ஓ ரசிக சீமானே…

by Sankar Sivagnanam

ரசிக மனதோடு இருத்தல் ஒரு வரம். அது இல்லாமல் வேலை வேலை என்று இருந்து, தான் கடும் உழைப்பாளி, எந்த பொழுதுபோக்கும் இல்லாதவன் என்று இருப்பவர்களிடம் ஒரு சிடுமூஞ்சித்தனம் வந்து விடுவதை காணலாம். தன்னை வதைத்துக்கொண்டு, சுற்றி இருப்பவர்களையும் வார்த்தையால் நோகடிக்கும் அவர்களிடம், பாராட்டு வாங்குவது பிரம்ம பிரயத்தனம். அவர்களுக்காக பரிதாபப் படலாம். ஆனால் பொதுவாக திருநெல்வேலியின் ரசிகமனம் தனிச்சிறப்பு.

எதையும் ரசனைபாவத்தோடு அணுகிவிட்டால் சுகம் சுகமே… திருநவேலி மக்களின் பெரும்பான்மை மனம் அத்தகைய ரசனை கொண்டதே.பெரிய வீட்டில் இருந்தால் என்ன, ஒரேஒரு அறை உள்ள சிறுவீட்டில் இருந்தால் என்ன, தாமிரபரணியும், நெல்லையப்பர் கோவிலும், சினிமாக்களும் தரும் சுகமும் நிம்மதியும் பொதுவானதே.

“மண்குடிசை வாசல் என்றால்

தென்றல் வர வெறுத்திடுமா..

மாலை நிலா ஏழை என்றால்

வெளிச்சம் தர மறுத்திடுமா..”

என வாலி பாடியதை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அக்காட்சிகள். (என்னது வாலி பாடுனதா?எம்.ஜி.ஆர் பாட்டுவே என சண்டை பிடிப்பவர்கள் இப்பவும் உண்டு.)

தினமும் காலையில் அஞ்சு மணிக்கே எழுந்து பொடி நடையாக நடந்து, ஆத்துக்குப் போய், குளித்து, குறுக்குத்துறை முருகனிடம் மனதார வேண்டிக்கொண்டு, (“எய்யா, இப்ப இருக்க மாதியே எப்பவும் இருக்கணும்யா,நோய் நொடி இல்லாம,யாருக்கும் தும்பம் கொடுக்காம போய் சேந்துரனும்,அப்படியே பேரனுக்கு ஒரு வேலை கிடைக்கணும்யா,அப்பதான் பேத்தியை கட்டிகொடுக்க முடியும், நல்ல எடமா சொல்லும்.. வேறென்னய்யா கேட்டுறப்போறேன்… காக்க காக்க கனகவேல் காக்க….”)நெற்றி நிறைய விபூதி பூசி,துண்டை இடுப்பில் கட்டி,வேட்டிய இருகைகளிலும் தூக்கி பிடித்தபடி வேட்டியின் நிழலில் நடந்துவரும் தாத்தாக்கள் உண்டு.லட்சுமி தியேட்டர் அருகிலே வரும் போது வேட்டி காய்ந்துவிடும்.பின் வேட்டி இடுப்புக்கும்,துண்டு தோளுக்கும் மாறிவிடும்.

இருக்க அழுக்கு துணியலாம் கொண்டு போய் துவைத்து, அலசி (மூதி,என்ன அழுக்காக்கிருக்கான்) அதை அங்க பாறைல காய வச்சுட்டு, நல்லா உக்காந்தமேனிக்கு தலையை மட்டும் தண்ணிக்கு மேல வச்சுக்கிட்டு,அங்கேயும் பாடு பேசிட்டே(ஏம்ட்டி,உங்க அக்கா மவளுக்கு என்ன இன்னும் முடிய மாட்டேங்கு,…. எங்க மச்சான் ஊரு உலகத்துல இல்லாத மாப்பிளையால பாக்காரு) குளிச்சி,ஈர சேலைய ஒரு தினுசா கட்டி,பாதி காஞ்ச துணிய எடுத்து சட்டில வச்சு,அத இடுப்புல வச்சுக்கிட்டு,நடந்து வர பெண்களை வெள்ளி,ஞாயிறு காலைகளில் பார்க்கலாம்.

இளவட்டங்கள் துண்டை ஹாண்டில்பாரில் கட்டிக்கிட்டு குளிர எண்ணெய் தேய்ச்சுகிட்டு ஒரே சைக்கிளில் மூன்று பேர் கூட செல்வதுண்டு. படிப்படியாக ஆத்துக்கு செல்வது குறைந்தது. யாராவது இறந்தால் கருப்பந்துறைக்கு(சுடுகாடு) போய் பின் ஆத்தில் குளித்து வருவது என்பதும் போய் இப்ப நேரே வீட்டுக்கு வந்து வெந்நீர் குளியல் (மாப்ள, உடம்புக்கு ஒத்துக்கிடமாட்டேங்குலா) என்றாகி போனது.

இப்போது புஷ்கரணிக்கு பிறகு மீண்டும் தாமிரபரணி விஸ்வரூபம் எடுத்திருக்கா.ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் போய் கும்பிட்டு குளித்தார்கள்.(சென்னைலிருந்து குளிக்கவா வந்திருக்க மாப்ள? ஆமா,நீங்க குளிக்கலியா…எங்க மாப்ள,ஒருதடவ போனேன்,எங்கம்மை(தாமிரபரணி)ஏசிட்டா,நீ ஏம்ல வாரே,பாவம் செஞ்சவம்லா வரணும்னு).

குறுக்குத்துறை முருகன் கோவில் எதிரே மணலில் நடக்கும் சூரசம்ஹாரம்  பிரபலமானது.மாலை நாலரைக்கு ஆரம்பித்துவிடும் திருச்செந்தூர் மாதிரி. சீக்கிரம் விரதம் முடித்து ஆறு மணிக்கே சாப்பிட்டு விடலாம்(நீ லாம் விரதம் இருக்கலைனு யார் அழுதா).

ஆற்றில் குளிக்கபோக முடியாதவர்கள் வாய்க்கால், குளம், கிணறு, கலுங்கு எனச் செல்வார்கள்.

கலுங்கு என்பது வாய்க்காலில் சிறு அணை போல கட்டப்பட்டிருக்கும். தண்ணீர் அதிகம் வரும் போது அந்த அணையின் மேல் ஓடும் தண்ணீரில் நடப்பது தனி சுகம்.

கீழே சிறு மதகு இருக்கும் அதுல குளிப்பது சிறு அருவியில் குளித்த சுகத்தைத்தரும்.

சிறுவர்களாய் இருக்கும்போது போட்டிருக்கும் சட்டையை கழட்டி,டவுசரோடு குளித்து,பின் அதை காயவைத்து போட்டு வீட்டுக்கு வந்தவுடன் வரும் முதல்கேள்வி,

“எங்கல இவ்வளவு நேரம் போயிருந்தே’

“கலுங்குக்கு ஒன்னும் போலியே”,

“அப்ப கலுங்குக்குதான் போயிருக்க,ஓடாத,கைல மாட்டுன அவ்ளோதான்” – அதுக்குள்ள சிட்டாய் பறந்திருப்பான்.

வாய்க்காலில் எருமைமாடுகள் மீது ஏறி கொள்வது,தாமரை பூவை பறிப்பது,தண்ணீர் பாம்பு வை பிடித்து தலைக்கு மேல் சுத்திவிடுவது என விதவிதமான சேட்டைகள் உண்டு

வாரியாடே, மயினி வாரியளா,யக்கா வாரியா,என்னவே வாரிரா-

இது எதுக்கா இருக்கும்ங்கிய ?ஆத்துக்கு / நெல்லையப்பர் கோயிலுக்கு/சினிமாக்கு போறேன் நீங்களும் வாங்க என்பதே,இந்த மூன்றுக்கும் தனியாப்போவ மனசே வராது எங்க மக்களுக்கு.

நெல்லையப்பர் கோவிலுக்கு தினசரி போகும் பெரியவர்கள் உண்டு.அங்கே அவர்களுக்கு என்று சிநேகித கூட்டமும் அமைந்து விடும். (என்ன ஒய், நேத்து உம்ம காணோம்? – பெரியவா வீட்டுக்கு போயிருந்தேன், இருந்து போங்கன்னு சொன்னா, நமக்கு நெல்லையப்பன பாக்காம இருக்க முடியாதே,அதான் வந்துட்டேன்)

சிறுபிள்ளையாய் இருக்கையில் நெல்லையப்பர் கோவிலுக்கு போவதே ஒரு சுற்றுலா மாதிரி தான். நிதானமாய் ஒருமுறை பிரகாரம் சுத்தினால் ரெண்டு மணி நேரம் ஆகும். நடராஜர் சன்னதியில்  எது வேண்டுமோ அதை நினைத்துக்கொண்டு கைகளை தனித்தனியாய் வைத்து கண் மூடிபிரார்த்திக்க இரண்டு கைகளும் சேர்ந்தால் நினைத்தது நடக்கும் என்று சொல்வார்கள்.நமக்கு என்னிக்கு சேர்ந்துச்சு, மன்னிச்சுக்க நடராசானு சொல்லிக்கிட்டு சேர்த்துடவேண்டியதுதான். கள்ளப்பயலேன்னு சிரிச்சுக்கிடுவார் சாமி.

சிறுவயதில் காந்திமதி அம்மன் பிரகாரம் போகும்வழி இருட்டாக இருக்கும்.இரு,சேந்து போலாம்னு ஆட்கள் வர காத்திருப்பதுண்டு.இப்போது நல்ல வெளிச்சமாய் ஜேஜே என்று கூட்டமாய் இருக்கு (மாப்ளே,அவ்ளோ பேருக்கும் பேராசை,கோயிலை சுத்தினா ஏதாவது கெடைச்சுராதான்னு).

ஆனி தேரோட்டம் பள்ளி ஆரம்பித்த ஒருமாதத்தில் வந்துவிடும்.தேரோட்டம் ஆரம்பித்து நெல்லையப்பர் திரும்ப கோயிலுக்கு போகும் வரை தினமும் அரைப்பள்ளிக்கூடம் (பதறாதீங்க. Half a day leave- இப்ப புரிஞ்சுருமே.) இருக்க பயலுவ அத்தனை பேர் வேண்டுதலும் ஒன்னுதான். சீக்கிரம் தேர் நிலைக்குப் போவக்கூடாது.

வாகையடிமுக்கு திருப்பம்,சந்திவிநாயகர் கோயில் திருப்பம்,டவுன் காவல்நிலையம் எதிர்புறம், லாலா சத்திரமுக்கு,ஆரெம்கேவி எதிரே இதல்லாம்தான் டேஞ்சர் ஸோன்.தேர் இந்த இடங்களில் ஒரு வாரம் கூட நிக்கும்.எங்கள் தெருவில் இருக்கும் ராமையா முதலியார் தான் தேரின் பின்புறம் இருந்து மைக்கில் உற்சாக மூட்டுவார்-

“ஆ… ஆ…எல்லோரும் தேர் வடத்தை ஒன்றாகசேர்ந்து இழுங்கள், ஆங்,அப்படித்தான்,இப்போது கட்டை போட போகிறார்கள்,இதோ வைத்தாகி விட்டது.இழுங்கள் இழுங்கள்,”

டம டம என்று முரசு முழங்க தேர் ஆடி அசைந்துவரும் அழகே அழகு. புதுப்பொண்ணு மணவறைக்கு மெல்ல அடிமேல்அடி எடுத்து வைக்கிற மாதிரி(அந்த காலத்து மணமகள்னு வச்சுக்கோங்க.) இப்பல்லாம் பாதி நாளில் தேரோட்டத்தை முடிச்சுருதாங்கலாம்.நெல்லையப்பருக்கே அதுல மனக்குறை இருக்கக்கூடும்.

தேரோட்டம் கொடி ஏற ஆரம்பித்து விட்டாலே, ஊர் முழுவதும்  உற்சாகம் களை கட்டும்.திடீரென்று ஊருக்கே கலர் அடித்தாற்போல மாறி விடும். பலூன்,காத்தாடி,விசில் , கூலிங் க்ளாஸ்(அத போட்டுக்கிட்டு சரியாய் தெரியலையா, முகத்தை தூக்கி பாக்க வேண்டியது) பொம்மைவாட்ச் என விற்கும் சிறு வியாபாரிகள் பெருகுவார்கள்.

“எம்மா, இப்ப மணி கேளேன்”

“மணி என்னல”

“ரெண்டு”- கொஞ்ச நேரம் கழிச்சு ஓடாத முள்ளை மறுபடியும் திருக்கி வச்சுக்கிட்டு,

“எம்மா, இப்ப மணி கேளு”

“போ மூதி,எனக்கு வேலை கெடக்கு”

ஒருமுறை தேரோட்டத்தில் எங்கப்பாவின் நண்பர் எல்.ஐ.சி சுப்ரமணியம் சார் குடும்பத்தோடு எதிரே வந்தார். அவரது நான்கு வயது பையன் அழுது கொண்டிருந்தான்.

“ஏன் சார் அழுவுதான்,கேக்கத வாங்கி கொடுத்துற வேண்டியது தான”- அப்பா.

“அட போங்க சார்,அவன் நெல்லையப்பர் தேர் வேணும்னுலா அழுவுதான்” என்றார்

ஒவ்வொரு பிராயத்திலும் ஆறும்,கோவிலும்,சினிமாவும் கொடுக்கும் அனுபவம் வித்தியாசனமானது.

எல்லா சடங்கு வீடுகளிலும் “இதோ என் எதிரில் வாதாடி கொண்டிருக்கிறாரே இதே டைகர் தயாநிதி தான் அன்று என் வாழ்க்கையை சீரழித்தது..அன்று இந்த சகுந்தலா,இன்று இந்த அபலைப்பெண் ராதா” என்று கண்ணீரோடு பேசி கொண்டிருப்பார் நடிகை சுஜாதா, நண்பன் ஒலிபெருக்கியில் (படம்-விதி).

அதுவே கோயில் கொடையாக இருந்தால் “உன் தந்தை தன் பக்தர்களை எப்படி எல்லாம் சோதித்திருக்கிறார் தெரியுமா,ஒருமுறை பாண்டியநாட்டில் சோமநாத புலவர் என்று ஒருவர் இருந்தார்-விறகு வாங்கலையோ விறகு, தாயே… “என்று திருவிளையாடல் வசனம் ஓடும்.

சிலபேர் சினிமா போவ புள்ளைல லீவு போட சொல்லிருவாங்க, நாளைக்கு போய் படிச்சிக்கலாம்,ஒருநாள்ல இவரு படிச்சி கலெக்டர் ஆயிர போராருக்கும்.நம்மாளு அப்பதான் அடம் புடிப்பான்,போம்மா,நான் போனும்,டீச்சர் திட்டுவாங்கனு.

தியேட்டருக்கு பெரும்பாலும் நடை தான், ராயல் என்றால் இருபது நிமிடம்,பூர்ணகலா என்றால் முக்கால் மணிநேரம் நடை.இதை அனுசரித்து தான் வீட்டில் இருந்து கிளம்புவார்கள்.

தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்.வேல்ச்சாமி அண்ணனுக்கு  செகண்ட் ஷோ வில் தான் விருப்பம் அதிகம்.”

“எல்லா கதவையும் திறந்து போட்டுருவான்…நல்ல கூலா படம் பாக்கலாம்டே.”

ஆனா அவர் எந்த படத்தையும் பார்த்தது இல்ல.தியேட்டர் உள்ளபோனதுலேருந்து லிரில் சோப்,விக்கோ வஜ்ரதந்தி, சந்திரிகா சோப்பின் புதுமை (ஜெயப்பிரதா)என விளம்பரங்கள்,நியூஸ் ரீல் வரை நல்ல தெளிவா பாப்பாப்ல….படம் போட்டதும் குறட்டை தான்…அது எப்படி தான் தூக்கம் வருமோ.படம் முடிஞ்சதும் ஞாபகமா எழுப்பி கூட்டிட்டு வரணும்.இந்த அழகுல படம் பாக்க கூப்பிடாம போனா ஏசுவாரு.

இன்னொருத்தர் கரெக்டா பாட்டுக்கு மட்டும் முழிப்பார்..

மயிலு(அபூர்வ சகோதரர்கள் அப்புவை விட சற்று உயரமாக இருப்பார்) பதினேழு தடவை கரகாட்டக்காரன் படம் பார்த்தாங்க.சின்ன தம்பி(பத்து தடவை), வருஷம்16(ஏழு தடவை)..காலையில் அவசரமா எல்லா வேலையும் முடிக்க வேண்டியது.பதினோரு மணிக்கு நடக்க ஆரம்பிச்சா ,இருபது நிமிசத்துல அருணகிரி தியேட்டர்….படம் பாத்திட்டு சுவடே இல்லாம மூணு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டியது.

பெரிய வசதி எல்லாம் இல்ல, தறிநெய்து தான் பொழைப்பு. ஆனாலும் திரைப்படங்கள் அவர்கள் வாழ்வை சுமையில்லாமல் ஓட்ட உதவின.

படம் பார்த்தபின் அன்று இரவு அவர்கள் காம்பவுண்டு முத்தத்தில்(வாசலில்) எல்லா பெண்களும் அவரவர் வீட்டு சாப்பாடு (பழைய சோறு ,சுண்டைக்கறி, ஊறுகாய்,வத்தல்) கொண்டு வந்து  பாடு (நடந்தத) பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். அங்கு சினிமா பார்த்து விட்டு வந்த மயிலின் கமெண்டுக்கு முதல் மரியாதைதான். பிடிக்காத ஹீரோயின் என்றால் இவர்களுக்கு பிடிக்காத பெண்ணின் நடை,உடை பாவனைகளோடு சேர்ந்து கிண்டலடித்து சிரிப்பார்கள்.

“ஏத்தா ….அவ என்னமா மினுக்குதா…வடக்கு விட்டு கொமரி(குமரி)மாதி” 

பின் அவர்களுக்குள் கிண்டல் ஆரம்பிக்கும்.

“என்னட்டி,அண்ணன் கிந்தி கிந்தி போறாரு”

“கல்லுல இடிச்சிட்டாராம்”-அவரின் மனைவி சொல்லுவார்.

“அக்கா, பொய் சொல்லுதாக்கா, இவா தீஞ்சு போன தோசையை தட்டுல போட்டுருப்பா, எங்கம்மா தோசை எப்படி மணக்கும் தெரியுமான்னு அவரு வாய் தவறி சொல்லிருப்பாரு,காலை உடைச்சு உட்டுருப்பா”-எல்லோரும் சிரிப்பார்கள்.

ஆதிபராசக்தி,ஆடிவெள்ளி,துர்கா போன்ற பல திரைப்படங்கள் ஓடியது இத்தகைய பெண்களை நம்பி தான்.

ஆடி வெள்ளி பட பாடல்கள்-

வண்ண விழியழகி

வாசக்குழலழகி

மதுரை மீனாட்சிதான்…,

வெள்ளிகிழமை ராமசாமி

வராண்டோய்… (யானைக்கு தாங்க இந்த பாட்டு)

சொன்ன பேச்சகேட்கணும்

ஆணை மாமா.. (எம்.எஸ் ராஜேஸ்வரி சின்னக் குழந்தை குரலில் கலக்கிருப்பாங்க ) இதல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்.

எங்கூர்ல ஒருத்தர் சூரசம்ஹாரம் படத்தை முருகன் படம்னு நினைச்சு போய்ட்டு வந்துட்டு கமலை அந்த ஏச்சு ஏசினார்,ரஜினி ரசிகர்கள்ட்ட கூட அந்த அளவு ஏச்சு கேட்டதில்லை அப்ப.

“அப்புறம் பாதில எந்துச்சு வந்துட்டியலோ”- சக்தி.

“கொடுத்த காசுக்கு எதுக்கு பாதில வரேன்னுங்கேன்”-

அவர் போனவுட்டு சக்தி சொன்னான்.

“சும்மா நடிக்கார்ல.மொத பெஞ்சுல உக்காந்து நிரோஷாவ நல்ல பாத்துட்டு வந்துட்டு…. புடிக்கலானா பாதில எந்துச்சு வர வேண்டியது தான!”

இன்னொரு நாள் சக்தி திடீரென வந்தான்

“ஏல,அவசரமா லவ் பண்னும்ல”

“எதுக்குல”

கடலோர கவிதைகள் பாட்ட கேட்டியா, மொட்டை(இளையராஜாவை தான்-இதுலாம் உரிமையில் செல்லமாக திட்டுவது )பின்னிட்டார்டே, அதுல ஒரு பாட்டு வருது,

போகுதே போகுதே

என் பைங்கிளி வானிலே..,

அத லவ் பெயிலியர் ஆகி கேக்கணும். நாம லவ் பண்ணினா எப்படியும் பெயிலியர் ஆவும்,(என்னைய ஏம்ல சேக்க-ம்ம்க்கும்  இவருக்கு மட்டும் சக்ஸஸ் ஆயிரப்போவுதாக்கும் போல..என்பான் கருநாக்குப் பய.)அதுக்கப்புறம் இத கேக்கணும்டே,இது மாதி இதயம் போகுதே ,ராசாத்தி உன்ன, இப்படி ஒரு பத்து  பாட்ட ரிகார்ட பண்ணி கேக்கணும்,என்ன சொல்லுத என்பான்.

முதன்முதலில் தெருவில் இரு வீடுகளில் டிவி வந்தது ..ஒட்டுமொத்த தெருவும் அந்த இரு  வீடுகளுக்குள் தன்னை அடைத்து கொண்டது.இது போதாதென்று மற்ற தெருக்களில் இருந்தும் வருவார்கள் ..கதவை லேசா திறந்து யார் என பார்த்து விட வேண்டும் …கொஞ்சம் லேட்டாக வருபவர்கள் பொறவாசல்(பின் வாசல்)வழியாக வருவார்கள்…

வெள்ளி ஒளியும் ஒளியும், ஞாயிறு திரைப்படம்,மதியம் விருது பெற்ற திரைப்படங்கள் வரிசையில் சில நேரம் தமிழ் படம் வரும்.

“அம்மாடி .

பொண்ணுக்கு தங்க மனசு….

பொங்குது சின்ன மனசு”

என்று  அப்பாவியாய் சிவாஜி பாடுவார்.(ராமன் எத்தனை ராமனடி.)

இன்னொரு முறை

“கண்ணிலே நீர் எதற்கு…..

காலமெல்லாம் அழுவதற்கு”

என்று முத்துராமன், விஜயகுமாரி அழுது கொண்டிருப்பார்கள்.( போலீஸ்காரன் மகள்)

சீா்காழி கோவிந்தராஜன்,ஜானகி இருவரும் கதாபாத்திரங்களின் உணா்ச்சிகளை அப்படியே குரலில் வெளிப்படுத்தி இருப்பார்கள்.ஒட்டு மொத்த கூட்டமும் லேசா விசும்பும்.

“பாரு என்னமா நடிக்காங்க, இப்பம்லாம் என்ன நடிக்காணுவோ..சீ…..,”என்பார் காந்தி பெரியப்பா.

கப்பலோட்டிய தமிழன் பாக்கும் போது வந்தே மாதரம் என உணர்ச்சிபொங்க முழங்குவர்.

பல அற்புத படங்களை தொலைக்காட்சி தான் அப்போது மீட்டெடுத்து கொடுத்தது.அதற்காக சில கொத்துப் படங்களைச் சகிக்க வேண்டியிருக்கும்.

சாப்பாடு ரசனை தனி வகை.

திருநவேலி ஓட்டல்கள் பற்றி சுகா மூங்கில் மூச்சில் எழுதிவிட்டார்.வீட்டு சமையல் பற்றி பார்ப்போம்.செவ்வாய்,வெள்ளி சாம்பார் தான்.(எங்க ஆச்சி வச்ச வாழைக்காய் தொவரம் வாசம் இப்பவும் வருது).புதன் ரசம்,கத்திரி எண்ணெய்க்காய்,வியாழன் உளுந்தங் குழம்பு இஞ்சி பச்சடி. ஞாயிறு காலை உளுந்தங்கஞ்சி, மதியம் சில வீடுகளில் மட்டன்-அதிலும் சக்தி ஆச்சி கறிய வறுத்து வச்சுட்டாவோன்னா சக்திய வெளிய பாக்க முடியாது.

விரதம் வரும் ஞாயிறுகளில் கூட்டாஞ்சோறு,பருப்பு சோறு இவற்றுக்கும் இஞ்சி பச்சடி செம காம்பினேஷன்.இதை பொங்கி ஆத்துக்கு கொண்டு சென்று குளித்து பின் படித்துறையில் உக்காந்து சாப்பிடும்போது கொண்டா கொண்டானு உள்ளபோவும்.

ஒண்ணுமில்லைய்யா. புளித்தண்ணினு ஒன்னு வைப்பாங்க.பொங்கச்சோறு(தெருவில் பொங்கல் அன்று வைக்கும் பச்சரிசி பொங்கல்)மீந்து போச்சுன்னா சோறுல தண்ணி வீட்டு,புளித்தண்ணி வச்சு சாப்பிட ஆகா…எச்சில் ஊறும்,சாப்பிட்டு பாத்தவுகளுக்கு.கல்யாண வீட்டில் மிஞ்சிய சாம்பார்,கூட்டு எல்லாம் சுண்டக்கறி ஆயிரும்.அதை இரவு பழையது அல்லது தோசைக்கு தொட்டு கொள்ள அமுதம்லாம் தோத்துபோகும் என்பார் தாத்தா.

ஆப்பம்(மேல சீனி தூவி,பால் ஊத்தி ரெண்டு சாப்பிடணும்,அப்புறம் சாம்பார் ஊத்தி சாப்பிடணும்),புட்டு (பழத்தை  போட்டு பிசஞ்சு)அடைதோசை (ஒருவாய் சீனியை,ஒருவாய் சட்டினிய தொட்டு சாப்பிடணும்)பொடி தோசை,வெங்காயத்தோசை,தக்காளி சட்னி, இட்லின்னா வெங்காய சாம்பார்.

எளிமையான சமையல்,சுவையான சாப்பாடு.சிக்கனமும் கூட.“நல்லவேளை ஒனக்கு திருநவேலி பொண்ணா அமஞ்சிட்டு.இல்லனா ஒருவேளை திங்க ஏழுவகை கறில்லா வச்சுக்கிட்டு கெடப்பா.சம்பாதிச்ச காசு பூரா சாப்பாடுக்கேலா போயிரும்”  எனக்கு திருமணம் நிச்சயமானபோது அக்கா சொன்னது. 

7 Replies to “ஓ ரசிக சீமானே…”

Leave a Reply to Petchiammal BalasubramanianCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.