ஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு

புத்தகத்திற்கான பீடிகை போதும். புத்தகத்தை கொஞ்சம் மேம்போக்காக பார்த்து விடலாம்:

  1. தன்னுடைய அணுகுமுறைக்கு “காரண நியாயம்” என ஜுடேயா பெர்ல் பெயரிட்டு இருக்கிறார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ‘ஏன்’ என்பதையும் ‘எப்படி’ என்பதையும் ஊகிக்கும் திறனை – மனிதர் மட்டுமே அறிவாரா?
  2. காரண ஆய்வின் அடிப்படையில் “செயற்கை நுண்ணறிவு” உடனே பூத்துக் குலுங்காது. அதற்கு இன்னும் பல படிக்கட்டுகளும் தடைகற்களும் உள்ளன. ஆனால், “காரண நியாய”த்தை கணினிக்கு கற்பிப்பதன் மூலம், சற்றே புரட்சி பூக்க செய்யலாம்.
  3. தற்போதைய “எந்திர தற்கற்றல்” முறைகள் எல்லாமே ஒட்டுறவு (Correlation) மற்றும் கருத்துத்தொடர்பு (association) கொண்டே நடக்கிறது. சிந்தனை முறையில் இது எளிமையான பால பாடம். ஆனால், இது மழலைக் காலத்திலேயே தேங்கி நிற்கிறது.
  4. கோழி கூவியவுடன் பொழுது விடிவதை கணினி பார்த்துக் கொண்டே இருக்கிறது. கோழி கூவாவிட்டால் சூரியன் உதிக்க மாட்டார் என முடிவு செய்கிறது. இது ஒட்டுறவு.
  5. அலாஸ்காவில் இருக்கிறோமா? எந்த பருவகாலத்தில் இருக்கிறோம்? தற்போது என்ன நேரம்? என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்காமலே புரிந்து கொள்வது “எந்திர தற்கற்றல்”.
  6. மனிதருக்குப் புரிகிற விஷயத்தை எந்திரங்களால் விளக்க இயலும். ஆனால், அனுமாணிக்க முடியாத விஷயங்களையும், காரண நியாயங்களோடு, சுவாரசியமான தர்க்கத்தோடு விளக்க தற்கால கணினியால் இயலவில்லை. அதுதான் உண்மையான “எந்திர தற்கற்றல்”.
  7. உள்ளே கோபம் புகைந்து கொண்டிருந்தாலும், முகத்தில் புன்சிரிப்போடு மனிதரால் அளவளாவ இயலும். எள்ளலுக்கும் நகைச்சுவைக்கும் உள்ள வித்தியாசத்தை, எக்காலமும் அறிந்துகொள்ள கணினியால் இயலாமல் போகலாம். சொல்லப் போனால் அதற்கான அவசியமும் கிடையாது. ஆனால், ஒருவரை நம்பி முதலீடு செய்யலாமா என புரிந்து கொள்ள கணினியால் முடியலாம். அந்த முடிவிற்கு வந்த காரணத்தையும் விளக்கலாம். இது “காரண நியாயம்”.
  8. கணினிக்கு சதுரங்க ஆட்டத்தைப் புரிந்து கொள்வது எளிது. ஆனந்த், காஸ்பரோவ் போன்ற #1 ஆட்டக்காரர்களை வீழ்த்துவது கூட முடியும். ஆனால், சாலையில் மனிதர் எப்படி நடந்து கொள்வார், எவ்வாறு வண்டி ஓட்டுவார் என புரிந்து கொள்ள இயலுமா? கணினியால் நம்மை விட லாவகமாக, வேகமாக வண்டியோட்ட முடியும். ஆனால், நம்மைப் போல், நம்முடன் வண்டியோட்ட இயலுமா?
  9. “செயற்கை நுண்ணறி”வினால் இதையெல்லாம் தானாகவே கற்றுக் கொள்ள வைக்க “ஆதார காரணம்” உதவுகிறது. மனிதரை எது தூண்டி எவ்வாறு இயங்க வைக்கிறது? நம்முடைய பயமாக இருக்கலாம்; இறப்பின் அச்சமாக இருக்கலாம்; விளையாட்டாக இருக்கலாம்; சவாலாக இருக்கலாம்; கிண்டலாகக் கூட இருக்கலாம். அந்த நியாயங்களை எல்லாம் கணினிக்கு புரிய வைக்க வேண்டுமா?
  10. கணினியால் முகத்தைப் பார்த்தவுடன் ஆளை கணிக்க இயலாமல் போகலாம். ஆனால், மனிதரைப் போல் காரணம் இல்லாமல் ஒரு விஷயத்தை நம்பாமல் இருக்கும். கணினியால் நோயாளியைப் பார்த்தவுடன் வியாதியை கண்டுபிடிக்க இயலாமல் போகலாம். ஆனால், மனித மருத்துவரைப் போல் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான விஷயங்களையும் கருத்தில் கொண்டு தன் முடிவிற்கான நியாயத்தை நிறுவ முடியும்.

வாலியின் உதவியைக் கோரி இருந்தால் ராவணனை மிக மிக எளிதாக ராமன் வென்றிருப்பான். எனினும் சுக்ரீவனின் உதவியை ஏன் ராமன் நாடினான்? இவ்வாறு யோசிப்பது எதிர்மெய் (அ) மறு உண்மை. ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு பதில், இன்னொரு பாதையை எப்படி நாடிச் செல்கிறோம், என்று யோசிப்பது எதிர்மெய் (அ) மறு உண்மை. இப்படி முடிவெடுப்பதற்கு மாற்றாக, அந்த மற்றொரு முடிவை எடுத்தால் என்ன ஆகும் என்று பின் விளைவுகளை புரிந்து கொள்வது எதிர்மெய் (அ) மறு உண்மை. பதின்ம் வயதில் பார்த்த அந்தத் தோழமையிடம் உங்கள் காதலைச் சொல்லி மணம் முடித்திருந்தால் உங்கள் வாழ்க்கை இன்று எப்படி இருக்கும் என்று எண்ணி பார்ப்பது எதிர்மெய் (அ) மறு உண்மை. 9 முதல் 5 வரை உழைக்காமல், சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்து, உங்களின் லட்சியப் பாதையில் தொடர்ந்தால் நாளைய மகிழ்ச்சி எவ்வாறு நிறைவாக இருக்கும் என்று கணக்கிடுவது எதிர்மெய் (அ) மறு உண்மை. மூலக்காரணங்களின் அடிப்படையில், அறிவியல் பூர்வமாக இதை எவ்வாறு நியாயப்படுத்துவது என்பதை ஜுடெயா பெர்ல் புத்தகத்தில் பத்து அத்தியாயங்களில் விளக்குகிறார்.
குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் புரிய வைத்து விடலாம். ஆனால், கணினிகள் அவ்வாறு எளிதில் நம் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது. எந்த விஷயத்தையும் குழந்தைக்குக் கூட புரிகிற மாதிரி விளக்க வேண்டியது திறன்மிக்க, பண்பட்ட மனிதர்களின் மாண்பு. நெருப்பென்றால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கலாம். தொலைக்காட்சித் திரையில் தீ தகதகவென்று எர்ந்தால் தொட்டுப் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் புரிய வைக்கலாம். இந்த வித்தியாசத்தை, கணினிக்கு தானாகவே விளங்கிக் கொள்ளுமாறு எப்படி புரிய வைப்பது? எந்தக் காரணத்தால் கையைச் சுட்டுக் கொள்வது மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக உள்ளது என்பதை பல வகையிலும் ஆராய்ந்து, இறுதி முடிவிற்கான அடிப்படை நியாயத்தை விளக்கச் சொல்லலாம்?
அறிந்தததைக் கொண்டு அறியாததைப் பற்றிக் கருத்துக் கொள்வதை கீழே இருக்கும் படம் மூலம் விளக்கலாம்:

இந்தப் பொறி கொண்டு ஊகிப்பதற்கு மூன்று விஷயங்களை உள்ளே தள்ள வேண்டும்.
1. ஊகம், கற்பிதம்
2. கேள்வி
3. தகவல், தரவு
அவற்றைக் கொண்டு இந்தப் பொறி மூன்று விஷயங்களை வெளியே துப்பும்:
1. கொடுத்த உள்ளீடுகளைக் கொண்டு விடையை ஊகிக்க இயலுமா? இயலாதா?
2. கேட்ட கேள்விக்கான விடையை மதிப்பிட இயலும் என்றால், எந்தக் கேள்விக்கான விடையை எவ்வாறு கணிப்பது?
3. உத்தேசமாக எவ்வளவு துல்லியமாக விடையை அறுதியிட்டுச் சொல்ல இயலும்?
ஒரு எளிய உதாரணம் கொண்டு இதைப் பார்க்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களின் சராசரி உயரம் எவ்வளவு என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
அ) தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்துப் பெண்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆ) ஒவ்வொருவரின் உயரத்தையும் அளவெடுக்க வேண்டும்.
இ) மொத்த உயரத்தை, மொத்த பேர்களைக் கொண்டு வகுத்தால், சராசரியை கணக்கெடுக்கலாம்.
இதெல்லாம் நடக்கிற காரியமா? நிஜத்தில் என்ன செய்வோம்:
அ) மாவட்டத்திற்கு – தலா பத்து பேரை பிடிப்போம்.
ஆ) இவர்கள் எல்லோரின் உயரத்தையும் அளப்போம்.
இ) இந்த சராசரிக்கும், மொத்த தமிழ்ப் பெண்களின் உயர சராசரிக்கும் பெரும்பாலும் வித்தியாசம் இருக்காது என்று சொல்வோம்.
இந்த உதாரணத்தில்
1. ஊகம், கற்பிதம் = தமிழ்நாட்டில் தமிழ்ப் பெண்கள் மட்டுமே வசிப்பார்கள்.
2. கேள்வி = மகளிருக்கான நுழைவாயில் வைக்கும் போது, அவர்கள் தலை இடிக்காமல் உள்ளே வர எவ்வளவு உயரம் வைக்க வேண்டும்?
3. தகவல், தரவு = மாவட்டவாரியாக பத்து பெண்களின் உயரம்.

புத்தகத்தின் பத்து அத்தியாயங்களைப் பற்றியும் பார்த்து விடலாம்:
1. முதல் அத்தியாயம் எளிமையாக வாசிக்க முடிகிறது. எந்த விஷயத்தையும் மூன்றாகப் பிரிக்கிறது:
– கவனிப்பு
– தடை தலையீடுகள்
– எதிர்மெய் (அ) மறு உண்மை
இந்த மூன்றையும் “தூண்டு காரணம்” என்னும் ஏணியில் ஏற்றிப் பார்க்கிறது. அதன் பின் கீழ்க்கண்டவாறு காரணப்படம் போட்டு அதை விளக்கச் சொல்கிறது. வெறும் தகவல்களைக் கொண்டு கணினியின் தரவு அறிவியலர் வரும் முடிவுக்கு பதில் இவ்வாறான தருக்கமுறைக் கூற்றுகளும், கட்டுமானச் சமன்பாடுகளும் எவ்வாறு நம்பகமான முடிவை அறுதியிட்டுச் சொல்கின்றன என்பதை அறிமுகம் செய்கிறது.
2. இரண்டாம் அத்தியாயத்தில் புள்ளியியல் துறையின் குறைபாடுகளை ஜுடேயா பெர்ல் விளக்குகிறார். தன்னுடைய கண்ணை தானே குத்திக் கொள்வது போல் காரணத்தை ஆதாரபூர்வமாக விளக்குகிறேன் என்று கிளம்பிய புள்ளிவிபரவியலாளர்கள், பார்வையற்றவர்களாகிறார்கள். கணிதம் பயன்படும் எல்லா துறைகளிலும் தங்கள் புள்ளிவிபர அணுகுமுறையால் சேதம் உண்டாக்குகிறார்கள். 1920களில் இவர்களுக்கு மாற்றாக செவால் ரைட் தோன்றுகிறார். முதல்முறையாக காரணப்படம் கொண்டு தரவுகளை மட்டும் கண்மூடித்தனமாக நம்புவதை மாற்றுகிறார்.
3. மூன்றாம் அத்தியாயத்தில் தனக்கு ஏன் தூண்டு காரணம் மீது நம்பிக்கை பிறந்தது என்பதை டானா மெக்கின்சி உதவியுடன் ஜுடேயா பெர்ல் விளக்குகிறார். செயற்கை நுண்ணறிவிலும் பேயீசிய தொடர் முனைகளிலும் ஆர்வம் கொண்டிருக்கும் எவரும், எவ்வாறு தூண்டு காரணத்திற்கு வந்தடைய வேண்டும் என்பதைப் பகிர்கிறார்கள். ”ஜனாதிபதிகளும் பிரதம மந்திரிகளும் நாட்டின் நன்மைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்” என்னும் வாசகத்தை வாக்காளர் எவ்வாறு ஐயத்தோடு பார்ப்பாரோ, அதே ஐயத்தை கணினிக்கும் சொல்லிக் கொடுப்பதுதான் செயற்கை நுண்ணறிவிற்கான சூட்சுமம் என்று துவக்கத்தில் நம்புகிறார் பெர்ல். அதை பலமாக முன்னிறுத்தி பிரசங்கித்து, ஆராய்ச்சிகளை முன்னெடுக்கிறார். ஆனால், 1980களில் இந்த நம்பிக்கை தவிடுபொடியாகிறது. அந்தப் பயணத்தை இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பழைய கொள்கைகளைக் கைவிட்டு விடுகிறார். பேயிஸிய கோட்பாடுகளுக்கான அறிமுகமாகவும் இந்த அத்தியாயம் விளங்குகிறது.
4. புள்ளியியலுக்கும் “காரணத் தெரிவு” பாதைக்கும் உள்ள தொடர்பை நான்காம அத்தியாயம் விளக்குகிறது. சமவாய்ப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட சோதனை – புள்ளிவிபரத்தில் முக்கியமானது. ஒரே வீட்டில் இருக்கும் பத்து பேரை வைத்து ஒரு மாவட்டத்தின் சராசரி உயரத்தை கணக்கிட முடியாது. சம்பந்தமில்லாத விஷயங்களை புள்ளிவிபரக் கணக்கில் இருந்து நீக்க வேண்டும். உங்களுக்கு உடல் கொழுப்பு உண்டா என்பதற்கும் செல்பேசியே கதியாக இருப்பதற்கும் சம்பந்தம் இருக்கலாம். ஆனால், அதை விட உங்களின் பெற்றோருக்கு இதய நோய் இருந்ததா என்பதும், உங்களின் உணவு உட்கொள்ளும் முறை எவ்வாறு என்பதும், உடற்பயிற்சியின் பங்கும் பெரிது. அதை எவ்வாறு காட்சிபூர்வமாக விவரிப்பது, ஒவ்வொரு காரணப்பாதைக்கும் எவ்வாறு நம்பிக்கை எண்ணை கண்டுபிடிப்பது என்பதை விளக்குகிறார்கள்.

5. புகை பிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோய் வருமா? ஒரு காலத்தில் இந்தக் கேள்விக்கு உறுதியான பதிலைச் சொல்ல முடியாமல் புள்ளியியலாளர்கள் திண்டாடினார்கள். “சமவாய்ப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட சோதனை”யை பயன்படுத்தினார்கள்; அதன் புள்ளிவிபரங்கள் குழப்பியது. கோடிக்கணக்கானோர் புகை பிடித்தலால் இறந்து போனார்கள். அதை முளையிலேயே கிள்ள “தூண்டு காரணம்” உதவியிருக்கும். சமீப காலம் வரை அறிவியலாளர்களால், மூலக்காரணத்திற்கான விடைகளைத் தேடி கண்டுபிடிப்பதற்கான தேற்றங்கள் இல்லை.
6. சென்ற அத்தியாயத்தின் அறச்சீற்றத்திற்குப் பிறகு, இந்த அத்தியாயம் சற்றே இளைப்பாறலாக அமைகிறது. ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் போலத் தோன்றினாலும் முரண்படாத உண்மைகளை இந்த அத்தியாயம் அறிமுகம் செய்கிறது. மாண்டி ஹில் முரண்பாடு, சிம்ஸனின் முரண்பாடு, பெர்க்சன் முரண்பாடு என பல முரண்தோற்ற மெய்களை உதாரணம் கொண்டு விளக்குகிறார்கள். விருந்தில் நண்பர்களுடன் பேசும்போது இந்த முரண்போலிகளை வினாக்களாக முன்வைக்கலாம். அப்போது இரு பக்கமாக பிரிந்து கொண்டு வாதிட்டு பார்க்கலாம். அதையும் மீறி இதை தூண்டு காரண நோக்கில் ஆராய அழைக்கிறார்கள்.
7. “தூண்டு காரணம்” என்னும் ஏணியின் படிநிலைகளை இந்த அத்தியாயம் ஆழமாக அலசுகிறது. இடையூறு என்னும் தடைகற்களை எவ்வாறு கணக்கில் கொள்வது என்பதை புள்ளிவிவரத்தின் அடிப்படையில் விளக்குகிறார்கள். ஒரு கேள்விக்கு எளிமையான பதிலை நம்பகபூர்வமாகத் தர வேண்டும். ஒன்று “ஆமாம்”; அல்லது “இல்லை”. அதற்கு அஸ்திவாரமாக
– பின் வாயில் ஒழுங்குசெய்தல்
– முன் வாயில் ஒழுங்குசெய்தல்
– கருவிசார் மாறிகள்
போன்ற கணிதக் கோட்பாடுகளை எப்படி பயன்படுதலாம் என்பதை அறியலாம்.

8. வரலாறுதோறும் எதிர்மெய் (அ) மறு உண்மை எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்க்கிறார்கள். 1748ல் டேவிட் ஹ்யூம் கொண்டு துவங்கி, 2001ல் மறைந்த டேவிட் லூயிஸ் வரை எவ்வாறு தூண்டு காரணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து விளக்கினார்கள் என்பதை அலசுகிறார்கள். வெறுமனே வாதாடாமல், சமன்பாடுகள் மூலம் எப்படி முடிவுக்கு வர வேண்டும் என்பதையும் உதாரணங்கள் கொண்டு கணக்கு போடுகிறார்கள். விபத்தில் காயம் பட்டதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவரின் பங்கு என்ன என்பது காப்பீடுகளில் உதவும். உலக வெம்மைக்கு மனிதர்களின் பங்கு எவ்வளவு என்பதையும் இவர்கள் முறையில் கணக்கிட்டு பார்க்கலாம்.
9. ஒவ்வொரு விஷயத்திலும் இடைத்தரகர் இருக்கிறார்கள். மருந்து உட்கொண்டால் ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தம் குறைந்தால் ஆயுள் அதிகரிக்கும். மருந்து உட்கொண்டால் ஆயுள் அதிகரிக்கும் என்று சொல்லலாமா? அப்படியானால், சர்க்கரை வியாதிக்கும், தூக்கம் வருவதற்கும் மாத்திரை உட்கொண்டால், எப்படி கணக்கிடுவோம்? ஒவ்வொரு மருந்தும், ஆயுளை அதிகரிக்கிறதா? இதை அல்ஜீப்ரா கொண்டு விளக்குகிறார்கள். பத்து மாத்திரைகளை ஒரே மாத்திரையாக மாற்றினால் உட்கொள்பவருக்கும் மகிழ்ச்சி; பின் விளைவுகளும் குறைச்சல்; மருத்துவமனை செலவுகள் குறைவதால் காப்புறுதி நிறுவனங்களுக்கும் லாபம். இந்த மாதிரி அனைத்து வாழ்வியல் நிகழ்ச்சிகளையும் மூலக்காரண அலசல் செய்து, ஒவ்வொன்றுக்கும் மத்தியஸ்தர் எண் கொடுத்து, இறுதி விளைவை நிர்ணயிக்கும் வித்தையைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
10. இது வரை புள்ளியியல்; கணிதம்; தேற்றம்; சூத்திரங்கள்; கோட்பாடுகள் – சம கால சமூகச் சிக்கல்களை எவ்வாறு கணக்கிட்டு வருங்காலத்தைத் திட்டமிடுவது என சொன்னார்கள். இந்த அத்தியாயத்தில் அதை எல்லாம் எவ்வாறு கணினிக்கு சொல்லித் தருவது எனப் பார்க்கிறார்கள். “செயற்கை நுண்ணறிவு” கொண்டு மனிதரைப் போல் கணினியையும் எப்படி புத்திசாலி ஆக்கலாம்?
– மனிதருக்கு கொள்கைப் பிடிப்பு இருக்கும். கணினிக்கும் அதை எவ்வாறு புகட்டலாம்?
– நாலைந்து விதமாக சோதனை செய்துவிட்டு நாம் முடிவுக்கு வருகிறோம். அந்தச் சோதனைகளை எவ்வாறு வடிவமைக்கிறோம் என்பதை கணினிக்கு எப்படி புரிய வைக்கலாம்?
– நமக்கு வருத்தங்களும் சோகங்களும் இருக்கும். ஒரு தடவை தவறு செய்தால், அதேத் தவற்றை மீண்டும் செய்யாமல் இருப்போம். அந்த மாதிரி அனுபவ அறிவை எவ்வாறு கணி புத்தியில் ஏற்றுவது?
– பொறுப்பு இல்லாமல் பதவி இல்லை. அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்றத் தவறினால் மரியாதை இழக்கிறோம். தலைமையின் கையில் சாவி கொடுப்பது போல் கணினியின் பொறுப்பில் நம்பகமாக ஒப்படைக்கலாமா? அதற்கு சிரத்தையையும் அக்கறையையும் எவ்வாறு உணர வைக்கலாம்?
உங்கள் தரவுகளை விட நீங்கள் புத்திசாலிகள். தரவுகளுக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது என்று தெரியாது. இப்படி செய்வதற்கு பதில், அப்படி செய்தால் என்ன நடந்திருக்கும் – என்று வெற்றுத் தகவல்களால் ஊகிக்க முடியாது. ஆனால், எல்லாவற்றையும் “மனசு சொல்கிறது” என்று அணுகவும் கூடாது. அறிவியல் பூர்வமாக, புத்தி கொண்ட பார்வையுடன் முடிவுகளை எப்படி எடுப்பது? நாம் எடுக்கும் முடிவுகளை எவ்வாறு விளக்கி, மற்றவர்களையும் நம் அணியில் கை கோர்க்க வைப்பது?
அதற்கு இந்த நூல் உதவும்.
மேலும்:

கட்டுரை தலைப்பிற்கான பொருள்: கடிய பாதையில் எவரிடத்தில் சென்றாலும் பெற இயலாத அறிவினை அடைவது (கம்ப ராமாயணம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.