மினுங்கும் பொழுதுகள்

ச. அனுக்ரஹாவின் ‘வீடும் வெளியும்’ புத்தகம் பற்றி

உச்சி வெய்யிலில், தெருவே உறங்கிக்கொண்டிருக்கும் போது அபி சாந்தா மாமி வீட்டிற்குச் செல்கிறாள் (‘சாயும் காலம்’). முடிவிலியாக நீளும் சலனமற்ற மதிய/ பின்மதிய நேரம் பால்யத்தின் முக்கிய அம்சமாக ‘வீடும் வெளியும்’ பகுதியிலுள்ளது.. அந்த நேரத்தில் எப்படிப் பொழுதைக் கழிக்கக் கூடும்? ஒட்டடை படிந்துள்ள, பூதங்கள் வசிக்கும் பரணை எட்டிப் பார்க்கலாம்…

‘இன்று, மெல்ல மெல்ல நேற்றாகிக் கொண்டிருக்கிறது’ என்பதை உணராமலேயே, (‘காத்திருக்கும் பரண்களை’) வீட்டுக் கதவுகளின் பாஷையை கற்றுக் கொள்ளலாம் (‘ரீங்கரிக்கும் கதவுகள்’).

ஏனென்றால் அவை

‘விளையாட்டு முடிந்து’
‘நீங்கள் வேகமாகத் திறக்கும்போது’
‘அம்மாவிடம் தோசை செய்யச் சொல்லும்’
‘அம்மா தூங்கும்போது’
‘விளையாடச் செல்ல வேண்டுமானால்’
‘சத்தமின்றி திறந்து கொள்ளும்.’

அது போலவே,

‘எப்போதும் வெளியே
இருப்பதற்காக
எப்படி ஒரு வீடு செய்கிறோம்’
என்று கேட்கும் ‘வீடு திரும்புதல்’, நாமில்லாதபோது நமது வீடு என்ன செய்யும் என்ற சந்தேகத்திற்கான பதிலை,
‘நம் எண்ணங்களின் காற்றை’
‘அது சேமிக்கிறதா’
என்று தர முயல்கிறது.
‘தினமும் இரவுக்காக காத்திருக்கிறது
நம் வீடு’

எனக் கவிதை முடிந்தாலும், அதன் நீட்சியாக அடுத்த கவிதையான ‘பைத்தியக்காரர்களின் வீடு’ உள்ளது.

‘சமைத்து முடித்து
சாப்பிடுவார்கள்.
பின்னர் ஒருவர் இங்கு செல்ல
ஒருவர் அங்கு செல்ல’

வீடெங்கும் உலராத துணிகள் நிரம்பியிருக்க, ஜன்னலில் இளஞ்சிவப்பு மின்ன ஆரம்பிக்கும் நேரத்தில் யாருக்காக, ஏன் இந்த வீடு காத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

நகரத்திற்கு (‘நகரமும் நானும்’) பெயர்ந்தபின் ‘மாலையின் நிழல்களை மிதித்துச் செல்கின்றன வாகனங்கள்” (‘ஒரு நாள் முடிகிறது”) என்பதுதான் அன்றாடம் கண்ணில் படும் நிகழ்வாகிறது. ‘நிழல்கூட அளவாக விழுமாறு எழுப்பபட்ட பிரம்மாண்ட’ கட்டிடத்தின் முன்னுள்ள புங்கை மரம் எப்படி தப்பித்தது என்பது குறித்த வியப்பும் (‘என் கடவுளின் சாமரம்’), வேலை முடிந்து திரும்புகையில் தற்செயலாக தென்படும் ‘இளம்பழுப்பு’ நிலவும் (‘இரவின் ஒளி’), ‘வீடும் வெளியும்’ பகுதியின் வெளிச்சத்திலிருந்தும், வாழ்வியலிலிருந்தும் நகரம் வெகு தொலைவில் வந்துவிட்டதை சுட்டுகிறது. மூன்றாவது மாடியில் அறையெடுத்து ‘வெளிச்சமும், குருவிக் கீச்சும், நானும் மட்டும்’ தனியாக வசித்தாலும் (‘அந்தரத்தில் ஒரு அறை’), அலுவலகத்தின் பின்புறமுள்ள கண்ணாடி ஜன்னல்களின் அணிவகுக்கும் கழுகுகள் கூண்டுக்குள் இருப்பவர் யார் என்ற சந்தேகத்தை எழுப்பினாலும் (‘ஜன்னல் கழுகுகள்’), நகர/ வேலை சார்ந்த வாழ்க்கை குறித்த சலிப்போ, ‘வீட்டை’க் குறித்த ஏக்கமோ இல்லாத படைப்புக்கள் இவை.

‘டைகர்’ கதையில் பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் வேலைக்காக வரும் மூன்று பெண்கள் முதலில் தங்கள் வசிக்குமிடம் குறித்து எதிர்மறையாக உணர்ந்தாலும் வெகு விரைவில் தன்னியல்பாக அதனுடன் பொருந்திப் போவதைப் போல, நகர வாழ்வின் கணங்களை, -தினசரி பார்க்கும் கடையிருந்த இடத்தில் ‘இடமாற்றம்’ என்ற பலகையைப் பார்த்து

‘அதை அடுத்திருக்கும் விடுதி
என்னுடையது தானா?
வழி எப்போது மாறியது’ (‘மாற்றம்’)

என்று துணுக்குறுதலை எந்தச் குற்றச்சாட்டும் இல்லாமல் நம்முன் வைக்கிறார் அனுக்கிரஹா.

‘அவர்களும் நானும்’ பகுதியின் ‘பாட்டிக்கு அன்புடன்’ கவிதையையும், ‘கர்மயோகம்’ கதையையும் வாசகர் பொருத்தக்கூடும். தனித்து வசிக்கும் முதிய தம்பதியரின் ஒரு நாளை -கணவரின் பிறந்த தினம் – சித்தரிக்கும் ‘கர்மயோகம்’, குறை சொல்லிக் கொண்டேயிருக்கும், முசுட்டுக் கணவன், அதை பல பத்தாண்டுகளாக சகித்துக் கொண்டிருக்கும் மனைவி எனப் பழகிய வழமையான சூழலைத் தாண்டி, இருவரின் வாழக்கை குறித்த கேள்விகளை வாசகனுள் எழுப்புகிறது. இளம் வயதில் விதவையான அம்மா, வளர்ந்த அண்ணன்கள், என்ற வீட்டுச் சூழலில் வளர்ந்ததுதான் பெரியவரின் முசுட்டுத்தன்மைக்கு காரணமாக இருக்கக் கூடுமோ? மனைவி அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில், எதிர்முனையில் இருப்பவர் தன்னைப் பற்றி ஏதாவது கேட்கிறாரா என்று அவர் ஏங்கும்போது கடுமையானவர் என்று நம்முள் ஏற்பட்டிருக்கும் பிம்பம் ஆட்டம் காண்கிறது. பெரியவரின் தொணதொணப்புகளுக்கு தன்னிலையிழக்காமல் எதிர்வினையாற்றும் பாட்டியைப் பார்க்கும்போது, – ‘கெழம் கேள்வி கேட்டே கொன்னுடும்’ என்பதே அவருடையே அதிகபட்ச எரிச்சல்- அவர் இந்த மனநிலையை எப்படி அடைந்தார், அவருடைய ஆசாபாசங்கள், கனவுகள் என்ன, என்ற கேள்விகள் எழுகின்றன.

கணவனை ‘நல்லபடியாக’ அனுப்பி வைத்துவிட்டு தானும் போய்ச் சேர வேண்டும் என்று கதையின் முடிவில் நினைக்கும் பாட்டியை, அவர் வாழ்க்கையை, ‘பாட்டிக்கு அன்புடன்’ கவிதையில் முழுவதுமாக தன்னுள் ஒடுங்கிவிட்டவரை, அவருடைய அந்த நிலை பற்றி,

‘அப்படி ஒரு உலகம் இருக்கிறதா ?’
‘ஆம்’
‘அதற்கான தொலைவு’
அவள் வாழ்நாள் தூரம்’
என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதிலிலுள்ள ‘வாழ்நாள் தூரத்துடன்’ இணைத்துப் பார்க்க முடியும்.

இதே பகுதியிலுள்ள, ‘மேலும் கீழும்’ கதையில் இன்னொரு ‘அவர்களை’ காண்கிறோம். தீபாவளி நாள், சகோதரிகளிருவர் வெடி விட தயாராகி, தந்தைக்காக காத்திருக்கிறார்கள். இருவரின் உரையாடல்கள், பக்கத்து வீடுகளில் ஆரம்பித்திருக்கும் கொண்டாட்டங்கள், தந்தைக்காக காத்திருக்காமல் இவர்களும் வெடிக்க ஆரம்பிப்பது என மற்றுமொரு பண்டிகை தினமாக தோற்றமளிப்பதை பட்சணத்தின் சுவையின்மை குறித்த கோபத்தில் கத்தும் தந்தை, பதில் சொல்லும் தாய், இது எப்போதும் நடப்பதுதான் என்ற சுட்டுதல், பட்டாசு, டிவி சத்தத்தில் சண்டை ஓசை மற்றவர்களுக்கு கேட்காது என்ற குழந்தைகளின் ஆசுவாசம் வேறொரு முகம் கொள்ளச் செய்கிறது. அவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்று மூத்த சகோதரி சொல்வதை இளையவள் மட்டுமல்ல, வாசகனும் உண்மையென்று நம்பக்கூடுமா? அவள் பெரிதுபடுத்துகிறாளோ? ‘நானும் சேர்ந்து வெடிக்கத்தானே வந்துண்டேயிருக்கேன்’ என்று கதையின் முடிவில் தந்தை சொல்வதை எப்படி எடுத்துக் கொள்ள? பல வீடுகளில் நடக்கும் வழக்கமான சண்டையாக இருக்குமா, அல்லது தீபாவளி என்றாலே அந்த சகோதரிகளுக்கு – அவர்கள் வளர்ந்து பின்னரும் – நினைவுக்கு வருமளவிற்கு கசப்பான தினமாக இருக்குமா?

‘மழையும் மற்றவையும்’ பகுதியிலுள்ள ‘மழை, காலம்’ கவிதையின்
‘என் அலுவலக அறைகள்
சுவர்களாலானவை.
சுவர்களுக்குள் சூரியன்
விடிவதுமில்லை, மறைவதுமில்லை’
‘முட்கள் மட்டுமே’
‘நகர்ந்து கொண்டிருக்கின்றன’
என்ற வரிகள் ‘காலம்’ பொருளற்றதாகவிட்ட வேலைச் சூழலைச் சுட்டுகின்றன.

‘வெளியே,
நனைந்திருக்கும் சாலைகளில்
மழை என்றும்
‘பெய்து முடிந்திருக்கிறது’
என்றாலும், மழை பெய்கிறது என்ற உணர்தலின் ஒரு துளிகூட அலுவலக அறைகளுக்குள் விழுவதில்லை.
‘எல்லா வானத்திலும்
என் மொட்டை மாடி
தெரியத் தொடங்கியது’

என்று நூலிலுள்ள ‘மொட்டை மாடி வானம்’ கவிதை முடிகிறது. அதே போல் இந்தக் கவிதைகளை/ கதைகளைப் படிக்கையில், பகலின் இயற்கை வெளிச்சம், மாலை நேரத்தின் சாலையோர விளக்குகளின் நியான் ஒளி, கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்ட அலுவல அறைகளின் ட்யுப்லைட் பிரகாசம், இவற்றினூடே நாம் புழங்கிய வீடுகளின், வசித்த நகரங்களின் பொழுதுகளும் காட்சி/ மனப் பிம்பங்களாக நம்முள் மினுங்குகின்றன.

வீடும் வெளியும், ச. அனுக்கிரகா,
பதாகை யாவரும் பப்ளிஷர்ஸ், ரூ.120

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.