சித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்

என் பல்கலைகழக வருடங்களில் தங்கள் ஆய்வுகளை கட்டுரைகளாக பிரசுரிக்க முயன்று கொண்டிருந்த முதுகலை மாணவ நண்பர்களிடையே ஒரு ஜோக் சுற்றிக்கொண்டிருந்தது. அதன்படி ஒரு அறிவியல் சஞ்சிகையின் பெயர் எவ்வளவுக்கெவ்வளவு நீளமாகவும் சிக்கலாகவும் இருக்கிறதோ அதற்கு நேர்மாறான அளவில் அதில் இடம் பெறும் கட்டுரைகளின் தரம் இருக்கும்! “நேச்சர்”, “சயன்ஸ்” போன்ற எளிய பெயர் கொண்ட சஞ்சிகைகளில் என் ஆய்வுக் கட்டுரைகள் எதையும் நான் இதுவரை பிரசுரித்ததில்லை என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன?

இது போலவே கற்பனை கதைகள்/நாவல்கள் அல்லாத ஆய்வுப்புத்தகங்களை எழுதுபவர்களைப் பற்றியும் ஒரு எண்ணம் எனக்கு இருக்கிறது.  இவ்வகைப்பட்ட புத்தகங்களை நிறைய எழுதித் தள்ளுபவர்களும் இருக்கிறார்கள், வாழ்க்கையில் ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டுமே எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஏராளமாக எழுதுபவர்கள் ஒரு சிறிய கருத்தை எடுத்துக் கொள்கிறார்கள், அதை ஊதிப் பெருக்கி வேகமாக 300 பக்கத்துக்கு ஒரு புத்தகமாய் எழுதி பிரசுரித்து விடுகிறார்கள்- இவ்வகைப்பட்ட புத்தகங்கள்  படிப்பதற்கு சுலபமாக இருக்கின்றன என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் விஷய அடர்த்தி அவற்றில் ரொம்பக் குறைவாகவே இருக்கும். எதிர்ப்பக்கத்தில் இருக்கும் சிலர், அனுபவத்தால் தாம் மேதமை பெற்ற துறையைப் பற்றி  எல்லாவற்றையும் விவரிக்கும் வகையில் ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டும் எழுதுகிறார்கள், அதைப் படிக்கும்போதே, நல்ல வேளை, இதைப் படிக்க தேர்ந்தெடுத்தோம் என்று சந்தோஷமாக இருக்கும். சித்தார்த்த முகர்ஜியின் புத்தகம், ‘The Gene – An Intimate History’ நிச்சயம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது என்பது தெளிவு.

புற்றுநோய் சிகிச்சை ஆய்வின் வரலாற்றையும் நடப்பு நிலைமையையும் அவரது ‘Emperor of All Maladies’ என்கிற முந்தைய புத்தகம் மிக விரிவாகவே ஆவணப்படுத்தியது. அப்புத்தகம் வெளிவந்த புதிதில், தெரிந்த விஷயங்கள் மொத்தத்தையும்  எழுதியாயிற்று, அறிய வந்த கதைகள் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாயிற்று, என்று எழுதி முடித்த களைப்பில் இனி எழுதுவதற்கு எதுவுமில்லை, பேனா எடுத்து இன்னொரு புத்தகம் எழுதப் போவதில்லை,  என்று நினைத்துக் கொண்டேன் என்று அவர் சொல்வதை நம்புவது கஷ்டமில்லை. தறிகெட்டு இயங்கும் மரபணுக்களின் அசாதாரண செயல்களை விவரிக்கும் கேன்சரின் கதை அந்தப் புத்தகம். நிறைய யோசித்தபின்,   மறுபுறம் மரபணுவின் இயல்பான செயல்பாட்டைப் பேசும் இன்னொரு கதை இருப்பதை உணர்ந்து, மனதை மாற்றிக்கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த யிங் (Ying) கதையை பாலன்ஸ் செய்ய வந்திருக்கும் இந்த யாங் (Yang) கதை அதே சுவையுடன் வெகு நன்றாகவே வந்திருக்கிறது.

கிரேக்க தத்துவஞானிகளில் துவங்கி கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளின் கதையை இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆங்காங்கே மன நோய்கள் விரவியிருக்கும் தன் குடும்ப வரலாற்றினூடே முகர்ஜி, மென்டல் (Gregor Mendal) மற்றும் டார்வின் (Charles Darwin) போன்ற மகத்தான விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் துவங்கி மன நோய்களுக்கு மரபணு காரணமாகுமா என்று கேட்டுக் கொண்டு இன்று ஆய்வு செய்யப்படும் CRISPR/Cas-9 வரை வந்துவிடுகிறார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் Pythagorasன் சமகாலத்தவர்கள் ஆணின் மனித உடலினுள் உள்ள விந்து வெவ்வேறு உறுப்புகள் வழியே பயணித்து தான் எப்படி வளர வேண்டும் என்ற சமிக்ஞைகளைச் சேகரித்துக் கொண்டபின் அக்குறிப்புகளைப் பயன்படுத்தி தன் தந்தை போல் சாயல் கொண்ட உருவத்துடன் ஒரு குழந்தையை உருவாக்குகிறது என்று ஒரு தவறான ஊகத்தை  வைத்திருந்தனர். மென்டல் தன் காலத்தில் உயிரிகளில் பகுக்க முடியாத உறுப்பு என்பதுபோல் ஒன்று உள்ளது என்று ஊகித்தார், அது தாய்ச் செடியிலிருந்து பிஞ்சுச் செடி உருவாகும்போது பிஞ்சுச்செடிகளின் உயரம், அதன் மலர்களின் வண்ணம் போன்ற குணாதிசயங்களை ‘உண்டு’ அல்லது ‘இல்லை’ என்ற இரட்டைத் தேர்வுகளில் தீர்மானிக்கிறது என்றார் அவர். அதாவது, வெவ்வேறு பெற்றோருக்கு இடையே உறவு ஏற்படும்போது தனித்தன்மைகள் ஒன்று அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன, அல்லது இழக்கப்படுகின்றன, ஆனால் இப்படி பகுக்க முடியாத தன்மைகள் ஒன்றுகூடி அரைகுறையாய் பரிணமித்து நீர்த்துப் போவதில்லை. இது மட்டுமல்ல, இந்தத் தனித்தன்மைகள் அடுத்தடுத்து பல தலைமுறைகளில் மறைந்திருந்து பின்னொரு சந்ததியினிடத்தும் வெளிப்படலாம் என்றும் அவர் ஆய்ந்தறிந்து கூறினார்.

இதன்பின் இருபதாம் நூற்றாண்டில் டிஎன்ஏவின் இரட்டை ஹெலிக்ஸ் அமைப்பு குறித்த புரிதல் உருவாகிறது – மரபணுக்கள் G-A-C-T என்ற நான்கே நான்கு ‘எழுத்துக்கள்’ கொண்டவை, டிஎன்ஏ திரித் துணுக்குகள் நீண்டு இணைந்து ஒரு மரபணு தோற்றம் கொள்கிறது, மரபணுக்கள் புரதம் சமைப்பதற்கான குறிப்புகளை தம் உருப்படிவத்தில் சேமித்து வைத்திருக்கின்றன, இந்தப் புரதங்கள் செல்களை உருவாக்கின்றன, இந்த செல்கள் டிஎன்ஏவின் பிரதிகளைத் தாங்கியிருக்கின்றன என்ற ஒவ்வொரு கண்டுபிடிப்பும் எக்கச்சக்க உழைப்பை விலை கொடுத்து மெல்ல மெல்ல வென்றெடுக்கப்பட்ட உண்மைகள். இன்று மானுட ஜீனோம் குறித்து நாம் அடைந்துள்ள  புரிதலுக்குப் பின் இருக்கும் சிந்தனை, உழைப்பு, கடும் போராட்டங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அதன் முடிவுகள் என்று அனைத்தும் ஒவ்வொன்றாய் இந்நூல் சொல்லும் தகவல்களின் வழியே அறிய வரும்போது நம் அறிவின் அளவு குறித்த தன்னடக்கம் அதிகரிக்கவே செய்கிறது.

சித்தார்த்த முகர்ஜி புத்தகமெங்கும் தான் சொல்லவரும் விஷயங்களை விளக்க பார்வை சார்ந்த உவமைகளை மிக அழகாக பயன்படுத்துகிறார். இனி எதிர்கொள்ளப்பட வேண்டிய சவால்கள் எவ்வளவு பிரம்மாண்டமானவை என்பதைச் சித்தரிக்க இவற்றில் பல உதவுகின்றன. மனித டிஎன்ஏ ஒன்றை நேர்க்கோடாக விரித்தால், அது அமெரிக்கா முதல் யூரோப் வரை நீளும், அதில் காணப்படும் மரபணுத் தொகுப்புகள் (Genes) கடலில் மிகச்சிறிய தீவுகளாக நாம் விமானத்தில் பறக்கும்போது தெரியும் நிலம் போல் உள்ளன என்கிறார்! அமெரிக்கா முதல் யூரோப் வரை நீளும் டிஎன்ஏவில் உள்ள மரபணுத் தொகுப்புகளான சின்னச் சின்ன ஊசி முனையளவு நிலப்பகுதிகளைத் திரட்டித் தொகுக்கும்போது, அவை டோக்யோ மெட்ரோ ஸ்டேஷன் அளவே இருக்கும் என்று அவர் சொல்லும்போது அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. டிஎன்ஏவில் மரபணுக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக அபூர்வமான எண்ணிக்கையில் இருக்கின்றன என்பதை இந்த பார்வை சார்ந்த உவமை சிறப்பாக தெளிவுபடுத்துகிறது, இல்லையா?

மானுட ஜீனோமின் முழு வரைபடம் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் உங்களுக்கு தெரிந்திருக்கும். அது எப்படி தொகுக்கப்பட்டது என்பதையும் முகர்ஜி காட்சி சார்ந்த உவமையைக் கொண்டு உணர்த்துகிறார். ஒரு மிக உயரமான மலை மீது கயிறு கட்டி ஏறும்போது கரங்களை இடைவெளி விடாமல் ஒன்றுக்கு அருகில் இன்னொன்று என்று அடுத்தடுத்து பிடித்து ஏறுவது போன்றது இந்தத் தொகுக்கும் முயற்சி என்கிறார் அவர். இதற்கு மாறான மற்றொரு அணுகுமுறை ‘ஷாட் கன்’ என்று அழைக்கப்பட்டது. இது மரபணுத் தொகுப்பை  பல்லாயிரக்கணக்கான துண்டங்களாக உடைக்கிறது (ஒரு துப்பாக்கியால் சுடப்பட்டது போல்). அதன் பின் இந்தத் துண்டங்கள் வாசிக்கப்படுகின்றன, அடுத்தடுத்த துணுக்குகளில் காணப்படும் ஒத்த தன்மை கொண்ட எழுத்துக்களால் அவை மீண்டும் தொகுக்கப்படுகின்றன. இந்த மாதிரியான  உவமைகள் இல்லாமல் இதே விஷயங்களை விளக்கினால் புரிந்து கொள்வது நிச்சயம் சிரமமாய் இருக்கும்.

பழ ஈக்களைக் குறித்து ஆய்வு செய்யும் செல் உயிரியலாளர் தாமஸ் மார்கனின் சோதனைக் கூடத்தை விவரிக்கும்போது அழகிய சித்திரங்களை அளிக்கிறார் முகர்ஜி: “ஆய்வகத்தில் மிகவும் கனிந்த வாழைத் தார்கள் குச்சிகளில் தொங்கிக் கொண்டிருந்தன. ஊற வைத்த சாராயமாகிவிட்ட பழ வாசம் நாசியைத் துளைத்தது, மார்கன் ஒவ்வொரு முறை அசையும்போதும் ரீங்கரிக்கும் திரைச்சீலைகளாய் தப்பிப் பறக்கும் ஈக்கள் மேசையிலிருந்து ஒரு புகை மூட்டமென எழுந்து திரும்பவும் அமர்ந்தன”.

நான் மிகக் குறைவாகத்தான் வலைப்பக்கங்களில்  எழுதியிருக்கிறேன். ஆனால்கூட எழுதிய சில கட்டுரைகளில் இது போலவே வாசகர்களின் மனக்கண் முன் காட்சிகளை விவரித்து கொண்டு நிறுத்தும் முயற்சிகளைச் செய்திருக்கிறேன். அது நாம் சொல்லும் கதைக்கு ஒரு நேரடித்தன்மையை அளிக்கிறது என்பதால் நன்கு பழகிக் கொள்ள வேண்டிய உத்தி அது. என் விஷயத்தில் நான் என்னவோ நேரடியாக அறிந்த, அனுபவப்பட்ட காட்சிகளையே அவ்வாறு சித்தரித்திருக்கிறேன். ஆனால் மார்கனின் சோதனைக்கூடம் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இருந்தது என்ற காரணத்தால் நிச்சயம் சித்தார்த்த முகர்ஜியின் நேரடி அனுபவமல்ல இது. ஆனாலும் அவர் காட்சிகளை விவரிக்கும் விதம் நிச்சயம் நம்மை காலஇடைவெளிகளைக் கடந்து அங்கேயே கொண்டுபோய் விடுகிறது. எனவே தானே பார்த்தது போல் முகர்ஜி விவரிக்கும் கதைகளை ஒரு மெல்லிய புன்முறுவலுடன் நாம் கடந்து செல்ல வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு நிகழ்வு அல்லது கண்டுபிடிப்பு மனித வரலாறு முழுவதையும் மாற்றி விட்டது என்று சொல்லும் புத்தகங்கள் அல்லது கட்டுரைகளைப் படிக்கும்போது எனக்கு மிகவும் சங்கடமாகவும் அலுப்பாகவும் இருக்கும்.  இதற்கு ஒரு நல்ல, எளிய உதாரணம்  நியூட்டன் தலையில் ஆப்பிள் விழாமல் இருந்திருந்தால் புவி ஈர்ப்பு விசை பற்றி நமக்கு எதுவும் தெரியாமல் போயிருக்கும், விமானம், ஜி.பி.எஸ். என்று எதுவும் கண்டுபிடித்திருக்க மாட்டார்கள் என்று வலியுறுத்தம் கட்டுரை. இது போன்ற கதைகள் ஆச்சரியமாகவும், படிக்க மிகவும் சுவையாகவும்  இருந்தாலும், இவை கொஞ்சம் யோசித்தால் நம்பும்படி இருப்பதில்லை. ஏதாவது ஒரு சமயம் நியூட்டன் அல்லது வேறு யாருடைய தலையிலாவது ஆப்பிள் அல்லது வேறு ஏதாவது பழம் விழுந்து புவி ஈர்ப்பு விசையின் சக்தியை உணர்த்தாமல் போயிருக்காது என்பதுதான் என் கணிப்பு. சித்தார்த்த முகர்ஜி செல் பயாலஜி, மரபணுக்கள், டிஎன்ஏ பற்றி பிரமாதமான கண்டுபிடிப்புகளை விவரித்தாலும்கூட அவற்றை எல்லாம் இன்னும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட காத்திருக்கும் இன்றைய நிலைக்கு நம்மைக் கொண்டு வந்த முன்னேற்றப் படிகளாகவே அவற்றை அணுகுகிறார் என்பதை என்னால் ரசிக்க முடிகிறது.

மரபணு ஆய்வுத் துறையில் உள்ள புத்தகத்தில் காணக்கிடைக்கும் பல நுண்விபரங்கள் வசீகரமாக உள்ளன. உதாரணத்துக்கு ஒன்று- மரபணுவின் பிறழ்வு (mutation) ஒன்றின் காரணமாக Cystic Fibroris என்ற நோய்மை நிலை தோன்றுகிறது, இது யூரோப்பியர்களின் மரபணுத் தொகுப்பில் நிறைய காணப்படும் ஒரு பிறழ்வு. அப்படியானால் வல்லவன் வாழ்வான் என்ற பரிணாம வளர்ச்சி விதியின் அடிப்படையில் அது ஏன் மரபணு தொகுப்பிலிருந்து நீக்கப்படவில்லை? இந்தக் கேள்விக்கு கிடைக்கும் சுவையான விடை இது. காலரா நிலவும் காலங்களில் உடலில் உள்ள நீரிழப்பினால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த மரபணு மாற்றம் உப்பு மற்றும் நீர் இழப்பைத் தடுப்பதால், இந்த பிறழ்வு இருப்பவர்கள் உயிர்  காப்பாற்றப்படுகிறது. ஆக, ஒரே ஒரு மரபணு மாற்றம் உயிரிழப்பைத் தடுத்துக் காப்பாற்றுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, தாய் தந்தை இருவருக்கும் இப்படிப்பட்ட மரபணு மாற்றம் இருக்குமென்றால், குழந்தை இரட்டை மாற்றத்தைப் பெற்று Cystic Fibrosis என்ற நோய்மையால் பீடிக்கப்படுகிறது.

சூல் கொண்ட ஒரே ஒரு செல்லில் இருந்து எப்படி ஒரு முழு மானுட உடல் உருவாக முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது. செல்கள் எப்படி பகுப்படைகின்றன, செல்லில் உள்ள டிஎன்ஏ எப்படி மனித உடலை உருவாக்கும் குறிப்புகளை அளிக்கிறது என்பதெல்லாம் நமக்கு தெரிந்ததே. ஆனால் செல்கள் பகுப்படையும்போது தலை இருக்க வேண்டிய இடத்தில் கட்டை விரல் வளரக்கூடாது என்பது செல்களுக்கு எப்படி தெரிகிறது? இதைத்தான் 600 பக்கங்களில் இந்தப் புத்தகம் பேசுகிறது.  முழுப் புத்தகத்தையும் படிக்கப் பொறுமை இல்லாதவர்கள் குறைந்த பட்சம் இந்தக் கட்டுரையை வாசிக்கலாம். How Does a Single Cell Become a Whole Body? | DiscoverMagazine.comஒற்றை செல் எப்படி ஓருடலாக உருவாகிறது என்பதை புரிந்து கொள்ள C. elegans என்ற சிறு புழுவைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகள் உதவுகின்றன.

நாஜி ஜெர்மனியில் செய்யப்பட்ட ஆய்வுகள், இனப்பாகுபாட்டு கொள்கை கொண்ட காலகட்டத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட யூஜெனடிக்ஸ் முயற்சிகள், ஜெனன்டெக் போன்ற நிறுவனங்கள் உருவான கதை, முதலில் வைரஸ்களைப் பயன்படுத்தி பாக்டீரியாக்களுக்குள் டிஎன்ஏக்களை செலுத்தி, அந்த பாக்டீரியாக்களைக் கொண்டு விலங்குகள் மற்றும் மனித செல்களில் அந்த டிஎன்ஏகளைச் செலுத்த உதவிய கண்டுபிடிப்புகள், பல பத்தாண்டுகளாய் அளிக்கப்பட்ட நோபல் பரிசுகள், எதிர்கால சந்ததியினரை முடிவில்லாமல் பாதிக்கக்கூடிய மனித ஜீனோம் மாற்றங்களை அவசரப்பட்டு முயற்சிக்கும் சீனாவின் தர்ம மீறல்கள், என்று பலவற்றைப் பேசி, முடிவில் நாம் பெருமைப்படக்கூடிய எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் இத்துறை வளர்வதற்கு தேவையான, முறைப்படி வகுக்கப்பட்ட நெறிமுறைகளுக்கான அவசியத்தைப் பேசி முடிக்கிறார் சித்தார்த்த முகர்ஜி.

புத்தகத்தில் ஓவியங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள் என்று அதிகம் எதுவும் இல்லாதது ஒரு பெரிய குறை. நிச்சயம் ஏராளமான சித்திரங்களை வரைந்து இதிலுள்ள விஷயங்களை இன்னும் சிறப்பாக விளக்கியிருக்க முடியும். அதற்கு தகுந்த புத்தகம்தான் இது. ஆனால், சொற்களால் ஒரு சித்திரத்தை அளித்து, வாசகர் மனக்கண்ணால் அதைக் காண்பதை தான் விரும்புவதாக முகர்ஜி எழுதுகிறார். என்னால் இந்த அணுகுமுறையை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இதில் எழுதப்பட்டுள்ள விஷயங்களை விளக்கும் வகையில் இன்னும் பல வரைபடங்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதற்காக புகைப்படங்களே இல்லாமல் இல்லை, ஒரு சில இருக்கின்றன- ஆனால் அவை அத்தனையும் புத்தகத்தின் மத்திய பகுதியில் உள்ள சில பக்கங்களில் அடுத்தடுத்து தொகுக்கப்பட்டிருக்கின்றன.

நம் காலம் முடிவதற்குள் குறைந்தது இரண்டு புரட்சிகரமான மாற்றங்கள் நிகழப் போகின்றன என்று நான் நம்புகிறேன். இவை இரண்டும் மானுட வாழ்வில் அசாதாரண முன்னேற்றத்துக்கு காரணமாகப் போகின்றன. ஒன்று, தகவல் தொழில்நுட்பத் துறை. 5ஜி போன்ற மிக வேகமான கம்பியில்லா பின்னல்கள் எங்கும் விரவும் மாத்தரம். இவை இயந்திரக் கற்றல் அல்லது செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து நாம் நினைத்துப் பார்க்காத திசைகளில் மனித சமுதாயத்தை வளர்க்கப் போகின்றன. மற்றொன்று இந்தப்புத்தகம் புகுந்து புறப்படும் மரபணு பொறியியல் துறை. முன்னிருக்கையில் அமர்ந்து இந்த மாற்றங்களை பார்த்து வியந்து பங்கெடுத்துக்கொள்ளும் நம் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சுயமாய் விரையும் கார்கள் எவ்வளவு பாதுகாப்பாக போக வேண்டிய இடத்துக்கு நம்மை கொண்டுசேர்க்கும் என்று தகவல் தொழில்நுட்பத்துறையில் சொல்கிறார்களோ, அதே போல் இந்தத் மரபணு பொறியியல் துறையின் பயணமும் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 

(தமிழ்நடை உதவி – அ. சதானந்தன்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.