நம்பி கிருஷ்ணன்
2006 முதல் கிரிதரன் ராஜகோபாலன் தொய்வில்லாமல் தொடர்ந்து தன் புனைவு முயற்சிகள் மேற்கொண்டு வருவதைப் பார்க்கும்போது அவரது சிறுகதைகளின் முதல் தொகுப்பு இவ்வாண்டுதான் பதிப்பிக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளில் மிகச் சிறந்தவை சில, வெகு காலம் முன்பே 2013ம் ஆண்டு வாக்கில் இணையத்தில் வந்து விட்டன. வாசிப்பு, பதிப்பு மற்றும் விமரிசன வட்டங்களில் பிடிவாதமாகவும் எக்காலத்திற்கும் பேணப்படும் நற்பண்பு பாராமுகம் என்பதாலும், தன் நட்பு வட்டத்துக்கு வெளியே அறிமுகமின்றி இணையவெளியில் மட்டுமே தொடர்ந்து பதிவிடும் நவீன தமிழ் எழுத்தாளன் தாமஸ் கிரேயின் பிரசித்தி பெற்ற கவிதையில் வரும் கல்லறைகளின் ஆயுட்கால இருட்டடிப்பை மெய்யான அச்சுறுத்தலாகவே எதிர்கொள்ள வேண்டியிருப்பதாலும், “இப்போதாவது அச்சில் வந்ததே,” என்பது போன்ற உப்புசப்பற்ற ஆறுதல் வாக்கியங்களே நம்மாலான ஆறுதலாக இருக்க முடியும். .

இணையத்தில் வெளிவந்த கதைகளின் தரம் போக, இந்த தொகுப்பில் சேர்க்கப்படாத இரு கதைகள் வெகு காலம் முன்பே சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றிருக்கின்றன- தமிழ் பதிப்புலகம் எந்தப் புத்தகங்களைப் பதிப்பிக்க தேர்ந்தெடுக்கின்றது என்பதில் எப்படிப்பட்ட மதிப்பீடுகள் (அப்படி எதுவும் உண்டென்றால்) கொண்டிருக்கின்றது என்பதை நினைக்க வியப்பாக இருக்கிறது. கிரியின் சிறுகதை அரூ அறிபுனை சிறுகதைப் போட்டியில் இந்த ஆண்டு முதல் பரிசு வென்றது, மூன்று பரிசுகள் பெற வேண்டும் என்பது ஒரு தகுதியோ என்னவோ.
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்று
நிற்பது என்
இல்!
என்ற புலம்பல் கொண்ட பிரமீளின் புகழ் பெற்ற கவிதையிலிருந்து இந்தத் தொகுப்பின் சிறந்த கதை தன் தலைப்பு பெற்றுக் கொள்வது உடன்நிகழ்வல்ல.
எது எப்படியிருந்தபோதும், எழுத்தாளன் ஒருவன், அச்சில் வருவதற்குரிய அத்தனை தகுதிகளும் கொண்டவன், தன் ஆக்கங்களுக்கு என்று இறுதியில் ஓர் இல்லம் அடைவது, இல்லங்களில் மிகப் புனிதமான நூல் வடிவில் இருப்பு கொள்வது, நம் அனைவருக்கும் மகிழ்வதற்குரிய தருணம் அளிக்கிறது. கிரி என் நண்பர் என்பதால் இப்படிப்பட்ட ஒரு மைல்கல்லைக் கடக்கும்போது பெருமிதம் கொண்டு நிறைவேற்ற வேண்டிய சடங்குகளை முறைப்படி வாட்ஸ்அப்பில் நிறைவு செய்தாயிற்று, எனவே இதற்கு மேலும் அலட்டிக் கொள்ளாமல் இனி நேரடியாக அவரது கதைகளைப் பேசச் செல்லலாம்.
புத்தகத்தின் தலைப்புச் சிறுகதை, “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை,” தன் ஒளிமிகுந்த வம்சாவளியைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் வகையில், பிரஞ்சு இசையமைப்பாளர் ஆலிவர் மெஸ்ஸையனின் இருட்சிந்தனை கவிந்த மாஸ்டர்பீஸ், “க்வார்டட் ஃபார் தி எண்ட் ஆஃப் டைம்” என்பதில் தன் தலைப்பு பெற்றுக் கொள்கிறது. 1940 ஆம் ஆண்டு ஜெர்மானிய போர்க்கைதி முகாமில் ஸ்டாலக் VIII-Aவில் சிறைப்பட்டிருந்த காலத்தில், வினோத இசைக்கருவிக் கலவை கொண்ட ஆன்சாம்பிளாய் எழுதப்பட்ட இந்த மகோன்னதமான சேம்பர் இசை (கிளாரினெட், வயலின், செல்லோ, பியானோ), நானூறு பார்வையாளர்கள் முன்னிலையில், அவர்களில் பெரும்பாலோர் கைதிகளும் காவலர்களும், ஆலிவர் பியானோ இசைக்க, திறந்த வெளியில், கொட்டும் மழையில் அரங்கேற்றம் பெற்றது. தமிழ்ச் சிறுகதை மரபுப் படிவத்துக்கும் இந்தக் களத்துக்குமிடையே இதைவிட அதிக தொலைவு இருக்க முடியுமா? இது போதாதென்று மேற்கத்திய செவ்விசையின் கருப்பொருள் (அதுவும்கூட அறிவார்ந்த ஒன்று) அளிக்கும் அயற்பால் அந்நியத்தன்மையும் தமிழ் புனைவெழுத்தாளனின் நோக்கங்களுக்கு உதவ வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட ஒரு கதையை முயற்சி செய்யத் துணியவும்கூட ஒரு திமிர் இருக்க வேண்டும், தன் புனைவாற்றல் திறன்கள் குறித்தும் இசை அடிப்படைகளின் தெளிவான புரிதல் குறித்தும் உறுதியான நம்பிக்கையுள்ள ஒருவர் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும். சரி, வெற்றியை நெருங்க முடியும்.
மறக்க முடியாத வகையில் அறிமுகப்படுத்தப்படும் கிழவியுடன் துவங்கும் முதல் பத்திகள் (“உனக்கென்னடா… சும்மா வாயை மூடிக்கிட்டு படு. உன்ன மாதிரி தடித்தோலா எனக்கு?”) பனிக்கால போர்க்கைதி முகாமின் கடுமையான யதார்த்தத்துக்கு அருமையாக மனித முகம் அளிக்கின்றன. சிறப்பாய் படம் பிடிக்கப்பட்ட போர்த் திரைப்படத்தின் உணர்வை இந்தப் பத்திகள் அனைத்தும் சேர்ந்து அளிக்கின்றன. ஊளையிடும் பனிப்புயலின் குறுஞ்சித்திரங்கள், எலும்பை ஊடுருவும் குளிர், ஒரு சிறுமி தண்ணீர் கேட்டு குழந்தையைக் கையில் ஏந்தி சித்தம் பேதலித்தது போல் மன்றாடுவது, என்று இக்காட்சியின் துன்பவுணர்வு மெல்ல மெல்ல உச்சத்தை நோக்கிச் செல்கிறது… பனிப்பொழிவில் உறையும் இந்த நரக வட்டத்தில் திடீரென்று கிளாரினெட் இசைக்கிறது, அது வேறு உலகத்திலிருந்து எழும் இசை போல் ஒலிக்கிறது. ஆனால் அடிப்படை வசதிகள்கூட இல்லாத மனிதன் தன் பிடிமானங்களை இழந்து பரிதவிக்கிறான், அவனுக்கு கலையின் தேவை இல்லை, அதன் அவசியத்தை அவனால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. காதுகளில் ரத்தம் வழிகிறது என்று மிகையாக நொந்து கொள்ளுமளவு கைதிகளை வேதனை செய்கிறது இந்த இசை, உடனே நிறுத்தச் சொல்லி கெஞ்சுகிறார்கள். இதையொட்டி கதைசொல்லி அடுத்த அறைக்குச் செல்கிறார், அங்கு இசைப் பயிற்சி செய்து கொண்டிருக்கும் நால்வரையும் சந்திக்கிறார். இங்குள்ளவர்கள் குளிரில் உறைந்து கொண்டிருக்கிறார்கள், மற்றவர்களுக்கு இரக்கப்படாமல் இசைச் சாதகம் செய்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள், என்று அந்த நான்கு பேரையும் கதைசொல்லியான இளைஞன் குற்றம் சாட்டுவது காலம்தோறும் எழும் கேள்வி. “வாசிக்காவிட்டால் செத்து விடுவேன்,” என்று ஆலிவர் சொல்வது இந்தக் கேள்விகளுக்கு மூர்க்கமாய்த் திரை போட்டதும், தன் அறைக்குத் திரும்பி, இயலாமையின் கோபமும் வெறுப்பும் அவரை நடுங்கச் செய்ய, தன் போர்வைக்குள் புதைந்து கொள்கிறார் கதைசொல்லி.
இலக்கியத்தின் கேள்விக்கு இலக்கியமே பதிலளிக்கிறது, நல்ல நோக்கங்கள் கொண்ட அந்த இளைஞன் தன் ஆங்கில நூலாசிரியர்களைப் படித்திருந்தால், “கலையெல்லாம் பயனற்றவை,” என்பதையும், “நாம் ஒருவரையொருவர் நேசிக்கவும் சாகவும் வேண்டும்,” என்பதையும் அறிந்திருப்பான். ஆனால் முத்திரை வாக்கியங்களில் இச்சிறுகதை திருப்தி கொள்வதில்லை, நால்வர் அளிக்கும் திறந்தவெளி நிகழ்வுக்குச் செல்கிறது, காலமும் மரணமும் நில்லாது ஊளையிடும் போதில் அதற்கு எதிராய் கலை ஒரு சிசிபிய தடுப்பரண் உயர்த்தும் என்பதை நிறுவ முயற்சிக்கிறது.
கருதுகோளை கருப்பொருளாய்க் கொண்ட இசையை மானுடத்தன்மை விரவிய மொழியில் விவரிக்கும் பத்திகள் மாசறு பொன் எனத் தகும், மேற்கத்திய செவ்விசை குறித்து ஆழ்ந்த புரிதலும் நேசமும் கொண்ட ஒருவரால் மட்டுமே இதை வெற்றிகரமாய்ச் சாதித்திருக்க முடியும். இதைச் சொன்னபோதிலும், சிக்கலான இந்த இசையின் பின்னுள்ள சிந்தனைகளை புதுமையான முறையில் விவாதிக்கத் துணியாத ஒரே காரணத்தால் தனக்கென்று இன்னும் பெரிய ஒரு தளத்தை உருவாக்கிக் கொள்ளும் அருமையான வாய்ப்பை இந்தக் கதை தவற விடுகிறது என்று நினைக்கிறேன். தி புக் ஆப் ரிவலேஷனை தன் புறப்படும் விசையாகப் பயன்படுத்திக் கிளம்பும் க்வார்டட் (ஆறாவது மூவ்மெண்ட்டில் நான்கு இசைக்கருவிகளும் ஒன்று சேர்ந்து இடியென முழங்கும் மானடி மிகப் பொருத்தமாகவே “டான்ஸ் ஆஃப் ஃப்யூரி, ஃபார் தி செவன் ட்ரம்பட்ஸ்” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது), இறையியலையும் மீபொருண்மையையும் இசையைக் கொண்டு மீள்கற்பனை செய்கிறது. பியானோவும் செல்லோவும் ஐசோரித்மிக் தன்மைகள் கொண்டிருக்கின்றன, வயலினும் கிளாரினெட்டும் “comme un oiseau” (பறவை போல்) ஒலிக்க வேண்டும் என்று இசைவிப்புக் குறிப்புகள் சுட்டுகின்றன. “காலப் பாழ்” தோற்றுவித்த களைப்பும் நிறைவின்மையும் ஐசோரிதம்களில் நிறுவப்படுகின்றன, பறவைகள் (குயிலும் தனியாய்ப் பாடும் கருப்புப் பறவையும்) இருளுக்கு எதிராய் ஒளி, நட்சத்திரங்கள், வானவில்கள் மீதான விழைவு, ஆனந்த அகவல்கள் என்று கூவுகின்றன (“சக்கரத்தில் சிக்கிக் கொண்ட பறவை போல்,” என்று சிறுகதை விவரிக்கிறது).
மிகவும் அறிவுப்பூர்வமான இசையமைப்பாளர் மெஸ்ஸையன் ஒரு முறை தன் இசை வடிவம், “l’ atrophie du moi,” அல்லது, அற்பச் சுயத்தின் சூம்புதலை நோக்கமாய்க் கொண்டது, என்று எழுதினார். இசைப் பாணியில் “மறுமலர்ச்சிக் கால ஐரோப்பாவுக்குப் பின் சித்த்தின் மேலாதிக்கம் வலுத்ததை” நிராகரித்து அவர் மறுமலர்ச்சிக்கு முற்பட்ட முறைமைகளைத் தேடி, “ரித்மிக் பெடல்களை” கண்டைந்தார் (லத்தீன் மொழியில் talea, சமஸ்கிருதத்தில் tala). இசையின் தாளம் சார்ந்த அம்சங்களை மாறுபடும் நிலையில் வைக்கும் உத்திகளை இந்திய இசைக் கோட்பாடுகளிலிருந்து தான் எடுத்துக் கொண்டதாய் கூறியிருக்கிறார் (பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய கோட்பாட்டாளர் சாரங்கதேவர் சங்கீதரத்னாகரம் என்ற நூலில் சித்தரித்த 120 தேசிதாளங்கள் முக்கியமான தாக்கத்தை அவர் மீது ஏற்படுத்தியிருந்தன). அதே போல் இருவழி ஒக்குஞ்சொற்களுக்கு நிகரான ஒன்றை இசையில் தாளத்தைக் கொண்டு கட்டமைக்க முயலும் ரித்மிக் பாலிண்ட்ரோம்கள் (முன்னும் பின்னும் வாசிக்கும்போது ஸ்வரங்களின் கால வரிசை மாறுபடாமலிருக்கும் இசைக் குறிப்புகள்) மெஸ்ஸையனுக்கு மிகவும் உவப்பாக இருந்தன, இவையும் இந்தியாவில் தோன்றியவை. என் போன்ற எளிய ரசிகர்களுக்கு எளிமைப்படுத்துவதானால் தனக்கு இறவா மெய்ம்மையாய் இருந்த இறையுணர்வுகளை அழகுணர்வாய் பிரதிமைப்படுத்த விழைந்த மெஸ்ஸையன், காலத்தின் அலைக்கழித்தலுக்கு எதிராக பற்றுகோல் அளிக்கக்கூடிய ஆதார ஸ்ருதியை இசையில் வெளிப்படுத்த முயன்றார் என்று கூறலாம்.
மெஸ்ஸையனின் பின்னணியில் இந்திய உட்பிரதிகளாய் பயன்படுத்திக் கொள்ளத்தக்க இத்தனை செறிவான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அத்தனை சாத்தியங்களையும் கதை தவறவிட்டு விடுகிறது. இதை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் தனக்கு வசீகரமாக இருந்த ஒரு வகை எளிய மினிமலிசத்தில் திருப்தி கொள்கிறார் கிரி. ஆனால் ஆலிவரும்கூட ஸ்க்ரியாபின்னின் சிந்தனைகளால் வெகுவாக பாதிக்கப்பட்ட மாக்ஸிமலிஸ்ட் என்பதுதான் இங்கு நகைமுரண் (இந்தியாவில் அதற்கென்று விசேஷமாய் கட்டப்பட்ட கோவில் ஒன்றில், எல்லாவற்றையும் தன்னுள் ஆகர்ஷித்துக் கொள்ளும் சடங்கு நிகழ்வொன்றை தொடர்ந்து ஏழு நாட்கள் ஏழு இரவுகள் என்று ஒரே ஒரு முறை அரங்கேற்ற விரும்பிய ஸ்க்ரியாபினின் மிஸ்ட்டீரியம் என்ற நிகழ்த்துகலைத் திட்டத்தில் பார்வையாளர்கள் கிடையாது, அனைவரும் பங்கேற்பவர்கள், அவரது கனவு நிறைவேறவில்லை).
கதை இன்னும் பல குரல்கள் ஒலிப்பதாய் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன், அதிலும் குறிப்பாக, க்வார்டட்டின் நான்கு குரல்களை நகலித்திருக்க வேண்டும். இது கதையை இன்னும் நுண்மையானதாய்ச் செய்திருக்கும், மேற்கூறிய உள்ளடுக்குகளை விசாரிப்பதற்கான இடமும் கிடைத்திருக்கும். ஆம், நம் எழுத்தாளர்கள் அளிக்கவிருப்பது எதுவாகவே இருந்தாலும், நாம் ‘பெரிதினும் பெரிது’ கேட்க வேண்டும், “சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்,” 1983ஆம் ஆண்டு தொகுப்பின் முன்னுரையில் ஆன் டெய்லர் முன்வைத்த தாராள மனதை நாமும் வலியுறுத்தியாக வேண்டும்: “வீணடிப்பவனே நம்மை மிகவும் ஈர்க்கும் சிறுகதை எழுத்தாளன். அவன் தன் சிறந்த எண்ணங்களை அதைவிட ‘முக்கியமான ஒன்றுக்காக’ (நாவல்) பதுக்கிக் கொள்வதில்லை, என்ன இருந்தாலும் சிறுகதைதானே என்று தான் சொல்ல வரும் விஷயங்களை இறுக்கிப் பிடிப்பதுமில்லை.”
இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் சிறந்த கதை என்று எளிதில் சொல்லிவிடக்கூடிய ‘இருள் முனகும் பாதை,’ மாபெரும் இசையமைப்பாளர் ராபர்ட் ஷூமான் மற்றும் அவரது மனைவி க்ளாரா ஷூமானின் சரிதைகளை ஒரு புனைவாய் மாற்றி அபாரமான மதிப்பீடு செய்கிறது. பொருத்தமான தலைப்பை பிரமீளின் கவிதை வரியிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. அக்கவிதையில் இப்படி ஒரு புலம்பல்:
யாரோ நான்? – ஓ! ஓ! –
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப்
போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில்
தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்!
கிரி எழுதி நான் வாசித்த முதல் கதைகளில் ஒன்று, அப்போதே இது என் மனதைக் கவர்ந்து பொறாமைப்படச் செய்தது. என் மகன் தன் உயர்நிலைப்பள்ளி இசைப் பயணத்தின் தொடக்கத்தில், மிக அருமையாக சமநிலைப்படுத்தப்பட்ட உணர்வுகள் கொண்ட க்ளாராவின் பியானோ ட்ரையோ இன் ஜி மைனர் வாசித்து (அதன் மனதைவிட்டு அகலாத, உணர்வுகளை கிளர்த்தும் துவக்கம்), அக்கல்விப் பயணத்தின் இறுதியில் நியூ இங்கிலாந்து கான்செர்டோ போட்டியில் ஷூமானின் கான்செர்டோ இன் ஏ மைனர், ஓபஸ் 54 வாசித்து பரிசு பெற்றான் என்பதால் தனிப்பட்ட வகையில் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமான ஒன்று,
ஷூமானின் கடிதங்களையும் நாட்குறிப்பு பதிவுகளையும் அவரது நண்பர் வில்லியம் ஸ்டெர்ன்டேல் பென்னட்டின் பார்வையில் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு வண்ணக் கலவைகள் கொண்ட வெவ்வேறு வடிவங்களாய் வாசிக்கிறோம்- பென்னட்டுக்கும் க்ளாராவுக்கும் உள்ள பகையுறவு, சிறு வயதிலேயே மேதைமையை இலக்காகக் கொண்டிருக்கும் க்ளாராவின் வளர்பருவத்தின் திட்டமிட்ட பயிற்சி… சுவாரசியமாகவும் அர்த்தமுள்ள வகையிலும் கதை மிக லகுவாக சரிதைகளின் பெரும்பகுதிகளைச் சுருக்கிக் கூறுகிறது. இசையின் தவிர்க்க முடியாத மையம் உலகனைத்துக்கும் பொதுவானது, அண்டத்துடன் தொடர்புடையது, என்பதை இசையமைப்பாளரும் பியானோ மேதையுமான ஐசாக் இக்னாஸ் மோஷ்செலஸ் ஷூமானுக்கு உணர்த்தும் வனக்காட்சிகளில் பெரும்பாலான வாசகர்கள் ஒரு சிலிர்ப்பை உணரக்கூடும். ஆனால் எனக்கு க்ளாரா பகுதிகளே முக்கியமாய் உள்ளன- அப்போதுதான் பியானோ உத்தி ஒன்றை விரித்துரைத்து வாசித்து முடித்திருந்த சிறுமி க்ளாராவின் கரங்களைச் சரித்திரப் பிரசித்தி பெற்ற குர்டா (Goethe) மண்டியிட்டு முத்தமிடும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்- தனக்கு முன்னுள்ள கிழவரின் வயது இருநூறு இருக்குமா என்று குழந்தைப் பருவத்தை இன்னும் கடக்காத க்ளாரா யோசித்துக் கொண்டு நிற்கிறாள்.
கதையை முதல் முறை வாசித்து முடித்தவுடன் சிறிது கோபம் வந்தது, க்ளாராவின் உணர்வுகளைப் புறக்கணித்து ஷூமானுக்கு சாதகமாக வெகுவாகவே திரிக்கப்பட்ட கதை இது என்று நினைத்தேன். அப்போது கிரிக்கு நான் எழுதிய மின்னஞ்சல் இது:
“மகத்தான உன் நாயகன் இருளில் வெளிப்பட்ட ரகசியச் செய்திகளை மாபெரும் கலையாக உருமாற்றம் செய்து கொண்டிருந்தபோது, பாவப்பட்ட க்ளாரா பத்து பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற கச்சேரிகள் செய்ய வேண்டியிருந்தது. இலக்கிய உலகம் பற்றி லார்கின் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது, கூடவே, ஒரு பெண் கலை படைக்க வேண்டுமென்றால் அவளுக்கு சிறிது பணமும் தனியறையும் தேவைப்படுகிறது என்று சொன்ன வர்ஜீனியா வுல்ஃபின் புகழ் பெற்ற சொற்களும். தன்னைக் கலை படைக்க உந்தும் பூத சக்திகளோடு பொருதும் ஷூமான் “ரோமாண்டிசிஸத்தின்” சமையல் குறிப்புகளிலிருந்து நேராய் வந்தவன்தானே? க்ளாராவில்தான் கதையின் உணர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கின்றன, அங்கு, “தினசரி யதார்த்தத்தின் ஊளையிடும் அலறல்கள்” கலை தம்பிடி பிரயோசனமில்லை என்று சொல்பவை.
ஜானிஸ் காலோவே ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதில் க்ளாராவின் மனவோட்டம் இது போல போகிறது: ‘அதைவிட முக்கியம், அவள் வேலை செய்தாள், அவள் பணம் சம்பாதித்தாள், அது முக்கியமாக இருந்தது, கடவுளே, அது முக்கியமாக இருந்தது. ஒரு நாள் அவள் நினைத்தாள்… அவர்களை வியக்க வைக்கும் ஏதோவொன்று சொல்வாள்.. ஒரு நாள் அவர்கள் அத்தனை பேரும் ஆச்சரியப்படும் வகையில் ஏதாவது சொல்வாள்.’
நீங்கள் எழுதியிருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் ஷூமானின் வேதனையை க்ளாராவின் துயர வாழ்வுடன் வெளிப்படையாகவே இணைத்துப் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இப்போதுமே (சற்று பூடமாக) அவ்விழைகள் இருக்கின்றன., ஆனால் இன்னும் விரிவாக எடுத்துரைத்திருக்கலாம்.”
க்ளாராதான் கதையின் நாயகி என்று சொல்லக்கூடிய வாசிப்புகள் சாத்தியம் என்பது இப்போது பார்க்கும்போது தெரிகிறது. தான் “மிகச் சிறந்த கலைஞன்” எனினும் தன்னை மாபெரும் கலைஞன் என்ற பெருமைக்கு இட்டுச் செல்லும் பாதை தன் பாதங்கள் கொண்டு கடக்கவொண்ணாமல் நீள்வது என்பதை க்ளாரா உணர்வது துயரத்தால் நிறைக்கும் விஷயம். க்ளாராவின் செவிகளில் இருள் என்ன சொல்லியிருக்கும், என்று நாம் யூகிக்க முயற்சி செய்கிறோம், இப்படிப்பட்ட முன்னறிவிப்புகள் மகத்தானவர்களுக்கு மட்டுமே உரியதல்ல என்பதை உணர்கிறோம். நாம் வெவ்வேறு இடங்களில் நின்று பாழ்வெளியை வெறித்தவர்கள், வேறு இடம் செல்லும் வழியை கண்டு விட்டவர்கள். ஆனால் மகத்தான கலைஞர்கள் இருள் கூறும் ரகசியச் சங்கதிகளை கலையின் ரசவாதத்தால் மானுட நேயம் நிறைந்த ஆமோதிப்பாய் மாற்றக் கற்றவர்கள், அது அச்சுறுத்தும் பாழ்வெளியில் பட்டு எதிரொலிக்கிறது. இசைச் சரிதையை சிறுகதையாய் புனைய விரும்பும் எவரும் தொட்டுக் கடக்க வேண்டிய தரத்தை இந்தக் கதை உயர்த்தி விட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒவ்வொரு கதை பற்றியும் விரிவாக எழுதிக் கொண்டிருக்கப் போவதில்லை, அந்த சந்தோஷத்தை இதன் எதிர்கால வாசகர்கள் மற்றும் விமரிசகர்களுக்கு விட்டு விடுகிறேன். நந்தா தேவி செர்ரி-கேராஹ் எழுதிய ‘உலகின் மிக மோசமான பயணம்’ போல் இருக்கிறது. அந்த கிளாசிக் பயண நூல் ரசிகர்கள் யாரும் இந்த ஒப்புமையைவிட பெரிய பாராட்டு இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்வார்கள்.
“நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல்” மிகப் பெரும் நோக்கு கொண்டது. ஓர் ஓவியத்தின் பார்வையில் உலகளாவிய ஏகாதிபத்திய வரலாற்றையும் வெவ்வேறு காலனிய தூரதேசங்களில் அதன் சமூக தாக்கங்களையும் சித்தரிக்கிறது. புத்தகத்தின் சிறந்த வாக்கியம் இந்தக் கதையில்தான் இருக்கிறது – “கண்கள் மட்டும் பக்கவாட்டில் துடுப்பு போட்டபடி இருந்தது”. சால் பெல்லோ எழுதியிருக்க வேண்டியது.
சென்ற ஆண்டு பரிசு வென்ற அறிபுனைவுக்கு ஆண்டாளின் திருப்பாவையில் வரும் “பல் கலனும் யாம் அணிவோம்” தலைப்பாகிறது. பின்னொரு இடத்தில் கதை நம்மாழ்வாரின் வாழ்வைப் பயன்படுத்தி பிரக்ஞை, உள்மனம், நனவிலி போன்ற சிந்தனைத் தோற்றங்களை விவாதிக்கிறது. மனிதனும் இயந்திரமும் இணங்கி இயங்கும் உறவை டிஸ்டோப்பிய முட்டுச் சந்துக்கு, அதன் தர்க்க முடிவுக்கு, கொண்டு செல்கிறது. பயிற்சியில்லாத அறிபுனை எழுத்தாளர்களின் புனைவில் பொதுவாகவே ஓர் உலோகத்தன்மை இருக்கும், ஆனால் இந்திய பண்பாட்டில் வேர் கொண்டமையாலும் நடையின் நளினத்தாலும் அந்த அச்சுறுத்தலை இந்தக் கதை வெற்றிகரமாக தவிர்த்து விடுகிறது.
அண்மைக் காலத்தில் வந்த காந்தி கதைகளில், ‘மரணத்தைக் கடத்தல் ஆமோ,’ நல்ல ஒன்று. ஜாதகத்தில் கணிக்கப்பட்ட காந்தியின் மரணத்தில் இது துவங்குகிறது, பின்னர் காந்தியின் மன அமைப்பின் முரண்பாடுகள் மற்றும் சிக்கல்களையும் சிந்தனை வளர்ச்சியையும் அவரது எதிர்கால மரணத்தின் உயர் தளத்தில் நின்று சித்தரிக்கிறது. காந்தியும் ராஜாஜியும் நிகழ்த்தும் உரையாடல்கள் நுட்பமான சுவாரசியம் கொண்டிருக்கின்றன. முரண்படுவது போலிருக்கும் வினைப்பயன் மற்றும் வினையாற்றல் கதை இறுதியில் சமநிலைப்படுவது நன்றாகவே எழுதப்பட்டிருந்தாலும், சற்று எளிமையாக கண்டடையப்பட்ட வெற்றியோ என்ற சந்தேகம் ஏமாற்றமளிக்கிறது.
பிற கதைகளில் ‘திறப்பு’, ‘நிர்வாணம்’, ‘பலி’, ஆகியவை கொஞ்சமாவது சுவாரசியமாக இருக்கின்றன என்றால் அவற்றை வேறொரு கோணத்தில் வாசிக்கும் வாய்ப்பு கதைக்குள்ளேயே அளிக்கப்படுகிறது என்பதால்தான். அதே சமயம் ‘தர்ப்பை’, ‘மௌன கோபுரம்’, ஆகிய கதைகள் அடுத்து என்ன என்ற சுவாரஸ்யமளிக்கத் தவறுவதால் மொண்ணையாக இருக்கின்றன. ஈஸ்ட் லண்டன் மற்றும் டோரொரொ விவரணைகள் ‘அகதி,’ கதையை ஓரளவு மீட்கின்றன, ஆனால் முடிவு ஒரு தேய்வழக்கு என்பதால் நிலையான தாக்கம் ஏற்படுத்துவதில்லை.
எப்படி பார்த்தாலும் இது சுவாரசியமான தொகுப்புதான், இசை, வாழ்க்கைச் சரிதை, வரலாறு, பயணம், சாகசம், புலம்பெயர் வாழ்வு, அறிபுனை என்று நம் ஆர்வத்தைத் தூண்ட பலதரப்பட்ட கதைகள் இருக்கின்றன. இவற்றில் சில கதைகள் அப்படி இப்படி இருப்பது உண்மைதான், ஆனால் சராசரி மதிப்பெண் கணக்கிட்டு ஒரு சிறுகதை தொகுப்பை நாம் மதிப்பீடு செய்வதில்லை (அப்படிச் செய்தாலும்கூட இதற்கு நல்ல கிரேடு கிடைக்கும்). மாறாய் எவ்வளவு பெரிய யானைகளை நோக்கி அவை வேல் வீசுகின்றன என்பதை வைத்தே ஒரு தொகுப்பை எடை போடுகிறோம், அப்படிபட்ட உன்னத முயற்சியில் எவ்வளவு உயரங்களை அதில் உள்ள கதைகள் அடைகின்றன என்பதைக் கொண்டுதான் தீர்மானத்துக்கு வருகிறோம். இசை பற்றி பேசும் கதைகள் தொடும் உச்சத்தை மட்டும் கொண்டே இந்தத் தொகுப்பு வெற்றி அடைந்திருக்கிறது என்பதைச் சுலபமாய்ச் சொல்லி விடலாம். அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே, இருள் முனகும் பாதை’யை எழுதிய விரல்களை வணங்கும் விதத்தில், ஷூமானுக்கு (குர்டாவிற்கும்) ஏற்ப, முத்தமிடலாம்.
வாழ்த்துகள் கிரி.
———————————————-
Source(s) / Further Reading
ரா. கிரிதரன், காலத்தின் முடிவுக்காக ஒலித்த ஓசை, தமிழினி, 2020
Richard Taruskin, The Oxford History of Western Music, Volume 4, pp 229-242
2 Replies to “ஆகப் பெரிதின் அறிவிப்புகள் – ரா.கிரிதரனின் புனைவிசை”