வரலாறு குறித்து ஹேகல்

This entry is part 6 of 6 in the series உலக தத்துவம்

இக்கட்டுரை Philosophy now என்ற தத்துவத்திற்கான இணைய இதழின் 129ம் இதழில் வெளிவந்த Hegel on History என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையை எழுதியவர் லாரன்ஸ் எவன்ஸ்.

வரலாறு என்பது முன்பு நிகழ்ந்த சம்பவங்களின் பதிவுகளே என்று நாம் பலமுறை கற்பிக்கப்பட்டிருக்கிறோம். இருப்பினும் வரலாறு என்பது நோக்கமின்றி நிகழும் தொடரல்ல அது தர்க்கபூர்வமாக ஒரு குறிப்பிட்டக் காரணத்துடன் முன்னகர்ந்து செல்வது என்று ஜார்ஜ் வில்ஹெல்ம் ஹே(ய்)கல்(1770 – 1831) நினைத்தார். இக்கருத்து வரலாறு முன்தீர்மானிக்கப்பட்ட வழியில் செல்கிறது, அதனால் வருங்காலத்தில் நடப்பவைகளையும் தனது தத்துவத்தைக் கொண்டு ஒருவகையில் அறிந்துகொள்ள முடியும் என ஹெகல் கருதியதாகச் சிலர் தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுத்தது. இந்தப் பிழையான புரிதலோடு பல சமயம் ஹேகல் தனது மீபொருண்மை வரைவை வரலாற்றுத் தகவல்களின் மேல் சுமத்தி தன் கோட்பாட்டுடன் ஒத்துப்போகச் செய்தார் எனப் பழியும் சுமத்தப்படுகிறார். நான் இந்தப் புரிதல்கள் எல்லாம் முற்றிலும் பிழையென வாதிடப்போகிறேன். மேலும் ஹேகல் ’வரலாற்றின் முடிவு’ அதாவது வரலாறு அவருடைய வரலாற்றுக் காலத்திலேயே பூரணமடைந்தது என்ற கருத்தை நம்பினார் என்ற கருத்திலிருந்தும் அவரை விடுவிக்கக்கூடும்.

ஹேகலின் வரலாற்றுக் கோட்பாடு எவ்வாறு இயங்குகின்றது

’உலக வரலாற்றின் தத்துவம் குறித்த விரிவுரைகள்’ என்று ஹெகல் பெர்லின் பல்கலைகழகத்தில் 1822, 1828 மற்றும் 1830களில் வழங்கிய விரிவுரைகளின் தொகுப்பில் அவருடைய வரலாறு குறித்த தத்துவம் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அந்த விரிவுரைகளுக்கு ஹேகல் எழுதிய முன்னுரையில் அவர் வரலாற்றில் தர்க்கசிந்தனை(reason)உண்டு ஏனெனில்‘தர்க்கசிந்தனை உலகை ஆள்கிறது’ அதனால் உலக வரலாறு என்பது தர்க்கசிந்தனையின் முன்னகர்வு என்கிறார்.

வரலாற்றில் தர்க்கசிந்தனை என்று ஹேகல் எதைச் சொல்கிறார்? இலக்கியல் (teleological) நோக்கிலேயே அவர் அவ்வாறு கூறுகிறார். வரலாறு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கோ திட்டவரைவுக்கோ ஏற்ப இயங்குவதாக (இதுவே வரலாற்றுவாதம் என்று அழைக்கப்படுகிறது) அவர் கருதினார். அவர் இதைக் கிறித்துவ நம்பிக்கையான காத்துநடத்தல்(providence) என்பதோடு ஒப்பிடுகிறார். கிறித்துவ நோக்கில் வரலாற்றைப் பகுத்தாய்ந்தால் அது கடவுள் உலகை ஆள்வதைக் காட்டுவதோடு, உலக வரலாறு கடவுளது திட்டங்களின் செயல்படுத்தல் என்ற புரிதலையும் உண்டு செய்கிறது. ஹேகல் கடவுள் குறித்துத் தனக்கேயான விநோதக் கருத்தைக் கொண்டிருந்தார், அதை அவர் Geist என்று அழைத்தார், ’ஆன்மா’ அல்லது ’மனம்’ என்ற பொருளில். உலக வரலாற்றின் முன்னகர்வு குறித்துத் தத்துவார்த்தமாகப் புரிந்துகொள்ளுதல் கடவுளைப் பற்றி அறியவும், ஆன்மாவின் இயல்பையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ளவும் உதவும்.

ஹேகலுக்கு வரலாற்றின் நோக்கம் அல்லது இலக்கென்பது விடுதலைக்கான பிரக்ஞையின் முன்னகர்வே. முன்னகர்வு இந்த இலக்கையொட்டி இருக்கும் வரையில் அது தர்க்கபூர்வமானது. இந்தத் தர்க்கபூர்வ வளர்ச்சியானது ஆன்மா தன்னைக் குறித்துப் பிரக்ஞை கொள்ள அடையும் பரிணாமம், ஏனெனில் ஆன்மாவின் அடிப்படை இயல்பே விடுதலை தான். ஹேகல், Geist என்பதை உலக ஆன்மா என்றும் குறிக்கிறார், மனிதப் பிரக்ஞையின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தில், குறிப்பாகக் கலை மதம் மற்றும் தத்துவத்தில் தன்னைத் தோற்றப்படுத்திக் கொள்ளும். ஹேகல் தன்னுடைய Phenomenology of spirit(1807) என்ற புத்தகத்தில் சொல்வது போல ஆன்மா என்பது “தேசத்தின் அறவாழ்வு”. அதனால் ஹேகலைப் பொருத்தவரை, உலக ஆன்மாவின் தற்பிரக்ஞை எந்த அளவு விடுதலைக்கான பிரக்ஞையாக மனிதக் கலாச்சாரத்தில் வெளிப்படுகிறதோ அந்த அளவுக்கு வரலாறு தர்க்கபூர்வமாக முன்னேறியிருக்கிறது.

இங்கு முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது ‘விடுதலை’ என்று ஹேகல் சொல்லும் போது அது நம் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய கட்டற்ற தன்மையல்ல. தன்னுடைய Philosophy of Right(1820) என்ற புத்தகத்தில் இந்த வகை விடுதலையை அவர் எதிர்மறை சுதந்திரம் என்று கூறி விடுதலையைப் பற்றிய அவ்வகையான புரிதல் அறிவுபூர்வமாக முதிர்வற்றது என்கிறார். ஹேகல் சுதந்திரம் என்று சொல்வது இம்மானுவேல் காண்டின் கருத்துக்கு நெருக்கமானது. அந்தக் கருத்தின் படி சுதந்திரமான ஒருவர் சுய பிரக்ஞையுடன் உலகக் கொள்கைகளின்படியும் ஒழுக்கவிதிகளின்படியும் தன் செயல்களைத் தீர்மானிக்கக்கூடியவர், அந்நபர் வெறுமே தன் ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்ள நினைப்பவரல்ல. ஒரு தேசத்தின் தனி நபர்கள் தங்களின் இச்சைகளை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருந்தால், அது அத்தேசத்தின் வீழ்ச்சிக்குக் கொண்டு செல்லும் என்கிறார் ஹெகல்.

ஆன்மாவின் சுயபிரக்ஞை என்பது சுதந்திரத்திற்கான சுயபிரக்ஞை, அதை வளர்த்தெடுப்பதே உலக வரலாற்றின் குறிக்கோள், இங்கு முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது, முக்கியமான ஹேகலியத் தத்துவத்தின் திருப்பமானது, உலக ஆன்மாவிற்கென்று சாதிக்கவேண்டிய பிரக்ஞைபூர்வமான குறிக்கோள் ஏதுமில்லை என்ற கருத்து. ஆன்மா தன் குறிக்கோள் வெற்றியடையும் போதே அந்தக் குறிக்கோளைத் தெரிந்து கொள்ள முடியும். அதனால் வரலாற்றின் நோக்கத்தை நாம் பின்நோக்கி ஆராய்ந்தே புரிந்துகொள்ள முடியும். அதாவது, வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள, அதன் முடிவை அறிந்தபின்னரே எது அங்கு வரச்செய்தது என்று அதன் நிகழ்வுகளின் வரிசையை ஆராயமுடியும். ஹேகல் கூறுவது போல வரலாற்று அவசியம் (historical necessity) வரலாற்று சந்தர்ப்பத்தின் (historical contingency) வழியாகவே எழுகின்றது. அல்லது நாம் இப்படிச் சொல்லலாம், முடிவே அதன் காரணத்திற்கு அவசியம் எனும் தோற்றத்தைத் தருகிறது. உதாரணத்திற்கு, நான் வேலைக்குச் செல்வதற்கு 8:30 மணி ரயிலைப் பிடிக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். ரயில் சரியான நேரத்தில் இயங்குகிறது என்று வைத்துக்கொண்டால் (நடக்கக்கூடிய எதிர்பார்ப்பல்ல, அறிவேன்), அதனால் நான் அலுவலகத்துக்கும் சரியான நேரத்தில் வந்து சேர்கிறேன் என்றால் நான் எனது ரயிலைப் பிடித்தேன் என்பது அவசியமாகிறது. ஆனால் இது நான் எப்படியிருந்தாலும் அந்த ரயிலைப் பிடித்திருப்பேன் என்று அர்த்தம் கொடுப்பதில்லை. அதே போல், ஹேகலுக்கு வரலாறு என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டது அல்ல, மாறாக வரலாற்றின் நோக்கம் என்ன என்று நடந்தவைகளை ஆராய்ந்தே புரிந்துகொள்ள முடியும். மேலும், நோக்கத்தைப் புரிந்துகொள்வதே வரலாற்று இயக்கத்தின் அடிப்படை நோக்கம்!

இதிலிருந்து ஹேகல் கடந்தகாலத்தின் தாக்கம் எப்படித் தற்காலத்திலிருக்கிறது என்று மட்டும் விளக்க முற்படாமல், கடந்த காலத்தைப் புரிந்துகொள்வதில் தற்காலத்தின் தாக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறார். தத்துவத்தின் வேலை கட்டியங்கூறுவதோ அல்லது முன்னறிவிப்பு செய்வதோ அல்ல என்கிறார். மாறாக, தத்துவம் எப்போதும் கடைசி நேரத்தில் தான் வந்து சேர்கிறது. அவருடைய பிரபல வரிகள், ‘மினர்வாவின் ஆந்தை இருட்டத்தொடங்கும் போது தான் பறக்கின்றது’. தத்துவம் (அல்லது ஞானம், அதனால் அவரது ரோமானிய ஞான தெய்வத்தின்(மினர்வா) குறிப்பிடல்) தற்காலத்தில் நின்று கொண்டு பின்னோக்கி மட்டுமே வரலாற்றை ஆராய முடியும். அதனால் ஹேகல் தன்னுடைய வரலாறு குறித்த தத்துவத்தை சம்பவங்களின் மீது சுமத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக, வரலாற்றின் நிகழ்வுகளை அது தோன்றியவாரே புலனறிவு (empirical) முறையில் ஆராயவேண்டும், நிகழ்வுகளின் மீது எந்த வித மீபொருண்மைப் பார்வைகளையும் சுமத்தாமல் அதிலிருந்தே நாம் தத்துவத்தை உய்த்துணர முடியும். ஆகவே, வரலாற்றில் ஹேகல் தர்க்கசிந்தனையைக் கண்டபோதிலும், வரலாற்றின் இலக்கு அடையப்பட்ட பிறகே அந்தத் தர்க்கசிந்தனையை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

உலக வரலாறு முரணியக்க(dialectical)முறையில் வளர்ந்துள்ளதாக ஹேகல் கருதுகிறார். ஹேகலிய முரணியக்க முறையை இப்படிச் சொல்வது வழக்கம்: “ ஒரு வாதம் (thesis) தனது எதிர் கருத்தைத் தூண்டுகிறது – அதனுடைய எதிர்வாதம் (antithesis), அவையிரண்டும் மேற்கொண்டு தங்களின் இரு கூறுகளையும் கலந்த இன்னொரு கருத்தை உருவாக்குகிறது – அவைகளின் புணர்வாதம் (Synthesis)”. இந்தக் கலைச்சொல் ஹேகல் மனதில் இருந்த கருத்தை ஓரளவு முன் வைத்தாலும் அவர் அந்தக் கலைச்சொல்லை உபயோகித்ததே இல்லை. ஹெகல் முரணியக்கம் என்ற இந்த முக்கிய அம்சத்தை Aufhebung என்றழைத்தார். இந்த (ஜெர்மானிய) சொல்லின் அர்த்தங்கள், மீண்டு வர, நிராகரிக்க, எடுத்துக்கொள்ள அல்லது பாதுகாக்க என்பவையாகும். அதன் பல அர்த்தங்களையும் ஹெகல் கருதிய நுட்பமான கூடுதல் பொருளையும் உள்ளடக்கி மொழிமாற்றம் செய்வதற்காக அச்சொல் வழக்கமாக உள்வாங்குதல் (sublation) என்பதாக மொழிபெயர்க்கப்படுகிறது. தி மெரியம் வெப்ஸ்டர் டிக்ஷனரி இதை நிராகரிக்க அல்லது ஒழிக்க(சிலவற்றை), ஆனால் புணர்வாதத்தில் ஒரு பகுதியாகச் சேமிக்க’ என்ற வரையறையைத் தருகிறது. எந்த ஒரு குறையுள்ள கருத்தும், குறிப்பாக, சுதந்திரம் குறித்த எந்த முழுமையற்றக் கருத்தும் தன்னுள்ளே அதற்கான முரண்களைக் கொண்டிருக்கும். உள்வாங்குதல் என்ற முறையின் வழியாகவே இந்த முரண்களெல்லாம் மேம்பட்ட கொள்கை ஒன்றில் ஒருங்கிணைக்கப்படும். ஆகவே ஹேகலிய முரணியக்க முறையில் ஒரு கருத்துக்கும் அதன் வெளியேயுள்ள அதன் எதிர்தரப்புக்கும் இருக்கும் முரண் வளர்ந்து கருத்தின் உள்முரணாக ஆகியபின் கருத்து தன்னுடனேயே போராடி, அந்தப் போராட்டத்தின் வழியாகத் தன்னை மீட்டுக் கொண்டு அதேசமயம் ஒரு மேம்படுத்தப்பட்ட தளத்தில் தன்னைச் சேமித்துத் தன்னுடைய முரணுடன் ஒருங்கிணைந்துகொள்கிறது. இவ்வகையாக உருவாகிய புதுக் கருத்தும் மீண்டும் இதே இயக்கமுறைக்குள் உட்படுத்தப்படுகிறது, இப்படியே மேலும் மேலும் என வரலாறு ஒரு சுருளேறி போல் முன்னேறிச் செல்கிறது.

இதைப் புரிந்துகொள்ள, ஹேகல் நிகழ்ந்த வரலாற்றை எவ்வாறு கையாண்டார் என்று காண்பது நல்லது.

ஹேகலின் வரலாற்றுக் கோட்பாடு என்னவெனில்

விடுதலைக்கான பிரக்ஞையின் வளர்ச்சியை விளக்க ஹேகல் உலக வரலாற்றை முப்பெரும் பண்பாட்டு அல்லது காலகட்ட வகைகளாகப் பிரிக்கிறார். அடக்குமுறை காலத்தில், இதை ஹேகல் கிரேக்கத்திற்கு முன்னான ‘கிழக்கத்திய’ உலகின் குணம் கொண்டதாகக் கருதுகிறார், மக்கள் ஆட்சிபுரிபவன் அல்லது சர்வாதிகாரி என்பவனே விடுதலையுடையவன் என்று அறிந்திருந்தனர். பின் கிரேக்கர்களும் ரோமானியர்களும் சிலர் – குடிமகன்கள் – விடுதலையுடையவர்கள் என்று அறிந்திருந்தனர். இறுதியில், ஜெர்மானிய மக்கள்(அதாவது, மேற்கு ஐரோப்பா), கிறித்துவத்தின் தாக்கத்தினால், எல்லா மனிதர்களும் விடுதலையுடையவர்கள் என்று அறிந்தனர். இங்கு முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது ஹேகல் வெறுமே வரலாற்றின் போக்கில் விடுதலையின் அளவு அதிகரித்திருக்கிறது என்று காட்ட விரும்பவில்லை, மாறாக விடுதலை என்ற கருத்தே அடிப்படையில் மாற்றம் பெற்றிருக்கிறது. விடுதலை என்ற கருத்தில் வளர்ச்சி இருந்திருந்தால், ஆன்மாவின் குணாம்சம் விடுதலை என்பதால், ஆன்மாவின் இயல்பிலும் வளர்ச்சியிருந்திருக்கும்,

ஹேகல் இவ்வளர்ச்சியை மேலும் பல விவரங்களுடன் நான்கு வகையாக வகுத்துக்காட்டுகிறார். கிழக்கத்திய உலகில் அரசனே விடுதலையுடையவன் என்று அறிந்திருந்தனர். விடுதலையின் ஆன்மா ஒரே ஒரு மனிதனில் தோற்றம் பெற்றிருப்பதால், அம்மனிதனின் விடுதலையானது பிறப்பெனும் ஒர் எதர்ச்சை நிகழ்வால் நிர்ணயிக்கபட்டதால், அவ்வகை விடுதலையானது முற்றிலும் தற்செயலானது. மேலும், மக்கள் தங்களுக்குள் இருக்கும் அகவய விடுதலையை அறியாதிருந்தனர். அதனால் ஹேகல் இதை ஆன்மாவின் வளர்ச்சியின் பிள்ளைபருவம் எனக் கருதினார்.

அகவய விடுதலை குறித்த பிரக்ஞை முதலில் கிரேக்க உலகில் தோன்றியது. இருப்பினும் கிரேக்கர்கள் எல்லா மனிதர்களும் விடுதலையுடையவர்கள் என்று உணரவில்லை. கிரேக்கர்களின் அறவாழ்வானது (அல்லது முற்றொழுங்கு ஆன்மா) வழக்கங்கள் குறித்த திருப்தியினால் வேறுபடுத்தத்தக்கது. மக்கள் விதிகள் மற்றும் சமூகத்தின் மரபுகளுக்குட்பட்டு ஒத்திசைவுடன் வாழ்ந்தனர். ஆனால் இதுவும் சுயமுரண் கொண்ட வாழ்க்கைமுறை, மக்கள் அதிகார அமைப்புகளின் வழக்கங்களையும், ஒழுக்கங்களையும், உரிமைகளையும் மேலும் பலவற்றையும் கேள்விகேட்கவில்லை, அதனால் அவர்களும் முதிரா சுயபிரக்ஞை உடையவர்கள். அதனால் கிரேக்க சமூகத்தில் தனிமனிதனின் விடுதலைக்கும் அதிகார அமைப்பின் பொது நியதிகளுக்கும் இடையே உள்ளீடாக ஒரு பதட்டம் அல்லது இருக்கம் இருந்தே வந்தது. சாக்ரடீஸ் போன்ற ஆளுமையினாலேயே மக்களை அவர்கள் ஏற்றுக்கொண்ட அறங்களைக் குறித்துச் சிந்திக்க ஊக்குவிக்க முடிந்தது, அதன் வழியே ஆன்மா தன்னை மீண்டும் எழுப்பிக்கொண்டது.

அதன்பின் வந்த ரோமானிய பேரரசில், அகவய விடுதலையானது குடிமக்களுக்கான உரிமைகளை அறிமுகம் செய்ததின் மூலம் உணரப்பட்டது. ஆனால் விடுதலை குறித்து இவ்வகைப் புரிதல் மிகவும் அருவமானது, குடிமக்களின் அன்றாட நிலையை எட்டாதது, அதனால் ஆன்மா சுயஅந்நியமாதல்(self-alienation)நிலையில் இருந்தது. கிறித்துவம் ஜெர்மானிய உலகில் எழுந்த போதே உண்மையான விடுதலை உதித்தது, அக்காலத்திலேயே விடுதலையென்பது மனிதத்தின் சாராம்சம் எனப் புரிந்துகொள்ளப்பட்டது. அதனால் ஹேகலுக்குக் கிறித்துவம் முக்கியமானது, ஏசு கிறிஸ்துவின் (ஹெகல் இவரைக் கடவுள்மனிதன் என அழைக்கிறார்) ஆளுமை வழியாகவே மனிதர்கள் தங்களுக்குள் உள்ள ஆன்மாவின் சாராம்சத்தைக் கண்டடைந்து, கடவுளில் (உலக ஆன்மா) இருந்து தங்களின் அந்நியத்தன்மையை உதறி முன்னெழுகிறார்கள். கிறிஸ்து சிலுவையில் இறந்த பின் அவர் பரிசுத்த(அல்லது தெய்வீக) ஆவியில் உள்வாங்கப்படுகிறார்.( ஹேகல் பரிசுத்த ஆவி என்று குறிப்பது விஸ்வாசம் உடையவர்களின் சமூகம், கிறித்துவராஜ்ஜியம்(Christendom)).

மத்திய காலகட்டதின் அறிவார்ந்த சூழலில் முன்னிலையில் இருந்தது கிறித்துவம். இருப்பினும் ஹேகல் மத்தியகாலக் கிறித்துவத்தை ‘மகிழ்ச்சியற்ற பிரக்ஞை’ என்பதாக, அந்நிலையின் ஒரு வேர் வகைமை(archetype) என்றே பார்த்தார், ஏனெனில் தேவாலயம் தனிமனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஊடாடுவதிலுற்ற தோல்வியினால் என அவர் கருதினார். உலகவரலாற்று தருணமான பிரெஞ்சு புரட்சியின் போதே ஆன்மா மெய்யாகவே தற்பிரக்ஞை அடையச்செய்தது. அருவமான விடுதலையில் இருந்து வெளியேறி மக்கள் உபயோகம் பெரும் படிச் சட்டங்களின் வழியே யதார்த்தத்தில் விடுதலை பெற உதவியது. அவர் வாழ்வின் இறுதியில் கூட ஹேகல் பிரெஞ்சு புரட்சி குறித்துக் குதூகலமாக இருந்தார், அதை ’புகழுக்குரிய அகத்தின் உதித்தெழல்’ என வர்ணித்தார்.

அதனால் உலக ஆன்மா முரணியக்கத்தின் வழியே வரலாறு நெடுகிலும் தொடர்ச்சியாகத் தன்னுடனான போராட்டத்தின் மூலமாக வளர்கிறது. ஆன்மா தனது அந்நியமான நிலையைக் கடப்பதற்குத் தனது அந்த அந்நியநிலையை உணர்ந்தால் மட்டுமே முடியும். ஆன்மாவின் சுயபிரக்ஞை வளர்ச்சியில் ஒவ்வொரு நிலையும் முற்றிலும் அவசியமானது, ஆனால் அந்த ஒவ்வொரு நிலையின் அவசியமும் காலத்தைப் பின்னோக்கி பார்க்கையிலேயே அறியமுடியும்.

வரலாற்றின் முடிவு

உலக ஆன்மாவை எது விடுதலை குறித்தான முழுப் பிரக்ஞையை நோக்கி செலுத்துகிறது? தனிமனிதர்கள் எவ்வாறு வரலாற்றின் இலக்கு, அதாவது இந்த முழுமையடைந்த பிரக்ஞை, குறித்து அறிவது?

ஹேகலைப் பொறுத்தவரை உலக வரலாறு என்பது ‘உலகவரலாற்று ஆளுமைகளால்’ கொண்டு செல்லப்படுகிறது; ’மாமனிதர்கள்’ என அழைக்கப்படுபவர்களான, சாக்ரடீஸ், ஜுலியஸ் சீஸர், நெப்போலியன் போன்றவர்களால். தனது நண்பரான Friedrich Niethammerக்கு 1806ல் எழுதிய கடிதத்தில், ஹேகல் நெப்போலியனைக் ‘குதிரையில் அமர்ந்த உலக ஆன்மா’ எனப் புகழ்ந்து வர்ணிக்கிறார். இந்த உலகவரலாற்று ஆளுமைகள் எவ்வளவு தான் தங்களது சொந்த விருப்பங்களை அடைய முற்பட்டாலும், அவர்கள் தங்களுக்கே தெரியாமல் ஆன்மாவினால் தனது சுயபிரக்ஞையை அடையும் பயணத்தில் பயன்படுத்தப் படுகிறார்கள். ஹேகல் இதை ’பகுத்தறிவின் தந்திரம்’ எனக் குறிப்பிடுகிறார்.

இருப்பினும் உலகவரலாற்று ஆளுமைகளின் சுய விருப்பங்கள் எவ்வாறு வரலாற்றுப் பகுத்தறிவினால் விளைந்ததாகவும், எப்படி விடுதலைக்கான முன்னகர்வுக்கு உதவி புரிவதாகவும் இருக்கமுடியும்? ஹேகலின் விடை நூதனமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு லட்சியத்தை ஆதரிக்கும் எந்த ஒரு ஆளுமையும் வெறுமே சுயநலமுடைய, தன்னை மட்டும் திருப்திபடுத்திக்கொள்ள நினைக்கும் ஒருவரல்ல. அவர்கள் அவசியமாக அந்த லட்சியத்தின் மீதும் விருப்பம் உள்ளவர்கள். பகுத்தறிவினுடைய வரலாற்று முன்னகர்வின் ஒரு நிலையில் தோற்றம் பெற்ற இந்த லட்சியம் நிச்சயமாக மனித விடுதலையை அடைவதற்கான முன்னகர்விற்கு வழிவகுக்கும்.

சிலர் – குறிப்பாக ஃபிரான்ஸிஸ் ஃபூகயாமா – மனித விடுதலை குறித்த சுய பிரக்ஞை எனும் வரலாற்றின் இலக்கு ஹெகலின் காலத்திலேயே சாதிக்கப்பட்டுவிட்டதால், உலகம் வரலாற்றின் முடிவிற்கு வந்துவிட்டது என்று ஹேகல் கூறியதாக எடுத்துக்கொள்கிறார்கள்.

’வரலாறு’ என்ற சொல்லை ஹேகல் எங்கனம் பயன்படுத்தினார் என்பது குறித்து நாம் கவனமாக இருக்கவேண்டும். நிச்சயமாக விடுதலை குறித்த பிரக்ஞைக்கான முன்னகர்வில் பகுத்தறிவின் வெளிப்பாடே அதன் பொருள். ஃபூகயாமாவிற்குப் பெர்லின் சுவர் 1989ல் இடிக்கப்பட்டபோதே இந்த விடுதலை அடையப் பெற்றுவிட்டது, அந்நிகழ்வின் வழியே கம்யூனிசத்தின் முடிவும், பிற அரசமைப்புகளின் மீது தாராளவாத ஜனநாயகம் அடைந்த வெற்றியும் குறிப்புணர்த்தப்படுகிறது. அதனால் ஃபூகயாமாவின் எண்ணப்படி தாராளவாத ஜனநாயகம் என்பதே விடுதலையின் சுயபிரக்ஞையை உள்ளடக்கிய இறுதியான சமூக வடிவம். இருப்பினும் நவீன உலகில் பரவலாகக் காணப்படும் இவ்வகைத் தாராளவாதத்தை ஹேகல் ஆதரித்திருப்பார் என்று எடுத்துக்கொள்வதற்கு ஏதுவாக எதுவும் இல்லை. ஹேகல் தாராளவாதத்தில் – குறிப்பாக அவரது காலத்திய தாராளவாத பிரெஞ்சு அரசில் – தனிமனித உரிமைகளுக்கும் சமூக ஒருமைக்கும் இடையேயான இருக்கத்தைக் கண்டார்.

ஹேகல் தாராளவாதம் என்ற சித்தாந்தத்தை மறுப்பதாகத் தான் தெரிகிறது, ஏனெனில் அது ராஜ்ஜியத்திற்குப் பக்கபலமாக இருக்கும் பொதுப் பண்புகளின் மேல் சுயநலத்துடன் தனிமனித விருப்பைக் கொண்டு வைக்கத் தூண்டும். அதனால் தாராளவாதம், அவரது காலத்தில், நிலையான சமூகப் பொருளாதார அரசியல் அமைப்பாக முடியாது. ’இந்த மோதல், இந்தப் பிரச்சினையிலேயே வரலாறு இப்போது மூழ்கியிருக்கிறது மற்றும் இதிலிருந்து வெளிவரும் வழியை அது வருங்காலத்திலேயே கண்டடைய முடியும்’ எனத் தனது Lectures on the Philosophy of Historyன் முடிவுரையில் எழுதுகிறார். மேலும் கருத்தில் கொள்ள வேண்டியது ஹெகல் வரலாற்றின் முடிவென்று சொல்வதில், அவர் தன்னுடைய காலத்திலான ஐரோப்பிய வளர்ச்சியுடன் வரலாறு முடிந்துவிடுகிறது என்று சொல்லவில்லை. உலக வரலாற்றுப் போக்குகளையும் மேலும் அமெரிக்க விடுதலை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு ஹேகல் புரிதலுடன் கூறுகிறார் ‘அமெரிக்கா அதனால் வருங்காலத்தின் நாடு, அதன் உலக வரலாற்று முக்கியத்துவம் இனிவரும் காலங்களிலேயே வெளிப்படப்போகிறது.’

மேற்கண்ட இரண்டு மேற்கோள்களிலும் உலக வரலாற்றுப் பின்புலத்தில் ’வருங்காலம்’ என்று அவர் சொல்வது ஆர்வமூட்டக்கூடியது, ஏனெனில் இது ஏதோ பேச்சு வாக்கில் வந்து விட்ட சொற்கள் அல்ல, இதற்குப் பின் ஒரு முறைமை இருக்கிறது. ஹேகல் தனக்கு வருங்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியும் எனும் வகையில் தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை. விடுதலை பிரக்ஞை முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும், வருங்காலத்துக்குரியவை முன்பே எழுதப்பட்டுவிட்டது என்றாகாது. மாறாக, ஹேகல் வரலாறு என்பது பல்வேறு விஷயங்களைச் சார்ந்து நடப்பது என்றமையால் வருங்காலத்தைக் குறித்த எந்த முன்முடிவும் சாத்தியமில்லை என்று நம்பினார். மேலும் குறிப்பாக இந்தக் கருத்து அவருக்குத் தாராளவாதமே ‘வரலாற்றின் முடிவு’ என்பதிலேயோ, தனது காலத்திலேயே வரலாறு முடிந்துவிட்டது தெரிகிறது என்பதிலேயோ நம்பிக்கையில்லை என்பதை நமக்குக் காட்டுகிறது. ஹேகல் வரலாற்று முடிவு என்று சொல்லவந்தது வரலாற்றின் இலக்கு சாதிக்கப்பட்டு உலக ஆன்மா தன்னையே உச்சமான உண்மையின் வெளிப்பாடு (ultimate reality)என்று அறிந்துகொள்வது(முற்றும் உணர்தல்) என்பதையே அன்றி மேற்கொண்டு எந்த முன்னகர்வும் இருக்காது என்பதையல்ல.

முடிவாக, ஹேகலின் வரலாறு குறித்த தத்துவத்தைக் குறித்துப் பொதுவான புரிதல் பிழைகளைத் தெளிவுபடுத்த முயற்சி செய்திருக்கிறேன். ஹேகல் கருதிய வரலாறு என்பது முன்முடிவுடையதல்ல முடிந்துவிட்டதல்ல மாறாக வரலாறு என்பது பிறவற்றைச் சார்ந்தது மேலும் அடிப்படையில் சாத்தியங்களை நோக்கித் திறந்திருப்பது என்றும் வாதிட்டிருக்கிறேன்.

கடந்த காலம் எந்த அளவுக்கு நிகழ்காலத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளது எனில் அது நாம் கொண்டிருக்கும் மனித விடுதலை குறித்த சுயபிரக்ஞையினை வளர்ச்சிபெற செய்து நிகழ்காலத்தை வடிவமைத்த வகையிலாகும்.ஹெகலின் மரபு குறித்த இந்தப் புரிதலே நமக்கு இன்று அவசியமானது.

இங்கிலிஷ் மூலம்: லாரன்ஸ் எவன்ஸ். தமிழாக்கம்: ஹரீஷ்

மூலக்கட்டுரைக்குச் சுட்டி: https://philosophynow.org/issues/129/Hegel_on_History

Series Navigation<< மேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.