நச்சுடை நாகங்கள் இடையே ஒரு நங்கை

   1917இல் நாகூர் தெற்குத் தெருவில் எம். ஷெரிப் பெய்க் மற்றும் முத்துகனிக்கும்  மகள் பிறந்தாள். (முத்துகனி இறந்த பிறகு கதிஜா நாச்சியார் இம்மகவுக்குச் சிற்றன்னையாக வந்தார்.) மூத்த குழந்தை. ஷெரிப் பெய்க் ஓர் ஆங்கிலேயக் கப்பலில் கேப்டனாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நன்றாக ஆங்கிலம் பேசக்கூடியவர். ஸித்தி ஜுனைதா பேகம் என்று பெயரிடப்பட்ட இந்தப் பெண் குழந்தையைப் படிக்க வைக்கவில்லை.  அதே தெருவில் கிறிஸ்துவர்களால் நடத்தப்பட்டப் பள்ளி ஒன்றில் மூன்று வகுப்புகள் படித்தபின் அவருடைய அன்னை மேலே படிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பனிரெண்டு வயதிலேயே திருமணமும் ஆகிவிட்டது. திருமண வாழ்வு நான்கைந்து ஆண்டுகள்தாம். நான்கு குழந்தைகள். அப்படியும் தன் 21ம் வயதில் ஜுனைதா பேகம் தன் முதல் நாவலை எழுதுகிறார். இது எப்படி சாத்தியமானது என்பதற்கு அவர் தங்கையின் மகனான நாகூர் ரூமி விளக்கம் தருகிறார். ஜுனைதா பேகத்தின் பரம்பரையில் இருந்த இலக்கிய-ஆன்மிக வேர்கள்தாம் இந்தப் படிக்காத பெண்ணை எழுதத் தூண்டின என்கிறார்.

   இலக்கிய வேர் பற்றிக் கூறும்போது, ஜுனைதாவின் நன்கு படித்த சகோதரர் ஹுசைன் முனவ்வர் பெய்க் தமிழில் சொற்பொழிவாற்றுவதில் வல்லவராக இருந்தார் என்றும் அவர் பேச்சை அறிஞர் அண்ணாவே போற்றியிருக்கிறார் என்றும் கூறுகிறார். இன்னொரு சகோதரர் முஜின் பெய்க் “பால்யன்” என்ற பத்திரிகையை காரைக்காலில் பல காலம் நடத்தியவர். தவிர, ஜுனைதா பேகம் காதலா கடமையா புத்தகத்தில் உள்ள பேட்டியில் தன்னை வண்ணக்களஞ்சியப் புலவரின் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார். வண்ணக்களஞ்சியப் புலவர் (சையது ஹமீது இப்ராஹீம்) ராமநாதபுரத்திலுள்ள மீசல் என்ற ஊரைச் சேர்ந்தவர். நாகூரில் சில காலம் வாழ்ந்தவர். காப்பியம் இயற்றிய புலவர். ஆன்மிக வேர்களைப் பொறுத்தவரை இறைநேசர் ஷாஹ் ஒலியுல்லாஹ் தெஹ்லவி அவர்களின் பௌத்ரி (பேத்தியின் பேத்தி) என்று இவர் தன்னை அடையாளம் காண்கிறார். இந்த இறைநேசர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்து டில்லியில் அடக்கமாகியிருப்பவர். ஜுனைதா பேகத்தின் சித்தப்பாவின் பெயரும் ஷாஹ் வலியுல்லாஹ் என்றே இருக்கிறது. நாகூர் ரூமி அவர்கள் தரும் தகவல்கள் இவை.

   புத்தகத்தில் உள்ள பேட்டியில் ஜுனைதா பேகம் இலக்கிய வேர்கள் பற்றியும் ஆன்மிக வேர்கள் பற்றியும் அதிகமாகப் பேசுவதில்லை. தன் பாட்டனார் மு. யூ. நவாபு சாகிபு மரைக்காயர் அவர்களைக் குறிப்பிடுகிறார். சகோதரர் ஹுசைன் முனவ்வர் பெய்கையும் குறிப்பிடுகிறார்.  வண்ணக்களஞ்சியப் புலவரின் குடும்பம் எங்களுடையது என்றும் குறிப்பிடுகிறார். பேட்டி 1999இல் முஸ்லிம் முரசு பொன்விழா மலருக்காக எடுக்கப்பட்ட பேட்டி. பேட்டியின் தேதியைப் பார்த்ததும் வருத்தப்பட்டேன். காரணம் 1974-76 நான் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆராய்ச்சி செய்து அவர்களில் பலரை நேரில் சென்று பார்த்தபோது, நான் ஜுனைதா பேகம் பற்றி அறிந்திருக்கவில்லை. அவரிடம் என் உரையாடல் வேறு மாதிரி அமைந்திருக்கும். காரணம் அவர் ஆழ்ந்த படிப்பு உள்ளவர் என்று கதைகளில் தெரிகிறது. மதம் பற்றியும், சாதி பற்றியும் பெண்கள் நிலை பற்றியும் யோசித்திருப்பவர். அதிகம் வெளியே போகாவிட்டாலும் வீட்டிலேயே அடைந்து கிடந்தவரும் இல்லை. மு. வரதராசனாரின் நெஞ்சில் ஒரு முள் புத்தகத்தைப் பேட்டியில் குறிப்பிடுகிறார். கதைகளில் பட்டினத்தடிகள், திருவள்ளுவர் எனப் பலரையும் மேற்கோள் காட்டுகிறார்.

   1905இல் பாரதியாரால் ஆரம்பிக்கப்பட்ட சக்ரவர்த்தினி பத்திரிகை அவர் வீட்டுக்கு வந்ததுண்டா? அதற்கு முன்பே 1891இலேயே ஆரம்பிக்கப்பட்ட பெண்மதி போதினி பற்றி அவருக்குத் தெரியுமா? 1909இலிருந்து பண்டிதை விசாலாட்சி அம்மாள் கொண்டுவந்த  ஹிதகாரிணி, ரேவூ தாயாரம்மா 1912இலிருந்து கொண்டுவந்த பெண் கல்வி பத்திரிகை, 1924இலிருந்து வந்த சிஸ்டர் பாலம்மாளின் சிந்தாமணி இவை பற்றித் தெரியுமா? ஜகன்மோகினியும் 1924இலிருந்து வந்தது. காரைக்குடியிலிருந்து வந்த மாதர் மறுமணம் பத்திரிகை பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அவரும் அவர் சகோதரர் ஹுசைன் பெய்கும் வீட்டில் பல புத்தகங்களையும் படித்தபடியும் எழுதியபடியும் இருந்தார்கள் என்று அவர் கூறும்போது அந்தப் புத்தகங்கள் யாவை? முஸ்லிம் பெண்கள் கல்வி பற்றியும், பெண்கள் கலைகளைப் பயிலலாமா என்பது குறித்தும் தொடர்ந்து கருத்துகளைக் கூறி வந்த ஜரிதா-ஈ-ரோஜ்கார் பத்திரிகை அவர்கள் வீட்டுக்கு வந்ததுண்டா? இப்படிப் பல கேள்விகள் அவரைக் கேட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. 1914இல் ராணி மேரி கல்லூரி, பெண்களுக்கான முதல் கல்லூரியாகத் தொடங்கப்பட்ட போது ஜுனைதா பேகம் பிறந்திருக்கவில்லை. அப்போது ஜரிதா-ஈ-ரோஜ்கார் எடுத்த நிலைப்பாட்டுக்கும் மற்ற முஸ்லிம் அல்லாத பத்திரிகைகள் எடுத்த நிலைப்பாட்டுக்கும் வித்தியாசம் ஏதும் இருக்கவில்லை. பெண்களுக்கு விஞ்ஞானம், ஆன்மிகம், தர்க்கவாதம், கணிதம், விலங்கியல், கவிதை இவை தேவை இல்லை; அவர்கள் ஒழுக்கமுறைக் கல்வியையும், குடும்பக் கல்வியும் கற்றால் போதும்; கணவன்மார்களுக்கும், சகோதரர்களுக்கும் உதவியாக இருக்க உதவும் சரித்திரமும் அவர்கள் கற்கலாம், மதம் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை 1914இலிருந்தே ஜரிதா-ஈ-ரோஜ்கார்  எடுத்துவந்தது. 1926இல் சென்னையின் ஹொபார்ட் பள்ளியில் பெண்களுக்கு இசை கற்பிப்பது குறித்த பேச்சு எழுந்தபோது பெண்களுக்கு இசை போன்ற கலைகள் அவசியம் இல்லை என்ற வாதத்தையே மற்ற பத்திரிகைகள் போல  ஜரிதா-ஈ-ரோஜ்கார் பத்திரிகையும் எடுத்தது. ஜுனைதா பேகத்தை மூன்று வகுப்புகளுக்கு மேல் படிக்க வைக்காததற்கு ஜரிதா-ஈ-ரோஜ்கார் போன்ற பத்திரிகைகளின் தொடர்ந்த இத்தகைய கருத்துகள் காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடம்  இருக்கிறது. பார்க்கப்போனால் தன் பேட்டியில் ஜுனைதா பேகமே கூறுகிறார் அவர் முதல் நவீனத்துக்கு மதிப்புரை தர தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவுத்ஷா சாகிபிடம் கேட்டபோது, “இது ஒரு பெரிய திறமையா? இதற்கு மதிப்புரை தேவையா?” என்று அவர் ஏளனமாகப் பேசியதாக. (பிறகு உ.வே.சாமிநாதைய்யர் மதிப்புரை எழுதித் தருகிறார்) இருந்தாலும் அவர் ஏன் மூன்று வகுப்புகளுக்கு மேல் படிக்கவில்லை என்ற கேள்வி வரும்போது, இத்தனை சரித்திர காரணங்களும் ஒதுக்கப்பட்டு, ஜுனைதா பேகத்தின் தந்தையால் தன் முதல் மனைவியின் விருப்பத்தை மீற முடியவில்லை என்ற காரணமே முன்வைக்கப்படுகிறது பெண்களே பெண்களுக்குத் தடையாக இருந்தனர் என்ற வாதத்தை வலியுறுத்துவதுபோல.

   ஜுனைதா பேகத்தின் குடும்பத்தில் அவருக்கு முன்பும் பின்பும் பல அறிஞர்களும், தமிழ் மொழி வித்தகர்களும் இருந்திருக்கின்றனர். இருக்கிறார்கள். ”என் இளம் வயதிலிருந்தே சாதிசமய வேறுபாடுகள் என் உள்ளத்தில் இடம் பெற்றதில்லை. எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற மனப்பான்மையே என் உள்ளத்தின் ஆணிவேர்” என்று ஒரு முகவுரையில் உறுதியாகக் கூறும்   ஜுனைதா பேகத்தின் கட்டுரைகளில் அவர் இஸ்லாமும் பெண்களும் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறார். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சொத்துரிமை, விவாக ரத்து உரிமைகளைப் பற்றிக் கூறுகிறார். பெண்கள் சினிமா பார்க்கலாமா என்ற கேள்வி எழும்போது, அராபிய மன்னர் இப்னுசௌத் கூறியதை அவர் எடுத்துக்காட்டுகிறார். ”குர் ஆனும் ஹதீதுகளும் மக்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பவை அல்ல. அவைகள் நவீன இயந்திர சாதனங்கள்  எதனையும் தடுப்பவையுமல்ல” என்று அவர் கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார். பெண் உரிமை, பெண் கல்வி குறித்துப் பேசும்போது மிகத் தெளிவாகத் தன் கருத்துகளை முன்வைக்கிறார். இஸ்லாம் எப்போதுமே பெண் கல்வியை ஆதரித்துள்ளது என்று கூறி அரபு நாட்டிலே இருந்த பல பெண் அறிஞர்கள் பற்றி விளக்குகிறார். அக்கால உலமாக்களுள் நடந்த விவாதத்தில் பங்கு கொண்டு பர்தாவின் பின் இருந்து வாதிட்டு வெற்றி பெற்ற ஹரூன் ஆல் ரஷீத் பாதுஷாவின் மனைவி ஜுபைதா காத்தூன் பற்றிக் கூறுகிறார். அறச்செல்வி ராபியா பற்றிக் கூறுகிறார். இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப்பட்டிருப்பினும், முஸ்லிம் பெண்கள் கல்வியில் மற்ற பெண்களைப்போல் சிறந்து விளங்காததற்குக் காரணம் பல சுயநலவாதிகள் குர்ஆனின் பொருள் தெரியாது குர்ஆன் ஓதுவது மட்டுமே அறிவையளிக்கும் என்று பல ஆண்டுகளாகக் கூறி இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி வருவது மட்டுமல்லாமல் அவர்களை விலங்குகளுக்குச் சமமாய் ஆக்கிவைத்திருப்பதாகக் கூறுகிறார். 15 வயதிலேயே திருமண வாழ்வில் தள்ளப்பட்டு, ஆண்களின் மிருக உணர்ச்சிக்கு அடிமையாக்கப்பட்டு, பிள்ளை பெறுவதிலும் சமையலறைலும் பெண்கள் வாழ்வதைக் கூறுகிறார். பாரதி, வள்ளுவர், சரோஜினி தேவி என்று பலர் கூறியிருப்பதைத் தகுந்த இடங்களில் கையாளுகிறார். படித்த பெண் ஒழுக்கம் தவறிவிடுவாள் என்று கூறுபவர்களைச் சாடுகிறார். இது “பொருந்தாக் கூற்று” என்கிறார். மனவடக்கமும் புலனடக்கமும் ஆண்களைவிடப் பெண்களுக்கு உண்டு என்கிறார். பெண் கல்வி கற்பதால் கற்பு நெறியிலிருந்து வழுவிவிடுவாள் என்று கூறுபவர்கள் பொறாமை பிடித்தவர்கள் என்கிறார். இப்படிப் பெண்களுக்குத் தீமை விளைவிக்கும் கல்வி ஆண்களுக்கும் தீமை விளைவிக்காதா என்ன என்று கேள்வி கேட்கிறார். ”இவ்வாறு பெண்மையியல்புக்கில்லாத பழியை அவ்வினத்தார் மீதேற்றி இழித்துரைக்கத் துணிந்த இவர்தம் புல்லறிவுக்கு இது எட்டாததேனோ?” என்ற கேள்வியுடன் கட்டுரையை முடிக்கிறார். எழுதிய ஆண்டு 1937. இந்தப் புல்லறிவு கொண்டவர்களைத்தான் ஒரு முன்னுரையில் நச்சுடை நாகங்கள் என்று குறிப்பிடுகிறார்.

   தான் எழுதிய காலத்தில் அதிகமாகப் பெண்கள் எழுதவில்லை என்று ஜுனைதா பேகம் பேட்டியில் கூறுகிறார். இருந்தாலும் தன் காலத்துப் பெண்களையும் அவர் கட்டாயம் படித்திருப்பார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே எழுதிவந்த அசலாம்பிகை அம்மையார், பண்டிதை விசாலாட்சி அம்மாள், கஜாம்பிகை அம்மாள், எஸ். ராஜாம்பாள் இவர்களைப்பற்றி அவருக்குத் தெரியுமா என்று தெரிந்து கொள்ளத் தோன்றுகிறது.  1906இலேயே கௌரி என்ற நாவலை பண்டிதை விசாலாட்சி அம்மாள் எழுதியிருந்தார், அன்பம்மாள் பால் அம்மாள் அழகம்மாள் என்ற நாவலை 1907இல் எழுதுகிறார். இதற்குப் பல ஆண்டுகள் முன்பே 1893இல் கிருபை சத்தியநாதன் அம்மாள் ஆங்கிலத்தில் எழுதிய கமலா நாவல் வெளிவந்து 1896இல் அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் 1930களில் மேடைகளில் பேசவும் பத்திரிகைகளில் எழுதவும் ஆரம்பித்துவிட்டனர். குமுதினி போன்ற எழுத்தாளர்களும் அப்போது எழுதிக்கொண்டிருந்தனர். பல நாவல்களைத் தொடர்ந்து ஜகன்மோகினி பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டபடி இருந்த வை.மு.கோதைநாயகி அம்மாள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். காந்தி குறித்தும், சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் பங்கு குறித்தும் ஜகன்மோகினியில்  தொடர்ந்து எழுதியவர். ஜுனைதா பேகத்தின் பாட்டனார் சுதந்திரப் போராட்ட வீரர். சிறை சென்றவர். இவரை எழுத ஊக்குவித்தவர். தென் தஞ்சை ஜில்லாவில் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர். அவர் மூலம் ஜுனைதா கண்ட உலகம், அவர் புத்தகங்கள் மூலம் இவருக்கு அறிமுகப்படுத்திய இலக்கிய உலகம், ஆங்கிலம் அறிந்த ஜுனைதாவின் தந்தையார் இவருக்குக் காட்டிய உலகம் இவை எப்படி இருந்தன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் எழுகிறது ஜுனைதாவைப் படிக்கும்போது. ஏனென்றால் ஜுனைதாவின் எழுத்தில் தெளிந்த சிந்தனையும், ஆழ்ந்த அறிவும், பெண்கள் நிலை குறித்த நுன்னுணர்வும் காண முடிகிறது. அவர் படித்த புத்தகங்கள் குறித்தும், அவர் வீட்டில் எல்லோருக்குமிடையே எத்தகைய சர்ச்சைகள், பகிர்தல்கள் நேர்ந்தன என்பதை அறிவதற்கும் ஆவல் ஏற்படும் காரணம் இசை இன்பம்  பற்றிய ஒரு கட்டுரையில் ஆயர்பாடியில் குழலூதும் கண்ணனைப் பற்றிக் கூறுகிறார். ஆழ்வார்ளையும், மக்கள் பாடல்களையும் குறிப்பிட்டு விட்டுப் பிறகு கீட்ஸ், ஷேக்ஸ்பியர் இவர்கள் இசை பற்றிய கருத்துகளையும் கூறுகிறார். ஆங்கில எழுத்தாளர்களை அவர் படித்திருந்தாரா என்ற கேள்வி மனத்தில் உதிக்கிறது.

   இந்தக் கேள்வி மிகவும் ஆச்சரியம் கலந்த ஒன்றாக காதலா கடமையா படிக்கும்போது எழுகிறது. காரணம் காதலா கடமையா கதைக் கரு மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் 1894இல் சாகசங்கள் நிறைந்த கதையாக The Prisoner of Zenda என்ற தலைப்பில் ஆந்தனி ஹோப் எழுதிய கதையில் இருப்பவை.  1937இல் இது ஹாலிவுட் படமாக எடுக்கப்பட்டது. The Prisoner of Zendaவின் கதை இவ்வாறு போகிறது:

ரூரிடானியாவின் மன்னன் ருடால்ஃபின் முடிசூட்டு விழாவிற்கு முன் அவன் சகோதரன் இளவரசன் மைக்கேல் அவனுக்கு மயக்க மருந்து தந்து விடுகிறான். அரசனின் பாதுகாப்பாளர்களான கர்னல் ஸாப்ட், ஃப்ரிட்ஸ் வான் டாரென்ஹைம் இருவரும்,  இங்கிலாந்திலிருந்து வந்திருக்கும் ருடால்ஃபுக்கு தூரத்து உறவு முறையில் தம்பியான ருடால்ஃப் ரேஸன்டைலை அரசன் போல மாறுவேடம் தரித்து நடிக்கச் சொல்கின்றனர். மயக்க நிலையில் அரசன் ருடால்ஃப் கடத்தப்பட்டு ஸெண்டா எனும் ஊரில் உள்ள கோட்டையில் அடைக்கப்படுகிறான். மைக்கேலின் காதலி மற்றும் கௌன்ட் ரூபர்ட் என்ற வில்லனின் சதிகள், எதிர்ச் சதிகள் என்று பல சிக்கல்கள் நேர்கின்றன. ரேஸன்டைல் அரசனை மணக்கப் போகிற இளவரசி ஃப்ளாவியாவும் ரேஸன்டைலும் காதல்வயப்படுகின்றனர். ரேஸன்டைல் அவளிடம் உண்மையைக் கூற முடியாது தவிக்கிறான். பிறகு அரசனைக் காப்பாற்றி நாட்டை அவன் வசம் ஒப்படைக்கின்றான். கடமைக்காகக் காதலர்கள் பிரிகின்றனர்.

காதலா கடமையா நாவலின் கதையும் இதுதான். 1958இல் நாடோடி மன்னன் எடுப்பதற்கு முன் The Prisoner of Zenda 1913, 1915, 1922, 1937 என்று பல முறைகள் வேறு வேறு நடிகர்களுடன்  ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு பிரபலமான ஆங்கிலப் படம்தான்  தமிழ்நாட்டுக்கேற்ப கடமை காதல் இரண்டும் அமைவதுபோல்    மாற்றப்பட்டு எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, பானுமதி நடித்த நாடோடி மன்னன் திரைப்படமாகிறது.

   ஜுனைதா பேகம் மூலக் கதையிலிருந்து வழுவாமலேயே வெகு சிறப்பாக அதை நம் நாட்டுக் கதைபோல் மாற்றி எழுதுகிறார். படித்து முடித்ததும் என் மனத்தில் நாடகத்தன்மை வாய்ந்த ஒரு கற்பனைக் காட்சி உருவாகி விரிந்தது:

   நாகூரில் ஒரு வீட்டில் இரவுச் சாப்பாடு முடிந்துவிட்டது. ஜுனைதாவும், ஹுசைன் முனவ்வரும் வாப்பா ஷரீப் பெய்க் அவர்கள் அருகே வந்து அமரக் காத்திருந்தனர். மங்கலாக அரிக்கன் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

   அந்த அமைதியான இரவில்தான் அவர்களுக்குக் கதைகள் கூறுவார் வாப்பா. ஆங்கிலம் அறிந்தவர். எப்போது பார்த்தாலும் கதை கேட்டுத் தொந்தரவு செய்யும் அவர்களுக்காகப் பல ஆங்கிலக் கதைகளைப் படித்து, சுவாரசியமாகக் கதை சொல்லுவார். சில சமயம் வீட்டுக் கதைகளையும் கூறுவார். அவர்கள் பாட்டியார் செல்லம் எனும் அலி முஹம்மது நாச்சியார் குதிகால் உயர்ந்த செருப்பு அணிந்ததைக் கூறுவார். ஜுனைதாவுக்கு ஆச்சரியம் மாளாது. தானும் அப்படிச் செருப்பு அணிந்து கல்லூரிக்குப் போவதுபோல் கற்பனை செய்துகொள்வாள். சென்னையில் பெண்களுக்காக 1914இல் ஒரு கல்லூரி திறந்திருந்தது அவளுக்குத் தெரியும். ராணி மேரி கல்லூரி.

   அன்றும் வாப்பா அமைதியாக வந்து உட்கார்ந்தார். குழந்தைகள் இருவரும் விரித்திருந்த படுக்கையில் குப்புறப் படுத்து, தலைகாணியின் மேல் வைத்த இரு கைகளிலும் முகம் தாங்கிக் காத்திருந்தனர். அன்று வாப்பா சொன்ன கதை  ஸெண்டா என்ற ஊரிலிருந்த ஒரு கோட்டையில் அடைக்கப்பட்டிருந்த ஓர் அரசனைப் பற்றி. ஒரே தோற்றத்திலிருந்த இரு வேறு நபர்கள் பற்றிய கதை. பல சதிகளும் வீர சாகசங்களும் காதலும் நிறைந்த கதை. அந்தக் கதையில் காதலா கடமையா என்ற கேள்வி வந்தபோது கடமைதான் வென்றது.    காதலை விட கடமை பெரிதா என்று வாப்பாவிடம் கேட்டபோது நாட்டுக்கான கடமை எல்லாவற்றையும் விட பெரிது என்றார் வாப்பா. அதை நினைத்தபடி உறங்கிப்போனாள் ஜுனைதா. வாப்பா அவள் தலையைத் தடவித் தந்தபடி அமர்ந்திருந்தார்.

[தளம், அக்டோபர்-டிசம்பர் 2014 இல் பிரசுரமாகியது.]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.