மெய்ப்பொருள் காண்பது அறிவு

தினையளவு நன்மை செய்தவனையும் பனையளவு நன்றி பாராட்டச் சொன்னார் திருக்குறளாசான். தினையளவு செயலாற்றியவர்களையும் நன்றாகக் கவனிக்க வேண்டும், சாதனை அல்ல, செயல் – பனையளவு பாராட்டுவதில் நாம் எவர்க்கும் இளைத்தவர் இல்லை. கடலைக் குடித்தவன், மலையை விழுங்கியவன், காற்றைச் சிறைப் பிடித்தவன், பொங்கி வரும் கங்கையை உள்ளங்கை விரித்துத் தடுத்தவன், வனத்தீயை ஊதி அணைத்தவன், தலைமயிரால் சூரியனை மறைத்தவன் என்று அற்ப ஆசைகள் நீக்காத மானுடரைச் சொல்லும்போது, அப்புகழ்மொழிகள் நமக்கு ஆபாசமாகப் படுகின்றன.

திரைத்துறையினரையும் அரசியல் காரர்களையும் நாம் வலிந்து உபசாரமாக, செய்யாததையும்  செய்ய முனையாததையும் சொல்லிப்புகழ்வது அப்படித்தான் இருக்கிறது. சினிமா என்பதோர் தொழில்.அரசியல் என்பதோர் இழிதொழில். அதை உணராமல் கலைச்சேவை என்றும் மக்கள் சேவை என்றும் கருதி மதி மயங்கி நிற்கிறோம். குவார்ட்டர் கொடுத்து கூவச் சொல்கிறார், காசு கொடுத்து சாகச் சொல்கிறார். உலகத்தின் மிகப்பெரிய செய்தி அகப்பட்டதென ஊடகங்கள் அறம் தொலைத்து அவற்றை ஆசுவாசப்படுத்துகின்றன.

ஊதியத்துக்குச் செய்யும் ஊழியத்தையும், கொள்ளை ஆதாயத்துக்கு நடத்தும் தொழிலையும் சாதனை என்று ஓங்கி உரைக்கப் பழக்கிவிட்டார்கள். அம்பானி செய்வது மக்கள் சேவை, அதானி செய்வது நாட்டுச்சேவை. அமெரிக்கப் பல்கலைக் கழக வளாகத்தில் சிறிய கருத்தரங்கில் உரையாற்றி வந்தவரை ஒரு இனமே டாக்டர் டாக்டர் என்று கூவியது. அவரும் அதனை எங்கும் மறுக்கவில்லை. தமிழனைத் தமிழன் என்று அழைத்ததைச் சாதனை என்று கொண்டாட ஆயுதங்களுடனும் ஆட்படைகளுடனும் தலைவர்கள் உண்டு ஈண்டு.

ஜில்லா கலக்டர் என்றோம், எம் இளம் பருவத்தில். பிறகு அது மாவட்ட ஆட்சித் தலைவர் ஆயிற்று. பிற்பாடு மாவட்ட ஆட்சியர் என்றோம். எவனோ சொன்னார் ஆட்சியர் என்ற சொல் தமிழுக்கு எங்கள் கொடை என்று. கைதட்டவும் காத்திருந்தது ஒரு கும்பல். எம்மொழிக்குள் எவர், எப்போது புழக்கத்தில் விட்டார்களோ என்பதறியேன். ஆனால் கம்பராமாயணத்தில், சுந்தர காண்டத்தில், பிணீ வீட்டுப் படலத்தில், இராவணன் கூற்றாகக் கம்பன் பயன்படுத்துகிறான். ‘’நின்று இசைத்து உயிர் கவர் நீலக் காலனோ?’ என்று தொடங்கும் பாடலில். எனவே தீர்மானமாகச் சொல்ல இயலும், ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே, கம்பன் பயன்படுத்திய சொல் ஆட்சியர் என்பது. முழுப்பாடல் வாசிக்க விரும்புபவர், காண்க பாடல் எண் 5875, கோவைக் கம்பன் அறநிலைப்பதிப்பு, 1996.

உடன்தானே மண்டையில் கொம்பு முளைத்தவர் கேட்பார், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பெ கலக்டர் இருந்தாரா என்று!

நல்ல காலமாக, நமது இடது சாரித் தோழர்கள், ‘தோழர்’ எனும் சொல்லைத் தாமே கண்டுபிடித்ததாகப் பீற்றிக்கொள்வதில்லை. அவர்கள் தீவிர வாசிப்பு மோகம் கொண்டவர்கள். மூத்த எழுத்தாளர் கி.ரா.வும், சுந்தர ராமசாமியும், ஜெயகாந்தனும் அந்த நாற்றங்காலில் இருந்து பிடுங்கி நடப்பட்டவர்கள். தோழன், தோழமை என்ற சொற்களும் கம்பன் கையாண்டவை. அவருக்கும் முன்பே தோழ என்று குறுந்தொகையும்,  தோழற்கு என்று புறநானுறும், தோழன் என்று கலித்தொகையும், புற நானூறும்; தோழி என்றுஅக நானூறும்,ஐங்குறுநூறும், கலித்தொகையும், குறிஞ்சிப்பாட்டும், குறுந்தொகையும், நற்றிணையும், பரிபாடலும், புற நானூறும்; தோழிக்கு என்று கலித்தொகையும், நற்றிணையும்; தோழிமார், தோழிமாரோடு என்று அகநானூறும்; தோழியது என்று ஐங்குறுநூறும் கலித்தொகையும்; தோழியர் என்று பரிபாடலும்; தோழியர்க்கு, தோழீ, தோழியை என்று கலித்தொகையும்; தோழியோடு தோழீஇ என்று அகநாநூறும் பயன்படுத்தியுள்ளன. இதனை அறிந்தே இடதுசாரித்தோழர்கள், தோழர் எனும் சொல்லைத் தாமே கண்டுபிடித்தார் என்று கூவவில்லை.

இவற்றை எல்லாம் இப்போழ்தில், இவண் விளம்ப யாது காரணம்? அண்மையில் அகில உலகத்தமிழர்களின் ஒரே தலைவர் தெற்குத் திசையில் அஸ்தமித்தபோது, இரங்கலாக எழுதப்பட்ட ஒரு நூறு கட்டுரைகள் வாசிக்க நேர்ந்தது. ‘’ அதை நீ என்னத்துக்கு போயி வேலையத்துப் படிக்கிறாய்?’’’ என்று கேட்பது புரிகிறது. என்றாலும் கண்டதைக் கற்றுத்தானே பண்டிதனானோம்! பல கட்டுரைகளும் பின்னவீனத்துவப் புனைவிலக்கியம் வாசிப்பது போன்றிருந்தது. இரண்டு பாகங்களாக , 1200 பக்கங்களில் சந்தியா பதிப்பகம் தமிழாக்கம் செய்து வெளியிட்ட ‘’’’டான் குயிக்ஸாட்’ என்ற ஸ்பானிய நாவலை எவரோ பண்பாட்டு மாற்றம் செய்து மறுபடியும் கட்டுரைகளாக எழுதுகிறார்களோ என்று தோன்றியது. பல கட்டுரைகள் தேர்ந்தல் நேரத்துண்டறிக்கைகள் வாசிப்பது போலவும், இன்னும் சில சொல்லுக்குச் சொல் எதிர்மறைப் பொருள் கரந்திருப்பது போலவும்.

பண்டு ‘’ருடாலி’ என்றொரு இந்திப்படம் வந்தது. பார்க்க நேர்ந்தவர் பாக்கியசாலிகள். கபாலியும் காலாவும் பார்க்க சபிக்கப்பட்ட இனத்தை யார் என்ன செய்ய இயலும்! ‘ருடாலியின்’  மூலக்கதை பாரதத்தின் அற்புதப் படைப்பாளிகளில் ஒருவரான மகா ஸ்வேதா தேவி. படத்துக்கு திரைக்கதை குல்சார். கதாநாயகியாக நடித்தவர் டிம்பிள் கபாடியா. ஒரு காலத்தில் இந்தித் திரையுலகத்தின் கனவுக்கன்னி. இராஜஸ்தான் மாநிலத்தில் தொழில் முறை ஒப்பாரிப்பாடகிகள் பற்றிய கதை. Rudali என்ற சொல்லின் பொருளே, ஒப்பாரிப்பாடகிதான். நாம் சொல்வோம் அல்லவா, கூலிக்கு மாரடிப்பவர் என்று. அது போல பெரிய வீடுகளில் இழவு விழுந்தால், ஊதியத்துக்கு ஒப்பாரி வைப்பமவர் ருடாலி. ஆனால் அவர்களுக்கும் சொந்த சோகம் இருக்கும் தானே! வஞ்சிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட சோகம்!  துயரமும் ஏக்கமும் சோகமும் கலந்த ருடாலி படத்தின் பாடல் வரி “தில் ஹூம் ஹூம் கரே” இன்றும் எனக்குள் ஒலிக்கிறது. இசை மேதை பூபன் ஹசாரிகா இசை. அவருக்கொரு தாதா சாகேப் விருது கிடைத்தது பிற்றை நாளில்.

ருடாலி போல, ஆனால் சொந்த சோகங்கள் எதுவுமின்றி, அநுகூலங்களின் எக்களிப்பில், ஊருக்கு உன்னை விட எனக்கு சோகமும் துயரமும் இழப்பும் அதிகம்’ என்று அபிநயத்துக்காட்டும் துடிப்பில் பலரும் இங்கு கூலிக்கு மாரடிக்கும் குரலில், உடல் மொழியில், இழவு இசைத்தார்கள். புதுமைபித்தனின் சொற்களைக் கடன் கேட்டால், ‘வானத்து அமரன் வந்தான் காண். வந்தது போல போனான் காண்’ என்று. பலரின் கட்டுரைகளும் – தீவிர இலக்கியவாதிகள் என்று பூச்சாண்டி முகமூடி போட்டிருக்கும் சிலர் அடங்க நமது சினிமா இதிகாச நாயகர்களின் ஊதிய அழுகைக்கு எள்ளளவும் இளைத்ததாக இல்லை. மிகை, மாமிகை, மீமிகை, உலகத்துப் பெருமிகை. Himalayan Blunder என்றொரு சொற்றொடர் உண்டு ஆங்கிலத்தில். இமாலயத்தவறு என்று தமிழாக்கினோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கம்பன் பயன்படுத்தினான், ‘வான் பிழை’ என்று. இதையெல்லாம் சார்ட்டட்ஃபிளைட்டில் பயணம் செய்து போய் சொற் பெருக்காற்றும் நமது மேடையாளர்கள் அறிய மாட்டார்கள். தம்பி, கவி மகுடேசுவரன் எழுதினார், ‘பரவாயில்லை’’’’ இன்று நாம் யாவரும் பேரும் சொல் பற்றி. ஆங்கிலத்தில் No issue, No problem என்கிறார்கள். பரவாயில்லை என்பதை எப்படிப் பிரிப்பது? பரவா + இல்லை என்றா? எனில் பரவா என்றால் issue, problem, சிக்கல், துன்பம் என்று பொருளா? மகுடேசுவரன் சொன்னார் ‘’பருவரல் இல்லை’ என்ற பயன்பாடே மக்கள் வழக்கில் பரவாயில்லை என்று மருவித் திரிந்து சிதைந்து வருகிறது என்று. சரி! படுவால் என்ற சொல்லுக்கு என்ன பொருள் சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேரகராதி, பருவரல் எனில் துன்பம் என்கிறது. தொல்காப்பில், பொருளதிகாரம் நூற்பா ‘’பொறையின்று பெருகிய பருவரல் கண்ணும்’ என்று துன்பம் எனும் பொருளில் பருவரல் எனக் கையாள்கிறது. அகநானூறு நிகண்டு, பொழுது, time எனு பொருள் தருகிறது. கம்பராமாயணத்தில், அயோத்தியா காண்டத்தில், குகப்படலத்தின் 46-வது இறுதிப்பாடல், ‘பணிமொழி கடவாதான், பருவரல் இகவாதான். பிணி உடையவன் என்றும் பிரிவினன், விடை கொண்டான்’ எனும் இராம- இலக்குவ -சீதை மூவரிடம் இருந்து குகன் பிரிந்து விடை பெற்றுச் செல்லும் இடத்தில் பருவரல் எனும் சொல்லைத் துன்பமென்ற பொருளில் கையாள்கிறது. மிச்சமிருக்கும் என் ஆயுளையும், அதிகம் மிச்சமில்லை என்றாலும், தம்பி மகுடேசுவரனுக்குத் தருவேன்.

இப்படி எட்டுத்திக்கிலும் தமிழ் சொற்கள் தழைத்துக் கொடிவீசிப் படர்ந்து கிடக்க, எவரோ ஒருவர்  எழுதினார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் போல, பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் போல, சோழன் குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமா வளவன் போல, பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் போல, பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதிபோல, மறலியின் தென் திசை மறைந்த பகலவன்தான் தமிழுக்குக் ‘கைம்பெண்’ என்ற சொல்லைக் கையளித்தார், பரவலாக்கினார் என்று. இந்த வயதில் நம்மால் வேட்டியை உரிந்து எறிந்துவிட்டு, தங்க நாற்கரம் சாலையில் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு ஓட இயலாது. இப்படிக் கட்டுரைதான் எழுத இயலும்.

விதவை, widow என்றால் கைம்பெண் என்று அறிவோம். வைதவியம் என்பது வட சொல் என்றும் கைம்மை என்று பொருள் என்றும் அறிவிக்கிறது ‘அயற்சொல் அகராதி’. விதவை எனும் சொல்லை சமற்கிருதம் + தமிழ் கைம்பெண், கைம்மணாட்டி என்கிறது. விதவா விவாகம் எனும் சொல்லை சமஸ்கிருதம் என்று கூறி, கைம்பெண் மணம், கைம்பெண் மணப்பு என்று பொருள் தருகிறது. விதவாகமனம் எனும் சொல்லையும் சமற்கிருதம் என்று கூறி கைம்பெண் களவுப் புணர்ச்சி என்று பொருள் தருகிறது.

சங்க இலக்கியங்கள் பாட்டும் தொகையுமான பதினெட்டு நூல்களினுள் புறநானூறு ‘விதவை’ எனும் சொல்லை ஆள்கிறது. தங்கால் பொற்கொல்லனார் பாடல் ‘குறுந்தாள் உடும்பின் விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை’ என்பது பாடல்வரி. குறுங்கால்களை உடைய உடும்பு இறைச்சியை விழுங்குவதற்கு எளிதாய்ச் சமைத்து தயிருடன் கலந்து கொடுக்கும் கூழ் என்று பொருள். விதவை எனும் சொல்லுக்குக் கூழ் என்று பொருள் தருகிறார் உ.வே.சா. திருக்குறள் விதவை எனும் சொல்லைக் கைக்கொள்ளவில்லை. விதவை எனில், மிதவை, சோறு என்ற பொருளில்  மலைபடுகடாம், சீவக சிந்தாமணி பயன்படுத்தியுள்ளது என்கிறது லெக்சிகன். எனவே தனித் தமிழாளர்கள் சற்று மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் கைம்மை நோன்பு என்ற செய்தியே சங்ககாலத் தமிழரிடம் இல்லை என்று அவசரப்பட்டுக் கொண்டாடவும் வேண்டாம்.

கைம்மை பற்றிய தேடலே இந்தக் கட்டுரை. இதுவரை ஆற்றியது முன்னுரை.

கைம்முற்றுதல் எனும் சொல் புறநானூறு பயன்படுத்திய சொல். என்ன பொருள்? முடிவு பெறுதல். அதற்கு மேல் ஒன்றும் இல்லை எனும் அர்த்தத்தில். பொருந்தில் இளங்கீரனார் பாடல்,

சேரமான் மாந்தஞ்சேரல் இரும்பொறை மீது.

‘களம் கொண் யானை, கடுமான் பொறைய !

விரிப்பின் அகலும், தொகுப்பின் எஞ்சும்;

மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை

கைம்முற்றல, நின் புகழே, என்றும்;’

என்பது பாடலின் நான்கு வரிகள்.

ஈண்டு கைம்முற்றல எனில் முடிவுறாமல் என்று பொருள்பெறும். எனவே கைம்மை என்றால், கைம்முற்றுதல் என்றால், முடிவு பெறுதல் என்றாகிறது. பாடல் வரிகளின் பொருள் – ‘வெற்றி களம் கொண்ட, வெஞ்சினம் உடைய யானையையும், விரைவு கொண்ட குதிரையையும் உடைய இரும்பொறையே ! உன் புகழை விரித்தால் அகன்று கொண்டே போகும் தொகுத்தால் பலவும் எஞ்சி நிற்கும். தெளிவற்ற சிந்தனை உடைய என்னை ஒத்தவர்க்கு, உறுதியாக உன் புகழை முடிவு பெறும் விதத்தில் என்றும் சொல்லிவிட இயலாது’ என்பதாகும்.

இந்த வரிகளில் இரண்டு சொற்கள். ஒன்று ‘எம்மனோர்’ என்பது. எம்மை ஒத்தவர் எனும் பொருள். ஒரு அரசியல்வாதி எம்மனோர் என்றால், எம்மையொத்த கேடு கெட்டவர் என்று பொருள். கம்பன், குகப்படலத்தில், ‘எம்மனோர்க்கு உரியன’ என்றும், கைகேயி சூழ்வினைப் படலத்தில், ‘எம்மனோரால் இயம்புதற்கு எளிதே?’ என்றும் குறிப்பிடுவான். இரண்டாவது சொல், கைம்முற்றல. முடிவுறாமை. எனவே கைம்மை என்ற சொல்லின் பிறப்பு கைம்முற்றுதல். எது முடிவு பெறாதது? கணவனின் ஆயுள், மனைவியின் மங்கலம், மகிழ்வு, இல்லறம், இன்பம் எல்லாம் முடிவு பெறுகின்றன.

கைம்மை எனும் சொல்லுக்குப் பேரகராதி ஆறு பொருள் தந்துள்ளது. ஒன்று – காதலனைப் பிரிந்திருத்தல், தனிமை. பதினோராம் திருமுறையின் 41 நூல்களில் ஒன்றான ஆளுடைய பிள்ளையார் திரு உலா மாலை, நம்பியாண்டார் நம்பி இயற்றியது, ‘கைம்மையால் ஒண்கலையும் நாணும் உடை துகிலும் தோற்றவர்கள்’ என்கிறது. காதலனைப் பிரிந்த காதலியின் நிலைமையைப் புலப்படுத்தும் வரி இது.

இரண்டாவது பொருள், கணவனை இழந்த நிலைமை.

புறப்பொருள் வெண்பா மாலை, ஐயனார் இதனார் இயற்றிய எட்டாம் நூற்றாண்டு இலக்கண நூல், ‘கருந்தடங்கண்ணி கைம்மை கூறின்று’ என்கிறது. பத்தாவது பொதுவியல் படலம், தாபத நிலைத் துறை பாடலின் கொணு, கைம்மை பேசுகிறது. கருமையான பெரிய கண்களை மனைவி, கைம்மை நோன்பினை மேற்கொண்டாள் என்பது தகவல். தாபதம் எனும் சொல்லுக்கு, நோன்பிருத்தல் என்பது பொருள்.

கைம்மை எனும் சொல்லுக்கு மூன்றாவது நேர்ப்பொருள், widow, விதவை. ‘ஓர் கைம்மையைக் கலந்த நோக்கி’ எனும் நைடதப் பாடல் வரிதனை மேற்கோள் காட்டுகிறது பேரகராதி. தேடுவதற்கும் தெளிவதற்கும், என்னிடம் நைடதம் நூல் இல்லை. கண்டது கூட இல்லை.

கைம்மைக்கு நான்காவது பொருளாக, சிறுமை என்கிறது பேரகராதி. அதாவது கைம்மைப் படுத்துவது என்பது சிறுமைப் படுத்துவது, கைம்மை மேற்கொள்வது சிறுமைப் படுவது. மணிமேகலைக் காப்பியத்தில், உதய குமாரனை வாளால் எறிந்த காதையில், ‘கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள்’ என்ற வரிக்கு, ‘சிறுமையைக் கொள்ளாதே’ காஞ்சனனே, இதைக் கேட்பாயாக என்று உரை எழுதுகிறார். உ.வே.சா.

அறிவின்மை என்று ஐந்தாவது பொருள் கொள்கிறார்கள் கைம்மைக்கு. பதினோராம் திருமுறையின் 35வது நூலான, ‘ஆளுளுடைய பிள்ளையார் திருவந்தாதி’, ‘கைம்மையினால் நின் கழல் பரவாது’ என்று பேசுகிறது. அறிவின்மையினால் நினது பொற்கழல்கள் போற்றாமல் இருந்தேன் என்பது பொருள்.

கைம்மை எனும் சொல்லுக்கு ஆறாவது பொருள், பொய். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி, ஐந்தாம் பத்து. ‘பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி’ என்கிறது.

கைம்மை பெற்றோன் எனில் விதவைக்குப் பிறந்தவன் என்பது பொருள் என்கிறது சூடாமணி நிகண்டு. ‘முன்னிய கைம்மை பொற்றோன் மொழிந்த கோளகனே ஆகும்’ என்பது நூற்பா. கைம்மைக்குப் பிறந்தவனை கோளகன் என்று அழைப்பார்கள் என்று பொருள். சூடாமணி நிகண்டு, யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் (கி.பி 1822 – 1889) பதிப்பித்த நூல்.

கைம்மை என்பது ஒன்று, கைம்மா என்றால் வேறு. கையை உடைய மா, விலங்கு, மிருகம் என்பார். கையை உடைய விலங்கு யானை. ‘கைம்மா வேட்டுவன் கனை துயில் மடிந்தென’ என்பது வீரைவெளியனார் என்னும் புறநானூற்றுப் புலவர் வரி. கைம்மலை என்றாலும் கையை உடைய மலை, யானை என்று பொருள் தருகிறது. அகநானூறு நிகண்டு. கைமா என்ற சொல்லறியாத் தமிழன் இல்லை. கொத்தின இறைச்சி என்று பொருள். இஃதொரு உருது மொழிச் சொல். Qima, கைமா என்பதைச் சிலர் கீமா என்பதுண்டு. அதற்காக அவரையெல்லாம் வெடிகுண்டு பொதிந்து வைக்க அட்டைப்பொட்டி வாங்க உதவியதாகக் குற்றம் சுமத்தி, வெளிப்படையான விசாரணை இன்றி 28 ஆண்டுகள் சிறையில் அடைக்க இயலாது. மையம் என்பதை மய்யம் என்று எழுது இலக்கண அனுமதி உண்டு எனில், கைம்மை என்பதைக் கய்ம்மை என்று எழுதவும் அனுமதி இருக்கலாம்.

புறநானூற்றின் ஆவூர் மூலங்கிழார் பாடல்,

‘கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

கழிகல மகடூப் போல’

என்றுரைக்கிறது. ஔவை துரைசாமிப்பிள்ளை உரை எழுதினார் :

‘கொய்ம்மழித் தலையொடு – கொய்யப்பட்ட மொட்டையாகிய தலையுடனே,

கைம்மை உறுக்கலங்கிய – கைம்மை நோன்பு மிகக் கலக்கமுற்ற,

கழிகல மகடூப் போல – ஒழிக்கப்பட்ட அணிகலத்தை உடைய அவன் மனைவியை ஒப்ப’ என்று அஃதாவது கைம்மை நோன்பு மேற்கொண்ட பெண்கள், தலைமயிர் மழிக்கப்பட்டனர். அணிகலன்கள் களைந்தனர் என்பது ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட செய்தி.

புறநானூற்றிலேயே கல்லாடனார் பாடல்,

‘முலை பொலியாக முருப்ப நூறி

மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்

ஒன்றுதல் மகளிர் கைம்மை கூர

அவிர் அறல் கடுக்கும் அம்மென்

குவை இரும் கூந்தல் கொய்தல் கண்டே !’

என்று பேசுகிறது. பொலிந்த முலைகளை அழல அறைந்து கொண்டு, அறிவு மயங்கி, அளவற்ற ஆரவாரத்துடன் அழுகிறார்கள், ஒளி வீசும் நெற்றியை உடைய மகளிர், கைம்மை நோன்பு மேற்கொள்ளும் போது, தமது கருமணல் ஒத்த அழகிய கூந்தல் களையும் போது, அவர் அழுவது கண்டு பிற மகளிர் எல்லாம் அழுதனர்’ என்பது பொருள்.

குறுந்தொகையில் ஒரு பாடல், கடுந்தோள் கரவீரன் பாடியது.

‘கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்

கைமை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன் புறழ் கிளை முதல் சேர்த்தி,

ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செடுக்கும்’

என்பது ஆறு வரிப்பாடலின் முதல் நான்கு வரிகள்.

கரிய கண்களை உடைய, தாவும் தொழிலில் தேர்ச்சி பெற்ற, ஆண்குரங்கு இறந்து பட்டது என்பதறிந்த அதன் பெண்குரங்கு, அன்பின் மிகுதியால் தனது பிரிவுத் துயர் எண்ணி வருந்துகிறது. மரம் தாவும் தொழிலை இன்னும் கற்றிராத தனது இளம் குரங்குக் குட்டியை சுற்றத்தினர் பொறுப்பில் விட்டு விட்டு, உயர்ந்த மலை உச்சியில் இருந்து பக்க மலையில் தாவிப் பாய்ந்து உயிரை விட்டு விடுகிறது. இது பாடல் வரிகளின் பொருள், கடுவன் குரங்கு இறந்த கைம்மையின் வேதனையைத் தாங்க ஒண்ணாது, சுயக்கொலை செய்து கொண்ட மந்தியின் சோகம் இப்பாடல்.

சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன், 1924ல் முதற்பதிப்பு கண்டது. அதில் கைம்பெண்டாட்டி என்றொரு பதிவு உண்டு. கைம்பெண்டாட்டி என்றால் விதவை என்று பொருளும் தருகிறது. கைம்பெண் எனும் சொல்லை முதன்முதலில் எவர், எங்கு, பயன்படுத்தினார் என்பதைக் கண்டு பிடிப்பது பல்கலைக் கழகங்களின் தமிழ்த்துறையின் பணி. அவர்களுக்கு நாமதைக் கட்டளை இட இயலாது. அந்த இடத்தில் நாம் இல்லை. ஆனால் தெள்ளத் தெளிவாக ஒன்று தெரிகிறது. 1924ல் பதிக்கப் பெற்ற சென்னைப் பல்கலைக் கழகத்துப் பேரகராதியில், கைம்பெண் என்ற பதிவு உண்டு. எனவே தமிழ்ச்சமூகத்தில் அச்சொல் வெகுசனப் பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும். நமக்குப் பிடித்தமானவரை வாழ்த்த வேண்டும், துதிக்க வேண்டும் என்பதற்காக, அவர்தான் முதன்முதலில் under wear அணிந்தார் என்பது நேரல்ல.

கள்ளம் என்ற சொல்லறிவேன். மௌனம் எனும் சொல்லும் அறிவேன். இரண்டும் இணைந்து ‘கள்ள மௌனம்’ எனும் சொல்லைப் பத்தாண்டுகளுக்கு முன்பு கையாண்டேன். எனக்கு முன்னும் அங்ஙனம் பேசப்பட்டிருக்கலாம். ஜெயமோகன் எழுதிவரும் ‘வெண்முரசு’ தொடர் நாவல்களில் சிலநூறு சொற்களை இவ்விதம் இணைத்துப் பரிமாறி இருக்கிறார். சர்க்காரியா கமிஷன் ‘விஞ்ஞான பூர்வமான ஊழல்’ எனும் சொற்றொடரைத் தமிழுக்குத் தந்தது.

‘புரட்சி’ எனும் சொல்லை மகாகவி பாரதியர் முதன் முதல் பயன்படுத்தினார் என்று மேடைகளில் முழங்கக் கேட்டிருக்கிறேன். இருக்கலாம். கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் மேற்சொன்ன லெக்சிகன், புரட்சி எனும் சொல், புரள் எனும் சொல்லின் பிறப்பு என்கிறது. 1) upsetting, over turning, பிறழ்வு 2) Disorder, ஒழுங்கின்மை 3) Anarchy, Revolution, அராசக நிலைமை என மூன்று பொருள் தருகின்றது.

1882ல் பிறந்த பாரதியிடம் இருந்து பெறப்பட்ட சொல்லாக புரட்சி இருக்கலாம். சங்க கால இலக்கியங்கள் புரட்சி எனும் சொல்லை ஆளவில்லை. மாணிக்க வாசகர் புரட்சி பேசவில்லை. சொற்களஞ்சியமான கம்பனின் இராமாயாணம், சுந்தர காண்டத்திலும் யுத்த காண்டத்திலும் புரட்டி, புரட்டல், புரட்டினார் என்று ஆள்கிறது. வீழ்த்தல் புரளும்படிச் செய்தல்,அலைத்தல் எனும் பொருள்களில்.

புரள், புரள்தல் எங்ஙனம் புரட்சி ஆயிற்று என்பதற்கு இலக்கணம் சொல்வார்கள் நல்ல தமிழாசிரியர்கள். புணர் – புணர்தல்-புணர்ச்சி; மருள்-மருள்தல்-மருட்சி; திரள்-திரள்தல்-திரட்சி; வறள்-வறள்தல்-வறட்சி; வெருள்-வெருள்தல்-வெருட்சி; கிளர்-கிளர்தல்-கிளர்ச்சி; புலர்-புலர்தல்-புலர்ச்சி; மலர்-மலர்தல்-மலர்ச்சி; குளிர்-குளிர்தல்-குளிர்ச்சி; பிறழ்-பிறழ்தல்-பிறழ்ச்சி; சுழல்-சுழல்தல்-சுழற்சி; அழல்-அழல்தல்-அழற்சி, புகழ்-புகழ்தல்-புகழ்ச்சி; இகழ்-இகழ்தல்-இகழ்ச்சி; நிகழ்-நிகழ்தல்-நிகழ்ச்சி; மிளிர்-மிளிர்தல்-மிளிர்ச்சி. அதுபோல இருள்-இருள்தல்-இருட்சி ஆகலாம். முயல்-முயல்தல்-முயற்சி. அஃதே போல் புரள்-புரள்தல்-புரட்சி ஆகலாம். முயற்சி செய்வோம் தோழர்களே, மோசடி செய்யாதீர் !

One Reply to “மெய்ப்பொருள் காண்பது அறிவு”

  1. தெற்க்கத்தி பகலவரின் சாதனைகளை உணராமல் நாம்தான் அவரை தவறாக நினைத்துவிட்டோமோ என்றிருந்தேன். நல்ல தமிழறிந்தோர் அருகிப் போனதனால் இந்த சொற்கொடை கதையும் வரலாறாகியிருக்கும்.
    நாஞ்சில் நாடன் அவர்களை சமூக நீதிக்கு எதிரானவர் என்று களமாட கூட்டம் கிளம்பும் அல்லவா இப்போது ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.