இசைபட வாழ்வோம்

This entry is part 1 of 2 in the series இசைபட வாழ்வோம்


என் வீட்டருகே உள்ள காஃபி ஷாப்பிற்கு போவது வழக்கம் என்றாலும், சமீபத்தில் மிகச் சுவாரசியமான ஒரு மாலை விவாதம் அந்த அனுபவத்தை மெருகேற்றியது. அதற்கு முன், கொஞ்சம் என்னைப்பற்றி – நான் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆய்வாளன் – அதாவது artificial intelligence researcher. எனக்கு சங்கீதம் புரியுமாதலால், செயற்கை நுண்ணறிவு சங்கீதம் என்னுடைய ஆராய்ச்சித் துறை.

HNMMW7 Robot Plays the Piano Artificial Intelligence Concept 3d Illustration Close-up

அன்று மாலை நான் காஃபி ஷாப்பிற்குள் நுழைந்த பொழுது, மூன்று இளைஞர்கள் மிகவும் காரசாரமான திரை இசை விவாதத்தில் இருந்தனர். நான் வழக்கம் போல காஃபி ஆர்டர் செய்துவிட்டு என்னுடைய செய்திகளைத் திறன்பேசியில் நிதானமாகப் படித்துவிட்டு அங்கிருந்து புறப்படலாம் என்றிருந்தேன். ஆனால், இந்த இளைஞர்களின் வாதம் என்னை அவர்கள் பால் ஈர்தது. 

“வணக்கம். உங்களோட விவாதம் ரொம்ப interesting. நான் உங்களோட விவாதத்தில் கலந்துக்கலாமா?”

வி: “என் பேரு விவேக். நான் ஒரு க்ராஃபிக் டிஸைனராகப் பணியாற்றுகிறேன். தாராளமாக நீங்களும் பங்கேற்கலாம். ஆனால், சும்மா  வேடிக்கை பார்க்கக் கூடாது. உங்களது கருத்துக்களைத் தாராளமாக நீங்க சொல்லலாம். நாங்க மூவரும் ஒரே ஸ்கூல் சென்ற நண்பர்கள். எங்களுக்குள் இப்படி வாரம் ஒரு விவாதம் நடக்கும். நான் ஒரு ஏ.ஆர். ரஹ்மான் ரசிகன். அதோ, அவன் கணேஷ், ஒரு இளையராஜா ரசிகன். கணேஷ் ஒரு புகைப்படக் கலைஞன். என்னுடைய மூன்றாவது நண்பன், கார்த்திக். அவனுக்கு, சொன்னால் நம்ப மாட்டீர்கள், எம்.எஸ்.வி. ரொம்ப பிரியம். அவன் ஓர் அனிமேட்டர். உங்களைப் பற்றி சொல்லுங்களேன்”

“எனக்கு ஓரளவு இசை புரியும். நான் ஓர் இசை சார்ந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வாளன்”

வி: ”தமிழ் சினிமா இசை ஓரளவிற்கு உலகெங்கும் அறியப்பட்டது ரஹ்மானுக்குப் பிறகுதான். அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பல புதிய குரல்களுடன் பங்கிட்டுக் கொண்டார். ஒலித் துல்லியம் என்பது அவருக்குப் பின் திரையிசையில் முக்கியமானது. இந்தியா முழுவதும் மிகவும் மதிப்புடன் பார்க்கும் ஒரு கலைஞராக அவர் உயர்ந்துள்ளார். இந்தி டிவியில் ஓர் இசைப் போட்டியில்கூட அவர் நடுவராக இருக்கிறார்”

இதைக் கேட்ட கணேஷ் உடனே தன்னுடைய கருத்தை ஒரு உத்வேகத்துடன் முன் வைத்தான்.

க: “ஓர் இசைக்கலைஞர் மூன்று தலைமுறையினரைக் கட்டிப் போட்டுள்ளார் என்றால், அது இளையராஜாதான். அவருடைய தொடக்க கால இசைக்கலைஞர்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆனால், அவர் காலத்திற்கு ஏற்ப தன் இசையை மாற்றிக் கொண்ட வண்ணம் இருக்கிறார். இந்தியப் பண்ணிசையாகட்டும், மேற்கத்திய இசையாகட்டும், அவரால் எளிதாக தன் முத்திரையைப் பதிக்க முடிகிறது. அவருடைய பல உத்திகளைப் புரிந்து கொண்டு,  இன்னும் சில பத்தாண்டுகளில் உலகம் வியக்கும். உலகெங்கும் இசை அறிந்தவர்கள் அவருடைய உத்திகளைக் கண்டு இன்றும் வியக்கின்றனர்”

அடுத்ததாக, கார்த்திக், தன்னுடைய வாதத்தைப் பொறுமையாக முன் வைத்தான்.

கா: “என்னதான் ராஜா, ரஹ்மான் என்று நாம் இன்று பெரிதாகப் பேசினாலும், ஆணிவேர் என்னவோ எம்.எஸ்.வி. தான். இன்றும், தமிழ்நாட்டில், எந்த ஒரு குடும்ப மற்றும் விழாச்சூழல் என்றாலும் அவர் மெட்டமைத்த கருத்துள்ள பாடல்கள்தான் ஒலிக்கின்றன. கண்ணதாசனுடன் அவர் இணைந்து வழங்கிய தத்துவப் பாடல்கள் இன்றும் பண்பலையில் ஒலித்த வண்ணம் இருக்கின்றன. அவரது காலத்தில், சரியான ஊக்கம் இல்லாதது அவரைச் சற்றும் பாதிக்கவில்லை”

வி: “நீங்க சும்மா இருக்கக் கூடாது. உங்க கருத்து என்ன?”

“முதல்ல, நீங்க மூவரும் அழகாகத் தம் கருத்துக்களை மிகவும் civil ஆக முன் வைக்கிறீர்கள். என்னுடைய பார்வையில், மூன்று மிகப் பெரிய இசைக் கலைஞர்கள் தமிழில் இயங்கி வந்துள்ளார்கள் என்பதே நமக்குப் பெருமையான விஷயம். 1960 முதல், 2000 வரையிலான நாற்பது வருடங்கள் தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று தாராளமாகச் சொல்லலாம்”

க: “என்ன சார் எஸ்கேப் ஆகப் பார்க்கிறீங்க. நீங்க எந்தக் கட்சின்னே தெரியலையே!”

 ”இதுல நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை. என் பார்வையில், நீங்கள் மூவரும் திரையிசைத் துறையின் நடப்புகளை இன்னும் கூர்ந்து கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது”

கா: “என்ன, அப்படி கவனிக்கவில்லை? புரியும்படி சொல்லுங்களேன்”

“எம்.எஸ்.வி. காலத்தில் ஆங்காங்கு பெரிய குழுவிசை, அதாவது orchestra அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ராஜா காலத்தில், விஸ்வரூபம் எடுத்து, ஸ்டூடியோக்கள் நிரம்பி வழிந்தன. இன்று, வாத்திய இசை என்பது திரையிசையில் மிகவும் குறைந்து போய்விட்டது. ராஜாவும் ரஹ்மானும் மேற்கத்திய வாத்தியக் குழுக்களுடன் உறவு வைத்திருந்தாலும், இந்தியத் திரையிசையில் அதிக வாய்ப்புகள் இல்லை என்றாகிவிட்டது”

வி: “நீங்க சொல்றது உண்மைதான். டெக்னாலஜி வளர்ச்சியினால் வரும் விளைவுதானே  இது? ஆனால், நீங்க என்ன சொல்ல வரீங்க?”

“வாத்தியங்கள் மற்றும் அதனைச் சார்ந்த வாழ்வாதாரம் தொழில்நுட்பத்தால் அடிபட்டது என்பதை நீங்கள் மூன்று பேரும் ஒப்புக் கொள்வது மகிழ்ச்சி. இன்னொரு மிகப் பெரிய விஷயத்தை இந்த மூன்று கலைஞர்கள் விவாதத்தில் நீங்கள் கோட்டை விட்டீர்கள் என்றே தோன்றுகிறது”

க: “அப்படி என்ன பெரிய விஷயத்தை நாங்க சொல்லவில்லை?”

”கடந்த 15 ஆண்டுகளாக, இந்தியத் திரைப்படங்களில் ஒரு பெரிய மாற்றம் வந்துள்ளது. 1% அல்லது 2% என்று தொடங்கி இன்று 15% -ஐத் தொடும் அளவிற்கு, பாடல்கள் இல்லாதத் திரைப்படங்கள் வெளிவருகின்றன. இது எல்லா மொழியிலும் நடக்கும் விஷயம். ஆனால், சகட்டு மேனிக்கு பாடகர்/பாடகிகளை உருவாக்கும் டிவி நிலையங்கள் பெருகி வருகின்றன. இவர்களது எதிர்காலம் independent artists, ஆனால், இவர்களது பயிற்சி, இசையமைப்பளர்களைச் சார்ந்த திரையிசை”

கா: “நாங்கள் முன் வைத்தது, எங்களுக்குப் பிடித்த இசைக்கலஞரைப் பற்றிய ஒன்று. நீங்கள், இந்தத் துறையின் போக்கைப் பற்றி சொல்லுகிறீர்கள். இது என்ன எம்.எஸ்.வி. –யின் குறையா அல்லது ராஜா/ரஹ்மான் குறையா? இவ்வளவு பெரிய கலைஞர்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு விஷயத்தை நாம பேசி என்ன செய்யப் போகிறோம்?”

”நியாயமான வாதம்தான். ஒண்ணு யோசிச்சுப் பாருங்க. இன்னும் பத்து வருஷத்துல, இப்படி ஒரு வாதம் நடக்க வாய்ப்பே இருக்காது என்பதுதான் என் கருத்து”

க: “அப்படி ஒரு காலம் முழுவதும் வருமா என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. உங்கள் வாதத்தில் ஒரு குறை இருக்கிறது. பாடல்கள் திரைப்பட இசையின் ஒரு சின்ன பகுதி. பின்னணி இசைதான் திரைப்படங்களின் முக்கிய அங்கம். ராஜா, இதை ஒரு 40 வருடமாக செய்து காட்டியுள்ளார். உதாரணமாக, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என்ற 2013 திரைப்படத்தில், பாடல்களே இல்லை. ஆனால், தமிழ் திரைப்படங்களின் தலைசிறந்த பின்னணி இசையில் இந்தப் படத்திற்கு நிச்சயமாகப் பங்கு உணடு”

”பின்னணி இசையைப் பற்றி நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், உலகின் பல்வேறு சினிமா ரசிகர்களும் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குறை இருந்தால் சொல்லுவார்களே தவிர, நல்ல பின்னணி இசைக்கு, பாடல்கள் போல அவ்வளவு ரசனை இல்லை. உதாரணத்திற்கு, மேற்குலகில், ரிஹானாவைத் தெரிந்த அளவிற்கு ஜான் வில்லியம்ஸை மக்களுக்குத் தெரியாது”

வி: ”நீங்க என்ன சொல்ல வரீங்க? பின்னணி இசை இருந்தாலும், அதைச் சினிமா ரசிகர்கள் ஒன்றும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை, சரியா?”

“உண்மைதான். ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ஒன்று தெரியவரும். கடந்த 100 ஆண்டுகள் சினிமா வரலாற்றில், கடந்த 50 ஆண்டுகளில், உலகில் உள்ள பல சினிமாத் துறைகளும், முக்கிய மனித உணர்வுகளுக்கு இசை சேர்ப்பதில் வல்லமை காட்டியுள்ளார்கள். இதில், சில வட்டார இசையும் அடங்கும். உதாரணத்திற்கு, ஒரு ஹாலிவுட் நகைச்சுவைக் காட்சிக்கு கரகாட்டக்காரன் நகைச்சுவை இசை பொருந்துமா என்பது கேள்விக்குறி. ஆனால். இன்றைய அனிமேஷன் திரைப்படங்கள், இந்தக் கலையை ஓர் உலகத் தரத்திற்குக் கொண்டு சென்று வெற்றி பெற்றுள்ளன. ஹாலிவுட்டின் அனிமேஷன் திரைப்படங்களில், டப் செய்யும்பொழுது, மனிதக் குரல்களை மட்டுமே மாற்றுகிறார்கள். பின்னணி இசையை அல்ல. அவை, பல நாடுகளில் வெற்றியும் பெற்றுள்ளன. இதனால், கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால், பல திரைப்படங்களின் பின்னணி இசையை ஒரு கணினி மென்பொருளால் உருவாக்கும் சாத்தியக்கூறு உள்ளது”

க: ”சும்மா பூ சுத்தாதீங்க. இளையராஜா போல ஒரு மென்பொருள் பின்னணி இசையை உருவாக்கும் என்பதெல்லாம் சும்மா கற்பனை”

“இன்னிக்கு நான் சொல்வது கற்பனை போலத் தோன்றும். முதல் கேள்வி, ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இளையராஜா/ரஹ்மான் தேவையா? இவர்கள் மிகவும் விலையுயர்ந்த கலைஞர்கள். திரைப்படங்கள், குறைந்த செலவில் உருவாக்கவே விரும்பும் ஒரு தொழில். சொன்னால் நம்ப மாட்டீர்கள். மேற்குலகில், இதன் ஆரம்பம் அவர்களது பண்ணிசையில் உருவானது. ஏன் ஒரு கணினி பாஹ்ஹைப் போல இசையை உருவாக்கக் கூடாது? ஏன் ஒரு கணினி மென்பொருள் சிம்ஃபொனி ஒன்றை உருவாக்கக் கூடாது?”

க: “இது கொஞ்சம் ஓவராக இருக்கு. பண்ணிசையை கணினியால் உருவாக்குவது சாத்தியமா? அதுவும் பாஹ் போன்ற மேதையின் கற்பனை ராஜா போன்றவர்களே வியக்கும் விஷயம்”

”டேவிட் கோப் என்பவர் கலிஃபோர்னியாவின் ஸாண்டா க்ரூஸ் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியர். கொஞ்சம் சர்ச்சைக்குரிய அறிஞர். இவர் கணினிகள் கொண்டு மேற்கத்தியப் பண்ணிசையை உருவாக்கும் பணியில் வெற்றி பெற்றுள்ளார். இவர், கோரால் (chorale), சிம்ஃபனி (symphony) , மற்றும் ஆப்பெரா (opera) போன்ற இசை வடிவங்களைக் கணினி மூலம் எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி தீவிர ஆராய்ச்சி செய்தவர்.
https://en.wikipedia.org/wiki/David_Cope

இவருடைய பல சோதனைகளை நீங்கள் கூர்ந்து கவனித்துக் கேட்டால், நான் சொல்வது எதுவுமே புதிராகத் தெரியாது. அடுத்த வாரம் இந்த விவாதத்தைத் தொடரலாம்”

~oOo~

இதற்காக எங்கே திரும்பி வரப் போகிறார்கள் என்று நம்பிக்கையில்லாமல் அடுத்த வாரம் காஃபி ஷாப்பிற்குள் குறிப்பிட்ட நேரத்தில் நுழைந்தேன். அவர்கள் மூவரும் அங்கு வந்திருப்பது எனக்கு வியப்பளித்தது. கணேஷ் கையசைத்துக் கூப்பிட்டான்.

க: ”என்னதான் விக்கிபீடியாவில படிச்சாலும், எனக்கு நீங்க எப்படி இளையராஜாவையும் டேவிட் கோப்பையும் முடிச்சுப் போடப் போறீங்கன்னு ஒரே யோசனை”

“நான் எப்போ அப்படி முடிச்சு போடப் போவதாகச் சொன்னேன்? என் பார்வையில் எதிர்காலத்தில் ஓர் இளையராஜா போன்ற திறமையாளர் இருந்தால் கூட, பிரகாசிக்கச் சிரமப்படுவார் – நம்மிடையே உள்ள இளையராஜாவை விடப் பல மடங்கு சிரமப்படுவார். ராஜா போட்டியிட்டது மனித இசையமைப்பாளர்களோடு. எதிர்கால ராஜாவின் போட்டி ஓர் அதிவேக கணினி நெறிமுறையோடு (computer algorithm)”

வி: “கணினி நெறிமுறைகளோடு இன்றைய இசைக் கலைஞர்களும் போட்டி போட்டு வெற்றி பெற்றுள்ளனர். ரஹ்மான் கணினி இசையில் வல்லமை பெற்றுள்ளது உலமறிந்தது”

”ரஹ்மான் பயன்படுத்தும் கணினி நெறிமுறைகள் அவர் கட்டுப்பாட்டில் இயங்கும் முறைகள். அதனால், சில வாத்தியக் கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கலாம். ஆனால், ரஹ்மானின் வேலையான இசையமைப்பதை அவர் கணினியிடம் விடுவதில்லை. கணினி மூலம் இசைக்கும் வாத்திய ஒலிகளும் அவர் உருவாக்கியதுதான். சில சமயங்களில், கணினி உருவாக்கிய ஒலித்துண்டுகள் பயன்படுத்தப்படுவது உண்மை. ஆனால், இசை அமைப்பது என்பது இன்று வரை சினிமாவில் கணினியிடம் விடப்படவில்லை. சினிமாவை விடுங்கள். அது ஒரு 120 வருட பழைய விஷயம். எந்த ஓர் இந்தியப் பாரம்பரிய இசையும் (கர்னாடக, இந்துஸ்தானி) ஒரு 300 முதல் 1,000 வருடங்கள் பழையது. கணினிகள் புதிய கீர்த்தனையையோ, ராகத்தையோ உருவாக்கவில்லை. மேற்குலகில் இதைத்தான் முயன்று வருகிறார்கள்”

கா: “அப்படி வாங்க. டேவிட் கோப் அப்படி என்ன செய்து பெரிய சர்ச்சைக்கு ஆளானார்?”

“டேவிட் தான் எழுதிய மென்பொருள் மூலம், ஒரே நாளில், 5,000 கோரால்களை (chorales) பாஹ் போல உருவாக்கினார்.அதில் சில கோரால்களை ஸான்டா க்ரூஸில் நடந்த ஒரு பண்ணிசை விழாவில் ஒலிக்க விட்டார். கேட்டவர்கள் பலரும் புல்லரித்து, இதைப் போல ஓர் இசை நிகழ்ச்சியைக் கேட்டதே இல்லை என்று வியந்தனர். டேவிட், இதை ஒரு கணினி உருவாக்கி ஒலித்தது என்று சொன்னவுடன், அவர் மீது கோபம் கொண்டு, அவரை ஒரு தில்லாலங்கடி என்று விமர்சிக்கத் தொடங்கினார்கள். இன்றும் அது ஓயவில்லை. விடவில்லை டேவிட். மென்பொருளை மேலும் மெருகேற்றி, பீதோவன், ஷோபென், ரஹ்மானினோவ் என்று பலரது இசை பாணிகளையும் கற்றுவித்து, அவற்றை சிடியாக விற்று வெற்றி பெற்றார் – Classical Music composed by a computer என்பது இவரது ஆல்பத்தின் பெயர். 

ஸ்டீவ் லார்சன் என்னும் ஆரகன் பல்கலைக்கழக இசைப் பேராசிரியர், டேவிட்டிற்கு ஒரு சவால் விட்டார். அவரது சவால் இதுதான். தேர்ந்த பியானோ இசைக் கலைஞர் ஒருவர் பாஹின் ஒரு இசைத்துணுக்கு, டேவிட்டின் கணினி இசைத்துணுக்கு மற்றும் ஸ்டீவின் இசைத்துணுக்கு என்று மூன்று இசையை ஒன்றன் பின் ஒன்றாக இசைக்க வேண்டும். யார் எந்த இசையை உருவாக்கினார்கள் என்று அறிவிக்கப்படக் கூடாது. ஸ்டீவின் வாதம், தேர்ந்த இசை ரசிகர்கள், எந்திர இசையை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பது. டேவிட் ஒப்புக் கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட இசை ஆர்வலர்கள், மாணவர்கள், இசைப் பேராசிரியர்கள் இந்த இசை நிகழ்ச்சியைக் கேட்க ஆரகன் பல்கலைக்கழக அரங்கத்தில் கூடினர். ரசிகர்களின் முடிவு என்னதாய் இருந்திருக்கும்?”

க: “பாஹின் இசையை உடனே கண்டுபிடித்துவிட்டு, மற்ற இசைத் துண்டுகளில் சற்று குழப்பம் நேர்ந்திருக்கலாம், சரிதானே?”

”அப்படி நடந்தால் சுவாரசியம் அதிகம் இருக்காதே. டேவிட்டின் கணினி இசையைப் பாஹ் இயற்றிய ஒரிஜினல் இசை என்று பறை சாற்றினர் ரசிகர்கள். பாஹ் உருவாக்கிய ஒரிஜினல் இசையை ஸ்டீவ் உருவாக்கியது என்றார்கள். அதுகூட தேவலாம். ஸ்டீவின் இசையை டேவிட்டின் கணினி இசை என்று சொன்னார்களே, பார்க்கலாம். பாவம் ஸ்டீவ்!”

வி: ”இது நம்பும்படியாக இல்லை. அப்புறம் என்ன செய்தார் டேவிட்?”

“இவர் இன்றைய எந்திரக் கற்றல் தொழில்நுட்பம் கொண்டு, பல புதிய புதுமைகளைச் செய்து வருகிறார். உதாரணத்திற்கு, ஹைகூ ஓவியங்களை வரையக் கணினிக்குக் கற்றுக் கொடுத்து வெற்றியும் பெற்றுள்ளார். நம்மூரைப் போலதான் மேற்கத்தியரும். இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் துறையில் கனேடியர்கள், கூகிள் என்று பலரும் முனைப்பாக வேலை செய்து வருகிறார்கள்”

கா: “என்னது, கூகிள் இதிலுமா? என்ன செய்யறாங்க கூகிள்?”

“ப்ராஜக்ட் மஜெண்டா (Project Majenta) என்பது கூகிளின் இசை சார்ந்த ஒரு செயற்கை நுண்ணறிவு ப்ராஜக்ட். இதன் இன்றைய குறிக்கோள், மனிதர்கள் இதுவரை உருவாக்காத ஒலிகளை மென்பொருள் மூலம் உருவாக்குவது. அப்படி சொன்ன கூகிள், பல இசை வல்லுனர்களையும் தங்களுடைய மென்பொருளைக் கொண்டு இசைத் துணுக்குகளையும் வாசிக்க சொல்கிறார்கள். ஒலிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், இசையை உருவாக்க ஒரு பயிற்சியாகவும் இந்த மஜெண்டா பயன்படுத்தப்படுகிறது”

க: “இசை உருவாக்கம் என்றால்?”

“புதிய இசை வடிவங்களை இசை பயின்ற மென்பொருள் (அதாவது எந்திரக் கற்றலியல் மூலம் பயின்ற) உருவாக்குவது. இது இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் சாத்தியம். தொடர்ந்து மெருகேற்றக் கூகிளின் எண்ணம் – அதாவது, இந்த மென்பொருளே பல ஒலித் தோரணங்களை முதலில் உருவாக்கும் என்று எதிர்பார்ப்போம். அடுத்த கட்டமாக, குறிப்பிட்ட ஒரு மனித உணர்ச்சிக்கு இசையை உருவாக்க கற்றுக் கொடுக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்பட்ட பலவகை இசை ஓர் ஒருங்கிணைப்பாளருக்குக் கொடுக்கப்படும். அவர் எந்த ஒரு இசைத் தொகுப்பு சரி வருகிறது, எத்தனை நொடிகள்/நிமிடங்கள் இவ்வகை ஒலி தேவை, எந்தத் தாள இசை ஒலி இத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வளவுதான் – பின்னணி இசை ரெடி. நான் ஒருங்கிணைப்பளர் என்று சொன்னேன். கம்போஸர் என்று சொல்லவில்லை”

வி: “இப்படி போனால், நம்ம ஊரு இசையமைப்பாளர்களின் கதி?”

“உடனே பிரச்சினை இல்லை. முதலில், இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், சிறு பட்ஜெட் படங்கள் தொழில்நுட்ப இசைக்குக் கட்சி மாறும். நாளடைவில், அது மத்திய பட்ஜெட் படங்களைப் பாதிக்கும். இதனால் தான் எனக்கு இந்த ரஹ்மான், ராஜா ஒப்பிடல் எவ்வளவு ஒரு பெரிய பொழுதுபோக்காக இருந்தாலும், அதில் அதிக அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது”

கா: “நீங்க சொல்றது கொஞ்சம் மிரட்டலாக இருக்கு. அடுத்த தலைமுறைக்கு நம்மைப்போல இந்த ஜாலியான பொழுதுபோக்கெல்லாம் இருக்காதா?”

“வேற ஏதாவது புதிய பொழுதுபோக்கு இல்லாமலா போகும்? இதையே நீங்கள் மிரட்டலாக சொல்றீங்க. இந்தச் செயற்கை நுண்ணறிவு இந்த இசைத்துறையில் நிறையத் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயமும் உண்டு. அதைப் பற்றி நான் இன்னும் சொல்லவே இல்லை. உங்களுக்கு இஷ்டமிருந்தால் சொல்லுங்கள். அடுத்த வாரம் சந்திப்போம்”

கா, வி, க : ”நிச்சயமாக அடுத்த வாரம் சந்திபோம் சார்” ***

Series Navigationஇசைபட வாழ்வோம்- 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.