விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 2 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

பேட்டியாளர்: புனைவோ, ஏன், கவிதையும்கூட எப்போதாவது காலாவதியாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?

ப்ளூம்: ஸ்டீவன்சின் ‘த அரோராஸ் ஆஃப் ஆடம்’ என்ற கவிதையில் வரும் ஓர் உருவகம் நினைவிற்கு வருகிறது. அதில் அவர் “ஒரு பெருநிழலின் இறுதி அலங்கரிப்பை” பற்றிப் பேசுவார். மேலும், ஓர் அலங்கரிப்பிற்கான சாத்தியம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. கடைசி அலங்கரிப்பு என்று தோன்றினாலும் அது அறுதியான ஒன்றாக இருப்பதே இல்லை – இன்னமும் ஒரு முறை, இன்னமும் ஒரு முறை… நாம் எப்போதுமே அதை வழியனுப்பி வைக்கிறோம்; அதுவும்கூட எப்போதும் தனக்குத்தானே பிரியா விடை அளித்துக் கொள்கிறது, அதன்பின் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. தொடர்ந்து வியப்பூட்டப்பட்டு இன்புறுத்தப்படுகிறோம். யேலில் நான் ஜான் ஆஷ்பெரியை அறிமுகப்படுத்திய, அந்தப் பழங்கால கவிதை வாசிப்புகள் ஒன்றில் முதல் முறையாக “வெட் கேஸ்மெண்ட்ஸ்” கவிதையைக் கேட்க வாய்த்தது. கேட்ட உடனேயே அது என்னமாய் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது! கண்டிப்பாக, ஒவ்வொரு முறையும் அதை மனப்பாடமாக ஒப்பித்து, அவர் வாசித்த அந்த முதல் அனுபவத்தை நினைவுகூர்கையில் அதைக் காட்டிலும் போதுமான கவிதையை நினைத்துப் பார்ப்பதுகூட கடினமான காரியம்தான். “வெட் கேஸ்மெண்ட்ஸ்” போன்ற ஒரு கவிதைக்கான சாத்தியங்கள் இருக்கையில், இன்னமும் கவிதை, மட்டுப்படுதல், காலாவதியாதல் போன்ற அபாயங்களுக்கு உட்படாத ஒரு கலை வடிவமாகவே நிலைத்திருப்பது தெளிவாகவே தெரிகிறது.

பேட்டியாளர்: அறுபதுகளின் இடைப்பட்ட வருடங்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன். உங்களுக்கு அவை ஒரு கொந்தளிக்கும் பெருத்த கிளர்ந்தெழுதலாகவும் நிலைமாற்றமாகவும் இருந்ததென்று விவரித்திருக்கிறீர்கள். அப்போது எமெர்சனின் கட்டுரைகளில் ஆழ்ந்திருந்தீர்கள் இல்லையா?

ப்ளூம்: ஆமாம். அவரை நாள் முழுவதும் படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும், அனேகமாக ஃப்ராய்டுடன் சேர்த்துக் கூடவே வாசித்தேன். “அதெல்லாம் சரி, ஆனால் தொரோ – குறைந்தபட்சம் அவராவது பொருட்படுத்தக் கூடியவராயிற்றே,” என்று ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துக் கேட்பார்கள். நானும் அவர்களைப் பதிலுக்கு ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, அப்போதும் இப்போதும் நிதர்சனமாகவே நாம் உணர்ந்திருப்பதை, எமெர்சனின் ஆழங்களிலிருந்து உருவான தொரோ அவரோடு ஒப்புநோக்குகையில் மிகச் சிறியவரே என்று கூறுவேன். எமெர்சன் கடவுள்.

பேட்டியாளர்: அப்போது நீங்கள் உளவியல் சிகிச்சையில் இருந்தீர்கள் இல்லையா? அது எப்படி இருந்தது?

ப்ளூம்: சிகிச்சையின் முடிவில் மதிப்புக்குரிய என் உளவியல் மருத்துவர் என்னிடம் கூறியதுபோல, மனச் சிக்கல்களின் இடமாற்றீடு சரியான விதத்தில் நடந்து முடிந்தபாடில்லை.

பேட்டியாளர்: அவர் ஆணையுரிமையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?

ப்ளூம்: அப்போதும், இப்போதும் அவரை ஒரு நல்ல மனுஷனாகவே அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர் நக்கலாகக் கூறியது போல், ஃபிராய்டைத் தக்க முறையில் படிப்பதற்கான விரிவுரைகளை வாரந்தோறும் வழங்குவதற்காகவே நான் அவருக்குக் கட்டணம் செலுத்திக் கொண்டிருந்தேன். இது இருவருமே தோல்வியுறுவதற்கான வழியென்று அவர் எண்ணினார்.

பேட்டியாளர்: வெற்றிபெறும் சிகிச்சை என்பது, ஃப்ராய்ட் வாசித்தலுடன் எப்போதாவது நெருக்கமான இணக்கத்துடன் இருக்க முடியுமா?

ப்ளூம்: வெற்றி பெறும் சிகிச்சை என்பதை நான் ஒரு முரண்தொகையாகவே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.

பேட்டியாளர்: அது முடிவற்றதென்பதாலா?

ப்ளூம்: ஃப்ராய்டிய அல்லது மற்றேதாவது மனநலச் சிகிச்சை முறையால் பயனடைந்தவர்களை நான் சந்தித்ததே இல்லை, பொருத்தமான உருவகத்தைப் பயன்படுத்துவதானால், மிகையாக ‘குறுக்கப்பட்டதால்’ முற்றிலும் வறண்டுபோன வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை இதற்கு விதிவிலக்காகக் கூறலாம். கிளர்வூட்டும் உணர்ச்சிகள் அனைத்தையுமே செலவழித்து விட்டதால், வறண்டுவிட்ட வாழ்க்கைகள் என்ற அர்த்தத்தில். ஒருக்கால் அவர்கள் மேம்படுத்தப்பட்ட நல்லவர்களாகவும் மாறியிருக்கலாம். ஆனால், சில விதிவிலக்குகளைத் தவிர அவர்கள் புளித்துப் போய் சுவாரஸ்யமற்றவர்களாகவும் மாறிவிட்டவர்கள். காய்ந்து போன சீஸ் கட்டிகள் அல்லது வாடிய மலர்களைப் போல.

பேட்டியாளர்: படைப்பூக்கத்தை இழந்துவிடுவீர்களோ என்று கவலைப் பட்டீர்களா?

ப்ளூம்: இல்லையில்லை. அது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை.

பேட்டியாளர்: ஆனால், அப்போது உங்களுக்கு எழுதுவதே ஒரு பிரச்சினையாக இருந்ததல்லவா?

ப்ளூம்: ஆமாமாம். அப்போது என்னைப் பலவிதமான இக்கட்டுகள் அலைக்கழித்தன. எல்லா விதத்திலும் நான் “ஒரு பயணத்தின் நடுக் கட்டத்திலிருந்தேன்.” மற்றொரு விதத்தில் பார்த்தால் இவை அனைத்துமே மீண்டும் மீண்டும் நடப்பவைதான். இதோ எனக்கு இப்போது அறுபது வயதாகிவிட்டது, இன்னமும் எப்போதும்போல் பயணத்தின் நடுக்கட்டத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறேன். தேர்ந்தெடுத்த பயணத்தில் இதெல்லாம் சகஜம்தான். போய்க்கொண்டே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

பேட்டியாளர்: சில கவிஞர்களையும் உரைநடைப் புனைவு எழுதுபவர்களையும் “கடினமானவர்கள்” என்று நீங்கள் வரையறுப்பது போல், உங்களை நீங்களே ஒரு கடினமான விமர்சகர் என்று அடையாளப்படுத்திக் கொள்வீர்களா?

ப்ளூம்: மை டியர், இந்த காலத்திலெல்லாம் கடினமானவன் என்று அழைக்கப்படுவதைக் கனிவான எதிர்வினையாகவே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். என் துறையின் இளைய உறுப்பினர்களும், நான் ‘கழிவிரக்க அறச்சீற்றப் பள்ளி’ என்று அழைக்கும் குழுவின் உறுப்பினர்களும் அவர்களது அற்புதமான, தடைகளற்றத் தாராளச் சமூகத் தரிசனத்தில் பங்கேற்காது, பிம்ப வழிபாட்டிலும், என்னைப் பற்றியே மூர்க்கமாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவனாக என்னை விவரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதிலொருவர், வழக்கமாகவே என்னை நெப்போலியன் போனபார்ட் என்றுதான் அழைப்பார் என்பதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்களை எல்லாம் எதிர்கொள்ளவே முடியாது. அவர்கள் இலக்கியத்தால் நெகிழ்த்தப்படாதவர்கள். அவர்களுள் பலர் என் முன்னாள் மாணவர்கள். அவர்களை நான் நன்கறிவேன். இப்போது பாலியல் மற்றும் அதிகார வெறியால் பீடிக்கப்பட்டிருக்கும் கிறுக்கர்களாக மாறிவிட்டார்கள்.

ஆனால், உங்கள் கேள்வியைப் பொறுத்தமட்டில் இல்லை என்றுதான் கூற வேண்டும். ’The Anxiety of Influence’ ஒரு கடினமான புத்தகம்தான். ’Kabbalah and Criticism’ கூடத்தான். அப்புத்தகங்களில் ஏதோ ஒன்றைக் கண்டறிய முற்படுகின்றோம். ஆனால், இந்த ஆரம்பகாலப் புத்தகங்களைக் காட்டிலும் மிக வித்தியாசமாக அமைந்திருந்த ’Ruin the sacred truths’ என்னைப் பொறுத்தவரையில் ஒரு தெள்ளத் தெளிவான, எளிமையான புத்தகமே. வயது அதிகரித்தலைத் தவிர (அதனுடன் முதிர்ச்சியும் உடன் அதிகரித்திருக்கும் என்ற நம்புகிறேன்) மேலும் மேலும், தற்போது முற்றிலும் இல்லாமலாகிவிட்ட ஜான்சனிய ஆதர்சமான பொது வாசகனை நோக்கியே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதும் ஒரு முக்கிய காரணம். மிகத் தொழில் ரீதியான பதங்களைப் பயன்படுத்துவதை இயன்ற வரையில் தவிர்க்கவே முயல்கிறேன். Facticity-யைத் தவிர ’Ruin the sacred truths’ -இல் அது போன்ற பதங்கள் அறவே கிடையாது. அதையும்கூட குறிப்பிட்ட பிறகு நிராகரித்து விடுகிறேன். கடந்த காலத்துக் குற்றச்சாட்டுகளுக்குக் காரணமாக அமைந்த என்னுடைய பிரத்தியேக சொற்றொகை (விமர்சனம் மற்றும் அணி இலக்கணத்தின் கலைச் சொல்லியலின் அடிப்படை விதிக்கட்டின்மையை அடிக்கோடிட்டுக் காட்டவே அச்சொற்றொகை பயன்படுத்தப்பட்டது) எதுவும் அதில் இடம் பெறவில்லை. மேலும், அப்புத்தகத்தைப் புரிந்து கொள்வதற்கு ’Kabbalah and Criticism’-மையோ, ’A Map of Misreading’-கையோ அல்லது வேறெந்த புத்தகத்தையோ படித்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அது ஒரு பொது இலக்கிய விமர்சனப் புத்தகம்.

பேட்டியாளர்: கழிவிரக்க அறச்சீற்றப் பள்ளியை வரலாற்று ரீதியாக எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்?

ப்ளூம்: பல்கலைகளில் இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக, 1968 வாக்கில் மிக ஆச்சரியமளிக்கும், கண்டிக்கத்தக்க ஒரு மாற்றம் உருவாயிற்று. அதன் பாதிப்பு நீண்ட நாட்களுக்கு நீடித்து, இன்று வரையிலும்கூட கசிந்து ஊடுருவுகிறது. திடீரென்று பலதரப்பட்ட மக்கள், பல்கலைக்கழக ஆசிரியர் குழு உறுப்பினர்கள், பட்டதாரி மற்றும் இளநிலை மாணவர்கள் அனைவரும், வெளிப்படையாகவே புலப்படும் தங்கள் நோய்களை மட்டுமல்லாது வரலாறு மற்றும் சமூகத்தின் அனைத்து நோய்களுக்கும் குறைகளுக்கும் பல்கலைக்கழங்களைக் குற்றம் சாட்ட ஆரம்பித்தார்கள். அக்குறைகளின் பிரதிநிதிகளாக இருப்பதோடு மட்டுமல்லாது, ஏதோவொரு விசித்திரமான வகையில் அக்குறைகள் உருவாவதற்குக் காரணமாகவும், அதைக் காட்டிலும் விசித்திரமாக அவற்றைப் போக்குவதற்கான திறன் படைத்தவை போலவும் அப்பல்கலைகளை, அப்போதுதான் முளை விட்டிருந்த கழிவிரக்க அறச்சீற்றப் பள்ளியும் அதன் முன்னோடிகளும் குறை கூறினார்கள். பழிக்குரியவை மற்றும் அதைப் போக்கவல்ல ஊழிக்காலத்து ஆற்றல் படைத்தவை என்று ஒருசேர இரண்டையுமே பல்கலைகள் மீது சுமத்தும் முயற்சி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில், இது மதம், தத்துவம் மற்றும் அறிவியல் நிரப்பிக் கொண்டிருந்த இடத்தைப் பல்கலைகள் நிரப்ப வேண்டும் என்று கேட்பது போன்றது. அவையெல்லாம் நம் கருத்துரு முறைமைகள். அவை அனைத்துமே நம்மைத் தவறிவிட்டன. சீரழியும் கருத்துரு முறைமைகள் தாறுமாறான வழிகளில் இலக்கியக் கலாச்சாரமாக உருமாறுவதை, அலெக்ஸான்றியாவின் காலத்தில் தொடங்கி இன்று வரையிலும், மேலை கலாச்சாரத்தின் மொத்த வரலாறுமே நமக்குக் காட்டுகிறது. இதை நல்லது கெட்டது என்று வகைப்படுத்த முயலவில்லை, இப்படித்தான் நிகழ்கிறது என்பதையே சுட்ட விரும்புகிறேன். ஆனால் உண்மையில், பல்கலைக்கழகத்திலும் அதற்கு வெளியேயும், இலக்கியத்தையோ, இலக்கியக் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளையோ, ஒரு சமூகத்தையே காப்பாற்ற நம்மால் பணிக்க முடியாது. இலக்கியம் ஒரு சமூக மாற்றோ, சீர்திருத்தக் கருவியோ அன்று. அதன் முறைமை மானுட புலனுணர்வுகளையும் மனப் பதிவுகளையும் கொண்டு செயல்படுவது. சமூக நியதிகள் மற்றும் உருவுகள் என்ற சட்டகத்திற்குள் அவற்றை எளிதில் குறுக்கிவிட முடியாது.

பேட்டியாளர்: கழிவிரக்க அறச்சீற்றப் பள்ளியை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அழகியலாளர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டா?

ப்ளூம்: கண்டிப்பாக அதைத்தான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன். அப்பள்ளிக்கும் வேறு பல அபத்தமான நச்சுக் குப்பைகளுக்கும் எதிரான ஓர் ஆத்திரமான எதிர்வினையாக… ரஸ்கின், கணிசமான அளவிற்கு எமர்சன், நிச்சயமாக தெய்வீகமான வால்டர் மற்றும் உன்னதமான ஆஸ்கர் முன்மொழிந்த அழகியலின் கண்ணோட்டத்தின்படி கண்டிப்பாக நான் என்னை ஓர் அழகியலாளன் என்றே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன், மிகுந்த ஈடுபாட்டைக் கோரும் முறைமை அது. அமெரிக்காவில் இலக்கிய விமர்சனம் என்பது மிக மிக எளிமைப்படுத்தப்பட்ட இலக்கியப் பத்திரிகையியல், மற்றும் நான் பெருங்கேடாகக் கருதும், கல்விக்கூடங்களில், குறிப்பாக இளைய தலைமுறையினரிடத்தே நிகழும் இலக்கிய விமர்சனத்திற்கும் இடையே அல்லோகல்லோகப் பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் மேலும் அதிகரிக்கும் எண்ணிக்கைகளில், லகானின் அபத்தங்களைப் படித்த பட்டப் பயிற்சி மாணவர்கள், எட்மண்ட் ஸ்பென்சரைப் படித்ததே இல்லை அல்லது ஃபொகோவையோ டெரிடாவையோ வண்டி வண்டியாகப் படித்தவர்கள், ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் புரட்டிக்கூடப் பார்த்திருக்கவில்லை என்ற நிலை. கண்கூடாக, இது இலக்கியத் துறைக்கு ஏற்பட்ட ஓர் அபத்தமான தோல்வியே. ஓர் இளைஞனாக ஐம்பதுகளில் எனது வருங்காலத் துறையில் நான் காலடி வைத்தபோது, அது மதச்சார்பற்ற பாதிரிமார்களாலும் அல்லது மெத்தப்படித்த மடப்பள்ளிகளாலும் பெருமளவில் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது என்று அடிக்கடி பிரகடனம் செய்தேன். தெய்வமாகப் போற்றப்பட்ட டி.எஸ். எலியட்டின் ஆதரவில் இயங்கிய, பலத்த ஆங்கிலோ கத்தோலிக்கச் சார்ப்புகள் கொண்ட நவ விமர்சனத்தை (New Criticism) கருத்தில் கொண்டே அப்படி கூறினேன் என்பது வெளிப்படை. ஆனால், என் நடு வயதின் கடைசி வருடங்களில், நல்லதோ கெட்டதோ, இடம்பெயர்ந்த சமூக நற்பணியாளர் கூட்டத்தாலும், கும்பலாகக் கோவிந்தா போட்டுக் கூச்சலிட்டபடி குதிப்பதோடு மட்டுமல்லாது, தங்கள் கருப்பொருளையும் கடலில் மூழ்குவதற்காக உடனழைத்துச் செல்லும் லெம்மிங்ஸ்களாலும் சூழப்பட்டிருந்தேன் என்பதை உணர்ந்து கொண்டேன். கழிவிரக்க அறச்சீற்றப் பள்ளி என்பது ஒரு விந்தையான தனித்துவக் கலவை: புதிதாக அச்சடிக்கப்பட்ட பெண்ணியர்கள், லகானியர்கள், கொக்கரிக்கும் அந்த மொத்த பொருட்குறியாளர்கள் கூட்டத்தைத்தான் கூறுகிறேன், புது மாதிரிகளில் வெளிவரும் நவ வரலாற்றியலாளர்கள் என்று அறியப்படும் பாவலா-மார்க்சியர்கள், அவர்கள் செயற்பாடு புதிதாகவும் இல்லை, வரலாற்று ரீதியாகவும் இல்லை என்பதையும் இங்கு சுட்ட வேண்டும், மூன்றாம் தர கட்டுடைப்பாளர்கள் என்று விரியும் இந்த வினோதமான கதம்பத்திற்கும் இலக்கிய மதிப்பீடுகளுக்கும் எவ்விதமான ஞானப் பிராப்தமும் கிடையாது. உண்மையில் இது மிகவுமே சல்லித்தனமான ஒரு நிகழ்வு. ஆனால், இது எங்கும் விரவியிருக்கிறது, மேலும் அது அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே ஒழியக் குறைவது போல் தெரியவில்லை. கல்லூரியிலோ அதற்கு வெளியேயோ, ஆங்கிலம் பேசப்படும் உலகிலோ அல்லது ஃபிரான்சிலும் இத்தாலியிலும்கூட, அழகியல் மதிப்பீடுகளுக்குத் தன்னை உண்மையிலேயே அர்ப்பணித்துக் கொண்டு, வாசிப்பின்பத்திற்காக மட்டுமே, கவிதையையும் கதையையும் அனைத்திற்கும் மேலானதாகக் கொண்டாடும் ஒரு விமர்சகனைக் காண்பதென்பது மிக அரிதாகிவிட்டது. மூர்க்கமான அக்கப்போர்களே எங்கும் காணக் கிடைக்கின்றன. முறைமைகள் அல்லது ஒரே வழி போன்றவற்றின் மீதுள்ள மூர்க்கமான பிடிப்பு, அனைத்தையுமே சிதறடித்து நீர்த்துப் போகும் அளவிற்குக் கொண்டு சென்றுவிட்டது. வாசிப்பின் இன்பமே விமர்சனம் தொடங்கும் அல்லது அது தொடங்க வேண்டிய இடம், அது பதின்மத்தில் தொடங்கலாம். ஏன் இருபதுகளிலும் தொடங்கலாம். ஆனால், கவிதைமீது காதலுற்றிருக்க வேண்டும். நாம் ஒரு காலத்தில் “கற்பனைமிக்க இலக்கியம்” என்ற அழைத்ததைக் காதலுற்றிருக்க, அவ்வாறு காதல் வசப்பட்டிருப்பீர்களானால் அதையும் கடந்து நாம் உன்னதம் என்று அழைத்ததை எதிர்கொள்வீர்கள். இவ்வாறு செய்யத் தொடங்கிய உடனேயே நீங்கள் போட்டி முறைமைக்குள் சென்று விடுகிறீர்கள், உங்கள் சுபாவத்திற்கு போட்டி மனப்பான்மை ஏற்புடையதாக இல்லாவிட்டாலும்கூட. இறுதியில், உங்களைக் குறிப்பிட்ட ஒரு விளையாட்டு வீரரின் அல்லது குழுவின் விசிறியாக மாற்றும் சக்திக்கும், உங்களை ஒரு கவிஞருக்கு மேலாக மற்றொரு கவிஞரையோ அல்லது ஒரு நாவலாசிரியரைக் காட்டிலும் மற்றொரு நாவலாசிரியரையோ உயர்வாக மதிப்பிடக் கற்றுத் தரும் ஆன்மாவிற்கும், அவற்றின் ஒப்புநோக்கு அளவைகளைத் தவிர அதிக வித்தியாசமில்லை. போட்டியின் ஏதோவோர் அம்சம் வாசக அனுபவத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் ஊடுருவுவதாகவும் இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். எப்படி இல்லாமல் இருக்க முடியும்? ஒருக்கால் வயதாக வயதாக இதை முழுதாகப் புரிந்து கொள்வீர்களாக இருக்கும். ஆனால், இறுதியில் ஒரு புத்தகத்திற்குப் பதிலாக மற்றொன்றை நீங்கள் தேர்வுதான் செய்கிறீர்கள் அல்லது ஒரு கவிதைக்குப் பதிலாக மற்றொன்றை. மனிதர்களைத் தேர்வு செய்வதுபோல். அறிமுகமானவர்கள் அனைவருமே உங்கள் நண்பர்களாகிவிட முடியாது அல்லவா? புத்தகங்கள் விஷயத்திலும் அப்படியே. வித்தியாசமேதும் இல்லை.

பேட்டியாளர்: விமர்சன பாணிகளில் மாற்றங்கள் அல்லது மேம்படுத்தல்கள் எதையாவது எதிர்பார்க்கிறீர்களா?

ப்ளூம்: நலிவு முன்னேற்றம் குறித்த கட்டுக் கதைகளில் எனக்கு நம்பிக்கையே இல்லை. அவை இலக்கியச் சூழலுடன் தொடர்புற்றிருந்தாலும்கூட. உலகம் மேம்படுவதோ, மோசமாவதோ இல்லை. அது மூப்பெய்துகிறது. மேம்படாமல், நலிவுறாமல் இருக்கும் அதற்கு வயது மட்டும் ஆகிக்கொண்டே போகிறது. இலக்கியமும் அப்படியே. ஆனால், பல்கலைகளில் தற்போது இலக்கியத் துறை என்ற போர்வையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் திராபையே இறுதியில் அதைப் போக்குவதற்கான திருத்தத்தையும் அளிக்கும் என்று நினைக்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால், இறுதியில், விரைவாகவோ சற்றுத் தாமதமாகவோ, தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் தொழில் உத்திகள் நிரம்பிய சமூகப் பணிகள், மாணவர்களையும் ஆசிரியர்களையும் சலிப்படையச் செய்யப் போகின்றன. விழைவுகள் மற்றும் அழகியல் மதிப்பீடுகளை இலக்காகக் கொண்ட ஒரு திருப்பம் நிகழும். அல்லது இவர்கள் எல்லோருமே தங்கள் நேரத்தை வேறேதோ ஒன்றில் செலவிட முனைவார்கள். ஆனால், அவர்கள் தற்போது செய்து கொண்டிருப்பதெல்லாம் பெருமளவில் போலித்தனமான பாசாங்காகவே எனக்குப் படுகிறது. “விமர்சகனின் சமூகப் பொறுப்பு’ அல்லது “விமர்சகனின் அரசியல் பொறுப்பு” போன்ற கட்டுக் கதைகளை மீண்டும் மீண்டும் எதிர்கொள்வது சலிப்பூட்டுவதாக இருக்கிறது. இதற்குப் பதிலாக ஒரு புத்தகக் கடையினுள் நுழைந்து அங்கு “அரசியலாளரின் அழகியல் பொறுப்புகள்” அல்லது “பொறியாளரின் இலக்கியப் பொறுப்புகள்” போன்ற புத்தகங்களை எதிர்கொள்ள விரும்புகிறேன். விமர்சனம் சமூக முன்னேற்றத்திற்கான திட்டமாகவோ, அதன் மாற்றத்திற்கான எந்திரமாகவோ இருக்க முடியாது. எப்படி அவ்வாறு இருக்க முடியும் என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. சமூக மாற்றத்தைத் தீவிரமாக விழையும் விமர்சகருக்கான மிகச் சிறந்த உதாரணத்தை தேடினீர்களானால், வில்லியம் ஹஸ்லிட்டை அத்தகைய நல்ல உதாரணமாகக் கண்டடைவீர்கள். ஆனால், அவரது அழகியல் மதிப்பீடுகள் அவரது இடதுசாரி செயற்பாட்டியத்தால் பாதிக்கப்படுவதையோ, கற்பனைத்திறன் மிக்க இலக்கியத்தைப் புரட்சிக்கான ஓர் இயந்திரமாக அவர் பயன்படுத்த முனைவதையோ உங்களால் பார்க்கவே முடியாது. மில்டனைக் குறித்து ஹஸ்லிட் மற்றும் டாக்டர் சாமூயெல் ஜான்சன் ஆற்றியிருக்கும் அழகியல் எதிர்வினைகளுக்கிடையே பெரிய வித்தியாசமெதையும் நீங்கள் கண்டெடுக்கப் போவதில்லை. இத்தனைக்கும் டாக்டர் ஜான்சன் தனது அரசியலில் மிகவுமே வலதுசாரி, ஹஸ்லிட்டோ வெளிப்படையாகவே ஃபிரெஞ்சுப் புரட்சி மற்றும் ஆங்கிலப் புரட்சிவாதத்தின் ஆதரவாளர். இன்றைய சூழலில் வாழ்க்கையிலோ, இலக்கியத்திலோ ஹஸ்லிட்டிய அல்லது ஜான்சனிய மனப்போக்கை அதிகமாகக் காண முடியவில்லை. சலிப்பூட்டும் சல்லித்தனங்களே எங்கும் காணக் கிடைக்கின்றன. “இன வெறியர்” அல்லது “பால் வெறியர்” என்று முத்திரையிடப்படுவதை அனைவருமே பீதியுடன் அஞ்சுவதால், அவர்கள் எல்லோருமே, நேரடியாகவோ அல்லது எதிர்மறையாகவோ, கருப்பர்கள், ஹிஸ்பானியர்கள் அல்லது பல சமயங்களில் பெண்கள் சம்பந்தப்பட்டிருக்கும் எழுத்துக்களைப் பொறுத்தமட்டில், பல்கலைகளுக்கு உள்ளேயும் புறத்தேயும் நிகழ்த்தப்பட்டிருக்கும் தரங்களின் முழுமுதல் தகர்ப்பிற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

பேட்டியாளர்: ஆனால், இவ்வியக்கம் சில அபாரமான நாவல்களை நம் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இல்லையா? உதாரணமாக, நீங்கள் மிகவும் ரசிக்கும் ரால்ஃப் எலிசனின் “Invisible Man”.

ப்ளூம்: ஓ! அதுவொரு மிக மிக மிக அரிதான விதிவிலக்கு. “Invisible Man”, -ஐத் தவிர வேறென்ன இருக்கிறது? ஸோரா நீல் ஹர்ஸ்டனின் “Their Eyes Were Watching God” -இல் ஒரு விதமான செறிவான தீவிரமும், திடமான கட்டுப்பாடும் இருக்கிறது. கண்டிப்பாக அது ஒரு மிகச் சிறப்பான புத்தகம்தான். முதல் முறையாகப் படித்தபோது என்னுள் ஏற்படுத்திய ஆச்சரியத்தையும் இன்பத்தையும் பல மீள்வாசிப்புகளிலும் அது தக்கவைத்துக் கொண்டுள்ளது. நான் படித்தவரையில், இந்நூற்றாண்டில் அமெரிக்கக் கருப்பர்களால் எழுதப்பட்டிருக்கும் முழு நீளப் புனைவுகளுள், அதுவும், “Invisible Man” மட்டுமே நீடிக்கும் சாத்தியத்தைப் பெற்றிருக்கின்றன. ஆலிஸ் வாக்கர் மிகவுமே பலவீனமான ஓர் எழுத்தாளர். அப்படிச் சொல்வதே சற்றுத் தாராளம்தான். ’The Color Purple’ போன்ற ஒரு புத்தகத்திற்கு எந்தவொரு அழகியல் சுவாரஸ்யமோ, மதிப்போ கிடையாது. ஆனால், அதுவே வானளாவிய அளவிற்கு மெச்சப்பட்டுக் கல்வித் தளங்களில் கற்பிக்கப்படுகிறது. சமூக மற்றும் கலாச்சாரக் குற்றவுணர்வுகள் கைப்பற்றிவிட்ட காலமிது என்பதில் சந்தேகமில்லை.

பேட்டியாளர்: பெண்ணிய விமர்சனத்தைப் பற்றியும் இப்படித்தான் கருதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்?

ப்ளூம்: பெண்ணிய விமர்சகர்களை எனக்கு மிகவுமே பிடிக்கும். அவர்களுள் சிலர் என் மிக நெருங்கிய நண்பர்களும்கூட. ஆனால், பெண்ணிய விமர்சனம் எனக்கு உவப்பானதன்று என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த காலத்திலோ, நிகழ்காலத்திலோ, பெண்களால் எழுதப்பட்ட, நாம் குறைவாக மதிப்பீடு செய்திருக்கும் படைப்புகளைக் கண்டெடுத்து, அவற்றை நம் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாது அவற்றை இன்னமும் கவனமாகவோ, பயனளிக்கும்படியாகவோ வாசிக்கக் கற்றுத் தருவதே அவர்களுக்கான உண்மையான சோதனை. அந்த சோதனையில் அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில், அவர்கள் ஒருவரைக்கூட மூலநூல்கள் தொகையில் கொண்டு சேர்க்கவில்லை. பெண் எழுத்தாளர்களில் பொருட்படுத்தத்தக்கவர்களான – ஜேன் ஆஸ்டன், ஜார்ஜ் எலியட், எமிலி டிகின்சன், ஈடித் வார்டன், வில்லா கார்ட்டர், மற்றும் அழகியல் அடிப்படையில் பொருட்படுத்தப்பட வேண்டிய மற்றவர்கள் – இவர்களே இன்றும் பொருட்படுத்தப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர். பெண்ணிய விமர்சனம் என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால்கூட எலிசபத் பிஷப்பையோ, மே ஸ்வென்ஸனையோ இப்போதைக் காட்டிலும் குறைவாகவோ, அதிகமாகவோ நான் ரசித்திருக்க மாட்டேன். பெண்ணிய விமர்சனம் என்று என் முன் நீட்டப்படுவதை வெறித்துவிட்டு, மனச்சோர்வுடன் தலையசைத்துக் கொள்கிறேன். அதைப் பாராட்டியே ஆகவேண்டுமென்றால் நல்லெண்ணத்துடன் எழுதப்பட்டிருப்பவை என்று மட்டுமே என்னால் கூற முடியும். அவற்றை இலக்கிய விமர்சனமென்றே நான் கருதுவதில்லை.

பேட்டியாளர்: ஒரு வகையான சமூக அல்லது அரசியல் ரீதியான இலக்கிய விமர்சனமென்று அதை மதிப்பிடலாமா?

ப்ளூம்: அரசியல் சமூக விமர்சனம் பற்றி நான் கவலைப்படுவதில்லை. சிலர் அப்பணியில் ஈடுபட விரும்பினால் அது அவர்கள் விருப்பம். அது என் பணியன்று, கடவுள் புண்ணியத்தில். ஒரு படைப்பை அதன் அழகியல் கூறுகளுக்காக என்னால் படிக்க முடியாதென்றால் வேறெந்த காரணத்திற்காகவும் அது என்னை ஈர்க்கப் போவதில்லை. சமூக, இன, இனக்குழு அல்லது “ஆண்மை” சார்ந்த விருப்புகள் என் அழகியல் தேர்வுகளை நிர்ணயிக்கக்கூடும் என்ற கருத்தை ஒரு கணத்திற்குக்கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயுள்கால அனுபவமும், படிப்பும், தரிசனமும் எனக்கு இதைத்தான் சொல்கிறது.

பேட்டியாளர்: சமீபகாலமாக பரவலாக விவாதிக்கப்படும் “மூல நூல்கள் சிக்கலை” பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

ப்ளூம்: இது அமெரிக்காவின் தற்கால கல்வி மற்றும் சமூகச் சூழலில் நிலவும் அரசியலின் பிரதிபலிப்பே தவிர வேறொன்றுமில்லை. முன்னாளில், ஒரு படைப்பை மூலநூலாக நிர்ணயம் செய்வதற்கான சோதனையில், தனது காலத்திற்குப் பின் வலுவான வாசிப்புகளை, நேரடியான பொருட்படுத்தல் வழியாகவோ அல்லது உள்ளார்ந்த பொருள் கொள்ளும் படிவகங்கள் வழியாகவோ அது உருவாக்கியதா என்ற கேள்வியே முன்வைக்கப்பட்டது. பால், அதிகாரம் என்று நூல்விட்டுக் கொண்டிருக்கும் பையன்களோ பெண்களோ, நவ வரலாற்றியல்காரர்களோ, வளையவரும் தற்கால விமர்சனக் கூட்டமோ நமக்கு புதிய மூல நூல்களைத் தரப்போவதில்லை. அதேபோல், பெண்ணிய எழுத்தின் அனைத்துக் கொந்தளிப்புகளோ, இப்போது ஆப்ரிக்க – அமெரிக்க எழுத்து என்று வகைமைப்படுத்தப்படும் எழுத்துகளோ நமக்கு மூல நூல்களை அளிக்கப் போவதில்லை. எத்தனை “லெம்மிங்சுகள்” கூடிக் கும்மியடித்து அவரது உன்னதத்தை பிரகடனப்படுத்தினாலும் ஆலிஸ் வாக்கர் ஒருபோதும் மூலநூல் கவிஞராக ஆகிவிடப் போவதில்லை. உண்மையில் இது எனக்கொரு போலியான பிரச்சினையாகவே படுகிறது. இலக்கியத் துறை எனும் போர்வையில் “அரசியல் பொருத்தப்பாட்டையே” முன்மொழிந்து கொண்டிருப்பவை எல்லாம் காலாவதியாகி புறந்தள்ளப்படும் என்றே தோன்றுகிறது. இவையெல்லாமே சிற்றலைகள்தான். மிஞ்சிப் போனால் ஐந்து வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். இலக்கியத் துறையில் காலடி வைத்த நாளிலிருந்து பல நவீனப் பகட்டுகள் தோன்றி மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாற்பது வருடங்களுக்குப் பிறகு தற்காலிகமான மேம்போக்குச் சிற்றலையை ஆழ்ந்த நீரோட்டத்திடமிருந்தும், அசலான மாற்றத்திடமிருந்தும் இனம் பிரிக்க முடிகிறது.

பேட்டியாளர்: ஃபிராய்டையும், ஷேக்ஸ்பியரையும் கற்றுத் தருகிறீர்கள் அல்லவா?

ப்ளூம்: ஆமாம். அதிகப்படியாகவே. ஷேக்ஸ்பியரை ஃபிராய்டிய வாசிப்பு செய்வதில் எனக்கு எந்த ஆர்வமும் கிடையாதென்றும், அதைக் காட்டிலும் ஃபிராய்டை ஒரு விதமான ஷேக்ஸ்பியரிய வாசிப்பிற்கு உட்படுத்துவதையே விரும்புகிறேன் என்றும் என் மாணவர்களிடம் எப்போதுமே கூறிக் கொண்டிருக்கிறேன். ஒரு வகையில் ஃபிராய்ட் ஷேக்ஸ்பியரின் உரைநடை வடிவமாகவே இருந்தாக வேண்டும், ஏனெனில், மனதைக் குறித்த ஃபிராய்டின் வரைபடம் ஷேக்ஸ்பியருடையதும்கூட. இதை அவருமே உணர்ந்திருந்தார். அதனால்தான் அவரிடம் அவ்வளவு சீற்றம் இருந்ததென்று நான் நினைக்கிறேன். நாம் ஃபிராய்டிய உளவியல் என்று வரையறுப்பது உண்மையில் ஷேக்ஸ்பியரின் கண்டுபிடிப்பே. பெருமளவில், அதை நெறிமுறைப்படுத்தியிருப்பதே ஃபிராய்டின் பங்களிப்பு. இதில் ஆச்சரியமேதுமில்லை. ஃபிராய்டே, “எனக்கு முன் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். கவிஞர்கள் என்று கூறுவது, குறிப்பாக ஷேக்ஸ்பியரையே சுட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உண்மையில் இவ்விஷயம் இதைக் காட்டிலும் செறிவான ஆழங்களைத் தொட்டுச் செல்கிறது. மேலை உளவியல் என்பது வேதாகமக் கண்டுபிடிப்பு என்பதைக் காட்டிலும், ஒரு ஷேக்ஸ்பியரியக் கண்டுபிடிப்பே. ஹோமரிய, சோஃபக்லிஸிய கண்டுபிடிப்புகளுக்கும் (கார்டீஸிய யுங்கிய கண்டுபிடிப்புகளைக் கேட்கவே வேண்டாம்) இது பொருந்தும் என்பது வெளிப்படை. நமது பெரும்பாலான அறிதல் உருவகிப்புகள் ஷேக்ஸ்பியரிடமிருந்தே வந்திருக்கின்றன என்பதால் மட்டும் இதைக் கூறவில்லை; மனதின் அறிதல் முறைமைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதில் பெரும்பகுதி அவரின் கண்டுபிடிப்புதானோ என்ற சந்தேகம் எனக்குண்டு. இதை ஒருமுறை, தொழில்ரீதியாக ஷேக்ஸ்பியரைப் பயிற்றுவிப்பவர்களிடம் ஆய்வரங்கொன்றில் கூறியபோது, அவர்கள் எரிச்சலுற்று “ஷேக்ஸ்பியரை கடவுளுடன் குழப்பிக் கொள்கிறாய்” என்று எதிர்வினையாற்றினார்கள். அப்படியே இருந்தாலும்கூட என்ன தப்பு என்று கேட்கிறேன். அறிதல் மற்றும் ஆளுமையை மொழியில் உருவகிப்பதை ஷேக்ஸ்பியர் நிரந்தரமாக மாற்றியமைத்தார். மானுட ஆளுமைகள் தங்களுக்குத் தாமாகவோ மற்றவர்களுக்கோ அல்லது இரண்டுக்குமேகூட, உரக்கப் பேசிக்கொள்வதையும், அதன்பின் தாம் பேசியதைப் பற்றி உரத்துச் சிந்தித்துக் கொள்வதையும் ஷேக்ஸ்பியருக்கு முன் எவருமே தந்ததில்லை என்பதையே, அவரைப் படிப்பிப்பதிலிருந்தும், அவரைப் பற்றி எழுதுவதிலிருந்தும் நான் கண்டடைந்த பிரதான உண்மையாக அடையாளப்படுத்தலாம். மேலும், அவ்வாறு சிந்திக்கையில் முக்கியமாக, உயிராதாரமான மாற்றத்திற்கு உட்பட்டு, வேறொரு கதாபாத்திரமாகவோ, ஆளுமையாகவோ, ஏன், முற்றிலும் மாறுபட்ட மனதுடையவர்களாக மாறுவதும் அக்கண்டடைதலில் சேர்த்தி. அப்படிப்பட்ட உருவகிப்புகள் நமக்கு இப்போது மிகவுமே பழக்கமாகி விட்டன. ஆனால், ஷேக்ஸ்பியருக்கு முன் அவை இடம் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை. வேதாகமத்தில் அவை இடம் பெறுவதில்லை, ஹோமரிலோ டாண்டேவிலோ, ஏன் யூரிபிடீஸிலோகூட அவை இடம் பெறுவதில்லை. ஷேக்ஸ்பியரின் முன்னோடி என்றும், அவர் சில வித்தைகளை ஒருவரிடம் கற்றுக் கொண்டார் என்றும் சொன்னால் அது சாஸராகத்தான் இருக்க முடியும். இதனால்தான் ஃபால்ஸ்டாஃபில் ‘வைஃப் ஆஃப் பாத்’தையும், எட்மண்ட் , இயாகோ போன்ற பாத்திரங்களில் பார்டனரையும் நான் அடையாளம் காண்கிறேன். சாஸர் எவரிடமிருந்து இதைக் கற்றுக் கொண்டார் என்பது மிக புத்திசாலித்தனமான கேள்வி. அது இன்னமும் நிறைவேற்றப்படாத, மாணவர்கள் முன் நான் இட்டிருக்கும் ஒரு சவாலாக இருந்து கொண்டிருக்கிறது. ஒரு எழுத்தாளராக சாஸரின் அதிர்ச்சியூட்டும் தனித்தன்மை என்பது இதில்தான் இருக்கிறது. சாஸரேகூட இதை அவ்வப்போது, மிகக் குறைந்த அளவுகளில், தட்டித் தடவித்தான் நிகழ்த்திக் காட்டுகிறார். ஷேக்ஸ்பியருக்கோ இது அவர் எப்போதுமே செய்து கொண்டிருக்கும் கைவந்த கலை. அவ்வாறு செய்து அதை ஓர் இயல்பான உருவகிப்பு வகைமையென நம்மை நம்பவைப்பதென்பது, ஷேக்ஸ்பியரின் தனித்துவமான திறன். நாமும் அதில் முழுமையாக உள்ளடக்கப்பட்டிருப்பதால் அதன் தனித்தன்மையை நம்மால் இனம்காண முடிவதில்லை. ஆனால், உண்மையில் அத்தனித்துவம் மலைப்பூட்டுவதே.

அப்படியே இதையும் கூறிவிடுகிறேன். அண்மையில் ஃபிரெஞ்சு மரபின் கண்ணோட்டத்தில் இக்கேள்வியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். யேலின் பட்டப்பயிற்சி மாணவர்களுக்காக நான் நடத்திய ஷேக்ஸ்பியர் ஆய்வரங்கு வகுப்பிற்காக ஹாம்லெட்டைப் பற்றி அற்புதமான (என்னைப் பொறுத்தவரையில்) கருத்தரங்கொன்றை நடத்தினேன். அரங்கு ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் கணிசமான நுண்ணறிதலொன்று கிட்டியது. மாணவர்கள் அதனால் குழப்பமுற்று திணறிக் கொண்டிருந்தார்கள் என்று பின்புதான் தெரிய வந்தது. ஒரே மூச்சில் கனமான பல விஷயங்களைக் கூற முற்பட்டதாலும் இருக்கலாம். பிரெஞ்சு நவ செவ்வியல் கருத்தியல் கோட்பாடுகளுள் ஒரேயொரு கோட்பாடு மட்டும் விதிவிலக்குகளின்றி – மோலியெர், ரசீன் உட்பட – அனைத்து நாடக ஆசிரியர்களாலும் பின்பற்றப்பட்டது என்று எனக்குத் தோன்றியது. தனக்குத்தானே ஆற்றிக்கொள்ளும் உரைகள் மற்றும் பிறர் எவருக்குமே கேட்காத தனிமொழிகள் நிறைந்திருக்கும் காட்சிகள் நாடகத்தில் கண்டிப்பாக இடம் பெறக்கூடாது என்ற கோட்பாடு. எவ்வளவுதான் திறனியக்கமும், விரைவூக்கமும் கோரப்பட்டாலும் கதாநாயகர் தன் சிந்தனைகளையும், கருத்துகளையும் வெளிக்காட்டுவதற்கு ஏதாக ஒரு நம்பிக்கையான பேச்சுத்துணை எப்போதுமே மேடைக்கு இழுத்து வரப்பட்டார். ஷேக்ஸ்பியரை ஃபிரெஞ்சுக்காரர்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை மட்டுமல்லாது அவர்களைத் தவிர்த்த பிற ஐரோப்பியர்களின் கலாச்சாரம், மொழி, இலக்கியம், நாடக மரபு போன்றவற்றில் ஷேக்ஸ்பியரின் பாதிப்பு மற்றும் ஃப்ரெஞ்சு, ஆங்லோ-அமெரிக்க இலக்கியச் சிந்தனை வகைமைகளுக்கிடையே உள்ள கணிசமான வேறுபாடுகளையும் இது விளக்குகிறது. மேலும் நம்மீது அபத்தமான அளவிற்குத் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஃபிரெஞ்சு முறைமைகளுக்கும், நம் இலக்கியத்திற்கும், நாம் அதைப் பற்றிப் பேசும் விதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் இது தெளிவுபடுத்துகிறது. இன்னொரு உதாரணத்தையும் தருகிறேன், நெடுநாள்களுக்கு முன்பு, ஆசிரியர் குழுவிற்கான கருத்தரங்கொன்றில் ஷேக்ஸ்பியர் மற்றும் அவர் தனித்துவம் குறித்த என் கருத்துகளைக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரையிலும் பேசினேன். அதன் இறுதியில், கருத்தரங்கிற்கு வந்திருந்த, என் பேச்சை ஒரு வகையான ஆச்சரியத்துடன் கேட்ட, அதைக் கண்டிப்பாகப் புரிந்து கொள்ளாத, பெண்மணி ஒருவர், அவர் யேல் பல்கலைப் பேராசிரியரும்கூட, சற்று மிகையான எரிச்சலுடன், “அதெல்லாம் சரி ப்ரொஃபெஸர் ப்ளூம், நீங்கள் ஏன் தனித்துவத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பதை என்னால் உண்மையாகவே புரிந்து கொள்ள முடியவில்லை, பொருளியல் துறையில் தனியார் தொழில் முனைப்பைப் போல் அதெல்லாம் காலாவதியாகிவிட்ட ஒன்று… ” என்று கூறினார். கழிவிரக்க அறச்சீற்றப் பள்ளி உறுப்பினருக்கெல்லாம் உரையாற்றிக் கொண்டிருந்தது எனக்கு அபத்தமாக இருந்தது. எனினும், என் சக ஊழியர் ஸோஷானா ஃபெல்மன் இடைமறித்து விளக்கமளித்ததால், நான் மரியாதையுடன் நயமாகவே நடந்து கொண்டேன். இதோ இங்கு வந்து சேர்ந்திருக்கும் இப்பெண்மணி ரசீனிடமிருந்தோ, மொலியரிடமிருந்தோ உதித்தவர் அல்லர். லகான், டெரீடா மற்றும் ஃபோக்கோவிடமிருந்தே அவர் வந்திருக்கிறார். மேலும், ரசீன் மோலியெரிடமிருந்துமே அவர் வந்திருந்தாலும்கூட அவரால் நான் சொன்னதைப் புரிந்து கொண்டிருக்க முடியாது. ஷேக்ஸ்பியரின் கதாநாயகர்கள் தமக்குத் தாமே சிந்தித்துக் கொண்டும், அச்சிந்தனையால் மாற்றத்திற்கு உட்படும், அதீதமான தனித்துவத்தைப் பற்றி நான் பேசியது ஒரு கணத்திற்கு என் மனதில் மின்னல் வேகத்தில் ஓடியது. அவரால் இதை ஒருபோதுமே புரிந்து கொள்ள முடியாது, ஏனெனில் ஃபிரெஞ்சு நாடகத்தில் இப்படி நிகழ்வதே இல்லை; இந்நிகழ்வைப் பொருத்தமான ஒன்றாக ஃபிரெஞ்சு விமர்சன மனதால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கண்டிப்பாக ஆசிரிய இருப்புத்தன்மை இயல்பாகவே வலுவற்றதாக இருக்கும் ஒரு விமர்சன மற்றும் புரிதல் முறைமைக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது. வலுவற்றிருப்பதால் அவ்வகைமைகளில் அவ்விருப்பு மரிக்கவும் செய்யலாம்.

பேட்டியாளர்: ஷேக்ஸ்பியரின் கதாநாயகர்களிடத்தே இம்மாதிரியான குணாதிசயங்களை நீங்கள் கண்டெடுத்த விதத்தைப் பற்றிக் கூற முடியுமா?

ப்ளூம்: முடியும். குறிப்பிட்ட அந்தக் கணத்தைக்கூட என்னால் நினைவுகூர முடியும். நான் கிங் லியரைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தேன். அந்நாடகத்தில் என்னை எப்போதுமே கவரும் தருணத்தை எட்டிவிட்டேன். திடீரென்று அதில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெளிவாகியது. ஷேக்ஸ்பியரின் அனைத்து வில்லன்களிலும், எட்மண்டே தலைசிறந்தவன். ஒப்பு நோக்குகையில் அவனது சூழ்ச்சித் திறன் இயாகோவைக்கூடக் கத்துக்குட்டியாக்கி விடுகிறது. அவன் மதிநுட்பமும், பகடி செய்யும் விழிப்புணர்வும் கிங் லியர் நிகழ்த்தப்படும் மேடையில் பிரவேசிக்கும் எவரையுமே கண்களில் விரலைவிட்டு ஆட்டக்கூடும் திறன் படைத்தவை. அவன் அவ்வளவு மோசமானவன் என்பதால்தான் அவனை சரிக்கட்டுவதற்கு கோனெரில், ரீகன் என்று இருவர் தேவைப்படுகிறார்கள்… மரணக்-காயத்தைத் தன் தமயனிடமிருந்தே அவன் பெற்றுக் கொள்கிறான்; போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கிறான். கொனரிலும், ரீகனும் இறந்து விட்டார்கள் என்ற செய்தி வருகிறது – ஒருவள் மற்றொருவளைக் கொன்றுவிட்டு எட்மண்டிற்காகத் தற்கொலை செய்து கொண்டாள் என்ற செய்தி. எட்மண்ட் உரக்கச் சிந்தித்துவிட்டு, மிக ஆச்சரியமளிக்கும் விதத்தில் (மொத்தம் நான்கே நான்கு வார்த்தைகளில்) சொல்கிறான், “ஆயினும், எட்மண்ட் நேசிக்கப் பட்டான்.” இந்நான்கு வார்த்தைகளைக் கேட்கையில் நாம் திடுக்கிடுகிறோம். அவற்றைக் கூறி முடித்த உடனேயே அவற்றைப் பற்றி உரக்கச் சிந்திக்கத் தொடங்கி விடுகிறான். இருளின் ஆழங்களில் வசித்த அவ்விரு மிருகங்களும், ஒன்று மற்றொன்றைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கும் தன்னை இரண்டுமே காதலித்திருந்தாலும், அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறான். அவன் எண்ணவோட்டம் இவ்வாறு நீள்கிறது: “எனக்காக ஒருவள் மற்றொருவளுக்கு நஞ்சூட்டி/ தன்னையும் மாய்த்துக் கொண்டாள்.” அதன்பின் திடீரென்று “மூச்சுத் திணறியபடியே மூச்சை விழைகிறேன்” என்று கூறிவிட்டு ஆச்சரியமளிக்கும் விதத்தில் “என் இயல்பையும் மீறி/ புண்ணியம் செய்ய முயல்கிறேன்” என்று கூறுகிறான். லியரையும், கார்ட்டீலியாவையும் கொல்ல ஆணையிட்டிருப்பதை நினைவுகூர்வதால், மூச்சுத் திணறல் மேலும் அதிகமாகி, அதைத் தடுத்து நிறுத்த “நேரமாவதற்குள் ஆள் அனுப்புங்கள்” — என்று ஆணையிடுகிறான். ஆனால், நேரமோ கடந்து விடுகிறது, கார்டீலியா கொல்லப்படுகிறாள். எட்மண்டும் இறக்கிறான். ஆனால் அது ஓர் அற்புதமான மனமாற்றம். “ஆயினும், எட்மண்ட் நேசிக்கப் பட்டான்.” என்ற தனது வார்த்தைகளைத் தானே கேட்டு அதிசயிக்கும் தருணத்தில் இம்மாற்றம் நிகழ்கிறது, அதன் உந்துதலால்தான் சிந்திக்கத் தொடங்குகிறான். அவ்வார்த்தைகளை அவன் ஒலித்திருக்காவிட்டால் அம்மாற்றமும் நிகழ்ந்திருக்காது. ஷேக்ஸ்பியருக்கு முன் இலக்கியத்தில் இப்படி ஒரு தருணம் இடம் பெற்றதில்லை. மானுட உள்நோக்குதலின் உருவகிப்பு இவ்வளவு பரிபூரணமாகவும், அகண்டதாகவும் இருப்பதால்தான் அதற்கு நிகரான ஒன்று அவருக்கு முன்னேயோ பின்னேயோ படைக்கப்படவில்லை.

பேட்டியாளர்: ஆகவே, ஹாம்லெட்டைப் பற்றி ஃபிராய்டிய அடிப்படையில் எழுதப்பட்ட அந்த எர்னெஸ்ட் ஜோன்ஸ் விரிவுரைக்குத் தேவையே இல்லை…?

ப்ளூம்: இடிப்பஸ் சிக்கலைப் பற்றிய ஹாம்லெட்டின் விரிவுரை எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பது அதைக் காட்டிலும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் பங்கேற்க நிர்ப்பந்தப்பட்டிருக்கும் நாடகங்களில் மட்டுமே அவர்களால் சரியாக இயங்க முடியும் என்று ஷேக்ஸ்பியரின் துயரார்ந்த கதாநாயகர்களைப் பற்றி ஏ.சி. பிராட்லி கூறிய அற்புதமான வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றன. அதாவது – இயாகோவும் ஹாம்லெட்டும் ஒரே மேடையில் பிரவேசிக்க நேர்ந்தால், இயாகோவின் திரியாவரங்களை இனங்காண ஹாம்லெட்டுக்கு ஐந்து நொடிகளே பிடிக்கும் என்றும், ஹாம்லெட்டின் மூர்க்கமான பகடியைத் தாங்க முடியாத இயாகோ பைத்தியம் பிடித்துத் தற்கொலை செய்து கொள்வான் என்றும் பொருள்பட… அதேபோல் இறந்துவிட்ட ஒதெல்லோவின் தந்தை ஆவியாக வந்து தன்னை எவனோ கொன்று விட்டான் என்று ஒத்தெல்லோவிடம் முறையிட்டால், அவன் உடனேயே வாளை உருவிக் கொண்டு தந்தையைக் கொன்றவனைக் கண்டம் துண்டமாக வெட்டிச் சாய்ப்பதற்குக் கிளம்பியிருப்பான். இரண்டிலுமே நாடகத்திற்கான சாத்தியங்கள் மறைந்து விடும். நாடகங்கள் ஒன்றையொன்று கைமா செய்யக்கூடும் என்பதுபோல், ஷேக்ஸ்பியரும் தனக்குச் சட்டகமாகக் கொண்டு வரப்படும் எந்த ஓர் எழுத்தாளரையும் கைமா செய்துவிடுவார். ஷேக்ஸ்பியரைக் கொண்டு ஃபிராய்டை வாசிப்பது, சிலவற்றை விடுத்தாலும் வேறு சிலதை உள்ளிழுத்துக் கொள்ளும். அவ்வாசிப்பு இடிப்பஸ் சிக்கலைக் குறித்த ஃபிராய்டின் உருவகங்களைக் கண்டு நம்மை எரிச்சலுறவும் செய்யும். ஆனால், ஃபிராய்டைக் கொண்டு ஹாம்லெட்டை வாசிப்பதோ பேரிழப்பில்தான் சென்று முடியும்.

பேட்டியாளர்: எப்போதாவது ஷேக்ஸ்பியர் நாடகத்தில் நடித்திருக்கிறீர்களா?

ப்ளூம்: ஒரே ஒரு முறை, கார்னலில் நடித்திருக்கிறேன். ஃபாதர் ஃபால்ஸ்டாஃப் வரும் காட்சிகள் எனக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதற்காகவே அப்பாத்திரத்தில் நடிப்பதற்காக வற்புறுத்தப்பட்டேன். ஆனால், அது ஒரு பெருந்தோல்வியே. மேடையில் வேறெவருமே இல்லாதது போல் நான் நடித்தேன். இத்தகவலை நான் நினைவுகூரும் போதெல்லாம் என் இளைய மகனுக்குச் சிரிப்பு வருகிறது. மேலும், நினைவூட்டக் குறிப்புகளைக் காதில் வாங்கிக் கொள்ளாததால் மேடையில் ஒருவிதமான கிரிட்லாக் உருவாவதற்குக் காரணமாகி விட்டேன். எனக்கு ஜாலியாகத்தான் இருந்தது, ஆனால் வேறெவருக்குமே அப்படித் தோன்றவில்லை. சில காலங்களுக்கு முன் ஜனாதிபதி ரேகனிடம் (அவரது நகைச்சுவைக்காக மட்டுமே அவர் நினைவுகூரப் படவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அவரது ஜோக்குகள் உண்மையாகவே மிக மிக அருமையானவை) எட்டு வருடங்களாக ஜனாதிபதி பொறுப்பிலிருந்தும்கூட எப்படி இவ்வளவு அருமையாகக் காட்சியளிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நீங்கள் இச்செய்தியைப் படித்தீர்களா?

பேட்டியாளர்: இல்லை.

ப்ளூம்: டைம்ஸ் பத்திரிகையில் வந்ததென்று நினைக்கிறேன், ஒரு கதை சொல்கிறேன் என்று தன் பதிலைத் தொடங்குகிறார் ரேகன்: “வயதான உளவியலாளரொருவரிடம் அவரது இளம் உளவியலாளர் விசிறி ஒருவர் ‘என்னைப் போல் ஒவ்வொரு நாளும், வாழ்நாள் முழுவதும் நோயாளிகளின் கவலைகளைச் செவிமடுத்தும்கூட, எப்படி இவ்வளவு புத்துயிர்ப்புடன், மனக்கலக்கங்கள் ஏதும் இல்லாது, கவலைகளால் சோர்வடையாது உங்களால் இருக்க முடிகிறது’, என்று கேட்கிறார். அதற்கு அவர், “ரொம்ப சுலபம் தம்பி. நான் அவர்கள் சொல்வது எதையுமே காதில் வாங்கிக் கொள்ள மாட்டேன்,” என்று பதிலளித்தார். எவ்வளவு உன்னதமாக அருமையாக , நேர்மையாகத் தன்னையே வெளிப்படுத்திக் கொள்கிறார் ரேகன்! ஜனாதிபதியாக இருந்தபோது அவர் செய்ததை/ செய்யத் தவறியதை நாம் அருவருத்தாலும், அவர் இவ்வாறு தன்னையே வெளிக்காட்டிக் கொள்வது வாய்பிளக்கும் அளவிற்கும் மெச்சத்தக்கதே. நானும் அவ்வாறுதான் ஃபால்ஸ்டாஃப் வேடத்தில் நடித்தேன். என்னை இன்னமும் சரிவர அறிந்திராத பழங்காலத்து நண்பர்கள் சிலர் அவ்வப்போது ஒரு உளவியலாளராக ஆவதைப் பற்றி எப்போதாவது யோசித்ததுண்டா என்று கேட்பார்கள். நானும் என் பங்கிற்கு நம்பமுடியாத அதிர்ச்சியுடன் “உளவியலாளராகவா?!” என்று கேட்டு வைப்பேன். என் கேள்விகளுக்கு நானே பதிலளிப்பதைத் தவிர்ப்பதே ஒரு கல்லூரி ஆசிரியராக நான் எதிர்கொள்ளும் மிகப்பெரிய போராட்டம். என்னைத் தவிர உலகில் வேறெவருமே அப்படிக் கருதாவிடினும், நான் ஒரு நல்ல ஆசிரியர்தான் என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எமர்சனின் “மற்றொருவரிடமிருந்து எனக்குக் கிடைப்பதென்பது ஒருபோதும் படிப்பினையன்று. தூண்டுதல் மட்டுமே” – என்ற பொன்மொழியின் அர்த்தத்தில்தான் இதைக் கூறுகிறேன். நான் கூறுவதை செவிமடுக்கும் இளைஞரோ, நங்கையோ கண்டிப்பாக மிகவுமே தூண்டப்படுவார்..

பேட்டியாளர்: எப்போதாவது குறிப்புகள் எடுத்துக் கொண்டு வகுப்பெடுத்திருக்கிறீர்களா? அல்லது முன்னேற்பாடுகளின்றி வகுப்பெடுக்கவே விரும்புகிறீர்களா?

ப்ளூம்: இதுவரையிலும் என் வாழ்நாளில் ஒரு குறிப்புகூட எடுத்ததில்லை. எப்படி எடுத்திருக்க முடியும்? நான்தான் பிரதியை அப்படியே உள்வாங்கிக் கொண்டுவிடுவேனே. வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதங்களில் அதை புறவயப்படுத்துவேன். ஒரே நதியில் ஒரு முறைக்கு மேல் காலடி வைக்க முடியாது அல்லவா. அதேபோல், ஒரே பிரதியையும் நம்மால் ஒரு முறைக்கு மேல் எதிர்கொள்ள முடியாது.

பேட்டியாளர்: படைப்பூக்கப் பட்டறைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப்ளூம்: கெடுதலை விட அதிக நன்மையே பயக்கின்றன என்று கருதினாலும், அவற்றை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எழுதுவதென்பது ஒரு தனிமை தோய்ந்த கலை என்றே எனக்குத் தோன்றுகிறது. விமர்சனம் ஒரு பயிற்றுவிக்கக்கூடிய கலைதான் என்றாலும், அதுவும் அனைத்து கலைகளைப் போல் இறுதியில் ஒரு இயல்பான அல்லது உள்ளார்ந்த, பிறவிப் பேறாக நமக்குக் கொடையாக அளிக்கப்பட்டிருக்கும், திறமையையே சார்ந்திருக்கிறது. நான் எழுதிய ஏதோவொன்றில் குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது; சில வருடங்களுக்கு முன் நவீன மொழிக் கழகம் நடத்தும் கூடுகைகளுக்குப் போவதை நிறுத்திக் கொண்டேன். இருபத்து ஐந்து அல்லது முப்பதாயிரம் விமர்சகர்கள் கொண்ட கருத்தரங்கிற்குப் போவதென்பது இருபத்தைந்தாயிரம் நாவலாசிரியர்கள் கொண்ட கருத்தரங்கிற்குப் போவதைப் போல் வேடிக்கையானது. ஏனெனில், இருபத்தைந்தாயிரம் விமர்சகர்கள் இருக்கவே வாய்ப்பில்லை. ஒரே சமயத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட விமர்சகர்கள் உயிரோடு இருப்பார்களா என்று நான் பல முறை சந்தேகித்திருக்கிறேன். புனைவுக் கலையையோ, கவிதைக் கலையையோ எவ்வளவு தூரம் வரையிலும் பயிற்றுவிக்க முடியும் என்பது இதைக்காட்டிலும் சிக்கலான விஷயம். வரலாற்று ரீதியாக, கவிஞர்கள் எப்படிக் கவிஞர்களானார்கள், புனைவெழுத்தாளர்கள் எப்படிப் புனைவெழுத்தாளர்களானார்கள் என்பது நமக்குத் தெரியும் – அவர்கள் அனைவருமே வாசித்தார்கள். தங்கள் முன்னோடிகளை வாசித்தார்கள், படித்தவராக ஆக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டார்கள். எழுத்துக் கலை வகுப்பில் ஹெர்மன் மெல்வில்லை பொருத்திப் பார்ப்பதுகூட எனக்கு எப்போதுமே வேதனை அளிக்கிறது.

பேட்டியாளர்: சொற்செயலி இலக்கியத் துறையை எவ்வகையிலாவது பாதித்திருக்கிறது என்று நினைகிறீர்களா?

ப்ளூம்: சொற்செயலியைப் பொருத்தமட்டில் என்னைக் காட்டிலும் குறைவாக சிந்தித்தவர்கள் இவ்வுலகில் இருக்க முடியாது. நான் சொற்செயலியைப் பார்த்ததுகூட கிடையாது. மீட்கமுடியாத அளவிற்குப் பழமையானவன் நான்.

பேட்டியாளர்: ஒருக்கால் உங்கள் மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அதன் தாக்கத்தை நீங்கள் எதிர்கொண்டிருக்கலாம்?

ப்ளூம்: எனக்குத்தான் தட்டச்சுப் பொறியே இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லையே, நான் எப்படி இதைப் பற்றி எல்லாம் பேச முடியும்? இங்கு என் கண்டனத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்! டைப் அடிக்கக்கூட கற்றுக் கொள்ளாத நானெல்லாம் இவ்விவாதத்தில் பயனளிக்கும் விதத்தில் பங்கேற்க முடியாது. என்னைப் பொருத்தவரையில் விண்வெளிப் பயணத்திற்கும், இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறதோ அதே அளவு சம்பந்தம்தான் கணினிக்கும் இலக்கியத்திற்கும் இருக்கிறது, ஒருகால் குறைவாகக்கூட இருக்கலாம். பால்பாயிண்ட் பேனா கொண்டுதான் என்னால் எழுத முடியும். ரோலிங் ரைட்டர் என்று அழைக்கிறார்களே, க்ளிப்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் கோடுகளிடப்பட்ட மஞ்சள் லீகல் நோட்டுப் புத்தகத்தில், ரோலிங் ரைட்டரைக் கொண்டுதான் என்னால் எழுத முடியும். அதை வேறு யாராவதுதான் தட்டச்சு செய்து தர வேண்டும்.

பேட்டியாளர்: அதன்பின் வேறு யாராவது அதைச் செப்பனிடுவார்களா ?

ப்ளூம்: எவருமே செப்பனிட மாட்டார்கள். செப்பனிடுவதற்கு நான் அனுமதிப்பதில்லை.

பேட்டியாளர்: அதிகமாகத் திருத்தம் செய்வீர்களா?

ப்ளூம்: சில சமயங்களில். ஆனால் அடிக்கடி செய்ய மாட்டேன்.

பேட்டியாளர்: குறிப்பிட்ட நேரங்களில் எழுத விரும்புவீர்களா?

ப்ளூம்: குறிப்பிட்ட நேரம் என்று எனக்கொன்று இல்லை. ஒரு விதமான வெறித்த நிலையில்தான் நான் எழுதுகிறேன்: அளவுக்கதிகமான நெருக்கடிகள், கெடு முடிந்து பல நாட்களாகிவிட்டன , ஏதாவது எழுதித் தந்தாக வேண்டும் என்ற நிலை…

பேட்டியாளர்: அப்படி என்றால் தினம்தோறும் இவ்வளவு மணி நேரம் எழுத வேண்டும் என்பது போன்ற அன்றாடத் தொழில்முறை ஒழுங்குகளை நீங்கள் முன்மொழிவதில்லையா?

ப்ளூம்: இல்லை, இல்லை. ஒழுங்கற்ற அவசர வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

பேட்டியாளர்: சில நாட்களுக்கு வேலையே செய்யாமல்கூட இருப்பீர்களா?

ப்ளூம்: ஐயகோ! ஐயகோ! ஐயகோ! ஆமாம். ஆனால், இலக்கியத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம். இலக்கியம் – வாழ்க்கை என்ற பாகுபாட்டை நான் ஏற்றுக் கொள்வதில்லை. நான் எப்போதுமே அலுத்துக் கொள்வதுபோல், நான் ஒரு பரிசோதனை விமர்சகன். “விமர்சனச் சார்பின்மை” என்று அழைக்கப்படுவதிற்கு எதிராக “வெறும் கேளிக்கை” என்று அறைகூவலிட்டே என் வாழ்நாளைக் கழித்திருக்கிறேன். ஆழமான அகவயச் சார்பையே நாம் ஆதர்சமாகக் கொள்ள வேண்டும். அதுவே கடினமான இலக்கு, சார்பின்மை எல்லாம் சுலபமான சல்லித்தனம் மட்டுமே.

(தொடரும்)

Source(s) / Further Reading

Harold Bloom, The Art of Criticism, 1991 Interview, The Paris Review Interviews, Vol II, Picador, 2007

Series Navigation<< விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.