வாகனப்ரியன்

சொர்ணப்ப தாத்தா தன் லங்கோட்டை இறுக்கி கட்டி, தயாராக கட்டிலின் மேல் எடுத்து வைத்திருந்த புது இரட்டை வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு, தலை வாரி, தேய்த்து வைத்திருந்த சந்தன நிற சட்டையை அணிந்தார். 

மேஜை மேலிருந்து சுருட்டு ஒன்றினை எடுத்துப் பற்றவைத்தார். காலை வெயில் ஜன்னல் வழியாக அவர் முகத்தில் லேசாகப் பட்டது. அவரது சிவந்த முகம் இன்னும் சிவப்பாக வெயிலில் தெரிந்தது.

சுருட்டுப் புகை சுருள் சுருளாக அவர் முகத்தின் அருகே சுற்றியதில் அவர் மிகவும் அழகான கம்பிரமான ஒரு தோற்றத்தில் தெரிந்தார்.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை பார்த்து அவர் தன் பொக்கை வாய் விரிய சிரித்தார். “போலாமாடே” என்று கேட்டார்.

நான் அவரிடம், ” தாத்தா.. இப்போ உங்கள பாக்கதுக்கு, வயசான மார்த்தாண்ட வர்மா மகாராஜா போல இருக்கு”, என்றேன். சுருட்டை இழுத்து ஊதி விட்டு, “அவர எங்கடே நீ பாத்த?” என்றார்.  கொட்டாரத்தில நிறைய படங்கொ இருக்குல்லா.. அங்க தான் பாத்தேங்..” என்றேன்.

“இந்த எழுவத்தி நாலு வயசுலயுங் இப்படி கலக்குகேளே.. இளம் பிராயத்தில அப்போ பயங்கர கலக்காட்டில்லா இருந்திருக்குங்.. சும்மா இல்ல.. பழைய அம்மச்சி மாருகோ இப்பவுங் உங்கள பாத்தா வெக்கப்பட்டு ஒரு சிரி சிரிக்கது,” என்றேன்.

“ஆமடே.. இளம் பிராயத்தில நல்லாத்தான் இருப்பேன். அந்த கதையெல்லாம் நாரோயிலுக்கு போய், அந்த கார் மெக்கானிக் கடையில வெறுதே இருக்கும்போ சொல்லுகேங்.. இப்போ நம்மோ போவோம். இல்லண்ணா.. அந்த தொட்டிப்பய நம்ம கார தொடாம அப்படியே விட்டுருப்பாங். சின்ன சின்ன வேலைகளுக்கு வர வண்டிகள பாத்து  மயிராண்டி காசு அடிச்சிக்கிட்டு கெடப்பாங்.. இண்ணைக்கு மூணு நாளாச்சு. கூட இருந்து ரெடியாக்கி வாங்கிட்டுதாங் வரணும் பாத்துக்கோ”, என்றார்.

அவரது ஃபியட் கார் ரேடியேட்டரில் எதோ குழப்பமாகி தண்ணீர் ஒழுகுவதால் அதனை நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தின் எதிர் புறத்தில் இருந்த மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் விட்டிருந்தார். கார் இல்லையென்றால் அவர் ஒரு மாதிரி ஆகி விடுவார். சிறு வயதில் இருந்தே கார் ஓட்டுவதில் அவருக்கு அலாதி பிரியம் என்று அடிக்கடி சொல்லுவார். அவரிடமிருந்த மோரிஸ் மைனர் காரைக் கொடுத்து விட்டு இந்த ஃபியட் காரை வாங்கினார். இந்தியாவின் பல பாகங்களுக்கும் காரில் சுற்றி வந்தவர்.

நானும் அவருமாக பேருந்தில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் இறங்கி ரோட்டின் மறுபுறம் இருக்கும் ஒர்க் ஷாப் வந்தோம். அப்பொழுதுதான் ஒர்க் ஷாப்பை திறக்கிறார்கள். தாத்தா அங்கிருந்த பையனிடம்,” எங்கடே ஒனக்க ஓனரு.. எப்போ வருவாங்?” என்று கேட்டார். “இப்போ வந்திருவாவ.. நீங்கோ இருங்கோ,” என்றபடி இரண்டு மடக்கு நாற்காலிகளை எடுத்து வந்து அடர்ந்து வளர்ந்திருந்த வேப்பமரத்தின் நிழலில்ப் போட்டான்.

தாத்தா ஒரு சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டார். “நீ போய் சாயா குடிச்சி ஒரு சிகரெட்டை அடிச்சிற்று வாடே, அவங் வரட்டும்”, என்றார். இப்போ வேண்டாம் தாத்தா, பொறவு போறேங்”, என்றேன்.

சற்று நேரத்தில் ஓனர் வந்தார். அவருக்கு ஒரு ஐம்பது வயது இருக்கலாம். தாத்தாவைப் பார்த்ததும் வேகமாக வந்து கும்பிட்டு, “எல்லாம் ரெடி இன்னும் ஒரு சின்ன வேல மட்டும் பாக்கி. மத்தியானதுக்குள்ள ரெடியாயிரும் பாத்துக்கிடுங்க..,” என்றார்.

“நீ இண்ணைக்கு தரலேன்னா ஒன்ன யாரு விடுகா? வெளுப்பில பொறப்பட்டு அதுக்கு தாலா வந்தோம்”, என்றார் தாத்தா.

தாத்தாவின் ஃபியட் கார் வேலை துவங்கியது. ஏற்கனவே கழட்டியெடுக்கப்பட்டிருந்த அதன் ரேடியேட்டரில் எங்கே ஓட்டை இருக்கிறதென்ற ஆராய்ச்சியை மெக்கானிக் துவங்கினார். தாத்தா அவரிடம், நீ இப்பதான் ஓட்டைய தப்புகியா? சட்டுன்னு கண்டுபிடிச்சு அடச்சி எனக்கு இன்னும் ரெண்டு மணிக்கூர்ல தரணும் பாத்துக்கோ.. என்றார்.

ஏமாங் கொஞ்சம் வெளியே போய் சுத்திட்டு வாங்கோ.. ரெடி பண்ணி ரெண்டு மணிக்கூர்ல தந்துருவேங்.. எங்க அம்மயாண சத்தியம் என்றார்.

“டேய் அம்மைக்க மேலயாக்கும் சத்தியம் போட்டுருக்க.. நம்பிப் போயிற்று வாறெங் கேட்டியா”  என்றபடி என்னையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். கலெக்டர் ஆபிசிலிருந்து கோட்டார் போகும் பாதையில் நாங்கள் மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். வழியில் தனியாக இருந்த ஒரு பெட்டிக்கடையில் தாத்தா சென்றார். தன் கருத்த லெதர் பையை அவரது அக்குளில் இடுக்கியிருந்தார். கடைக்காரரைப்பார்த்து ஒரு பெரிய சர்பத் கப்பில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து தர சொன்னார். கடைக்காரர் ஏற்கனவே இவரை தெரிந்தவராக இருப்பார் என்பது எனக்குப் புரிந்தது. மறு பேச்சில்லாமல் எலுமிச்சம் பழத்தை பிழிந்து கப்பை அவரை நோக்கி வைத்தார்.

தாத்தா தன் லெதர் பையில் இருந்து அந்த அரை குப்பி சாராயத்தை எடுத்து கப்பில் முக்கால் கப் ஊற்றினார். கடைக்காரரிடம் மீதி இடத்தில் தண்ணீர் ஊற்ற சொன்னார்.

முக்கால் கப் அவர் குடித்து விட்டு, மீதியை என்னிடம் நீட்டினார். மறு பேச்சின்றி வாங்கி குடித்தேன். கடைக்காரர் ஒரு தடை நார்த்தங்காய் ஊறுகாயை எங்களிடம் நீட்டினார். பிரித்து இருவரும் எடுத்து நக்கிக் கொண்டோம். தாத்தா ஒரு சுருட்டினை எடுத்து பற்றவைத்துக்கொண்டார். நான் கடைக்காரரிடம் ஒரு பிளைன் கோல்ட் சிகரெட் வாங்கி பற்றவைத்துக்கொண்டேன்.

இருவரும் லேசான மிதப்பில் கோபால பிள்ளை ஆஸ்பத்திரியின் அருகிலிருந்த நாவல் மர நிழலில் நின்றோம். தாத்தா என்னிடம், “மக்கா.. கார் இல்லேண்ணா நான் சவம் மாதிரியாக்கும் கேட்டியா.. எனக்கு ஒரு மயிரும் ஓடாது. இண்ணைக்கு கார் கிடைச்சதும் நாளைக்கு நம்மோ திற்பரப்புக்குப் போலாமாடே.. நான், நீ, நடராசன் அப்புறம் வாறாம்னா தெரவியத்தையும் கூட்டிற்று போலாம். இண்ணைக்கு ராத்திரி நடராசண்ட சொல்லி தெப்பக் கொளத்தில் இருந்து சிலேபி மீனுவோ பிடிக்க சொல்லுவோம், தெரவியத்திட்ட ஒரு நல்ல சேவ கோழி கெடக்கு அதையும் தூக்கிற்று போவோம். காலம்பற வண்டிய விட்டுருவோம். சாயந்தரம் வருவோம். என்கிட்டே ரெண்டு குப்பி மிலிட்டரி ரம் இருக்கு.. அடிச்சு பொளிச்சுட்டு வருவோம்.. என்னடே உனக்கு பிரச்சன ஒண்ணும் இல்லையே?” என்றார்.

நான் சிரித்துக்கொண்டே, “அம்மேட்ட எனத்தயாங் கத சொல்லிற்று வாறெங்.. ஆனா குடிச்சுக்கிட்டு நீங்கோ கார் ஓட்டாண்டாங்.. நம்மோ அந்த டிரைவர் சசிய கூட்டிக்கிடுவோம். அவங் குடிக்கவும் மாட்டான், நல்ல ஓட்டவும் செய்வான்,” என்றேன்.

“ஆமா.. அதுங் சரிதான். ஆனா நான் குடிச்சுற்று ஓட்ட முடியாதுன்னு மட்டும் நினைக்காத.. எர்ணாகுளத்தில இருந்து பெங்களுர் வர குடிச்சு குடிச்சே வண்டி ஓட்டிற்று போனவனாக்கும் நான், ஆனா இப்போ வயசாகி போச்சுடே .. அதனால நம்மோ சசிய கூப்பிட்டுக்கிடுவோம்,” என்று ஒத்துக் கொண்டார்.

மதியம் மூன்று மணிக்கு கார் ரிப்பேர் முடிந்து கிடைத்தது. தாத்தா மிச்சம் இருந்த சாராயத்தையும் அந்த குப்பியிலேயே தண்ணி சேர்த்து தன் வாயில் கவிழ்த்துக் கொண்டார்.

ஒர்க் ஷாப் ஓனர், ‘ஏமானே.. குடிச்சிருக்கியோ.. பாத்து போணும் கேட்டேளா,’ என்று அக்கரையாக சொன்னார்.

“டேய் நான் வயசு தெரிஞ்ச நாள்ல இருந்து கார் ஓட்டுகவனாக்கும்.. நீ பயப்படாத..,” என்றபடி காரை கிளப்பினார்.

குடிக்காத தெளிவான ஒரு சிறந்த ஓட்டுநர் ஓட்டும் லாவகத்துடன் அவர் காரை ஓட்டி நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம். 

அன்றிரவே நடராசன் தெப்பக்குளத்திலிருந்து ஏராளம் சிலேபி மீன்களை பிடித்து தாத்தா வீட்டு தண்ணீர்த் தொட்டியில் போட்டு வைத்தான்.

திரவியம் பிள்ளையிடமும் பேசி சேவலும் மாமரத்தின் மூட்டில் கட்டிவைக்கப்பட்டது. நான் அம்மாவிடம் ” நாளைக்கு நானும் தாத்தாவும், தாத்தாக்க பூதப்பாண்டி தோப்புக்கு போறோம்.. அங்க புதிய தென்னங் கண்ணுகோ நடப்போறோம்.. தாத்தா என்னையும் வர சொல்லியிருக்காரு.. போயிட்டு சாயந்தரம் வந்திருவேங்.. கார்லதாங் போறோம் என்றேன்.

“அப்பா ஊரில இல்லண்ணா ஒனக்கு ஒரே சர்க்கிட்டு தானே.. போறதெல்லாங் செரிதாங் ஆனா குடிச்சிட்டு, சிகரெட்டு குடிச்சிட்டு வீட்டுக்குள்ள வந்திரக் கூடாது .. சித்தப்பாட்டை நாங் சொல்லணும் .. அவருக்கு வயசாயாச்சு.. ஆனா மனுஷன் ஆடிக்கிட்டு திரியாரு. எல்லாம் அப்பா வரது வரத்தாலா.. அப்போத்தாங் அடங்குவ நீ..” என்றாள்.

மறுநாள் காலையில் தாத்தாவின் காரில் சகல சாதனங்களும் ஏற்றப்பட்டது. தாத்தா டிரைவர் பக்கத்தில் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். நானும், நாடராசனும், திரவியம் பிள்ளையும் பின் இருக்கையில்.

திற்பரப்பில் அருவிக்கு மேலே அணைக்கட்டின் பக்கத்தில் ஒரு ஓரமான இடத்தை தேர்ந்தெடுத்து எங்கள் தளவாடத்தை அமைத்தோம். தாத்தா முதல் குப்பியை திறந்து அனைவருக்கும் ஒரு பெக் ஊற்றி கொடுத்தார். குடித்ததும், நடராசன் அதிகாலையிலேயே எழுந்து சுத்தம் செய்து வைத்திருந்த சிலேபி மீன்களை வறுக்க அடுப்பை தயார் செய்து பக்கத்தில் இருந்து காய்ந்த சுள்ளிகளை அடுக்கி நெருப்பை பற்ற வைத்தான். நான் சற்று தள்ளி சென்று சேவலை அறுத்தேன். கோழியை சுத்தம் செய்ய  திரவியம் பிள்ளை எனக்கு உதவினார். கோழியை சுத்தம் செய்து  கொடுத்து விட்டு நானும் திரவியம் பிள்ளையும், சசியும் அருவியில் சென்று குளித்தோம். பேரிரைச்சலுடன் தலையில் கற்கள் விழுவதைப்போல அருவி எங்களை குதூகலத்துடன் நனைத்தெடுத்தது. முக்கால் மணிநேர ஆனந்தக்குளியல்.

மேலே சென்றோம். சிலேபி மீன்கள் தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்டு வாழை இலையில் குவிக்கப்பட்டிருந்தது. தாத்தாவும், நடராசனும் மூன்று ரவுண்டுக்கு மேலே ஏற்றியிருந்தார்கள். 

தாத்தா ஒரு பரவச நிலையில் இருந்தார். ‘’மக்கா வா வா போடு போடு” என்றார். நானும் திரவியம் பிள்ளையும் மீண்டும் ஒரு பெக் ஊற்றி அடித்தோம். வறுத்த சிலேபி மீன்கள் மிகுந்த சுவையாக இருந்தது. சசி மீன்களை  மட்டும் எடுத்துக்கொண்டான்.  மண் சட்டியில் சேவல் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது, மற்றோர்  அடுப்பில் கைக்குத்து சம்பா அரிசி கொதித்துக் கொண்டிருந்தது. நடராசன் குழம்பை கையில் ஊற்றி ருசி பார்த்தபின், சற்று மிளகாய்ப் பொடியை சேர்த்தான். 

நான் தாத்தாவிடம் “நீங்க அருவியிலே குளிக்கலியா தாத்தா என்றேன்.” “மக்கா நாங் இங்க குளிக்கவா வந்தேன்? இந்த அருவி சத்தத்தில, அழகான இந்த எடத்துல மீனும், கோழிக்கறியும், குடியுமாட்டு சந்தோஷமா இருந்துட்டு போணும்.. இன்னும் எழவு உயிரு எத்தனை நாளைக்கு கெடக்குமுன்னு எவனுக்கு தெரியும்?” என்றார்.

ஒரு வழியாக குடித்து சாப்பிட்டு சற்று நேரம் அருவிக்கு மேலிருந்த மண்டபத்தில் கண்ணயர்ந்து விட்டு மாலை கிளம்பி ஊர் வந்தோம்.

எனக்கு கொச்சினில்  மெரைன் கோர்ஸ் சேருவதற்கான நேர்முகத்தேர்வுக்காக அழைப்பு வந்தது. நான் தாத்தாவிடம் சென்று சொன்னேன். மிகவும் சந்தோஷப்பட்டார். தக்கலை பேருந்து நிலையம் வரை தன் ஃபியட் காரில் என்னை கொண்டு விட்டு, வாழ்த்தி அனுப்பினார்.

இரு தினங்களுக்குப் பிறகு நான் ஊருக்கு வந்தேன். வீட்டில் வந்து அம்மாவிடம் எனக்கு மெரைன் கோர்ஸில் இடம் கிடைத்த விஷயத்தை மகிழ்ச்சியுடன் சொன்னேன். தாத்தாவிடம் சொல்வதற்காக அம்மாவிடம், “தாத்தா வீட்டில இருப்பாரா?” என்று கேட்டேன்.

அம்மாவின் முகத்தில் லேசான சோகம் படர்ந்தது, “தாத்தாக்க கார நாரோயில வச்சி யாரோ கெளவாண்டுட்டு போய்ட்டானாம்.. மனுஷன் வெப்புறாளாம் தாங்காம நெஞ்சி வலி வந்து, இங்க சந்திரசேகரன் ஆஸ்பத்திரியில கெடக்கேரு.. பயப்படத்துக்கு ஒண்ணும் இல்ல.. ஆனா காரு காருன்னு பொலம்பிகிட்டே இருக்கேரு..” என்றாள்.

நான் உடை கூட மாற்றாமல், சைக்கிளை எடுத்துக் கொண்டு சந்திரசேகரன் ஆஸ்பத்திரிக்குப் போனேன். அங்கே தாத்தா படுத்திருந்தார். அருகே நடராசன் நின்றிருந்தான். மெதுவாக சென்று அவர் அருகே அமர்ந்தேன். என்னைப் பார்த்ததும் அவர் கண்கள் நிறைந்தது.

எந்தப் பட்டிப் பொலியாடிமோனோ எங் கார கெளவாண்டுட்டாங் மக்கா.. உனக்குத்தான் தெரியுமே கார் இல்லேண்ணா நாங் சவம் மாதிரியாக்கும். நான் அவர் கைகளை அழுத்திப் பற்றிக்கொண்டேன். அந்நிலையிலும் அவர் நான் போன காரியம் என்னாச்சு என்று கேட்டு தெரிந்து சந்தோஷப்பட்டார்.

“தாத்தா கிடைச்சிரும்.. நீங்க கவலைப்படாம இருங்கோ..” என்றபடியே நடராசனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

நான் கொச்சினுக்கு கிளம்பிய அன்று மாலை தாத்தா தனியாக நாகர்கோயில் கோட்டாருக்கு அவரது பால்ய சிநேகிதன் கடைக்கு சென்றிருக்கிறார். அவர் எப்பொழுதும் தனக்கான சுருட்டுகளை மொத்தமாக அங்கிருந்து தான் வாங்குவார். அன்று கடையின் பக்கத்தில் வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால், ரயில் நிலையம் போகும் பாதையில் சற்று ஒதுக்குப்புறத்தில் நிறுத்திவிட்டு, நடந்து கடைக்கு வந்திருக்கிறார்.

அது ஒரு மொத்த வியாபார கடை. அன்று கூட்டம் அதிகம் இல்லாததால் தாத்தாவும், கடை உரிமையாளரும் வெகுநேரம் பழைய கதைகளை பேசிக்கொண்டிருந்து விட்டு, தாத்தா தன் கார் நிறுத்திய இடத்திற்கு வந்தபோது அதிர்ச்சியடைந்தார். மாற்றி வேறெங்காவது நிறுத்திவிட்டோமோ என்று நெஞ்சம் பட படக்க கோட்டார் கம்போளம் முழுக்க வேர்க்க விறுவிறுக்க தேடியிருக்கிறார்.

நேராக சென்று கோட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர்கள் காரின் சகல அடையாளங்களையும் எழுதி வாங்கிக்கொண்டு மறுநாள் வரும்படி சொல்லி இருக்கிறார்கள். அங்கிருந்து ஒரு ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்து நடராசனிடம் கண்ணீர் மல்க சொன்னவர் அப்படியே வேர்வை உடலை நனைக்க நினைவிழந்து விட்டார். 

நடராசன் தான் அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்து விட்டு என் அம்மாவிடம் வந்து விஷயத்தை சொல்லி இருக்கிறான்.

நான் மீண்டும் தாத்தாவைப் போய் பார்த்தேன், டாக்டரிடம் சென்று அவர் உடல் நிலை பற்றி கேட்டேன். ‘’ஒன்றும் இல்லை ஒரு அதிர்ச்சி, இன்று மாலை நீங்கள் அவரை வீட்டுக்கு கூட்டிப்போலாம்’’ என்றார்.

தாத்தாவுக்கு என்னை பார்த்ததில் கொஞ்சம் தைரியம் வந்திருப்பது அவர் பேச்சில் தெரிந்தது, “மக்கா எனக்கு ஒண்ணும் இல்லடா.. நாளைக்கு நீ எங்கூட எஸ்.பி ஆபிஸ் வர வரணும் என்றார்.”  சரி என்றேன்.

மாலை அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தோம். நான் அவரிடம், திருவனந்தபுரத்தில் கல்லூரி  பேராசிரியராகவும், பறவைகள் பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கும் அவரது மகன் வினைய மாமாவிடம் இது பற்றி சொல்லட்டுமா என்றதற்கு, அவர் மறுத்தார். வேண்டாம், யாருக்கும் தெரிய வேண்டாம் என்றார்.

நான் தக்கலைக்கு சென்று ஒரு முழு பாட்டில் விஸ்கியை வாங்கி கொண்டு வந்து அவருக்கு ஊற்றிக்கொடுத்தேன். இரண்டு புரோட்டாக்களும் நான்கு பெக் விஸ்கியும் உள்ளே சென்றபின் அவர் அமைதியாக தூங்கினார்.

மறுநாள் நாங்கள்  ஒரு ஆட்டோவில் எஸ்.பி ஆபிஸ் சென்றோம். நேரடியாக எஸ்.பியை சந்தித்து மீண்டும் ஒரு புகார் கடிதம் கொடுத்தோம். எஸ்.பி தீவிரமாக விசாரித்து விரைவில் கண்டுபிடித்து தருவதாக தாத்தாவுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

வெளி வரும் போது தாத்தாவிடம் எஸ்.பி கொடுத்த நம்பிக்கையின் துளி வியர்வையாய் நெற்றியில் ஒட்டியிருந்தது.

நான் அம்மாவிடமிருந்து வினைய மாமாவின் தொலைபேசி எண்ணை வாங்கினேன். எங்களூர் தபால் நிலையத்திலிருந்து எஸ்.டி.டி. போட்டு (அப்பொழுது வேறு வசதிகள் எதுவும் இல்லா காலம்) விஷயத்தை சொன்னேன். தாத்தா அவரிடம் தெரிவிக்கக் கூடாது என்று சொன்னதையும் சொன்னேன். அவர் ஒரு பேராசிரியரின் பொறுமையுடன் எல்லாவற்றயும் கேட்டுக்கொண்டார். அவரை கவனமாக பார்த்துக்கொள்ள சொன்னார்.

தாத்தாவின் சார்பாக நானும் நாடராசனும் தினமும் பேருந்தில் எஸ்.பி. அலுவலகம் சென்று விசாரிக்க ஆரம்பித்தோம். ஒரு வாரம் ஆகியும் எவ்வித நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை. தாத்தா சதா சோகம் தோய்ந்த முகத்துடன் தன் தேஜஸை இழந்து, சதா சுருட்டும், குடியுமாக இருந்தார். இன்னும் இரு தினங்களில், தன் கார் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையின் கடைசி கண்ணியும் அவரை விட்டு அற்று விடும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

மறுநாள் காலையில் என் வீட்டு வாசலில் ஒரு புதிய சிகப்பு நிற மாருதி 800 கார் வந்து நின்றது. மதில் மேல் ஏறி முருங்கைக்காய் பறித்துக் கொண்டிருந்த நான் ‘நம் வீட்டு முன் யார் இந்த புதிய மாருதியை நிறுத்துவது,’ என்று ஆர்வமாய்ப் பார்த்தேன்.

காரிலிருந்து வினைய மாமா இறங்கினார். நான் மதிலில் இருந்து குதித்து ஓடி சென்று அவரை வரவேற்றேன். உள்ளே அழைத்து சென்றேன்.

அம்மாவும் அடுக்களைக்குள் இருந்து வந்தார்கள்.  “அப்பா எப்படி இருக்கார் இப்போ?” என்று வினைய மாமா அம்மாவைக் கேட்டார். நான் தான் பதில் சொன்னேன். “தாத்தா கார் இல்லாம ரொம்ப கவலைல இருக்காரு. அந்த கார் இனி கிடைக்குமான்னு தெரியல்ல,” என்றேன். அம்மா அவரை டிபன் சாப்பிட அழைத்து, பரிமாறியபடியே, ‘இப்படியும் உண்டுமா ஒரு கார் பைத்தியம்’ என்றாள்.

வினைய மாமா சிரித்தபடியே சொன்னார், “அக்கா அவர் பொண்டாட்டி பிள்ளைகளை விட காருக்கு கூடத்தான் அதிகமா இருந்திருக்காரு.. அந்த கிறுக்கு எனக்கும் உண்டு ஆனா அவரளவுக்கு இல்லை.”

சாப்பிட்டு முடித்ததும் வினைய மாமா என்னிடம் ” நீ போய் அப்பாவ கூட்டிட்டு வா .. நான் வந்திருக்கேன்னு சொல்லாத..” என்றார். எனக்கு இவரே போய் பார்த்தல் என்ன என்று கேட்கத் தோன்றியது. ஆனாலும் சென்றேன்.

தாத்தா அப்பொழுதுதான் குளித்து உடை மாற்றிக்கொண்டிருந்தார். எப்பொழுதும் சவரம் செய்து வழு வழு என்றிருக்கும் அவரது முகத்தில் தாடியுடன் சோகமும் வளர்ந்திருந்தது.

“தாத்தா அம்மா உங்களை டிபன் சாப்பிட கூப்பிடுறாங்க.. யாரோ உங்க கார் பத்தி அம்மேட்ட சொல்லி இருக்காங்களாம். வாங்க தாத்தா” என்று அழைத்தேன்.

அவர் வீட்டு வராந்தாவில் இருந்து ஒரு சுருட்டை பற்றவைத்தவர் அங்கிருந்தே என் வீட்டின் முன்னே நிற்கும் அந்த சிகப்பு மாருதியைப் பார்த்தார். “மக்கா மாருதி கார்ல யாருடே வந்திருக்கா?” என்று கேட்டார்.

அப்பாக்க ஃபிரண்டு தாத்தா.. அவரு தான் உங்க கார பத்தி எதோ தகவல் சொல்ல வந்திருக்காராம்.. வாங்கோ என்றேன். தாத்தாவின் முகம் லேசாக சந்தேகமும், ஆர்வமுமாக விரிந்தது. தன் செருப்பை மாட்டியபடி என்னுடன் வந்தார்.

காருக்கு அருகில் வந்தவர், டேய் இது கேரளா ரெஜிஸ்ட்ரேஷன் காருல்லா.. உங்க அப்பாக்கு கேரளால ஃபிரண்டு இருக்காளோ.. அதுவும் இது திருவனந்தபுரம் ரெஜிஸ்ட்ரேஷன்” என்றபடியே என் வீட்டு படிக்கட்டுகளில் மெதுவாக சந்தேகம் வலுக்க ஏறி வந்தார்.

ஹாலில் அமர்ந்திருந்த வினைய மாமவைப் பார்த்ததும் அவர் முகத்தில் சந்தோஷமும், சங்கடமும், ஒரு பதைப்பும் உண்டானது. ”நீ என்ன திடீர்ன்னு.. அம்மா நல்லா இருக்காளா..,” என்றபடி என் அம்மாவை சந்தேகமாய் பார்த்தார். அவர் பார்வையில் அம்மாதான் வினைய மாமாவுக்கு சேதி சொல்லி அழைத்திருப்பாள் என்ற தீர்க்கம் இருந்தது.

“இல்லப்பா சும்மா தான் வந்தேன். மார்த்தாண்டம் வர வர வேண்டி இருந்து.. அப்படியே உங்களையும் பாத்துட்டுப் போலாம்ன்னு வந்தேன், அம்மா நல்லா இருக்கா,” என்றார் வினைய மாமா.

“சித்தப்பா காப்பி குடிங்கோ” என்று அம்மா அவரை சாப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றாள்.

வினைய மாமா என்னை அழைத்துக்கொண்டு என் வீட்டு மாமரத்தடியில் வந்து தன் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டு என்னிடமும் நீட்டினார். நானும் எடுத்துக் கொண்டேன்.

“இந்த புதிய மாருதி கார் நீ எனக்கு போன் செய்த உடன் அவசர ஆடர் கொடுத்து, பெரிய இடத்து சிபாரிசில உடனே வாங்கி ரெஜிஸ்டர் பண்ணினது. இது உன் தாத்தாவுக்கு தான். எனக்கு தெரியும் அப்பாவாலே கார் இல்லாம இருக்க முடியாதுண்ணு..” என்றார்.

நான் அவரை ஆச்சரியமாகப் பார்த்தபடியே புகையை ஊதிக்கொண்டிருந்தேன்.

தாத்தா சாப்பிட்டு முடித்து வெளியே வந்து சுருட்டை பற்றவைத்தபடியே ,

வினையா.. “வண்டி புதுசா,” என்று கேட்டார்.

ஆமா என்று சொன்னபடி தன் கையில் வைத்திருந்த சாவியை தாத்தாவிடம் கொடுத்தார். ஓட்டிப் பாருங்க என்றார். தாத்தா கீயை வாங்கியதும் நான் அவர் முகத்தை சந்தோஷத்துடன் பார்த்தேன். அவர் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை. ‘என்ன டேய் இப்படி பாக்க?’ என்றபடியே தாத்தா என்னையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறினார். கொஞ்சம் பெரிய சைஸ் சோப்பு டப்பா போல இருக்குல்ல என்று என்னிடம் கேட்டார்.

கீயரைப் போட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தார்.. “டேய் சரக்கு பயங்கர ஸ்மூத் கேட்டியா, மாருதிய இப்போதாங் மொததடவ ஓட்டுகேங் கேட்டியா,”   என்றார்.

இரண்டு ரவுண்டுகள் ஊரை சுற்றி வந்து, வீட்டு நடையில் வண்டியை நிறுத்தி கீயை எடுத்துக்கொண்டு வீட்டினுள் வந்து வினைய மாமாவிடம் கீயை நீட்டினார்.

மாமா அவரிடம், “அப்பா இது உங்க கார், என்னோடதில்லை.. உங்களுக்குத்தான்..,” என்றார்.

“அதெல்லாம் சரிப்படாது. எனக்க கார் களவு போச்சுன்னு சொல்லி இத யாரு ஒங்கிட்ட வாங்க சொன்னது? காரு இல்லண்ணா செத்து ஒண்ணும் போகமாட்டேங்.. நீயே கொண்டு போயிரு,” என்றார்.

ஆமா யாரு இந்த நியூஸ் உனக்கு சொன்னது? என்று கேட்டபடியே என்னை பார்த்தார்.

நான் அவரைப் பார்த்து ஒரு வழிசல் சிரிப்பை உதிர்த்தேன்.

வினைய  மாமா அவரிடம், “உங்க கார் கிடைக்கிறவரை இத நீங்க வச்சுக்குங்க.. கிடச்சபிறகு நான் வாங்கிக்கிறேன்,” என்றார்.

‘தாத்தா, வாங்குங்கோ தாத்தா,’ என்று நானும், ‘சித்தப்பா, மகன் அன்போட தாறான்.. வாங்கிக்கிடணும்,’ என்று அம்மாவும் சொல்ல தாத்தா சம்மதித்தார்.

அன்று மாலை நான் தாத்தாவைப் பார்க்க போனபோது க்ளீன் ஷேவ் செய்து புது வேஷ்டி கட்டி புது சந்தன நிற சட்டையணிந்து, வாயில் சுருட்டை பற்றவைத்துக்கொண்டு நின்றார். மாலை வெயில் அவர் சிவந்த முகத்தை மேலும் சிவப்பாகியது. சுருட்டுப் புகை சுருள் சுருளாக அவர் முகத்தின் அருகே சுற்றியதில் அவர் மிகவும் அழகான கம்பிரமான ஒரு தோற்றத்தில் தெரிந்தார்.

“தாத்தா இப்போ உங்கள பாக்க மார்த்தாண்டவர்மா மகாராஜா யுத்தத்தில ஜெயிச்சு வந்த அண்ணைக்கு, குளிச்சிட்டு கோடி துணி கட்டி நிக்கது போலெல்லா இருக்கு,” என்றேன்.

“அத நீ எங்கடே போய் பாத்த.. அத விடு.. நடராசன்கிட்ட சிலேபி மீனு பிடிக்க சொல்லி இருக்கேன்.. தெரவியத்திட்ட ஒரு நல்ல வெடக் கோழியும் கெடக்காம் நாளைக்கு நம்மோ திற்பரப்புக்கு போலாமாடே?” என்று சிரித்தபடியே கேட்டார்.  

***

One Reply to “வாகனப்ரியன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.