மதுமலர்த்தார் வாங்கி நீ வா..

ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள் முன்பிருக்கும்…”கலர் வீடியோ கோச்”சுகள் மூப்படைந்து கொண்டிருந்த காலம். அத்தகையதொரு பேருந்தில் ஒரு பின்னிரவு பயணத்திலிருந்தேன் நான். அப்போது தான் வெளியாகியிருந்த ஒரு படம், நிலவொளியில் வேகமாக எனக்கு எதிர்திசையில் நகரும் இரவு நேரத்து வயல்வெளிகளை ஜன்னல் கம்பியில் சாய்ந்தபடி ரசிப்பதற்கு இடையூறாய் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. பட ஓட்டத்தில் திடீரென்று ஒரு நடிகை தன் இடை உடைந்து விடுமோ என்று நாம் அச்சப்படும் வண்ணம் அங்கங்களை அசைத்தபடி “தூது வருமா” என்று ஆடத் துவங்கினார். தமிழ் விடு தூதை இத்தனை தரக்குறைவாக காண்பிக்க இயலுமா என்ற ஆதங்கமும் புதிய தலைமுறை ஒருவேளை இத்தகைய பாடல் வகையறாக்கள் தான் தூது இலக்கியம் என்று அழைக்கபடுகின்றனவோ என்று எண்ணி விடக்கூடும் என்ற அச்சமும் அன்றைய இரவை ஆக்கிரமித்தன. வேறென்ன செய்வது…இது போன்ற பாடல்கள் கேட்ட பாவத்தை போக்க உண்மையான தூது நூல்களை தேடிப் போனேன் நான்.

நம் முன்னோர்கள் “பின் வரும் சந்ததிகள்” பற்றி நன்கு அறிந்திருப்பர் போலும். மனம் போன போக்கில் எதை வேண்டுமானாலும் எழுதி அதை இலக்கியம் என்றும் கூறிக் கொள்ளும் நிலை ஏற்படும் என்றெண்ணித் தான் ஒவ்வொன்றுக்கும் அற்புதமான கட்டமைப்புக்களையும் வரையறைகளையும் தொகுத்தளித்து சென்றிருக்கின்றனர். அவ்வகையில் அருவருக்கத்தக்க “தூது வருமா”க்கள் இகழியம் என்னும் புதுச் சொல்லால் அழைக்கப்படலாமே தவிர இலக்கியத்தில் சேராது என்ற மனத்திடத்துடன் “தூது”க்குள் செல்லலாம்…

“தூது” என்பது சிற்றிலக்கிய வகையில் அடங்கும். எப்படி எழுதப்பட வேண்டும் தூது என்பதற்கு மிக எளிய பாடலொன்று உண்டு.

“பயில் தரும் கலிவெண்பாவினாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணை பொருளையும்
சந்தியில் விடுத்தல் முந்துறு தூதெனப்
பாட்டியல் புலவர் நாட்டினர் தெளிந்தே…”

“பயில்” என்றால் கற்பது என்பது நாம் அறிந்ததே. தூதுப் பாட்டின் பொருளை கற்றுத் தரும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்ற நேர் பொருள் நாம் கொண்டாலும், இன்னொரு அர்த்தமும் நம்மால் உண்டாக்க இயலும். “பயில்” என்பதற்கு “சைகை செய்வது” என்ற பொருளும் உண்டு. தூதின் உட்பொருளை சைகை செய்யும் வண்ணம் ஏற்றப்பட்ட கலிவெண்பாவினாலே…என்று சொன்னால் இன்னும் நயம் கூடுகிறது அன்றோ?

கலி வெண்பா என்பதை ஏன் களி வெண்பா என்று பெயரிடாமல் விட்டார்கள் என்றெண்ணும் அளவு உற்சாகம் ஊட்டும் வாசிப்பு எழில் கொண்டது இன்னிசை கலிவெண்பாவும் நேரிசை கலிவெண்பாவும்.

தூதுக்காய் தேர்வு செய்த உயர்திணை அல்லது அஃறிணையின் பெருமை, இதற்கு முன் தூது போனவர்களின் சிறப்புகள், மற்றவற்றை தூது அனுப்ப தேர்ந்தெடுக்காதற்கான காரணங்கள், தூது போகச் சிறந்த நேரம், தலைவன் சிறப்பு, தலைவியின் காதல் என நேர்த்தியான கட்டமைப்புகளைக் கொண்டது தூது இலக்கியத்தின் பகுதிகள். சில நூல்களில் தசாங்கம் என்னும் பகுதியும் உண்டு. தசாங்கம் என்பது பாடப்படும் தலைவனின் மலை, ஆறு, நாடு, நகர், மாலை, குதிரை, யானை, முரசு, கொடி, செங்கோல் ஆகிய பத்தின் பெருமைகளை பாடுவதாகும். பாடல்களின் ஒவ்வொரு கண்ணியிலும் பழந்தமிழ் இலக்கிய, புராண‍ இதிகாச செய்திகள் பிரம்மிக்கத்தக்க வண்ணம் பொதிந்திருப்பது தூது நூல்களின் பெருஞ்சிறப்பு.

இவை அனைத்திற்கும் ஒரு உதாரணம் குழந்தைக் கவிராயர் இயற்றிய “மான் விடு தூது”. சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டது. மானின் சிறப்புகளைக் கூறிய வண்ணம் துவங்குகிறது இந்நூல். மானுக்கு கண்ணழகு கொம்பழகு என்பது போல் பாக்கள் இருக்கும் என்று நாம் நினைத்தால், ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாவோம். “வேற லெவல்”லில் மானை தமிழின் உதவியால் அதகளம் செய்திருப்பார் குழந்தை கவிராயர்.

“ஒருகால் பிடித்திருந்தார் உன்னை உலகுய்ய இருகால் பிடித்திருந்தாரென்று…” என்பதன் பின்னே, சிவன், பார்வதியை மணம் புரிகையில் அவளின் கால் பிடித்த சடங்கையும், மானின் இருகால்களே அவரின் கரங்களில் இருப்பது என்பதையும் கோர்க்கிறார் கவிஞர். மற்றொருமொரு இடத்தில், “பஞ்சவரை கொல்ல வந்த போதவரைக் கொல்லாமலே புரந்த வல்லமை மாயனுக்கும் வாராதே…” என்று மகாபாரதத்தின் நச்சுப் பொய்கையை வேறொரு கோணத்தில் நினைவூட்டுகிறார். மான் ஏன் நம்மை பார்த்தால் மருள்கிறது? கவிராயர் கற்பனையைப் பாருங்கள் ‍ “சாபத்துக்கு அஞ்சுவாய் சால மொழிவார்க்கண்டால் நீபத்தடி விலகி நிற்பாயே…” என்கிறார். அதாவது சூதுமொழி பேசுவோரைக் கண்டால் மான் பத்தடி தள்ளி நிற்குமாம். அது பயமல்ல அதன் பரிசுத்த இயல்பாம்!

தசாங்கத்தின் ஒரு பகுதியாய், வைகை ஆற்றை,

“ஏடேறச் சைவநிலை ஈடேற துள்ளுபுனல்
கோடேறக் கூடல் குடியேறப் பீடேறு…
…மண்டு புகழேற மாறன் வியப்பேறக்
கண்டு சமணர் கழுவேற…

என்று சம்பந்தர் தொடங்கி சமணர் கழுவேற்றம் வரை வைகையின் வழியே சில வரிகளில் அடக்கிய அற்புதத்தை என்னென்பது?

தாண்டவராயப் பிள்ளை என்பவரிடம் மானை தூதாக அனுப்பிப் பாடியது தான் “மான் விடு தூது”. எல்லாவற்றையும் சொல்லியபின், எந்த நேரத்தில் அவரை சந்திக்க வேண்டும் என்பதையும் மானிடம் சொல்லத் தவறவில்லை புலவர். “களி”வெண்பாவை இத்தனை எளிமையாகவும் சுவையாகவும் இயற்றலாம் என்பதற்கு மான் எந்த நேரத்தில் போக வேண்டும் என்னும் பாடல் ஒரு உதாரணம்:

பூசை பண்ணும் வேளையினிற் போகேல் சமத்தான‌
ராசவட்ட வேளையிலும் நண்ணாதே யோசனைசெய்…
…ஒப்பமிடும் வேளையிலும் ஒன்னார் திறைகொண்ர்ந்து
கப்பமிடும் வெளையிலுங் கட்டுரையேல் எப்புவிக்கும்
போராட்டும் வாணர் பிரபந்தகவி வந்திருந்து
பாராட்டும் வேளை பகராதே…

பின் எப்போது தான் போக வேண்டும்? பின்வரும் வரிகளைப் பாருங்கள்:

“போசன் கொலுப்பெருக்கி போசனமுந் தான்பண்ணி
வீசுமலர்ச் சப்ரமஞ்ச மீதினிலே ‍ நேச‌
மிதசனங்க டற்சூழ வீற்றிருக்கும் வேளை
மதுமலர்த்தார் வாங்கிநீ வா”

மான் விடு தூதின் கடைசி வரி “மதுமலர்த்தார் வாங்கிநீ வா”. மாலை வாங்கி வரச் சொல்வது தூது விடுதலின் முக்கிய கரு. அதை நூலின் உச்சக்கட்ட வரியாய் முடிப்பது மிகப் பொருத்தம்.

எதை வேண்டுமானாலும் தூது விடலாமா? ஆம். நம்புவதற்கு கடினமெனினும், சற்றே நகைப்பு தோன்றினும், புகையிலையை தூது அனுப்பி பாடியிருக்கிறார் சீனிசக்கரைப் புலவர் என்னும் ஒருவர். “கற்றுத் தெளிந்த கனப்பிரபல வான்களுமுன் சுற்றுக்குள்ளாவதென்ன சூழ்ச்சியோ” என்பது போன்ற நக்கல் மிகுந்த வரிகளும் இதில் உண்டு. இருப்பினும் குறிப்பிடத்தகுந்தது புகையிலை என்னும் பெயர் எப்படி வந்தது என்பதற்கு இவர் பாடியிருக்கும் கற்பனை கதை.

“மூவரொருவருக்கொருவர் முன்னொருக்கால் வாதாகி…” என்று இவர் தேவர்சபையில் திருமால், சிவன், பிரம்மன் இடையில் நிகழ்ந்ததை விவரிக்கிறார். துளசி, வில்வம், புகையிலை ஆகிவற்றை இவர்களிடம் கொடுத்து அடுத்த நாள் கொண்டுவருமாறு சொல்கின்றனர் தேவர்கள். சிவனுடைய வில்வத்தை கங்கை கொண்டு போக, திருமாலின் துளசியை பாற்கடல் கொண்டு போக, பிரம்மன் மட்டும் புகையிலையை பத்திரமாக கொண்டு வந்து, “மற்றவர்களுடையது போயின. என்னுடையது போகயிலை” என்றாராம். அதுவே மருவி புகையிலை என்றானதாம். அதுமட்டுமில்லாமல் புகையிலையை “பிரம்ம பத்திரம்” என்றழைக்கும் காரணமும் இதுவே என்கிறார்! தம் காலத்தில் சற்றே வி(கா)ரமான புலவராக இவர் இருந்திருக்கக் கூடும்!

தற்கால சினிமாக்கள், தர்மம் வெல்லும் என்பது போன்ற‌ மெசேஜை, ஏழை ஹீரோ ஆல்ப்ஸ் மலையில் ஆடுவது, டாஸ்மாக்கில் சோகப்பாடல், வில்லனிடம் வீறு கொள்வது என்றெல்லாம் சுற்றி, கடைசி ஃப்ரேமில் ஒரே ஒரு டயலாக் மூலம் “மெசேஜ்” முடித்து விடும். பழனி முருகனுக்கு தூது விடுவதாய் இயற்றப்பட்ட புகையிலை விடு தூது, சுமார் 60 கண்ணிகளில், 50க்கும் மேற்பட்ட‌ கண்ணிகளில் புகையிலைப் பற்றி பாடியும், ஐந்தே ஐந்து கண்ணிகளில் முருகனை முடித்துவிடும் பொழுது, “மெசேஜ் சினிமா” ஞாபகம் தவிர்க்க இயலாததாகிறது. இருப்பினும் தமிழ் நயத்தில் மற்ற தூது நூல்களுக்கு சற்றும் சளைத்ததில்லை “புகையிலை விடு தூது”.

“வண்டு விடு தூது” வேறு விதமான நுட்பம் கொண்டது. சிவன் பால் மையல் கொண்ட தலைவி வண்டை தூதாக அனுப்புகிறாள். வண்டினை தேர்ந்தெடுத்த காரணங்களை விவரிக்கும் கண்ணிகள் சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்தன.

“நெஞ்சத்தை தூண்டுவோ மென்னினெடு வீதி
மஞ்சன் மணித் தேர் மருங்கெய்தி…”

என்னும் கண்ணி தொடங்கி, நெஞ்சை தூதாக அனுப்பலாமெனின், அது அவரை கண்ட போதே அவருடன் ஏற்கெனவே சென்று விட்டதே…என் வசம் இல்லாத ஒன்றை எவ்வாறு தூதனுப்புவது என்கிறாள்.

“செந்தமிழைச் செம்பொன்னைச் சேர்ப்பினவை தாஞ்செல்லா…” என்கிறாள். அதாவது தமிழும் பொன்னும் தானே செல்லாதாம். யாரேனும் அழைத்துச் செல்ல வேண்டுமாம். நாம் அழைக்காமல், மதிக்காமல் தமிழ் நம் நாக்கில் ஏறாது என்று சொல்வது போல இருக்கிறது இது!

தென்றல் அவளின் பிரிவுத் துயரை கூட்டுவதால், அது அவளுக்குப் பகையாம். எனவே தென்றல் அவளின் தூதாய் தேர்ச்சி பெறவில்லை. இவ்வாறு அனைத்தையும் நிராகரித்து, வண்டை தேர்ந்தெடுக்கையில், அதன் உச்சத்தை தொடுகிறது “வண்டு விடு தூது”.

“காட்டுவன வல்லவே கண்ணிய பூந்தொடுக்கைத்
தோட்டலர்த் தாரிற்றுனைந்தேறி வேட்டதிது
நல்கென முன்னத்தி நவின்றருளி நூதனார்
செல்கென மீள்வதுநின் செய்கையே…”

என்னும் வரிகளில், “உன்னை விட மலர் மாலைக்கு நெருக்கமானவர் உண்டோ? கொன்றை மாலையில் நின்று குறிப்பாலே என் தூதை சொல்ல வண்டை விட சிறந்த தூது ஏது?” என்கிறாள். கொன்றை சிவனுக்கு நெருக்கமானது. வண்டுக்கு கொன்றை பிடித்தமானது. தலைவியின் தூதுக்கு எனவே வண்டு பொருத்தமானது. இத்தனை தொடர்பை எத்தனை எளிதாய் இயம்புகிறது கவி! மாலை பெற்று வருவது தூது அமைப்பின் முக்கிய கரு என்று முன்னர் சொன்னதை தற்போதும் நினைவில் கொள்க.

இலகுவான, ஆழம் அதிகமற்ற‌ உட்கருவைக் கூட தமிழின் அலங்கார ஊர்தியில் அமர வைத்தால், அது பேரெழில் கொண்டு உலா வரும் என்பதற்கு தூது இலக்கிய நூல்கள் ஒரு சிறந்த உதாரணம். நம் தாத்தா உ.வே.சா மட்டுமில்லையெனில் “தூது வருமா” போன்றவை மட்டுமே இலக்கியமாகி, நாமும் தமிழும் இன்னமும் முன்னரே சீரழிந்திருப்போம் என்பது இலக்கியம் இருக்கும் வரை உண்மை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.