‘Luce’ -திரைப்பட விமர்சனம்

டாலீட் ப்ரௌன், ஜெஃப்ரி ஏ. டக்கர்
தமிழாக்கம்: கடலூர் வாசு

இந்நாட்களில் குறை சொல்வதென்றால், ஜனாதிபதியின் அரசியலைச் சற்றே மறந்தாலும் கூட, ஏராளமான சங்கதிகள் உள்ளன. அன்றாடச் செய்திகளை ஓரளவு படித்தாலே போதும் ஒன்று கூட சரியாக நடக்காதா எனும் எண்ணம் எழும். செய்திகள் மட்டுமல்ல, பல திரைப்படங்களும் இக்காலத்திற்கேற்றபடி அனைத்து மனக் கிளர்ச்சிகளையும் தூண்டுவதாகவே அமைந்துள்ளன.

ஆச்சரியகரமான வகையில், இவற்றுக்கு எதிர்மறையான ஒரு திரைப்படம் லூஸ். மக்களிடையே பிரபலமடையாமல் போனாலும், நினைவில் நின்ற மற்ற படங்களை போலல்லாமல், இப்படம் சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவை போலி அல்லது வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவையனைத்துமே நாமெல்லோரும் மறைக்க, அல்லது மறக்கப் பார்க்கும் பிரச்சினையால் எழுவன. அது, மனிதர்களெல்லோருமே குறையுள்ளவர்கள, தவறிழைப்பவர்கள் என்பதே.

படத்தின் மையக் கருத்தை பார்த்தால் இனத்தையும், இனவாதத்தையும் அலசப் போகிறது என்று நம்பத் தோன்றும். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வெள்ளையரான தம்பதிகள், ஆஃப்ரிக்காவில் யுத்தத்தில் சிதிலமடைந்த இடத்திலிருந்து, ஏழு வயதான, கருப்பரினத்துப் பையனைத் தத்தெடுத்துக் கொள்கின்றனர். அக்குழந்தையின் பெயரை மாற்றி லூஸ் எனும்பெயர் சூட்டி நீண்ட மனச் சிகிச்சைக்குப்பின், உயர்தரப் பள்ளிகளில் கல்வி கற்க அனுப்பி வைக்கிறார்கள். லூஸ் தற்சமயம் உயர்நிலைப் பள்ளியில் முதுநிலை மாணவன், விளையாட்டில் தீரன், படிப்பிலும் சூரன், பள்ளியிலேயே முதல் மாணாக்கனாக தேறும் வாய்ப்புள்ளவன், எல்லோராலும் நல்லவன் என்று பேசப்படுபவன், மற்ற மாணவர்கள் மெச்சும்படியானவன், சமூக விழிப்புணர்வுள்ள அவனது வளர்ப்புப் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தவன்.

ஆனால் நாம் காணும் லூஸின் உள்ளே ஒரு பூசல். அது என்னவாக இருக்கும்? பழகிப் போன அனுமானங்களையே நாம் எதிர்பார்க்கிறோம். தன் இன அடையாளத்தை மறந்துவிட்டானோ? சிறு வயது நினைவுகள் மனத்தைக் குழப்புகின்றனவோ? தனது நிறத்தைப் பற்றியும், சூழலில் அதன் பொருள்தான் என்ன என்றும் அடிக்கடி எண்ணுகிறானோ? வெள்ளைச் சிறுவரைப் போல ஏன் வளர்க்கப்பட்டோம் என்று மனம் குழம்புகிறானோ? இவற்றையும், இனஅடையாளத்தைத் துறந்த வேதனையையும், அதனை அவன் திரும்பப் பெறுவதையும் நாம் காணப் போகிறோம் என நினைத்துக் கொண்டிருக்கும்போது கதை வேறு விதமாக செல்கிறது.

லூஸும் அவன் வளர்ப்புப் பெற்றோர்களும் ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கும் குடும்பம் என்று தெரிய வருகிறது. பள்ளியிலும் எல்லா இனத்தவர்களையும் பார்க்கிறோம். பார்க்கப் போனால், லூஸிடம் அடிக்கடி வாதம் செய்யும் ஆசிரியை ஒரு கருப்புப் பெண்மணி. அவ்வாசிரியை கருப்பு மாணவர்களை மட்டுமே இழிவுபடுத்துவதைக் காணும்போது, இவள் தன்னைத்தானே வெறுப்பவள் என்பதை உறுதிப்படுத்தச் சில காட்சிகளைக் காண்போம் என்று நினைத்தால் அது தவறு என்பது போல் படம் பிறகு அப்பக்கமே செல்வதில்லை.

வகுப்பின் வேலையாக, ஒரு சிறந்த வரலாற்று மனிதரைப் பற்றி கட்டுரை எழுதப் பணிக்கப்படும்போது, வன்முறையின் கட்டாயத் தேவையை வலியுறுத்தும் ஒரு புரட்சியாளரைப் பற்றி எழுதிய கட்டுரையிலிருந்துதான் லூஸிற்கு பள்ளியில் இடர்கள் ஆரம்பமாகின்றன. கட்டுரை நன்றாக அமைந்திருந்தபோதிலும் ஆசிரியர் அவனது பெற்றோர்களை வரவழைத்து, லூஸிற்கு மனச்சிக்கலோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதைப் பற்றி மிகுந்த கற்பனைகளோ இருக்கலாம், அதனால் அவனை கண்காணிப்புப் பட்டியலில் இருத்த வேண்டியதாகவுள்ளது என்று கூறுகிறார். இம்முடிவினால் லூஸ் பாதிக்கப்பட்டு பள்ளி மாணவர்களை சுட்டுக் தள்ளப் போகிறான், அல்லது தேவையற்ற கண்காணிப்பு முறைகள் அவனது படைப்புத் திறனையும் முன்னேற்றத்தையும் எவ்வாறு தடை போடுகின்றன என்பதைப் பார்க்கப் போகிறோம் என்று பார்வையாளர்களின் மனம் எதிர்பார்க்கத் துவங்கும் சமயம் படம் வேறு திசையில் செல்ல ஆரம்பிக்கிறது.

ஆசிரியர்களும் மாணவர்களும் எவ்வாறு சூட்டிகை செல்பேசிகளுடன் வீணாக நேரத்தை செலவழிக்கின்றனர் என்பதை காண்கிறோம்.சமூக வலைத்தளங்களுக்கு செல்வதிலும், எழுதுவதிலும் மற்றவர்கள் எழுதுவதை, பகிர்வதைப் படிப்பதிலும் நேரம் கழிப்பதும், இவையொன்றும் இல்லாத சமயத்தில் செல்பேசியை அன்போடு தடவிக் கொடுத்துக் கொண்டேயிருப்பதும், தூங்கும் சமயத்தில் தலையணை கீழே பத்திரப்படுத்துவதும் காட்சிகளாகின்றன. சமூக வலைத்தளங்களின் உரையாடல்களும், ஊடல்களும், மனத்தில் எவ்வாறு தவறான பாதிப்புகளையும், கிளர்ச்சிகளையும் பதிய வைக்கின்றன ஆகியன சித்திரமாகின்றன. படப் பார்வையாளர்கள் சூட்டிகை தொலைபேசி, தொழில் நுட்பம் இவைகளின் துஷ்பிரயோகத் தாக்குதலை அலசப் போகிறது என்று நினைக்கையில், பார்வையாளர்களின் கவனம் வேறொரு பக்கம் செலுத்தப்படுகிறது.

படத்தில் வயது வந்தவர்கள் தொடர்ந்து மது அருந்தும் காட்சிகள்; கேளிக்கையா, மன அமைதியின்மையா, வலி நிவாரணமா, சச்சரவுகளை மறக்க வேண்டுமா எதற்கும் மதுவே கதி என்றிருப்பதை காண்கிறோம். வயதிற்கு வராத மாணவர்களும், மாணவிகளும், மதுவையும், மற்ற லாகிரிப் பொருட்களையும் உபயோகப்படுத்துவதற்குத் தயங்குவதில்லை என்ற காட்சிகள். அது மட்டுமல்லாமல் மாணவர்களிடையே பாலியல் தொடர்பு, மாணவர் மாணவிகள் சேர்ந்திருக்கும் சமயம் பாலியல் வன்முறை நடந்ததாக கிளம்பும் வதந்திகள் ஆகியவையும் தொடர்கின்றன
அடுத்த கட்டம் மனோவியாதி; மனச்சிதைவினால் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் தங்கை மன அதிர்ச்சியினால் மருத்துவ மனையில் சேர்க்கப்படும் காட்சி; தம்பதிகளிடையே அரசியல் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் மனத்தாங்கல்கள்; மகனோ மகளோ வகுப்பில் முதலாவதாக தேறினால்தான் உயர்ந்த பதவிகள் அவர்களைத் தேடி வரும் எனும் ஆதங்கத்தினால் பெற்றோர்கள் கொடுக்கும் அர்த்தமற்ற நெருக்கடிகள்; அவ்விடத்தைப் பிடிக்க விழையும் மாணவர்கள் அதற்காக செலுத்தும் விலை ஆகிய அனைத்துமே இப்படத்தில் இடம் பெறுகின்றன.

மேற்கூறிய இடர்களிலிருந்து விடுவித்துக் கொள்ள லூஸ் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குச் சக மாணவர்களிடமிருந்து பெறுவது அவர்களின் பொறாமை. லூசிடம் பெற்றோர்களின் எதிர்பார்ப்பது குறைவற்ற மகன; ஆசியர்கள் எதிர்பார்ப்பது தலைசிறந்த மாணவன்; தலைமை ஆசிரியர் எதிர்பார்ப்பது லூஸ் பள்ளிக்கே ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென்பது. லுசிற்கு இவையெல்லாமே சுலபமாகவே அடையக் கூடியவைதான். லூசின் எதிர்காலத்திலேயே குறியாக இருக்கும் பள்ளி மற்ற மாணவர்களின் எதிர்காலத்தை அறவே புறக்கணிக்கிறது. மேலும், லூஸை மேலே இருத்துவதால், இதர கருப்பு மாணவர்கள் கீழானவர்களாக பார்வையாளர்களுக்குத் தோன்றுகிறார்கள்.

லூஸ் இப்படத்தில் பிற்கால ஒபாமாவாக இதர கருப்பு மாணவரால் சித்திரிக்கப்படுகிறான். புறநகரில் பிரதானமாகவுள்ள வெள்ளை சமூகக் கலாச்சாரத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் திறன் படைத்தவன் லூஸ் என்பது ஒருபுறமிருக்க, அவனது ஆசிரியரும் கருப்பு இனத்தவரின் முன்னேற்றத்திற்கு அது முக்கியம் என்று வலியுறுத்துகிறார். ஆனால் இதற்காக அவன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவனுடைய கருப்பு நண்பர்க்களிடமிருந்து அவனைப் பிரிக்கின்றன. மேலும் அவனை ஆதரிக்கும் மக்களும், நிறுவனங்களும், இதர கருப்பு மாணவர்களை ஒருமித்தமாக அவமதிப்பதும், அதில் அவனுடைய பங்கை அறியும்போது லூசின் இளம்பிராய நம்பிக்கைகள் சிதறுகின்றன. படத்தின் இப்போக்கு நடப்பியல் பிரச்சினைகள் சிக்கல் மிகுந்த முடிச்சு என்பதைக் காட்டுவதற்காகவே என்பது போலுள்ளது

இத்திரைப்படம் எந்த ஒரு குறிப்பிட்ட இலக்கையும் நோக்கி செல்லவில்லை என்பது ரசிகர்களின் உள்ளத்தில் மெதுவாகவே இறங்குகிறது. இப்படத்தில் காணும் பிரச்சினைகள் எல்லாமே யதார்த்த சம்பவங்கள். இவையெல்லாவற்றிற்கும் பங்கிருந்தாலும் தலையாயதென்று எதுவுமே இல்லை என்ற பாதையிலேயே இத்திரைப்படம் செல்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனும் மூவரை உள்ளடக்கிய சிறிய வட்டத்துக்குள் நடைபெறும் சம்பவங்களினால் உண்டாகும் மனவருத்தம்,வேதனை, சிக்கல்கள், சச்சரவுகள் அனைத்துமே வட்டத்திற்கு வெளியேயும் அன்றாடம் நடக்கும் உண்மைச் சம்பவங்களையே பிரதிபலிக்கின்றன.

நாம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்காத அவ்வுண்மைகள்தான் என்ன? இவ்வுலகம் அருட்தொண்டர்களாலும் சூனியக்காரர்களாலும் நிரப்பப்பட்டதல்ல. சாதாரண மனிதர்களே நிரம்பியிருக்கிறார்கள் அவர்கள் எல்லோருமே எல்லா துறைகளிலும் மேன்மையடைந்தவர்களல்ல. சில துறைகளில் உயர்ந்தும் பல துறைகளில் தாழ்ந்தவர்களுமாகவே இருக்கிறார்கள். அவர்களின் நடத்தையும் அவர்களை ஊக்குவிக்கும் காரணங்களைப் பொறுத்து, நேர்வழியையோ, குறுக்குவழியையோ பின்பற்றுகிறது.

இத்திரைப்படத்துப் பாத்திரங்கள் அனைவரும் இதைத்தான் சித்திரிக்கின்றனர். ஆனால் நாம் காணும் சமூகச் சீர்கேடுகளுக்கெல்லாம் நம்மைத் தவிர வேறு யாரோ ஒருவர்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று அந்த ஒருவரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் வீணாகக் காலத்தை கழிப்பதால் இந்த எளிய உண்மையை மறக்கிறோம் அல்லது மறைக்கிறோம். இந்த உண்மை பார்வையாளர்களின் மனதில் உதயமான பின்தான் இப்படம் மனதைக் கவர்வதாகவும், மிகுந்த திருப்தியளிப்பதாகவும் அமைகிறது.

இப்படத்தின் சாதாரணத்துவமும், எதிர்பாராத திருப்பங்களுமே திரையரங்கிலிருந்து வெளியே எடுத்துச் செல்லக்கூடிய முக்கியமான விஷயங்கள். இதை அலசுவதிலேயே ஒரு மாலைப்பொழுதில் பல மணி நேரங்களை கடத்த முடியும்

இவ்வுலகில் நாம் காணச்சகியாத கொடுமைகளுக்குப் பஞ்சமேயில்லை. பிற இனக் காழ்ப்பு, அழிப்பு, தாய்நாட்டிலிருந்து வெளியேற வேண்டிய அவலம், வேற்றுநாட்டவருடன் ஒருங்கிணைய வேண்டிய கட்டாயம், மது மற்றும் போதைப்பொருட்களுக்கு ஆட்படுதல், பாலியல் கொடூரம், புதிது புதிதாக அறிமுகமாகும் தொழில் நுட்பங்கள் உண்டாக்கும் மனக்கிளர்ச்சி, வர்த்தகங்களின் வரையறையற்ற கண்காணிப்புகள், மாணவர்களுக்குப் பள்ளிகளில் ஏற்படும் இடர்கள், நிர்ப்பந்தங்கள், மணமானவர்களிடையே ஏற்படும் மனத்தாங்கல்கள், பிளவுகள் என அடுக்கிக் கொண்டேபோகலாம்.

இப்பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முடிவு உண்டு. முடிவு கண்டால் இவ்வுலகம் தூய்மையானதாகவும் துயரற்றதாகவும் மாறி விடும் என்று நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் தீராத பேராசை பெரும்பாலும் நிராசையில்தான் முடிவுறும். ஏனென்றால் இவ்வுலகம் எப்போதுமே குறைபாடுள்ளது. இதன் காரணம் இதில் வாழும் மனிதர்களெல்லாம் குறைபாடுள்ளவர்கள் என்பதே. இச்சாதாரண கண்ணோட்டம் இப்படத்தின் மூலம் திடீரென வெளிப்படும்போது மனக்கிலேசத்தை உண்டுபண்ணுகிறது.

லூஸ் ஆழமாக மனதைக் கிளறும் ஒரு திரைப்படம். இது செல்லும் பாதை மற்றப் படங்களை போல் சொகுசானதல்ல, மிகவும் கரடுமுரடானது. மற்றவர்களை உச்சாணிக்கொம்பில் வைப்பதற்கோ, படுகுழியில் தள்ளுவதற்கோ நாம் செய்யும் முயற்சிகளெல்லாம் வெற்றுத்தேடல் மட்டுமல்ல. அவையாவும் நம்முடைய சொந்த பிரச்சினைகளுக்கு நம்மால் தீர்வு காண இயலாததை மூடி மறைப்பதற்கே என்ற கசப்பான உண்மையை மூடி மறைக்காமல் இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது


குறிப்புகள்:
இக்கட்டுரையின் இங்கிலிஷ் மூலம்:
Luce Brings Light to the Age of Anxiety
Harwood Economic Review;
Society & Culture, Winter 2020; Volume4,Issue 1
எழுதியவர்கள்: Taleed Brown & Jeffrey A Tucker.
தமிழாக்கம்: கடலூர் வாசு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.