முருகு, முருகன் எனும் வார்த்தைகளுக்கும் மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகத்துக்கும் இருக்கும் தொடர்பு பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை படித்துக்கொண்டிருந்தேன். பண்டைய நாகரிகங்களில் பின்பற்றப்படும் பழக்கங்களில் சில இன்றும் நவீன இந்தியாவில் ஏதேனும் ஒரு வடிவில் எஞ்சியுள்ளன என்பது அந்த கட்டுரை ஆசிரியரின் கூற்று. இதை நிரூபிக்க பல ஆதாரங்களை முன்வைத்திருந்தார். வளைகாப்பு எனும் சடங்கு பற்றி இருந்த ஒரு குறிப்பு என் ஆர்வத்தை அதிகரித்தது. பெண்கள் கருவுற்ற ஏழாம் மாதத்தில் வளையல் காப்பு சடங்கு நடத்தும் பழக்கம் ஹரப்பா நாகரிகத்தில் இருந்ததாகவும், அங்கு கிடைத்த தொல்பொருட்களில் குறிப்பிட்டிருந்த முருகு எனும் வளையல் வடிவம் ஆண் மகனை ஈன்று காப்பாற்றும் எனும் நம்பிக்கைக்கான ஆதாரம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த காப்பைக் கட்டியவர்கள் அழகான/வீரமான ஆண் மகனைப் பெற்றெடுப்பர் எனும் நம்பிக்கை.
பிள்ளைகளின் உயிர் காப்பதற்கு காப்பு கட்டிக்கொள்ளும் வழக்கம் பண்டைய நாகரிகத்தில் பெண்களிடம் இருந்த ஒன்று எனும்போது சில நவீன காலத் தொடர்புகள் தோன்றின. நமது நாகரிகங்களில் மட்டுமல்லாது, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாகரிகங்களிலும் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறதா எனத் தெரியாது.
ரெண்டு நவீன நாவல்களில் இதைப் படிக்க முடிகிறது. ரொபெர்த்தோ பொலான்யோ எழுதிய Amulet, மற்றும் மார்த்தா த்ராபா எழுதிய Mothers and Shadows (இது தமிழில் `நிழல்களின் உரையாடல்` எனும் பெயரில் அமரந்தாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; தாமரைச் செல்வி பதிப்பகம்; 1997). 1976 ஆம் ஆண்டு அர்ஜெண்டீனாவில் நடந்த ஆட்சி கவிழ்ப்புப் போராட்டத்தின் விளைவுகளைச் சொல்லும் நாவல் Mothers and Shadows. இந்த நாவல் பற்றி மற்றொரு சமயம் பார்க்கலாம். 1968 இல் நடந்த மெக்ஸிகோ-68 என அழைக்கப்படும் மாணவர் கிளர்ச்சிப் போராட்டத்தின் பாதிப்பை சொல்லும் நாவல் Amulet.
சீலே நாட்டு எழுத்தாளர் ரொபெர்த்தோ பொலான்யோ ஒரே ஒரு கதை தான் எழுதியுள்ளாரோ எனும் சந்தேகம் வருமளவு ஒவ்வொரு படைப்பும் மற்றொன்றின் தொடர்ச்சி போல இருக்கும். Savage Detectives நாவலில் வரும் ஆக்ஸிலியானோ எனும் பாத்திரத்தின் கதையைக் கொண்டு Amulet எனத் தனிநாவல் எழுதிவிட்டார். அதே போல Amulet நாவலில் வரும் ஒரு வரி அவரது பெரிய நாவலான 2666 தடத்தைச் சுட்டி நிற்கிறது. ஒரு தெருவைப் பற்றிச் சொல்லும்போது,
more like a cemetery than an avenue, not a cemetery in 1974 or in 1968, or 1975, but a cemetery in the year 2666, a forgotten cemetery under the eyelid of a corpse or an unborn child, bathed in the dispassionate fluids of an eye that tried so hard to forget one particular thing that it ended up forgetting everything else
மெக்ஸிகோ நாட்டின் கவிதை உலகை வரைபடம் போட்டது போல Savage Detectives நாவல் அமைந்திருக்கும். கவிஞர்களின் உலகம், அவர்களது தேசிய/உலகளாவிய கவலைகள், கலா ரசனைகள், மற்றவர்களுடனான உறவின் சித்திரங்கள் போன்றவை பொலான்யோவின் பெரும்பாலான நாவல்களின் களம். Amulet நாவலும் கவிஞர்களது உலகில் அமைந்துள்ளது. ஆனால் கலை மனதை பாதிக்கக்கூடிய பெரும் அரசியல் அழிவைப் பற்றிப் பேசும் நாவல்.
Mothers and Shadows மற்றும் Amulet நாவல்களில் ஒரு ஒற்றுமை உண்டு. 1970களின் புரட்சியின் போது `காணாமல்` போன மாணவர்களை மீட்க மெக்ஸிகோவிலும் அர்ஜெண்டீனாவிலும் பெண்கள் போராடிய நிகழ்வுகளை மையமாகக் கொண்ட நாவல்கள். சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அரசு தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்த காலகட்டம். காணாமல் போன தங்கள் பிள்ளைகளை மீட்பதற்கு ஊரின் பொது இடமான மாயோ சதுக்கத்தில் (Plaza de Mayo) வாரம் ஒரு முறை கூடி மெக்ஸிகோ நாட்டுப் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் வீடு திரும்பவில்லை. 1970களில் `மாயோ சதுக்கத்தின் அம்மாக்கள்` எனப் பெயர்பெற்ற இந்த பெண்கள் இயக்கம் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு வரை தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்தனர். காணாமல் போனவர்கள் பற்றிய நினைவு சின்னங்களும், தொகுப்பு நூல்களும் வெளியான வண்ணம் இருந்தாலும், 1981 இல் வெளியான மார்த்தா த்ராபாவின் நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு கட்டத்தில் அர்ஜெண்டீன அரசால் தடையும் செய்யப்பட்டது. மாணவப்போராட்டத்தில் மகனை இழந்த தாயும், காதலனை இழந்த காதலியும் உரையாடுவது போலமைந்த நாவல் Dirty War எனச் சொல்லப்படும் அந்த இருண்ட காலகட்டத்தைப் பற்றி நேரடியாகப் பேசுகிறது.
2006 இல் வெளியான Amulet வயதான கவிதாயினியின் பார்வையில் மெக்ஸிகோ நாட்டின் கவிஞர் உலகம் நழுவவிட்ட அப்பாவித்தனத்தை குறித்த நாவல். இது மார்த்தா த்ராபாவின் நாவலைப் போல நேரடியாக நிகழ்வுகளைக் குறிப்பதில்லை.
1968 ஆம் ஆண்டில் மெக்ஸிகோ நகரின் UNAM எனும் பல்கலைக்கழகத்தின் கழிப்பறையில் நாட்கள் ஒளிந்திருந்து வெளியே நடந்த போராட்டத்தைப் பற்றி ஆக்ஸிலியோ லகூத்தர் எனும் கவிதாயினி விவரிக்கிறார். அவர் கழிப்பறையை உபயோகப்படுத்த வந்த சமயத்தில் மெக்ஸிகோ அரசின் ராணுவம் பல்கலைக்கழகத்தைச் சுற்றி வளைக்கிறது. புரட்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தயவு தாட்சண்யமற்ற முறையில் சுட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் மாணவர்களைத் தேடிக் கொல்கின்றனர். சத்தம் வந்திடுமோ என பயந்து ஆக்ஸிலியோ ஃப்ளஷ் செய்யாமல் 12 நாட்கள் கடத்துகிறாள்.
மெக்ஸிகோ நாட்டுக் கவிதைகளின் தாய் எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் ஆக்ஸிலியோவின் கற்பனை உலகும், உண்மையான சமூக நிகழ்வுகளும் நம்மை கனவுலகில் சஞ்சரிக்க வைக்கின்றது. ஒரு கவிஞரைத் தேடிப் பயணிக்கும் கவிஞர்களின் கதையாகத் தொடங்கிய Savage Detectives நாவல் தென் அமெரிக்க கவிதை உலகம் பற்றிய விமர்சனமாக மாறியது போல, ஆக்ஸிலியோவின் புலம்பல்கள் ஒரு கட்டத்தில் சாபங்களாக மாறுகின்றன. தன்னுடன் உணவைப் பகிர்ந்து, தங்குவதற்கு இடம் அளித்து, கவிதை அனுபவங்களை வாசித்த சிறுவர்கள் கழிப்பறைக்கு வெளியே சுடப்பட்டுக் கிடப்பதை சகித்துக்கொள்ள முடியாது சிறு வயது நினைவுகளில் மூழ்குகிறாள்.
தன்னுடைய நினைவு பிழையானதாக இருக்கலாம் என ஆக்ஸிலியோ நம்புகிறாள். ஆனாலும், `நான் ஒரு கொடூரமானக் கதையைச் சொல்லப்போகிறேன். அதில் எந்தவிதமான குழப்பமும் எனக்கு இல்லை` எனத் தெரிவிக்கிறார். அவளது நினைவும், என்ன நடந்திருக்கலாம் எனும் கற்பனையும் மாறி மாறி அவளை அலைக்கழிக்கிறது.
ஊசலாட்டத்துக்கு நடுவே அவளுக்கு நினைவு தப்பியதில் சிறுவயதில் கவிஞர்களோடு மெக்ஸிகோவில் திரிந்துகொண்டிருந்த நாட்களும் நினைவுக்கு வருகின்றன. மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தாலும், கவிஞர்களின் தாய் ஸ்தானத்தில் அவர்களுக்கு அரணாக இருக்க முயற்சிக்கிறார். மெக்ஸிகோ கலை உலகைப் பற்றி மிகத் திட்டவட்டமான முடிவுகளை முன்வைக்கும் ஆக்ஸிலியோ, கவிஞர்களுடனானத் தனிப்பட்ட உறவுகளை உணர்வுபூர்வமாக அணுகுபவர். தங்குவதற்கு இடமில்லாமல் மெக்ஸிகோ தெருக்களில் அலைந்துகொண்டிருப்பவரை வீட்டுக்குள் சேர்த்ததால் சிதறும் நட்புகள் அவரைத் தடுமாற வைக்கின்றன. சமூகத்துக்கு வேண்டப்படாதவளாக மாறிவிட்ட அவலத்தை நினைத்து எரிச்சல் கொள்கிறாள். ஆனால், அதே சமயம் மிகுந்த நம்பிக்கையோடு மெக்ஸிகோவின் கலை உலகின் படைப்புகளை எதிர்கொள்கிறாள்.
கழிவறையில் அடைபட்டு துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்கும்வரை நம்பிக்கை அவளது இளமையை தக்கவைக்கிறது. நினைவைத் தேடி எடுத்து தனது நம்பிக்கைக்கு உயிர் ஊட்டுகிறாள். ஒரு கட்டத்தில், ஆர்த்தரோ பொலானோ எனும் கவிஞன் தைரியமாக The King of the Rent boys எனும் பிரிவினைவாதக் கூட்டத்திலிருந்து ஆஸ்லியோனாவின் நண்பனை காப்பாற்றுகிறான். ஏமாறும் கவிஞர்கள், பித்துபிடித்த கலைஞர்கள், கலைக்காக ஆன்மாவை விற்பவர்கள் என பலவகையான கலைஞர்களை அவள் சந்திக்கிறாள். ஒவ்வொருவரும் அவளது பிள்ளை தான். நம்பிக்கையும் ரசனையும் கூடிய வாரிசுகள்.
அவர்கள் அனைவரும் கனவுலகில் வெகுளித்தனத்தோடு வாழ்வின் கோரப்பிடிகளுக்குள் சிக்காமல் இருக்கமுடியுமா என்ன?
பன்னிரெண்டு நாட்களில் ஒவ்வொருவராகச் செத்து மடியும் பிள்ளைகளின் சாவு அவளை வயதான மூதாட்டி போலாக்குகிறது. எதிர்காலத்தைப் பற்றி தீர்க்கமான நம்பிக்கையோடு பேசியவள் மெல்ல தனக்குள் புலம்பித் தவிக்கும் பாட்டியாக மாறுகிறாள். அவளது நிமித்தகங்கள் சூனியக்காரியின் சாபமாக மாறுகின்றன. சாபத்தின் கருவியாக தான் மாறியதை அவள் வியப்புடன் பார்க்கிறாள். இந்த மாற்றம் அவளது வழமையல்ல. மெக்ஸிக்கக் கவிதைகளின் தாய் செய்யும் காரியமுமல்ல. ஒவ்வொரு கவிஞனும் அவளது மகன். ஒவ்வொருவரையும் பாதுகாத்து அரவணைக்கும் பொறுப்பு அவளிடம் இருப்பதாக நம்புகிறாள்.
நாட்கள் செல்லச் செல்ல அவளது நம்பிக்கை சிதைகிறது. நாவல் முடியும் தருணத்தில் மெக்ஸிகோ நாட்டைப் பற்றி தீயுரைகள் தன்னியல்பாக அவளிடம் வெளிப்படுகின்றன. அதுவரை நினைவுகளின் துணையோடு வாழ்ந்துவந்தவள் எதிர்காலத்தின் நிச்சயமான நாசத்தை தனது இயல்பாக ஏற்றுக்கொள்கிறாள்.
1968 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மாணவர்களும் கிளர்ச்சியாளர்களும் லாடெலோகோ (Tlatelolco Square, Mexico) சதுக்கத்தில் ஒன்றுகூடினர். அவர்களது போராட்டத்தை முழுவதுமாக நிறுத்தும்படி காவல்துறைக்கு அரசு ஆணையிட்டிருந்தது. ஆனால் தடை உத்தரவு எல்லை மீறியது. முதல் கல்லை யார் விட்டெறிந்தால் என்ன? அங்கு குழுமியிருந்த மாணவர்கள் கூட்டம் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தார்கள். குண்டடிபட்ட பலர் கடத்தப்பட்டு காணாமல் போயினர். ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மாணவர் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆக்ஸிலியானோ தனது கழிவறைக்குள் அமர்ந்திருக்கிறாள். கரும் மேகங்கள் நிலாவைச் சுற்றியிருப்பதைப் பார்க்கிறாள். பற்களை இழந்து சூனியக்காரக் கிழவி போலக் காட்சியளிக்கும் அவளது சாபங்கள் உச்சகட்டத்தை அடைக்கின்றன. தனது கழிவறையைத் தாண்டி, பல்கலைக்கழக வளாகத்தைக் கடந்து, மெக்ஸிகோவின் இருண்ட தெருக்களின் வழியே ஊரைத் தாண்டியிருந்த இருண்ட மலைவழியாக தனது குழந்தைகள் சூனியத்துக்குள் நுழைவதை அவள் பார்க்கிறாள். இதுவரை கவிதை வாசிப்பும், கலா ரசனையும் அவளது குழந்தைகளை காப்பாற்றும் காற்சிலம்பாக இருந்தது. இன்று அந்த அரண் உடைக்கப்பட்டது.
கதையைக் கூறத் தொடங்கும்போது மெக்ஸிகோ நாட்டுப் பல்கலைக்கழகம் மீண்டும் தொடங்கிவிட்டிருந்தது. அவள் இன்னமும் நான்காம் மாடி கழிப்பறையில் அடைபட்டுக்கிடக்கிறாள். அவளது உடல் அங்கு கிடந்தாலும், மனம் தொன்மங்களிலும் வரலாற்றின் இருண்ட சொதிகளிலும் விழுந்து கிடக்கிறது. வரலாற்றின் பக்கங்களிலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டதாக அவளது கதைகூறல் இருந்தாலும், அரூபமான விவரங்கள் நிகழ்வுகளை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன. வரலாற்றில் அழிவின் கோர முகத்தை ஆக்ஸிலியானோ மீட்டெடுக்கிறாள். கவிஞர்கள் உலகம் அவளை இந்த கோர நிகழ்விலிருந்து காப்பாற்றும் என எண்ணம் உடைபடுகிறது. தனது பிள்ளைகளைக் காப்பாற்றும் காப்பு என அவள் வகைப்படுத்தியிருந்த எதுவும் அவர்களை மீட்டுத் தரவில்லை.
இந்த நாவல் தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான ஒப்பந்தத்தைப் பற்றி பேசவில்லை. மாறாக, மெக்ஸிக்க கவிதைகளின் தாய் எனும் அடையாளத்தை இழக்கும் ஒரு தனி மனிதனின் அவலத்தைப் பேசுகிறது. கற்பனைகளாலும் கனவுகளாலும் நெய்யப்பட்ட ஒரு உலகம் தனக்குள் சரிகிறது. தன் அடையாளத்தைத் தக்கவைத்த, உயிர்பிடிப்போடு வாழவைத்த உலகம், நீரின் சலனத்தில் களையும் நிலவின் பிம்பம் போல உடைகிறது.
And although the song that I heard was about war, about the heroic deeds of a whole generation of young Latin Americans led to sacrifice, I knew that above and beyond all, it was about courage and mirrors, desire and pleasure.
And that song is our amulet.
நெருக்கமான கவிஞர்களைப் பற்றி ஆக்ஸிலியோ பேசும்போது அவளது நினைவு கற்பனையின் எல்லையைத் தொடுகிறது. அவளால் எதையும் முழுமையாக நினைவு கூட முடியவில்லை. கனவில் மிதப்பது போல் நினைவுகளை கற்பனையிலிருந்து உருவாக்க எத்தனிக்கிறாள். ஒரு கட்டத்தில் நினைவு எது, கற்பனை எது எனப் பிரித்தறிய முடியாத நிலையை அடைகிறாள். மெல்ல நினைவுகள் கற்பனையிலிருந்து புராணங்களாக மாறுகின்றன. வானத்தைத் துளைத்து விரிந்திருக்கும் மரத்தைப் போல ஒவ்வொரு நிகழ்வும் பூதாகரமாகத் தோன்றுகிறது. புராணங்களின் புதிர் தன்மை நிமித்திகனின் துர் சாபங்களைப் போல் தோன்றுகின்றன.
கழிப்பறையிலிருந்து பார்க்கும்போது அவளுக்குத் தெரிந்த ஒவ்வொரு சிறுவர்களும் பாட்டுப்பாடியபடி முடிவற்ற பள்ளத்தாக்கில் இறங்குகிறார்கள். அவர்களது பாடல்கள் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இத்தனை அழகானக் குழந்தைகள் தோளோடு தோள் சேர்த்தபடி பள்ளத்தாக்கின் இருட்டில் மறைவதைத் தடுக்க திராணியற்று ஆக்ஸிலியோ பார்த்தபடி இருக்கிறாள்.
ரொபெர்த்தோ பொலான்யோவைப் பொறுத்தவரை கவிஞர்களது உலகம் என்பது ஒரு உயிருள்ள மிருகம் போன்றது. ஆயிரம் கைகளும், பல்லாயிரம் சிந்தனைகளும் ஒன்றாக இயங்கி ஒரே இலக்கை நோக்கி பயணம் செய்யும் இயந்திரம். கவிதையின் உள்ளடக்கமும் உருவமும் அதில் மட்டும் முடிவதில்லை. கவிஞனின் உலகத்துள்ளும் ரசனையின் மிச்சங்கள் அடங்கியுள்ளன. அதனால் பொலான்யோவால் கவிதையின் ஒருவரியைக் கூட மேற்கோள் காட்டாமல் கவிஞர்களின் உலகத்தைப் பற்றி பேச முடிகிறது. கவிதையின் சாரத்தை கவிஞரின் வாழ்க்கையில் தேடிப்பார்க்க முடிகிறது.
ரொபெர்த்தோ பொலான்யோவின் மொழி மேலோட்டமாகப் பார்த்தால் மிக எளிமையானதாகத் தோன்றும். ஒவ்வொரு வரியாக அவர் கூடை பின்னுவதைப் போலப் பின்னுகிறார். குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருப்பவை என்ன எனும் சிறு எதிர்பார்ப்பு. மெல்ல அவர் அமைக்கும் கட்டமைப்பு புரிந்ததும் கிராண்ட் வடிவம் புலனாகிறது. அதுவரை விளங்காத வரிகளாகத் தோன்றும்.
From time to time I feel as though my books and figurines were with me still. But how could they be? Are they somehow floating around me or over my head? Have the figurines and books that I lost over the years dissolved into the ait of Mexico City? Have they become part of the ash that blows through the city from north to south and from east to west? Perhaps. First the poets, then love, then, when it seems to be sated and about to disperse, the cloud returns to hang high over your city or your mind, with a mysterious air that means it has no intention of moving.
ரொபெர்த்தோ பொலான்யோவின் உலகம் மறுப்புவாதிகளால் நிரம்பியதல்ல. மெக்ஸிக்கன் தெருக்களில் சாதாரணமாகக் காணப்படும் கவிஞர்கள் கொண்ட உலகம். கவிதை அலையில் மிதந்து வரும் சருகுகள். தடமில்லாமல் பறக்கும் பறவைகளின் பறத்தலுக்கு முன்னால் தத்துவங்களும் கோட்பாடுகளும் அவர்களை வசப்படுத்துவதில்லை. ஆக்ஸிலியோ கண்ட உண்மையும் இதுதான். கலை மீது அறிவு நடத்தும் தாக்குதல்களை தன் கண்முன்னே பார்த்த தலைமுறையில் ஒருவர் பொலான்யோ. ஆக்ஸிலியோவும் இந்த பேரழிவைப் பார்க்கிறாள். அவளைப் பொறுத்தவரை லாடெலோகோ சதுக்கத்தில் நடந்த வன்முறை கலை ரசனை மீது பெருமதிப்பு கொண்டிருந்த மாணவக் கலைஞர்கள் மீது சித்தாந்தவாதிகள் நடத்திய பழிவாங்கல் நடவடிக்கை மட்டுமே.
இதழ்-86 வெளியான கட்டுரையின் திருத்தப்பட்ட மீள்பதிவு
2 Replies to “நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet”