2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்

நாவலின் வடிவத்திற்கும், உள்ளடக்கத்திற்குமான தொடர்பு சார்ந்த விவாதம் நிரந்தரமானது. கதை என்றும் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் கூறல்முறை என்பது காலத்துக்கும், சூழலுக்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு காலகட்டத்தின் அறிவுச்சூழலின் தத்துவ நிலைப்பாடும் நாவல் என்கிற வடிவத்தின்மீது ஆழ்ந்த பாதிப்பை செலுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தின் தத்துவ நிலைப்பாடு என்பது ஒருவகையில் அன்றைய பொதுமனம் எவ்வாறு சிந்திக்கிறது, எதை முதன்மைப்படுத்துகிறது, எதைக் கைவிடுகிறது என்பதைச் சார்ந்ததே .  ரொபெர்த்தோ பொலான்யோவின் 2666 என்கிற பெருநாவலை, அதன் வடிவத்தையும் கருத்தில்கொண்டே வாசிக்க வேண்டியிருப்பது இந்த நாவல் இன்றைய காலத்தின் சிதறலான சூழலுடன் பொருந்திப்போவதால் எனலாம்.

2666, ரொபெர்த்தோ பொலான்யோ இறந்த பிறகே வெளியாகி இருக்கிறது. நாவலாக வெளியிடப்பட்டிருப்பது ஏறக்குறைய நாவலின் முதல்படி (first draft) என்றுகூடச் சொல்லிவிடலாம். 2666, ஐந்து ஒன்றுக்கொன்று தொடர்புடைய பகுதிகளைக்கொண்ட நாவல். இந்தப் பகுதிகளைத் தனித்தனி நூல்களாகவே பொலான்யோ வெளியிட விரும்பியதாக நூலின் பின்னுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவலின் ஐந்து பகுதிகளை நூலில் இடம்பெற்றிருக்கும் வரிசையில் அல்லாமல், எந்த ஒரு வரிசையிலும் வாசிக்கும் சுதந்திரத்தை நாவல் வாசகனுக்கு வழங்குகிறது. எந்த வரிசையில் வாசித்தாலும் நாவலில் இருந்து ஒரு ஒட்டுமொத்த திரட்சியை நாம் அடைகிறோம். ஐந்து பகுதிகளும் மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலைநிலச் சாலையில் இருக்கும் சான்டா தெரசா என்ற கற்பனை நகருடன் தொடர்புகொண்டுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, வெவ்வேறு காலகட்டங்களில் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, மெக்சிகோ, அமெரிக்கா என்று வெவ்வேறு பிரதேசங்களில், இலக்கிய விமர்சகர்கள், தம் ஓவியத்தை முழுமை செய்வதற்காகத் தம் கையை வெட்டி ஓவியத்தின் பகுதியாக இணைக்கும் ஓவியன், துப்பறிவாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், காவலர்கள், ராணுவவீரர்கள், ழுத்தாளர்கள் என்று வெவ்வேறு வகைமாதிரி பாத்திரங்கள் எனப் பரந்து கிடக்கும் இந்த நாவலுக்கு மையம் என ஒன்றை கற்பனை செய்தால், அது சான்டா தெரசா நகரில் தொடர்ச்சியாக நடக்கும் பெண் கடத்தல்களும் கொலைகளுமாக அமையும்.

இந்த நாவலின் ஐந்து பகுதிகளில் எந்தவொன்றும் ‘முடிவுற்ற’ உணர்வைத் தருவதில்லை. ஒவ்வொரு பகுதியின் முடிவும் பக்கங்களின் முடிவாகவே உள்ளது. இந்த அம்சம் நாவலின் ‘கதைத் தன்மையை’க் கேள்விக்கு உள்ளாக்குகிறது. பாத்திரங்களின் மனவார்ப்பில் தோன்றும் மாற்றங்கள் காசிச் சித்திரிப்புகள் வழியாகத் துல்லியமாகச் சொல்லப்படுவதால் இந்தக் கதையின்மை ஒரு சிக்கலாகத் தோன்றுவதில்லை. உதாரணமாக, The part about criticsல் பென்னோ வான் ஆர்கிம்போல்டி என்ற தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத ஜெர்மன் எழுத்தாளரைத் தேடும், நான்கு விமர்சகர்களுக்கு இடையேயான உறவைச் சொல்லலாம். இப்பகுதியின் தொடக்கத்தில் ஆர்கிம்போல்டியைக் குறித்த ஒரு மர்மமான கோட்டுச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. ஆர்கிம்போல்டி யார், அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்விக்குள் நாவல் செல்லவேண்டிய இடத்தில், இலக்கிய விமர்சகர்களுக்கு இடையேயான அதிர்ச்சி அளிக்கும் உறவுச்சித்திரம் சுட்டப்படுகிறது. இவர்களுள் நிகழும் மாற்றங்களை வாசகனே ஊகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பெல்லடியர், எஸ்பினாசோ என்ற இரு விமர்சகர்களையும் காதலிக்கும் லிஸ் நார்டன் இறுதியில் கால்கள் ஊனமுற்ற பெரினியைத் தேர்வு செய்வதும், சான்டா தெரசாவில் உடைகள் விற்பனை செய்யும் சிறுமியை மெல்லக் கவர்ந்து, அவளுடன் சலிக்குமளவு உடலுறவு கொண்டபிறகு பிரியும் எஸ்பினாசோ, முழுமையாகத் தம்மை ஆர்கிம்போல்டி நூல்களிலேயே ஆழ்த்திக்கொள்ளும் பெல்லடியர் என்று வாசகன் கற்பனையால் நிரப்பிக் கொள்ளவேண்டிய பல அகமாற்றத் தருணங்களை நாவல் முழுக்கவே கண்டெடுக்க முடிகிறது.

அடுத்ததாக நாவல் குறித்துச் சொல்லப்படவேண்டிய அம்சம் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடும் மொழிநடை. The part about Amalfitano என்ற பகுதி, அமல்ஃபிடானோவிடம் ஏற்படும் மெல்லிய பிறழ்வுகளிடனூடாக நகர்கிறது. அமல்ஃபிடானோவின் மனைவி லோலாவைப் பற்றிய ஒரு விரிவான சித்திரிப்பு நாவலுக்குள் வருகிறது. கணவனையும், மகளையும் பிரிந்து தன்னுடைய தோழியுடன், அரசாங்கத்தின் வீட்டுக் காவலில் இருக்கும் ஒரு கவிஞனைத் தேடி மெக்ஸிகோவில் இருந்து லோலா ஐரோப்பாவுக்குச் செல்கிறாள். அங்கு அவளுக்கு நடக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அவள் எழுதும் கடிதங்கள் வழியே சொல்லப்படுகின்றன. லோலாவுடைய விட்டேற்றித்தனம் நிறைந்த வாழ்வு, அமல்ஃபிடானோ அடையும் பதற்றங்கள் என   ஒட்டு மொத்தமாகவே மனப் பிறழ்வைப் பிரதிபலிக்கும் மொழி நடையில் இப்பகுதி எழுதப்பட்டுள்ளது. ஒரு வகையில் அமல்ஃபிடானோ, சான்டா தெரசாவில் தொடர்ச்சியாக நடைபெறும் பெண் கொலைகளால் பிறழ்ந்து போய்விட்டதாகக் கருதவும் இப்பகுதி வாய்ப்பளிக்கிறது. இதுபோலப் பிராதானப்படுத்தக்கூடிய மொழிநடை மற்ற பகுதிகளிலும் பயின்று வருகிறது.

அடுத்ததாக நாவலில் இடம்பெறும் பாத்திரங்களின் அடையாளச் சிக்கல். இந்த நாவலில், தொடர்ச்சியாகப் பயணங்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. மெக்ஸிகோ மற்றும் ஐரோப்பாவுக்கு இடையேயும், மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயும், ஏராளமான பயணங்களும் குடியேற்றங்களும் நிகழ்கின்றன. இன்னொரு நாட்டுக்குச் சென்று வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுவதன் சிக்கலின் ஆழம் இந்த நாவலில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. The part about Fate என்ற மூன்றாவது பகுதியில், ஆஸ்கர் ஃபேட் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்கக் கறுப்பின இளைஞனின் அடையாளச் சிக்கல் பிரதானமாகப் பேசப்படுகிறது. அமெரிக்காவில் தம்மைக் கறுப்பினத்தவனாக அடையாளப்படுத்திக்கொள்ளும் ஃபேட், மெக்ஸிகோ வரும்போது தம்மை அமெரிக்கனாக அடையாளப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறான். ஒரு கறுப்பின இதழில், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்து எழுதக்கூடிய ஃபேட்,  ஒரு கறுப்பின குத்துச்சண்டை வீரன் பங்குபெறும் போட்டியைக் குறித்து எழுதுவதற்காக சான்டா தெரசாவுக்கு வருகிறான். அங்கு அவன் சந்திக்கும் சக மெக்ஸிகோ பத்திரிகையாளர்கள், அவனுடைய அமெரிக்கன் மற்றும் கறுப்பன் என்ற இரட்டை அடையாளம் போன்றவை நுட்பமாகச் சொல்லப்படுகின்றன. இந்த நாவலில் இந்தப் பகுதி மட்டுமே, முடியும்போது வாசகனை முழுமையாகக் கைவிடாமல் ஒரு முடிவினைக் கொண்டிருப்பதான பாவனையை அளிக்கிறது. காமமும், விபச்சாரமும் நிறைந்து வழியும் சான்டா தெரசா என்ற நகரில், இந்தப் பகுதியில் மட்டும் ஒரு மெல்லிய காதலும் வெளிப்படுகிறது.

The part about crimes என்ற நான்காவது பகுதி, சான்டா தெரசாவில் நடைபெறும் தொடர் கொலைகளை காவல் துறை அறிக்கையின் தொனியில் விவரித்துச் செல்கிறது. ஒப்பீட்டில், இந்த நாவலின் மிக அதிகமான பக்கங்களை எடுத்துக்கொள்ளும் பகுதி இதுதான். கொலை செய்யப்படும் பெண்களின் குடும்பம் பற்றிய விவரணைகளில், சான்டா தெரசாவின் சீர்கெட்டுப்போன பண்பாட்டுச் சூழலும், அங்கு வாழும் மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளும் பின்புலமாகின்றன. கணவனால் கொலை செய்யப்படும் பெண், காதலனால் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படும் பெண் எனத் தொடர் கொலைகளில் இருந்து வேறுபட்ட, ஆனால் அதே அளவு கொடூரமான கொலைகளையும் இப்பகுதி விவரித்துச் செல்கிறது. இக்கொலைகளைத் துப்பறிவதன் பின்னுள்ள அலட்சியமும், துப்பறிவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் போலித்தனமும் உடன் விவரிக்கப்படுகின்றன.

The part about Archimboldi என்ற ஐந்தாவது பகுதி, வாசித்துச் செல்வதற்கு இலகுவானதும், சற்றுக் கதைத் தன்மை கொண்ட பகுதி என்றும் சொல்லலாம். ஹான்ஸ் ரீட்டர் என்ற பிரஷ்ய இளைஞன் ஆர்கிம்போல்டி என்ற மறைந்து வாழும் எழுத்தாளனாக மாறும் சித்திரத்தையும், ஏறத்தாழ துறவிக்கு நிகரான அவனுடைய வாழ்வையும் இப்பகுதி விவரிக்கிறது. ஜெர்மன் ராணுவம் ஒன்றில், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சிப்பாயாக இருக்கும் ஹான்ஸ் ரீட்டர், போர் முடிவில் ஆங்கில ராணுவத்தால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகிறான். முகாமில் தான் செய்த ஒரு கொலையிலிருந்து தப்பிக்க, தம் அடையாளத்தை மறைத்துக்கொள்ள, தம் பெயரை மாற்றிக்கொண்டு எழுதத் தொடங்கிறான். ஏறத்தாழ ஹான்ஸின் எண்பது வருட வாழ்க்கை இப்பகுதியில் வருகிறது. இரண்டாம் உலகப்போர் தொடங்கி, இந்த நூற்றாண்டின் தொடக்கம்வரை வரும் ஹான்ஸின் வாழ்வும் சான்டா தெரசாவை நோக்கி நகர்கிறது. (ஹான்ஸ் ரீட்டரின் வாழ்க்கை எனக்குச் சுத்தானந்த பாரதியை நினைவுறுத்தியது.)

நாவலின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் சான்டா தெரசா, நாவலை வாசித்து முடிக்கும்போது நம் மனதில் ஒரு படிமமாகவே மாறிவிடுகிறது. ஆனால், அது ஒரு விரும்பத்தகாத படிமம். நவீன வாழ்வின் அத்தனை எதிர்மறை அம்சங்களும் – கட்டற்ற நுகர்வு, முறையற்ற போகம், உறவுகளில் ஏற்படும் உடைவுகள், திறனற்ற அரசாங்கம், உணர்வுபூர்வத் தொடர்பை இழந்துவிட்ட கலை ஊடகங்கள், உழைப்பையும் துய்ப்பையும் தாண்டி எதையும் சிந்திக்க இயலாத மனிதர்கள் – சான்டா தெரசாவின் வழியாகச் சித்திரிக்கப்படுகின்றன. நாம் எதிர்கொள்ள அல்லது கற்பனை செய்யத் தயங்கும் எண்ணற்ற உண்மைகள் உலவும் வெளியாக சான்டா தெரசா உள்ளது. ஆனால், இந்தச் சீரழிவுகள் எதுவும் ‘யதார்த்தமாக’ச் சொல்லப்படாமல், வாசகனே நிரப்பிக்கொள்ள வேண்டியதாகவே முன்வைக்கப்படுகிறது.

காமமும், வன்முறையும் எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமலேயே நாவலில் இடம்பெறுகின்றன. சென்ற நூற்றாண்டின் இறுதியில் மெக்ஸிகோவின் Ciudad Juarez நகரில், தொடர்ச்சியாக முன்னூறுக்கும் அதிகமான பெண்கள் கொலை செய்யப்பட்டதை, இந்த நாவல் சான்டா தெரசாவின் வழியே ஒரு குறியீட்டுத் தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. ஹான்ஸ் ரீட்டர் பிறக்கும் போர்ச் சூழல் தொடங்கி, இந்த சான்டா தெரசா கொலைகள்வரை ஒரு நேர் கோட்டினை இழுக்கலாம். ஒரு சீரழிவின் தொடக்கத்திலிருந்து, அதன் இன்றைய நிலைவரை நாவலில் பேசப்படுகிறது. யூதர்கள், செவ்விந்தியர்கள், கறுப்பர்கள் என ஒவ்வோர் இனமும் போர்களாலும், மேலாதிக்கத்தாலும் அடைந்த துயர்கள் நாவலின் பின்புலமாக அமைகின்றன.  இரண்டாம் உலகப் போர் முடியும் சமயத்தில், ஐந்நூறு யூதர்களை என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு குழுவை அமைத்து, பத்துப் பத்து பேராக அவர்களைக் கொல்லும் அவர்களில், நூறுக்கும் அதிகமானவர்களைத் தம் மனிதநேயத்தால் தாம் கொல்லாமல் விட்டதாக நம்பும் ஒரு நாஜி ஆளுநர், இந்த நாவலின் உணர்வுநிலைக்கு ஒரு பொருத்தமான உதாரணம். ஒட்டுமொத்தமாக, ஒரு நூற்றாண்டின் வாழ்க்கையை இந்த நாவல் விசாரணை செய்கிறது. நாவலின் வடிவமும் பேசுபொருளின் இறுக்கத்தைப் பிரதி செய்து, வாசகனை அதன் தீவிர நிலையோடு உரையாடச் செய்கிறது.

***

2 Replies to “2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.