தான்சேன்

கூண்டை திறந்து விட்டாள் மோனிகா.பல வண்ணக் குருவிகள் கார் முழுக்க படபடத்தபடி பயத்தில் சுற்றி வர ஆரம்பித்தன.மூடப்பட்டிருக்கும் ஜன்னல் கண்ணாடிகளை முட்டி மோதினஅவைகளின் இறகுகள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தது..இருபது குருவிகள்வரை இருக்கலாம்உள்ளங்கைக்குள் பொத்திவிடக்கூடிய குருவிகள்.அவைகளின் கருமணிக்கண்களில் பதைப்பதை உணர முடிந்தது.யானையின் மயிறிழை போன்ற கால்கள் தவித்துபடி கிடைத்ததை பற்றி பின் உதறி விலகிப்பறந்தன.மோனிகா உறசாகமாக சிரித்தபடி அவைகளை பிடிக்க முயற்ச்சித்தாள்.நான் காரின் பின் சீட்டில் ஜன்னல் பக்கம் தலைவைத்தபடி கால் நீட்டி அவளை பார்த்துக்கொண்டிருந்தேன்.குருவிகள் என் மேல் விழுந்து பின் பறந்து அலைந்தன.

குடித்தபின் உனக்கு கிறுக்கு தொற்றிக்கொள்கிறது மோனி என்றேன்.அவள் அதை காதில் வாங்காமல் என்னைப்பார்த்து சிரித்தாள்.மோனிகாஒரு குருவியையாவது நீ பிடிக்க வேண்டும்பிடித்தால் பின் சீட்டிற்கு வருகிறேன்..இல்லையெனில் அப்படியே இறங்கிப்போய்விடுவேன்..நீ வேறு ஒருத்தியை தேடிப்போஎன்றாள்.

விளையாடாதே..ஜன்னலை திறக்கிறேன்..குருவிகள் போகட்டும்..நீ பின்னாடி வா..இல்லையெனில் எனக்கு கிறுக்கு பிடிக்கும் என்று கத்தினேன்..அவள் சிரிப்பதை விட்டு விட்டு கூர்மையாக என்னை பார்த்தாள். “ஒரு குருவியை பிடி..முடியவில்லையென்றால் இன்றிரவு உனக்கு நானில்லைஎன்றாள்.ஜூகு பீசச்சில் நள்ளிரவில் மூடப்பட்ட காருக்குள் என்ன நடக்கிறது என்று அருகிலிருக்கும் போலீஸ் கவனிக்க மாட்டார்கள்.கார் என்னுடையது என்பதும் அவ்வப்போது அங்கே இரவில் வந்து இளைப்பாறும் என்றும் அவர்களுக்கு தெரியும்.மேலும் இந்த காருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.

ஒரே ஒரு குருவியையாவது பிடி..இல்லையெனில் வேறொருத்தியை பிடி..நான் கிளம்புகிறேன் என்றாள் மோனி.இந்தியில் கேவலமான வசைச்சொல்லி சொல்லி அவள் கன்னத்தில் அறைந்தேன்.அவள் முன் பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.உன் கழுத்தை திருகி எறிவேன் என்றேன்.அவள் பதில் சொல்லவில்லை..நான் குருவிகளை பார்த்தேன்.அவை இன்னும் படபடத்தபடி சுற்றிக்கொண்டிருந்தன.

குருவிகளை கொல்லலாம் தவறில்லை..இல்லை இல்லை உளறுகிறேன்.அப்பா சொன்னது வேறு..குற்றவாளிகளை கொல்லலாம் தவறில்லை..அவர்கள் என்றும் திருந்துவதில்லை தான்சேன்..நூறுமுறைக்கு மேல் என்னிடம் அப்பா சொன்னது..அவர் சொல்லும் போது என் கண்களை உற்று நோக்கி என் சித்தம் அலையாதபடி என்னை அவர் சொற்கள் நோக்கி குவியச்செய்தபடி சொல்லுவார்..குற்றம் அவர்களது இயல்பு..அவர்கள் குற்றவாளிகளாகவே பிறக்கிறார்கள்.ஆம் இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும்..நான் என் இத்தனை வருட அனுபவத்தில் சொல்கிறேன்..அவர்கள் வளர்ப்பு குற்றத்தின் அளவுகளைத்தான் தீர்மானிக்கிறது.சின்னது பெரியது என..அவ்வளவே..அவர்கள் எந்த நல்ல பெற்றோர்களை பெற்றிருந்தாலும் நல்ல சூழ்நிலைகளில் வளர்ந்திருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாகவே வளர்வார்கள்.அவர்களை கொல்ல நீ தயங்க வேண்டியதே இல்லை.. 

அவர் சொன்னதை பற்றி சிந்திக்கிறேன்.என்னால் இப்பொழுது சிந்திக்கமட்டுமே முடியும்.உடலை என்னால் உணர முடியவில்லை.வலியை என்னால் உணரமுடியவில்லை.சத்தங்களை என்னால் உணர முடியவில்லை.ஆனால் என்னால் யோசிக்க முடிகிறது.நிச்சயம் இது கனவல்ல.என் வாழ்வின் எந்தப்பகுதியையும் நான் சட்டென சென்றடைந்து அதைப்பற்றி எண்ணிக்கொள்ள முடிகிறது..அப்படி வாழ்ந்தது சரியா தவறா என்றுகூட நான் இப்பொழுது ஆராயமுடியும் என்று தோன்றுகிறது.ஆனால் இப்பொழுது நான் எங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை .ரயிலிலேயெ கிடக்கிறேனா என்றும் தெரியவில்லை.அதற்கு வாய்ப்பிருக்காது.எவ்வளவு பெரிய ரயில் நிலையம்.எவ்வளவு மக்கள் நெளிந்தோடுகின்ற இடம்.என்னை அப்படி அவர்கள் வெகு நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.போலீசே இந்நேரம் என்னை மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள்.நான் அமைதியாக ஒரு கட்டிலில் சிகிச்சையில் இருப்பேன் என்றே நம்புகிறேன்.

ஏனென்றால் எனக்கு உயிர் இருக்கிறது என்று நம்புகிறேன்..ஒரு வேளை நான் கோமாவில் இருக்கிறோனோ?கோமாவில் இருப்பவர்கள் உள்ளூர விழித்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.வருடக்கணக்காய் சிந்திக்கமட்டுமே முடியும் என்றால் அது மரணத்தை விடக் கொடியது.எனது இந்த நிலை நாட்களாய் மாதங்களாய் வருடங்களாய் நீடித்துவிடக்கூடாது என்று பயப்படுகிறேன்.ஆனால் இத்தருணத்தில் நான் இந்த அமைதியான சிந்திக்கும் மனநிலையை விரும்புகிறேன் என்றே சொல்ல வேண்டும்..வெகு நாட்களாயிற்று இப்படி நான் என் எண்ணங்களை தொடர்ந்து..சூழ்நிலைகளை ஆராய்ந்து..மனிதர்களை புரிந்து கொள்ள முயன்று.

ஒரு தவம் போல அமைதியாய் யோசித்த காலம் எனக்குண்டு.குற்றவாளியின் மனம் செயல்படும் விதத்தை கூர்ந்து நோக்கும் பொறுமை எனக்கிருந்திருக்கிறது.எப்பொழுது தடுமாற ஆரம்பித்தேன் என்று இப்பொழுது என்னால் சொல்ல முடியும்.முதல் தடுமாற்றம் என் தந்தை சாகடிக்கப்பட்டபோது.கடைசித்தடுமாற்றம் என் கழுத்துக்கும் தோளுக்கும் இடையே பாய்ந்த துப்பாக்கிக் குண்டை உணர்ந்த போது.சப்தமற்று இறங்கும் ஒரு கத்தி போல பாய்ந்ததாக இப்போது எண்ணிக்கொள்கிறேன்.வலியில்லை.ஒரு திடுக்கிடல் மட்டுமே முதலில் இருந்தது..அதிவிரைவாக என்னை எவரோ முட்டித்தள்ளியது போல மறுகணம் உணர்ந்தேன்.அத்தடுமாற்றத்துடன் என் கையிலிருந்த பையை இறுக்கப்பிடித்துக்கொண்டு சரிந்தேன் என நினைக்கிறேன்.இப்பொழுதும் அந்த பையை பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன்.என்றாவது ஒருநாள் எனக்களிக்கப்படும் ஒரு பையை நான் தவறவிட்டுவிடுவேன் என்று எனக்குத்தெரியும்.

குருவிகளை தவற விடக்கூடாது.குறைந்தது ஒரு குருவியையாவது தவறவிடக்கூடாது.இல்லையெனில் இவளை என்னால் சுகிக்க முடியாது..எனக்கு இப்பொழுது இவள் தேவை..நாளையும்..வேறு பெண்கள் எனக்கு உவப்பானவர்கள் அல்ல..இவள் வந்த பிறகு அப்படி ஆயிற்று..இந்த தேவிடியாளுக்கு அது தெரியும்.அவள் திரும்பாமல் கடலை நோக்கியவண்ணம் முன் சீட்டில் அமர்ந்திருந்தால்..எழுந்தமர்ந்து மோனிகாவிடம் என்னை சோதிக்காதே என்னால் முடியாதுஎன்றேன்.

சலீமிடமும் மீண்டும் மீண்டும் அதை சொல்லி வந்திருக்கிறேன்.அவனுக்கு என் மீது அபார நம்பிக்கை.போலீஸாக என் செயல்பாடுகளை கண்டவிதத்தில் அவனுக்கு அப்படி தோன்றியிருக்கலாம்.நான் நிலைகுலைந்துகொண்டே போனதை அவன் அறியாமல் விட்டு விட்டது ஆச்சர்யம்தான்.

சலீம் மிகவும் சாமார்த்தகன்.அவன் ஒரு இண்டெலிஜென்ஸ் அதிகாரியைவிட மேலாக சிந்திக்கக்கூடியவன்.அதனாலேயே மும்பையின் இருட்டு உலகின் ராஜாக்களில் ஒருவனாக இருக்கிறான்.ஒரு டீஸ்பூன் அறிவு கம்மியாயிருந்தால் கூட என்னை போல் கறைபடிந்த போலீஸாக இருந்திருப்பான்.அவன் முழுமையாக இருந்தான்.ஆட்களை தன்னை நோக்கி நகர்த்தும் விதம் அறிந்தவன்.ஒரு கோப்பையில் இருந்து மறுகோப்பைக்கு தேநீரை சிந்தாமல் மாற்றும் விதமாய் ஆட்களின் மனதை மாற்றத்தெரிந்தவன்..என்னையும் மாற்றியவன்.கோல்பிகாவில் வைத்து சலீமின் எதிரி குண்டு ரஞ்சனின் இரண்டு கொலைக்கூலிகளை நான் சுட்டுகொன்றபின்தான் சலீம் என்னை வேறு கோப்பையில் மாற்ற எண்ணியிருக்கூடும்.நானும் தங்கச்சங்கிலி தண்ணீர் டம்ளரில் விழுவது போல் வழுக்கி விழுந்தேன்.

கல்கத்தாவில் ஒரு கான்ஸ்டபிளின் மகன் நான்.என் தந்தை ஜலால் மாலிக் அதில் பெருமையுடையவர்.என்னையும் போலீஸாக்கி பெருமைபட்டுக்கொண்டவர்.அவர் வார்த்தைகளே என்னை உருவாக்கியது எனலாம்.அவரின் வார்த்தைகள் என்னை சிரிக்காமலாக்கியது.சமரசம் கொள்ளாமலாக்கியது..முக்கியமாக குற்றவாளிகளை கொல்லச் சொன்னது.அப்பா மிகச்சரி என்று இப்பொழுதும் உணர்கிறேன்.நான் சந்தித்த எந்த குற்றவாளியிடமும் அவன் திருந்துவதற்க்கான எந்த மனநிலையையும் கண்டதில்லை.அடிகளும் வேதனைகளும் அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை என்று கண்டுகொண்டேன்.அது தண்டனை..ஏற்றுக்கொள்கிறோம்..ஆனால் இதைவிட்டு வெளியேற முடியாது என்று ஒரு குற்றவாளி கத்தினான்.புரிந்துகொண்டேன்.உடனடியாக அவன் கொல்லப்படக்கூடியவன் என்று தோணிய மறுகணம் அவனைக்கொன்றேன்..அதன் பின் நான் குற்றவாளிகளை சுட்டுக்கொண்டே இருந்தேன்.

ஆனால் ஒரு குருவி முன்னும் என்னால் துப்பாக்கியை நிலைநிறுத்த முடியவில்லை.. குருவிகள் இலக்கில்லாமல் பறக்கின்றன..அல்லது தங்கள் இலக்கை அடைய பறக்கின்றன்..ஒரு குருவியையும் என்னால் சுட்டு விட முடியாது என்று புரிந்தது.. “இது கிறுக்குத்தனமானது.. ஒழுங்காக பின்னாடி வா என்று மோனிகாவின் பிடறியில் துப்பாக்கியை வைத்து அழுத்தினேன்..அவள் ஒரு நல்ல நகைச்சுவையை கேட்டது போல் சத்தமிட்டு சிரித்தாள். பின் திரும்பி என் துப்பாக்கியை வாங்கி சீட்டில் வைத்து விட்டு என்னை பார்த்தாள். என்னை இழுத்து என் உதட்டில் ஒரு முத்தமிட்டாள்.. “எனக்கு இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது..நான் ஒரு குருவி..என்னில் ஒன்றை பிடித்துக்காட்டு.. பின்னாடி வருகிறேன்.. என்றாள்..அவளின் எச்சில் வாசம் என்னுள் எதையோ பிடித்து இழுத்தது.. சரி பிடிக்கிறேன்.. பிடித்தால் எனக்கு மேலும் ஒன்று வேண்டும் என்றேன்.. அவள் என்னை கூர்ந்து பார்த்தபடி..பொறுக்கி என்று சொல்லி சிரித்தாள். 

என்னுள் திமிர் ஏறியது..போலீஸ் திமிர்.என்கவுண்டர்கள் திமிரை வளரச்செய்தது..ஏழாவது என்கவுண்டருக்குப்பின் அந்த மதராஸி என்னை அழைத்தார்.என் உயரதிகாரி நல்ல பெருமாள்.இப்படிப்பட்டவர் என்று கணிக்கமுடியாத ஒரு மனிதராகத்தான் அவர் எனக்குத்தெரிந்தார்.ஒரு உயரதிக்காரியிடமிருந்து கிடைக்கக்கூடிய அனைத்து வசைச் சொற்களும் எனக்கு அன்று கிடைத்தன.தன் கணத்த உடலை நாற்காலியில் இருந்து எடுக்க முயற்ச்சிகாமலே அத்தனை கோபத்தையும் காட்டினார் என்பது ஆச்சர்யமே.முதல் ஆறு என்கவுண்டருக்கு என்னை தனியே அழைத்து பாராட்டியவர் அன்று அசிங்கமான சொற்களில் என்னை திட்டினார்.காரணம் நான் ஒருவாறு யூகித்ததே.அவர் ஏழாவது மனிதனின் உயிர் பாதுகாப்பிற்கு பணம் பெற்றுவிட்டார்.ஆனால் அவன் சாகடிக்கப்பட்டு விட்டான்.இப்பொழுது அவர் அவருக்கே உரித்தான ஒரு கடமையிலிருந்து வழுவிவிட்டார்.அதனால் அவர் வாங்கிய பணத்தைவிட அதிகமாக இழந்துவிட்டார்.இழப்பின் பயனாக நான் தோட்டாக்களற்ற துப்பாக்கியாய் இருந்தேன்.

மேலும் என் என்கவுண்டருக்கான சன்மானத்தை என் தந்தை பெற்றுக்கொண்டார்.அவரின் காதுகள் வழியாக குண்டு பாய்ந்திருந்தது.முகம் வீங்கி விகாரமாய் ரத்தம் கொப்பளிக்ககிடந்தவரின் அருகிலேயே என்னால் செல்லமுடியவில்லை.முதல் முறை ஒரு கொடுரமான மரணத்தை பார்க்கிறேன் என்று ஒரு உணர்வு எழுந்தது.நான் சுட்டுக் கொன்ற குற்றவாளிகளை என்னால் என் தந்தையின் உடலோடு ஒப்பிட்டுப்பார்க்கமுடியவில்லை.நிலைகுலைந்து போனேன்..ஆனால் மதராஸி நிதானமாக மும்பை குற்ற நகரம்,மிகவும் விஸ்தாரமானது.அதில் உன் தந்தையை கொன்றவனை நீ கண்டுகொண்டாலும் அவன் அக்குற்றத்தின் கடைசிக்கன்னியாகவே இருப்பான்,ஒரு நாளும் நீ தொடக்கத்தை அறியமுடியாது என்றான்.அப்பொழுதும் அவன் நாற்காலியிலேயே சரிந்து அமர்ந்திருந்தான்.அதிலேயே வைத்து புதைக்கப்பட வேண்டியவன் போல..

அதன்பின் நான் ஒழுங்கற்றவன் ஆனேன்.எதையும் தொடர்ச்சியாய் சிந்திக்கமுடியாதவனானேன்.ஸ்டேஷனில் இருந்து வெளியே செல்லாதவனானேன்.ஆனால் என் தந்தையை கொன்றவனுக்காக நான் இரவுகளில் அலைந்தேன்.எனக்கு எதுவுமே புலப்படவில்லை..அனைத்துவிதமான குற்றவாளிகளையும் கடந்தேன்..என் தந்தையின் சாவு ஒரு பொருட்டே அல்ல என்று நான் நினைக்கும் படியான குற்றங்களை கடந்தேன்..பின் ஒருநாள் எனக்கு புரிந்தது..நான் என் தந்தையை கொன்றவனை பிடித்தாலும் அவனை கொல்லமுடியாத வெற்றுத்துப்பாக்கியாய் இருந்தேன்.

என்ன செய்வதென்று தெரியவில்லை..குருவிகள் சுற்றிப்பறக்கின்றன.ஆனால் கைக்கு அகப்படுவதாய் இல்லை..ஒரே ஒரு குருவி போதும் எனக்கு..இன்றைக்கு காமமில்லால் உறங்குவதை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை..ஒரு குருவி..இல்லையேல் இவள் உயிர்..கைவீசிவீசி அலைந்தேன்..எத்தனை லாவகம் குருவிகளுக்கு..இல்லை எத்தனை தடுமாற்றம் என் கைகளுக்கு..மோனி தன் மேலாடையை கழட்டி பிராவுடன் என்னை பார்த்தால்.. “ பிடி..இல்லையேல் உனக்கு ஒன்றுமில்லைஎன்றாள்.

அப்பொழுதுதான் மும்பை அந்தேரியில்,ஒரே இடத்தில் நான்கு மரணங்கள் நடந்தன.மறுநாள் சலீம் என்னை சந்தித்தான்.ஒல்லியாய் உயரமாய் சிரித்தமுகத்துடன் அவனை மதராஸியுடன் கண்டேன்.சலீம் நிழலுலகின் ராஜாக்களில் ஒருவன்.அவனுடைய குற்றங்களுடன் எனக்கு எந்த விசாரனையும் இதற்கு முன் இருந்ததில்லை.குண்டு ரஞ்சனே எனக்கான எதிரி.சலீம் மிகவும் மென்மையானவனாக தோன்றினான்.அவன் பேசுவது தேர்வு செய்யப்பட்ட சொற்களால்.ஒரு தத்துவக்கவிதை போல..அண்ணா என்று இந்தியில் அழைத்தான். “பையா எனக்கு பிடித்தமானவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்காக நான் ஒரு கொலை செய்வதுண்டு..ஒன்றே ஒன்றுதான்..அதோடு அவர்களுக்கான கடன் முடிகிறது..உங்களுக்காக நான் நான்கு கொலைகளை செய்திருக்கிறேன.அவர்கள் உங்கள் தந்தயை கொன்றவர்கள்.நீங்கள் எனக்கு கடன் பட்டிருக்கிறீர்கள்என்றான்.அவனிடம் அதற்கான ஆதாரம் இருந்தது..அதைவிட அது எனக்கு ஏற்புடையதாயிருந்தது.சலீம் குண்டு ரஞ்சன் குழுவிலிருந்து எனக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றான்.

பதிலுக்கு சலீம் உன் இன்ஸ்பெக்ட்டருக்குண்டான அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்வார் என்றான் மதராஸி.நான் எதுவும் பேசவில்லை,அவனே பேசினான்.என் பதில் என்னாவாய் இருக்கும் என்று தெரிந்தே அவன் வந்திருப்பான்.எனக்குண்டான சன்மானம் வழங்கப்பட்டுவிட்டது என்பதை இருவரும் அறிந்தே இருந்தோம்.

சலீமுடன் என் சந்திப்பு மதராஸி உயரதிகாரிக்கு திருப்தியை தந்தது என்பதை அதற்கப்புரமான சந்திப்புகளில் தெரிந்துகொண்டேன்.மீண்டும் தோட்டாக்கள் நிரம்பிய ஒரு துப்பாக்கியானேன்.மீண்டும் குற்றவாளிகளை என் துப்பாக்கி சுட்டுவீழ்த்தத்துடங்கியது.ஆனால் அது ஒருதரப்பு குற்றவாளிகளை மட்டும்.நான் மிகவும் சரியாக சலீமால் திருத்தப்பட்ட வடிவமானேன்.அவன் என்னிடம் எந்த ஒரு செயலையும் அவனுக்காக நான் செய்யும் உதவி போல் மாற்றுவான்.அது என் கடமை என்பது போல இருக்காது.அவனுக்காக நான் இறங்கிவர வேண்டும் என்பது போல கெஞ்சலாக இருக்கும் அவன் வார்த்தைகள்.அதை என்னால் மறுக்க முடியாது.அவனிடம் எதையும் இனி என்னால் மறுக்க முடியாது என்று எனக்கு புரிந்தது..பணம்,ஆயுதம்,போதைப்பொருள் கைமாறும் இடங்கள் எனக்குத்தெரிவிக்கப்பட்டன.அவ்விடத்திற்கு நானே பாதுகாப்பு.சரியான முறையில் கைமாற்றம் நடைபெறுவதற்கு நானே பொறுப்பு.குண்டு ரஞ்சன் குழுவின் இடையூரை நானே சுட்டு வீழ்த்தி கைமாற்றத்தை காக்க வேண்டும்.பொது இடத்தில் ரஞ்சன் ஆட்களை சுட்டுக்கிடத்தினேன்.அத்தோடு நின்றிருந்தாலும் நான் இப்பொழுதுபோல மரணவாசலில் தான் நின்றிருப்பேன்.ரஞ்சன் குழு வலுவடைய,சலீம் என்னை நேரடியா கைமாற்றம் செய்ய வைத்தான்.ஒரு அவசரகதியில் என்னிடம் பையை ஒப்படைத்து,இறைஞ்சும் தொனியில் பேசி அனுப்பினான். “பையா..இந்த ஒரு முறை மட்டும்..இனி உங்களை தொந்தரவு செய்தால் அல்லாவே என்னை மன்னிக்க மாட்டார்எனக்கு நீங்கள் அவ்வளவு செய்திருக்கிறீர்கள்.

போலீஸ் உடையிலும்,சாதாரண உடையிலும் நான் பைகளை சுமக்க ஆரம்பித்தேன்.அரசு வழங்கப்பட்ட துப்பாக்கி உறையில் கிடக்க,கள்ளத்துப்பாக்கி என் கைகளில் இருந்தது.என் குற்றங்கள் கண்டு கொள்ளப்படாமல் ஆயின.மதராஸி அடிக்கடி அவன் வீட்டிகு என்னை குடிக்கு அழைத்தான்.கூடுதல் அதிகாரம் வழங்கினான்.ஒரு மலேசியப்பயணம் சலீமுடன் நடந்தது.பார் டான்ஸர்கள் என் வீட்டிற்கு வரத்தொடங்கினர்.மோனிகா வந்தாள்.எல்லாம் என் முன்னால் நான் பார்த்துக்கொண்டிருக்க எனக்கு நடந்தது.தினசரியை மெலோட்டமாக மெலோட்டமாக பார்ப்பது போல் நானே என்னை மேலோட்டமாக பார்த்துக்கொண்டு நின்றேன்.இரவின் பயங்கரங்கள் எதுவும் எனக்கு நினைவில் இல்லை..ஒரு டான்சரை வெளியில் அழைத்து சேல்லும் செலவு கணக்கு மட்டும் யோசித்தேன்.பின் அதையும் சலீம் யோசிக்க விடவில்லை.பணத்தை பெண்கள் என் பாக்கெட்டில் இருந்து துழாவி எடுத்தாலும் எங்கேயோ இன்னும் சில நோட்டுகள் ஒட்டிக்கொண்டிருந்தது.சலீம் எனக்கு தந்த பணம் எவ்வளவு என்பது எனக்கு தெரியாது.ஒரு நாளும் நான் எண்ணியதில்லை.பணம் தீர்ந்ததும் சொல்லி வைத்தார் போல எனக்கு மீண்டும் சலீம் பணம் தந்தான்.

என் தலைக்கு மேலே மேலும் பல விளையாட்டுக்கள் அதிகாரவர்க்கங்களுக்குள் நடந்தது.சலீம்,ரஞ்சன் குழுக்களிடையேயான தற்காலிக சமரசத்திற்கு மதராஸி என்னை உபயோகப்படுத்தினான்.மதராஸியின் அறையில் நடந்துகொண்டிருந்த சமரசத்தின் போது நான் அழைக்கப்பட்டேன்.கறுத்த பெரும் நீர் யானைபோல் இருந்த குண்டு ரஞ்சனை நான் முதல் முதலாக நேரில் பார்த்தேன்.சலீம் எழுந்து வந்து என்னை அணைத்து அவன் பக்கத்தில் அமர்த்தினான்.சலீமே பேசினான்.அவன் முகம் சிரித்தவாறே இருந்தது.பையா என்று அன்பொழுகப்பேசினான்.மதராஸி எனக்கு துணையிருப்பதாய் என்னிடம் சொன்னார்.ரஞ்சன் வெறுமனே சிரித்துவிட்டுச்சென்றான்.மறுநாள் லஞ்சம் வாங்கியதாக நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.ரஞ்சனின் கோரிக்கை அது.அதற்குப்பதிலாக இனி உன் உயிருக்கு ஆபத்தில்லை என்று நிம்மதிப்பெருமூச்சுடன் சொன்னான் சலீம்.

என்னிடம் இப்பொழுது கள்ளத்துப்பாக்கி ஒன்று மட்டுமே இருந்தது.நான் வெறுமனே ஒரு கைமாற்றும் ஆளானேன்.பெரும்பாலும் நான் அரை மயக்கத்தில் இருந்தேன்.அதிகமாய் எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை.நான் மிகவும் அழுக்காக இருப்பதாக மோனிகா சொன்னாள்.எனது பேச்சு வழக்கு மோசமாக மாறியதாக கொஞ்சியபடி சொன்னாள்.அவளை புணரும் போது இருப்பது போலவே நான் எப்பொழுதும் இருக்கிறேன் என்றாள்.கொஞ்சம் உளறல் போல,யாரிடம் பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவது போல,வேறு வேறு மனநிலைகளில் இருப்பது போல..இன்னும் என்னென்னவோ சொன்னாள்.நான் எதையும் யோசிக்கவில்லை.குருவிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு கருஞ்சிவப்பு குருவி என் தோள் மேல் அமர்ந்தது..நான் அசையாமல் அதை கவனித்தேன்.. “நீ அத பிடிச்சிடுவஎன்று சொல்லியபடி தன் பிராவின் பின் ஹூக்கை கழட்டினாள்.அதை நான் பார்த்தகணம் அக்குருவி பறந்தோடியது..

ஆனால் மீண்டும் ரஞ்சனுக்கும் சலீமிற்கும் பிரச்சனை வந்தபோது நான் கொஞ்சம் யோசித்தேன்.குற்றவாளிகள் எல்லோரிடமும் அடியாழத்தில் உயிர்பயம் இடைவிடாது சத்தமிட்டுக்கொண்டே இருக்கிறது.சலீமிடம் இது பற்றி பேச நான் முயற்சித்தபோதுதான் நான் அன்று நின்று கொண்டிருக்கும் இடம் எதுவெனத்தெரிந்தது.நான் சலீமை நேரடியாக பார்க்கும் அறுகதையை இழந்திருந்தேன்.ஒரு கடைநிலை ஊழியனாக என்னை சலீமின் அலுவலகத்தில் பாவித்தனர்.என்னை அலுவலகத்திற்கு வரக்கூடாது என்றனர்.எப்பொழுதும் போல் மறைந்தே இருக்கும்படியும்,வேலைக்கான செயல்பாடுகள் வேறு ஒருவர் மூலம் வரும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

ஒரு வாரம் கழித்து என்னை சலீம் சந்தித்தான். “ ஏன் பையா இப்டி இருக்க?உனக்கென்ன பிரச்சனை?பணம் எவ்வளவு வேணுமோ வாங்கிக்கோ..மட்டமான பாருக்கு போகாதா..ஸ்டார் ஹோட்டல்ல போய் குடி..இப்டி கிறுக்கன் மாதிரி திரியாதஎன்று கண்டித்தான்..கண் கலங்கினான்..பழைய போலீஸ் அதிகாரி போல் மாறவேண்டும் என்றான்.நாளை மீண்டும் சந்திக்கிறேன் என்றான்.அன்று முழுவதும் நான் பழையபடி மாறுவதை யோசித்துக்கொண்டே இருந்தேன்.ஒரு பெரும் அபத்தம் அது.பழையபடி என்று சொல்வதே எனக்கு சிரிப்பாக இருந்தது.இருந்தாலும் அப்படி மாற வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டேன்.இரவு வரை எப்படி இனி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.முதலில் சவரம் செய்துகொள்ளவேண்டும்.

ஆனால் மறுநாள் நான் என் அழுக்கு சட்டையுடனும்,சவரம் செய்யப்படாத முகத்துடனேயே சலீமை சந்தித்தேன்.சலீம் வெகுநேரம் என்னை வைத்துக்கொண்டே ஏதோ சிந்தனையில் இருந்தான்.ஒரு முடிவுக்கு வரமுடியாதவனாய் மலச்சிக்கல் கொண்டவனைப்போல் முகம் சுருங்கி வீங்க யோசித்துக்கொண்டிருந்தான்.பின் வேறு வழியில்லாதவன் போல என்னிடம் தயங்கியபடி பேசத்தொடங்கினான்.

பையா,பெரிய விசயம் இது.கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி.இந்த வேலையில ஆள் முக்கியமில்ல.பொருள்தான் முக்கியம்.நம்மகிட்ட இருக்கிற பொருள்தான் குண்டு ரஞ்சனுக்கு முக்கியம்.நம்மகிட்ட பொருள் வாங்குற ஆளுங்க இந்தியா வந்தாச்சு..பணம் இங்க வந்திருச்சு.சென்னை,ஹைதராபாத் வழியாபாதி கிழிந்த 500தாளை பத்திரமாக என்னிடம் நீட்டினான்.இடம் சொன்னான்.இந்த விசயம் ரஞ்சனுக்குத்தெரிஞ்சிருக்கலாம்.அதான் பிரச்சன.நீங்கதான் பொருளை குடுத்துட்டு பணத்தை பாத்து எடுத்திட்டு வரணும் என்றான்.நான் யோசித்தவாறே அமர்ந்திருந்தேன்.பின் சலீமிடம் சொன்னேன். “நீ சொல்றமாதிரி என்னால எப்பவும் பழையபடி மாற முடியாது.ஆனா இப்போ இருக்குற இந்த பைத்தியக்கார நிலைமையில இருந்து நான் மாறனும்னு நெனைக்கிறேன்,இந்த வேலை முடிஞ்சதும் என்னை விட்டுடுஎன்றேன்.சலீம் பையா என்று எதையோ சொல்வதற்குள் நான் எழுந்து கிளம்பினேன்.

சலீம் ஓடி வந்து என்னை கட்டி அணைத்தான்.என்னால் அவன் அடைந்த லாபங்களை பட்டியலிட்டான்.உடன் பிறந்தவனைப்போல் நீ என்றான்.அவன் வார்த்தையில் பொய் இல்லை என்பதை என் அகம் உணர்ந்தது. “நீ போ பையா..எங்கயாச்சும் போ..எவ்வளவு பணம் வேணும்னாலும் வாங்கிக்க..குடும்ப பொம்பளையா பாத்து கட்டிக்க புள்ள பெத்து வாழு பையா..எப்பவும் மும்பைக்கு வராதா..என்ன அப்பொ அப்போ நினச்சுக்கஎன்றான்.

ஒரு வாழ்க்கை..எந்த அழுக்குகளும் இல்லாத வாழ்க்கை..நினைக்க ஆனந்தமாய் இருந்தது..ஒரு துண்டு இனிப்பு போல.ஆனால் அப்படி இனி வாழக்கூடியவனா நான் என்று எனக்கே சந்தேகமாக இருந்தது.சலீமை கட்டி அணைத்தேன்.எங்கு செல்வது என்று தெரியவில்லை என்று அழுதேன்.சலீம் என்னை துபாய்க்கு போ என்றான்.எனக்கும் அது சரியெனப்பட்டது.பொருளை மாற்றிவிட்டு வந்துவிடு..கடைசி வேலை என்றான்.இன்னும் போலீஸ் புத்தி கொஞ்சம் இருந்ததால் அவனை சந்தேகித்தேன்..என்னை முன் செல்லவிட்டு இவன் என்னை கொல்லலாம்.நிழலுலகில் ஒருவன் தேவைப்படாதன் என்றால் அவன் மரணமடைந்து விட்டவன் என்றே அர்த்தம்..தப்பித்துப்போய் வாழ்வதென்பது நடவாது.சலீமை உற்றுப்பார்த்தேன்..அவன் புரிந்து கொண்டான்.பொருளை வேறு ஆட்கள் மூலம் நான் மற்றிக்கொள்கிறேன் என்றான்.நான் தயங்கி இல்லை நானே செல்கிறேன் என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியே வந்தேன்.

சுட்டால் சுட்டு கொல்லட்டும் என்று தோன்ற ஆரம்பித்தது..அது ஒரு கழிவிரக்கம் என்று உணர்ந்து கொண்டேன்.ஆனால் தப்பித்து போய்விட வேண்டும் என்று பதற ஆரம்பித்தேன்..சலீம் என்னை கொல்ல மாட்டான் என்று எனக்கே நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன்.அதற்கான காரணங்களை வகுத்தேன்.காசை சுண்டுவிட்டது போல் பூவும் தலையுமாக மாறி மாறி மனம் சுழன்றது.பொருளை எடுத்துக்கொண்டு பயணிக்கையில் தெரிந்து போயிற்று நான் சேருமிடம் சேரப்போவதில்லை என்று.ரஞ்சனின் ஆட்கள் என்னைச் சுற்றி இருப்பதை உணர்ந்தேன்.அடுத்த சில நொடிகளில் சுடப்பட்டேன்..

ஆம் சுட்ட வலியை இப்பொழுது உணர்கிறேன்.வலியை மட்டுமல்ல உடலை..சப்தங்களை..வாசனைகளை..என் கோமா தெளிந்துவிட்டது போல..கண்களை திறக்க வேண்டும்..சுற்றிலும் பார்க்க வேண்டும் என ஆசை பீறிட்டது..உலகத்துடன் இவ்வளவு ஒன்றி இருக்கிறேனா என்பதே ஆச்சர்யமாக இருந்து..கழுத்துப்பக்கத்தில் கொடும் வலி..ஆம் உணர்கிறேன்..உயிரோடு இருக்கிறேன்..கண்ணீர் வழிகிறது..மெல்ல கண் திறந்தேன்..மருத்துவமணைதான்..இனி பயமில்லை..கோமா இல்லை..மரணம் இல்லை..எவளையாவது கட்டிக்கொண்டு வாழ வேண்டும்..போதை இல்லாமல் உறங்க வேண்டும்.ஆல்கஹால் வாசனை இல்லாத ஒரு பெண் வேண்டும்..என்னைப்போலவே ஒருவன் வேண்டும்..நான் தவறவிட்டதை எல்லாம் தவறவிடாத ஒரு பிள்ளை வேண்டும்..இறுதி வரை அவனுக்கு காவலாக இருக்க வேண்டும்..ஏன் மனம் இப்படி துடிக்கிறது..அனால் இவை எல்லாம் என்னுள் எப்பொழுதும் இருந்ததுதான் என்று இப்பொழுது புரிகிறது.கதறி அழ வேண்டும் போல் இருந்தது..தேய்த்து குளிக்க வேண்டும் என்று தோன்றுகிறது..ஒரு ஆற்றீல் நீராட வேண்டும்..அதன் கரையில் படுத்துக்கிடக்க வேண்டும்..ஆரோக்யம் மட்டும் குடு என்று அல்லாவை வேண்ட வேண்டும் என்று தோன்றியது.பணம் வேண்டாம்..ஆட்கள் வேண்டாம்..போதை வேண்டவே வேண்டாம் அல்லாவே..

மோனிகா என் தலை மாட்டில் நின்றிருந்தாள்..அழுத முகம்..வீங்கிய கண்கள்..நல்லவள்.இவளை விட எந்த குடும்ப பொம்பளை வேண்டும்.ஒண்றுமில்லை என்றாள்.நான் மெதுவாக தலையாட்டினேன்.

சலீம் கண்கள் கலங்கியவாறு என் அருகில் வந்தான்..நான் விசும்பி அழுதேன்.உடலெங்கும் வலித்தது.அவன் கண்களை துடைத்துக் கொண்டான்.பையா என்று குரலுடைய அழைத்தான்.நான் அவன் கைகளை பற்றிக் கொண்டேன்.நாந்தான் நீங்கள் போக வேண்டாம் என்றேனே என்றான்.நான் பரவாயில்லை என்று தலையாட்டினேன்..புதிதாய் பிறந்திருக்கிறேன் என்று சலீமிடம் சொல்ல முயலும் முன் அவன் சொன்னான்..வேண்டாம் பையா போதும்..நீங்க போயிடுங்க..இது எதுவும் வேண்டாம்..இனி எந்த கஷ்டமும் நான் உங்களுக்கு குடுக்க மாட்டேன் என்று விசும்பியவாறு சட்டென எழுந்து சென்றான்..நான் ஒரு கணத்தில் அந்த மஞ்சள் குருவியை பிடித்துவிட்டேன்.அது என் விரலிடுக்கில் சிக்கிக்கொண்டது.முகத்தருகே கொண்டு வந்து பார்த்தேன்.அது விரலிடுக்கில் சிக்கி நசுங்கியிருந்தது.அதற்கு உயிரில்லை.சலீமின் ஆள் ஒருவன் என் கால்களை இறுக்கிப்பற்றிக்கொள்ளநீ குருவிய பிடிச்சிட்ட தான்சேன் என்று கூவியபடி மோனிகா என் தலை அருகே வந்தாள்..குற்றவாளிகளை கொல்வதொன்றும் தவறில்லை..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.