சீர் கொண்டு வா…

“கவிதை” என்ற பெயரில் ஜனரஞ்சக பத்திரிகைகளில் வரும் எழுத்துக் கோர்வைகளை படிக்காமல் தாண்டிச் செல்லும் அளவு புறந்தள்ளும் தன்மை இன்னும் வரவில்லை என்பதால், காலைக்கடன் சரிவர நேராவிடில் அன்றைய பொழுது நிகழும் விவரிக்க இயலா அவஸ்தை போல், மேற்கூறிய‌ கவிதைகளைப் படித்தபின் நாம் அடையும் மொழி மற்றும் மன‌உபாதைகளுக்கான சிறிய அளவிலான பிராயச்சித்தமே இது.

ஏற்கெனவே நாம் அனைவரும் அடுத்த ஒருமணி நேரத்தில் ஊருக்குள் விழப்போகும் ராக்கெட்டை தடுக்கும் பணியை மேற்கொள்ளும் நபர் போன்றுதான் திரிகிறோம்…இது போதாதென்று, வாட்ஸப், பேஸ்புக் போன்றவற்றை ஆரத்தழுவிக் கொண்ட சமூகம் புலரி முதல் துயில் வரை மாயை உலகில் மனமகிழ்ந்து திளைக்கையில் “நேர்நேர் தேமா…” என்றெல்லாம் ஆரம்பித்தால் நம்மை நல்லதொரு மனநல மருத்தவரை சந்திக்கும்படி உற்றார் உறவினர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நிறைந்திருக்கும் “யாவரும் கேளிர்.”

அறிவுரை தர நேரிடும் என்பதால் கட்டுரைக்கான தேவையையும் உபகரணங்களையும் சற்றே மாற்றி கையாள வேண்டியிருக்கிறது. முதுமொழியாம் தமிழின் மூத்தோர் அனைவரும் மன்னிப்பார்களாக!

மொழி தரும் இன்பத்தைத் துய்ப்பதில் மனம் பெறும் உவகையை, அதனடியில் ஊற்றாய் பெருகும் சிந்தனைகளை நாம் முற்றிலும் தொலைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. எழுத்து, சொல், வரி, செய்யுள் என்பதெல்லாம் என்னவென்றே தெரியாமல் எமோட்டிகான்களிலேயே நிரம்பி விடும் அன்றாட வாழ்வை அடைந்த விட்ட நமக்கு, ஒரு மாபெரும் வெற்றிடமே அதனடியில் இருக்கிறது என்பதை எப்படி உணர்த்துவது?

ஒரு பா வாசிக்கையில் அதன் பொருள் சற்றும் புரியாவிடிலும் நம்மோடு தடதடக்கும் அதன் தொடை நயத்தை முற்றிலும் தொலைத்து விடுவோமோ? அந்த ஓசையால் உந்தப்பட்டு, சீர் அறிந்து அசை பிரித்து தளையுணர்ந்து அர்த்தம் கண்டு, ஆன்மீகமும் தத்துவமும் அமுதசுரபியென பெருகும் இலக்கியங்கள் அனைத்தையும் இனிவரும் தலைமுறைக‌ள் அறியாதே போய்விடுமோ?

“ஹாய்” என்றொரு வாட்ஸ்ப் பரிமாற்றம், “ஹ” என்றொரு புன்னகை, “பை” என்று முடிந்தது உரையாடல் என்று நொடிகளில் உறவை கடத்தும் காலத்தில் இருக்கிறோம் நாம். நா உச்சரிக்கும் காலத்தை மாத்திரையாக மாற்றி எழுத்தைக் கூட ஓசையாய் சொன்னது தமிழ். “அசைச் சொல்லின் தொடராலே ஆனது ராகம்” என்றது டிஎம்எஸ் குரல். எழுத்தை ஒன்றன் பின் ஒன்றாய் வைத்து நாவில் நகர்த்திச் சொல்லாக்குவது அசை. வெவ்வேறு வகை அசைவுகளை கட்டமைத்து ஒழுங்குபடுத்துவதில் உருவாவது சீர். சீர் என்றாலே ஒழுங்குதானே? அசையும் சீரும் அறிந்து விட்டால் சீர்களுக்கிடையிலிருக்கும் தளைகளை அறிவது சிறுகலை. அப்புறமென்ன…பாக்கள் வாசிப்பது என்பது ஒன்றிரண்டு தூறல் மட்டும் நம்மீது விழும்படி, இருக்கையில் சாய்ந்து தேநீர் பானம் பருகியபடி மாலை நேர மழையை பார்ப்பதை ஒத்த இன்பத்தை நல்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

தமிழின் செறிவும் கருணையும் அளப்பறியது. வாட்சப் குறுஞ்செய்தி யுகத்திலும், தமிழை எத்தனை கோமாளித்தனமாக பயன்படுத்தினாலும், அதைவைத்தும் கூட‌ தன்னை அறிந்து கொள்ள நமக்கு உதவும் விசாலமான மொழி.

“வாட்சப் தோழன் சாட்டில் வாவென்றான்
நாட்நவ் என்றேன் நான்”

இன்றைய அவசர உலகையும், அனைவரும் தெரியா இலக்கை துரத்தியபடி ஓடிக் கொண்டிருக்கும் துன்பியலையும் இப்படி அரைகுறையாய் எழுதுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து கூட நாம் அசை, சீர், தளை போன்ற அடிப்படைகளை அறிய இயலும். ஆர்வத்தின் துணை மட்டுமே அவசியம்.

அசையை நேரசை, நிரையசை என்று மட்டும் பிரித்துக் கொள்வோம். ஒன்றோ இரண்டோ எழுத்துக்கள் மட்டுமே கொண்டு அதில் முதல் எழுத்து குறிலோ நெடிலோ தனியாக இருக்கலாம்.

அல்லது, இரண்டாவது எழுத்து புள்ளி வைத்து இருந்தால் அது நேரசை. “ஆ”, “நாட்”, “நவ்” இவை நேரசை.

இதுவே, இரண்டு எழுத்துக்கள் இருந்து அவை குறில் நெடில் என்று இருந்தால் நிரையசை. “ஒரு” என்பது நிரையசை. இதுவே மூன்றெழுத்துக்கள் இருந்து, அதில் முதலிரண்டு எழுத்துக்கள் மேற்கூறிய காம்பினேஷனில் இருந்து மூன்றாம் எழுத்து புள்ளி வைத்திருந்தாலும் அது நிரையசையே. “மினிட்” என்பது நிரையசை.

அசை புரிந்த பெருமிதத்துடன் சீர் நோக்கி செல்லலாம்… நம் சீர் கூட்டிக் கொள்ளலாம்…

அசைகளை சேர்த்தால் சீர். அவ்வளவே. எப்படியெல்லாம் சேர்க்கலாம்? ஒன்றிலிருந்து நான்கு அசைகள் வரை சீர்களாக ஆக்கலாம். இவற்றுக்கு ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என்று பெயர். “நேரசை” “நிரையசை” இரண்டையும் ஒன்று முதல் நான்கு வரை அனைத்துக் கூட்டமைப்புகளிலும் (பெர்முடேஷன்கள்) போட்டோமென்றால் நான்கு வகை சீர்களும் கிடைக்கும். அதாவது ஓரசைக்கு இரண்டு, ஈரசைக்கு நான்கு, மூவசைக்கு எட்டு, நாலசைக்கு பதினாறும் கிடைக்கும். இதற்குள் அடங்கிவரும் சொல்லே சீர்.

இனி அடுத்த கட்டத்திற்கு செல்வோம்…

நேரசையை 0 என்றும் நிரையசையை 1 என்றும் வைத்துக் கொள்வோம். நான்குவித அசைச்சீர்களையும் 0வில் துவங்கி எழுதிக் கொள்வோம். அதாவது

ஈரசைச்சீர் என்றால், நேர்நேர் 00, நேர்நிரை 01, நிரைநேர் 10, நிரைநிரை 11…இப்படி

மூவசைச்சீர் என்றால் நேர்நேர்நேர் 000 எனத் துவங்கி, நிரைநிரைநிரை 111 வரை..

ஏற்கெனவே பார்த்த எடுத்துக்காட்டில், அசை பற்றிய நம் புரிதலை சேர்த்துப் பார்ப்போம்.

“வாட்சப் தோழன் சாட்டில் வாவென்றான்
நாட்நவ் என்றேன் நான்”

என்பதில் ஏழு சீர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சீரையும் அசை பிரித்தால்

“வாட்/சப் தோ/ழன் சாட்/டில் வா/வென்/றான்
நாட்/நவ் என்/றேன் நான்

என்று வரும். முன்னர் கூறிய நேரசை நிரையசை விளக்கத்தை நினைவில் வைக்கவும். இதை நம் குறியீட்டில் எழுதிப்பார்ப்போம்.

0/0 0/0 0/0 0/0/0
0/0 0/0 0

அதாவது திருவள்ளுவர் நம் கிறுக்கலுக்கு 0 மார்க் போட்டிருப்பார் என்று பொருள்!.

இதையே சற்று மாற்றி

வாட்சப் பிரண்டு சாட்டிட வாவென்றான்
நாட்நவ் பிறகென்றேன் நான்

என்றெழுதினால்

வாட்/சப் பிரண்/டு சாட்/டிட வா/வென்/றான்
நாட்/நவ் பிற/கென்/றேன் நான்

என்று அசை பிரிந்து

0/0 1/0 0/1 0/0/0
0/0 1/0/0 0

என்று பாஸ் மார்க் பக்கத்திலேனும் வர வாய்ப்புண்டு.

இன்னும் ஒரு அடிப்படை புரிந்து கொண்டால் இலக்கிய இன்பம் துய்ப்பதற்கு நாம் ரெடியாகி விடுவோம். சீர்கள் தளை தட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதே அது. இரண்டு சீர்களை சீராய் கட்டுவது தளை. முதல் சீர் எப்படி முடிகிறதோ அதையொட்டி இரண்டாவது சீர் எப்படி துவங்க வேண்டும் என்பதே தளை விதி.

பா வகைகளில் ஒன்றைக் கொண்டு தளைகள் பற்றி அறிய முயல்வோம். வெண்பா மீது எனக்கு தாளாத அவா. ஒரு வெண்பாவேனும் நம்மால் எழுதிட இயலாதா என்ற‌ ஏக்கத்துடன் கழிந்த சிறுவயது நாட்கள் பல. வெண்பாவுக்கென சில பொது விதிகளும் குறிப்பிட்ட வகை வெண்பாவுக்கே உரிய விதிகளும் உள்ளன. வெண்பாவை வாசித்து புரிந்து கொள்வதற்கும், எழுதுவதற்கும் அதனதன் வகைக்குரிய விதிகளைப் புரிந்து கொள்வது அவசியம். குறள் வெண்பா வடிவில் சிறியது. கலிவெண்பா நீண்டது மட்டுமல்ல கடினமான‌தும் கூட.

திருக்குறள் என்பது குறள் வெண்பா. அடடே…நம் “வாட்சப் தோழன்…” கூட திருக்குறள் போலிருக்கிறதே…வெண்பாவா என்று மகிழ்ச்சி கொள்ளாதீர். என்னைப் போன்ற அரைகுறைகள் இது போன்று எதையேனும் எழுதி வெண்பா போல் இருக்கிறதே என்று இறுமாப்பு கொள்வதுண்டு. “வாட்சப் தோழன்” குறள் வெண்பா போலிருக்கும் போலிப்பா! அது குறளும் அல்ல வெண்பாவும் அல்ல! இதை வைத்துக் கொண்டே வெண்பா பொதுவாக எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பார்த்து விடலாம்.

வெண்பாவிற்கு இரண்டு தளை விதிகள் உண்டு.

1. முதல் சீர் 0வில் முடிந்தால் இரண்டாவது சீர் 1ல் துவங்க வேண்டும். அப்படியே மாற்றிப் போட்டு முதல் சீர் 1ல் முடிந்தால் இரண்டாவது சீர் 0ல் துவங்க வேண்டும். இது இயற்சீர்களுக்கு பொருந்தும் (அதாவது இரண்டு அசைகள் உள்ள சீர்கள்).

2. இதுவே மூன்று அசைகள் உள்ள சீர் உள்ளதென்றால் அது 0ல் மட்டுமே முடியவேண்டும். அதற்குப் பின் வரும் சீர் 0ல் மட்டுமே துவங்க வேண்டும். ஒவ்வொரு பா வகைக்கும் வெவ்வேறு தளை விதிகள் உண்டு.

கடைசி அடியின் இறுதிச் சீர் விதி ஒன்றுண்டு. அதாவது இறுதியடியின் இறுதிச்சீர் 0வாகவோ 1ஆகவோ அல்லது இவற்றுக்குப் பின் “உ” ஓசையுடனேயோ வரலாம்.

எதுகை மோனை தேவைகேற்றவாறு பொருத்திக் கொள்ளலாம்.

அசை பிரிக்கத் தெரிந்தவுடன் எந்தவித பாக்கள் படிப்பதற்கும் நமக்கு உற்சாகமும் தைரியமும் வந்து விடும்.

“நாங்க ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகனும்” என்று வடிவேலு கேட்பது போல், நாங்க ஏன் பா படிக்கனும் என்று நமக்குத் தோன்றினால், எழுத்து எனும் வேரில் துவங்கி சொல்லின் பொருளில் இறங்கி செய்யுள் தரும் சிந்தனையில் மயங்கி அந்த எண்ணங்களின் கோர்வையை நம் வாழ்வியல் சிந்தனைகளாய் மாற்றுவதில் வரும் அனுபவம் ஒரு விதை நாம் நீரிட்டு மரமாகும் பரவசத்தைப் பார்ப்பதற்குச் சமம் என்பதையும் நாம் உணர‌ தமிழன்னை அருள் புரிவாளாக!

இப்போது நாம் களத்தில் இறங்க ரெடி. சீர் சீராய் பார்க்க முடியும். அசை தெரியும். தளை புரியும்.

திருவள்ளுவருக்கு என்ன கலர் ஆடை அணிவிக்கலாம் என்பது போன்ற நேர விரயங்களில் ஈடுபட்டாலும் தமிழ் நம் கையில் அகப்பட்டு ஏகப்பட்ட சேதாரத்திற்கு உட்பட்டாலும், இன்னும் நமக்கு “அகர முதல” என்னும் முதல் திருக்குறள் மறக்கவில்லை. எனவே அதையே எடுத்துக் கொள்வோம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

இதை 0,1 என்ற நம் லாஜிக்கில் அசை பிரிப்போம்.

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

1/0 1/0 1/0/0 0/0
1/0 1/0 1/0

இப்போது மேலே புரிந்து கொண்ட விதிகளை இதில் பொருத்திப் பாருங்கள்.

ஏழு சீர்கள் உள்ளன. ஒரு சீர் 0ல் முடிந்தால் அடுத்த சீர் 1ல் துவங்குகிறது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அப்படியில்லை. ஏனென்றால் அது முவசைச்சீர். எனவே அது 0ல் தான் முடியவேண்டும். அடுத்த சீர் 0ல் தான் துவங்க வேண்டும். சரிதானே?

இப்போது “வாட்சப் தோழன்” போலி வெண்பாவில் இருக்கும் பிழைகளை எளிதாய் நாம் அடையாளம் காண முடியும் அல்லவா?

யாப்பிலக்கண அடிப்படை நெறிகளை சற்றே எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளும் முயற்சியே இது.

தமிழில் கூட இல்லாமல் ஆங்கிலம் கலந்து ஒரு பொருளற்ற எடுத்துக் காட்டை தந்ததற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டாமா? வாருங்கள்…ஆழமான பொருள் கொண்ட அழகான குறள் வெண்பா ஒன்றை எழுத முயல்வோம்:

ஞாலம் தருகின்ற‌ காட்சிகள் யாவுமே
காலம் வடித்த‌ கனா.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.