நிரூபிக்க விஞ்ஞானிகள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமன்று.

மனிதர்களுக்கு, நுரையீரலில் புற்றுநோய் என்பது மிகவும் அபூர்வமான விஷயமாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நோய் அதிகமாகத் தொடங்கியது. ஆனால், திட்டவட்டமாக விஞ்ஞானிகளால் சிகரெட்தான் இந்த நோய்க்குக் காரணம் என்று நிரூபிக்க முடியவில்லை. முதலில், இது புகையிலைத் தூசியினால் வருகிறதோ என்று சந்தேகம் எழுந்தது. சிகரெட்டினால் உருவான நோய் இது என்று ஓரளவு விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்படவே 1912 வரை ஆகியது. அத்துடன், ஆரம்ப காலங்களில், சில வியாதிகளைக் காசநோயா அல்லது சிகரெட்டினால் உருவான நுரையீரல் புற்றுநோயா என்று சொல்வதும் கடினமாக இருந்தது. இது மருத்துவ உலகில் சகஜம். இது 1940 வரை தொடர்ந்தது. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் சிகரெட் கம்பெனிகள் கொழுத்தன.

இதைப் புரிந்துகொள்ள ரஜினிகாந்திற்கு வருவோம். 1970–களின் கடைசியில் பாலசந்தர், ரஜினியைச் சிகரெட்டைத் தூக்கிப்போட்டு புகைக்கச் செய்தார். உடனே, சிகரெட் விற்பனை உயர்வுக்கு ரஜினிதான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஒருபுறம் சிகரெட் விற்பனை, மற்றொரு புறம் ரஜினி என்ற நடிகர் தன்னுடைய ஒவ்வொரு வெற்றிப் படத்திலும் சிகரெட் சாகசம் செய்கிறார் என்றாலும் சிகரெட் விற்பனை உயர்வுக்கு ரஜினிதான் காரணம் என்றால் அவர் சும்மா இருப்பாரா? தன்னுடைய நடிப்புத் திறமைதான் தம் வெற்றிக்குக் காரணம் என்பார். அத்துடன், ஒரு 150 நிமிட திரைப்படத்தில் இடம்பெறும் 10 நிமிட சிகரெட் காட்சி என்ன பெரிதாய்ச் சமூகத்தை மாற்றிவிட முடியும்? இவ்வகைப் புள்ளியியல் வாதங்களின் பலவீனம் இது. இன்றைய ரஜினிபோல, 1980-களில், வருடத்திற்கு ஓரிரு படங்கள் நடிக்கவில்லை. அப்படி இருந்தால், சிகரெட் விற்பனையின் காலகட்டக் கணக்கை (seasonality) வைத்து, அதன் உச்சங்கள் ரஜினி படம் வெளியானவுடன் இருந்தால், ஓரளவு இந்த ஒட்டுறவை (correlation) நிரூபிக்கலாம்.

இந்த சிகரெட் விஷயத்தில் உள்ள சிக்கல் இதுதான்: முப்பது முதல் நாற்பது லட்சம் சிகரெட்டுகள் ஊதப்பட்டால் சராசரி ஒரு நுரையீரல் சார்ந்த இறப்பு நேருகிறது. சிகரெட்டினால் நுரையீரல் சார்ந்த இறப்பு நேருகிறது என்று எப்படி நிரூபிப்பது?

அடுத்தபடியாக, விஞ்ஞானிகள் விலங்குகளுக்குப் புகைச் சூழலைச் சோதனைசெய்து, நோய் பரவும் புள்ளியியல் (இன்று கோவிட்-19–ல் பயன்படுத்தபடும் epidemiology) என்று பலவற்றையும் முயற்சிசெய்து பார்த்தார்கள் – நம் ரஜினி உதாரணம்போல, சிகரெட் நிறுவனங்கள் இந்த முடிவுகளை மறுத்தன. சிகெரெட் நிறுவனங்கள்மீது பொறாமைகொண்ட சிலரின் சதி என்று கதை கட்டிவிட்டது.

இந்த சிக்கலான விஞ்ஞான பிரச்னைக்குப் பல வழிகள் தேவைப்பட்டன.

முதல் வழி, மக்கட்தொகை முறைகள் (population studies). ஃப்ரான்ஸ் ஹெர்மென் முல்லர் என்னும் மருத்துவர், 1939–ல், கொலோன் மருத்துவமனையில் 86 நுரையீரல் புற்றுநோய் கேஸ்களை ஒருபுறமும் அந்த நோயில்லாத இன்னொரு 86 நோயாளிகளின் கேஸ்களை மறுபுறமும் ஒப்பிட்டு, புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வர நிறைய வாய்ப்புண்டு என்று தன்னுடைய முடிவை வெளியிட்டார். ஜெனா பல்கலைக்கழக ஆராய்ச்சி, இன்னும் பல நோயாளிகளை ஒப்பிட்டு, அதே முடிவை இன்னும் பலப்படுத்தியது. 1950–களில், இந்த முறைகளை அமெரிக்க / பிரிடிஷ் விஞ்ஞானிகள் மேலும் ஊர்ஜிதப்படுத்தினார்கள். இத்தனை விஞ்ஞானிகள் ஒரே முடிவுக்கு வர ஆரம்பித்தபோது, சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. இந்த சந்தேகத்தை இன்னும் திட்டவட்டமாக ஊர்ஜிதப்படுத்த cohort studies என்ற ஒரு நுட்பம் கையாளப்பட்டது.

Cohort studies என்றால் என்ன? இது புள்ளியியல் விவரங்களை ஒன்றை ஒன்று தழுவிய (overlapping) கூட்டமாக ஆராய்ந்து, முடிவைச் சரிபார்ப்பது. எல்லாத் தரவுகளையும் ஒரே கூட்டமாகப் புள்ளியியல் விவரங்களை ஆராயும்போது ஏற்படும் சார்புத் தன்மையை (bias) விலக்கும் முயற்சி இது. நாம் முதலில் சொன்ன 86 கேஸ்களைப் பிரித்து ஆராய்வது. தலா 25 கேஸ்கள் என்றால், நான்கு குடும்பங்களில் 100 கேஸ்கள் ஆகின்றன அல்லவா? இந்தக் கணக்கில் 14 கேஸ்கள் அதிகம் இருப்பதற்குக் காரணம், 14 கேஸ்கள் இந்த நான்கு குடும்பங்களில், இரு குடும்பங்களில் இடம்பெறும். (புள்ளியியல் பற்றி தமிழில் எழுதுவது மிகவும் கடினம். எதிர்காலத்தில் முயற்சிக்க வேண்டும்.) அதாவது, இரு குடும்பங்களில், தலா 7 கேஸ்கள் இரண்டிலும் இடம்பெறும். இந்த cohort studies சிகரெட் புகைப்பதற்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது. 1954–ல் டால் மற்றும் ஹில் (Doll and Hill), நாளொன்றிற்கு 35 சிகரெட் பிடிப்பவர்கள் நுரையீரல் புற்றுநோயால் இறக்கும் வாய்ப்பு 40 மடங்கு அதிகம் என்று நிரூபித்தனர். மற்ற முயற்சிகள் பயனளித்தாலும் இந்த அமெரிக்கப் புற்றுநோய்ச் சங்கத்தின் cohort studies காரணமாக, அரசாங்கங்கள் விஞ்ஞானிகளுக்கு மேலதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின.

அடுத்த வழி, விலங்குப் புகையிலை ஆராய்ச்சி. அட, சின்ன சோதனை எலிகளை ரஜினிகாந்த் ஆக்குவதா? அப்படி இல்லை. விலங்குகள் விளம்பரம் பார்த்து மயங்குவதில்லை. புகையிலைச் சாற்றைச் சோதனைச்சாலை எலிகளுக்கு உணவாக அளித்தால், அவற்றுக்குப் புற்றுநோய் வருவது சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கவனிக்கப்பட்டது. 1931–ல், ஏஞ்சல் ஹோஃபோ என்ற விஞ்ஞானி, சருமத்திலிருந்து மயிர்கள் நீக்கப்பட்ட முயல்களைப் புகையிலைப் புகைச் சூழலில் விட்டுவைத்தார். முயல்களின் தோலில் புற்றுநோய் பரவுவதைக் கவனித்தார். 1953–ல், இன்னொரு விநோத சோதனை செய்யப்பட்டது. மயிர் நீக்கப்பட்ட எலிகளின் முதுகில் சிகரெட்டின் சாம்பலைக் குழைத்துத் தடவியதில், எலிகளுக்குப் புற்றுநோய் வருவது பதிவு செய்யப்பட்டது. டைம் மற்றும் லைஃப் பத்திரிகைகள் இந்த விஷயத்தை வெளியிட்டதும் சிகரெட் கம்பெனிகளின் பங்குகள் சரிந்தன. மக்களுக்குச் சிகரெட் அபாயமும் சிகரெட் கம்பெனிகள் மீதிருந்த நம்பிக்கையும் குறைய ஆரம்பித்தன. விஞ்ஞானத்தால் ஏற்பட்ட பெரும் சரிவை, எப்படிச் சிகரெட் கம்பெனிகள் திரித்துச் சரிசெய்தன என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம். சிகரெட் விற்பனை, இந்த சரிவுக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கியது.

மூன்றாவது வழி, உயிரணு நோயியல் (cellular pathology) நிபுணர்கள் 1930–களில், ஒரு முக்கிய உடலியல் சார்ந்த விஷயத்தைக் கவனித்தார்கள். நுரையீரலிலிருந்து உள்செல்லும் காற்றுக் குழாய்களில், சின்ன நார்போன்ற அமைப்புகள் இயற்கையில் நமக்கெல்லாம் உண்டு. இதன் வேலை மிகச் சிறிய துகள்களை நுரையீரலில் சிக்கவிடாமல் பாதுகாப்பது. அதிகமாகப் புகை பிடிப்பவர்களுக்கு இந்த நார்கள் வலுவிழந்துவிடுகின்றன. இதனால் என்னவாகிறது? புகையிலைப் புகை தன்னுடைய நுண்துகள்களுடன் நேராக நுரையீரலுக்குச் சென்றுவிடுகிறது. இந்த நிலைமைக்கு, மருத்துவத் துறையில், ciliastasis என்று பெயர். ஆண்டர்ஸன் ஹில்டிங் என்ற விஞ்ஞானி, 1956–ல், புகைபிடிப்பவர்களுக்கு pulmonary ciliastasis மட்டும் வருவதில்லை, வலுவிழந்த அந்தக் குறிப்பிட்ட உயிரணுக்களில் புற்றுநோயும் வருகிறது என்று நிரூபித்தார். இதைத்தான் இன்று அரசாங்கங்கள் சுருக்கமாக, “புகை பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வரும்” – என்று எச்சரிக்கின்றன.

நான்காவது வழி, புற்றுநோய் உருவாக உதவும் சிகரெட் ரசாயனங்கள். 1930-களில், எரியும் புகையிலையால் உருவாகும் தார் (tar), புற்றுநோய் உருவாக உதவும் என்று தெரியவந்தது. ஆர்ஜன்டினியாவைச் சேர்ந்த ஏஞ்சல் ரொஃபோ என்பவர் இதை முதலில் நிரூபித்தார். இவருடைய ஆராய்ச்சி சிகரெட் தொழிலால் மிகவும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. அதற்காக, சிகரெட் தயாரிப்பை நிறுத்துவதா? அத்தனை கோடி லாபத்தைச் சும்மா விட்டுவிட முடியுமா? ஃபில்டர் சிகரெட், புகைக்கும்போது உருவாகும் தாரைக் குறைக்கும் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். இதை நம்பி, பல கோடி நுகர்வோர், ஃபில்டர் சிகரெட்டை ஊதித் தள்ளினார்கள்! 1952 முதல் 1960 வரை அமெரிக்காவில், தாரைத் தவிர பலவகை ரசாயனங்கள் சிகரெட்டில் கலந்திருப்பது தெரியவந்தது. புற்றுநோயை உருவாக்கும் ஆர்சினிக், க்ரோமியம், நிக்கல் மற்றும் பலவகைப் புற்றுநோய் உருவாக்கும் நீரகக்கரிமங்கள் (hydrocarbons) சிகரெட் புகையில் கலந்திருப்பது தெரியவந்தது.

இந்த நான்கு பெரிய விஞ்ஞான முறைகள், ராட்சசச் சிகரெட் தொழிலின் பல வகை பண பல நடவடிக்கைகளையும்மீறி, அரசாங்கங்களைச் செயலில் இறங்கத் தூண்டின. அமெரிக்காவில் தொடங்கி யூரோப் என்று மெதுவாகப் பல உலக நாடுகளும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்கப் பலவகை முயற்சிகள் எடுக்கத்தொடங்கின. இவை இன்றும் தொடர்கிறன. இன்னும் சிகரெட் நிறுவனங்கள் எல்லா வரிகளையும் மீறி ஏராளமாக லாபம் ஈட்டுகின்றன.

விஞ்ஞானம் மனிதனின் அடிமைத்தனம் ஒன்றை விடுவிக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. அத்துடன், இந்தப் பழக்கத்திற்கு அடிமையானால் அதிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். இதற்காகவே உலகெங்கும் புகைப் பழக்கத்திலிருந்து விடுவிக்கும் மையங்கள் (Smoking Deaddiction centers) உள்ளன. படிப்படியாகச் சிகரெட் புகைப்பதைக் குறைக்கும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். இதில் அரசாங்கத்தின் குறி, சிகரெட் புகைப்பதைக் குறைத்தால் ஆஸ்பத்திரியில் மற்ற தவிர்க்க முடியாத நோய்வாய்ப்பட்டிருக்கும் நோயாளிகளைக் கவனிப்பது. இது குடிப் பழக்கம் மற்றும் போதை மருந்துப் பழக்கத்திற்கும் பொருந்தும்.

மேற்கத்திய அரசாங்கங்கள் ஒரு வழியாகச் சிகரெட் கம்பெனிகளின் கொட்டத்தை அடக்கிவிட்டார்கள் என்று சொல்லவேண்டும். இந்தியா, மற்ற ஆப்பிரிக்க நாடுகள் இன்னும் இந்த விஷயத்தில் பின்தங்கி உள்ளன. எப்படி மேற்குலகில் இது சாத்தியமாயிற்று என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

பி.கு: முப்பது லட்சம் சிகரெட்டுகளை விற்பது சிகரெட் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய விஷயமே அன்று. இருபதாயிரம் சிகரெட்டுகளை ஒரு நிமிடத்தில் உற்பத்தி செய்கிறார்கள்.

Series Navigation<< சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.