கண்கள் செவிக்க மறுக்குமோ? வில்லியம் காஸின் ஐம்பது தூண்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரால் மட்டுமே சிந்தனைகள் மற்றும் எண்ணங்களின் உள்ளடக்கத்தையும் தம் ஆளுமையையும் மட்டுமல்ல, அவற்றின் உருவத்தையும் பிற்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடிகிறதுபொதுவாய்ச் சொல்வதானால், இவை எதுவும் பெருந்திரள் மக்களுக்கு ஒரு பொருட்டல்ல

துர்கேனிவ்

சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், விமரிசகர், மொழிபெயர்ப்பாளர், தத்துவ பேராசிரியர், பன்முக ஆளுமை வில்லியம் காஸ் இம்மாத துவக்கத்தில் பழுத்த தொண்ணூற்று மூன்றாம் வயதில் காலமானார். அழகு மிளிரும் அவரது வாக்கியங்களின் தாளம் மற்றும் அசாதாரண ஓசையில் மயக்கம் கொண்டிருந்த ஆத்மார்த்த வாசக குறுங்குழுவினருக்கு இதுவும்கூட அற்பாயுளில் மறைந்தது போல்தான் இருந்தது. விருப்பத்துக்குரிய எழுத்தாளர் ஒருவரின் மரணத்தை எவ்வாறு எதிர்கொள்ள? பொது மானுட உணர்வை நமக்கு உணர்த்தி கண்ணீர் வெளியென இலங்கும் இவ்வுலகை இன்னும் சற்று தாளத்தக்கதாய்ச் செய்தவர் எனலாம், ஒரு புனைவாசிரியராய் அவர் இவ்வுலகுக்கு கொணர்ந்த எண்ணிறந்த பாத்திரங்களின் தொகையை நினைவு கூரலாம்அப்பாத்திரங்களுடன் சேர்ந்து நாமும் சிரித்ததை, அழுததை, நேசித்ததை, வெறுத்ததை. அந்த எழுத்தாளர்களின் கதைக் கருக்களை நினைத்துப் பார்க்கலாம், அவற்றின் உச்சங்களை, கதைகளின் சாதுர்ய திருப்பங்களை, திருத்தமாய் அமைந்த உரைநடையை, கற்பனையின் மகத்தான சாதனைகளை, அவர்கள் கண்டளித்த புதுமைகளை, அவர்களின் சரிதைகளைஅல்லது கௌரவமான இந்த வேலையைச் செய்யலாம்: தான் சேர்த்து அடுக்கி வைத்திருக்கும் நூல் தொகையில் உள்ள அவரது புத்தகங்கள் அனைத்தையும் தேடியெடுத்து, துயரை எதிர்கொள்ளவும் அஞ்சலி செலுத்தவும் அமைதியாக அவற்றை மீண்டும் வாசிக்கத் துவங்கலாம். ஆம், பணம், புகழ், விருதுகள், புத்தக வெளியீட்டு பயணங்கள் மற்றும் ஆசிரியத்துவத்தின் பிற அலங்காரங்கள் அனைத்துக்கும் அப்பால் எழுத்தாளன் துவக்கத்திலும் முடிவிலும் வேண்டுவது கவனமாய்த் தன்னை வாசிக்கும் ஓரிணைக் கண்களை, வாசக கண்களை. இல்லை, செவிகளை என்று சொல்லலாமா?

ஒருவனின் அகத்தில் உள்ள கதைகளில் வெகுச் சிலவே சொற்களில் வெளிப்படுகின்றன, ஏனெனில், இதயம் அபூர்வமாகவே அறிவினிடம் தன் ஆழ்மனத் தேவைகளை ஒப்புக்கொள்கிறது. அடுத்து, ஒருவனின் மூளையில் உறையும் கதைகளில் வெகுச் சிலவே சொற்களில் வெளிப்படுகின்றன, ஏனெனில், அவற்றுக்கான குரல் உள்ளத்தில் எப்போதும் இருப்பதில்லை. குரல் இருக்கும்போதும், நா சாராயத்தாலோ காதலாலோ கனிந்திருக்கும் போதும், கூருணர்வு கொண்ட, மதிப்பு வைத்து பெற்றுக் கொள்ளும் வேறோர் இணைச்செவி எங்கே? இவ்வாறே காஸ் தன் சிறுகதை தொகுப்பு ஒன்றின் முன்னுரையில் எழுதினார். இங்கு சற்று நிதானித்து, மேற்கூறிய வாக்கியங்களைச் சுவைத்துப் பாருங்கள். உரக்க வாசித்து, அதன் ஓசை நயத்தில் உங்களைத் தொலைத்துப் பாருங்கள், அப்போது தெரியும், மதிப்பு வைத்து பெற்றுக்கொள்ளும் இணைச்செவிகள் எவ்வளவு துல்லியமானவை என்று. அதனால்தான் அவர் ஒரு முறை எழுதினார், “சொல் என்பது சதையாய்த் திரண்ட மனவுருவம்இப்படி வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்ஓசையென அளிக்கப்படும் நித்தியம்.”

மௌனமாய் மறையும் புத்தகங்களும் அவற்றைவிட விரைவில் மறையும் எழுத்தாளர்களும் உள்ள காலகட்டத்தில், பொருந்தி வாசிக்கும் கண்களும் செவிகளும் அளிக்கும் கவனம் நல்ல நாட்களிலேயே நிரந்தரமற்றது, அல்லாத நாட்களில் இல்லாத ஒன்றே என்பதை காஸ் உக்கிரமாக அறிந்திருந்தார். காரணம், அக்கண்களும் செவிகளும் திரைப்படங்களில் பணம் செலவழிக்க வேண்டும், விளையாட்டு அரங்குகளை நிறைத்து ஆர்ப்பரிக்க வேண்டும், கட்டமைக்கப்பட்ட ஓசைக்கு ஏற்ப ஆட்டம் போட வேண்டும், இவை போக, ஆம், நெட்ஃப்ளிக்ஸ் தொடர்களைத் திகட்டத் திகட்டக் கண்டு களைக்க வேண்டும். நண்பர் ஒருவர் அண்மையில் காஸ் நேர்முகம் ஒன்றை அனுப்பியிருந்தார். இப்போது மேதை என்று நன்றாகவே நிறுவப்பட்டுவிட்டபோதிலும் அவர், தனது ஆக்கங்கள் சம்பிரதாயமாகவே நியூ யார்க்கர் போன்ற பத்திரிக்கைகளில் நிராகரிக்கப்படுகின்றன என்று அதில் பேசியிருந்தார். இதனால்தான் இம்முறை அவரது இச்சொற்களை வாசிப்பது நெகிழ்வான அனுபவமாக இருந்தது– “எனில், உங்கள் செவிகள் தம் முன் இருப்பதாய் நாடகமாடும் இம்முன்னுரை போலன்றி, இக்கதைகள் என் வெற்று உள்ளுறுப்புகளில் எழுந்து வேறொரு இருளில் சாகப் பிறந்திருக்கின்றன.  என்னளவில் உலகின் மிகச் சிறந்த பனிக் கதையான The Pedersen Kid போன்ற கதைகளின் துர்நிலை இது. (எனக்கு மிகவும் பிடித்தமான ஈதான் ஃப்ரோமுக்கு துரோகம் இழைத்த குற்றத்துக்காக என்னை எடித் வார்ட்டனின் ஆவி விரட்டும் கனவுகளில் என்னென்ன கொடுமைகள் எனக்காகக் காத்திருக்கின்றனவோ)

ஆக, கண்கள் செவிக்க மறுப்பதைச் செவிகள் காண மறுக்கும் என்றால், ஏன் எழுத வேண்டும்? சமகால அமெரிக்க எழுத்தாளனுக்கு எவ்வகையிலும் சமூக, அரசியல் களத்தில் இடமில்லை. ஆக, அவன் ஊமையாக்கப்படுவதில்லை, அவனது நா குறித்து அச்சமில்லை என்பதால்; அவனை எழுதக் கோருவோரும் கிடையாது. உலகம் அவனை நோக்கி அழைப்பு விடுப்பதில்லை, அது பெரிய அளவில் பரிசில்களும் அளிப்பதில்லை. எனவே, மீண்டும் இக்கேள்வி, ஏன் எழுத வேண்டும். காஸின் கனத்த பதில்: “அவன் செய்வது அனைத்தும் எந்தப் பொறுப்புமற்ற ஓர் உள்ளார்ந்த தேவையிலிருந்து எழ வேண்டும்.” பின்விளைவுகள் குறித்து கவலைப்படாத காஸின் இத்தகைய உந்துதலுக்கு நாம் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்இனி கோழிக்குஞ்சுகள் கொட்டகைக்கும் வேலிக்கும் இடையில், “ட்யூபிலிருந்து பற்பசை போல்பிதுங்கிச் செல்லலாம், மரமொன்றால்உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றாய் அழுக்கைமாற்ற முடியும் (வாழ்க்கையின் அழுக்கில் வேர்கொண்டுள்ள எழுத்தாளன் அதன் கசடுகளை கலையின் பொன்மூச்சாய் மாற்றும் ரசவாதம் போல்), ஆங்கில மொழியின் இரண்டாம் எழுத்தான பி, “இண்டியானாவில் உள்ள ஒரு வயலோடு பிணைக்கப்பட்ட சிற்றூர்ஆகலாம், ஊறுகாய்கள்முதலைகள் போல் உறங்கலாம், “ரப்பர் ஷூக்கள் அல்லது யாரோ ஒருவனின் இருமல் போன்ற தனிமைமானுட உணர்வாகலாம். “பளபளக்கும் சிறுமணிகள்போல் உவமைகள் திரு. காஸில் ஊஞ்சலாடுகின்றன என்பதைச் சொன்னேனா? எவ்வாறெனில், இந்த உவமைகளால் அசைவுறும் வாசகன், பனைமரம் போல் புத்தகப் பக்கத்தில் நிழல் சாய்த்து, அசைகளை உருவாக்கும் தன் இதழ்களை, இயல்பாகவே நெகிழ்ந்தும் சிவந்தும் இருப்பவனவற்றை, அசைவித்து, அக்காகிதத்தினுள் ஆழ்ந்து, அச்சாகி, மனம் தொட்ட உணர்வோடும் சுகத்தோடும் மொழியில் வாழ்வும் நேசமும் பெற்று அதன் மறுபுறம் மலர்கிறான் என்பதா? ஆனால் இது போதுமா? அவரது பாத்திரங்களில் ஒன்று கேட்பது போல், “எத்தனை புத்தகங்கள் ஒரு சன்னலின் நிகராகும்?”

காஸ் போன்ற ஓர் அதிசயம் நிகழ இலக்கிய மரபில் எப்படிப்பட்ட விபத்து ஏற்பட்டிருக்கும்? அவருக்கு கெர்ட்ரூட் ஸ்டைன் மற்றும் ரைனர் மரியா ரில்க மீது வழிபாட்டுணர்வுக்கு இணையான தாபம் இருந்தது என்பதை நாமறிவோம். ஆனால் அதற்கப்பால் அவர் மீது தாக்கம் செலுத்திய இலக்கியம்? 1991ன் வேனிற்பருவத்தில் சர்வதேச எழுத்தாளர் மையத்தின் சிறப்பு காட்சிப் பிரிவின் துவக்க அரங்குக்கு பங்களிக்குமாறு காஸிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேற்கத்திய உலகின் சிறந்த புத்தகங்கள் என்று இல்லாமல், தத்துவ ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் அவரை பாதித்த எண்பத்து ஏழு முக்கியமான பிரதிகளை அவர் தேர்ந்தெடுத்து, “பிரதிகளின் ஆலயம்என்று தலைப்பிட்டு பார்த்தீனானின் ஓவியத்துடன் லோரின் குவாக்கோவிடம் அளித்தார். ஏன் ஆலயம்? உலகம் தாளவொண்ணாததாய் இருக்கும்போதெல்லாம் அவர் மீண்டும் மீண்டும் அடைக்கலம் புகுந்த சரணாலயங்கள் அவை. ஏன் எண்பத்து ஏழு? பார்த்தீனான் எண்பத்து ஏழு தூண்கள் கொண்டிருப்பதால். ஆனால் துரதிருஷ்டவசமாக, இடப் பற்றாக்குறை காரணமாய் அப்பட்டியல் ஐம்பது பிரதிகள் என்று குறைக்கப்பட்டு, இப்போதுடெம்பிள் ஆஃப் டெக்ஸ்ட்ஸ்என்று தலைப்பிட்ட புத்தகத்தில் ஐம்பது இலக்கியத் தூண்கள் கொண்ட பட்டியலாய் தொகுக்கப்பட்டுள்ளது.

காஸ் இறந்த சில நாட்களில் நான் அவரை நிராகரித்த இதழ்கள் மற்றும் அவர் எழுத்தில் அக்கறையில்லாத வாசகர்கள் குறித்த கோபத்துடன் தூங்கிப் போனேன். அன்று இரவு என் கனவில் மனிதர்களுக்கு அழைப்பு இல்லாத ஓர் ஈமச்சடங்கு, அதில் ஜெர்ட்ரூட் ஸ்டீன், ரெயினர் மரியா ரில்கே முதலானவர்களின் ஆன்மாக்கள் பிரதிநிதிகளாய் பங்கேற்றன, அவரது எண்பத்து ஏழு இலக்கியத் தூண்களின் ஆவிகளுக்கு மட்டுமே அனுமதி. மொழியாகிய நாட்டுப்புறத்துக்குரிய இதயத்தின் இதயத்தில் அவரது வாழ்நாளில் பெரும்பாலான காலம் அவருக்கு துணை நின்றவர்கள் மட்டுமே அதை நெறிப்படுத்தினர். ஊர்வலத்தின் துவக்கத்தில், W, H, G ஆகிய எழுத்துகள், அவற்றைத் தொடர்ந்து அவர் படைத்த மறக்க முடியாத பாத்திரங்கள் (பேடர்சனின் முரட்டு அப்பாவுடன் திருமதி. மீன் எவ்வளவு நன்றாகப் பழகுகிறார் பாருங்கள், காஸின் மனைவியின் இடத்தை வில்லி மாஸ்டரின் லோன்சம் வைஃப் எவ்வளவு நன்றாக இட்டு நிரப்புகிறார்). அதன் பின் உவமைகளின் ஊர்வலம், அவற்றுக்கு இடம் கொடுத்த மகோன்னதமான வாக்கியங்களின் கை கோர்த்து. பாஹ்ஹின் கொல்ட்பர்க் வேரியேஷன்ஸ் (புராதன ட்ரைடென்டைன் மாஸின் 32 இசையமைப்புகள் பின்னணியில்) இசைத்துக் கொண்டிருந்தன. கல்லறையைச் சுற்றி இந்தக் கூட்டம் மொத்தமும் குழுமியிருந்தது. சவப்பெட்டி குழிக்குள் இறக்கப்படும்போது உருவற்ற எவரோ ஒருவர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினரின் உயரே மிதந்து, “இது திரு. காட்டிஸ்ஸின் ஈமச்சடங்குதானே?” என்று கேட்டார்.  இதைக் கேட்டு திடுக்கிட்ட உவமைகள் (Similies) தடுமாற்றத்தில் விழப் பார்த்து சுதாரித்துக் கொண்டன, ஆனாலும் அவை தம் துணைச் சொற்கள் சிலவற்றை இழக்காமல் இல்லை. இரு ஐகாரங்கள் சவக்குழியினுள் விழுந்து, முகத்தில் வெட்கம் கலந்த புன்னகையுடன் சங்கடப்பட்டு நின்றன.  ஒரு கணம் ஆழ்ந்த மௌனம் நிலவியது, அதன்பின் அனைவரும் சிரித்தனர். யாரோ ஒருவர் மிடில் சி வாசிக்கச் சொன்னார். வாக்கியக் குழுவொன்று கார்ட்டீசிய சொனாட்டாவில் துவங்கி, இதுதான்ஆன் பீயிங் ப்ளூஎன்று சுதி சேர்த்து வளர்த்து வாசிக்கத் துவங்கின. நானும் அங்கிருந்தேன் (என்ன இருந்தாலும் இது என் கனவல்லவா), இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், ““In the Heart of the Heart of the Country”” வாசிக்கத் துவங்கினேன். அங்கு என்னருகில் இருந்த புத்தகக் குவியல் கண்ணில் பட்டது (Omensetter’s Luck, Temple of Texts, Fiction and the figures of Life, The World Within the Word மற்றும் ஒப்புயர்வில்லாத Reading Rilke). சரிதான், இந்த கொண்டாட்டம் வெகு நேரம் நீடிக்கும் போலிருக்கிறது.

இனி காஸின் புத்தகாலயம்

பிளேடோவின் தைமியஸ்

ஐம்பது வருடங்களாக பிளேடோவை பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறேன். மாணவர்களை சில சமயம் சலிப்படையச் செய்திருக்கிறேன் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் பிளேட்டோ என்னை எப்போதுமே  சலிப்படையச் செய்ததில்லை. அவரது உரையாடல்கள் உலகின் மிக அபூர்வ பிரதிகளில் ஒன்று. Republic என்னை கிறுகிறுக்க வைத்தது என்பது இன்னமும் நினைவில் இருக்கிறது. உரையாடல்களில் மிகவும் பிடித்தமானது என்று ஏதோ ஒன்றை மட்டும் தேர்வு செய்வது கடினம். ஆனால் தைமியஸே அவரது மிக விசித்திரமான, மிக ஆழமான படைப்பாக இருக்கக்கூடும் என்று இப்போது தோன்றுகிறது  ஒரே சமயத்தில் மிகவும் மர்மமாகவும், நடைமுறைக்குரியதாகவும், கணிதத்தன்மையுடனும் தொனிக்கும்  படைப்பு அது. பிரபஞ்சம் உருவானதைப் பற்றிய ஒருசாத்திய கதைஎன்ற பரப்பிற்கடியே, அளவியல் கூற்றின் பண்பார்ந்த வெளிப்பாடாக, பிளேடோவின் பிரபஞ்ச ஞானம், ஒரு ஆற்றைப் போல் ஓடிச் செல்கிறது.

அரிஸ்டாடிலின் நிகோமாக்கிய நெறிமுறைகள்

முதலில் பிளேடோவை எதிர்கொண்ட பிறகு அவருக்கு நிகரான மற்றொரு சிந்தனையாளரைக் கற்பனை செய்து பார்க்கக்கூட எனக்குக் கடினமாக இருந்தது. ஆனால் விரைவிலேயே அரிஸ்டாடில் தோன்றி என்னை ஆச்சரியப்படுத்தினார். பலவிதங்களில், அவரது ஆசிரியரின் மறுதலையாகவே  அவர் காட்சியளிக்கிறார்: மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வமான, வானளாவும் நவிற்சிகளற்ற, தோப்பொன்றினைப் போல் பழுத்த பொதுபுத்தியுடன் திகழும் நிகரற்ற அறிவுத்தளக் கண்டுபிடிப்பாளர் அவர். எடிசனின் விளக்குகள் பொசுங்கிப் போகலாம், ஆனால் அரிஸ்டாடில் படைத்த ஆய்வுக் கட்டுரை வடிவமும், முக்கூற்று வடிவ கண்டுபிடிப்பும், அவர் நிலைநாட்டிய அறிவியல் முறைமையும் எப்போதுமே பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவ்வப்போது தவறான முடிவுகளை அடைவதற்காக அவர் அழைத்துச் செல்லும் பாதைகள்கூட மலைகளினூடே செல்லும் நீள்வழி நடைகளைக் காட்டிலும் அதிக காட்சி சுவாரஸியத்துடன், உற்சாகமளிப்பதாக இருக்கும். ஆனால் இறுதியில் ‘Ethics’ நெடுகிலும் காணக் கிடைக்கும் பெருந்தன்மையே என்னை ஈர்க்கிறது. பழுதான வாதங்களை முன்வைக்கும் மோசமான வரிகள் அதில் மிக அரிதாகவே இடம் பெறுகின்றன. பிளேடோ சில சமயங்களில் சிடுசிடுப்புடன் நம்மை அச்சுறுத்துவார். ஆனால் அரிஸ்டாடிலோ எப்பொதுமே வெளிப்படையாக, திடமான உ.ற்சாகத்துடன் இருக்கிறார். மேலும், அவர் கூறுவதே சரியாகவும் இருக்கக்கூடும்.

தூசிடிடீஸின் பெலொபொனீஸிய போர் வரலாறு

இந்தப் புத்தகத்தில் வரலாறு ஒரே சமயத்தில் காணப்பட்டு, கடந்து செல்லப்பட்டு, படைக்கவும் படுகிறது. தன் சிந்தனைகளையும், வார்த்தைகளையும், அபாரமான அறிவின் ஒளிர்வையும் அவர்களுக்கு கடனாக அளித்து ஒன்றிற்கு மேற்பட்ட பல கிரேக்கர்களை அவர் மகோன்னதப்படுத்தியிருக்கிறார்;  இந்தப் போர் நிகழ்ந்திருக்கவே தேவையில்லை என்பதால் தங்களது மெய்யான சுயத்தின் ஆவிகளின் நிழல்கள் போல் அவர்கள் இங்கே பிரதிபலிக்கப்படுகிறார்கள். ஆனால் போர் இங்கே இப்போது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, அபாரமான இந்த உரைநடையில், மருட்சிகளற்ற இலட்சிய மனதில் ஊடுருவிச் செல்லும் இந்த அரைபுனைவு நிகழ்வுகளில்ஹாப்சின் மனது, மாகெவெல்லியின் மனது, தூசிடிடீஸின் மனது, கற்பனை நவிற்சிக்கு கிஞ்சித்தும் இடமளிக்காத மனதுகள் இவைகள். இன்னமும் அடையப் பெறாது எட்டா உயரத்தில் இருக்கும் இவையே என் கற்பனை நவிற்சி தோய்ந்த மனதிற்கான ஆதர்சம்.  நீங்கள் அறிந்தவற்றை மட்டுமே உண்மை என்று நம்பினீர்களானால் நம்பிக்கை போன்ற விசயங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

தாமஸ் ஹாப்ஸின் லெவையத்தன் அல்லது பொருண்மை, உருவம் மற்றும் காமன்வெல்த்தின் அதிகாரம்

ஹாப்ஸ் தூசிடிடீஸின் பெலொபொனீஸிய போர் வரலாற்றை அற்புதமாக மொழிபெயர்த்தார். அதற்கு மேலாக அப்படைப்பின் வழியே உலகை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார். பெரும்பாலும் லெவையத்தனின் முதல் இரண்டு புத்தகங்களே படிக்கப்படுகின்றன. ஆனால் அதன் பிற்பாதியும் என்னை மிகவும் கவர்ந்தது. எனக்குத் தெரிந்து மிகப் பெரிய அறிவு சார்ந்த பொறிகளில் மிகச் சிறந்ததை இந்தப் புத்தகமே கட்டமைக்கிறது. நீங்கள் இந்த வாழ்க்கையைத் தவிர எந்த வாழ்க்கையும் இல்லை என்பதை நம்பும் பொருள்முதல்வாதி என்றால் அமைதியை நிலைநாட்டி அதைப் பாதுகாப்பதற்காக சர்வவல்லமை பொருந்திய ஒரு அரசை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று முதல் பகுதியில் வாதாடுகிறார். ஆனால் இரண்டாவது பகுதியிலோ, நீங்கள் எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் ஒரு வாழ்வை நம்பும் கிருத்துவர் என்றால், இறையடி பணிந்து அமைதியை அடையும் பொருட்டு சர்வவல்லமை பொருந்திய அரசை நீங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று ஆகமத்தை முறையாகப் படித்தால் அறிந்து கொள்வீர்கள் என்றும் வாதிடுகிறார். ஆங்கில தத்துவத்தில் இதற்கு நிகரான உரைநடை கிடையாது.

இமானுவெல் காண்டின்  தூய அறிவு குறித்த விமர்சனம்

பொதுவாகவே போற்றப்படும் புத்தகமென்றாலும் இது மூன்று பகுதிகள் கொண்ட படைப்பின் ஒரு பகுதி மட்டுமே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். முதன் முதலாக Critique – குடன் ஈடு கொடுக்க முயல்கையில்  அதன் முள்ளார்ந்த நடையும், கடினமான சொல்லியலும், புதுமையான சிக்கல் வாய்ந்த சிந்தனையும் என்னைத் திக்குமுக்காடச் செய்தன. என் அறிவுத்திறனின் பலவீனத்தையும், என் பின்புலப் போதாமையையும், திட்பமற்ற ஊழல் பண்பையும், குழந்தைத்தனமான மனப்பான்மையையும் மறைப்பதற்காக காண்டின் மீது குற்றம் சாட்ட விரும்பினேன். உண்மையில், என் பிரதியை  மூடப்பட்டிருந்த ஜன்னலின் மீது தூக்கி எறிந்தேன். (நான் கல்லூரிக்குச் சென்ற காலத்தில் இதைப் போன்ற சிறுபிள்ளைத்தனமான காரியங்களை செய்ய முடிந்தது. என்ன, உடைந்துபோன கண்ணாடிக்கும் அதை பொருத்துவதற்கான கூலிக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான். பீர் பாட்டில்கள் ஹாஸ்டல் ஜன்னல்களுக்கு வெளியே எறியப்படுவது பொதுவான நிகழ்வாக இருந்ததால் என் செய்கை அதைக் காட்டிலும் ஒரு படி மேலாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.) பல பெரிய காரியங்களைச் செய்வதற்கிடையே ஒரு சிறிய காரியத்தையும் இம்மூன்று விமர்சனங்கள் செய்து காட்டுகின்றன: தம்மளவில் இயல்பாகவே கடினமாக இருக்கும் சிந்தனையும் எழுத்தும், சுலபமான, எளிதாக புலப்படக்கூடிய சிந்தனையும் மீபொருண்மை பனிமூட்டத்தில் மூழ்கடிக்கும் ஹெடகரைப் போன்ற எழுத்திடமிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கின்றன என்பதை இவை நமக்குத் தெளிவு படுத்துகின்றன.

லுட்விக் விட்கன்ஷ்டைனின் தருக்கத்தத்துவ ஆய்வு (Tractus Logico-Philosophicus)

ஒரு மின்னல் வெட்டு. தத்துவம் இன்னமும் மரிக்கவில்லை போலிருக்கிறது. தத்துவ ஆவலாதிகள் இன்னமும் மட்கி அழிந்துவிடவில்லை. உரைநடையிலிருந்து தத்துவத்தின் அழகு விலகி ஓடவில்லை. புனிதமான, புரிந்துகொள்வதற்கு கடினமான, ஒரு படைப்பிற்கு அளிக்க வேண்டிய மரியாதையுடன் (பெர்ட்ராண்ட் ரஸல், ஆல்ஃபிரெட் நார்த் வைட்ஹெடின் Principia Mathematica- விற்கு அளித்ததை போல்) இதை அணுகியது நினைவிற்கு வருகிறது. கணீரென்றொலிக்கும் அதன் இருண்மையான தொடக்க வரிகளிலிருந்து “Die Welt ist Alles, was der Fall ist,”  அதன் ஸ்தம்பிக்க வைக்கும் முடிவு வரையிலும் தருக்கம் இசையின் இனிமையுடன் அளிக்கப்படும் அதிசயத்தில் நாம் இருத்தப்படுகிறோம்.  எவ்வளவு தட்டையாக இருக்கின்றன ,மொழிபெயர்ப்புகள். “அனைத்துமே உலகம் என்பதே நிதர்சனம்என்பது இசை, ஆன்மீகம், மர்மம் இவற்றின் சாயல் ஏதுமின்றி மொண்ணையாக தொனிக்கிறது. இம்மாதிரியான தட்டைபூகோள கருத்திற்கு யார்தான் செவி கொடுப்பார்கள்? சொல்லப் போனால், கணிசமான நபர்கள் இதைக் கருத்தில் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. விட்கன்ஷ்டைனின் திட்டப்பணி ஸ்பினோசாவின் திட்டப்பணியை ஒத்திருந்தது (ஸ்பினோசாவும் ஒரு Tractus-ஐ எழுதியிருக்கிறார்). அதைப் போலவே இதுவும் நம்மை தத்துவ உன்னதத்திற்கு அழைத்துச் செல்கிறது. Tractus-இன் அடிப்படை அனுமானங்கள் தவறாக இருக்கக்கூடும் என்பதே உண்மை. ஆனால் இவ்வுண்மை ஒரு பொருட்டே அல்ல.

கஸ்டூன் பஷ்லாரின் வெளியின் கவித்துவம்

La favorita. இளஞ்சூட்டுணர்வுகளை அளிக்கும் எழுத்து. கால்விரல்களுக்கிடையே வெதுவெதுப்பான மணலைப் போல், அல்லது பஷ்லாரின் கணப்புகளை போல். பஷ்லார் புலனறிவாதியாகவும் அறிவியல் வரவாற்றாசிரியாகவும் ஆவதற்காக பயிற்சி பெற்றார். இரசவாதிகளே அவரது தனித்துறை. சார்பியல் கோட்பாட்டைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். Philosophy of No என்ற புத்தகத்தில் அகஸ்ட கோண்டேயின் சாயலில் (ஆனால் கண்டிப்பாக அவரை விஞ்சும் அளவிற்கு) சிந்தனை வளர்ச்சியைப் பற்றிய ஒரு யூகவரலாற்றை முன் வைக்கிறார். அறிவியலாளர்கள் (குறிப்பாக இரசவாதிகள்) மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள் மீது அவருக்கிருந்த ஆர்வம், அவரை உளப்பகுப்பியல் பாங்கில் நாற்பெரும் தனிமங்களைப் பற்றிய அற்புதமான புத்தகங்களை எழுதத் தூண்டியது. வெளியின் கவித்துவமே அவரது முதல் தோற்றப்பாட்டியல் முயற்சி. ஆனால் என்ன ஒரு சாகஸமான முயற்சி. பிரபல விரிவுரையாளரான பஷ்லார் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாசகரும் கூட. இங்குஆசீர்வதிக்கப்பட்டஎன்று நான் குறிப்பிடுவது மாபெரும் புத்தங்கள் ஒவ்வொன்றுமே ஒரு ஆசீர்வாதம்தான் என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டத்தான். தனக்கு புத்தகத்தை பரிசாக அளித்த ஒவ்வொரு கொடையாளருக்கும் அவர் அறிவார்ந்த உவர்ச்சியுடன் நகைப்பூட்டும் விதத்தில் நன்றி தெரிவித்தார்.  மெய்ம்மையை பற்றிய ஒருவரின் பார்வையை பலனளிக்கும் வகையில் விஸ்தரித்து அதை மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது பஷ்லாரின்வெளியின் கவித்துவம்”.

சாமூயெல் டெய்ல்ர் காலரிட்ஜின் சுய இலக்கிய வரலாறு

காலெரிட்ஜ் ஜெர்மானிய லட்சியவாதிகளிடமிருந்து கருத்து திருட்டு செய்திருந்தாலும், Biographia-வே உலகின் மிகச் சிறந்த இலக்கிய விமர்சனப் படைப்பு என்று கருதும் வாசகர்களின் எண்ணிக்கையில் என்னைத் தவிர பிற வாசகர்களும் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பேராசிரியர் M.F.Abrams-இன்  மென்மையான பாண்டித்ய வழிநடத்தலின் வழியே இதைப் கற்றுக் கொள்ளக் கிடைத்தது என் அதிர்ஷ்டமே. கல்ந்தாராய்வு வகுப்பிற்கு அவர் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்திருந்தார். Biographia-வை மட்டும் படிக்காமல் அது எடுத்துரைக்கும், குறிப்பிடும், சுட்டும் புத்தகங்கள் அனைத்தையுமே (அதற்கான வேலைப் பளுவை சமமாக பிரித்துக்கொண்டு) நாங்கள் படிக்க வேண்டும் என்பதே அந்நிபந்தனை. அதனால் பல்கலைக்கழக் கல்வியின் முழுவீச்சும் சுருங்கிய வடிவில் எங்களுக்குக் கிட்டியது.  இந்தப் பாடத்திற்காக ஆய்வு செய்கையில் இரண்டாம் நிலை மூலங்களை ஒருபோதும் சாராமல் முதல்நிலை மூலங்களைத் தேடிச் செல்லவேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன்.  இப்படிப்பினை நேரடியாக என்னை இந்த லட்சியத்திற்கு அழைத்துச் சென்றது:  முதல்நிலை மூலமாவதற்காக மட்டுமே எழுது.

பால் வாலெரியின் எப்பாலினோஸ், அல்லது கட்டிடக் கலைஞர்

எப்பாலினோஸ் ஒரு உரையாடல். ஆனால் அது எனக்கு மிகவும் பிடித்தமான கட்டுரையும்கூட. வில்லியம் மக்காஸ்லாண்ட் ஸ்டூவர்ட்டின் மொழிபெயர்ப்பில் அது ஆங்கில உரைநடையின் உச்சங்களில் ஒன்று என்று எனக்குப் படுகிறது. வாலெரியின் அறிவு தனது அபாரத்தால் நம்மை அசரவைக்கும் ஆற்றல் கொண்டது. அவரது சிந்தனையின் தரம் நுணுக்கத்தை மையப்படுத்திய அவரது கவிதையின் தரத்தை ஒத்தது. இதைப் போன்ற பரிபூர்ண பகுத்தறியும் ஆற்றலை நான் வேறெந்த எழுத்தாளர்களிடத்தேயும் (அவர்கள் எதைப் பற்றி எழுதியிருந்தாலும்) கண்டதில்லை. இங்கு, கட்டிடக் கலையைப் பற்றி எழுதும்போது வாலெரி பிளேடோவை பின்பற்றுகிறார். ஆனால் கண்மூடித்தனமாக நகலிக்காமல், அவருக்குச் சரிசமமாகவே எழுதுகிறார். ஆதென்ஸின் கொள்ளை நோய், கோர்ச்சீராவின் புரட்சி, இவற்றைப் பற்றி மயிர்கூச்செரியும் வகையில் தூசிடிடீஸ் எழுதுகிறார். ஒன்றை (அது எதுவாகவும் இருக்கட்டும்)  உருவாக்கும்போது அதன் பின்னிருக்கும் மர்மங்களைப் பற்றி வாலெரி எழுதும்போது நாம் ஆச்சரியத்தில் மூச்சுவிடுவதைக்கூட மறக்கிறோம், ஏற்கனவே சிலிர்த்திருக்கும் நம் உரோமத்தையும் மறக்கிறோம்.

தாமஸ் மாலரியின் லெ மோர்ட் டார்த்தர்

அதீதமான இந்த பழங்கதைக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். மூன்றாம் வகுப்பு தாண்டிவிட்டிருந்தாலும், நான் இன்னமும் ஒரு சோம்பேறித்தனமான, சலிப்படையும், மெதுவான, சரியாக படிக்க வராத வாசகனாக இருந்தேன். பள்ளிக்கூடத்தை வெறுத்தேன். பிற்காலத்தில் கழிப்பரையை சுத்தம் செய்வதற்கு எனக்கு எவ்வளவு உற்சாகம் இருந்ததோ அவ்வளவு உற்சாகமே எனக்கு அக்காலத்தில் கணிதக் கணக்குகளை செய்வதிலிருந்தது. அதன் பிறகு நான்காம் வகுப்பில் சுத்திகரிக்கப்பட்ட , சுலபமாக்கப்பட்ட ஒரு மாலரியை படிக்கக் கிடைத்தது. சுருக்க(கயிறிட)ப்பட்டாலும் அது மூலத்திற்கு உண்மையாகவே இருந்தது. நானோ தொலைந்தவனாகி விட்டேன். சாமான்ய உலகம் முன்பு எப்போதுமே இல்லாத அளவிற்கு சாமான்யமாக இருந்ததுகூகோள்பிளக்ஸ் வீதம் சாமான்யம். எது உண்மை என்பதை அப்போது தெரிந்து கொண்டேன். அதன்பின் எப்போதுமே அதை மறக்கமாட்டேன். அன்னிய புழுவைப் போல் புத்தகங்களை உண்ணத் தொடங்கினேன். வாரத்திற்கு மூன்று என்று ஆரம்பித்து நாளிற்கொன்று என்ற அளவிற்கு அதிகரித்தேன். புத்தகப் பக்கமே அமைதியும் புனிதத்திற்குமான இருப்பிடமாக இருந்தது. மேலும், பின்னர் நான் உணரத் தொடங்கியது போல் சில பக்கங்கள் பிசிறின்றி முழு நிறைவாக இருந்தன.

ஸர் தாமஸ் ப்ரௌனின் ஹைட்ரையோடாஃபியா : தாழி புதைத்தல் அல்லது நார்ஃபோக்கில் அன்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைத் தாழிகளை பற்றிய பிரசங்கம்

முழுப்பட்டியலில், இறுதியான சிறப்புற்றார் பட்டியலில் அனைத்து பெரும் எலிசபெத்திய ஜகோபிய உரைநடை  ஆசிரியர்கள்: டிரெஹெர்ண், மில்டன், டான், ஹாப்ஸ், டெய்லர், பர்டன், கிங் ஜேம்ஸ் ஆகமத்தின் மொழிபெயர்ப்பாளர்கள், கண்டிப்பாக “Sir Style”  என்று நான் அழைக்கும் ப்ரௌனும்  இடம்பெறுவார்கள். பிற்காலத்தில் ஜார்ஜ் செய்ன்ஸ்பரியின் ஆங்கில உரைநடை லயத்தின் வரலாறு என்ற புத்தகத்தின்அலங்கார நடையின் வெற்றிஎன்று அவர் தலைப்பிட்டிருந்த ஒரு அத்தியாயத்தில் இவர்களெல்லோரும் அருமையாக விவாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தேன். ஆமாம், பகட்டற்ற எளிமையான பெரும் நடைகளும் இருக்கின்றன. புலனறிவாதிகள், தூயவாதிகள், ஜனநாயகவாதிகள், சமவாதிகள், லுட்டைட்டுகள், பயன்கருத்து கோட்பாட்டுவாதிகள், பயனீட்டுவாதிகள், அடாவடித்தனமான முற்போக்குவாதிகள் இவர்கள் எல்லோருக்குமே சொல்ல ஏதோ இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஹாண்டெலுக்கும் பாஹுக்கும் பின்னே பல இசையமைப்பாளர்கள் இருந்தார்கள் என்பதும் உண்மையே. நங்கா பர்பத்தையும் தாண்டி பல மலைகள் இருப்பதைப் போல். ஆனால். ஆனால் ஷேக்ஸ்பியர், ஜான்சன், மார்லோ போன்ற ஆளுமைகளில் வெடித்தெழுந்த ஆங்கிலக் கவிதைக்கு நிகராக அதனுடனேயே ஒரு பெரும் உரைநடை வளர்ச்சியும் வெடித்தெழுந்தது. மெலும் இவ்வுரைநடை புனைவுக் கேளிக்கைகளுக்கு தலை சாய்க்காமல் மாண்டேனைப் போல் கருத்துக்களின் நடனத்திலும், அவற்றின் களியாட்டத்திலும் தன்னை ஆழ்த்திக் கொண்டது. அவர்களை மரணம் என்ற ஒரு பெரும் கருத்து ஆட்டிப்படைத்தது.  அக்காலத்தில் மரணம் விரைவிலேயே அனைவரையும் எதிர்கொண்டது என்பதால். முதல்வெளிச்சம் என்பது அனேகமாக இறுதி மினுமினுத்தலாகவும் இருந்ததால். “Sir Style” ஒரு சந்தேகவாதி. “Sir Style” உலாவும் பழக்கமுள்ளவர்; “Sir Style” ஆசுவாசமாக பணியாற்றுபவர்; “Sir Style” நொந்து வருந்துபவர், தன்னைக் காட்டிலும் அளவுக்கு மீறிய உழைப்பிற்கு உட்பட்டிருப்பவர்கள் கிடையாது என்று நம்புபவர்; சாமான்ய மக்கள் சிறுநீர் கழிப்பதைப் போல் “Sir Style” இலக்கிய காலகட்டங்களை உருவாக்குபவர்; மொழி ஏதோ பெயர்ச்சொற்களாலான படிக்கட்டு போல் அதன்மீது உயர்ந்து செல்பவர்; “Sir Style” இதைக் காட்டிலும் பன்மடங்கு சிறப்பான பல காரியங்களைச் செய்பவர்.

லாரன்ஸ் ஸ்டெர்னின் டிரிஸ்ட்ராம் ஷேண்டி

என் தேர்வுகள் அனைத்துமே எளிதாக யூகிக்கப்படக்கூடிய தேர்வுகள்தான். ஆனால் இந்த இலக்கிய கோயிலிலிருந்து விடுபட்டிருப்பதற்கான காரணங்களை மட்டும் என்னால் நியாயப்படுத்த இயலாது. (நீங்கள் ஏன் ப்ரூஸ்டால் பாதிக்கப்படவில்லை? என்ன சொல்ல, அதுவும் ஒரு விதத்தில் நல்லதே). ஸ்டெர்னைப் பற்றி பேசுகையில் அவர் தன் சமகாலத்தைக் கடந்து முந்திச் சென்றவர் என்ற பார்வைலிருந்தே எப்போதும் பேசுகிறோம். ஆனால் எக்காரணங்களுக்காக அவர் நிரந்தரமாக அவான்கார் பட்டியலில் இடம்பெறுகிறார்?  செயற்கைத்தனத்தைப் பற்றி உண்மையாக பேசுவதாலா? “Leave we then the breeches in the taylor’s hands…”.  தனது மிகத் தீவிரமான மேட்டிமைப் பாணியில் ஹேன்ரி ஜேம்ஸ்ப்லோபேர் செய்வதனைத்துமே எனக்குத் தெரியும்  ஒரு முறை கூறினார். ஆனால் ஸ்டெர்ன் இதைத்தான் செய்தார். புனைவு அப்போதுதான் தொடங்கி இருக்கிறது, அதற்குள்ளேயே  ஸ்டெர்ன் அதை சுற்றியும், அதற்குள்ளேயும் புதைந்திருக்கும் சாத்தியங்கள் அனைத்தையும் கண்டுவிடுகிறார். உதாரணத்திற்கு, “டோபி மாமாவின் அரணிப்புகளை ( நாளைக் காலை) உடைத்து மாடு உட்புகுந்தது

வெர்ஜீனிய வுல்ஃபின் நாட்குறிப்புகள்

பெப்பீஸின் நாட்குறிப்புகள் அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து நாட்குறிப்புகளையுமே  ஒரு நாட்குறிப்பு பிரியர் அறிந்திருப்பார்ஆண்ட்ரே ஜீடின் பிரபலமான படைப்பில் தொடங்கி எமானுயெல் கார்னெவலியின் ஊர் பேர் தெரியாத குறிப்பு வரையிலும்.  சரியாகச் சொல்ல வேண்டுமானல் ஜீட் வைத்திருந்தது ஒரு ஜர்னல். செசார் பவீஸ் வைத்திருந்தது நாம் நாட்குறிப்பு என்றழைக்கும் டையரி. ஹென்ரி ஜேம்ஸ் பேணிய நோட்டுப் புத்தகத்திற்கும், செயல்களின் பதிவான டையரிக்கும், ஒரு வகையானசிந்தனைக் கடிகாரத்தைஒத்திருக்கும் ஜர்னலுக்குமிடையே உள்ள் வேறுபாடுகள் மிகச் சுவாரசியமானவை. தனிமையே நாட்குறிப்பு வைத்திருப்பவரின் காதல். அவர்களை தினமும் மேஜைக்கு அழைத்துச் செல்வது தற்காதல் அல்ல. மேலும், இறுதியில் இங்கு யார் யாரைவைத்திருக்கிறார்கள்என்ற கேள்வியும் எழுகிறது.  டையரியின் கோரிக்கைகள் கறாரானவை; நம் மீது வாலாயத்தை அது திணிக்கிறது; மாட்டைப் பால் கரப்பது போல் தினமும் அதை நாம் பேணியாக வேண்டும்; வாழ்வு குறித்த நமது பார்வையை மாற்றியமைத்து வாழ்வதே அதன் அன்யோன்யமான பக்கத்தில் ஒரு குறிப்பாக ஆவதற்காகத்தான் என்று நம்மை நம்பச் செய்கிறது. வெர்ஜீனிய உல்ஃப் இன்னும் சில காலம் தன் தலைக்கு மீது வெள்ளம் போகாமல் பார்த்துக் கொள்ளாதது வருந்தத்தக்கதே.

ஃபோர்ட் மாடாக்ஸ் ஃபோர்டின் அணிவகுப்பின் முடிவில் (டீஜென்ஸ் நான்முகத் தொடர்)

என்னைப் பொறுத்தவரையில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, மிகவும் பழிக்கப்பட்ட ஒரு பராக்கிரமசாலி. ஐந்தாவது ராணி முன்னூல் தொகுதி, நல்ல படைவீரன் என்ற திறம்வாய்ந்த அறிவாய்வியல் நாவல் மற்றும் அவரது டீஜென்ஸ் புத்தகங்கள் என்று குறைந்தபட்சம் மூன்று பெரும் படைப்புகளின் ஆசிரியர் அவர். அருமையான நினைவுகூர்வாளரும் கூட.  பெரும் பதிப்பாசிரியரும் இலக்கியத்தின் உண்மையான நண்பன் என்றும் கருதப்பட்ட அவர்,  அவரது வார்த்தைகளிலேயே கூற வேண்டுமானால் ஒருஎழுத்துப் பித்துபிடித்த மனிதர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் (இப்போது கிட்டத்தட்ட முப்பது) லீட்ஸ் பல்கலையில் இலக்கியம் பயின்று கொண்டிருந்த மாணவர் குழுவொன்றுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர்கள் ஃபோர்டைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்று கேட்டேன். கையளவு மாணவர்களே அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள். சாம்ராஜ்யம் சீரழிந்ததில் ஆச்சரியம் என்ன.  அதற்குப் பின் பெருமளவில் சோண்ட்ரா ஸ்டாங்கின் முயற்சியால்தான் ஃபோர்டின் பொதுமதிப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் அவருக்கு தகுந்த இடம் இன்னமும் அளிக்கப்படவில்லை என்றே கூறுவேன். “சிலர் மாட்டார்கள்”, நான்முகத் தொடரின் முதல் புத்தகம், நான் பிறந்த 1924-ஆம் ஆண்டு எழுதப்பட்டது.  நம் மொழியின் மிக அழகான காதல் கதை அதுதான் என்று இன்றும் நினைக்கிறேன்.  அது ஒரு நவீன காதல் கதை, இந்த ஒரு வியப்பளிக்கும் வித்தியாசத்தைத் தவிர: காதலைத் தவிர அனைத்துமே ஆழ்ந்த முரண்நகையுடன் கையாளப்படுகிறது.

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஆண்டனியும் க்ளியோபாட்ராவும்

என் ஐம்பதில் பல பிரபலமான படைப்புகளும், சில பிரபலமான எழுத்தாளர்களும் இடம் பெறவில்லை. ஆனால் ஏதோ ஒரு நியாயமான வரம்பு அவர்களைப் புறந்தள்ளவில்லை. எழுத்தாளராக முக்கியமான வழிகளில் பாதித்து என்னை மாற்றிய படைப்புகளையே இப்பட்டியலில் சேர்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இது போன்ற பட்டியல்களுக்குப் பின்னே அகந்தை ஒளிந்து கொண்டிருக்கலாம் என்றாலும் இதில் உலகின் தலைசிறந்த புத்தகங்களை வருகைப் பதிவெடுக்கும் ஆணவம் கண்டிப்பாக இல்லை. இதனால் எனக்கு  பெரும் படைப்புகள் மீது நம்பிக்கையில்லை என்று முடிவுகட்டி விடாதீர்கள், அவற்றை தவிர மிகச் சிலதின் மீதே நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்சில இசைப் படைப்புகள், சில ஓவியங்கள், ஒரு சில கட்டிடங்கள் என்று சில இருக்கலாம். பெரும் படைப்புகள் பல எண்ண முடியா காரணங்களுக்காக பெருமை அடைகின்றன. ஆனால் அவற்றைக் கட்டமைக்கும் விழுமியங்களுக்கு அவை எப்போதும் விசுவாசமாக இருப்பது ஒரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு ஆசிரியர் தெள்ளத்தெளிய விதத்தில் மகோன்னதத்தை எட்டியிருக்கும் பட்சத்தில், அவரை புதிதாக கண்டறியும் வெறியேறிய களிப்பையும், அவரது பிரத்தியேக குரல் ஒலிப்பதைக் கேட்கும் வாய்ப்பையும், வாழ்நாள்  முழுதும் சிறிது சிறிதாக அவனுக்கு ஒளிபரப்பப்படுவதால், வாசகன் எக்காலத்திற்கும் அவற்றை இழந்து விடலாம். ஷேக்ஸ்பியரைப் பொறுத்தமட்டில் இது அனேகமாக நிகழ்கிறது என்பதே உண்மை. சலிப்புறும் அளவு, பீத்தோவனின் இசை ஒலிக்கப்பட்டு, வான் காக்கின் ஓவியப் பிரதிகள் பீரோ கதவுகளின் மீது பொருத்தப்பட்டு, பர்ன்ஸின் பாடல்கள் குடிகாரர்களால் பாடப்பட்டு, உன்னதமான வரிகள் திரை நட்சத்திரங்களால் உச்சரிக்கப்பட்டுஅவரது வரிகள் கோட் சூட் அணிந்த நடிகர்களால் அசைபோடப்பட்டு, அவரது பிரேதம் இயக்குனர்களால் துண்டம் துண்டமாக வெட்டுண்டு அதன் எச்சம் பிரபலத்தால் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டும், அழிவின்மையால் கொலை செய்யப்பட்ட  பாணனின் இந்த நாடகம் வாழ்க்கையைக் காட்டிலும் துடிப்பான விதத்தில் என் முன் உயர்ந்தது. இன்னமும் அதன் மொழி நாம் உச்சம் என்று கொண்டாடுவதைக் காட்டிலும் ஒரு படி மேலே உள்ளது. அதன் காட்சிப்படுத்தும் உருவகங்களின் ஆரவாரம் சில சமயங்களில் ஒரு புது பாணியையே உருவாக்குகிறது. அதன் முன் நான் முழுக் கோமாளியாகி, “எழுத்தாளன்னா, நீதான் சகோஎன்று உச்சரித்தேன்.

(தொடரும்)

Sources:

A Temple of Texts, Essays by William Gass, Dalkey Archive, 2007
In the Heart of the Heart of the Country and other stories, NONPAREIL Books, 1981
The Review of Contemporary Fiction, Fall 2004

Further Reading

1. Plato’s Timaeus
2. Aristotle’s
The Nicomachean Ethics
3. Thucydides’
The History of the Peloponnesian War
4. Thomas Hobbes’s
Leviathan: Or the Matter, Form, and Power of a Commonwealth, Ecclesiastical and Civil
5. Immanuel Kant’s
Critique of Pure Reason
6. Ludwig Wittgenstein’s
Tractatus Logico Philosophicus
7. Gaston Bachelard’s
The Poetics of Space
8. Samuel Taylor Coleridge’s
Biographia Literaria
9. Paul Valéry’s
Eupalinos, ou l’architecte
10. Sir Thomas Malory’s
Malory’s Le Morte d’Arthur
11. Sir Thomas Browne’s
Urne Burial
12. Laurence Sterne’s
The Life and Opinions of Tristram Shandy, Gentleman
13. Virginia Woolf’s
Selected Diaries
14. Ford Maddox Ford’s
Parade’s End (the Tietjens tetralogy)
15. William Shakespeare’s
Antony and Cleopatra

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.