பகிரும் காற்று

அந்தக் காலத்து மனுசங்க ஒருத்தர் மத்தவரின் காற்றையே பகிர்ந்துக்கிட்டாங்க, என்ன மாதிரிக் கொடுமை அது!!  ஒவ்வொருத்தரின் கிருமிங்களையும், எல்லாரோட கழிவுப் பொருட்களையும், தங்கள் முச்சுக்குழாய் அழற்சியிலிருந்து விடுபட்ட சளியையும், பலரின் உடல் கழிவுகள் பலதையும் காத்து மூலமா வாங்கிக்கிட்டு மூச்சில் கலக்க விட்டார்கள். தண்ணீரோ கிருமி அழிப்பு செய்து சுத்தமாகாத குழாய்கள் வழியாப் பல மைல்கள் தாண்டி வந்து எங்கேயிருந்தோ கொண்டு வந்து அவங்களுக்குக் கொடுக்கப்பட்டது.  சில நேரம் மாசுபட்ட பூமியிலிருந்தே கூட நீர் எடுத்துக் கொடுக்கப்பட்டது. சக்தி தேவைப்பட்டதுக்கு, அதை எங்கிருந்தெல்லாம் பெற முடியுமோ அங்கேயிருந்தெல்லாம் அவங்க அதை எடுத்துக்கிட்டாங்க. அவங்களோட கருவிங்க அத்தனை நுட்பமெல்லாம் இல்லாத, மொண்ணையான கருவிங்களா, உயிர்த்துடிப்பே இல்லாம இருந்தது…