பகிரும் காற்று

சல்லிசான விலையில பொருள் விற்கிற ஒரு தளத்தில, இன்னக்கி, பழங் காலத்துக் காற்றுகளுக்கான விளம்பரம் ஒண்ணு கிடைச்சது. ஒரு மாறுதலுக்கு ஏதோ ஒண்ணை சோதிச்சுப் பார்க்கலாம்னு நான் நினைச்சேன். அதனால இருபதாவது நூற்றாண்டோட கடைசிப் பகுதியிலேருந்து “ஐந்து நகரங்கள்’ கலவை ஒண்ணை வாங்கினேன். பட்டுவாடா பெட்டில அது வந்து சேர இரண்டு நாட்கள் ஆச்சு- ஐயோ அம்மா, அப்படி ஒரு வாடை! இந்த மாதிரி நாத்தக் குட்டையில மனுசங்க ஒவ்வொரு நாளும் வாழ்ந்தாங்கன்னு நினைச்சாலே….! அவங்க வாழ்ந்து நமக்கெல்லாம் மூதாதைங்களா ஆகுற அளவுக்கு அவங்களோட நுரையீரல் அத்தனை வலுவா இருந்திருக்குன்னு யோசிச்சா பிரமிப்பாத்தான் இருக்கு.

என்னத்தைச் சுவாசிக்கணும்னு தேர்ந்தெடுக்க எதுவும் இல்லாத ஒரு வாழ்க்கை விசித்திரமானதாகத்தான் இருந்திருக்கும். அதைக் கற்பனை கூட பண்ண முடியலெ. அதே போல தண்ணி, மின்சாரம் எதுலயும் அவங்களுக்கு எந்த பாத்தியதையும் இருந்திருக்கல்லை. நான் நாகரீகம்னு சொல்லக் கூடிய எதுக்கும் கிட்டக் கூட அதெல்லாம் வரல்லை. கொஞ்ச நாள் முன்னாடி ஒரு நண்பருக்கு நான் எழுதும்போது, வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதெல்லாம் எல்லை இல்லாம கிடைக்கிற காலத்துல வாழ்கிற நமக்கு, அவங்க வாழ்க்கையில சுவாசிக்கிற காற்றோட தரத்தைக் கூட தன்னிச்சையா ஆட்சி செய்த அரசாங்கத்தாரே தீர்மானிக்கிற மாதிரி இருந்த வாழ்க்கையை வாழ்ந்தவங்களோட மன நிலையைப் புரிஞ்சுக்கறதுங்கறது கொஞ்சம் கூட சாத்தியமே இல்லைன்னு எழுதினேன்.
அந்த நண்பி தன் மூதாதையரோட வம்சாவளியை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் தேட முடிகிறது என்பதில் பெருமை கொண்டிருந்தவர்ங்கறதை நான் மறந்து போயிருந்தேன். அதனால் அந்த நாளில் சமூக நிர்வாகமெல்லாம் எப்படி இருந்ததுன்னு சலிப்பூட்டற மாதிரி எதிர் வாதங்களை எல்லாம் கேட்க வேண்டியதாப் போச்சு. “உனக்கு இது புரியாதுதான்,” அவர் எழுதினார், “காற்றின் தரம் பற்றிச் சட்டம் இயற்றுவதுங்கற கேள்வியே அப்போது எழவில்லை. அதற்கு அப்புறம்தானே ஆறு பங்கு பிராணவாயுக்கு இரண்டு பங்கு கார்பன் மோனாக்ஸைடோட காலம் தள்ளணும்ங்கிறதைப் பத்தி மொத்த நாடுமே தீர்மானிக்கணும்னு யோசனை வரும்? நாம எல்லாம் தொடர்ந்த மின்னணு கண்காணிப்பு இருக்கிற காலத்துல வாழறதால, அந்தக் காலத்து அரசாங்கங்களுக்குக் கட்டுப்பாடு செய்வதற்கு எத்தனை குறைவான வாய்ப்பு இருந்ததுங்கிறதைக் கற்பனை கூடச் செய்ய முடியறதில்லை….”
இந்த மாதிரி சாக்குப்போக்கு சொல்கிற வாதங்களை எல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. எளிமையான உண்மை என்னதுன்னா, அன்னக்கி அரசாங்கங்கள் காத்தை மாசுபடுத்தற தொழில்களுக்கு அனுமதிச்சாங்க; அத்தோட விளைவு என்ன, அவங்கதான் காத்தோட தரத்தைத் தீர்மானிச்சாங்க. இதுல என்ன புரிய மாட்டேங்கிறதுன்னா, அதே அரசாங்கத்து அதிகாரிங்களும் அந்த விஷக் காத்தையே சுவாசித்தாங்கங்கிறதுதான். அதனால தோணுது, மாசுபட்ட காத்து நமக்கெல்லாம் கவலை உண்டாக்கிற அளவு சேதத்தை மனுசங்க உடல்லே ஏற்படுத்துகிற மாதிரியே, அவங்களோட குணத்திலயும் சேதம் ஏற்படுத்துமுன்னு சொல்றாங்களே, அந்த வாதத்துல ஏதோ உண்மை இருக்கு போல இருக்கு. விஷப்பொருட்களை சுவாசிக்கிறதுல ஒரு எல்லை தாண்டின அப்புறம், எது ஆரோக்கியம், எது நோய்ப்பட்ட நிலைமைன்னு வேறுபாட்டைப் புரிஞ்சுக்க முடியாமப் போயிடும் போல இருக்கு. அதனால அவங்க எடுக்கற முடிவுகளெல்லாம் மேல மேல விஷப்பொருட்களே சேர்ற மாதிரியே இருக்கும்போல. அப்படியே போச்சுன்னா, கடைசியில சமூகத்தோட அமைப்பே அழிஞ்சு போகிற நிலையை உண்டாக்கிடுவோம். அதேதான் அப்புறமா நடந்தது.
என்னைப் பொருத்தவரை, அந்தச் சீர்குலைவால நாம எல்லாரும் நன்மையைத்தான் அடைஞ்சிருக்கோம். யோசிச்சுப் பாருங்க, இந்தக் காற்றை நான் இன்னக்கி வாங்கினேன் இல்லையா. அது சும்மா ஏதோ வாடைதான், அதனால எனக்கு ஒரு கெடுதியும் நேராதுங்கறதை நான் ஒத்துக்கறேன். ஆனா, என்னோட மூச்சுக் குழாய்ல அது உரசிக்கிட்டு உள்ளே போகிறபோது அது எப்படி வாடை அடிக்கிறது, எப்படி ஒரு கெட்ட சுவையாயிருக்கு, எப்படி என்னை உணர வைக்கிறது? எல்லாமே பைத்தியக்காரத்தனமா இருக்கு, அதான் சொல்றேன். இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில காத்துல இருந்த ரசாயனப் பொருட்களோட கலவை ஒரு மாதிரி போதையைக் கொடுத்தது, அதனால பெரும்பாலான மனிதர்கள் அப்போது காத்தால தூண்டப்பட்ட கிளர்ச்சியோட வாழ்ந்தாங்கன்னு சில அறிவாளிகள் வாதம் பண்றாங்க, அவங்களை நான் எப்போதுமே கேவலமாத்தான் பார்த்திருக்கேன். நாம இன்னித் தேதிக்குப் பயன்படுத்தற காத்தை அவங்க சுவாசிச்சா அவங்களுக்கு மன அழுத்தம் வந்துடும், அவங்க பிரமை பிடிச்ச மாதிரி ஆயிடுவாங்கன்னு இந்த அறிவாளிகள் வாதம் பண்றாங்க. இந்த அறிவாளிங்க எல்லாம் தற்கால அறத்தை எல்லாம் எதிர்க்கிறவங்கன்னும், ரகசியமா அவங்களாவே விஷப் பொருட்களை எடுத்துக்கிட்டு, அதுக்கு அடிமை ஆகியிருக்காங்கன்னுதான் நான் நம்பறேன்.
சுயமா விஷத்துக்கு அடிமையாகிறதுங்கறது சும்மா பீதியைக் கிளப்பறவங்க சொல்றதுன்னு நீங்க நினைச்சா, நான் சொல்றேன் கேளுங்க, அது ஒண்ணும் பீதி கிளப்பற விஷயம் இல்லே. எனக்கே தெரியும், விஷப்பொருள் கழகம்னு பெயர் வச்சுகிட்ட ஒரு அமைப்பு இருக்கு, அதோட உறுப்பினர்கள் தங்களை ’நச்சு’கள்னு அழைச்சுக்கிடறாங்க. என்னை அதில சேர வைக்க முயற்சி செய்தாங்க, நான் ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன், அதற்கப்புறம், எனக்குப் பிறவியிலேயே சக்தி குறைவான நுரையீரல்தான் இருக்குன்னு சாக்கு சொல்லிட்டு, ஒதுங்கிட்டேன்.
இந்தக் கழகம் ‘இரா’ வோட யோசனைல உருவானது. தொலை நோக்குள்ள பாட்டனார் ஒருத்தர், செயல்பாடு இல்லாம மூடப்பட்டு விட்ட அணு மின் உற்பத்தி நிலையங்களை மலிவான விலைக்கு வாங்கி வச்சிருந்து, அணு மாசு அகற்றும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்த உடனே, அதுங்களை ஆகாச விலைக்கு வித்துப் போட்டவர், அவர் கிட்டேயிருந்து அணு உலையில வெப்பத்தைத் தணிக்கிற ஒரு கூண்டு ‘இரா’ வுக்கு குடும்பச் சொத்தா வந்தது. ‘இரா’ அந்தக் கூண்டு கதிர்வீச்சு ஏதும் இல்லாததுன்னு எங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தார், ஆனால் நான் கதிர்வீச்சைத் தடுக்கிற ஆடைகளை எதுக்கும் இருக்கட்டும்னு போட்டுகிட்டிருந்தேன், அது பழைய பாணி உடைகள் மேல எனக்கிருக்கிற பித்துங்கற மாதிரி நடிச்சேன். அவர் அந்த ஆற்றுகிற கூண்டை காத்துப் போகாம அடைக்க ஏற்பாடு செய்து விட்டிருந்தார், அதனால அதுக்குள்ளே அழுத்தப்படுத்தின காத்தை ஏற்ற முடிஞ்சிருந்தது. அத்தனை செலவு செய்ய அவருக்கு எங்கேயிருந்து பணம் கிடைச்சது, என்னென்ன தொடர்பெல்லாம் இருந்ததுன்னு என்னைக் கேட்காதீங்க. நம்ம உலகத்துலே கூட தான் நினைச்சதை எதையும் செய்ய முடிகிற ஆட்கள் இருக்காங்க. ஆகவே, தன்னை மாதிரி நச்சுப்பொருட்களை விரும்பி ஏற்கிற கழகத்தார்கள்ல போதுமான நபர்களை ஒண்ணாச் சேர்க்க அவரால முடிகிற போது, அவங்கள்லாம் அந்தப் பழைய வெப்பம் தணிக்கிற கூண்டுல கூடுவாங்க. காத்துத் தடுப்பு அடைப்புகளை எல்லாம் மூடிருவாங்க, காற்றை உள்ளே நிரப்புவாங்க, அதுல ரசாயனப் பொருட்களைக் கலப்பாங்க. கந்தகம், மீதேன், டைடேனியம் டிங்க்ச்சர், எக்ஸியான், ஃப்ரீயான், நிலக்கரியின் சாம்பல், கட்டிடம் கட்டுமிடத்துத் தூசு, கரித்தூள், இப்படி ஏதானும். அப்போது- இது உங்களுக்கு அதிர்ச்சி தரக்கூடும்- கழகத்தின் எல்லா உறுப்பினர்களும் மூச்சு விட உதவுகிற தங்களோட குழாய்களை எடுத்து விட்டு, நேராக அந்தக் காத்தைப் பகிர்ந்துப்பாங்க!!
நான் நிஜம்மா உங்க கிட்ட சொல்றேன், அது தோலெல்லாம் எரிகிற மாதிரி அனுபவமா இருந்தது. அந்த அழைப்பை நான் ஏத்துகிட்டப்ப, நான் என்ன நெனச்சேன்னா, மிஞ்சிப் போனா, எல்லாரும் இப்படிக் கலப்படம் ஆன காத்தை ஒரு ஸிலிண்டர்லேருந்து கொஞ்சம் சுவாசிப்போம்னுதான்.  முகமூடியிலே எல்லா வால்வையும் கழற்றி விட்டு, அந்தக் காத்தை சுவாசிச்சுகிட்டு உசிரோட இருக்க முடியும்னு என்னை நம்பவைக்க அவங்க எல்லாம் அரை மணிநேரம் போல முயற்சி செஞ்சாங்க. “அப்படித்தான் இருந்தது,” அவங்க சொன்னாங்க, “இருபதாம் நூற்றாண்டுல பாதுகாப்பில்லாம, பொத்தி வைக்காம வாழ்ந்தது.”  திறந்த காத்துலயே பேசிக்கவும் செஞ்சாங்களாம், ரேடியோ மூலமாவோ, ஒலி கட்டுப்பாட்டு எந்திரங்களோ இல்லாமத்தான் பேசிக்கிட்டாங்களாம் அப்போ. ஒரு வழியா கொஞ்சம் மனசை தேத்திக்கிட்டு, என்னோட முதல் மூச்சை அந்தக் காத்துல இழுக்க நான் முடிவு செய்தேன். மூர்ச்சையே போட்டு விழ இருந்தேன். அந்தக் காத்து அத்தனை மோசமா, அத்தனை உறுத்தலா, அத்தனை புகை மாதிரி, அடர்த்தியா இருக்கவும், எனக்கு மூச்சு முட்டியது, தொண்டையை அடைச்சது, என் கண்கள் பிதுங்கிச்சு, என் தோலுலெ வியர்வையா ஓடித்து. என் கையில இருந்த ஏரோஸால் பாட்டில்லே இருந்து நீளமா, ஆழமா மூச்சை ஒரு பத்து நிமிஷத்துக்கு இழுத்துக்கிட்ட அப்புறம்தான், என்னால மறுபடி அந்தக் காத்தை சுவாசிக்க முயற்சி செய்ய முடிந்தது. அப்பவுமே, எல்லார் முன்னாடியும் என் வாயைத் திறந்துகிட்டு மூச்சு விடறது எனக்குக் கொஞ்சமும் பழகவில்லை.
கிறக்கமா? அதெல்லாம் ஒண்ணுமேயில்லை. அப்ப எனக்குக் கொஞ்சம் தலை சுத்திச்சுங்கறதை நான் ஒத்துக்குவேன், கிட்டத்தட்ட நினைவே இல்லாம போறமாதிரி இருந்ததே தவிர, போதை ஏறினாப்பலவே இல்லை.  அதை விட, பார்வை மங்கின மாதிரி, கொஞ்சம் பீதி கலந்தாப்பல, நீங்க ஒரு மெய்நிகர் பாவிப்பியில் முங்கியிருக்கைல, உங்களோட பாதுகாப்பு ஏதுமில்லாத, சிறுசான விண்கலத்தைப் பார்க்க ஒரு எரியும் விண்கல் வேகமாகச் சீறி வந்தா உங்களுக்கு எப்படி இருக்குமோ அதப் போல இருந்ததுங்கலாம். நாங்க என்ன செய்துக்கிட்டிருந்தோம், அப்படிச் செய்வதில எத்தனை சிறிதும் புத்தியில்லாத அபாயம் இருந்தது, எப்ப வேணா நாங்க கண்டு பிடிக்கப்படலாம்ங்கிற விஷயம் வேறு: இதெல்லாத்தையும் பத்தி நான் மொத்த நேரமும் முழு விழிப்புணர்வோடுதான் இருந்தேன். ஆனால் மற்ற ’நச்சு’ விரும்பிகள் அப்படி ஏதும் கவலைப்படவில்லை. அதைக் காண அதிசயமாக இருந்தது. அவங்க வெற்றுக் காற்றுவெளியின் குறுக்கே ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிட்டிருந்தாங்க, ஏதோ அப்பிடித்தான் அவங்களோட வாழ்நாள் பூராவும் இருந்திருக்கிற மாதிரி நடந்துகிட்டாங்க. எங்களை அழைச்ச புரவலர் அப்பத் தன் முகமூடியை முழுக்கவே எடுக்க ஆரம்பிச்சார், அப்பதான் நான் என் பார்வையை முழுக்க வேறுபக்கம் மாத்தி வச்சுகிட்டேன். நல்ல வேளையாக அவர் செய்த மாதிரி நிறைய பேர் செய்ய முன்வரவில்லை. ஒரு அளவுக்கு மேல் கலகம் செய்ற மாதிரி நடந்துக்கிறது ஆபத்தாவே மாறிடும்னு நினைக்கிறது நான் ஒருத்தி மட்டுமில்லை என்று தெரிந்து எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
அல்லது அது அப்பட்டமாகவே அருவருப்பா தர்றதா மாறிடுது. இந்த மாதிரி சம்பவங்களில் தப்பாம யாராவது ஒருத்தர் செய்றாப்பல, ஒருத்தர் பழங்காலத்து விடியோ காஸெட் ஒண்ணை, மூணு பரிமாணக் காட்சி தரத்துக்கு மாத்தி உசத்தி, அதை ஒளிபரப்பினார். அது வெறும் குப்பையாக இருந்தது. நான் கல்லூரியில் கலை ரசிப்பு பற்றி வகுப்புகளில் படித்திருக்கிறேன். அதனால் இந்த சமாச்சாரங்களை எல்லாம் முன்னமே பார்த்திருந்தேன். ஆனால் அதெல்லாம் தனி நபர்களுக்கு அத்தியாவசியமான தேவைகள் எல்லாம் வேணுங்கிற அளவு கிடைக்க ஆரம்பிச்ச காலத்துக்கு முன்னாலெ இருந்த தலைமுறைங்க மோசமான விதமாத்தான் வாழ்க்கை நடத்தினாங்கன்னு எனக்கிருந்த எண்ணத்தைத்தான் உறுதி செய்திருந்தன. அந்தக் காலத்து மனுசங்க ஒருத்தர் மத்தவரின் காற்றையே பகிர்ந்துக்கிட்டாங்க, என்ன மாதிரிக் கொடுமை அது!!  ஒவ்வொருத்தரின் கிருமிங்களையும், எல்லாரோட கழிவுப் பொருட்களையும், தங்கள் முச்சுக்குழாய் அழற்சியிலிருந்து விடுபட்ட சளியையும், பலரின் உடல் கழிவுகள் பலதையும் காத்து மூலமா வாங்கிக்கிட்டு மூச்சில் கலக்க விட்டார்கள். தண்ணீரோ கிருமி அழிப்பு செய்து சுத்தமாகாத குழாய்கள் வழியாப் பல மைல்கள் தாண்டி வந்து எங்கேயிருந்தோ கொண்டு வந்து அவங்களுக்குக் கொடுக்கப்பட்டது.  சில நேரம் மாசுபட்ட பூமியிலிருந்தே கூட நீர் எடுத்துக் கொடுக்கப்பட்டது. சக்தி தேவைப்பட்டதுக்கு, அதை எங்கிருந்தெல்லாம் பெற முடியுமோ அங்கேயிருந்தெல்லாம் அவங்க அதை எடுத்துக்கிட்டாங்க. அவங்களோட கருவிங்க அத்தனை நுட்பமெல்லாம் இல்லாத, மொண்ணையான கருவிங்களா, உயிர்த்துடிப்பே இல்லாம இருந்தது, ஏன்னு கேட்டா, சுத்தம் செய்யப்படாத மின்சாரம்தான் அவர்களுக்கு சக்தியாகக் கிட்டியது என்பதுதான் காரணமாக இருக்க முடியும்.
அவங்க எல்லாம் உணர்ச்சி பொங்கின நிலைல இருந்தாங்க, அதனால அந்தக் காலத்தைச் “சுதந்திரமான” காலம்னு சொன்னதோடு நிக்காம, அதைப் பத்திப் பரவசமான நிலைல இருந்து பேசினாங்க. “சுதந்திரமான அழுக்கு, குப்பை!” ன்னு நான் கத்தினேன். “அதொண்ணும் சுதந்திரம் இல்லை, அது வறுமை, கொடுமை!” -ன்னு சொன்னேன். அவங்க எல்லாருமா என் மீது பாய்ஞ்சாங்க, எல்லாருமா ஒரே நேரத்துல கத்திப் பேசினாங்க, அந்தத் திறந்த காற்றில அவங்க குரல்களெல்லாம் கிறீச்சிட்டும், தெம்பில்லாமலும் ஒலித்தன. நம் காலத்தின் அடக்கு முறைங்களைப் பத்திப் பேசினாங்க, தனிநபர் நடவடிக்கைகளும், பொது நடவடிக்கைகளும் ரொம்பவே தணிக்கை செய்யப்பட்டு எல்லாமே பொது நன்மைக்காகக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதைப் பத்தியும், பேசினாங்க. “ஓஹோ! அதுதான் விஷயமா?” ன்னு கேட்டேன். “அதனால அப்ப எல்லாம் நல்லா இருந்துதா? நம்மோட பூமியோட காற்று வெளியை, சூழலை எல்லாம் மாசுபடுத்த அவர்களுக்குச் சுதந்திரம் இருந்ததா? அதனால எல்லாத் தாவரங்களையும், பிராணிகளையும் கொல்ல உரிமை இருந்ததா? அதுதான் சுதந்திரமா? இல்லை! அது தனிமனுசனோட நலனுக்கு மனுச குலமே அடிமைப்பட்டிருந்த நிலை!” அவங்க எல்லாம், இப்ப இருக்கறது ஏதுமில்லாமல் இருப்பதையும் விட மோசமான நிலை, ஏன்னு கேட்டா, வாழ்க்கையோட எந்த சந்தோஷங்களும் இல்லாத வாழ்க்கை இதுன்னு வாதாடினாங்க. நான் சொன்னேன், “சிலருக்குக் கேளிக்கை, பலருக்கு நோய்ப்பட்ட வாழ்க்கை!”  நம்ம மூதாதைங்க என்னென்னவோ வகைல எல்லாம் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிச்சாங்க, நமக்குதான் அதைப் பத்தி ஒரு துப்பும் இல்லைன்னு அவங்க சொன்னாங்க. முந்தி மக்கள் அவங்க தோலுல சூரிய ஒளி பட விட்டிருந்தார்களாம், இயற்கையான முறைல வாரிசுங்களைப் பெத்துக்கிட்டாங்களாம் – கரு முதிர்ச்சிக் கருவிகள் இல்லையாம் (இன்க்யுபேட்டர்கள்), கருத்தரிப்புக்கான மருந்துகள் இல்லையாம்.  “சுயநலம்!” என்று நான் கத்தினேன். ஒருக்கால் அந்தக் காற்று என் புத்தியைப் பாதிச்சிருந்தது உண்மைதான் போல. எனக்கு எல்லா மனக் கட்டுப்பாடும் போய் விட்டிருந்தது.  “அவங்க எல்லாம் கெட்டுப் போனவங்க! சோனிங்க!”
அப்ப ஒரு நபர் சொன்னார், “இல்லை! தற்கொலை நோக்கம் கொண்டவங்க, அவ்வளவுதான். நம்ம மூதாதையர் கிளர்ச்சிக்கும், மன அழுத்தத்துக்கும் இடைல அல்லாடினவங்க. இது உறுதியாத் தெரிய வந்திருக்கு- காற்றைப் பகிர்வது மன அழுத்தத்தைக் கொடுக்கும்ங்கிறது. அவங்க சூழலை நாசம் செய்யக் காரணம் அவங்க தங்களையே வெறுத்ததுதான். பேரண்டத்தைத் தம்மிடமிருந்து காப்பாற்ற அவங்க விரும்பி இருக்கணும். அதுக்குள்ளே தாமிருப்பது அதற்கு ஆபத்து என்று கருதி இருக்கணும். சுய-வெறுப்புதான் அவங்களோட முக்கிய உந்துதல், சுய அபிமானம் இல்லை!” இந்தக் கருத்து கூடியிருந்தவங்க கிட்டே ஒரு ஆழ்ந்த மௌனத்தைக் கொணர்ந்தது. அதற்குப் பிறகு, நான் அங்கிருந்து கிளம்பிட்டேன். என் உயிர் பாதுகாப்பு நிலையத்தில் வந்து சேர்ந்தபின், என் பிராணவாயு எந்திரத்தைப் பராமரிப்பது, என் ப்ரோடின் காப்ஸ்யூல்களை அழகாக வரிசைப்படுத்தறது, பெட்ரி தட்டுகள்லெ இருந்த என் வளர்ப்பு அமீபாவோட கொஞ்சம் விளையாட்டுன்னு நேரம் கழிச்சுகிட்டிருக்கைல, அந்த களேபரமான, நாசகரமான யுகங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். என்னிடம் இருந்த அந்த ‘ஐந்து நகரங்கள்’ காற்று அடைத்த ஸிலிண்டரின் மேல் தகவல் குறிப்பைப் பார்த்தேன்: மெக்ஸிகோ நகரம், நியூ டெல்லி, பாம்பே, பாங்காக், கெய்ரோ. மேல் சீட்டில் இருந்த எளிமையான ஹோலோக்ராமில் ட்ரில்லியன் மக்கள் முப்பரிமாணப் படமாகக் காட்டப்பட்டிருந்தாங்க. இன்னக்கோ நாம இரண்டு மிலியனுக்கும் குறைவான தொகை மக்கள்தான் இருக்கோம். எல்லாரும் சில இடங்களில் குவிக்கப்பட்டிருக்கிறோம், இங்கு இன்னும் காற்றுவெளி அடர்த்தியாக இருக்கிறது- அதனால் நட்சத்திரங்களைப் பகல் ஒளியிருக்கையில் பார்க்க முடிவதில்லை. எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலையே இல்லை. எனக்குப் பிடிச்ச வாசனையுள்ள காற்றுகள் கிட்டுகின்றன. எனக்கு ஒரு கூட்டம் மெய்நிகர் குழந்தைகள் உண்டு, அவர்களை என் சிந்தனைக் குழுவினரோடு நான் பகிர்ந்து கொள்கிறேன். என் கண்ணாடி-ப்ரொஸஸ்ஸர் மூலமா எனக்குப் பிடிச்ச எந்தப் பரிமாணத்திலும் நான் பயணம் போக முடிகிறது. நான் இழப்பா எதையாவது நெனச்சா- இல்லை, அப்படி ஏதோ இழந்துட்டதா உணரறேன்னு நான் நினைச்சா, அதுதான் எதுக்குன்னு கேட்டீங்கன்னா, நான் நிஜத்தில அதெல்லாத்தையும் பார்த்ததே இல்லை- அது மரங்களைத்தான். கேட்கைல அதுங்க வசீகரமாகத் தெரியறது. எங்கேயாவது ஒரு சின்ன மரம் விற்பனைக்கு வருதுன்னு கேள்விப்பட்டீங்கன்னா, விலை என்னவானாலும் பரவாயில்லை, எனக்குச் சொல்லுங்க. என் உறக்கப் பலகை கிட்டவே அதை வைச்சுகிட்டு, இராப் பூரா அதை வருடிக் கொடுத்துக்கிட்டு இருப்பேன்.
(1984)

~oOo~

மஞ்சுளா பத்மநாபனின் இந்தக் கதை முதலில் நியு ஸண்டே எக்ஸ்ப்ரெஸ் மாகஸீனில் பிரசுரமாகியது. பிறகு சிறிதே மாறிய வடிவில் ‘க்ளெப்டோமேனியா’ என்ற பெங்குவின் பிரசுரப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. (2004 வெளியீடு)
மஞ்சுளா பத்மநாபன் ஒரு கேலிச்சித்திர வரைவாளர், திரைக்கதையும் எழுதி இருக்கிறார். சிறுவர்களுக்கான பல சித்திரப் புத்தகங்களை வெளியிட்டவர். சில நாவல்களையும் எழுதியுள்ளார்.
ஆன் மற்றும் ஜெஃப் வாண்டர்மீயர் தம்பதிகள் தொகுத்துள்ள ‘த பிக் புக் ஆஃப் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன்’ என்ற 2016 ஆம் வருடத்துப் பிரசுரத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை இது. அந்தப் பெரிய புத்தகத்தில் உள்ள இரு இந்தியர்களில் மஞ்சுளா பத்மநாபன் ஒருவர். புத்தகத்தின் பிரசுரகர்கள்: விண்டாஜ் புக்ஸ். ( The Big Book of Science Fiction/ ed by Ann and Jeff Vandermeer/ 2016/ Vintage Crime- Black Lizard Original – publishers)
இந்தத் தொகுப்பு பல பத்தாண்டுகளில் பிரசுரமான பல நாட்டு அறிவியல் கதைகளின் தொகுப்பு என்பதால் 1984 இல் மஞ்சுளா பத்மநாபன் எழுதிய கதை 2016 இல் பிரசுரமாகும் புத்தகத்தில் சேர்க்கப்பட்டதில் வியப்பு இல்லை. இன்று இந்தக் கதை எத்தனை களப் பொருத்தம் கொண்டது என்றுதான் நாம் வியப்படைய வேண்டும். மஞ்சுளா பத்மநாபனின் வசிப்பிடமான புது தில்லி மாநகரின் காற்று மாசு பற்றிய செய்திகளைக் கடந்த சில மாதங்களாக நாம் செய்திகளில் பார்த்து வருகிறோம் இல்லையா?
தமிழாக்கம்: மைத்ரேயன்
இந்தக் கதையைத் தமிழாக்கம் செய்யவும், சொல்வனத்தில் பிரசுரிக்கவும் அனுமதி கொடுத்த மஞ்சுளா பத்மநாபன் அவர்களுக்கு சொல்வனம் பதிப்புக் குழு நன்றி தெரிவிக்கிறது. அவர் தன்னைப் பற்றி எழுதிக் கொடுத்த குறிப்பு கீழே:
Manjula Padmanabhan (b. 1953), is an author, playwright and cartoonist. Her play HARVEST won the 1997 Onassis Award for Theatre. Her weekly comic strip SUKIYAKI appears in Chennai’s Business Line. Her two most recent novels ESCAPE and THE ISLAND OF LOST GIRLS, are set in a brutal future world. She lives in the US and New Delhi.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.