வேலைக்கு ஆள் தேவை

This entry is part 14 of 17 in the series 20xx கதைகள்

சனிக்கிழமை என்றாலும் கிழக்கே பார்த்த ஜன்னலில் நரை தெரியுமுன் விழித்து அவன் ஆவலுடன் காத்திருந்த டிங். அலைபேசி ஒளிர்ந்ததும் ராகுலின் முகத்திலும் பிரகாசம்.  

 நாங்கள் விமானத்தில் ஏறத் தயார்! 

லண்டனில் விமானம் மாற நூற்றுப் பத்து நிமிட இடைநேரம் போதுமா என்கிற கவலைக்குப் பதில், இன்னும் பன்னிரண்டு மணிகள்தான் என்ற நிம்மதி. அதை அனுபவித்து முடிப்பதற்குள் இன்னொரு டிங். 

உனக்கு ஒரு பரிசு கொண்டு வருகிறேன்!  

பிரிவின் முடிவில் அவளே அவனுக்கு ஒரு பரிசுதான்.    

இரண்டு மாதப் பிரிவு, அதுவும் திருமணத்துக்கு முன்னால்.  அவ்வளவு நீண்ட இந்தியப் பயணம் அவசியமா? 

“என் அம்மாவின் ஆசைக்காக” என்றாள் ஸ்வேதா.  

அவள் தம்பி அஷ்வினின் திருமணம் ஒரு சர்ச்சில். அது மணப்பெண்ணின் விருப்பம், மாப்பிள்ளைக்கும் (பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்ததால்) பிடித்துவிட்ட வைபவம். சடங்கைவிட அதைத் தொடர்ந்த விருந்துக்கு பத்து மடங்கு நேரம்.  

முருகன் அருளில், பிள்ளையார் சன்னிதியில் ஆரம்பித்த சம்பந்தம் திருமணத்தில் முடியப்போகிறது. அது பிள்ளையார் கோவிலில், ஹோமம் வளர்த்து, புரோகிதர் மந்திரம் ஓத, ஹிந்து சம்பிரதாயப்படி நடந்தால் சங்கீதாவுக்கு இன்னும் சந்தோஷம். அதற்காக… இந்தியாவில் இருந்து அவள் திருமாங்கல்யத்தைச் செய்த அதே ஆச்சாரியிடம் தாலி. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசாக பட்டுப் புடவைகள், குர்தாக்கள், வெள்ளிப் பிள்ளையார் சிலைகள்.  

அவளுடன் ஸ்வேதாவும். 

“அம்மாவுக்கு உதவி செய்ய அங்கே  ஓர் அண்ணன், ஒரு தம்பி. நீ கூட எதற்கு?”  

ஸ்வேதாவின் ‘லோ-இம்பாக்ட் குக்கிங்’ ஓரளவு பிரபலம் அடைய, பள்ளிக்கூடங்களின் உணவுக்கான செலவினம் 20 சதம் வெட்டப்பட, இரண்டும் சேர்ந்து சான்டியாகோ வட்டத்தின் மாணவர் மதிய உணவு மேற்பார்வையாளர் பதவி அவளைத் தேடிவர. 

“பத்து வாரக் கோடை விடுமுறை. இங்கே என்ன செய்யப்போறேன்? திரும்பி வந்ததும் தலைக்கு மேலே வேலை. சாப்பாட்டு சாமான்களை வாங்குவதிலும் அவற்றை சமைப்பதிலும் பணம் மிச்சம் பிடித்து அதே சமயம் தரம் குறையாமல் பார்த்துக்கொண்டு…”  

“அங்கே போரடிக்காது?”  

“ஊகும். ஸ்வேதாவுக்கு முப்பது வயசாயிடுத்தே, எப்ப மாப்பிள்ளை கிடைத்து எப்ப குழந்தை பெற்றுக்கொள்வது என்று கவலைப்பட்ட மாமி மாமாக்களைப் பார்த்து கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து என்று சொல்ல காலம் ஓடிவிடும். உனக்கு…”  

“மெக்ஸிகன் உணவகத்துக்கு ஏற்ற மாதிரி ‘மசாலாமாடிக்’கில் சில மாற்றங்கள் செய்து இருக்கிறேன். அது ரொமேரோ மெக்ஸிகன் க்ரில்லுக்குப் பிடித்துவிட்டது.”  

“அதை வைத்து மற்ற கடைகளுக்கும்…”  

“அதில் நேரம் போய்விடும்.” 

“நான் இல்லாதபோது என் இடத்தை வந்து பார்த்துக்கொள்!” 

“வாரக் கடைசியில்.” 

முதல் மாதம் திட்டமிட்டதுபோல போனது. எல்.ஏ. நகரத்தில் அலைந்த அலுப்பைக் குறைக்க தினம் இரவு எட்டு மணி வாக்கில் ஸ்வேதாவுடன் சின்ன அரட்டை.  

“தின்னியம் கோவில் போனோம். அங்கேதான் அம்மா உன்னை முதலில் பார்த்தாள்.” 

“அவள் என் சித்தப்பாவுடன் பேசியதைக் கவனித்தேன். இப்படி அது முடியும் என்று அப்போது தெரியாது.” 

“அதில்தான் வாழ்க்கையின் சுவாரசியம்.” 

“ஒரு மாதத்தில் இருபது ‘மசாலாமாடிக்’ விற்றுவிட்டேன்.” 

“சந்தோஷம்!” 

“அதைவிட சந்தோஷமான செய்தி. கார்ல்ஸ்பேட் அலுவலகத்தில் ஒரு நடுமட்ட நிர்வாக வேலை காலி. அதுபற்றி ஜேன் க்ரூஸின் காதில் ஒரு வார்த்தை போட்டு இருக்கிறேன்.”  

ஜேன் அவன் நேரடி பாஸ். அவன்மேல் அசாத்திய நம்பிக்கை. அவன் விருப்பம் நிறைவேறிய மாதிரிதான்.  

“நீ கலிஃபோர்னியா முழுக்க அலைய வேண்டாம்.” 

“விடுதிகளில் தங்கி வெளியில் சாப்பிட்டு அலுத்துவிட்டது.”  

“அப்போ, சான்டியாகோவின் வடக்கே வீடு பார்க்கலாமே. இரண்டு பேருக்கும் சௌகரியமாக.”  

“பார்த்து இருக்கிறேன். லஹோயா வில்லேஜில்.” 

“ம்ம்.. நான் இல்லாமல் உனக்கு நிறைய நேரம்” என வம்புக்கு இழுத்தாள்.  

“எழுபதில் கட்டியது, ஆனால் ரசனையுடன் புதுப்பித்தது. வீட்டைச் சுற்றிய மரங்களும் மலையும் நல்ல அழகு. விவரங்கள் அனுப்புகிறேன். முதல் ஆறு மாதம் வாடகைக்கு. நீயும் விருப்பப்பட்டால் வாங்கலாம்.” 

“வீட்டின் படங்களை அம்மாவிடம் காட்டினேன். அவளுக்கும் பிடித்து இருக்கிறது. மூவாயிரம் சதுர அடி நமக்குக் கொஞ்சம் பெரிது…” 

“வயதான பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள நேரிட்டால் உதவியாக இருக்கும்.”  

“எனக்கும் அந்த சமாதானம். முன்பணத்துக்கு…”  

“என் சேமிப்பு, அப்பாவின் அன்பளிப்பு.”  

“அப்போ என் அபார்ட்மென்ட்…”  

“அதைக் காலி செய்து நீ வருவதற்குள் சாமான்களை வீட்டிற்கு மாற்றிவிடுவேன்.”  

“நமக்கு புது வீட்டில் புதுக் குடித்தனம்!”  

குச்சினா-க்ராஃப்ட்டின் தலைமை அலுவலகம் சாக்ரமென்ட்டோவில். ராகுல் வேலையில் சேர்ந்த முதல் நான்கு ஆண்டுகள் ‘சப்பாத்திஷெஃப்’பின் திட்டமிடல், அதற்கான பொருட்களை சேகரித்தல், மற்றும் பாகங்களை ஒன்று சேர்த்தல். அதைத் தொடர்ந்து ‘மசாலாமாடிக்’. கடந்த பதினெட்டு மாதங்கள் அவற்றின் பெருமையைப் பரப்பி விற்பதில். கணக்கு சமர்ப்பிக்க மாதம் ஒரு முறை சாக்ரமென்ட்டோவுக்கு வருகை தருவது வழக்கம். 

ஜூலை நான்கு விடுமுறையின்போது விமானத்தில் பயணிக்காமல் தன் வேனை ஓட்டி வந்தான். அவன் அலுவலகத்தை கார்ல்ஸ்பேடுக்கு மாற்ற சௌகரியம். 

அப்பாவிடம் இருந்து ‘உடனே கூப்பிடு!’ என்ற அவசர அழைப்பு. அடுத்து வந்த ஓய்விடத்தில் நிறுத்தி அவருடன் தொடர்புகொண்டான். 

“ராகுல்! இப்போ எங்கே இருக்கே?” 

“டேவிஸ் கிட்ட.” 

“ஸ்வேதா எப்போ திரும்பி வரா?” 

“இந்த மாதக் கடைசியில்.” 

ஒரு இடைவெளிக்குப் பின், 

“உன்னைத் தயார் செய்யத்தான் சொல்றேன். கவனமாக் கேள்!” என்றார் கனமான குரலில். 

“சொல்லுப்பா!”  

“நாளையிலேர்ந்து குச்சினா-க்ராஃப்ட்டுக்கும் உனக்கும் உறவு இருக்காதுன்னு நினைக்கிறேன்.” 

“ஒஓ!” 

“அப்படி இல்லாட்டா ஒரு ப்ளான். நீ சாக்ரமென்ட்டோ போனதும், இல்ல இப்பவே… தென் கலிஃபோர்னியாவில நீ யாருக்கெல்லாம் மெஷின் வித்தியோ அவங்க எல்லாரோட பெயரையும் டெலிஃபோன் நம்பரையும் சேகரம் பண்ணி உன்னோட சொந்த ஐ-பாட்ல இறக்கி வச்சுக்கோ! கம்பெனிலேர்ந்து வெளிலே வந்ததும் நீ அந்த லிஸ்ட்டில பத்துப் பதினைந்து ரெஸ்டாரன்ட்டுக்கு சர்வீஸ்-கான்ட்ராக்ட் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். அதுக்கு உதவியா அடிக்கடி கெட்டுப்போகும் உபரி பாகங்களை வாங்கி வைத்துக்கொள்!” 

“இப்பவே செய்யறேன்.” 

குட் லக்!” 

பயணத்தின் முடிவில், தந்தை எச்சரித்தபடி ஒரு மாதத்திற்குள் பல மாற்றங்கள். வளாகத்தின் அறிவிப்புப் பலகையில் ‘குச்சினா-க்ராஃப்ட்’டுக்குக் கீழே ‘யுனைடெட்-ஆக்ரோவின் ஓர் அங்கம்’ என்கிற புதிய சொந்தம். வரவேற்பு மங்கை அவனைப் பார்த்து புன்னகைத்தாலும் நலம் விசாரிக்கவில்லை. உள்ளே பல புதிய முகங்கள், அடங்கிய உரையாடல்கள். யாருக்கும் அவன் ஒரு மாதத்தில் இருபது ‘மசாலாமாடிக்’ விற்றதைக் கேட்க ஆர்வம் இல்லை. முக்கியமாக, ஜேன் க்ரூஸ் இல்லை. விடுமுறையில் இருப்பதாக அவள் செயலர் தெரிவித்தாள். ‘அவள் பொதுவாக ஆகஸ்ட் நடுவில்தானே குழந்தைகளுடன் ஐரோப்பா போவாள்’ என்கிற சந்தேகக் கேள்வி மனதில் தங்கியது. 

கோடியில் அவன் சிறிய அலுவலக அறை. அதன் கதவைத் திறக்க முயற்சித்தபோது அது தானாகவே  திறந்தது. இருபத்தி நான்கு மணிநேர செய்தி சான்னலின் நட்சத்திரம் போல ஒருவன். 

“நீ… ராகுல்…” 

“யெஸ்.” 

“நான் க்ரிட்.”  

அறிமுகம் அவ்வளவு போதும். 

தரையில் அடுக்கியிருந்த இரண்டு அட்டைப் பெட்டிகளைக் காட்டினான். 

அவன் சாமான்கள். 

அத்துடன் ஒரு காகித உறை. 

“இதில் உன் கடைசி சம்பளமும், விடுப்பு வருமானமும்.”   

மற்றவன் கேட்காவிட்டாலும், ராகுல் நிறுவனத்துக்குச் சொந்தமான மடிக்கணினி, ஐ-பேட், ஐ-ஃபோன் மூன்றையும் மேஜைமேல் வைத்தான். தோள்பையும் கம்பெனி அடையாளம் பொறித்த நீல ஜாக்கெட்டும் இனி அவனுக்கு அவசியம் இல்லை.  

வெளியே பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்தவந்து வேனின் பின்னால் வைத்தான். உறையைப் பிரித்தான். வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட டாலர், ஒன்றைத் தொடர்ந்து ஐந்து இலக்கங்கள். 

ஊரைத் தாண்டியதும் அதற்கும் ஒரு பை!  

கல்லூரியில் படித்தபோது மூன்று கோடை விடுமுறையிலும் பத்து வார வேலை. ஆராய்ச்சிக்கூடங்களில். எதிர்பார்ப்புகளுடன் நுழைவு. புதிய செய்முறைகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம். ‘தொந்தரவு தராமல் ஒதுங்கிப்போ!’ என்கிற ஒரு சிலரின் அலட்சியம். முன்பே தீர்மானித்த கடைசி வெள்ளிக்கிழமை. எல்லாருக்கும் தாங்க்ஸ்! பை! குட் லக்! ஏமாற்றமும் வருத்தமும் இல்லாத முடிவு.    

பட்டம் பெற்றதும் முதல் வேலை அரசாங்க ஒப்பந்தத்தில் ஓடிய ஒரு நிறுவனத்தில். அவர்கள் ஆதரித்த அரசியல்வாதி தேர்தலில் தோற்றதால், பற்றுவைக்கு முன்பே பதவி முடிந்தது.  

‘குச்சினா-க்ராஃப்ட்’டின் அதிவேக வளர்ச்சியில் தனக்கும் ஒரு பங்கு என்று ராகுல் நினைத்ததால் வேலை நிரந்தரம் என அடிமனதில் ஒரு நிச்சயம். அது இல்லாமல் போனதால் விரக்தி. அடுத்து வந்த சில வாரங்களில் அது ஏமாற்றமாக மாறியது. பதினோரு ஆண்டுகளுக்கு முந்திய பொருளாதாரத் தாழ்வின்போது அவன் மாணவன். அவனை அது பாதிக்கவில்லை. இப்போதைய பொருளாதார சுருக்கத்தின் இறுக்கத்தை முழுமையாக உணர்ந்தான். அவனுடைய அனுபவமும் அறிவுமே அவனுக்குப் பகை. 

ஸ்வேதாவுடனான உரையாடலில் சிறு மாற்றம். 

“சான்டியாகோ பாட்ரேஸ் ஐந்து ஆட்டங்கள் தொடர்ந்து ஜெயித்து இருக்கிறார்கள்.” 

“கொண்டாட வேண்டியதுதான்.” 

“இங்கே பகலில் எழுபது டிகிரி (21 டிகிரி சென்டிக்ரேட்).” 

“இங்கே கொளுத்தறது.” 

“கார்ல்ஸ்பேட் மாற்றல் என்னாச்சு? 

“சான்டியாகோவுக்கு என் சாமான்களைக் கொண்டுவந்துவிட்டேன்.” 

பன்னிரண்டு மணி நேரத்தின் நடையைத் துரிதப்படுத்த ராகுல் வீட்டைப் பெருக்கி தூசி தட்டி புத்தகங்களையும் பாத்திரங்களையும் ஒழுங்குபடுத்தினான். முன்னறையில் காற்று அடைக்கக்கூடிய ஒரு மெத்தையின் உறையைத் துவைத்து உலர்த்தினான். விமானம் அட்லான்டிக் பெருங்கடலைத் தாண்டியிருக்கும். ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்கி வந்து அவற்றுக்கு இடம் கண்டுபிடித்தான். சப்பாத்திக்கு கையால் மாவு பிசைந்து வைத்தான். தொட்டுக்கொள்ள நீண்ட  கத்தரிக்காய், சிவப்பு வெங்காயம், பச்சை  தக்காளி கலந்த மசாலா… 

விமானம் தரையைத்தொட்டுவிட்டது. 

வெளியே போகும் உடையில் அவன் தயார். 

குடியேற்ற சம்பிரதாயம் முடிந்தது. 

அவர்கள் பெட்டிகளைச் சேகரித்து வர வேண்டியதுதான். வீட்டில் இருந்து வேனைக் கிளப்பினான். விமான நிலையத்து பன்னாட்டு வருகையின் பாதையோரத்தில் அது மெதுவாக நகர்ந்து ஸ்வேதாவையும் அவள் தாயையும் பார்த்து நின்றது. அதை ஓரமாக நிறுத்திவிட்டு ராகுல் இறங்கினான். 

ஸ்வேதாவின் தோற்றத்தில் மெருகு கூடியிருந்தது. எதனால்? கலைந்த கூந்தலும், முக்கால் கை சட்டையும் கொடுத்த அழகா? இல்லை, பிரிவினால் வந்த புதுமையா?  

சங்கீதாவின் முகத்தில் இரண்டு மாத அலைச்சலையும் விமானப் பயணத்தையும் மீறி திருப்தியான சந்தோஷம்.  “சென்னை ஃப்ளைட் பத்து நிமிஷம் முன்னாடியே வந்து உதவி பண்ணித்து,” என்றாள். 

அவர்கள் பெட்டிகளையும் தோள்பைகளையும் ராகுல் வேனின் பின்னால் அடுக்கினான்.

“ராகுல்! நீ என் பெண்ணுக்கு முத்தம் கொடுக்கலாம்.”  

“தாங்க்ஸ், மாம்!” என்று அதைச் செய்தான்.  

“எனக்கு அது, நம் குழந்தைக்கு?” என்று அவள் புதிரான புன்னகையுடன் சொல்ல, இடையை அணைத்து வயிற்றின் மேலும் ஒன்று. 

ஸ்வேதாவை முன்-இருக்கையில் அமர்த்தி பெல்ட்டை மெதுவாக இறுக்கினான். சங்கீதாவுக்கு பின் கதவைத்திறந்தான். 

வேன் கிளம்பியதும், 

“போன உடனே எனக்கு பீரியட்ஸ் வந்திருக்கணும். அலைச்சலால் தள்ளிப்போய்விட்டது என நினைத்தேன். பிறகு என் கல்லூரித் தோழி, இப்போது டாக்டர் சுனிதா…” 

அவளைப் பார்க்க ஸ்வேதா அடிக்கடி போனதன் காரணம் சங்கீதாவுக்குத் தெரிந்தது.   

“ஒரு மாத முன்பே நிச்சயம் என சொல்லிவிட்டாள்.”

நழுவிய நாலைந்து மௌன நிமிடங்கள். மூவருக்கும் தனித்தனி யோசனை. 

அந்த சந்தோஷச் செய்தியை ராகுலிடம் நேரில் சொல்வதுதான் நியாயம். 

ஐந்து இலக்க வருமான வேலை இல்லாவிட்டால் என்ன? 

இரண்டாகப் பிரியத் தொடங்கிய கருவுற்ற செல் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றப்போகிறது! 

விமான நிலையத்தை பிரதட்சணம் செய்து வாஷிங்டன் தெருவில் நுழைந்து இரண்டு போக்குவரத்து விளக்குகளைத் தாண்டியதும்,  

“ஃப்ரீவே பிடிக்கணுமே, மறந்துபோயிட்டியா?”  

லஹோயா வில்லேஜில் அவன் பார்த்து வைத்திருந்த புதிய வீட்டிற்கு ஐந்து நெடுஞ்சாலையில் வடக்கே பத்து மைல். 

“பழக்கத்தினால் மறக்கல. இப்ப உன் பழைய வீட்டுக்குத்தான் போறோம்.”  

“ஏன்?” 

“நீண்ட கதையைச் சுருக்கிச் சொல்கிறேன்” என்ற முன்னுரையுடன், “இந்தியாவில் அலையும்போது எனக்கு உலக செய்திகளைத் தெரிந்துகொள்ள அவ்வளவாக ஆர்வம் இராது. உனக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.” 

“எதைச் சொல்கிறாய்?” 

“வணிக உலகம்…”  

“பங்கு விலைகள் குறைந்ததாகக் கேள்விப்பட்டேன்.”   

“ஐந்து வாரங்களுக்கு முன்னால் அப்படி ஆரம்பித்தது. கொஞ்ச காலமாகவே பொருளாதாரத்தில் பல ஓட்டைகள். அவற்றை அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் மூடி மறைத்ததாக அப்பா சொன்னார். எவ்வளவு நாள் அப்படி செய்ய முடியும்? யு.கே.யில் பொருள்களை வாங்கும் சக்தி மக்களிடம் பாதியாகக் குறைந்துவிட்டது.”  

“அங்கே ‘சப்பாத்திஷெஃப்’ எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகாததால் ‘குச்சினா-க்ராஃப்ட்’டுக்கு நஷ்டம்.”  

“அத்துடன், அதை யுனைடெட்-ஆக்ரோ விழுங்கிவிட்டது.”  

“நீ அவர்களுக்கு வேண்டாம்.” 

“இந்த ஒரு மாதத்தில் நான் கண்டுபிடித்தது, நான் யாருக்குமே வேண்டாம்.”  

வேன் ஸ்வேதாவின் சிறிய இல்லத்தின் முன் வந்து நின்றது. அவள் ராகுலின் தோள்மேல் அணைப்பதுபோல கைவைத்தாள். 

“அப்படிச் சொல்லாதே! நீ எனக்கு எப்போதுமே வேண்டும்.”  

“எனக்கு அதில் எந்த சந்தேகமும் கிடையாது.”  

“பணத்தைப் பற்றியும் கவலைப்படாதே! என் சம்பளத்தில் நாம் தாராளமாக வாழலாம்.”  

“அதற்காக, இந்த ஒரு மாதத்தில் என்னைத் தயார்செய்தேன்.”  

“எப்படி?” 

தந்தையின் அறிவுரையைச் சொல்லிவிட்டு, 

“மாயாபஸாரின் இரண்டு இயந்திரங்களையும் மாதம் ஒரு முறை சோதித்து சீரான நிலைமையில் வைக்க வேண்டும். தகராறு கொடுத்தால் உடனே கவனிக்க வேண்டும். அதைப்போல பக்கத்தில் இன்னும் ஒரு சில விடுதிகளுடன் ஒப்பந்தம்.”  

“அந்த வருமானம் வீட்டு வாடகைக்கு உதவும்.” 

“கரெக்ட். அத்துடன்… உன் புத்தகத்தைப் பார்த்து குறைந்த செலவில் சமைக்கக் கற்றுக்கொண்டேன்.”  

“சப்பாத்திஷெஃப் இல்லாமல் சப்பாத்தி.” 

“மாவு பிசைந்தாகிவிட்டது. வீட்டிற்குள் போனதும் இட்டுக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.” 

“தொட்டுக்கொள்ள மசாலாமாடிக் உதவி இல்லாமல்…”  

“கத்திரிக்காய் மசாலா. அடுத்த வாரத்தில் இருந்து நீ வீட்டிற்குக் களைத்துப்போய் வரும்போது சாப்பாடு தயாராக இருக்கும்.” 

அதற்கு இப்போதே அவன் கன்னத்தில் ஒரு முத்தம். 

“இன்னும் சில மாதங்களில் உனக்கு இன்னொரு வேலை…” என்று குறும்புடன் சிரித்தாள். 

“நீ கொண்டுவந்த பரிசு எதுவென்று தெரிந்ததும் எனக்கும் அந்த எண்ணம். நம் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நான்னி தேட வேண்டாம். ரமா குழந்தைக்கு ஒரு வயது. அதுக்குப் போட்ட ஆடைகளை அவள் பத்திரமாக எடுத்துவைத்து இருப்பாள். புதிதாக வாங்க வேண்டாம். அவளுக்கு ‘ஸ்னக்லி’ பேபிகேரியர் வாங்கிக் கொடுத்தேன். அதைத் திருப்பி வாங்கி அதில் குழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு நான் வீட்டு வேலைகள் செய்யலாம். கடைக்குப்போய் சாமான்கள் வாங்கிவரலாம்” என அவன் கற்பனை விரிந்தது. 

அதுவரை அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளாமல், ஆனால் அதை அனுபவித்த சங்கீதாவுக்கு முருகன் நல்ல மாப்பிள்ளையாகக் கொடுத்திருக்கிறார் என்ற சந்தோஷம். 

“நீங்க ரெண்டு பேரும் மனமொத்த தம்பதிகளைப் போல இரண்டு பெரிய பிரச்சினைகளை நிதானமாப் பேசி ஒண்ணா சமாளிக்கறதைப் பார்க்கும்போது…” என்று உணர்ச்சிமிக்க குரலில் ஆரம்பித்தாள். 

“கல்யாணச் சடங்கு அவசியமான்னு தோணறது.”   

Series Navigation<< அன்புள்ள அன்னைக்குகோழிக் குஞ்சுகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.